அறிவியலும் கடவுள் நம்பிக்கையும்
வி. முருகன்
சில மாதங்களுக்கு முன் ஒரு தத்துவப் பேராசிரியர் தத்துவத்திற்காக நடத்தும் யூடியூப் தமிழ்ச் சானலில் அறிவியலுக்கும் கடவுள் நம்பிக்கைக்கும் உள்ளத் தொடர்பு பற்றிய ஒரு வீடியோ போட்டிருந்தார். அதில் காலம் (time), வெளி (space), சூப்பர்ஸ்டிரிங்க் (superstring) கோட்பாடு, 11 பரிமாணங்கள் (dimensions) போன்ற பல அறிவியல் கருத்துக்களை கூறியிருந்தார். அதில் அவர் கூறிய பல இயற்பியல் விளக்கங்கள் தவறானவை. அது இங்கு முக்கியமல்ல. வேறு இரண்டு முக்கியமான கருத்துக்களைக் கூறியிருந்தார். (i) இந்த நவீன அறிவியல் கருதுக்களைக் கூறி அவை கடவுள் நம்பிக்கையை ஆதரிப்பதாக வாதிட்டிருந்தார். (ii) அறிவியல் மூலம் வரும் முடிவுகளை ஆன்மீக முறைகளின் மூலம் பெற முடியும். அவர் கொடுத்த உதாரணம் திருவிளையாடல் திரைப்படத்தில் விநாயகருக்கும் முருகனுக்கும் ஞானப்பழத்திற்காக நடந்தப் போட்டி. ஆன்மீக முறை விநாயகர் செய்ததென்றும் அறிவியல் முருகன் செய்த முறை என்றும் கூறியிருந்தார். இவற்றைப் பற்றி என் நண்பருக்கு ஒரு சிறு குறிப்பு அனுப்பியிருந்தேன். அதனுடைய விரிவாக்கம்தான் இந்தக் கட்டுரை.
சில கேள்விகளோடு ஆரம்பிப்போம்.
- அறிவியல் கடவுள் நம்பிக்கையை ஆதரிக்கிறதா அல்லது மறுக்கிறதா?
- அறிவியல் செய்வதற்கு கடவுள் நம்பிக்கை இருக்கக் கூடாதா?
- பல அறிவியல் அறிஞர்கள் கடவுள் நம்பிக்கையோடு உள்ளார்களே. அவர்களது அறிவியல் நம்பத் தகுந்ததா?
இவை அனைத்தும் அறிவியலுக்கும் கடவுள் நம்பிக்கைக்கும் உள்ள தொடர்பு சம்பந்தமானவை.
தத்துவத்தில் பொருள்முதல்வாதம் (materialism), கருத்து முதல் வாதம் (idealism) என இரண்டு பிரிவுகள் உள்ளன. இதில் நீண்ட காலமாக அறிவியல் பொருள்முதல் வாதத்தின் ஒரு பிரிவாகப் பார்க்கப் பட்டது. இது சரியான புரிதல்தான். ஆனாலும், அமெரிக்காவில் வேறு இரண்டு சொல்லாடல்கள் சமீப காலங்களில் உருவாகியுள்ளன. அவை ஆய்வுமுறை இயற்கைவாதம் (methodological naturalism) மற்றும் மெட்டாஃபிஸிக்கல் இயற்கைவாதம் (metaphysical naturalism) என்பவையாகும். மார்க்சிய சிந்தனைகள் என்று பார்க்கும் போது இவற்றை பொருள்முதல்வாதத்தின் உட்கூறுகள் என்று சொல்லலாம்.
இந்தக் கட்டுரை ஆய்வுமுறை இயற்கைவாதம் மற்றும் மெட்டாஃபிஸிக்கல் இயற்கைவாதம் என்ற கருத்துக்களை மையப்படுத்திதான் எழுதப்பட்டுள்ளது. இந்த இரண்டு கருத்துக்களும் இங்கு சுருக்கமாக கொடுக்கப் பட்டுள்ளன.
இந்தப் பிரபஞ்சத்தில் மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள், பாக்ட்டீரியாக்கள் எனப் பலவிதமான உயிருள்ள பொருள்கள் உள்ளன. அதேபோல் கல், மண், நீர், கிரகங்கள், நட்சத்திரங்கள், காலம், வெளி போன்ற எண்ணற்ற உயிரில்லாப் பொருள்கள் உள்ளன. இவ்விதமான அனைத்து விதமான பொருள்களும் சேர்ந்தவைதான் இயற்கை உலகம் என்பதாகும். அவை எளிமையாக இயற்கை என்றழைக்கப்படுகின்றன.
இவை ஐம்புலன்களால் நாம் அறியக் கூடியவை. கருவிகளை நம்முடைய ஐம்புலன்களின் விரிவாக்கம் (extension of senses) என்று சொல்ல வேண்டும். உதாரணமாக தொலை நோக்கியும் (telescope) நுண்ணோக்கியும் (microscope) நம் கண்களின் விரிவாக்கமாகும்.
இயற்கை உலகைத் தாண்டி ஏதேனும் உள்ளனவா? இயற்கைக்குப் புறத்தே சில விஷயங்கள் உள்ளன என்ற கருத்து நீண்ட காலமாக மனிதர்களிடம் உள்ளன. இதில் கடவுள் என்ற கருத்து முக்கியமானது. கடவுள் என்பது இயற்கைக்கு அப்பாற்பட்ட (supernatural) சக்தி என்ற கருத்து நீண்ட நாட்களாக உள்ளது.
ஆய்வுமுறை இயற்கைவாதம் (methodological naturalism).
இது ஒரு தத்துவக் கண்ணோட்டம் அல்லது கோட்பாடு. இது நவீன அறிவியலின் அடித்தளமாகும். இது நவீன அறிவியல் செய்வதற்குத் தேவையான அடிப்படை அனுமானமாகும். இந்தக் கோட்பாடு இல்லாவிட்டால் இன்றிருக்கும் வலிமையான நவீன அறிவியலே இல்லை.
இது ஆய்வுமுறைக்கான பொதுக் கோட்பாடு. அனைத்து அறிவுசார் நடவடிக்கைகளுக்கும் இது பொருந்தும். ஆனாலும் நமக்கு இங்கு அறிவியல்தான் முக்கியமானது.
அறிவியலின் முக்கியமான பணி என்பது இயற்கையில் நடக்கும் நிகழ்வுகளைப் புரிந்து கொள்வது அல்லது விளக்குவது அல்லது அவற்றின் காராணங்களை அறிந்து கொண்டு நமக்கு சாதமாக இயற்கையைப் பயன்படுத்துவதாகும்.
எப்படி இயற்கையைப் புரிந்து கொள்வது?
வரலாற்றில் இரண்டு முறைகள் பின்பற்றப்பட்டன. இயற்கையில் நடக்கும் நிகழ்வுகளை கடவுள்களின் விருப்பம் அல்லது மோதல்களின் அடிப்படையில் புரிந்துகொள்வது. இதுதான் முதலில் தோன்றிய வெங்கல உலோக கால நாகரிகங்களில் இருந்த நடைமுறை.
இரண்டாவது முறையில் இயற்கை நிகழ்வுகளை, மற்ற இயற்கை நிகழ்வுகளை வைத்தே புரிந்து கொள்வது. இதில் இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகளை கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. இதுதான் இன்று ஆய்வுமுறை இயற்கைவாதம் (methodological naturalism) என்றழைக்கப்படுகிறது.
