நவ தாராளமய கார்ப்பரேட் கூட்டுகளவாணித்தனம் மீண்டும் அம்பலம்
பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா
மாறிய மக்களவை 2024
இந்தியாவின் பதினெட்டாவது மக்களவை தேர்தல் முடிவுகள் பத்தாண்டு பாஜக /ஆர்எஸ்எஸ் அரசின் மீது மக்களுக்கு இருந்த கடும் கோபத்தை வெளிப்படுத்தியது. 2019 மக்களவை தேர்தலில் 303 இடங்கள் பெற்றிருந்த பாஜக, 2024 மக்களவை தேர்தலில், “நாங்கள் 400 இடங்கள் வெல்வோம்” என்று தேர்தல் பிரச்சாரத்தின் துவக்கத்தில் கொக்கரித்தது. ஆனால், பாஜகவிற்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. மாறாக, 63 இடங்கள் குறைந்து, 240 இடங்கள் மட்டுமே பெற்று, இப்பொழுது ஐக்கிய ஜனதா தளம், தெலுகு தேசம் மற்றும் லோக் ஜன சக்தி ஆகிய மூன்று கட்சிகளின் தயவிலும், கருணையிலும் ஆட்சி செய்கிறது பாஜக-ஆர்எஸ்எஸ்.
எனினும், ஒன்றுமே மாறவில்லை; இப்பவும் நான் ராஜா என்ற பாணியில், மோடியும் அவரது தலைமையிலான அரசின் அமைச்சர்களும் வலம்வந்து கொண்டிருக்கின்றனர். ஆனால், நடைமுறையில், இந்த ஒன்றிய அரசு ஒவ்வொரு பிரச்சினையிலும் தடுமாறுவதை பார்க்க முடிகிறது. ஒன்றிய அரசின் பொது சேவை ஆணையம் நடத்தும் தேர்வு மூலம் மட்டுமே, இட ஒதுக்கீடு அடிப்படையில், ஒன்றிய அரசின் நிர்வாக பணிகளுக்கு அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் என்றுள்ள நடைமுறையை மீறும் வகையில், அப்பணிகளுக்கு நேரடி நியமனம் செய்ய, ஒன்றிய அரசு மேற்கொண்ட நடவடிக்கையை, இந்தியா கூட்டணி கட்சிகள் மட்டுமின்றி, பாஜகவின் கூட்டணி கட்சிகளும் எதிர்த்தன. மேலும், நாடு முழுவதும் இட ஒதுக்கீடு மற்றும் சமூக நிதியை பாதுகாக்க வலுவான இயக்கங்கள் களம் இறங்கும் சூழல் ஏற்பட்டது. இதனால், ஆர்எஸ்எஸ் பெரிதும் விரும்பும் இந்த முயற்சியை – இட ஒதுக்கீட்டு ஏற்பாட்டை வலு இழக்கச் செய்யும் முயற்சியை – ஒன்றிய அரசு கைவிட வேண்டிவந்தது. சிறுபான்மை மக்களுக்கெதிரான சில சட்ட திருத்தங்களை அவசரமாக நிறைவேற்ற, ஒன்றிய அரசு முயன்ற பொழுதும் பாஜக கூட்டணி கட்சிகளின் எதிர்ப்பும் எதிர்க்கட்சிகள் எழுப்பிய குரலும் மசோதாவை மக்களவை குழுவிற்கு அனுப்பவேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தின. ஒன்றிய பட்ஜெட்டில் முன்வைக்கப்பட்ட வரிவிதிப்பு தொடர்பான சில ஆலோசனைகளைக்கு வந்த எதிர்ப்பையும் அரசால் புறந்தள்ள முடியவில்லை. 2024 மக்களவை தேர்தலுக்குப்பின் அமைந்துள்ள பாஜக தலைமையிலான கூட்டணி அரசில், தொடர்ந்து இவ்வாறு பல முரண்பாடுகள் தலைதூக்கும் என்று எதிர்பார்க்கலாம். ஆனால், இவை எல்லாம் இருந்தாலும், ஆர்எஸ்எஸ் அமைப்பு பாஜக கூட்டணி அரசின் வாயிலாகவும் பிற வழிகளிலும் தனது நிகழ்ச்சி நிரலை தொடர்ந்து முன்னெடுக்கவே முயற்சிக்கும். குறிப்பாக, மதநல்லிணக்கத்தையும் மக்கள் ஒற்றுமையையும் பலவீனப்படுத்த முயற்சிப்பதோடு, இந்நாட்டு, பன்னாட்டு கார்ப்பரேட் பெருமுதலாளி நிறுவனங்கள் நலன் காக்கும் பாதையிலேதான் இந்த அரசு பயணிக்கும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. எனவேதான் ஒன்றிய அரசு அதானி குழுமம் பற்றி வெளிவந்துள்ள, அதன் தில்லுமுல்லுகளை அம்பலப்படுத்தும் செய்திகளை கண்டுகொள்ளாமல் உள்ளது. இதுபற்றி சற்று விவரமாக பார்ப்போம்.
