
ஆர்.எஸ்.எஸ் 100: பாசிச அடித்தளமும், செயல்திட்டமும் !
இரா. சிந்தன்
இப்போது ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தன்னுடைய நூற்றாண்டை கொண்டாடிக் கொண்டுள்ளது. இந்த சமயத்தில் அந்த அமைப்பை குளிர்விக்கும் நோக்குடன், நாட்டின் 79வது சுதந்திர தின மேடையையை பயன்படுத்திக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, ஆர்.எஸ்.எஸ் அமைப்பினைப் புகழ்ந்து பேசியதுடன், அதே உரையில் ‘மக்கள் தொகை திட்டம்’ பற்றிய அறிவிப்பை வெளியிட்டார். இந்தச் செயல்கள் மிகக் கடுமையான விமர்சனத்திற்குரியவை. ஆனாலும், பெரும்பாலான நாட்டு மக்களுக்கு ஆர்.எஸ்.எஸ். செயல்திட்டம் தெரியாததால், அதன் அபாயம் உணரப்படவில்லை.
இந்தியாவில் செயல்பட்டு வரும் பல்வேறு அரசியல் கட்சிகளில், இன்னுமொரு அரசியல் கட்சியாகவே ‘பாஜக’வை பலரும் பார்க்கிறார்கள். ஆனால் “பாஜக சாதாரண முதலாளித்துவக் கட்சி அல்ல; பாசிசத் தன்மை கொண்ட ராஷ்டிரீய சுயம்சேவக் சங்கத்தினால் (ஆர்.எஸ்.எஸ்) வழிநடத்தப்படும், ஆதிக்கம் செலுத்தப்படும் ஒன்றாகும். பாஜக அதிகாரத்தில் இருப்பதால், அரசு அதிகாரத்தையும், அரசு இயந்திரத்தையும் தமது கருவிகளாக ஆர்.எஸ்.எஸ். பயன்படுத்திக் கொள்ள முடிகிறது” (சி.பி.ஐ(எம்) – கட்சித் திட்டம்). எனவே, கடந்த 2014 ஆம் ஆண்டில் தனிப்பெரும்பான்மையுடன் அமைந்த ஒன்றிய பாஜக ஆட்சியும், மாநிலங்களில் நேரடியாகவோ, மறைமுகமாக கூட்டாளிகளின் வழியாகவோ அவர்கள் செலுத்திவரும் ஆட்சிகளும் – ஆர்.எஸ்.எஸ் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளும் விதமாக அரசின் கருவிகளையும், அதிகாரத்தையும் கைப்பற்றும் நடவடிக்கைகளே ஆகும்.
பாஜகவின் பிரதமர் வேட்பாளராக, நரேந்திர மோடி முன்னிறுத்தப்படத் தொடங்கிய சமயத்தில், ‘பாஜகவின் மீது ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பிடி மேலும் இறுகியிருப்பதைக் காட்டுவதாக’ எச்சரித்தார், சி.பி.ஐ(எம்) பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி. அந்த எச்சரிக்கை மிகச் சரியானது. தொடர்ந்து வந்த அடுத்தடுத்த ஆட்சிக் காலங்களில், மோடி அரசாங்கம் இந்துத்துவத்தை அரசின் சித்தாந்தமாக மாற்றுவதற்கும், மதச்சார்பற்ற – ஜனநாயக குடியரசை ஒரு இந்துத்துவ ராஷ்டிரமாக மாற்றுவதற்கும் தீவிரமான முயற்சியைச் செய்து வருகிறது. அதிலிருந்துதான் இந்த அரசு வெளிப்படுத்தும் ‘நவபாசிச குணாம்சங்கள்” எழுகின்றன.
முதலில் நாம் மனதில் இருத்த வேண்டியது, ஆர்.எஸ்.எஸ் வகுப்புவாதிகள் கடந்த காலங்களில் செய்தது போல சில பிரிவினை திட்டங்களை முன்னெடுத்து, அந்த வெப்பத்தில் இந்து மக்களின் ஆதரவைக் களவாட முயற்சிப்பதும், அதற்காக சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வதும் விரிவடைந்துள்ளது. இப்போது இந்துத்துவ வகுப்புவாத சக்திகள், அரசு அதிகாரத்தைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். புதிய சட்டங்கள் இயற்றப்படுகின்றன; ஏற்கனவே உள்ளவை திருத்தப்படுகின்றன; காவல்துறை ஒரு சார்பாக மாறுகிறது; ஊடகங்கள் கைப்பற்றப்படுகின்றன; சுதந்திரமான ஊடகங்கள் மிரட்டப்படுகின்றன; நீதித்துறை வளைக்கப்படுகிறது; எதிர்க் கட்சிகளை நீக்கம் செய்வதற்கு வெளிப்படையான முயற்சிகள் நடக்கின்றன; இப்போது தேர்தல் ஆணையமும், ஆர்.எஸ்.எஸ். செயல்திட்டத்திற்கான ஒரு கருவியாக மாற்றப்படுகின்றது. பீகார் மாநிலத்தில், வாக்குப் பட்டியலில் சிறப்புத் தீவிர திருத்தம், ஒருபக்கம் வாக்காளர்களை நீக்குகிறது. அத்துடன் அந்த திட்டத்தின் மறுபக்கம் வாக்காளர்களில் ஒரு பகுதியை ‘சந்தேகத்திற்குரிய’ குடிமக்களாகத் தீர்மானித்து, அவர்களின் குடியுரிமையையே கேள்விக்குள்ளாக்கும் அபாயத்தை நோக்கி அமைந்துள்ளது. இந்த அனைத்திற்கும் உறுதியான ஆதரவை, பெருமுதலாளிகள் வழங்கி வருகிறார்கள். இவையெல்லாம், ‘இந்துத்துவ ராஷ்ட்டிரத்தை நோக்கிய போக்குகள்’ ஆகும். எனவே நாம் இந்த கட்டுரையில் அதன் பாசிச அடித்தளத்தை காண்போம்.
