சோசலிசமும் சமமான வாய்ப்பு எனும் சொல்லாடலும்
ச. லெனின்
இந்திய அரசியல் சாசனத்தின் முகப்புரையில் குறிப்பிடப்பட்டுள்ள சோசலிசம் என்கிற வார்த்தையை நீக்கவேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் கடந்த நவம்பர் மாதம் தீர்ப்பு வழங்கப்பட்டது. அத்தீர்ப்பில், சோசலிசம் எனும் சொல் எந்தத் தத்துவத்தையும் முன்வைத்து, நமது அரசியல் சாசனத்தில் முன்வைக்கப்படவில்லை; அனைத்து குடிமக்களுக்கும், சமமான வாய்ப்புகளை உறுதிப்படுத்தும் சேமநல அரசாக இந்தியா இருக்கும் என்பதை வெளிப்படுத்தும் வகையில்தான் அது குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, அதை அரசியல் சாசனத்தின் முகப்புரையிலிருந்து நீக்கவேண்டியதில்லை என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசியல் சாசனத்தை முற்றாக மாற்றவேண்டும் என்று முழங்கி வரும், இன்றைய வலதுசாரி ஆதிக்கம் நிறைந்தச் சூழலில், சோசலிசம் எனும் வார்த்தையை அரசியல் சாசனத்தில் இருந்து நீக்க முடியாது எனும் இந்த தீர்ப்பு வரவேற்கத் தகுந்ததே. ஆனால், அதோடு சோசலிசம் என்பதன் உள்ளார்ந்த பொருள் சிதைக்கப்பட்டுள்ளது என்பதையும் கவனப்படுத்த வேண்டியுள்ளது.
தீர்ப்பு, சோசலிசம் எனும் அமைப்பின் விளைபொருளாக உள்ள “அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை உத்தரவாதம் செய்தல்’‘ என்பதை தெரிவிக்கிறது. ஆனால், சோசலிசம் எனும் அமைப்பு முறையை மறுப்பதாகவும் அல்லது அதை நிராகரிப்பதாகவும் உள்ளது. சோசலிசம் எனும் அமைப்பின் அடிப்படையில் உற்பத்தி சாதனங்களை பொதுவானதாக மாற்றாமல், அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை உத்தரவாதம் செய்வது சாத்தியமற்றதாகும். மேலும், இன்றைய இந்திய சமூகத்தில், வளங்கள் அனைத்தும் சிலரிடம் குவிவதும், மறுபக்கத்தில் வேலையின்மை, வறுமை, ஊட்டச் சத்தின்மை, கல்வி மறுக்கப்படுதல் எனும் கடும் சூழலில் பெரும்பான்மையான மக்கள் தவிக்கும்போது, அனைவருக்குமான சமமான வாய்ப்பு என்பது வார்த்தை அளவிலானதாகவே இருக்கும்.
அனைவருக்குமான சமமான வாய்ப்பு என்பது சுரண்டல் வர்க்கத்தின் லாப வெறிக்கு நேர் எதிர் நிலை கொண்டதாகும்.
சமமான வாய்ப்பை மறுக்கும் முதலாளித்துவம்
முதலாளித்துவத்திற்கு வேலையற்ற பெரும் பட்டாளம் வெளியில் நிற்பது அவசியமாகும். அப்போதுதான் தொழிலாளர்களின் பேரம் பேசும் உரிமை மட்டுப்படும். அப்போதுதான் குறைந்த கூலிக்கு அவர்களின் உழைப்பை அவர்களால் பெற முடியும். தொழிலாளர்களுக்கு கொடுக்கப்படாத கூலிதான் முதலாளிகளின் லாபம். குறைந்த கூலியும், வேலையற்ற நிலையும், அல்லது கிடைக்கும் முறைசாரா பணிகள் மூலம் பெறப்படும் குறைந்த கூலியின் விளைவாக, கல்வி, சுகாதாரம், உணவு என எதிலும் சமமான வாய்ப்பு இல்லாமல் ஆகிவிடுகிறது. எனவே, வேலையின்மை என்பது சமமான வாய்ப்பு என்பதற்கான முதல் தடையாகிவிடுகிறது.