இது பொது ஆண்டுக்கு முன்னர் 600 (600 BCE) வாக்கில் கிரேக்க நாகரிகத்தில் தோன்றியது. கிரேக்க நாகரிகம் அழிந்தபோது இந்த ஆய்வுமுறையும் அழிந்தது. மீண்டும் ஐரோப்பாவில் 15ஆம் நூற்றாண்டு வாக்கில் இந்த ஆய்வுமுறை தோன்றியது. அப்போது முதல் இன்று வரை நவீன அறிவியலுக்கு இந்த ஆய்வுமுறைதான் அடிப்படையாக உள்ளது.
இந்த இரண்டு முறைகளையும் ஒரு சிறிய உதாரணம் பிரித்துக் காட்டும். 2019இல் கோவிட் வருகிறது. என்ன காரணத்தால் வருகிறது?
கடவுளின் கோபத்தால் கோவிட் வந்துள்ளது என்பது ஒரு விளக்கம்; இதை விமர்சிக்க முடியாது. இதைப் பரிசோதித்துப் பார்த்து சரியென்றோ அல்லது தவறு என்றோ சொல்ல முடியாது. இதோடு கோவிட் ஏன் வருகிறது என்பதற்கான விளக்கம் முடிந்து விடுகிறது. மேற்கொண்டு தொடர்வதற்கு ஒன்றுமில்லை.
ஆய்வுமுறை இயற்கைவாதத்தின்படி கோவிட் வியாதி ஒரு இயற்கை விளைவு. இயற்கை உலகிலேயே இதற்கான காரணத்தைக் கண்டுபிடிக்க வேண்டும். தண்ணீரில் உள்ள பாக்டீரியா மூலம் வருகிறது. கொசு கடிப்பதால் கோவிட் வருகிறது. இது போன்று பல விளக்கங்கள் வருகின்றன. கடவுளைப் பார்ப்பது போலில்லாமல் இவை இயற்கையான விஷயங்கள் என்ற காரணத்தால், ஒவ்வொரு விளக்கமும் கடுமையான விமர்சனத்திற்கு உட்படுத்தபட்டு, அவை சரியா அல்லது தவறா என்று பரிசீலித்து, தவறான விளக்கங்கள் ஒன்றன்பின் ஒன்று தவறானது என்று ஒதுக்கப்பட்டு, இறுதியில் அது கோவிட் வைரஸ்தான் காரணம் என்ற சரியான முடிவுக்கு வரவேண்டும். தவறான விளக்கங்கள் ஏன் தவறானவை என்று வலுவான காரணங்களால் விளக்கப்பட வேண்டும். சரியான விளக்கம் ஏன் சரியாக இருக்க வேண்டும் அல்லது எப்படித் தவறாக இருக்க முடியாது என்று விளக்கப்பட வேண்டும். இந்த நடைமுறைதான் ஆய்வுமுறை இயற்கைவாதத்தின் (methodological naturalism) கீழ் செய்யப்படும் அறிவியல் வளர்வதற்கு முக்கியமான காரணம்.
ஒரு எச்சரிக்கை உணர்வைத் தர வேண்டும். அறிவியலுக்கு ஆய்வுமுறை இயற்கைவாதம் இல்லாமல் அறிவியல் செய்ய முடியாது. இது அறிவியலுக்கு அடிப்படைத் தேவை. ஆனால் இது மட்டும் போதாது. அறிவியலுக்குப் பல கூறுகள் உள்ளன. தரவுகள் எப்படி சேகரிப்பது, எந்தத் தரவுகளை ஒப்புக் கொள்வது அல்லது நிராகரிப்பது, எப்படி கோட்பாடுகளை சரிபார்ப்பது அல்லது நிராகரிப்பது போல் பல நுணுக்கமானக் கூறுகள் உள்ளன. இவையெல்லாம் சேர்ந்தவைதான் அறிவியல்.
மெட்டாஃபிஸிக்கல் இயற்கைவாதம் (Metaphysical Naturalism).
இது என்னென்ன இருக்கின்றன அல்லது எவை உண்மையானவை என்பது குறித்தக் கோட்பாடு. இயற்கையில் நாம் காணும் பொருட்கள் (ஏதோ ஒரு வழியில்) இருக்கின்றன என்பதில் ஐயமில்லை. அவை மட்டுமில்லாமல் இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகள் (supernatural powers) (அதாவது கடவுள் என்பது) இருக்கிறதா என்பதுதான் கேள்வி. இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகள் இல்லை என்பது மெட்டாஃபிஸிக்கல் கோட்பாடு. இது நாத்திகத்தின் வேறு பெயர்.
இந்தக் கேள்வி ஏன் எழுகிறது? ஒரு காலத்தில் அனைத்துக் கேள்விகளுக்கும் மதமே பதில் சொல்லிக்கொண்டிருந்தது. ஆனல் கடந்த 400 ஆண்டுகளாக ஒவ்வொரு கேள்விக்கும் அறிவியல் பதில் தர ஆரம்பித்து விட்டது. கடவுளைக் கொண்டு கொடுக்கப்பட்ட பதில்கள் ஒவ்வொன்றாக நிராகரிக்கப்பட்டு ஆய்வுமுறை இயற்கைவாதத்தின் (methodological naturalism) கீழ், அறிவியல் அந்தக் கேள்விகளுக்கான பதிலை இயற்கையில் இருக்கும் பொருட்களைக் கொண்டு விளக்கிவிட்டது. பூமியின் தோற்றம், கோள்களின் இயக்கம், உயிரினங்களின் தோற்றம், பிரபஞ்சத்தின் தோற்றம், நோய்களுக்கு மருந்து என்று அனைத்து துறைகளிலும் கடவுள் என்ற கருத்தில்லாமலேயே விளங்கிக் கொள்ள முடிகிறது. அப்படியானால் கடவுள் என்று ஒன்று இல்லை என்ற முடிவுக்கு வந்து விடலாம். இதுதான் மெட்டாஃபிஸிக்கல் இயற்கைவாதம் சொல்கிறது.
நவீன அறிவியல் கடவுள் நம்பிக்கையைப் பற்றி என்ன சொல்கிறது?
ஆய்வுமுறை இயற்கைவாதத்தின் கீழ் செயல்படும் அறிவியல் கடவுள் நம்பிக்கையை ஆதரிக்கிறதா அல்லது மறுக்கிறதா? இரண்டும் இல்லை. நீதிமன்றம் ஒரு வழக்கை ஆரம்ப நிலையிலேயே தள்ளுபடி செய்வது போல் இந்தக் கேள்வியை அறிவியல் ஒதுக்கி விடும்.
அறிவியலின் பணிக்குள் இந்தக் கேள்வி வராது. இயற்கையில் இருக்கும் நிகழ்வுகளைப் பற்றி மட்டும்தான் அறிவியலில் ஆராய முடியும். அதுவும் கடவுள் நம்பிக்கையை கொண்டுவராமல் மற்ற இயற்கை நிகழ்வுகளை கொண்டு மட்டும்தான் விளக்க வேண்டும். எனவே கடவுள் நம்பிக்கையை இந்த வரையறைக்குள் ஆராய முடியாது. இந்தக் கேள்விக்கான பதில் ஒருவர் வேறு இடத்தில் தேடிக்கொள்ள வேண்டும்.