ஆர்.எஸ்.எஸ். தோற்றமும், நோக்கமும்
1857ஆம் ஆண்டில் நடைபெற்ற சிப்பாய்களின் எழுச்சியை அடக்கி வீழ்த்திய பின்னர், அதுவரை கம்பெனி ஆட்சியில் இருந்த இந்தியாவை, பிரிட்டிஷ் அரசாங்கம் தனது நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. அதாவது, இந்தியாவின் அரசியல் கட்ட்டமைப்பை தன்னுடைய வசதிக்கு ஏற்ப உருவாக்கும் முயற்சியில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இறங்கியது. சுருக்கமாக, தனது பிரித்தாளும் கொள்கையை அமலாக்கத் தொடங்கியது எனலாம். இப்படியான முயற்சியின் ஒரு பகுதியாகவே ஆளும் வர்க்கத்தின் ஆதரவோடு வகுப்புவாத சக்திகள் உருவாகி வளர்ந்தனர். பிர்லா போன்ற முக்கிய முதலாளிகள் மதவாத அமைப்புகளுக்கு ஆதரவளித்தார்கள். அதே நேரத்தில், பெரும்பாலான இந்திய மக்களும் தங்கள் மீதான ஒடுக்குமுறை எதிர்ப்பு, ஏகாதிபத்தியச் சுரண்டல் எதிர்ப்புப் போராட்டங்களின் மூலம், தங்கள் சொந்த அரசியலை வடிவமைத்தார்கள்.
1925இல், மராட்டியத்தில் ஹெட்கேவர் என்பவரும், இந்து மகாசபையை என்ற அமைப்பைச் சேர்ந்த 4 பிராமணர்களும் இணைந்து, விஜயதசமி நாளன்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பை உருவாக்கியுள்ளதாக அறிவித்தனர். மராட்டியத்தில் அப்போது ஜோதிபா பூலேவும், சாவித்திரிபாயும் உருவாக்கியிருந்த “சத்யசோதக் சமாஜ்” அமைப்பு இயங்கி வந்தது. அது சமூக ஒடுக்குமுறைகளை எதிர்த்தது, பெண் கல்விக்கு போராடியது. பின்னர் மராட்டியத்தில், டாக்டர் அம்பேத்கரின் இயக்கமும் வேர் பிடித்தது. அவர் பிராமணீய ஆதிக்கத்திற்கு எதிராக தலித் மக்களை விழிப்புணர்வு பெறச் செய்தார். 1927இல் மனுஸ்மிருதியைத் தீயிட்டுக் கொளுத்தினார். மறுபக்கத்தில், விடுதலைப் போராட்ட இயக்கம் வளர்ந்தது. உலகின் முதல் சோசலிசப் புரட்சி, சகலருக்கும் விடுதலை என்பதற்கான புதிய பொருளை வழங்கி வந்தது. இத்தகைய வளர்ச்சிப் போக்குகளுக்கு நேர் மாறான எதிர்வினையாகவே ஆர்.எஸ்.எஸ். உருவெடுத்தது.
இந்துத்துவா பாசிச தன்மை அரசியல்
1923ஆம் ஆண்டில், வி.டி. சாவர்க்கர் எழுதிய நூலில்தான் முதன் முதலில் ‘இந்துத்துவா’ என்ற சொல்லும், அதற்கான விளக்கமும் இடம்பெற்றது. அவர் அதனை ஒரு அரசியல் திட்டம் என்றே கூறினார். அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நேரத்தில், பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் மன்னிப்புக் கடிதமும், சமரசத் தூதும் விட்டுக் கொண்டிருந்தபோதுதான் சாவர்கரிடம் இந்த நூலுக்கான கருத்துக்கள் உருவாகின. அந்தக் கருத்துக்கள் பிரிட்டிஷாரின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு சாதகமாக அமைந்தன. இவற்றை ஏற்றுத்தான் ஆர்.எஸ்.எஸ் உருவாகியது.
பகத்சிங்கும் அவருடைய சகாக்களும் வீரியமாக செயல்பட்டு வந்த அந்தக் காலத்தில், ஆர்.எஸ்.எஸ். அவர்களோடு இணைந்து நிற்கவுமில்லை; ஆதரிக்கவும் இல்லை. காங்கிரசார், புரட்சியாளர்கள், சோஷலிஸ்டுகள், கம்யூனிஸ்டுகள் என அன்று ஏகாதிபத்தியத்துக்கு எதிராகப் போராடிய அனைவருமே ஆர்.எஸ்.எஸ்./ இந்து மகாசபா அமைப்புகளால் எள்ளி நகையாடப்பட்டனர். சாவர்க்கர் ஹிட்லரை ஆதரித்தார். அதே வழிமுறையில் இந்துக்களை ஆயுதபாணியாக்க வேண்டும் என்றார். அதே காலகட்டத்தில் மதன் மோகன் மாளவியா, டாக்டர் மூஞ்சே ஆகியோர் இந்து அமைப்புகளை உருவாக்க வேண்டும் என்ற முடிவோடு இயங்கி வந்தனர். இவ்வாறு உருவாகிய இந்து அமைப்புகள் பிரிட்டிஷ் ஆதிக்கத்திற்கு எதிராக செயல்படுவதை விடவும், இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பையே கட்டமைத்தன.
1931ஆம் ஆண்டில் மூஞ்சே ஐரோப்பாவிற்குச் சென்றபோது, இத்தாலியில் பாசிச இளைஞர் அமைப்புகளின் செயல்பாடுகளைப் பார்த்தார். முசோலினியை நேரில் சந்தித்தார். 1938ஆம் ஆண்டில் அவர் உருவாக்கிய நாசிக் ராணுவப் பள்ளி என்ற ஏற்பாடு, பாசிஸ்ட் அமைப்புகளிடமிருந்து ஊக்கம் பெற்றதாகும். இவ்வாறு ஆர்.எஸ்.எஸ். அமைப்பு, ஏகாதிபத்தியத்துடனான சமரசத்தில் இருந்து தனது தத்துவத்தை உருவாக்கியது. பாசிச பாணியிலான அமைப்புகளிடமிருந்து தனது கட்டமைப்பை உருவாக்கியது.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் ‘தேசமும்’
இந்திய தேசியம் என்பது – பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான வீரம் செறிந்த மக்கள் போராட்டங்களில் இருந்து உருவானது. ஆனால், அதில் எந்தப் பங்கும் வகிக்காத இந்துத்துவம் முன்வைக்கும் தேசம் என்பது என்ன?. மத வகைப்பட்ட இரண்டு தேசங்கள் என்பதே அவர்களுடைய கொள்கை ஆகும். (பின்னர் முஸ்லிம் அடிப்படைவாதிகளும் இதே கருத்தை வலியுறுத்தினார்கள்). இந்திய தேசியத்தில் இருந்து வேறுபட்டதாக முன்வைக்கப்படும் ‘இந்து தேசம்’ என்பதற்கு ஆர்.எஸ்.எஸ் கொடுக்கும் விளக்கம், எந்த அறிவியல் அடிப்படையில் இருந்தும் எழுந்ததல்ல. மத வெறுப்பைக் கட்டமைக்கும் அவர்களின் அரசியல் நோக்கத்திற்காக வசதியாகக் கட்டமைக்கப்பட்டது.
