புரட்சியின் மலர்களும், புத்தக வாசமும்!
இரா.சிந்தன்
(டிரை காண்டினெண்டல்: சமூக ஆய்வு நிறுவனம் சார்பில் ‘சிவப்பு புத்தக தினத்துக்காக’ வெளியிடப்பட்ட “வாசிப்பின் பேரானந்தம்” பிரசுரத்தை தழுவி எழுதப்பட்டது)
மன்னர்களும், நிலவுடைமையாளர்களும் கோலோச்சிய காலத்தில், எழுத்தும், கல்வி அறிவும் அடித்தட்டு மக்களிடமிருந்து பிடுங்கப்பட்டதை பல்வேறு சமுதாயங்களிலும் பார்க்க முடிகிறது. நிலப்பிரபுக்களுடைய அதிகாரம் சொத்துடைமையின் மீது மட்டுமல்லாமல், படிநிலைச் சமுதாயத்தின் மீதும் நிலைநிறுத்தப்பட்டிருந்தது. அதிகாரத்தின் மீது புனிதத்தன்மை ஏற்றப்பட்டது.
நிலப் பதிவேடுகள், நிலவுடைமையாளர்களும், வட்டிக்காரர்களும் பராமரித்த கணக்கு நோட்டுகள், மதகுருமார்கள் போற்றி முன்னெடுத்த புனித நூல்கள் என எல்லாமே, புரிந்துகொள்ள முடியாத சித்திர எழுத்துக்களின் வழியே அடித்தட்டு வர்க்கங்களின் மீது ஒடுக்குமுறையை முன்னெடுத்தன.
முதலாளித்துவம் உருவாகி வளர்ந்த பின்னணியில், புத்தகங்கள் அச்சிடும் தொழில்நுட்பம் வளர்ந்தது. புத்தகங்களை வாங்குவதும், செய்தி இதழ்களை வாசிப்பதும் அதிகார நிலைக்கான அடையாளமாகின. அந்த வாசிப்பும் முதலாளிகளையும், குட்டி முதலாளிகளையும் சார்ந்ததாக இருந்தது.
இப்படியான சூழ்நிலையில், எழுச்சியடைந்த புரட்சிகர இயக்கங்கள் – எழுத்தறிவை ஊன்றி, புரட்சி இயக்கங்களை வளர்த்தெடுத்தார்கள். வாசிப்பு, வாசம் பரப்பியது.
விடுதலை இயக்கமும், கூட்டு கற்றலும்
விடுதலை இயக்கங்களும் வாசிப்பும் நிலப்பிரபுக்களின் ஆட்சியின் கீழ், தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் படிக்கக் கற்கும் வாய்ப்புகள் மிகக் குறைவாகவே இருந்தன. தொழிற்சங்கங்களும், கம்யூனிச இயக்கங்களும் உருவான பின்னர், அந்த அமைப்புகள் செய்தித்தாள்களையும் துண்டுப் பிரசுரங்களையும், பெரும்பாலும் ரகசியமாக, வெளியிட்ட பிறகுதான், தொழிலாளி, விவசாயி வர்க்க உறுப்பினர்களால் நூல்களை அணுக முடிவது, பரந்த அளவில் சாத்தியமானது.
காலனி இந்தியாவில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக உருவான தேசிய இயக்கத்தின் நிகழ்ச்சி நிரலில், 1920 ஆம் ஆண்டிகளின் வாக்கில் கல்வியறிவு முக்கிய இடம்பெற்றது. நூல்கள் படித்த அமைப்பாளர்களால் வாசித்து காட்டப்பட்டன. இந்த வகையான கூட்டுக் கற்றலே எழுத்தறிவுக்கான தொடக்கப் பள்ளியாக மாறியது.
உதாரணமாக, இந்தியாவில் நூலக இயக்கத்தில் முன்னணி மாநிலமாக உள்ள கேரள மாநிலத்தை பார்க்கலாம். நூலக இயக்கத்தின் தந்தையாக அறியப்படும் பி.என்.பணிக்கர், ஒரு செய்தித்தாளுக்கான சந்தாவைச் செலுத்தியதன் மூலம், தனது வீட்டில் எட்டு அல்லது அதற்கு மேற்பட்டோர் கூடி அதைச் சத்தமாகப் படித்துக் கேட்டதை நினைவுகூர்ந்திருக்கிறார். “நாங்கள் பத்திரிக்கை வாசிக்க முடியாத நாட்களில், பெரிய மனிதர்களின் வாழ்க்கை வரலாறுகளை அவர்களுக்குச் சத்தமாக வாசித்துக் காட்டுவேன்” என்று அவர் கூறினார்.