ஆய்வுமுறை இயற்கைவாதம் வரலாற்றில் லாபகரமானது. கடவுள் நம்பிக்கை உள்ளவர்களும் இல்லாதவர்களும் ஒரே மாதிரிதான் அறிவியல் செய்ய வேண்டும். ஒருவருக்கு கடவுள் நம்பிக்கை இருக்கலாம். ஆனால் அவர் ஒரு நாத்திகரைப் போல் கடவுள் நம்பிக்கையை ஒதுக்கி விட்டுத்தான் அறிவியல் செய்ய வேண்டும்.
கடவுள் நம்பிக்கையை நவீன அறிவியலில் இருந்து ஒதுக்கி விட்டு அறிவியல் செய்ய ஆரம்பித்தது சமுதாயத்திற்கு பெரிய வரப்பிரசாதமாக உள்ளது. இதனால்தான் அறிவியல் அறிஞர்களில் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களும் இல்லாதவர்களும் உள்ளனர். கலிலேயோ, நியுட்டன், பாயில், ஃபாரடே, கிலெர்க் மேக்ஸ்வெல், ஐன்ஸ்டைன் போல் பல அறிவியல் வல்லுனர்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள். மனித ஜீனோம் திட்டத்தின் தலைவராக இருந்த ஃப்ரான்ஸிஸ் காலின்ஸ் கடவுள் நம்பிக்கை உள்ளவர். இவர்கள் ஆய்வுமுறை இயற்கைவாதத்தை ஏற்றுக் கொண்டார்கள்; ஆனால் மெட்டாஃபிஸிக்கல் இயற்கைவாதத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.
அமெரிக்காவில் ஏன் ஆய்வுமுறை இயற்கைவாதம் என்ற சொல்லாடல் உருவானது?
நவீன அறிவியலில் தோன்றிய இரண்டு முக்கியமான கோட்பாடுகளைப் பார்க்க வேண்டும். ஒன்று 15ஆம் நூற்றாண்டில் வந்த கோப்பர்நிக்கஸின் ஹீலியோசென்ட்ரிக் கோட்பாடு. மற்றொன்று 19ஆம் நூற்றாண்டில் வந்த டார்வினின் பரிணாமக் கோட்பாடு.
கோப்பர்நிக்கஸின் ஹீலியோசென்ட்ரிக் கோட்பாட்டை வாட்டிகன் சர்ச் மிகக் கடுமையாக எதிர்த்தது. கோப்பர்நிக்கஸின் ஹீலியோசென்ட்ரிக் கோட்பாட்டை ஆதரித்ததற்காக கலிலேயோ மீது மத விரோதம் குற்றம் சுமத்தி 1633இல் அவருக்கு தண்டனையாக வீட்டுசிறை கொடுக்கப்பட்டது. ஆனால் 1650க்குப் பிறகு நிலைமை மாறியது. 1687 நியூட்டன் பிரின்சிபியா என்ற புத்தகத்தை வெளியிட்டார். அதில் புவியீர்ப்பு விசையையும் மற்ற இயக்க விதிகளையும் பயன்படுத்தி சூரியனை சுற்றும் கோள்களின் இயக்கத்தை துல்லியமாகக் கணக்கிட்டார். இப்போது ஹீலியோசென்ட்ரிட்க் கோட்பாட்டை கிறிஸ்துவ மதம் ஏற்றுக்கொண்டது.
இதில் கவனிக்க வேண்டியது நியூட்டனின் இயற்பியல் வெற்றிகள் ஆய்வுமுறை இயற்கைவாதத்திற்கு கிடைத்த முதல் வெற்றி. அதுவும் மிகப் பிரம்மாண்டமான வெற்றி. இயற்பொருள் உலகத்தைப் (physical world) பொறுத்தவரையில் அப்போதே ஆய்வுமுறை இயற்கைவாதத்தை ஏறக்குறைய கிருஸ்துவ மதம் ஏற்றுக்கொண்டு விட்டது என்று சொல்ல வேண்டும்.
ஆனால் உயிரினம் பற்றிய ஆய்வில் கடவுள் நம்பிக்கையை ஒதுக்கிவிட முடியாது என்று நினைத்தது. கடவுள் நம்பிக்கைக்கு பலவிதமான வாதங்கள் வைக்கப்பட்டன. அதில் ஒன்று வடிவமைப்பு வாதம் (Design argument). இயற்கையில் பல அமைப்புகளில் இருக்கும் மிகுந்த நுணுக்கமான கட்டமைப்பு நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. இவையெல்லாம் தற்செயலாக ஒருவித நோக்கமும் இல்லாமல் தன்னிச்சையாக உருவானவையா? நீண்ட காலமாக ஒரு பதில் உள்ளது. மிகுந்த நுணுக்கமான கட்டமைப்பு உள்ளவற்றை யாரோ ஒருவர் திட்டமிட்டு உருவாக்கியிருக்க வேண்டும். மிக அதிகமான நுணுக்கமாக திட்டமிட்டு அமைப்பது கடவுளால்தான் முடியும். இது கடவுள் இருக்கிறார் என்பதை நிரூபிக்கிறது என்று வாதிடப்பட்டது. இந்த வாதம் வடிவமைப்பு வாதம் (design argument) என்றழைக்கப்படுகிறது.
டார்வின் காலத்தில் இந்த வாதத்தை முன்மொழிந்தவர் வில்லியம் பாலே (William Paley). அவர் மிகுந்த நுணுக்கம் வாய்ந்த உடற்கூறுகள் பல விலங்குகளில் இருப்பதை சுட்டிக் காட்டினார். உதாரணத்திற்கு கண். இவையெல்லாம் தன்னிச்சையாக ஒரு நோக்கமுமில்லாமல் உருவாகியிருக்க முடியாது என்றும், சகல வல்லமையுள்ள ஒரு கடவுள்தான் இவ்வளவு நுணுக்கமான உடற்கூறுள்ள விலங்குகளைப் படைத்திருக்க வேண்டும் என்றும் வாதிடப்பட்டது. அதற்கு அவர் கடிகாரத்தை உதாரணமாகக் கொடுத்தார். அன்றைய கடிகாரங்களில் பல ஸ்ப்ரிங்களும் பல்சக்கரங்களும் மிக நுட்பமான வழிகளில் இணைத்து அமைக்கப்பட்டிருக்கும். அதில் ஒன்று பழுதானால் கூட அது வேலை செய்யாது. பல ஸ்ப்ரிங்களும் பல்சக்கரங்களும் தன்னிச்சையாகக் கூடி எப்படி ஒரு நுணுக்கமான கடிகார அமைப்பை உருவாக்க முடியும்? அதை ஒரு கைதேர்ந்த நிபுணர்தான் காலத்தை அளவிட வேண்டும் என்ற நோக்கத்துடன் உருவாக்கியிருக்க வேண்டும். அதைப்போல்தான் மிக நுணுக்கங்கள் நிறைந்த உயிரினங்களைக் கடவுள்தான் படைத்திருக்க வேண்டும். இதுதான் பாலேய் கொடுத்த வடிவமைப்பின் சாராம்சம். டார்வின் இதை ரசித்துப் படித்துள்ளார்.
