
டிரம்ப் அறிவிப்புகளும், மோடி அரசின் திட்டங்களும் (கேள்வி பதில்)
பிரகாஷ் காரத்
(இன்றைய அரசியல் நிலைமை குறித்து தோழர் பிரகாஷ் காரத் முன்பாக வைக்கப்பட்ட கேள்விகளுக்கு அளித்த பதில்கள்)
ட்ரம்ப் அதிபராகப் பதவியேற்ற பிறகு, ஏகாதிபத்தியங்களுக்கு இடையேயான முரண்பாடுகள் எவ்வாறு உருவெடுத்துள்ளன?
முதலாவதாக, ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான முரண்பாடுகளின் மாறிய இயல்பைப் புரிந்து கொள்வது முக்கியமானதாகும். 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், ஏகாதிபத்திய நாடுகளுக்கு இடையேயான முரண்பாடுகள் சில நேரங்களில் மோதல்களுக்கு வழிவகுத்தன. இதன்விளைவாக, அவற்றுக்கிடையே போர்களும் உருவாயின. உதாரணமாக, 1914முதல் 1919 வரை நடைபெற்ற முதலாம் உலகப் பெரும்போர் ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான போட்டிகளின் விளைவாக இருந்தது. ஒரு புறம் ஜெர்மனி, மறுபுறம் பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ரஷ்யா ஆகியவை இருந்தன. இவற்றுக்கிடையிலான முரண்பாடுகள் என்பது புதிய நிலப்பரப்புகள், வளங்களின் ஆதாரங்கள், சந்தைகள் ஆகியவற்றுக்காக ஏகாதிபத்திய நாடுகளுக்கு இடையே உருவான மோதல்கள் மற்றும் போட்டியிலிருந்து எழுந்தன. வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த ஏகபோக மூலதனங்களுக்கு இடையிலான போட்டியே இந்தப் போட்டியின் அடிநாதமாக இருந்தது. அதைப் போன்றே ஜெர்மனிக்கும் பிரிட்டன், பிரான்ஸ் போன்ற மேற்கத்திய வல்லரசுக்களுக்கும் இடையிலான மோதல் காரணமாகவே இரண்டாம் உலகப் பெரும்போரும் தொடங்கியது.
இரண்டாம் உலகப்பெரும்போருக்குப் பிறகு, சோவியத் ஒன்றியம் மிகப்பெரும் சக்தியாக உருவெடுத்தபோது, மற்ற அனைத்து ஏகாதிபத்திய நாடுகளும் அமெரிக்காவின் தலைமையின்கீழ் ஒரு கூட்டணியாக ஒன்றிணைந்தன. இந்தக் கூட்டணியின் ராணுவரீதியான வெளிப்பாடாக நேட்டோ அமைப்பு இருந்தது. மேற்கத்திய நாடாக இல்லாத போதிலும், முன்னேறிய ஒரே முதலாளித்துவ நாடான ஜப்பானும் சோவியத் ஒன்றியத்திற்கு எதிராக அமெரிக்கா உருவாக்கிய யுத்த தந்திர ரீதியான கூட்டணியின் ஒரு பகுதியாகவே இருந்தது. (சோவியத் ஒன்றியத்திற்கும் முதலாளித்துவ ஏகாதிபத்திய நாடுகளுக்கும் இடையிலான) பனிப்போர் நடைபெற்ற காலம் முழுவதிலும், இந்த சக்திகள் பொதுவான ஓர் எதிரியை எதிர்கொள்ள ஒன்று சேர்ந்த நிலையில், ஏகாதிபத்திய நாடுகளுக்கு இடையிலான முரண்பாடுகள் ஒரு கட்டுக்குள் அடங்கிய நிலையில் இருந்தன.
சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சி, சோஷலிச அமைப்பின் பின்னடைவு ஆகியவற்றுக்குப் பின்னர், ஏகாதிபத்திய நாடுகள் இனியும் அத்தகைய பொதுவான அச்சுறுத்தலை எதிர்கொள்ளவில்லை. எனினும் ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான முரண்பாடுகள், (அவற்றுக்கிடையேயான) மோதல் என்ற புள்ளியை நோக்கித் தீவிரமடையவில்லை. நிதிமூலதனத்தின் தன்மையில் (இதற்கிடையில்) ஏற்பட்ட மாற்றமே இதற்குக் காரணமாகும். ஏகாதிபத்தியத்தைப் பகுப்பாய்வு செய்து போரை நோக்கி இட்டுச் செல்லும் ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான மோதல் குறித்து லெனின் கூறியபோது, வெவ்வேறு நாடுகளின் நிதிமூலதனங்களுக்கு இடையிலான மோதலை அவர் அடிப்படையாகக் கொண்டார். உதாரணமாக, ஜெர்மன் நிதிமூலதனத்திற்கு எதிராக பிரிட்டிஷ் நிதிமூலதனம் அப்போது இருந்தது.
எனினும், 20ஆம் நூற்றாண்டின் கடைசி கால் பகுதியில், நிதி மூலதனத்தின் குவிப்பானது அதன் சர்வதேச மயமாக்கலுக்கு இட்டுச் சென்று, சர்வதேச நிதிமூலதனம் என்ற புதியதொரு யுகத்தைக் கொண்டு வந்தது. நிதி மூலதனத்தால் உந்தப்பட்ட உலகமயமாக்கல் என்பதாகவே இது குறிப்பிடப்படுகிறது. பல்வேறு நாடுகளின் நிதிமூலதனம் ஒன்றிணைந்து, விரைவான லாபங்களைத் தேடி உலகம் முழுவதும் அதன் சுதந்திரமான இயக்கத்தை உறுதி செய்தது. இந்தக் காலப்பகுதி, நவ தாராளமயத்தின் எழுச்சியைக் குறிப்பதாகவும் அமைந்தது.
ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான முரண்பாடுகள் தொடர்ந்து நிலவிய போதிலும், ஒன்றுபட்ட, நாடுகளைக் கடந்த, நிதிமூலதனத்தின் தோற்றமானது, ஏகாதிபத்திய நாடுகளுக்கு இடையிலான மோதல்களைத் தடுக்க உதவியுள்ளது.
பைடன் (அமெரிக்க) அதிபராக இருந்த ஆட்சிக் காலத்தின்போது (2021-2024) அமெரிக்காவின் தலைமையின்கீழ், உக்ரைன் போர் தொடர்பாக அனைத்து மேற்கத்திய சக்திகளையும் ரஷ்யாவிற்கு எதிராக ஒன்றிணைக்கும் முயற்சிகள் நடைபெற்றதைக் கண்டோம். அதேபோன்று, (ஜப்பான் உள்ளிட்ட மிகவும் சக்திவாய்ந்த, முன்னேறிய முதலாளித்துவ நாடுகளை உள்ளடக்கிய) ஜி 7 நாடுகள் ரஷ்யா, சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் எதிராக ஒன்றுபட்டன. எனவேதான், 23 வது கட்சிக் காங்கிரஸின் அரசியல் தீர்மானத்தில், ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான முரண்பாடுகள் சத்தமேதுமின்றி ஒரு கட்டுக்குள் அடைபட்டுள்ளன என்று குறிப்பிட்டிருந்தோம்.
எனினும், ஜனவரி 2025இல் ட்ரம்ப் அமெரிக்க அதிபராகப் பதவியேற்றவுடன், அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவில் உள்ள அதன் ஏகாதிபத்திய பங்காளிகளுக்கும் இடையிலான உறவுகளில் உரசல்கள் உருவாகியுள்ளன. ட்ரம்பின் யுத்த தந்திர மற்றும் வெளியுறவுக் கொள்கைகளே இதற்குக் காரணமாகும். அவரது ‘முதலில் அமெரிக்கா’ என்ற அணுகுமுறையின் பொருள், நேட்டோ மூலமாக தன் ஐரோப்பிய கூட்டாளிகளுக்கு ராணுவ ரீதியான மானியம் வழங்க அவர் விரும்பவில்லை என்பதாகும். ரஷ்யாவுடனான போரில் உக்ரைனுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக, அமெரிக்காவும் அதன் மேற்கத்திய நட்பு நாடுகளும் முன்பு பின்பற்றிய அணுகுமுறையையும் அவர் நிராகரிக்கிறார். ரஷ்யாவிடமிருந்து சலுகைகளைக் கறந்து கொண்டு, உக்ரைன் போரை ஒரு முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஓர் ஒப்பந்தத்தை உருவாக்கவும் அவர் விரும்புகிறார்.