மேலும், “எனது நண்பர் ஒருவர் வேறு இரண்டு நாளிதழ்களுக்குச் சந்தா செலுத்தினார். அவரிடம் ஒரு சிறிய புத்தகத் தொகுப்பும் இருந்தது. இந்தப் புத்தகங்களையும் செய்தித்தாள்களையும் ஒரு சிறிய அறையில் தொகுத்து வைத்தோம். வாடகை இல்லாமல் கிடைத்த அந்த இடத்தில்தான் ஒரு சிறிய நூலகத்தைத் தொடங்கினோம்” என்றார்.
இப்படியான ஆயிரக்கணக்கான அனுபவங்கள் உள்ளன. இவ்வாறு கேரள மாநிலத்தில் உருவாக்கப்பட்ட படிப்பகங்கள் பலவும் நூலகங்களாக வளர்ச்சியடைந்தன. அவற்றின் சிறு பட்டியலை இங்கே காணலாம். இந்த அனுபவங்கள் இன்னும் பல படிப்பகங்களுக்கும் நூலக இயக்கத்தை விரிவாக்க உதவி செய்யும்.
வேலம் பொது படிப்பகம், மயில்
1934 ஆம் ஆண்டில், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் ஈஸ்வரன் நம்பூதிரி கிராம மக்களிடையே இந்தி மொழியை ஊக்குவிப்பதற்காக மயில் ஊராட்சிக்கு வந்தார். அவர் தனது பள்ளிக்கு ஒரு சிறிய கொட்டகையைக் கட்டினார், அது இறுதியில் ஒரு நூலகமாக மாறியது, அதில் தற்போது 18,000 புத்தகங்கள் உள்ளன. இந்த மயில் ஊராட்சியில் 29,000க்கும் அதிகமானோர் வாழ்கிறார்கள். இந்த வட்டாரத்தில் கேரள மாநில நூலகக் கவுன்சிலுடன் இணைக்கப்பட்ட 34 நூலகங்கள் செயல்படுகின்றன. அதாவது, ஒரு சதுர கிலோமீட்டருக்கு ஒரு நூலகம் என்ற சராசரி நிலைமை உள்ளது. இந்த நூலகங்கள் ஒவ்வொன்றும் சராசரியாக 872 உறுப்பினர்களைக் கொண்டுள்ளன. இது உலகின் எந்தப் பகுதியிலும் காணப்படாத அசாதாரணமான நூலக அடர்த்தியாகும்.
பரல் பொது படிப்பகம், தலச்சேரி
1934 ஆம் ஆண்டில், கௌமுடி என்ற பதினாறு வயது சிறுமி, பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆட்சிக்கு எதிரான சுதந்திர இயக்கத்திற்கு தனது பங்களிப்பாக, எம்.கே. காந்தியிடம் தனது தங்க நகைகளை நன்கொடையாக வழங்கினார். தங்கத்திலிருந்து கிடைத்த பணம் நூலகத்தை அமைக்கும் நிதியாகப் பயன்பட்டது. இந்த நூலகம் இப்போது மாவட்டத்தின் வரலாற்றுக் காப்பகத்தையும் உள்ளடக்கியதாக செயல்படுகிறது.
எஸ்.ஜே.எம். படிப்பகம் மற்றும் தேசிய நூலகம், கண்டக்கை
கேரளாவில் 19 ம் நூற்றாண்டின் சமூக சீர்திருத்த இயக்கத்தின் போது, ஸ்ரீ ஜாதவேத குரு கண்டக்கைக்குச் சென்று, அங்குள்ள கிராம மக்களுக்குச் சாதி படிநிலைகளையும் பாகுபாடுகளையும் மீற வேண்டியதன் அவசியத்தையும் போராட வேண்டியதன் அவசியத்தையும் கற்பித்தார். இந்தப் பணியின் ஒரு பகுதியாக, குரு ஒரு சிறிய நூலகத்தை நிறுவினார். இப்போது அந்த நூலகத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன.