ஆனால் அவருடைய பரிணாமக் கோட்பாடு இந்த விளக்கத்தை புரட்டிப் போட்டுவிட்டது. அவருடையக் கோட்பாட்டில் கடவுள் நம்பிக்கை வரவில்லை. அவர் மரபுமூலமாக பெற்றோரிடமிருந்து பிள்ளைகளுக்கு கடத்தும் உடற்கூறில் ஏற்படும் பிறழ்வு (mutation) மற்றும் இயற்கையின் தேர்வு (natural selection) என்ற இரண்டு கருத்துக்களை உருவாக்கினார். (இன்று டார்வின் கூறிய பிறழ்வு என்பது மரபணுவில் (gene) ஏற்படும் பிறழ்வு என்றறியப்படும்). இந்த இரண்டு கருத்துக்களும் வடிவமைப்பு (design) என்ற கருத்தை உயிரினங்களின் தோற்றத்திற்கான வரலாற்றில் தேவையற்றதாகிவிட்டது. கடவுள் என்ற கருத்தே இல்லாமல் பூமியில் உயிரினங்களின் தோற்றம், வளர்ச்சி, மாற்றம், அழிவு ஆகிய அனைத்தையும் டார்வினின் பரிணாமக் கோட்பாடு விளக்கிவிட்டது.
டார்வினின் பரிணாமக் கொள்கை கிறிஸ்துவ மதத்தோடு இரண்டு விதங்களில் முரண்பட்டது.
பைபிளில் பூமியின் தோற்றம், பூமியில் நடந்த மாற்றங்கள், உயிரினங்களின் தோற்றம் குறித்த முழு விபரங்களும் துல்லியமாகவும் தெளிவாகவும் கூறப்பட்டுள்ளன. இந்த விபரங்களுடன் டார்வினின் பரிணாமக் கோட்பாடு முற்றிலும் முரண்படுகிறது, இது ஒரு முரண். இது கோப்பர்நிக்கஸின் ஹீலியோ சென்ட்ரிட்க் கோட்பாட்டுடன் ஏற்பட்ட முரண் போன்றது என்றாலும் அதை விட பெரிய அளவிலான முரண்.
இரண்டாவதாக, உயிரினங்கள் தோற்றம் மற்றும் அவற்றிற்கிடையே ஏற்படும் மாறுதல்கள் பற்றிய புரிதலில் கடவுள் என்ற கருத்தை விலக்கி விட்டது. ஆய்வுமுறை இயற்கைவாதத்திற்கு (methodological naturalism) உட்பட்டுதான் உயிரியல் நிகழ்வுகளும் (biological phenomena) புரிந்து கொள்ளப்படும் என்ற நிலையை டார்வினின் பரிணாமக் கொள்கை உருவாக்கிவிட்டது. இதிலும் கிறிஸ்துவ மதத்திடம் அது முரண்பட்டு நின்றது, இது கிறிஸ்துவ மதத்திற்கு மிகப் பெரிய சவாலைக் கொடுத்தது.
டார்வினைப் பொறுத்தவரை, தான் ஒரு நாத்திகர் இல்லை என்று வெளிப்படையாக அவர் கூறினார். கடவுள் இருக்கிறாரா அல்லது இல்லையா என்று ஐயமின்றி கூறமுடியாது என்பதுதான் அவர் நிலை. ஆங்கிலத்தில் இது அக்னாஸ்ட்டிஸிசம் (agnosticism) என்றறியப்படுகிறது
ஐரோப்பாவில் பரிணாமக் கொள்கைக்கு வரவேற்பும் எதிர்ப்பும் இருந்தது. ஆனால் எதிர்ப்பு அதி தீவிரமாக இல்லை.
ஆனால் அமெரிக்காவில் கடுமையான எதிர்ப்பு கடந்த 100 ஆண்டுகளாக உள்ளது. பரிணாமக் கோட்பாட்டை எதிர்த்து முதலில் கிரியேஷனிஸம் (creationism) என்ற இயக்கம் தோன்றியது. பிறகு இண்டெலிஜெண்ட் டிசைன் (Intelligent Design – ID) என்ற இயக்கம் தோன்றியது. இந்த இரண்டு இயக்கங்களும் அரசியல் ரீதியாகவும் நிதி நிலையிலும் வலுவானவை. பரிணாமக் கொள்கைக்கு எதிராக தீவிரமாக பிரசாரம் செய்கிறார்கள். இவர்களுக்கும் அறிவியல் உலகிற்கும் (scientific community) கடுமையான மோதல் உள்ளது. முக்கியமாக, பள்ளிகளில் பரிணாமக் கோட்பாட்டை கற்பிப்பதை எதிர்ப்பது அல்லது அதற்கெதிரான கோட்பாடுகளையும் கற்பிக்க வேண்டும் என்று வலியுறுத்துவது தொடர்ந்து நடைபெறுகிறது.
இவர்கள் அறிவியலையே கடுமையாக எதிர்க்கிறார்கள். இந்த நிலையில்தான் ஆய்வுமுறை இயற்கைவாதம் (methodological naturalism) மற்றும் மெட்டாஃபிஸிக்கல் (metaphysical naturalism) இயற்கைவாதம் என்ற இரு கருத்துக்களை பால் டி விரைஸ் (Paul de Vries) என்ற கிறிஸ்துவ மத ஆதரவாளர் 1983இல் முன்வைக்கிறார். இதன் நோக்கம் ஒரு சமரசமாகும். பரிணாமக் கொள்கையை ஏற்றுக் கொள்வது என்பது கடவுள் நம்பிக்கையை கைவிடுவது என்றில்லை என்பதுதான் சமரசம்.
இணையதளத்தில் ஆய்வுமுறை இயற்கைவாதம் என்று தேடினால் பெரும்பாலானவை கிறிஸ்துவ மத ஆதரவாளர்களால்தான் எழுதப்பட்டவை. அவை அனைத்தும் இந்த சமரசத்திற்காக வாதாடுவதுதான்.
அறிவியலில் இருந்து கடவுள் நம்பிக்கையை ஒதுக்கி விட்டு ஆய்வது என்பது 400 ஆண்டுகளாக உள்ள ஒரு நடைமுறை. அதனால் அறிவியல் உலகிலும் தத்துவத் துறையிலும் இதற்கு ஒரு சிறப்பான பெயர் கொடுக்கவில்லை. ஆனல் அமெரிக்காவில்தான் இந்த விவாதம் நடைபெறுகிறது.
இதன் ஒரு நன்மை என்னவென்றால் அறிவியலையும் அறிவியல் அல்லாததையும் பிரிக்கும் முதல் அடிப்படையாக ஆய்வுமுறை இயற்கைவாதம் என்பது உருவாகியுள்ளது. சில விஷயங்களைத் துல்லியமாகப் பேசுவதற்கு இந்த வரையறைகள் உதவுகின்றன.
அமெரிக்காவில் இதுவரை அமெரிக்க நீதிமன்றங்களில், பள்ளிகளில் பரிணாமக் கோட்பாட்டை கற்பிப்பதற்கு எதிராக அல்லது மாற்றுக் கொள்கைகளையும் கற்பிப்பது என்று 10 வழக்குகள் நடந்துள்ளன.
2005இல் நடைபெற்ற கிட்ஸ்மில்லரும் மற்றவர்களும் Vs டோவர் பகுதி பள்ளி மாவட்டத்திற்கும் (Kitzmiller et al Vs Dover Area School District) நடந்த வழக்கில் வந்த தீர்ப்பு கவனிக்கத்தக்கது. டார்வினின் பரிணாமக் கோட்பாட்டை வகுப்பில் கற்பிக்கும்போது அதற்கு மாற்றாக இண்டெலிஜெண்ட் டிசைன் கொள்கையும் (ID) உள்ளது என்று கூறி, அதற்குரிய புத்தகத்தைக் கட்டாயமாக ஆசிரியர்கள் கூற வேண்டும் என்றும், மாணவர்கள் விரும்பினால் அந்தக் கொள்கையை விவாதிக்க வேண்டும் என்று அந்த நிர்வாகம் தீர்மானம் நிறைவேற்றியிருந்தது. அதை எதிர்த்து சில பெற்றோர்களும் மற்றவர்களும் நீதிமன்றத்தில் வழக்கு போட்டனர்.