அதேபோல, வர்த்தகத்தைப் பொறுத்தவரையில், அமெரிக்க முதலாளிகளுக்கும் அமெரிக்கப் பொருளாதாரத்திற்கும் ஆதாயமளிக்கும் வகையில் அமெரிக்காவின் ஐரோப்பிய கூட்டாளிகளிடமிருந்து அதிகபட்ச ஆதாயங்களை பிழிந்தெடுக்க ட்ரம்ப் முயன்று வருகிறார். அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் ஐரோப்பிய பொருட்கள் மீது வரி விதிப்பதற்கான அவரது அச்சுறுத்தல்களில் இது பிரதிபலிக்கிறது. ட்ரம்பின் கொள்கைகள் இதற்கு முன்பாக அமெரிக்காவால் பின்பற்றப்பட்டவற்றில் இருந்து முற்றிலும் மாறுபட்டவை என்பதோடு, ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான முரண்பாடுகளை அது கூர்மைப்படுத்தவும் வாய்ப்புண்டு.
எனினும், முந்தைய காலப்பகுதியைப் போலன்றி, இந்த முரண்பாடுகள் ஏகாதிபத்திய நாடுகளுக்கிடையே மோதலுக்கோ அல்லது போருக்கோ இட்டுச் செல்லாது. அதற்குப் பதிலாக, அவை பல துருவ உலகத்தை நோக்கிய போக்கை மேலும் துரிதப்படுத்தும். ஏகாதிபத்திய வல்லரசுகள், தங்களுக்குள் ஒருங்கிணைந்து செயல்படுவதற்குப் பதிலாக, பல்வேறு நிலைபாடுகளையும் அணுகுமுறைகளையும் பின்பற்றி, பல துருவ முனைப்பை ஊக்குவிக்கும். எதிர்காலத்தில் பிரதான முரண்பாடு என்பது அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலானதாக இருக்கும். சீனாவைக் கட்டுப்படுத்துவதற்கான ட்ரம்பின் முயற்சிகள் வெற்றி பெறாது.
மோடி அரசின் வெளியுறவு மற்றும் பொருளாதாரக் கொள்கைகள் எவ்வழிகளில் அமெரிக்க யுத்த தந்திர நலன்கள் மற்றும் பெருநிறுவனங்களின் நிகழ்ச்சி நிரல்களுடன் அதிகரித்த அளவில் ஒன்றுபட்டதாக உள்ளது?
மோடி அரசின் வலதுசாரி பொருளாதார மற்றும் வெளியுறவுக் கொள்கைகள் தொடக்கத்திலிருந்தே அமெரிக்காவின் யுத்த தந்திர நலன்களுடன் ஒத்துப் போவதாகவே இருந்தன. இந்த ஒன்றிணைப்பு 2014ஆம் ஆண்டில் மோடி அரசு வருவதற்கு முன்பே தொடங்கியது என்பதையும் இங்கு வலியுறுத்த வேண்டும். நவதாராளமயக் கொள்கைகளைப் பின்பற்றுவது, சர்வதேச நிதிமூலதனத்துடன் அணிசேர்வது ஆகியவை மூன்று தசாப்தங்களுக்கு முன்பே இந்தியாவில் தொடங்கி விட்டது. மோடி அரசின் தீவிர வலதுசாரிக் கொள்கைகள் அமெரிக்காவுடனான இத்தகைய ஒன்றிணைப்பை மேலும் வலுப்படுத்தியுள்ளன. மோடி அரசின் 11 ஆண்டுக்கால ஆட்சிக் காலத்தில், ஆசிய-பசிபிக் பிராந்தியத்திற்கான அமெரிக்க யுத்த தந்திர வலையில் இந்தியா பெருமளவிற்குச் சிக்கியுள்ளது. மோடி அரசின் கீழ், பாதுகாப்பு மற்றும் ராணுவ ஒத்துழைப்புக்கான அடித்தளமான ஒப்பந்தங்கள் என்று அழைக்கப்படுபவை அனைத்துமே கையெழுத்திடப்பட்டுள்ளன.
அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய குவாட் அமைப்பின் ஒரு பகுதியாக இந்தியா மாறியுள்ளது. முக்கியமாக, இந்தக் குழு சீனாவை எதிர்ப்பதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளது. பொருளாதாரத் துறையில் இந்தியாவில் நேரடி அந்நிய முதலீட்டின் (எஃப் டி ஐ) மிகப்பெரிய பங்களிப்பாளராக அமெரிக்கா உள்ளது. ட்ரம்ப் அமெரிக்க அதிபரான பின்னர் மோடி வாஷிங்டனுக்கு சென்றிருந்தபோது, அமெரிக்காவிடமிருந்து பல பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள பாதுகாப்பு தளவாடங்கள் மற்றும் கச்சா எண்ணெயை வாங்க இந்தியா உறுதியளித்தது.
இந்தியப் பொருட்கள் மீது அதிகரித்த வரிவிதிப்பு என்ற அச்சுறுத்தலைத் தொடர்ந்து, மோடி அரசு ஏற்கனவே அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யும் பல பொருட்களின் மீதான சுங்க வரிகளைக் குறைத்துள்ளது. மேலும், தற்போது பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வரும் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தின்கீழ் கூடுதல் சலுகைகளை வழங்கவும் அது தயாராக உள்ளது. ட்ரம்ப் நிர்வாகம் தரும் அழுத்தத்தின் விளைவாக, அமெரிக்காவிற்கு மேலும் அதிகமான பொருளாதார சலுகைகள் வழங்கப்படக் கூடும் என்று நாம் எதிர்பார்க்கலாம். வெளியுறவுக் கொள்கையில், இந்தியா, இஸ்ரேலுடன் ஒரு வலுவான கூட்டணியை உருவாக்கிக் கொண்டுள்ளது. இது மேற்கு ஆசியாவிற்கான அமெரிக்காவின் யுத்த தந்திரத்துடன் ஒத்துப் போவதாகவும் உள்ளது.
இந்துத்துவா – கார்ப்பரேட் கூட்டணியை நிலைநிறுத்துவதிலும், அதன் மேலாதிக்கத்தை தக்க வைத்துக் கொள்வதிலும் நவ தாராளமயத்தின் பங்கு என்ன?
இந்தக் கேள்வியை “இந்துத்துவா- கார்ப்பரேட் கூட்டணியை நிலைநிறுத்த நவ தாராளமயம் என்ன செய்கிறது?” என்பதாக மாற்றி அமைக்கலாம். ஏனெனில், பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் அல்லது பெருமுதலாளிகள்தான் நவ தாராளமயக் கொள்கையை ஆதரிக்கின்றனர். இந்துத்துவா சக்திகளுக்கும் பெருமுதலாளிகளுக்கும் இடையே கூட்டணி உள்ளது. ஆர் எஸ் எஸ் – பாஜக மற்றும் பெரும் கார்ப்பரேட்கள் கூட்டணி வைத்துள்ள விதத்தில் இதை நம்மால் காண முடியும். பெருமுதலாளிகள்/ பெரும் கார்ப்பரேட்களின் நலன்கள் பாஜக- ஆர் எஸ் எஸ் ஆகியவற்றால் பாதுகாக்கப்படுகின்றன.