சி.மாதவன் நினைவு படிப்பகம், பினராயி
கேரளத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் மாநாடு 1939 ஆம் ஆண்டில் பினராயியில் ரகசியமாக நடைபெற்றது. இருபது ஆண்டுகளுக்குப் பின்னர், முற்போக்கு இளைஞர் அமைப்பான ஸ்ரீ நாராயண ஆஷ்ரிதா யுவஜன சங்கம், ஒரு சமூக ஆர்வலரின் பெயரில் சி.மாதவன் நினைவு நூலகத்தை உருவாக்கியது. ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் உள்ளூர் நன்கொடைகள் மூலம் இங்கு சேர்க்கப்படுகின்றன. இந்தச் சமூக உணர்வு விரிவடைந்துள்ளது: இப்போது, இப்பகுதியில் ஒரு புதிய வீடு கட்டப்படும்போது, நூலகத்திற்காக ஒரு பழ மரம் நடப்படுகிறது.
குளப்புரம் படிப்பகம் மற்றும் நூலகம், எழோம்
1950களில், ஈழோம் கிராமத்தைச் சேர்ந்த நெசவாளர்கள் “யங் மென்ஸ் கிளப்” என்ற வாசிப்பு அறையைக் கட்டினர். அந்த வாசிப்பு அறை இப்போது பொது நிகழ்வுகளுக்கான ஒரு கூடம், ஒரு பெரிய விளையாட்டு மைதானம் மற்றும் காய்கறி தோட்டத்துடன் மூன்று மாடி கொண்ட காலநிலை கட்டுப்பாட்டு நூலகமாக உள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கற்கவும், தங்கள் ஓட்டுநர் உரிமத்தைப் பெறவும் உதவும் மகளிருக்கான புத்தக விநியோக ஏற்பாடு மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் வகுப்புகள் உள்ளிட்ட தனித்துவமான சமூக சேவைகளை இந்த நூலகம் வழங்குகிறது.
தாயக மேம்பாட்டு படிப்பகம் மற்றும் பொது நூலகம், சாலா
பேரீச்சைத் தோப்பின் ஓரத்தில் அமைந்துள்ள இந்த எளிமையான நூலகம் 1960களில் பீடித் தொழிலாளர்கள், துணி நெசவாளர்கள், பல்வேறு வகை தினக்கூலி தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் சேர்ந்து நிறுவியதாகும். இந்த விவசாயிகள் தங்கள் பணத்தை ஒன்று திரட்டி, வாசிப்பதற்கும் விவாதிப்பதற்கும் ஒரு இடத்தை உருவாக்கினர். இன்று, இந்த நூலகத்தில் சுமார் 9,000 புத்தகங்கள் உள்ளன.
அவான் நூலகம், கரிவெல்லூர்
அவான் கிளப்பாகத் தொடங்கிய இந்த நூலகம், 1973 இல் அவான் நூலகமாக மாற்றப்பட்டது. இது இன்று 17,574 புத்தகங்களைக் கொண்டுள்ளது மற்றும் 619 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. இந்த நூலகம் குழந்தைகளுக்கான வாசிப்புகளை முன்னெடுத்தல், திரையிடல்களை நடத்துதல் மற்றும் முதியோருக்கு வீடுகளுக்குச் சென்று புத்தகங்களை வழங்குதல் போன்ற பணிகளை மேற்கொள்கிறது. நூலகத்தில் உள்ள ஒரு உள்ளூர் வரலாற்றுக் குழு, உள்ளூர் அறிஞர்களால் எழுதப்பட்ட இரண்டு வரலாற்று ஆய்வறிக்கைகளின் காப்பகமாக உள்ளது.
நூலகமே ஒரு இயக்கமாக
தேசிய இயக்க காலம் தொடங்கிய நூலகங்கள் இன்று வரையிலும் ஒரு உயர்ப்பான இயக்கமாக தொடர்வதை கேரளத்தில் காண்கிறோம். இடது ஜனநாயக அணியின் அரசாங்கம், 2023 ஆம் ஆண்டு முதல் இந்திய நூலக மாநாட்டை சாத்தியமாக்கியது. கண்ணூர் பல்கலைக்கழகமும், கேரளாவின் நூலக கவுன்சிலும், சமூக மேம்பாட்டுக்கான மக்கள் இயக்கமும் இதை நடத்தின. இந்த மாநாட்டில் ஐந்து லட்சம் பேர்பங்கேற்றனர்.