ஆர்.எஸ்.எஸ் குருமார்களின் விளக்கத்தின்படி ஒருவரின் தேசத்தைத் தீர்மானிப்பதற்காக, முதலில் ‘தந்தை நிலம்’ மற்றும் ‘புனித நிலம்’ ஆகிய அம்சங்களை முதலில் புகுத்துகிறார்கள். ஒருவர் வாழும் பகுதியை தந்தை நிலம் என்கின்றனர். அதே சமயம், ஒரே நிலத்தில் வாழ்ந்தாலும் தங்களின் புனித பூமியை இங்கேயே கொள்ளாதவர்களை அந்நியர்கள் என வரையறுத்தார்கள். இந்த விளக்கத்தை ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ‘குருஜி’ என அழைக்கப்படும் கோல்வால்கர் மேலும் விரிவாக்கினார். அவர் ‘நிலம், இனம், மதம், கலாச்சாரம், மொழி’ ஆகிய ஐந்து அடிப்படைகளை முன்வைத்தார் ‘நாம் (அல்லது) நம்முடைய தேசம் பற்றிய விளக்கம்’ என்ற நூலில் அவர் முன்வைத்தார்.
அவருடைய கருத்துப்படி, ஆரிய இனம் என்பது இந்து தேசத்திற்கான முக்கிய மூலக்கூறு ஆகும். எனவே, ஆரியர்கள் இந்த நிலத்தின் பூர்வகுடிகள் என்று நிலைநாட்டுவதற்காக பல்வேறு விநோதமான முயற்சிகளையும் அவர் மேற்கொண்டார். கீழ்க்காணும் விளக்கத்தைப் படித்துப் பாருங்கள்:
“ஆர்க்டிக் மண்டலம் என்பது ஆரம்பத்தில், உலகில் தற்போது பீகார், ஒரிசா என்று அறியப்படும் பகுதியில்தான் இருந்தது. பின்னர் அது வடகிழக்கே நகர்ந்து, பின்னர் சில காலம் மேற்குப்புறமாக நகர்ந்து, சில சமயங்களில் வடக்கே நகர்ந்து, இன்றைய நிலைக்கு வந்துள்ளது. நிலைமை இவ்வாறு இருப்பதால், ஆர்க்டிக் மண்டலத்தை விட்டு நாம் விலகினோம். இந்துஸ்தானத்திற்கு வந்தோம். அல்லது நாம் எப்போதும் இங்கேதான் இருக்கிறோம். ஆர்க்டிக் மண்டலம்தான் நம்மை விட்டு வடக்கே வலமும் இடமுமாய் வளைந்து வளைந்து சென்றுவிட்டது” (பிற்காலத்தில், சிந்து வெளி நாகரீகம் கண்டறியப்பட்ட பின்னர் அது ஆரிய நாகரீகம் என்று நிலைநாட்டுவதற்காக இதே போன்ற பல்வேறு அறிவியலுக்கு விரோதமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இப்போது அவை பாடத்திட்டங்களிலும் புகுத்தப்படுகின்றன).
மொழிக் கொள்கையையும் அவ்வாறே அவர்கள் ‘புகுத்துகிறார்கள்’. பல்வேறு மொழிகளும், மொழிசார்ந்த பண்பாடும், பாரம்பரியமும் கலந்துறவாடி, பல்வேறு தேசிய இனங்கள் உருவாகியிருப்பதை ஆர்.எஸ்.எஸ். ஏற்பதில்லை. “ஒரே மொழிதான். அது சமஸ்கிருதம்தான். மற்ற மொழிகள் அனைத்துமே அதிலிருந்து பிறந்த அதன் குழந்தைகள்தாம்” என்று கூறுகிறார் கோல்வால்கர். இப்போது மோடி அரசால் திணிக்கப்படும் தேசிய கல்விக் கொள்கையில் இந்த கருத்து புகுத்தப்பட்டுள்ளது.
ஒற்றைத்தன்மையா, ஒற்றுமையா?
அடுத்ததாக ‘மதம்’ ‘கலாச்சாரம்’ ஆகிய அம்சங்களைப் பரிசீலிப்போம். இந்து மதம், பல பாரம்பரியங்களின் தொகுப்பாக அமைந்திருப்பதை அவர்கள் ஏற்கவில்லை. மாறாக தனது அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தும் வகையில் மதத்தை விளக்குகிறார்கள். அதனை ‘இந்து’ என்ற சொல்லின் பயன்பாட்டில் இருந்தே பார்க்கலாம். ‘இந்து’ என்ற சொல், காலனி ஆதிக்க காலத்திற்கு முன் இருந்ததல்ல. கிறித்துவ, இஸ்லாமிய மதங்களைப் போன்றோ, அல்லது பௌத்த, சமண மதங்களைப் போன்றோ, குறிப்பிட்ட ஒரு காலப்பகுதியைச் சேர்ந்தவர் என்று அடையாளப்படுத்தும்படியான, வரலாற்று முக்கியத்துவம் மிக்க ஒருவரது போதனைகளை அடிப்படையாகக் கொண்டதாக, இந்து மதம் என்று இன்று நாம் அழைக்கக் கூடிய மதம் இருக்கவில்லை.