செபி தலைவர் , அதானி குழுமம், ஹிண்டன்பர்க்
நவீன தாராளமய கொள்கைகள், கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இவை உழைக்கும் மக்களுக்கு பெரும் சுமையாக உள்ளன. விலைவாசி உயர்வும் வேலை இன்மையும் கோரத்தாண்டவம் ஆடுகின்றன. மறுபுறம் விரல்விட்டு எண்ணக்கூடிய பெருமுதலாளி குழுமங்கள், மேலும் மேலும் வலுப்பெற்று, இந்திய அரசையே தங்கள் பிடியில் வைத்துள்ளனர். இக்காலத்தில் பங்குச்சந்தை பெருமளவிற்கு அரசால் ஊக்கப்படுத்தப்பட்டு வருகிறது. மறுபக்கம், நடுத்தர வர்க்கத்தினர் உள்ளிட்ட சிறு சேமிப்பாளர்களுக்கு கொடுக்கப்படும் வட்டியை அரசு தொடர்ந்து குறைத்து வந்துள்ளது. கணிசமான அளவில் ஒரு பகுதி மத்திய தர மக்கள் கூட பங்குச்சந்தை ஊக வணிகத்தில் பங்கேற்கும் நிலமை உருவாகியுள்ளது. பங்கு சந்தையை நெறிமுறைப்படுத்த அமைக்கப்பட்டது தான் செபி அமைப்பு (Securities and Exchange Board of India – SEBI). இப்பொழுது இது தொடர்பான ஒரு மகா ஊழல் அம்பலாமாகியுள்ளது.
ஹிண்டன்பர்க் என்ற அமெரிக்க நிறுவனம் கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இந்திய பெருமுதலாளி அதானி குழுமம் பங்கு சந்தை மூலமாகவும் பிறவழிகளிலும் செய்துவரும் பல தில்லுமுல்லுகளை அம்பலப்படுத்தியது. குறிப்பாக, தனக்கு நெருக்கமான உறவினர்கள் வெளிநாடுகளில் நடத்தும் போலியான கம்பனிகள் மூலம் அதானி குழும பங்குகளின் விலைகளை தொடர்ந்து செயற்கையான முறையில் உயர்த்தி, அதன்மூலம் அக்குழுமத்தின் சொத்து மதிப்பை பன்மடங்கு உயர்த்திக் காட்டும் தில்லுமுல்லுகளை அந்நிறுவனம் வெளிக்கொணர்ந்தது. இந்த அறிக்கை வெளிவந்ததை தொடர்ந்து, அதானி குழும பங்குகளின் விலை செங்குத்தாக வீழ்ச்சி அடைந்தது. இது பங்குச்சந்தையில் ஏராளமான சிறு முதலீட்டாளர்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியது. ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை. ஆனால், உச்ச நீதிமன்றம் இப்பிரச்சினையை செபி அமைப்பு ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று பணித்தது. இதுவரை செபி நிறுவனம் அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை. மாறாக, செபி நிறுவனம் அதானியின் தில்லுமுல்லுகளை வெளிக்கொணர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனத்திற்கு நோட்டீஸ் கொடுத்தது. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 10 அன்று ஹிண்டன்பர்க் நிறுவனம் இன்னும் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் அதானி குழுமத்தின் மீதான பல குற்றச்சாட்டுகளை ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றத்தால் பணிக்கப்பட்ட செபி தலைவர் மாதபி புச் அவர்களுக்கும், அவரது கணவருக்கும், அதானி குழுமத்தை சார்ந்த நிறுவனங்களில் பங்கு முதலீடுகள் இருப்பதை குறிப்பிட்டுள்ளது. செபி தலைவர், செபியின் முழுநேரத் தலைவராக இருக்கும் காலத்தில்கூட தனது இத்தகைய முதலீட்டால் கணிசமாக வருமானம் பெற்று வருகிறார் என்பதும் வெளிவந்துள்ளது. அடுத்தடுத்து, தற்போதைய செபி தலைவர் மீது, அதானி நிறுவனத்துடன் அவருக்கு இருக்கும் பங்கு சந்தை தொடர்புகளோடு