* நூலகங்கள் மேம்பட்ட தொழில்நுட்பங்கள் கொண்டிருக்க வேண்டும் என்றும்,
* மலைப்பாங்கான தொலைதூர பகுதிகளிலும் நூலகங்கள் தேவை என்றும்,
* நூலக மையங்கள் செயலூக்கம் மிக்க பொது இடமாகவும், பண்பாட்டு வளர்ச்சியை அடைகாக்கும் இடங்களாகவும், திரைப்படத் திரையிடல்கள்,விளையாட்டுகள்,கலைகண்காட்சிகள்,திருவிழாக்கள், தொழிற் பயிற்சி வகுப்புகள் போன்ற நடவடிக்கைகளுக்கான ஏற்பாட்டை ஒழுங்கமைக்கும் மையங்களாகவும்மாற வேண்டும். இந்த நூலகங்களுக்கு அருகில் சுகாதார மையங்களும்,அறிவியல் கற்றல்மையங்களும் அமைக்கப்படவேண்டும் என்றும் இந்த முடிவு செய்தது.
நூலக இயக்கத்தின் இன்றைய தூதுவர்கள்
இந்த மாநாட்டை முன்னெடுத்துச் செல்வதற்காக, அமைப்பாளர்கள் பல்வேறுதலைப்புகளில் 1,500 கருத்தரங்குகளை நடத்தினர். உள்ளாட்சிநிறுவனங்களின் ஊழியர்கள், அரசாங்க அதிகாரிகள், கூட்டுறவு ஊழியர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பலருடன் 3,000 நூலகர்கள் அதில் இருந்தனர்.
அவர்களில் ஒருவர் தான் பையனூர் அன்னூரைச் சேர்ந்த பீடித் தொழிலாளியான ராஜன் வி.பி., ஆறாம் வகுப்பு படித்தவர். ராஜன் இளம் வயதிலேயே ஒரு பீடி தொழிற்சாலையில் வேலை செய்யத் தொடங்கியபோது, தொழிலாளர்கள் மதிய உணவுக்கு முன் ஒருவருக்கொருவர் தினசரி செய்தித்தாளையும், மதிய உணவிற்குப் பிறகு ஒரு நாவலையும் மாறி மாறி வாசிக்கின்ற வழக்கத்தினால் ஈர்க்கப்பட்டார்.
வாசிப்பு தான் ராஜனை மேலும் படிக்கத் தூண்டியது. அவர் படித்ததால், வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு கூட்டுறவு வங்கியில் எழுத்தராக ஒரு புதிய வேலையைப் பெற முடிந்தது. 2008 வாக்கில், அவர் வங்கியின் மேலாளராக ஆனார். அந்த ஆண்டு, ராஜன் மக்கள் நூலகம் மற்றும் படிப்பகத்தை அமைத்தார்.
நூலக இயக்கத்தின் மற்றொரு முக்கிய நபரான ராதா வி.பி (வயது அறுபது), ஏழாம் வகுப்பு கல்வி கற்ற பீடித் தொழிலாளி. இளம் வயதிலேயே தனது வீட்டுச் சுமையை ஏற்றார். ஒரு இளம் பெண்ணாக இருந்தபோது, அவர் சிபிஐ(எம்) நடத்திய வார இதழான தேசாபிமானியைப் படிக்கத் தொடங்கினார். மேலும், அதில் வரும் கதைகள், கவிதைகள் குறித்து கருத்து தெரிவித்து, அதன் ஆசிரியர்களுக்கு கடிதங்கள் எழுதத் தொடங்கினார்.
2002 ஆம் ஆண்டில், ஜவஹர் நூலகத்தில் சேர்ந்தார் (முந்தைய ஆண்டு நிறுவப்பட்டது). இந்த நூலகம் புத்தகங்களை வாசகர்களின் வீடுகளுக்கு, குறிப்பாக பெண்களுக்கும் முதியவர்களுக்கும் சென்று தருகிறது. ஒரு கையில் நூலகப் பதிவேட்டையும், தோளில் ஒரு பை நிறைய புத்தகங்களையும் வைத்துக்கொண்டு, வேலை முடிந்த பிறகு ஒவ்வொரு வீட்டிற்கும் அவர் புத்தகங்களைக் கொண்டு வரும் காட்சி மக்களுக்கு மகிழ்ச்சியைக் கொண்டு சேர்த்தது. 2018 ஆம் ஆண்டில், அவர் பத்தாம் வகுப்பு முடித்து, உயர் கல்விக்குத் தகுதி பெற்றார். படித்துக் கொண்டிருந்தார், நூலக இயக்கத்திலும் உற்சாகத்துடன் இயங்கினார்.
ரஷ்யா: புரட்சிக்கு முன்பும், பிறகும்
உலகின் முதல் சோசலிச புரட்சியை சாதித்துக் காட்டிய சோவியத் ரஷ்யாவின் உழைக்கும் வர்கங்களும், வாசிப்பின் தாகத்தை தேடித் தணித்துக் கொண்டன.