இந்துத்துவா சித்தாந்தம் என்பது முதலாளித்துவ எதிர்ப்பானதல்ல; மாறாக, அது ‘இந்து’ பெருமுதலாளித்துவத்தை ஒரு குறிப்பிட்ட வகையில் ஊக்குவிக்க முயல்கிறது. இந்து ராஷ்ட்ரம் என்ற அதன் கருத்தாக்கம் சக்திவாய்ந்ததோர் இந்து முதலாளித்துவ அமைப்பை அடிப்படையாகக் கொண்டது. ஆர் எஸ் எஸ் ஸின் பாசிச சித்தாந்தமானது தங்களின் வர்க்க நலன்களுக்கு எதிரானதல்ல என்பதை இந்நாட்டின் பெருமுதலாளிகள் நன்கறிவர். இந்துத்துவா சித்தாந்தம் என்பது தீவிரமான கம்யூனிச எதிர்ப்பு, தொழிலாளிவர்க்க விரோதம் ஆகியவற்றை உள்ளடக்கியதே ஆகும். இவ்வாறுதான் இந்துத்துவா சக்திகளுக்கும் பெரும் கார்ப்பரேட்களுக்கும் இடையேயான நலன்களின் சங்கமம் நிகழ்கிறது.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு பெரும் கார்ப்பரேட்கள் நேரடியாக உதவிய வகையில் இது வியத்தகு முறையில் வெளிப்படுகிறது. ஆர் எஸ் எஸ் ஸின் தலைமையகமான நாக்பூரில் ஆண்டுதோறும் நடைபெறும் விஜயதசமி பேரணியில் பெருமுதலாளிகள் தவறாது கலந்து கொள்கின்றனர். மோடி அரசின் பாஜக-ஆர் எஸ் எஸ் ஆட்சியின் கீழ் அம்பானி, அதானிக்கு மட்டுமல்ல; டாடா, மஹிந்திரா மற்றும் இதர பல முக்கிய வணிக நிறுவனங்களுக்கும், கார்ப்பரேட்களுக்கும் ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டதை நாம் கண்டோம். எனவே இது பரஸ்பரம் ஒருவருக்கொருவர் நன்மை பயக்கும் ஒரு கூட்டணியேயாகும்.
இந்துத்துவாவை அரசின் சித்தாந்தமாக மாற்றவும், மதசார்பற்ற – ஜனநாயகக் குடியரசை இந்து ராஷ்ட்ரமாக மாற்றவும் ஆர் எஸ் எஸ் முயல்கிறது என்பதை வலியுறுத்தும் ஆவணத்தின் தாக்கங்கள் என்னவாக இருக்கும்?
ஆர் எஸ் எஸ் ஸின் குறிக்கோள் எப்போதும் தெளிவாகவே உள்ளது. இந்து ராஷ்ட்ரம் என்ற இலக்கை நோக்கிச் செல்வது; அதை நிறுவுவது என்பதே அதன் இலக்கு ஆகும். சமீபத்தில்கூட, ஆர் எஸ் எஸ்ஸின் வலிமை மிக்க பெரும் தலைவரும் சர்சங்சாலக் என்று அழைக்கப்படுபவருமான மோகன் பகவத், ஆர் எஸ் எஸ் செய்தித்தாளான ஆர்கனைசருக்கு அளித்த பேட்டியில், ஆர் எஸ் எஸ்ஸின் முன்னாள் தலைவரான பாலாசாகேப் தியோரஸ் ஒரு முறை கூறியிருந்ததை மேற்கோள் காட்டினார்: “இந்துஸ்தான் என்பது ஒரு இந்து ராஷ்ட்ரம்தான்! இதைத் தவிர சங்கத்தில் உள்ள மற்ற அனைத்தும் காலப்போக்கில் மாறுதலுக்கு உரியவையே ஆகும்.” அவர் மேலும் கூறுகையில், “ இந்த அடிநாதத்தைத் தொடர்ந்து கைக்கொண்டபடியே மற்றவை அனைத்தும் செய்யப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
எனவே, மற்ற அனைத்து மத, சமூக, கலாச்சார குழுக்களையும் ஒதுக்கி வைக்கும் ஒரு பாசிச வகைப்பட்ட கருத்தாக்கமான இந்த இந்து ராஷ்ட்ரத்தைத்தான் அது திணிக்க முயல்கிறது. இந்துத்துவாவை அரசின் சித்தாந்தமாக ஆக்குவதே ஆர் எஸ் எஸ்ஸின் நோக்கமாகும். அதற்கு (இப்போதிருக்கும்) மதசார்பற்ற- ஜனநாயகக் குடியரசு தகர்க்கப்பட வேண்டும். அத்தகைய மாற்றத்தைக் கொண்டுவருவதற்கான படிப்படியான முயற்சிகளைத்தான் நாம் இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
தற்போதைய ஆட்சியில், கருத்தியல் ரீதியாகவும், அமைப்பு ரீதியாகவும் ஆர் எஸ் எஸ்ஸின் பங்கு மற்றும் செல்வாக்கு எவ்வாறாக உள்ளது?