பலவகைகளில் அவருக்கு வருமானம் வருவது உள்ளிட்ட வேறு பல தகவல்கள் வெளிவந்துள்ளன. இவை செபி தலைவருக்கான நெறிமுறைகளை அவர் மீறியுள்ளாரா என்ற கேள்வியை வலுவாக பொதுவிவாத களத்திற்குள் கொண்டு வந்துள்ளன. இவை அனைத்தும் சேர்ந்து, செபி தலைவர் அவர் வகிக்கும் பொறுப்பிற்கான நெறிமுறைகளை பின்பற்றவில்லை என்றும், செபி தலைவர் என்ற முறையில், அதானி குழுமத்தின் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுகளையோ, செபி விதித்துள்ள நெறிமுறைகளையோ, அதானி குழுமம் மீறியுள்ளதா என்பதை விசாரிக்கும் தகுதியை செபி தலைவர் இழந்துள்ளார் என்ற கருத்தும் வலுவாக எழுந்துள்ளது. அவரது நேர்மை மற்றும் பாரபட்சம் தொடர்பாக பெரும் நம்பிக்கையின்மை ஏற்பட்டுள்ளது. மேலும், இந்தியா கூட்டணி கட்சிகளும் இடதுசாரி இயக்கங்களும் செபி தலைவர் பதவி விலகவேண்டும் என்றும், அதானி குழுமத்தின் நடவடிக்கைகளை முழுமையாக விசாரித்து உண்மைகளை வெளிக்கொணர பாராளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை வலுவாக முன்வைத்துள்ளனர். மிக முக்கியமாகவும், ஒருவகையில் வியப்பூட்டும் தன்மையிலும், நிதி மூலதன சந்தைகள் பற்றி சிலாகித்துப் பேசுகின்ற, பெறுநிதி மூலதனத்தை பொதுவாக ஆதரிக்கின்ற ஊடகங்களிலும் வட்டாரங்களிலும் கூட செபி தலைவர் மாதபி புச் பதவி விலக வேண்டும் என்ற கருத்து வலுவாக முன்வந்துள்ளது. அதானி குழுமம் தொடர்பாக முன்வந்துள்ள புகார்களை அவர் விசாரிப்பது பொருத்தமல்ல என்ற கருத்தும் அவ்வாறே முன்வைக்கப்பட்டுள்ளது. அவர் மீது விசாரணை நடத்தப்படவேண்டும் என்ற கோரிக்கையும் பொதுவெளியில் முன்வைக்கப்பட்டுள்ளது. அண்மையில் செபி தலைவர் பாராளுமன்றத்தின் பொது கணக்கு குழுவால் விசாரிக்கப்படக் கூடும் என்ற செய்தி கூட வந்துள்ளது. ஆனால் ஒன்றிய அரசு கள்ள மவுனம் சாதிக்கிறது.
உண்மைகளை மறுக்கும் ஒன்றிய அரசு
ஹிண்டன்பர்க் நிறுவனம் அதானி குழுமம் மீதும் செபி தலைவர் மீதும் வைத்துள்ள குற்றச்சாட்டுகளை மௌனமாக இருப்பதன் மூலமே எதிர்கொண்டு விடலாம் என்று மோடி அரசு நினைப்பது நமக்கு ஒரு முக்கிய செய்தியை தெரிவிக்கிறது. அது என்னவென்றால், ஆணவம் மிக்க மோடி அரசு, தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவை ஏற்றுக்கொள்ளவோ, அதற்கான காரணங்களை கண்டறிந்து, தனது அணுகுமுறையையும் கொள்கைகளையும் மாற்றிக்கொள்ளவோ, முற்றிலும் மறுக்கிறது என்பதுதான். தேர்தல் அண்மையில் நடந்து முடிந்துள்ள சூழலில், கூட்டணி கட்சிகளும் உடனடியாக முழு மூச்சில் அரசின் தவறான கொள்கைகளை எதிர்க்க தயாராக இல்லை. இத்தகைய நிலமையில், மோடி அரசு விவசாயிகளின் கோரிக்கைகளையோ, கிராமப்புற வேளாண் மற்றும் இதர தொழிலாளிகளின் கோரிக்கைகளையோ, காதுகொடுத்து கேட்க மறுக்கிறது. கடந்த மக்களவை தேர்தலில், பாஜக பொதுவாகவும், குறிப்பாக ஒரு சில வட மாநிலங்களிலும் பல தொகுதிகளில் தோற்றதற்கு விவசாயிகளையும் அவர்களது மகத்தான நாடு தழுவிய, வீரம் செறிந்த போராட்டத்தையும் அடக்க முயன்றது ஒரு முக்கிய காரணம் என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். ஆனால், இன்றும் விவசாயம் மற்றும் விவசாயிகளின் பிரச்சினைகள் தொடர்பான