“மேற்கு ஆசியாவிலிருந்து பார்க்கும்போது, சிந்து நதியோரப்பகுதியான வட இந்தியா ‘அல்-ஹிந்த்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சிந்து நதி சமஸ்கிருத மூலங்களில் சிந்து என்றும், பழைய ஈரானிய மொழியில் ஹெண்டு என்றும் அழைக்கப்பட்டது. இவ்வகையில்தான் அல்-ஹிந்து சிந்துவோடு இணைக்கப்பட்டது. அல்-ஹிந்த் பகுதியில் வாழ்ந்த மக்கள் இந்து / இந்தி என்று அழைக்கப்பட்டனர்… இந்த பெயர் பின்னர் பல்வேறு ஐரோப்பிய காலனியாதிக்கவாதிகளால் மதத்திற்கான ஒரு முத்திரையாகப் பயன்படுத்தப்பட்டது” என்கிறார் வரலாற்று அறிஞர் ரொமிலா தாப்பர்.
ஆனால், சாவர்க்கர் இந்து என்பதை வரையறுக்க தந்தை நிலம், புனித நிலம் ஆகியவற்றை புகுத்தினார். அதை தொடர்ந்து வந்த கோல்வால்கர் மதம், கலாச்சாரம் ஆகிய அம்சங்களை விவரிக்கும்போது, மனுவை கொண்டாடுகிறார். “மனு தர்மத்தில், உலகில் உள்ள அனைத்து மக்களும் இந்துஸ்தானுக்குச் சென்று அந்த நாட்டிலுள்ள முதலில் பிறந்த பிராமணர்களின் புனிதக் காலில் விழுந்து வணங்கி தங்களுடைய கடமைகள் என்ன என்பதைக் கற்றுத் தெளிய வேண்டும்” என்று கட்டளையிட்டிருக்கிறார் மனு என்பதையும் கோல்வால்கர் புழங்காகிதத்துடன் குறிப்பிடுகிறார். 2019, ஆகஸ்ட் 5ஆம் தேதியன்று, மசூதியை இடித்து நொறுக்கிய இடத்தில், ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டுகின்ற விழாவில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பங்கேற்றபோது, அந்த மனுவின் சுலோகத்தை மீண்டும் கூறுவதன் மூலம், அந்தக் கருத்தே இப்போதும் தொடர்வதை உறுதிப்படுத்தினார்.
மனு ஸ்மிருதி எனப்படும் சட்ட நூல், சூத்திரர்கள் பிராமணர்களுக்குப் பணிவிடை செய்ய வேண்டும் என்பதுடன், அதற்கான ஊதியமாகத் தங்கள் உணவில் மிச்சமானதை, பழைய துணிகளைக் கொடுத்தாலும் ஏற்க வேண்டும் என்கிறது. மேலும் ஒரு சூத்திரனுக்குத் திறமை இருந்தாலும் கூட, அவன் செல்வத்தைப் பெருமளவில் திரட்டக் கூடாது; அதனால் புரோகிதர்கள் எரிச்சலடைவார்கள் என்கிறது. மேலும், சாதியற்றவர்கள்/ தீண்டாமைக்குள்ளாகும் பகுதியினரைக் குறிப்பிடும் மனு, இந்த சமூகத்தில் அவர்களுக்கு ஒரு இடமும், எப்போதும் கிடையாது என்பதுடன், அவர்களை மேலும் இழிவுபடுத்தவும் செய்கிறார். பெண்களைப் பற்றிய பல்வேறு மோசமான கருத்துக்களை மனுஸ்மிருதி கூறுகிறது. அவர்கள் சுதந்திரமானவர்கள் இல்லை என்று சொல்வதுடன், அவர்கள் உடலுறவுக்காக ஏங்கித் திரிபவர்கள் என்றும், கணவர்களுக்கு உண்மையாக இருக்க மாட்டார்கள்; பரத்தையர் போல ஆண்களின் பின்னே ஓடுவார்கள் என்பதுடன், அதுவே அவர்களின் இயற்கையான குணம் என்பதால், அவர்கள் தப்பிச் செல்லாதவாறு ஆண்கள் தங்களாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்கிறது. மேலும் பெண்களுக்கென்று தனியே வேத சுலோகங்களோ, சடங்குகளோ இல்லை என்பது மனுவின் சட்டம். பொய்யைப் போல மாசுவடிவிலானவர்கள் என்றும் அது பெண்களைக் குறிப்பிடுகிறது.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் தனது குழந்தைப் பருவத்தில் இருந்து செயல்பட்டு, பின் அதிலிருந்து வெளியேறிய சுதீஸ் மின்னி, நரக மாளிகை என்ற நூலை எழுதியிருக்கிறார். அந்தப் புத்தகத்தின் மூன்றாவது அத்தியாயம், ஆர்.எஸ்.எஸ். அமைப்புக் கட்டமைப்பை விளக்குகிறது. அதில், அந்த அமைப்பு நடத்தும் ரகசியமான ஆண்டுக் கூட்டங்களில் (அகில பாரதிய காரியகாரி) சங்கத்தின் ஓராண்டு செயல்பாட்டைப் பரிசீலிக்கும்போது, சாணக்கியரின் அர்த்த சாஸ்திரத்தில் கூறப்படும் விஷயங்களை, இன்றைய செயல்பாட்டுக்கான தந்திரமாக மாற்றுவார்கள் எனக் குறிப்பிடுகிறார். எனவே, மனுஸ்மிருதியும், அர்த்த சாஸ்திரமும் அவர்களுடைய ‘இந்து’, ‘கலாச்சார’ நிலைப்பாட்டின் அடிப்படைகளாக அமைந்திருக்கின்றன.
இதன் காரணமாகவே அவர்கள், சாதிப் படிநிலைகளைத் தக்க வைத்துக் கொண்டே, சாதியைக் கெட்டிப்படுத்தி, அதனூடாக அந்தப் பட்டியல்/விளிம்புநிலை சாதிகளையும் இந்துத்துவச் சட்டகத்திற்குள் இழுக்கும் விதமாகச் செயல்படுகிறார்கள். அவர்கள் முன்வைக்கும் இந்து ஒற்றுமை என்பது சாதிகளைக் கடந்த, சாதிகள் இல்லாத ஒற்றுமை அல்ல. உட்சாதி அடையாளங்களை வலுப்படுத்துவதன் மூலம், ஒவ்வொரு சாதியையும் மென்மேலும் மோதலுக்குள்ளாக்கி களத்தை மென்மேலும் ‘ஆர்.எஸ்.எஸ்’ அரசியலுக்குச் சாதகமாக மாற்றுவது அவர்களின் உத்தியாக உள்ளது.