புரட்சி நடந்த கால சூழலை, ஜான்ரீட் தனது நூலில் இவ்வாறு விவரித்தார்: “ரஷ்யா முழுவதுமே அரசியல், பொருளாதாரம், வரலாறு என்றுபடிக்கக் கற்றுக் கொண்டிருந்தது. ஒவ்வொருநகரத்திலும், பெரும்பாலான பேரூர் பகுதிகளிலும், போர்முனையிலும், ஒவ்வொரு அரசியல் கிளையும் அதற்கென்று செய்தித்தாள்களை வைத்திருந்தன – சில நேர்வுகளில் பல செய்தித்தாள்களையும் நடத்தினார்கள். ஆயிரக்கணக்கான அமைப்புகளால் லட்சக்கணக்கான பிரசுரங்கள் வெளியிடப்பட்டன. அந்த பிரசுரங்கள்படைப்பிரிவுகளுக்கு உள்ளேயும், கிராமங்களுக்குள்ளும், ஆலைகளுக்குள்ளும், தெருக்களுக்குள்ளும் பாய்ந்தன.நெடுங்காலமாக முடங்கிக் கிடந்த கல்வியின் தாகம், புரட்சியுடன் சேர்ந்து வேகத்துடன் வெடித்தது. ஸ்மோல்னி ரயில்நிலையத்தில் இருந்து மட்டும்முதல் ஆறு மாதங்களுக்கு ஒவ்வொரு நாளும் டன் கணக்கிலான பிரசுரங்கள் வண்டிகளில்ஏற்றப்பட்டு, இரயில்வண்டிகளில் பயணித்து, நிலம்முழுவதும் பரவிப் படர்ந்தது.சூடான மணல் தண்ணீரை உறிஞ்சிக் கொள்வதைப் போல ரஷ்யா அந்த பிரசுரங்களை தம் வாசிப்பினால் உறிஞ்சிக் கொண்டது, அப்போதும்அதற்கு தாகம் அடங்கவில்லை. இவ்வாறு வாசிக்கப்பட்டவை கட்டுக்கதைகளோ,புனையப்பட்ட வரலாறுகளோ, நீர்த்துப்போன மதமோ,மலிவான புனைவுகளோ அல்ல – மாறாக சமூக, பொருளாதாரக் கோட்பாடுகள், தத்துவம்,டால்ஸ்டாய், கோகோல், கார்க்கிஆகியோரின் படைப்புகள்… – ( உலகை குலுக்கிய பத்து நாட்கள், 1919)
புரட்சிக்கு பிறகும், கல்வியின் அவசியம் வலியுறுத்தப்பட்டது. 1921ல் வி.இ.லெனின் பொருளாதாரக் கொள்கை மாநாட்டில் எழுத்தறிவின்மை நீடித்தால் எந்த முன்னேற்றமும் இருக்காது என்று அறிவித்தார். எழுத்தறிவு இல்லாமல் அரசியல் இருக்க முடியாது; அது இல்லாமல் வதந்திகள் , புனைவுகள் , தேவதைக் கதைகள், தப்பெண்ணங்கள் நிலவுகின்றன, ஆனால் அரசியல் நிலவுவதில்லை என்று கூறினார். அதையே மக்கள் தம் அனுபவத்தில் உணர்ந்தார்கள்.
1930 களில், சோவியத் ஒன்றியத்திற்கு உட்பட்ட வடக்குகாகசஸில் உள்ள ஜார்ஜிவ்ஸ்கி கூட்டுப் பண்ணைகளைச் சேர்ந்த பெண்கள், சோவியத் அரசாங்கத்திற்குஒரு கடிதம் எழுதினார்கள். “பெரிய பண்ணைகளை முறையாக நிர்வகிப்பதற்கு, நாங்கள் படிக்க வேண்டும்என்று உறுதியாக நம்புகிறோம்” என்று கூறிய அவர்கள், “நாங்கள் குளிர்காலம்முழுவதும் படிக்க விரும்புகிறோம்;எழுதப்படிக்கக் கற்றுக்கொள்வது,அரசியல்அறிவைப் பெறுவது, விஞ்ஞானஅடிப்படையில் விவசாயத்தை ஆய்வு செய்வது என கற்க விரும்புகிறோம். எங்களுக்கு நிறையபுத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள் கொடுங்கள்,ஏனென்றால்பெண்கள் மத்தியில் படிக்க வேண்டும் என்ற ஆசை அதிகமாக உள்ளது” என்றுதிட்டவட்டமாகக் கூறினார்கள். இந்தப் பெண்களில் ஒருவரான ஃபெக்லா கோலோவ்சென்கோ(கிட்டத்தட்ட ஐம்பது வயது கொண்டவர்),
“நான் சரியாகக் கல்வி கற்கவில்லை என்றால், எனது கிளையை என்னால்கையாள முடியாது” என்று அவர் கூறினார். மேலும், அவர் பெண்கள், “கல்வி என்பது ஆடம்பரம்அல்ல. தாகமுள்ளவனுக்குத் தண்ணீர் கிடைப்பது போல, அது மிகவும் அவசியமான ஒன்று” என்று குறிப்பிட்டார்.