பாரம்பரிய சொத்துடைமை என்பது சமமான வாய்ப்பிற்கான அடுத்த முக்கியமான தடையாகும். லாபத்தின் மூலம் மிகுந்த செல்வ வளமுடையவர்களின் வாரிசுகள் அடுத்தடுத்த காலங்களுக்கு அனைத்து வாய்ப்புகளையும் தட்டிச்செல்பவர்களாக உள்ளனர். அவர்களுக்கான தேவைகள் எளிதில் நிறைவேற்றப்படுகின்றன. ஆனால், சொத்துடைமையற்ற சாதாரண மக்கள் தங்களுக்கான அடிப்படை தேவைகளைக் கூட ஈடேற்றிக்கொள்ள வதைபடுகின்றனர். முதலாளித்துவ நாடான ஜப்பானில்கூட, பாரம்பரிய சொத்துக்கள் அடுத்தத் தலைமுறையினருக்கு கைமாற்றப்பற்றப்படும்போது, 55 சதவீதம் வரி விதிக்கப்படுக்கிறது. மற்ற பல முதலாளித்துவ நாடுகளிலும் சுமார் 40 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. ஆனால், இந்தியாவில் அப்படியான வரிவிதிப்பே இல்லை. இப்படி இருக்கும்போது, எவ்வாறு அனைவருக்கும் சமமான வாய்ப்பை உருவாக்க முடியும்? மேலும் இந்தியாவில் தனிநபர் செலுத்தும் வரி 22 சதவீதமாகவும் கார்ப்பரேட் கம்பனிகள் செலுத்தும் வரி 17 சதவீதமாகவும் உள்ளபோது அது எப்படி சாத்தியமாகும்?
பாரம்பரிய சொத்துடைமை அதிகாரத்தையும் அதன்கூடவே உறுதிப்படுத்துகிறது. இந்த அதிகாரம் என்பது சமூக, அரசியல் தளங்களில் நீடிக்கிறது. அந்த அதிகாரத்தில் இவர்கள் இருக்கும் பட்சத்தில், தலைமுறை தலைமுறையாக சொத்துடைமையாளர்களின் வாரிசுகளுக்கே அதிகாரமும் கைமாறுகிறது. இதுவும் அனைவருக்குமான சமமான வாய்ப்பிற்கு தடையாக அமைகிறது.
கல்வியும் சுகாதரமும்
வருமானம் சொத்துடைமையில் உள்ள ஏற்றத்தாழ்வு அவர்களின் குழைந்தைகள் பெறும் கல்வியின் தரம் மற்றும் வாய்ப்புகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அனைவருக்குமான அரசு கல்வி நிலையங்கள் முடக்கப்படுவதோடு, கல்வியை தனியார்மயமாக்குதல், தனியார் போட்டித் தேர்வு தயாரிப்பு மையங்கள் என்பது பல்கிப் பெருகி வளர்க்கப்படும் சூழலில், கல்விக்கான சமமான வாய்ப்பும் தடைபடுகிறது. அனைவருக்கும் தரமான இலவச கல்வி என்பது தடுக்கப்படுகிறது. அரசு கல்வி நிலையங்கள் என்பது ஏதுமற்றவர்களின் குழந்தைகளுக்கான தொண்டு நிறுவனம்போல் செயல்பட வைக்கப்படுகிறது.
சுகாதாரம் மற்றும் மருத்துவமும் பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அனைவருக்குமான உயர்தர மருத்துவ சிகிச்சை என்பது தனியார்மயமாக்கலால் முடங்கிப்போய் உள்ளது. கரோனா காலப் படிப்பினைகள் பொதுத்துறை மருத்துவத்தின் அவசியத்தை எடுத்துரைத்தபோதும், ஆளும் வர்க்கத்தின் லாப நோக்கு அதை தடுக்கிறது. அனைவருக்கும் மருத்துவ சிகிச்சை என்பதை மறுத்து, அனைவருக்கும் மருத்துவ காப்பீடு என்று பேசுகிறது. அனைவருக்கும் கட்டணமில்லா உயர்தர சிகிச்சை என்பது அரசு மருத்துவமனைகளில் இருக்குமானால் மருத்துவ காப்பீட்டிற்கான அவசியமே இல்லையே! அரசு மருத்துவமனைகளை கட்டமைப்பதற்கு பதிலாக, அரசே மருத்துவ காப்பீட்டை வழங்குவதும், அரசு மருத்துவமனைகளிலேயே அதை பயன்படுத்துவதும், மருத்துவம் என்றால் பணம் செலுத்தினால் மட்டுமே கிடைக்கும் என்கிற பழக்கத்திற்கு மக்களை கொண்டுவரும் நோக்கம் கொண்டதாகும். இத்தகைய வழிமுறைகள் அனைவருக்கும் மருத்துவம் கிடைப்பதற்கான வாய்ப்பை மறுக்கிறது.