அந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜான் இ ஜோன்ஸ் அவர்கள் அளித்த தீர்ப்பில் இண்டெலிஜெண்ட் டிசைன் (ID) கொள்கையை அறிவியல் என்று ஏற்றுக் கொள்ள முடியாததற்கு மூன்று காரணங்கள் கூறியுள்ளார்.
ஐடி(ID) மூன்று வெவ்வேறு நிலைகளில் தோல்வியடைவதை நாம் காண்கிறோம். அவற்றில் ஏதேனும் ஒன்று ஐடி (ID) அறிவியல் என்று தீர்மானிப்பதைத் தடுக்க போதுமானது. அவையாவன: (1) இயற்கைக்கு அப்பாற்பட்ட காரணங்களை அழைப்பதன் மூலமும் அனுமதிப்பதன் மூலமும் பல நூற்றாண்டுகளாக உள்ள அறிவியலின் பழமையான அடிப்படை விதிகளை ஐடி (ID) மீறுகிறது; (2) ஐடியின் மையமான குறைக்க முடியாத சிக்கலான (irreducible complexity) வாதம், 1980களில் படைப்பு அறிவியலை (creation science) அழித்த அதே குறைபாடுள்ள மற்றும் தர்க்கரீதியற்ற திட்டமிடப்பட்ட இருமைவாதத்தைப் பயன்படுத்துகிறது; மற்றும் (3) பரிணாமத்தின் மீதான ஐடியின் எதிர்மறையான தாக்குதல்கள் அறிவியல் சமூகத்தால் மறுக்கப்பட்டுள்ளன.”
இதில் இரண்டாவதை விட்டு விடலாம். முதலாவதும் மூன்றாவதும் முக்கியமான காரணங்கள். அறிவியலில் கடந்த 400 ஆண்டுகளாக நடைமுறையில் ஆய்வுமுறை இயற்கைவாதம் (methodological naturalism) அமுல்படுத்தப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி ஐடியை அறிவியலுக்கு புறம்பானது என்று முதல் காரணம் வலியுறுத்துகிறது.
மூன்றாவது காரணத்தில் கூறப்படுவது ஒரு கோட்பாடு அல்லது கருத்து அறிவியலா இல்லையா என்பதை இறுதியில் அறிவியலை செய்து கொண்டிருக்கும் அறிவியல் சமூகத்தால் (Practicing Scientific Community) தீர்மானிக்கப்பட வேண்டும் என்பதாகும். நீதிமன்றத்தைப் பொறுத்தவரை இது சரியான முடிவு.
அறிவியல் வரலாறும் ஆய்வுமுறை இயற்கைவாதமும்.
1983இல்தான் ஆய்வுமுறை இயற்கைவாதம் என்ற சொல்லாடல் வந்தது. ஆனால் இந்தக் கருத்தின் சாராம்சம் அறிவியல் வரலாற்றில் பல காலக்கட்டங்களில் இருந்தது. சில காலங்களில் இல்லை.
முதல் நாகரிகங்கள் பெரும் நதிக்கரை அருகில் தோன்றியவை. எகிப்திய நாகரிகம், மெசபடேமியாவில் தோன்றிய சுமேரிய நாகரிகங்கள் அப்படிப்பட்டவைதான். இந்த நாகரிகங்களில் வானவியல், கணிதம், வேதியல், மருத்துவம் என பல துறைகளில் அறிவியல் வளர்ந்துள்ளன. வெங்கல உலோகம் கண்டுபிடிக்கப்பட்டு நல்ல பயன்பாட்டில் இருந்தது. ஆனாலும் இயற்கை நிகழ்வுகழ்வுகள் அனைத்திற்குமான விளக்கங்கள் அவர்களுடைய கடவுள்களின் விருப்பு வெறுப்புகளை மையப்படுத்தியிருந்தன. முதல் நாகரிக காலங்களில் ஆய்வுமுறை இயற்கைவாதத்தின் கீழ் அறிவியல் செய்யப்படவில்லை.
கிரேக்க நாகரிகத்தில் 600 பொ.ஆ.மு, (600 BCE) வாக்கில் தேல்ஸ் என்ற அறிஞர்தான் முதன் முதலாக கடவுள் என்ற கருத்தைப் பயன்படுத்தாமல் வெள்ளம், பூகம்பம் போன்ற பல இயற்கை நிகழ்வுகளுக்கு விளக்கம் கொடுத்தார். அனைத்துப் பொருள்களும் தண்ணீரால் ஆனது என்றார். அதாவது இயற்கையில் இருக்கும் அனைத்திற்கும் தண்ணீர்தான் மூலப் பொருளாகும். இந்த சிந்தனை முறை கிரேக்க நாகரிகத்தில் ஒரு புதிய துவக்கத்தைக் கொடுத்தது. இன்றைய மொழியில் இது ஆய்வுமுறை இயற்கைவாதம் ஆகும். தண்ணீருக்குப் பதில் பல மூலப்பொருள்கள் உருவாகின. இதன் உச்ச கட்டம் அணுக் கொள்கையாகும். முதலில் லூசிபஸ் மற்றும் அவரது மாணவரான டெமாக்ரிடஸ் ஆகியோரால் அணுக்கொள்கை உருவாக்கப்பட்டது. பின்பு எபிகூரஸால் அது நன்கு செழுமைப்படுத்தப்பட்டது.
கிரேக்க அறிவியலில் ஆய்வுமுறை இயற்கைவாதம் இருந்தாலும் அது மிகவும் பலவீனமானது. கிரேக்க சமுதாயம் அடிமைகளைப் மிகப் பெரிய அளவில் கொண்ட சமுதாயம். உடலுழைப்பு முழுவதும் அடிமைகளிடம் இருந்தது. உடலுழைப்பு மிகக் கேவலமாகப் பார்க்கப்பட்டது. அதனல் கிரேக்க அறிவியல் வெறும் ஊகத்துடன் முடிந்தது. மக்களுக்கு அன்றாட வாழ்க்கையில் அறிவியலினால் பயன் அதிகமில்லை. கிரேக்க நாகரிகம் அழிந்தவுடன் அந்த அறிவியலும் இந்த ஆய்வுமுறையும் அழிந்தன.
நேரடியாக சுமார் 1,000 ஆண்டுகளைக் கடந்து நிலப்பிரபுத்துவம் ஆட்சி செய்து கொண்டிருந்த ஐரோப்பாவிற்கு வருவோம்.
பொ.ஆ 300 வாக்கில் ஐரோப்பாவில் படிப்படியாக கிறிஸ்துவ மதம் வேரூன்றியது. அடுத்த 600 அல்லது 700 ஆண்டுகள் ஐரோப்பாவின் இருண்டகாலம். படிப்பறிவு கூட இல்லாத சமுதாயம்.