பாஜக அணுகுமுறையில் எந்த மாற்றமும் இல்லை. இந்திய உழைப்பாளி மக்கள் எதிர்கொள்ளும் அனைத்துப் பிரச்சினைகளிலும் பாஜக அரசின் மக்கள் விரோதப் போக்கு தொடர்கிறது. அண்மையில் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட நிதி நிலை அறிக்கையிலும் இதைக் காணமுடிகிறது. குறைந்தபட்ச ஆதரவு விலை, கொள்முதல், இடுபொருள் மானியம், விரிவாக்க அமைப்பை வலுப்படுத்துதல், கடன் ரத்து உள்ளிட்ட அனைத்து முக்கிய பிரச்சினைகளிலும் இதைக்காண முடியும். ஊரக வேலை உறுதி திட்டத்தை அழித்தொழிப்பதில் பாஜக ஆர்வமாக உள்ளது. இந்த ஆண்டு பட்ஜெட்டில் வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சிக்கான ஒதுக்கீடுகளில் முன்னேற்றம் இல்லை. உணவு, உரம் மற்றும் எரிபொருட்களுக்கான மானியம் வெட்டப்பட்டுள்ளது. பெரும் செல்வந்தர்களுக்கு வரி சலுகைகள் தொடர்கின்றன. அந்நிய மூலதனத்திற்கு வரிவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது. கல்வி, மக்கள் நலம் உள்ளிட்ட சமூக துறைகளுக்கு கவனம் மிக்கக் குறைவாகவே தொடர்கிறது.
நிறைவாக
இன்று நிலவும் இத்தகைய சூழலில் அதானி குழுமம் மீது ஒருநேர்மையான, சுயேச்சையான, ஆழமான விசாரணை நடத்தப்படவேண்டும். இதனை பாராளுமன்ற கூட்டுக்குழு என்ற கருவி மூலம் செய்வது பொருத்தமாக இருக்கும்.
அதானி குழுமம் மீதும், செபி தலைவர் மற்றும் அமைப்பு மீதும் விசாரணைகள் மேற்கொள்ளுவது என்பது, ஒரு குறுகிய வரம்பிற்கு உட்பட்டு ஒரு சில முக்கிய உண்மைகளை வெளிக்கொணர உதவலாம். அதன் அடிப்படையில் பொருத்தமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்களை திரட்டி இயக்கங்கள் நடத்தலாம். இவை நவதாராளமய கொள்கைகளையும், அவற்றை பின்பற்றும் அரசையும், அம்பலப்படுத்த ஓரளவு உதவும். எடுத்துக்காட்டாக, தானாகக் தொடர்புடைய நிறுவனங்கள் மூலம் இறக்குமதிக்கு ஆகும் செலவுகளை பன்மடங்கு கூடக் காட்டி, பின்னர் இதன் மூலம் அதானி நிறுவனம் பெறுகின்ற லாப கொள்ளையை வெளிநாட்டில் செயல்படும் தனக்கு தொடர்புடைய நிறுவனங்கள் மூலம் முதலீடு செய்து, பின்னர் இவற்றை பயன்படுத்தி தனது நிறுவன பங்குகளின் மதிப்பை செயற்கையாக பன்மடங்கு உயர்த்தி அதன்மூலம் தனது கொள்ளை லாபத்தை மீட்பது என்பது அதானி குழுமம் பின்பற்றிவரும் ஒரு லாப தந்திரம். ஆழமான விசாரணைகள் இதனை அம்பலப்படுத்த உதவும். ஆனால், நமது போராட்டக்களம் இதனுடன் சுருங்கி நின்று விட முடியாது. மக்கள் தீர்ப்பை புறந்தள்ளி, கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளை வேகமாக முன்னெடுக்க முயலும், ஊழல் மலிந்த பாஜக அரசின், வேளாண் விரோத, உழைக்கும் மக்கள் விரோத கொள்கைகளை தொடர்ந்து மக்கள் மத்தியில் அம்பலப்படுத்த வேண்டிய பணி நம்முன் உள்ளது. விவசாயி-தொழிலாளி ஒற்றுமையை உயர்த்திப் பிடிக்கும் பொறுப்பும் நம்முன் உள்ளது. ஆணவம் மிக்க மோடி அரசை மக்கள் மத்தியில் முழுமையாக அம்பலப்படுத்தி, வர்க்க வெகுஜன போராட்டங்களை விரிவுபடுத்தி, அவற்றின் அரசியல் புரிதலை வலுப்படுத்தி, இடது ஜனநாயக சக்திகள் முன்னேறுவது நம்முன் உள்ள முக்கிய அரசியல் கடமை.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