தனியார் சொத்துடைமைக்கு முடிவு
வேலையின்மையின் விளைவாக, வறுமையும் ஊட்டச்சத்தற்ற உணவும் மக்களை வதைக்கிறது. உணவுக்கும் ஊட்டச்சத்துடனான வாழ்விற்குமே இந்த முதலாளித்துவ சுரண்டல் சமூகத்தில் வாய்ப்பில்லாமல் போகிறது. வறுமையும் ஊட்டச்சத்தற்ற உணவும் ஆரோக்கியமற்ற தலைமுறையைதான் வளர்த்தெடுகிறது. இவை அனைத்திற்கும் காரணம் சொத்துடைமை தனியார் கைகளில் இருப்பதுதான். தனியார் சொத்துடைமையை ஒழிக்காமல் அனைவருக்குமான சமமான வாய்ப்புகளை உருவாக்குவது என்பது சாத்தியமில்லை. சோசலிச அமைப்பு முறை இல்லாமல் தனியார் சொத்துடைமைக்கு முடிவும் இல்லை.
“இந்தப் புதிய சமூக அமைப்புமுறை, பரஸ்பரம் போட்டியிட்டுக் கொள்ளும் தனிநபர்களின் கைகளிலிருந்து, தொழில்துறையின் கட்டுப்பாட்டையும், உற்பத்தியின் அனைத்துப் பிரிவுகளையும் எடுத்துக் கொள்ளும். பதிலாக, பொருளுற்பத்தியின் இந்தப் பிரிவுகள் அனைத்தையும் ஒட்டுமொத்த சமுதாயமே நிர்வகிக்கின்ற ஓர் அமைப்புமுறையினை, சமுதாயம் முழுமைக்காகவும், ஒரு பொதுத் திட்டத்தின்படியும், சமுதாயத்தின் உறுப்பினர்கள் அனைவரின் பங்கேற்புடனும் நிறுவும்.
வேறு வகையில் கூறுவதெனில், அது போட்டியை ஒழித்து அதனிடத்தில் ஒத்துழைப்பை நிலைநாட்டும்.
மேலும், தொழில்துறையின் நிர்வாகம் தனிநபர்கள் கையில் இருப்பது, தவிர்க்க முடியாதபடி தனியார் சொத்துடைமைக்கு இட்டுச் செல்கிறது. போட்டி என்பது நடைமுறையில் வெறுமனே, தனியார் சொத்துடைமையாளர்களின் கட்டுப்பாட்டில் தொழில்துறை இருப்பதன் தன்மையும் வடிவமுமே ஆகும். ஆக, போட்டியிலிருந்தும், தொழில்துறையின் தனிநபர் மேலாண்மையிலிருந்தும் தனியார் சொத்துடைமையைப் பிரிக்க முடியாது என்பது இதிலிருந்து புலனாகும். எனவே, தனியார் சொத்துடைமை ஒழிக்கப்பட வேண்டும். அதற்குப் பதிலாக, உற்பத்தி சாதனங்கள் அனைத்தும் பொதுப் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட வேண்டும். உற்பத்திப் பொருட்கள் அனைத்தும் பொது உடன்பாட்டின்படி வினியோகிக்கப்பட வேண்டும். சுருக்கமாக இது ’உற்பத்திப் பொருட்களின் மீதான கூட்டு உடைமை’ என்று அழைக்கப்படுகிறது.