ஐரோப்பாவில் 10ஆம் நூற்றாண்டு வாக்கில் நிலப்பிரபுத்துவம் வளர்ந்து வந்தது. ஆரம்பக் காலக்கட்டத்தில் பொருளாதார வளர்ச்சி இருந்தது. அரபு நாடுகளிடமிருந்து கிரேக்க அறிவியலும் பல புதிய தொழில்நுட்பங்களும் ஐரோப்பாவிற்கு வந்தன. ஆனால் நிலப்பிரபுத்துவம், கிறிஸ்துவமதம் ஆகியவற்றின் இறுக்கமான பிடிப்பில் அன்றைய ஐரோப்பா இருந்தது. நிலப்பிரபுத்துவத்தின் வலிமைக்கு கிறிஸ்துவமதம் முக்கிய பங்களித்தது.
ஆரம்பக் காலக்கட்டத்தில் கிறிஸ்துவமதம் கிரேக்க அறிவியலை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் 13ஆம் நூற்றாண்டில் சில மாறுதல்களுடன் கிறிஸ்துவமதம் அரிஸ்டாட்டிலை முன்னிறுத்தியது. அணுக் கொள்கையை நிராகரித்தது.
நவீன அறிவியல் கலிலேயோவோடு 1600 வாக்கில் ஆரம்பித்தது என்று சொல்லலாம். நவீன அறியலுக்கு ஆய்வுமுறை இயற்கைவாதம்தான் அடித்தளம். ஆனால் இது போதாது. அதைத் தாண்டி நவீன அறிவியலுக்குப் பல குணங்கள் உள்ளன. கட்டுப்பாடுகளுடன் கூடிய பரிசோதனைகள், தரவுகளை உரிய முறையில் சேர்த்தலும் நிராகரிப்பதும், கருதுகோள்கள் அல்லது அனுமானங்களை (hypothesis) உருவாக்குதல், பிரசுரித்தல் என்று பல குணங்கள் உள்ளன. இவை அனைத்தையும் உள்ளடக்கியதுதான் நவீன அறிவியலாகும்.
இயற்கையைப் புரிந்து கொள்வது என்பது கடவுளைப் புரிந்து கொள்வது என்ற கருத்தும் 13ஆம் நூற்றாண்டில் இருந்து ஐரோப்பாவில் வளர்ந்து வந்தது. இது மக்களை பெரிய அளவில் அறிவியலில் ஈடுபடுவதை ஊக்குவித்தது. அன்றிருந்த அறிவியலினால் கிறிஸ்துவ மதத்திற்கு சவால் இல்லை.
1615 வாக்கில் கோப்பர்நிகஸின் ஹீலியோசென்ட்ரிக் தத்துவத்திற்கு வலுவான ஆதாரங்கள் கொடுத்தது மட்டுமல்லாமல் அதை பொதுமக்களிடமும் கலிலேயோ எடுத்து சென்றார். பைபிளின் படி சூரியனும் மற்ற கோள்களும் நட்சத்திரங்களும் பூமியை சுற்றுகின்றன. ஆனால் தொலைநோக்கி மூலம் கிடைத்த தரவுகள் பூமியும் கோள்களும் சூரியனைச் சுற்றுகின்றன என்ற கருத்தை வலுவாக ஆதரித்தன.
கலிலேயோ கிறிஸ்துவ மதத்திற்கு எதிராக பணிபுரிகிறார் என்ற கருத்தை அவருக்கு எதிராகப் பரப்பப்பட்டது. அவர் கடவுள் நம்பிக்கை மிக்க உண்மையான கிறிஸ்தவர். அவர் மீது சுமத்தப் பட்ட குற்றச்சாட்டை மறுக்கும் வகையில் அறிவியலுக்கும் மதத்திற்கும் உள்ளத் தொடர்பு பற்றி மூதாட்டி ராணி கிறிஸ்டியானா (Grand Dutchess Christiana) அவர்களுக்கு எழுதிய நீண்ட கடிதத்தில் விரிவாக விவாதிக்கிறார். அது நீதிமன்றத்தில் ஒரு வக்கீல் கொடுக்கும் வாதம் போன்றிருக்கும்.
அவருடைய வாதத்தின் சாரம்சம் சுருக்கமாக இங்கே கொடுக்கப்பட்டுள்ளது:
கடவுளை வேதநூல்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். இயற்கையை புரிந்து கொள்வதன் மூலமும் கடவுளை அறிந்து கொள்ளலாம். இரண்டிலும் தவறு இருக்க முடியாது.
இயற்கையில் உள்ள நிகழ்வை ஆய்வதில் வேதநூல்களில் இருந்து ஆரம்பிக்க கூடாது. ஐம்புலன்களில் (sense experience) இருந்துதான் ஆரம்பிக்க வேண்டும். ஐம்புலன்கள் (sense experience) மூலம் பெறும் அறிவிற்கும் வேத நூல்களுக்கும் முரண் வந்தால், வேத நூலை தகுந்த வழியில் மறுபரிசீலனை செய்ய வேண்டும். வேதநூலின் வேலை விண்ணுலத்திற்கு (கடவுளிடம்) எப்படி போவது என்பதே அன்றி, விண்ணில் இருக்கும் பொருள்கள் எப்படி இயங்குகின்றன என்று கூறுவதல்ல.
வேதநூலில் கூறியிருப்பவை தவறாக இருக்க முடியாது என்று ஒரு புறம் சொல்லிக் கொண்டே, மறுபுறம் வேதநூல்களை தவிர்த்து விட்டு இயற்கை நிகழ்வுகளை ஐம்புலன்கள் மூலம்தான் அறிய முடியும் என்றும், அது வேத நூல்களுக்கு எதிராக வந்தால் அந்த அறிவியலைத்தான் இறுதியானதாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் வாதிடுகிறார்.
இன்றைய மொழியில் அவர் மெட்டாஃபிஸிக்கல் இயற்கைவாதத்தை (metaphysical naturalism) ஒதுக்கிவிட்டு, அறிவியலில் ஆய்வுமுறை இயற்கைவாதத்தை (methodological naturalism) மட்டும் ஆதரிக்கிறார்.
கலிலேயோ மட்டுமல்லாமல் அவருக்குப் பிறகு டேகார்ட் (Descartes), காஸண்டி (Gassendi) போன்ற தத்துவத் துறை வல்லுனர்களும் ஹூக் (Hooke), பாயில் (Boyle), நியூட்டன் போன்ற அறிவியல் வல்லுனர்களும், அறிவியல் செய்வதையும், அதுவும் குறிப்பாக நவீன அறிவியல் முறைகளில் இயற்கையை ஆராய்வதையும் வலியுறுத்துகிறார்கள். இவர்கள் அனைவரும் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள். இயற்கையை ஆராய்ந்து புரிந்து கொள்வது என்பது கடவுளை அறியும் ஒரு வழி என்று நம்பினார்கள். அறிவியலில் ஈடுபடுவது கிறிஸ்துவ மதத்திற்கு எதிரானதல்ல என்றும் நம்பினார்கள்.
கலிலேயோவிற்குப் பிறகு ஆய்வுமுறை இயற்கைவாதம் (methodological naturalism) அறிவியலின் இயல்பாக ஒப்புக்கொள்ளப்பட்டுவிட்டது. அதை வெளிப்படையாக சொல்வதற்குக் கூட அவசியம் இல்லாமற் போய்விட்டது. கலிலேயோ முதல் நியூட்டன் வரை சுமார் 100 ஆண்டுகளுக்கு ஏன் அறிவியல் செய்வதற்கு பரப்புரை செய்யப்பட்டது? அதற்கான பதில் முதலாளித்துவத்துடன் இணைந்தது.