பகிரங்கமாகும் உண்மை நோக்கம்!
ஆர்.எஸ்.எஸ் முன்வைக்கும் ‘தேசம்’ இப்படியிருக்க. அந்த தேசம் என்ற வரையறைக்கு அப்பாற்பட்டவர்களை எப்படி நடத்த வேண்டும் என்பதில் அதன் மிக மோசமான பாசிச திட்டம் வெளிப்படுகிறது. அதற்காகத்தான் அவர்கள் இப்போது நம் மக்களின் குடியுரிமையை ஒரு அரசியல் களமாக மாற்றி, சந்தேகம் விதைப்பதும்; ‘அந்நியர்கள்’ என்ற முத்திரையோடு பிளவுபடுத்துவதும்; மத அடிப்படையில் குடியுரிமையைத் தீர்மானிக்க வசதியாகச் சட்டத் திருத்தம் செய்வதும்; தேசிய குடிமக்கள் பதிவேடு உருவாக்குவதும்; தேர்தல் ஆணையத்தின் ‘வாக்காளர் பட்டியல்’ மற்றும் சென்சஸ் கணக்கெடுப்பு நடவடிக்கைகளில் அதற்கான அம்சங்களைப் புகுத்துவதுமாக – படிப்படியாக வெளிப்படுவது அதன் அந்த பாசிசத் தன்மையிலான நோக்கங்கள்தான்.
கோல்வால்கர் தன்னுடைய நூலில் இவ்வாறு எழுதுகிறார்: “’தேசம் என்கிற வரையறை குறித்து நாம் குறிப்பிட்டுள்ள ஐந்து நிபந்தனைகளுக்குள் வராதவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் தங்கள் வேறுபாடுகளைக் களைந்து, நம் தேசத்திற்குரிய மதம், கலாச்சாரம், மொழியை ஏற்றுக் கொண்டு, இந்த தேசத்தின் இனத்துடன் முழுமையாக இணையாதவரை, அவர்கள் தேசிய வாழ்வில் இடம்பெற முடியாது. ஆயினும், அவர்கள் தங்களுடைய இன, மத, கலாச்சார வேற்றுமைகளையே பின்பற்றுவார்களெனில், அவர்கள் அந்நியர்களாகக் கருதப்படுவதைத் தவிர வேறெப்படியும் இருக்க முடியாது”
எனவே, ஆர்.எஸ்.எஸ். முன்வைக்கும் அந்நியர்கள் என்ற வரையறையில், மதவழி சிறுபான்மையினர்களோடு கூடுதலாக – ஆரியர் அல்லாதவர்கள், சாதியப் படிநிலையை ஏற்க மறுக்கும் நம்பிக்கையாளர்கள், பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் முற்போக்கான மத சிந்தனையாளர்கள், நாத்திகர்கள், பகுத்தறிவாளர்கள், சாதிக்கு எதிரானவர்கள், மொழிவழி தேசியங்களின் உரிமைகளை வலியுறுத்துவோர், அறிவியலாளர்கள் என – பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.
“இவ்வாறு, அந்நியர்களாக இருப்பவர்களுக்கு இரு மார்க்கங்கள் மட்டும்தான் வெளிப்படையாக இருக்கின்றன. ஒன்று, அவர்கள் தேசிய இனத்துடன் முழுமையாக இணைந்து, அவர்களின் கலாச்சாரத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்; அல்லது தேசிய இனம் அவ்வாறு அவர்கள் தொடர்ந்து இருப்பதற்கு அனுமதிக்கும் வரையில்… அவர்கள் நாட்டை விட்டு வெளியேறிட வேண்டும் என்று சொல்லும் வரை, அவர்களுடைய கருணையின் கீழ் வாழ்ந்துகொள்ள வேண்டும்… இந்து கலாச்சாரத்தையும் மொழியையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்… தங்களுடைய தனிப்பட்ட அடையாளத்தையெல்லாம் துறந்துவிட்டு இந்து இனத்துடன் சங்கமித்திட வேண்டும்; அல்லது எதையும் கோராமல், எந்த விதமான சிறப்புரிமைகளுக்கும் உரிமை பாராட்டாமல், முன்னுரிமைச் சலுகைகள் எதையும் கோராமல், ஒரு குடிமகனுக்குரிய உரிமைகளைக் கூட கோராமல், இந்து தேசத்திற்கு முழுமையாகக் கீழ்ப்படிந்து இருந்துகொண்டு, நாட்டில் தங்கிக் கொள்ளலாம்” என்றும் கோல்வால்கர் கூறியிருக்கிறார். அதே நூலில் அவர் ஹிட்லர் முன்னெடுத்த மாபெரும் அழித்தொழிப்பைக் குறிப்பிட்டு, அதிலிருந்து ‘நாம் கற்றுக்கொண்டு ஆதாயம் அடைய வேண்டும்’ என்றும் கூறியுள்ளார்.
இந்த அம்சங்களையெல்லாம் நாட்டு மக்களின் முன் அம்பலப்படுத்திய சீத்தாராம் யெச்சூரி, நமக்கு கொடுத்திருக்கும் எச்சரிக்கை முக்கியமானது. “ஆர்.எஸ்.எஸ். வழிகாட்டுதலில் பாஜக ஆட்சிக்கு வருவதென்பது… ஒரு வடிவ மாற்றம் மட்டுமல்ல; மாறாக மிகவும் நச்சுத்தன்மைவாய்ந்த உள்ளடக்க மாற்றமும் ஆகும். நவீன இந்தியாவைப் பாதுகாக்க வேண்டுமானால், இந்த பாசிச தன்மையிலான செயல்திட்டம் முறியடிக்கப்பட்டாக வேண்டும்”
ஆர்.எஸ்.எஸ். செயல்படும் முறை
இந்துத்துவ ராஷ்டிரம் என்ற பெயரில், மேலே குறிப்பிட்ட அம்சங்களைக் கொண்ட ஒரு அரசினை உருவாக்குவதுதான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் இலக்கு. இந்த இலக்கை மறைத்தபடியே தனது திட்டமிட்ட செயல்பாட்டை அது தொடர்கிறது. கீழ்க்காணும் படிநிலைகளை அவர்களுடைய செயல்பாட்டில் காணலாம்.