உண்மையில், தனியார் சொத்துடைமை ஒழிப்பு என்பது, ஐயத்துக்கு இடமின்றி, தொழில்துறை வளர்ச்சியின் தவிர்க்க முடியாத விளைவான, ஒட்டுமொத்த சமூக அமைப்புமுறையில் ஏற்படும் புரட்சியை விவரிக்க மிகச் சுருக்கமான, மிகவும் குறிப்பிடத்தக்கதொரு வழிமுறை ஆகும். இந்தக் காரணத்தால்தான், மிகச்சரியாகவே கம்யூனிஸ்டுகள் தங்களின் முதன்மையான கோரிக்கையாகத் தனியார் சொத்துடைமை ஒழிப்பை முன்வைக்கின்றனர்” என்று “கம்யூனிசத்தின் கோட்பாடுகள்” எனும் நூலில் மிகத்தெளிவாக எங்கெல்ஸ் குறிப்பிடுகிறார்.
அத்தகைய அமைப்பு உருவாகாமல் அதன் வெளிப்பாடாக உள்ள அனைவருக்கும் சமமான வாய்ப்பு என்று மட்டும் பேசுவது அர்த்தமற்றதாகிவிடுகிறது. எனினும் அனைவருக்கும் சமமான வாய்ப்பை வழங்கும் நோக்கத்தை கொண்டுள்ளதை குறிக்கும் வகையில்தான் சோசலிசம் எனும் வார்த்தை நமது அரசியல் சாசனத்தில் இடம்பெற்றுள்ளது என்ற தீர்ப்பை நாம் வரவேற்கிறோம். சோசலிசம் குறித்த அனைத்து நகர்வுகளையும் நாம் வரவேற்க வேண்டும். அதன் தொடர்ச்சியாகத்தான் அதன் உண்மையான அர்த்தத்தை விவாதமாக்கி வளர்த்தெடுக்க முடியும்.
சேமநல நடவடிக்கைகள்
சோசலிசம் என்பதை வார்த்தை அளவில் பலநேரங்களில் முதலாளித்துவம் பேசுகிறது. நிர்ப்பந்தங்களின் விளைவாக சில சேமநல நடவடிக்கைகைள அது அமலாக்குகிறது. தனது கோரமான செயல்பாட்டினை மறைப்பதற்கு இதுபோன்ற முகமூடிகளை அது அவ்வப்போது சூட்டிக்கொள்கிறது.
முதலாளித்துவம் முட்டுச்சந்தில் நிற்கிறபோதெல்லாம், அது அரசின் தலையீட்டை கோருகிறது. சேமநல பொருளாதாரம் என்று அதற்கு பெயர் சூட்டிக்கெள்கிறது. இடதுசாரிகள் ஆதரவு அளித்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு (ஒன்று) காலப் பகுதியில் பல மக்கள் நலத் திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. தேசிய கிராமப்புற வேலை உறுதித் திட்டம் அதில் முக்கியமான ஒன்றாகும். இடதுசாரிகளின் அழுத்தம் இல்லாமல் போயிருந்தால் இத்திட்டம் கொண்டுவரப்பட்டிருக்காது. முதலாளிகளுக்கு ஏகப்பட்ட சலுகைகளை அந்த அரசு வழங்குகிறது என்று குற்றச்சாட்டு எழும்போதெல்லாம், தேசிய கிராமப்புற வேலை உறுதி சட்டத்தை காண்பித்து, இதோ பாருங்கள் நாங்கள் மக்கள் நல அரசு என்று கூறிக்கொள்ளும்.
சோசலிசம் என்பது, அனைவருக்கும் வேலை, கல்வி, சுகாதாரம் வழங்குவதோ, பிறப்பு முதல் இறப்பு வரை அவர்களை பார்த்துக்கொள்கிறோம் என்று சொல்கிற சேம நல அரசோ மட்டும் அல்ல. சோசலிசம் என்பது ஒரு மேம்பட்ட சமூக அமைப்பு. அது மனித விடுதலையின் வெளிப்பாடு. மக்களை ஒரு பொருளாக பார்ப்பதை கடந்து, உணர்வுகள் நிறைந்த சக மனிதர்களாக பார்க்கும் உலகமாகும். சுரண்டலற்ற, வர்க்கமற்ற மனித சமூகத்தின் சகாப்தம்.