15ஆம் நூற்றாண்டு முதல் வெடிகுண்டு, பீரங்கி, காந்த காம்பஸ் போன்ற பல புதிய தொழில் நுட்பங்கள் வந்தன. இவற்றைப் புரிந்து கொள்வதற்கும் மேற்கொண்டு போவதற்கும் பழைய கிரேக்க அறிவியலால் முடியாது என்றுணர்ந்தார்கள். உதாரணத்திற்கு, ஒரு பீரங்கி மூலம் ஒரு குறிப்பிட்ட இலக்கைத் துல்லியமாகத் தாக்குவதற்கு எந்த இடத்திலிருந்து எந்தக் கோணத்தில் என்ன வேகத்தோடு பீரங்கி செயல்பட வேண்டும்? இது ஒரு பெரிய சவால். (கலிலேயோ ஓரளவிற்கு சரியான பதிலைத் தந்தார்)
ஐரோப்பாவில் அந்தக் காலக்கட்டத்தில் தோன்றிய தொழில் நுட்பங்களும், அவை அன்றைய முதலாளித்துவ சமுதாயத்தில் எழுப்பிய சமூகத் தேவைகளும் எப்படி புதிய இயக்க விதிகளை கண்டுபிடிப்பதற்கான கட்டாய நிலை உருவாக்கியது என்று விரிவாக பிரபல சோவியத் நிபுணர் போரிஸ் ஹெஸ்ஸென் Socio Economic roots of Newton என்ற கட்டுரையில் எழுதியுள்ளார்.
நவீன அறிவியல், முதலாளித்துவத்துடன் வளர்ந்தது. முதலாளித்துவ சமுதாயத்திற்கு நவீன அறிவியல் தேவை. முதலாளித்துவத்தில் அறிவியல் என்பது உற்பத்தி சக்திகளின் ஒரு பகுதியாகும். அதை எத்தகைய அறிவியல் நிறைவேற்ற முடியும்? ஆய்வுமுறை இயற்கைவாதத்தின் கீழ் செயல்படும் அறிவியல்தான் செய்ய முடியும். கடவுளைக் கொண்டு இயற்கை நிகழ்வுகளுக்கு விளக்கம் தரும் அறிவியலால் உற்பத்தி சக்தியின் அங்கமாக இருக்க முடியாது என்ற வரலாற்று அனுபவம் இருந்ததால்தான் ஆய்வுமுறை இயற்கைவாதத்தின் கீழ் செயல்படும் அறிவியலை கடந்த காலத்தில் முதலாளித்துவம் ஆதரித்தது. இன்றும் ஆதரிக்கிறது.
அறிவியல் அறிஞர்கள் கடவுள் நம்பிகையுள்ளவராக இருக்கலாமா?
கடந்த 400 ஆண்டுகளில் அறிவியல் அறிஞர்களில் பலர் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள். ஆய்வுமுறை இயற்கைவாதம் இதை அனுமதிக்கிறது.
அறிவியல் அறிஞர்களின் வாழ்க்கை வரலாறைப் பார்க்கும்போது அவர்கள் பேருந்து ஓட்டுனர்கள் போல் உள்ளார்கள். ஒரு பேருந்து ஓட்டுனர் அவருக்குரிய பணிநேரத்தில் காக்கி உடை அணிவார். பேருந்தை சரியாக ஓட்டுவதற்கான விதிமுறைகளைப் பின்பற்றி ஓட்டி சரியான இலக்கை அடைவார். பணிநேரம் முடிந்தவுடன் காக்கி உடையைக் கழற்றி விட்டு சாதாரண மனிதராக அனைத்து விஷயங்களிலும் மாறிவிடுவார்.
அதேபோல் அறிவியல் அறிஞர்களும் தங்களுடைய அறிவியலில் நிச்சயம் பொருள்முதல்வாதியாகச் (materialism) செயல்படுவார்கள். மற்ற விஷயங்களிலும் அவர் அப்படியே செயல்படுவார் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. அவர்களுடைய அறிவியலுக்கு அப்பால் ஒரு அறிவியல் அறிஞர், பெண்கள், சமூகநீதி போன்ற பல விஷயங்களில் பிற்போக்கான சிந்தனைகளுடன் இருப்பதற்கு வாய்ப்புண்டு.
நியூட்டன் சிறந்த உதாரணம். அவருடைய அறிவியல் சாதனைகள் இமாலாய சாதனைகளாகும். அவர் கடவுள் நம்பிக்கையுள்ளவர் என்பது அவர் காலத்திலேயே தெரியும். ஆனால் அறிவியலை விட கிறிஸ்துவ மத இறையியலில் மிகப் பெரிய அளவில் ஆராய்ச்சி செய்திருந்தார். அதை அவர் மிகவும் ரகசியமாக வைத்திருந்தார். அது தெரியாத நிலையில், அவர்தான் பகுத்தறிவின் சிறந்த நாயகனாக நீண்ட காலத்திற்கு ஐரோப்பாவில் பார்க்கப்பட்டார். இருபதாம் நூற்றாண்டில்தான் முதன்முதலாக பைபிளில் இருப்பவைக்கு ஆதாரம் தேடி அவர் செய்த ஆராய்ச்சி வெளி உலகிற்கு வந்தது. அது மிகுந்த அதிர்ச்சியை அளித்தது.
அறிவியல் என்பது ஒரு சமூகச் செயல். நவீன அறிவியல் ஒரு சமூக நிறுவனமாகச் (Social institution) செயல்படுகிறது. அறிவியல் என்பது பல்லாயிரக்கணக்கான அறிவியல் அறிஞர்களின் கூட்டு முயற்சியாகும். சில விஷயங்களில் ஒரு தொழில் நிறுவனம் செயல்படுவதை ஒத்துள்ளது. தனிநபர்கள் அறிவியலின் விதிகளிலிருந்து விலகிப் போவதின் மூலம் ஏற்படும் தாக்கத்திலிருந்து அறிவியல் சமூகம் (scientific community) அல்லது அறிவியல் உலகம் தன்னைத்தானே காத்துக் கொள்ள அறிவியலின் சமூக அமைப்பு உதவுகிறது.
மீண்டும் நியூட்டன்தான் சிறந்த உதாரணம். அவர் நவீன அறிவியல் முறைக்கு உட்பட்ட ஆராய்ந்து சொல்லிய கருத்துக்கள்தான் இன்று நிலைத்து நிற்கின்றன. மற்றவை ஒதுக்கப்பட்டுவிட்டன.
அறிவியல் வளர்ச்சியால் கடவுள் நம்பிக்கை மறைந்துவிடுமா?
அறிவியலின் வளர்ச்சியால் கடவுள் நம்பிக்கை மறைந்து விடும் என்று பொதுவாக ஒரு கருத்து உள்ளது. கடவுள் இல்லை என்று அறிவியல் நிரூபிக்கிறது என்ற கருத்தும் உள்ளது.
இது சரியல்ல. இந்தக் கருத்துக்கள் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.
அறிவியல் வளர்ச்சி மறைமுகமாக கடவுள் என்ற கருத்தை அறிவியல் அனாவசியமானக் கருத்தாக (irrelevant) ஆக்குகிறது. ஒரு காலத்தில் அனைத்து அறிவியல் நிகழ்வுகளும் கடவுளைக் கொண்டுதான் விளக்கப்பட்டன. ஒன்றன் பின் ஒன்றாக பல கேள்விகளுக்கு கடவுள் என்ற கருத்தில்லாமல் மற்ற இயற்கை உலகில் உள்ள காரணங்களை வைத்தே விளக்கப் படுகின்றன. இந்தப் பட்டியல் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே போகிறது. அந்த விதத்தில் அறிவியல் கடவுள் நம்பிக்கைக்கு ஒரு பெரிய சவால்தான். ஆனால் இந்தக் கருத்தும் கடவுள் இல்லை என்று அறிவியல் நிரூபிக்கிறது என்ற கருத்தும் ஒன்றல்ல.