- இந்தியாவின் பழைய வரலாற்றைப் புனைவின் அடிப்படையிலானதாக மாற்றுவதுடன், கேள்விக்கு உள்ளாக்க முடியாமல் புனிதப்படுத்துவது.
- பல வழிமுறைகளின் தொகுப்பாக அமைந்திருக்கும் இந்து நம்பிக்கையை, ஒரே இந்து நம்பிக்கையாகச் செயற்கையாகக் கட்டமைப்பது.
- மதவழி சிறுபான்மையினர், கம்யூனிஸ்டுகள், அறிவியல் சிந்தனையாளர்களை நாட்டின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் காரணமாகக் கற்பிப்பது. அவர்களை அழிப்பதுதான், சிறந்த தேசத்தைக் கட்டமைக்கவும், மறுமலர்ச்சிக்கும் ஒரே வழி என்பது.
- சிறுபான்மையினரையும், இந்துத்துவ சித்தாந்தத்தை விமர்சிப்போரையும் துரோகிகள் என்பது.
- தமக்கு மாறான சிந்தனைகளை அகற்றுவது; கல்விக் கட்டமைப்பையும் பாட நூல்களையும், இந்துத்துவ அரசியலுக்குத் தக்கவாறு மாற்றியமைத்து, இளம் உள்ளங்களை மாசுபடுத்துவது.
- சமுதாயத்தை மத அடிப்படையில் பிளவுக்குள்ளாக்கும் அனைத்துப் பிரச்சனைகளையும் தீவிரப்படுத்தி, அதன் மூலம் பகைமைத் தீயைத் தொடர்ந்து வளர்ப்பது.
- ஆயுதமயமாக்கப்பட்ட அமைப்பினை வளர்த்தெடுத்து, அதன் மூலம் பாசிசத் திட்டத்தை முன்னெடுப்பது; அரசு நிர்வாகங்களில் முழுமையாக ஊடுருவிக் கைப்பற்றுவது.
சென்னை நகரத்தில் எஸ். பரமார்த் என்பவரால் 1946-ஆம் ஆண்டில் முதல் சாகா அமைக்கப்பட்டது. எனினும் தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினால் மிக நீண்ட காலத்திற்கு கால் பதிக்கவே முடியவில்லை. இருப்பினும், கடந்த 30 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் இரண்டு பிரதான கட்சிகளோடு கூட்டணி சேரக் கிடைத்த வாய்ப்பு பாஜக, ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளுக்கு புதிய சாத்தியங்களை ஏற்படுத்தியது. இப்போது, தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அஇஅதிமுக, பாஜக-விடம் முற்றிலும் சரணாகதி அடைந்துள்ளது. மேலும் பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளும், தங்களது அரசியல் எதிர்காலத்திற்காக, பாஜக/ஆர்.எஸ்.எஸ்.-ன் வகுப்புவாத போக்கிற்கு எதிராக எந்த அரசியலும் செய்யாதுள்ளனர்.
ஆர்.எஸ்.எஸ். தனது உத்திகளையும் தமிழ்நாட்டுக்கேற்ப வடிவமைக்கிறது. இங்கே சமஸ்கிருத/இந்திக் கலப்பில்லாத தூய தமிழ்ப் பெயர் அவசியம் என உணர்ந்து, தங்களின் பரிவார அமைப்பு ஒன்றை ‘இந்து முன்னணி’ என்ற பெயரோடு 1980 பிப்ரவரியில் தொடங்கியது. ஆர்.எஸ்.எஸ்.-இன் மாநில இணை அமைப்பாளர் ராமகோபாலன் அதற்குத் தலைமையேற்றார். பிராமணர்களின் தலைமை, அமைப்பின் வளர்ச்சிக்கு இடையூறாகும் என்ற பின்னணியில், குமரி மாவட்டத்தைச் சார்ந்த தாணுலிங்க நாடாரை இந்து முன்னணியின் தலைவராக ஆக்கினார்கள். அவ்வாறே அண்மையில் முருக வழிபாட்டைக் கையில் எடுத்தது வரை, பல்வேறு உத்திகளை ஆர்.எஸ்.எஸ். பின்பற்றி வருவதைப் பார்க்க முடியும். உள்ளூர் நிலைமைக்கும் ஏற்ற விதத்தில் தங்களுடைய செயல்பாடுகளைப் பரிவார அமைப்புகள் வடிவமைக்கின்றன.
அதற்கான ஒரு உதாரணம் “சமய வகுப்புகள்”. விவேகானந்தா ஆசிரமம் 1940-இல் சுவாமி அம்பானந்தாவால் வெள்ளிமலை என்ற கிராமத்தில் தொடங்கப்பட்டது. இது நிறுவப்பட்டதன் நோக்கம், கிறிஸ்தவ மத குருமார்கள் செய்து வந்த மதமாற்றத்தைத் தடுப்பதும், மக்களிடையே இந்து சமய நெறிகளைப் போதிப்பதுமே ஆகும். 1951-இல் சுவாமி மதுரானந்தா அதன் தலைவர் ஆனார். இவரோடு ஆர்.எஸ்.எஸ். தனது தொடர்பை வளர்த்துக்கொண்டது. இந்த ஆசிரமம் குழந்தைகளுக்குச் சமய வகுப்புக்களை முன்னெடுத்தது. மண்டைக்காடு கலவரத்துக்குப் பின், சமய வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை 1750-ஆக உயர்ந்தது. அதற்குப்பின் மாணவர் எண்ணிக்கையில் சீரான வளர்ச்சி ஏற்பட்டது. ஆர்.எஸ்.எஸ். சாகாவை ஒத்ததாக இவ்வகுப்புகளின் செயல்பாடுகளை வகுத்துக்கொண்டனர். பாடங்கள் வெளிப்படையாக, கிறிஸ்தவ-முஸ்லிம் விரோத மனப்பான்மையைப் படிப்படியாகக் குழந்தைகளிடம் வளர்ப்பதாக அமைந்துள்ளது. அதே சமயம், பிராந்திய உணர்வுக்கு முக்கியத்துவமும் தரப்பட்டது. இந்த வகுப்புகள் கோவில் வளாகங்களில் நடத்தப்படுவதன் மூலம், கோவில் செயல்பாடுகளில் தலையிடுவதையும், மக்களின் பக்தியை அரசியலாக்குவதையும் உறுதி செய்துகொண்டன.