தற்போது மத்தியில் ஆளும் கட்சியான பாஜகவின் தந்தைவழி அமைப்புதான் ஆர் எஸ் எஸ். அதன் இந்துத்துவா சித்தாந்தத்தையே, அதன் தொப்புள்கொடி உறவான பாஜகவும் தழுவியேற்கிறது. அமைப்பு ரீதியாக, ஓர் அரசியல் கட்சியாக, பாஜக பரந்ததொரு தன்மையைக் கொண்டதாக உள்ளது. எனினும், அதன் அத்தியாவசியமான ஸ்தாபனத் தலைமை என்பது ஆர் எஸ் எஸ் ஊழியர்களின் கைகளிலேயே உள்ளது. உதாரணமாக, பாஜகவின் தேசிய அளவிலான, மாநில அளவிலான அமைப்புச் செயலாளர்கள் ஆர் எஸ் எஸ் ஆல் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அவர்களில் பலரும் ஆர் எஸ் எஸ் பிரச்சாரகர்களே ஆவர். அதாவது ஆர் எஸ் எஸ் ஸின் முழுநேர ஊழியர்கள். அதனால்தான் பாஜகவில் முக்கிய தலைமைப் பதவியில் ஒரே ஒரு முஸ்லீமைக் கூட உங்களால் காண முடியாது.
இடதுசாரிகளும் இதர மதசார்பற்ற – ஜனநாயக சக்திகளும் இந்த கார்ப்பரேட் – இந்துத்துவா கூட்டணியை எவ்வாறு திறம்பட தனிமைப்படுத்தித் தோற்கடிக்க முடியும்?
24வது அகில இந்திய மாநாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்ட அரசியல் தீர்மானத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளபடி, அரசியல், தத்துவார்த்த, பொருளாதார, கலாச்சார தளங்களில் தொடர்ச்சியான போராட்டங்களை மேற்கொள்வதன் மூலம் மோடி அரசையும் இந்துத்துவா- கார்ப்பரேட் கூட்டணியையும் எதிர்த்துப் போராடுவது அவசியமாகும். இந்துத்துவா சக்திகளின் தாக்குதலை எதிர்கொள்ள அனைத்து மதசார்பற்ற, ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைய வேண்டும். பாஜக – ஆர் எஸ் எஸ்-ஐ தேர்தல் மூலம் மட்டுமே தோற்கடித்துவிட முடியும் என்ற மாயையில் நாம் வீழ்ந்துவிடக் கூடாது. இந்தப் போராட்டம் என்பது மிகவும் பெரியது; விரிவானது. இவ்வகையில், இந்துத்துவ வகுப்புவாத சக்திகளுக்கு எதிரான போராட்டத்தையும், நவ தாராளமய, கார்ப்பரேட் ஆதரவுக் கொள்கைகளுக்கு எதிரான போராட்டத்தையும் ஒன்றிணைப்பதை உறுதி செய்வது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொறுப்பாகும்.
தமிழில்: வீ. பா. கணேசன்
You may also like
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