சீனா: படிப்படியான முன்னெற்றம்
ரஷ்யாவின் அனுபவம் சீன புரட்சியாலும் உள்வாங்கப்பட்டது. 1949 சீனப் புரட்சி நடக்கும் வரை சீன சமூகத்தைக் சிதைத்து அழித்து வந்த சீர்குலைவின் காரணமாக கல்வியறிவு பெரிதாக மேம்படவில்லை. புரட்சிக்கு பின், 1950 களில் மட்டுமே கல்வியறிவுவிகிதம் வியத்தகு முறையில் உயரத் தொடங்கியது, 1959 க்குள் 57 சதவீதத்தை எட்டியது.
தென்கிழக்கு சீனாவில் ஜியாங்சிசோவியத் (1931-1934), வட – மத்திய சீனாவில் யானான் சோவியத் (1936-1948)போன்ற சோதனை முயற்சிகளை ஊக்குவித்தன.அவை ஊரகத்திலும், வயது வந்தோரிடமும் கல்வி அறிவை உயர்த்துவதை இலக்காகக் கொண்ட பல்வேறு பிரச்சாரங்களை செயல்படுத்தின.
சீனாவின் கல்வியறிவை மேம்படுத்த எடுக்கப்பட்ட தொடக்க கால முயற்சிகளை எழுத்துச் சீர்திருத்தம், கல்வியின் அவசியத்தைமுன்னெடுத்தல், பொதுக் கட்டமைப்புகளை உருவாக்குதல் என்று மூன்றாகப் பார்க்கலாம்.
1) சீனத்தின் படிப்பு இயக்கத்தின் மையமாக இருப்பது, அதன் எழுத்துக்களை அறிந்துகொள்வதுதான் . சீன மொழி ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டஎழுத்துக்களால் ஆனது. 1955 ஆம் ஆண்டில், சீனாவின் புரட்சி அரசாங்கம் சீன மொழியின் எழுத்துவடிவத்தை சீர்திருத்துவதற்காக ஒருகுழுவை அமைத்தது, அந்த குழு ஊரக குடியிருப்பாளர்களுக்கான எழுத்துக்களின் பட்டியலை 1,500 ஆகவும், ஊரகத் தலைவர்கள் மற்றும் நகர்ப்புறவாசிகளுக்குகற்பிக்கவேண்டிய எழுத்துக்களின் பட்டியல் 2,000ஆகவும் எழுத்தறிவுக்கான குறைந்தபட்ச தேவை என்று அந்தக்குழு சுருக்கியது. 1958 ஆம் ஆண்டில், தொடக்கப் பள்ளிகள் பின்யின் (சீன எழுத்துக்களின் நிலையான ரோமனாக்கம்) மற்றும் எளிய சீனஎழுத்துக்களை பயன்படுத்தத் தொடங்கின.
2) 1955 ஆம் ஆண்டில், சீனாவின் எழுத்தறிவின்மை எதிர்ப்பு பிரச்சாரத்தின் மிக முக்கியமானதலைவர்களில் ஒருவரான லின் ஹண்டா, கற்றல் பண்புகள் கல்வியறிவை வரையறுக்கக் கூடாதுஎன்று கூறினார்; மாறாக, எழுத்தறிவு இயக்கத்தின் இறுதி இலக்குகள் விவசாயிகள் தங்கள் வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ளவும் உற்பத்தித் திறனை அதிகரிக்கவும் உதவுவதாக இருக்க வேண்டும் என்றார்.