இவற்றுடன், சிறுபான்மை அடிப்படைவாத, வகுப்புவாத செயல்பாடுகளும் ஆர்.எஸ்.எஸ். அரசியலுக்குச் சாதகமாகின்றன. குறிப்பாக, கோவையில் வகாபிச தீவிர இயக்கங்களின் வளர்ச்சி, ஆர்.எஸ்.எஸ். வளர்ச்சிக்குச் சாதகத்தை உருவாக்கியது. தொடர் மோதலும் அதைத் தொடர்ந்து ஏற்படுத்தப்பட்ட கலவரமும், அல்-உம்மா முன்னெடுத்த குண்டு வெடிப்பும் இந்து முன்னணியின் செயல்பாடுகளை நியாயப்படுத்த வழிகோலின.
ஆர்.எஸ்.எஸ். செயல்பாட்டாளராக இருந்த சுதீஸ் மின்னி என்பவர் அந்த சமயத்தில் தனது அமைப்பினருக்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “ஒவ்வொரு கலவரத்தையும் சுயமாக உருவாக்குபவர்களாக, சுயசேவகர்கள் உள்ளார்கள். கோவிலுக்குப் பச்சை சாயம் பூசியும், பசுவைக் கொன்று கோவில் வாசலில் எறிந்தும், ஆயுதங்களைச் சேகரித்தும், அமைதியாக வாழ்பவர்களைப் பயமுறுத்துகிறார்கள். இது எங்கு நோக்கிச் செல்லும் பயணம்? மெல்ல மெல்லக் காட்டுமிராண்டித்தனம் என்ற நீர்க்குமிழிகளை நோக்கி நகருபவர்களாக, ஒவ்வொரு சுயசேவகர்களும் மாறிவிட்டனர்.” இப்போது இந்த நடைமுறைகளை வேகப்படுத்த, வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் பயன்படுத்தப்படுகின்றன. திருப்பரங்குன்றத்தில் நடந்தது போல காவல்துறையை சாதகமாக்கியும், வட இந்தியாவில் நடப்பது போல நீதிமன்றங்களைப் பயன்படுத்திச் சிறுபான்மை வழிபாட்டுத் தலங்கள் குறிவைக்கப்படுகின்றன.
ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் துணை அமைப்புகளின் இப்படிப்பட்ட செயல்பாடுகளானது, இன்றைய சூழலில் நவ தாராளமய உழைக்கும் மக்கள் இடையேயான ஒற்றுமைக்கு வேட்டு வைக்கிறது. கூட்டு முயற்சிகளை சிதைக்கிறது.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் திட்டத்தோடு, பெருமுதலாளிகளுக்கு எந்த முரண்பாடும் இல்லை. அவர்களால் தனியார்மய, தாராளமய கொள்கைகளை வேகப்படுத்தி, பெரு சொத்துக்களை வரன்முறையில்லாமல் குவித்துக் கொள்ள முடிகிறது. ஆர்.எஸ்.எஸ் வழிகாட்டுதலில் இயங்கும் பாஜக அரசுகளும் நவ தாராளமய கொள்கைகளை உக்கிரமாக முன்னெடுத்து, உழைப்புச் சுரண்டலையும் தீவிரப்படுத்துகிறார்கள். இந்துத்துவ அரசியலின் தாக்குதலுக்கு ஆளாகும் ‘மற்றவர்கள்’, ஆர்.எஸ்.எஸ் வரையறைக்கும் ‘அந்நியர்கள்’ என தாக்கப்படும் சிறுபான்மையினர், ஒடுக்கப்பட்டோர், பெண்கள் வாழ்க்கை மேலும் நிலையற்றத்தாக மாறுகிறது. இதனால் உழைப்புச் சந்தையில் அவர்களின் கைகள் மேலும் வலுவிழந்து, உழைப்புச் சுரண்டல் தீவிரமடைகிறது. இவ்வகையில் பாசிச வகைப்பட்ட இந்துத்துவா, பெருமுதலாளிகளுக்கு ஆட்சி நிர்வாகமாகவும், சித்தாந்த நிலைப்பாடாகவும் லாபம் அளித்தே வருகிறது.
ஆர்.எஸ்.எஸ். பரிவாரத்தை வீழ்த்துதல்
இந்துத்துவ அமைப்பையும், அதன் பரிவார அமைப்புகளின் செயல்பாடுகளையும் எதிர்கொண்டு வீழ்த்திட, அரசியல் களத்தில் போராடுகிற அதே சமயத்தில், கருத்தியலாகவும், பண்பாட்டு ரீதியிலும், பொருளாதார மட்டத்திலும், சமூகத் தளங்களிலும் தொடர் நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன. ஆர்.எஸ்.எஸ். அணிந்துவரும் பல வகையான முகமூடிகளைக் களைந்து, அதன் உண்மையான செயல்திட்டத்தை அம்பலப்படுத்தும் செய்திகளை, மிகவும் வலிமையாகவும், தொடர்ச்சியாகவும் உருவாக்க வேண்டும். இந்தச் செய்திகள், ஈர்ப்பான வடிவத்திலும், மக்களின் துயரங்களுக்கு உண்மையான தீர்வுகளை முன்வைப்பதாகவும் அமைந்திட வேண்டும்.
பாசிச சக்திகளை வீழ்த்துவது சாத்தியம் என்பதை வரலாறு உணர்த்துகிறது. ஜெர்மானிய பாசிசத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்து ஜார்ஜ் டிமிட்ரோவ் குறிப்பிட்டதைப் போல, “பாசிசம் தீவிரமான ஏகாதிபத்தியவாதிகளின் நலன்களுக்குச் சேவகம் செய்கிறது. ஆனால் மக்கள் மத்தியில் அது, தேசத்தில் மிகவும் மோசமாக நடத்தப்படுபவர்களைக் காப்பாற்ற வந்த மாவீரன் தானே என்பது போலக் கூறி, மக்கள் மத்தியில் தேச வெறி, இனவெறியை ஊக்குவிக்க முனைகிறது” … “பாசிசம், மிகவும் ஊழல் மிகுந்த இழிபிறவிகளின் கருணையில் மக்களை வாழும்படி வைக்கக் கூடிய அதே சமயத்தில், அத்தகைய இழிபிறவிகள் மக்கள் மத்தியில் தங்களை மிகவும் யோக்கிய சிகாமணிகள் போன்று காட்டிக்கொள்கிறார்கள். ஒவ்வொரு சூழ்நிலைமையில் பிரத்யேக அம்சங்களையும் கவனத்தில் கொண்டு, அதற்கேற்ப மக்களின் தேசிய உணர்வுகளைத் தூண்டிவிட்டு, அவர்களின் தலைவனாகவும் பாசிசம் தன்னை அமைத்துக் கொள்கிறது.”