சோவியத் யூனியனின் தொழிலாளர் நல செயல்பாடுகளின் அமலாக்கம் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. முதலாளித்துவ உலகில் ஏற்பட்ட பொருளாதார பெரு மந்தம் முதலாளித்துவத்தை கலக்கத்தில தள்ளியது. இவற்றை கருத்தில் கொண்டு, முதலாளித்துவ பொருளாதார அறிஞர் கீன்ஸ் சேமநல பொருளாதாரம் என்பதை அறிமுகப்படுத்தினார். முதலாளித்துவ சமூக அமைப்பிலேயே ஒரு மக்கள் நல அரசிற்கான முன்மொழிவுகளை அவர் முன்வைத்தார். தனது சித்தாந்தத்திற்கு முரணான திட்டங்களை முதலாளித்துவம் வெகுகாலத்திற்கு நீட்டிக்காது. இந்த சேமநல திட்டங்களை அவை விரைவில் முடித்துக்கொள்ள எத்தனிக்கும். அந்த நிலையில் மக்களிடம் முதலாளித்துவத்தின் உண்மை முகத்தை தோலுரித்துக் காட்டும் வேலையை மக்கள் இயக்கங்கள் முன்னெடுக்க வேண்டும். இது வெகுமக்களிடையே தனது உரிமைகளுக்கான போராட்ட குணத்தை வளர்த்தெடுக்க உந்துசக்தியாக அமையும்.
மக்களின் போர் குணம்
சோசலிசத்திற்கான அணிதிரட்டலுக்கு சேமநல அரசின் இருத்தல் பயன்படும். பஞ்ச காலங்களில் மக்கள் பட்டினியால் சாகும் நிலையில்கூட, உணவுக் கிடங்குகளிலும், பெரிய பெரிய வர்த்தக நிலையங்களிலும் குவிந்துகிடக்கும் உணவுகளை, ஒன்று திரண்டு போய் எடுக்கும் அளவிற்குகூட போர்க்குணம் அற்றே உயிர்விட்டனர். உயிர்போகும் நிலையிலும் ஆளும் வர்க்கத்தை எதிர்த்து குரல் எழுப்ப திராணியற்றே இருந்தனர். சேமநலத் திட்டங்கள் தொழிலாளர்களின் பேரம் பேசும் உரிமையை அதிகரிக்கும். தொழிலாளர்களின் உறுதிப்பாட்டை உயர்த்தும். உரிமைக்காக போராடும் ஆற்றலை வளர்த்தெடுக்கும்.
சேமநல அரசும் சோசலிசமும் சித்தாந்த அடிப்படையில் வெவ்வேறானதாக இருந்தாலும், இயக்கவியல் புரிதலின்படி ஒன்றோடொன்று தொடர்புடையது என்பதை அறியமுடியும். சோசலிசவாதிகள் சேமநல அரசின் நடவடிக்கைகளை ஆதிரிக்கவேண்டும். சேமநல அரசின் திட்டங்கள் உழைக்கும் மக்களுக்கு சில வாய்ப்பு வசதிகளை தருகிறது என்பதற்காகவோ, அது மனிதத் தன்மையுடன் செயலாற்றும் என்பதற்காகவோ மட்டுமல்லாமல், அது உழைக்கும் மக்களை உறுதியானவர்களாகவும் போராட்ட குணமுடையவர்களாகவும் வளர்த்தெடுக்கும் தன்மை கொண்டது என்பதற்காக அதனை ஆதரிக்க வேண்டும். இடதுசாரிகள் வெறும் சேமநல அரசிற்காக போராடவில்லை; சோசலிசத்திற்காகவே போராடுகின்றனர். சேமநல அரசு, அனைவருக்குமான சமமான வாய்ப்பை வழங்குவது என்கிற நோக்கமும், அடிப்படையில் சோசலிசம் எனும் முழுமையோடு வேறுபட்டதாக இருக்கிறபோதும் இயக்கவியல் பார்வையோடு அணுகும்போது, அது சோசலிச வழித்தடத்திற்கு உதவும் என்பதை கவனத்தில்கொண்டு செயலாற்றிட வேண்டும்.
உதவிய கட்டுரைகள்
- Defining Socialism – Prabhat Patnaik
- Socialism and Welfarism – Prabhat Patnaik
You may also like
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