3) பொது கல்வி கட்டமைப்புகளில் புரட்சி அரசு கவனம் செலுத்தியது. 1949 ஆம் ஆண்டில், சீனாவில் ஐம்பத்தைந்து பொது நூலகங்கள் மட்டுமே இருந்தன. ஜனநாயகமயமாக்கலை வலியுறுத்துவதன்ஒரு பகுதியாக, புதிய சீனாவில் ஊரகங்களில் விவசாயிகளுக்காக நூலகங்களையும், தொழிற்சாலைகளில் தொழிலாளர்களுக்கான நூலகங்களை கட்டினர். 1956 வாக்கில், சீனாவில் வாசிப்பு அறைகள் மொத்தம் 182,960 நிறுவப்பட்டன.
தொடுதிரைகளின் காலத்தில்
இப்போது சீனத்தின் வாசிப்புக்கு நவீன தொழில்நுட்ப வளர்ச்சியின் சவால்கள் ஏற்பட்டுள்ளன. ஒளிரும் திரைகளை பார்த்துக் கொண்டு, வீடியோ கேம்களை விளையாடிக் கொண்டு நேரத்தைச் செலவிடும் அடிமைத்தனத்திற்குள் இளைஞர்கள் செல்லும் போக்கை எப்படி நெறிப்படுத்துவது என்ற புதிய சவாலை சீனா எடுத்துக் கொண்டுள்ளது.
2021 ஆம்ஆண்டில், சீனாவின் அதிபர் ஜி ஜின்பிங் தனது அரசாங்கம் இளைஞர்களிடையே ஆன்லைன் வீடியோ கேம் பயன்பாட்டை வாரத்திற்கு மூன்று மணிநேரமாகக் கட்டுப்படுத்தும் என்று அறிவித்தார். இந்தநடவடிக்கையை வீடியோகேம் தொழில் நிறுவனங்களும், பெற்றோர்களும் கொண்டு செயல்படுத்துவோம் என்றார்.
2022 ஆம்ஆண்டில், அதிபர் ஜி வாசிப்பு பற்றிய முதல் தேசிய மாநாட்டைத் தொடங்கி வைத்தார், இந்த மாநாடு அறிவைப் பெறுவதற்கு மட்டுமல்லாமல், ஞானத்தை விரிவுபடுத்துவதற்கும் நல்லொழுக்கங்களை வளர்ப்பதற்கும் வாசிப்பின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது:
“பண்டைக் காலத்தில் இருந்தே, சீன மக்கள் வாசிப்பைஆதரித்து வந்தார்கள். பொருட்களின் இயல்பை ஆய்வு செய்வதன் மூலம் அறிவைப்பெறுவதையும், நேர்மையுடன்சிந்திப்பதன் மூலம் மனதைச் சீர்படுத்துவதையும் வலியுறுத்தி வந்துள்ளார்கள்.
சீன மக்கள் தம்முடைய பாரம்பரியமான விடாமுயற்சியை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லவும், தன்னம்பிக்கையும் தற்சார்பையும் பண்பாக வடிவமைத்துக் கொள்ளவும் வாசிப்பு உதவியாக உள்ளது. வாசிப்பிலும் கற்பதிலும் முன்னிலைவகிக்கவும், நல்லொழுக்கங்களையும் இலட்சியங்களையும் வளர்க்கவும், திறன்களை மேம்படுத்தவும் கட்சி உறுப்பினர்களையும் நிர்வாகிகளையும் அழைக்கிறேன்.”
என்று அவர் பேசினார். அதே ஆண்டு, சீனாவின் மிகப்பெரிய நூலகம் – ஷாங்காய் நூலகம் (கிழக்கு கிளை) பொதுமக்களுக்காகத் திறக்கப்பட்டது. அங்கு வண்ணமயமான புத்தகங்கள் குழந்தைகளுக்காகவே வரிசையாக நிற்கின்றன. படுக்கைகளும், மேசைகளும், சாய்வு நாற்காலிகளும் உங்களை அங்கு அமர்ந்துபடிக்குமாறு அழைக்கின்றன. இங்குதான் பெரியவர்களும் குழந்தைகளுமாக மக்கள், தங்களுடைய வாசிப்பு உரிமையை நிலைநாட்டுவதற்காகக் கூடுகிறார்கள். 2021 வாக்கில், சீனாவில் வயது வந்தோர்கல்வியறிவு விகிதம் 97 சதவீதமாக உயர்ந்துள்ளது.