அன்றிலிருந்த நிலைமைகள் இப்போது மாறியிருக்கலாம். உலகுதழுவிய நிதி மூலதனம் எழுந்திருப்பதால், ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான முரண்பாடுகள் மட்டுப்பட்டுள்ளன. எனவே, இன்றைய நவ-பாசிச சக்திகள், போர் வெறியை பயன்படுத்திக் கொண்டாலும், நாடுபிடிக்கும் போர்கள் பொதுவான போக்காக இல்லை. நவ-தாராளமய நெருக்கடியின் விளைவாக, மக்களிடையே ஏற்பட்டிருக்கும் அதிருப்தி உணர்வினைப் பயன்படுத்திட, ஜனரஞ்சக வாய்ச்சவடாலை முன்னெடுத்து ஆட்சியை பிடிக்கின்றனர். ஆட்சியில் இருந்துகொண்டு, பெருமூலதன நலன்களுக்கு உகந்த அதே கொள்கைகளைத் தொடர்ந்து முன்னெடுக்கிறார்கள். தேர்தல் முறைமையைக் கைவிடுவதில்லை; ஆனால் அதை தமக்கேற்றபடி வளைக்கிறார்கள்; எதிர்க் கட்சிகளை ஒடுக்கவும், ஆதாயங்களைத் திரட்டவும், எதேச்சதிகார முறைகளைப் பயன்படுத்துகிறார்கள். அரசுக் கட்டமைப்பிற்கு உள்ளிருந்து இயங்குவதன் மூலம், அதில் நீண்டகால மாற்றங்களைக் கொண்டுவர முயற்சிக்கிறார்கள். கடந்த காலப் பாசிசத்தைப் போலவே, வரலாற்று அநீதிகள், தவறுகள் என்று உணர்வுகளை உருவாக்கி, சிறுபான்மையாக உள்ளவர்களை “மற்றவர்கள்” “அந்நியர்கள்” என்று குறிவைப்பதுடன், பெருமுதலாளித்துவத்தை ஆதரித்து வளர்ச்சியுறுகின்றன.
இந்த நவபாசிச போக்குகளை எதிர்க்கும் போது, மக்களின் துயரங்களுக்கு தீர்வு தரும் உண்மையான மாற்றையும் முன்வைக்க வேண்டும். நாம் திரட்ட வேண்டிய மக்கள் திரளை, வகுப்புவாத விஷ வித்துக்களில் இருந்து பாதுகாத்தபடியே, நம்முடைய சமூக, பண்பாட்டு நடவடிக்கைகளை வலிமையாக முன்னெடுக்க வேண்டும். அரசியல் நோக்கங்களுக்காக மதம் தவறாக பயன்படுத்தப்படும்போது, நம்பிக்கையாளர்களிடம் அதன் அபாயத்தை விளக்க வேண்டியதும் நமது கடமையாகும். மதம் பற்றிய மார்க்சிய பொருள்முதல்வாதப் பார்வை எப்போதும் நம் மனதில் நிறுத்தப்பட வேண்டும். ‘மதம் ஒரு அபின்’ என்று குறிப்பிட்ட கார்ல் மார்க்ஸ், ‘அது ஒடுக்கப்பட்ட பிறவியின் ஏக்கப் பெருமூச்சு’ என்று குறிப்பிட்டதையும் எப்போதும் இணைத்துப் பார்க்க வேண்டும்.
தோழர் லெனின் குறிப்பிட்டதைப் போல, “முதலாளித்துவம் மிகவும் கடினமாக வேலை வாங்கிய போதும், மக்கள் தாங்களாகவே… மூலதனத்தின் விதியைக் கண்டறிந்து அதன் அனைத்து வடிவங்களிலும் கற்றுக் கொண்டு, அவற்றுக்கு எதிராக ஒன்றுபட்டு, அமைப்பு ரீதியாக திரண்டு, திட்டமிட்டு, உணர்வுப்பூர்வமான வழியில் போராடாதவரை எந்தவொரு பள்ளிக்கூட புத்தகமும் மக்களின் மனதிலிருந்து மதத்தை அகற்றிவிட முடியாது” (மதம் குறித்து தொழிலாளர் கட்சியின் அணுகுமுறை). இவ்வாறு, மிகச் சரியான புரிதலுடன், மக்களிடையே நிலவும் மத நல்லிணக்கச் செயல்பாடுகளை பாதுகாப்பதும், வளர்த்தெடுப்பதும் மதவெறிச் செயல்பாட்டுக்கான எதிர் நடவடிக்கை ஆகும்.
வரலாற்றை புனைவுகளாக முன்னிறுத்தும் முயற்சிகளை வீழ்த்துவதுடன், வீரம் செறிந்த மக்களின் போராட்ட வரலாற்றை பரவலாக்கிட வேண்டும். கல்வித்திட்டத்தை பாதுகாப்பதுடன், நாமே முன்னணியில் நின்று அறிவியல் சிந்தனைகளைப் பரப்புவது, மனுவாத மற்றும் மூடநம்பிக்கை கருத்தாக்கங்களை எதிர்கொள்ளும் விதத்தில், மதச்சார்பற்ற, அறிவியல் சிந்தனையை முன்னெடுப்பதுடன், விரிவான பண்பாட்டு நடவடிக்கைகளை ஊக்கப்படுத்த வேண்டும். சமூக சீர்திருத்த முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு ஒருங்கிணைந்த முறையில் தளராத செயல்பாடுகள், நவ-பாசிச சக்திகளை வீழ்த்தி முடிப்பது நிச்சயம்.
You may also like
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
