
ரோசா லக்ஸம்பர்க் : உலக கம்யூனிஸ்ட்டுகளின் நேசத்திற்குரியவர்
(5 மார்ச் 1871 – 15 ஜனவரி 1919)
ச. லெனின்
1871 மார்ச் 5 ஆம் தேதி போலந்து நாட்டில் பிறந்த ரோசா லக்ஸம்பர்க், பின்னர் ஜெர்மனியின் புரட்சியாளராக திகழ்ந்தார். அரசியல் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். அதிகார வர்க்கத்தை எதிர்த்த அவரது கலக மனப்பாங்கின் காரணமாக அவருக்குரிய தங்கப்பதக்கம் மறுக்கப்பட்டது. எதற்காகவும் சமரசம் செய்துகொள்ளாத இந்தப் போக்கு அவரின் இறுதிக் காலம் வரை தொடர்ந்தது. குலைக்க முடியாத அவரின் இந்த உறுதித் தன்மைக்கு அஞ்சியவர்களே அவரைப் படுகொலை செய்தனர்.
கோட்பாடு சார்ந்த சர்ச்சைகள் கல்வியாளர்களுக்கு மட்டுமே உரித்தானது என்கிற வாதத்தை ரோசா லக்ஸம்பர்க் கடுமையாகச் சாடினார். கோட்பாடுகள் கல்வியாளர்களின் களம் என்று வாதிடுவது தொழிலாளியை கொச்சையாக அவமதிப்பதாகும். இதைவிட கீழ்த்தரமான அவதூறு எதுவும் இருக்க முடியாது என்றார். முதலாளித்துவ கல்வி முறையில் பெறப்படும் கல்வி (அறிவு) என்பது தனி நபர்களின் மேம்பாட்டிற்கானதாக கூறப்படுகிறது. உண்மையில் முதலாளித்துவத்தின் வர்க்க நலன் மற்றும் தேவைகள் சார்ந்த மனப்பாங்குகளின் வெளிப்பாடாகவே அதன் கல்வி முறையும் அதன் உள்ளடக்கமும் இருக்கின்றன.
சாரமற்ற, இயந்திரத்தனமான எழுத்துக்களைச் சுவையற்ற இயக்கமற்ற அரசியலின் அடையாளமாகக் கருதிய லக்ஸம்பர்க் தனது வார்த்தைகளிலும் எழுத்துக்களிலும் சோஷலிசத்தின் உயிருள்ள உணர்வுகளை வெளிப்படுத்தினார் என்கிறார் ஹெலன் ஸ்காட். “கட்டுரைகளை வழக்கமான முறைகளில் எழுதுவதைக்கண்டு நான் அதிருப்தியடைகிறேன். அவர்கள் அந்த அளவிற்குச் சம்பிரதாயமாகவும் உணர்ச்சியற்றவர்களாகவும் இருக்கிறார்கள். ஒவ்வொரு கட்டுரையிலும் மீண்டும் நீங்கள் அதன் பொருளை வாழ்ந்து பார்க்க வேண்டும். நான் எழுதும் பொழுது நான் என்ன எழுதுகின்றேனோ அதைப் பற்றி உற்சாகமான உணர்வுகளை எனது எழுத்துக்கள் மூலம் பகிர்ந்து கொள்வதில் எப்போதும் நான் உறுதியாக உள்ளேன்” என லக்ஸம்பர்க் பதிவு செய்கிறார்.
புரட்சியா? சீர்திருத்தமா?
“நமது இறுதி இலக்கை சமூக சீர்திருத்தங்களுக்குச் சமமாக முன் வைக்க முடியுமா? நிச்சயமாக முடியாது.” ‘சீர்திருத்தம்’ பேசுபவர்கள், ஒரு குறிப்பிட்ட வடிவத்திலான வீழ்ச்சியை மட்டும் நிராகரிக்கவில்லை; மாறாக வீழ்ச்சியின் சாத்தியத்தையே நிராகரிக்கின்றனர். அதாவது சமூக எதார்த்தங்களை கணக்கில் கொண்டு மார்க்சியத்தை முன்னெடுப்பதே முதலாளித்துவத்தை வீழ்த்திட உதவும் என்பதை விமர்சனமாக கூட ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், அவர்களின் விவாதமோ, இத்தகைய எதார்த்தங்கள் உள்ள நிலையில் மார்க்சியம் ஏற்புடையதல்ல என்கின்றனர். அது வேறு வகையில் அனைத்து விதமான சுரண்டலுக்கும் அடிப்படையாக உள்ள முதலாளித்துவத்தைப் பாதுகாக்கும் சிந்தனையைக் கொண்டுள்ளதாக அமைந்து விடுகிறது என்கிறார் லக்ஸம்பர்க்.
ஸ்தாபன அமைப்பு, ஜனநாயகம், தேசியம், ரஷ்யப் புரட்சிக்கு பிறகான செயல்பாடுகள் உள்ளிட்டவற்றில் தோழர் லெனினுடைய கருத்துகளுடன் லக்ஸம்பர்க் முரண்பட்டே நின்றார். அவை கருத்து ரீதியான முரண்பாடாகவே பார்க்கப்பட வேண்டியவையாகும். மாறாக, லக்ஸம்பர்க் லெனினிய விரோதியாக சிலரால் சித்தரிக்கப்பட்டார். லக்ஸம்பர்க் குறித்து லெனின் கூறுகையில், “உலக கம்யூனிஸ்ட்டுகளின் நினைவில் அவர் நேசத்திற்குரியவராக இருப்பார் என்பதுடன் அவருடைய வாழ்க்கை வரலாறும் அவரின் நூல்களும் கம்யூனிஸ்ட்டுகளின் பல தலைமுறைகளுக்கான கல்வியில் மிகப் பயன்மிக்க பாடமாக அமையும்” என்றார்.
You may also like
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