வாசிக்கும் உரிமைக்காக ஒரு நாள்
இந்தியாவில் சிபிஐ (எம்) உடன் இணைந்த புத்தக வெளியீட்டகங்களின் குழுவான, இடது வெளியீட்டாளர்களுக்கான இந்திய சங்கத்தின் சார்பில், 21 பிப்ரவரி 2019 அன்று ஒரு புத்தக தினம் கடைப்பிடிக்க முடிவு செய்தனர். (கம்யூனிஸ்ட் அறிக்கை வெளியான நாள் பிப் 21) விரைவில் அது சிவப்பு புத்தக தினமாக மாறியது. உலகெங்கிலும் உள்ள இடதுசாரி வெளியீட்டாளர்களின் ஆர்வத்தை ஈர்த்தது.
2020 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் சிறிய கிராமங்களில் சாலையில் பிளாஸ்டிக் நாற்காலிகளின் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கைவாசிக்கப்பட்டது. அதே நாளில் பிரேசிலின் நிலமற்ற தொழிலாளர் இயக்கத்தின் (எம்.எஸ்.டி) குடியேற்றங்களில், உறுப்பினர்கள் ஒன்றாக அமர்ந்து கார்னவல் கொண்டாட்டங்களின் போது சத்தமாக வாசித்தனர். நேபாளத்தின் மலைப்பகுதிகளில், விவசாயத் தொழிலாளர் சங்கம் தங்கள் சொந்த சிவப்பு புத்தகங்களைப் பற்றி விவாதித்தது, தான்சானியாவில் நிலமற்ற விவசாயிகள் கல்வியறிவின் முக்கியத்துவத்தைப் பற்றி பேசினர். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, கியூபாவில் பத்துநாட்கள் நீடித்த ஹவானா புத்தகக் கண்காட்சியில், பிப்ரவரி 21 ஆம் தேதி சிவப்பு புத்தகங்களுக்கான சிறப்புத் தொடர் நிகழ்வுகளுக்காக ஒதுக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும், இடதுசாரி வெளியீட்டாளர் கூட்டமைப்பு சிவப்பு புத்தக தினக் கொண்டாட்டத்தை விரிவாக்கி வருகிறது.
சிவப்பு புத்தக தினம் என்பது இப்போது ஒரு புத்தகத்தை படிக்கும் நாளாக மட்டும் இல்லை. மாறாக, புரட்சிகர நூல்களை எழுதுவதற்கும், வெளியிடுவதற்கும், படிப்பதற்குமான உரிமையைப் பாதுகாத்தும், பகுத்தறிவைத் தகர்க்கும் சமகால பழமைக்கருத்துக்களை எதிர்த்தும் நடந்துவரும் விரிவான பண்பாட்டு போராட்டத்தின் ஒரு பகுதியாக மாறிவிட்டது.
இந்த நாள் இடதுவெளியீட்டாளர்களின் சர்வதேச கூட்டமைப்பையும் கடந்து, முற்போக்கு சக்திகளின் நாட்காட்டியில் ஒரு முக்கிய நாளாக மாறி வருகிறது, மெக்சிகோ நாட்டின் எழுத்தாளர்பலோமா சாய்ஸ் டெஜெரோ கூறியதை போல:
“வாசிப்பவர்களே விமர்சனச் சிந்தனையை உருவாக்கும் மக்கள் ஆவர்; அவர்கள் கற்பனையை ஊக்குவிப்பவர்கள். தம் வரலாற்றை அறிந்து, அதன் மீது உரிமையை எடுத்துக்கொள்ளும் மக்கள் தங்கள் வேர்களைப் பற்றிப் பெருமிதம் கொள்வார்கள். வாசிப்பு நம்மை சமூகமயமாக்குகிறது; வாசிப்பே அனுபவங்களையும் தகவல்களையும் பகிர்ந்து கொள்கிறது.
நம்மையும் நமது வரலாற்றையும் உருவாக்கும் காரணிகளைப் புரிந்துகொள்ள புத்தகங்கள் உதவுகின்றன; அவை நமது கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் நிறுவிய இடத்திற்கும், காலத்திற்கும் அப்பாலும் நம் நனவை வளரச் செய்கின்றன. வாசிப்பே சிறந்த குடிமக்களை உருவாக்குகிறது.
நமது உரிமைகளைக் கோரவும், நமது கடமைகளை நிறைவேற்றவும் கற்றுக்கொள்கிறோம். வாசிப்பு,தனிநபர்களின் வளர்ச்சியிலும், சமூக வளர்ச்சியிலும் செல்வாக்கு கொண்டுள்ளது; வாசிப்பு இல்லாமல் எந்தச்சமூகமும் முன்னேற முடியாது.”
You may also like
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