அறிவியலுக்கு பல நோக்கங்கள் உண்டு. இயற்கையைப் புரிந்து கொண்டு நமக்கு சாதகமாகப் பயன்படுத்துவதுதான் அறிவியல் வளர்வதற்கான உந்து சக்தியாகும். வரலாற்று ரீதியாக அறிவியலின் சமூகப் பயன்பாடும் மாறிக் கொண்டே உள்ளது. இதுதான் அறிவியலைப் பற்றிய மார்க்சீய புரிதல் ஆகும். இதுதான் சரியானது.
முதலாளித்துவ சமுதாயத்தில் (சோசலிச சமுதாயத்திலும்) அறிவியல் என்பது உற்பத்தி சக்திகளின் ஒரு பகுதியாகும். இதுதான் நவீன அறிவியலின் சமூகப் பணியாகும். கடவுள் இருக்கிறாரா அல்லது இல்லையா என்று கேள்விக்கு பதில் கண்டுபிடிப்பது அறிவியலின் பணியல்ல.
கடவுள் நம்பிக்கையைப் பற்றி மார்க்ஸ் கூறுவதையும் நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்:
“மதத்திற்கு எதிரான விமர்சனத்தின் அடித்தளம்: மனிதன் மதத்தை உருவாக்குகிறான், மதம் மனிதனை உருவாக்குவதில்லை. உண்மையில், மதம் என்பது மனிதனின் சுய உணர்வு மற்றும் சுயமரியாதை ஆகும்; அவன் இன்னும் தன்னை வெல்லவில்லை; அல்லது ஏற்கனவே தன்னை மீண்டும் இழந்துவிட்டான். ஆனால் மனிதன், உலகத்திற்கு வெளியே உட்கார்ந்திருக்கும் ஒன்றும் அருவமான ஜீவன் அல்ல. அரசு, சமூகம் ஆகியவைதான் மனிதனின் உலகம். அந்த உலகம்தான் மனிதன். – இந்த அரசும் இந்த சமூகமும் மதத்தை உருவாக்குகின்றன … …மதத்திற்கு எதிரான போராட்டம் என்பது மறைமுகமாக ஆன்மீக வாசனையாகக் கொண்ட உலகிற்கு எதிரான போராட்டமாகும்.
மதத் துயரம் என்பது ஒரே சமயத்தில் உண்மையான துன்பத்தின் வெளிப்பாடாகவும், உண்மையான துன்பத்திற்கு எதிரான எதிர்ப்பாகவும் இருக்கிறது. மதம் என்பது ஒடுக்கப்பட்ட உயிரினத்தின் பெருமூச்சு, இதயமற்ற உலகின் இதயம், ஆன்மாவற்ற நிலைமைகளின் ஆன்மா. அது மக்களின் அபின்”
பல அல்லல்களுக்கு உட்படும் மனிதன் தன்னைச் சுற்றியுள்ள சமூகத்திலிருந்து பாதுகாப்பு பெற முடியாதபோது கடவுள் நம்பிக்கைதான் அவனுக்கு மருந்தாகிறது என்பதுதான் மார்க்ஸ் கூறுவதின் சாரம்.
எனவே, கடவுள் நம்பிக்கை இருப்பதும் மறைவதும் அறிவியலையோ அல்லது பகுத்தறிவையோ பொருத்ததல்ல. மனிதர்களின் புறச்சூழ்நிலைகள்தான் தீர்மானிக்கின்றன. தன்னைச் சுற்றியுள்ள சமூகத்திலிருந்து பாதுகாப்பு இல்லாதிருக்கும்வரை கடவுள் நம்பிக்கை போகாது. கடவுள் நம்பிக்கையிலிருந்து மனிதனை விடுவிப்பது என்பது புறச்சூழலை மாற்றுவதில்தான் உள்ளது. கடந்த 400 ஆண்டுக்கால வரலாறு மார்க்சின் கருத்துக்களை ஆதரிக்கிறது
இறுதியாக, சரியான அறிவியல் செய்வதற்கு ஆய்வுமுறை இயற்கைவாதம் மட்டும் போதாது. இதற்கு நல்ல உதாரணம் அமெரிக்காவை சேர்ந்த வில்லியம் ஷாக்லியாவார். இவர் இயற்பியலில் நோபல் பரிசு பெற்றவர். இவருடைய இறுதிக் காலத்தில் மரபணுவில் ஆராய்ச்சி செய்தார். தன்னுடைய ஆராய்ச்சி மூலம் கறுப்பர்கள் மரபணுவில் உள்ள குறைபாடு காரணமாக வெள்ளையர்களை விட புத்திசாலித்தனம் குறைவாக உள்ளார்கள் என்று அறிவித்தார். அவர்களுக்கு அரசு செலவளிப்பதன் மூலம் குறைந்த புத்திச்சாலித்தனமுள்ள மக்களை பரப்புவது தவறு என்று வாதிட்டார். அறிவியல் உலகம் அவரை நிராகரித்தது.
இதில் மற்றொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். நோபல் பரிசு பெற்றவரே கூட நவீன அறிவியலின் ஆய்வு விதிகளில் இருந்து ஆரய்ச்சி செய்தால், அவருடைய தவறான முடிவுகளை நிராகரிக்கும் அளவிற்கு, நவீன அறிவியலின் சமூகக் கட்டமைப்பு வலுவாக உள்ளது. இதற்குப் பல உதாரணங்கள் உள்ளன.
References
1. Naturalism https://en.wikipedia.org/wiki/Naturalism_(philosophy)
2. Robert T Pennock, The Bable of Tower, MIT Press, 2000.
2. Boris Hessen, The Social and Economic Roots of Newton’s Principia
3. Benjamin Farrington, Greek Science Its Meaning for Us- Volume 1, Thales to Aristotle- Penguin Books (1944)
4. J. D. Bernal, Science in History Volume 1 and Volume 2, Penguin Books, 1969
5. John Ziman, Real Science. What it is, What it means, Cambridge University Press, 2000
6. Kitzmiller et al. vs Dover Area School District
7. Galileo Galilei, Letter to Grand Duchess Christina, https://inters.org/Galilei-Madame-Christina-Lorraine
8. René Descartes, https://en.wikipedia.org/wiki/Ren%C3%A9_Descartes
9. Pierre Gassendi, https://en.wikipedia.org/wiki/Pierre_Gassendi
10. Robert Boyle, Internet Encyclopaedia of Philosophy, https://iep.utm.edu/robert-boyle/#:~:text=Robert%20Boyle%20was%20one%20of,Aristotelian%20substantial%20forms%20and%20qualities.
11. Isaac Newton, https://en.wikipedia.org/wiki/Isaac_Newton
12. J. M. Keynes, Newton, the man, https://mathshistory.st-andrews.ac.uk/Extras/Keynes_Newton/
13. K. Marx, Critique of Hegel’s Philosophy of Right, https://www.marxists.org/archive/marx/works/download/Marx_Critique_of_Hegels_Philosophy_of_Right.pdf
14. William Shockley, https://en.wikipedia.org/wiki/William_Shockley
You may also like
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
