தமிழகத் தத்துவ வேர்களும், மாற்றப் போக்குகளும் !
இரா. சிந்தன்
தேவ. பேரின்பன் எழுதியுள்ள “தமிழர் வளர்த்த தத்துவங்கள்” என்ற நூல், அவரது மறைவுக்கு பின் 2014ஆம் ஆண்டில் அச்சாக்கம் பெற்றது. இறுதிக் காலத்தில் அவர் எழுதி முடிக்க முயன்றிருந்த இந்த நூலில், தமிழ்நாட்டு தத்துவங்களின் வேர்களையும், மாற்றப்போக்குகளையும் மார்க்சிய பார்வையில் ஆய்வு செய்துள்ளார்.
இந்திய பொருள் முதல்வாதத்தின் வரலாற்றை மீட்டெடுத்த அறிஞர் தேவி பிரசாத் சட்டோபாத்யாயாவின் தடம் பற்றி, தமிழகத்திலும் அந்தத் தேடலை விரிவாக்கிட வேண்டியுள்ளது. அவ்வகையில் பழந்தமிழர் இலக்கியங்களில் பதிவாகியுள்ள பொருள்முதல்வாத தத்துவங்களைப் பற்றி மார்க்சிய சிந்தனையாளர் நா.வானமாமலை ஆய்வு செய்துள்ளார். அந்த ஆய்வினை மேலும் வளர்த்தெடுக்கிறார் பேரின்பன். இந்த நூல் சுட்டுவதைப் போலவே, “இந்திய வகைப்பட்ட மதவெறி பாசிசமாகிய இந்துத்துவா கொள்கையினை எதிர்கொள்ள” தத்துவ வேர்களையும், மாற்றப் போக்குகளையும் அறிவது அவசியம் ஆகும்.
இந்நூலை, தமிழக தத்துவங்கள் பற்றிய விரிவான பார்வையை வழங்கும் செவ்வியல் நூலாகவே கருத முடியும். எனவே, இக்கட்டுரையில், தமிழக தத்துவங்களின் உருவாக்கம் தொடர்பான கருத்துக்களையும், வரையறுப்புகளையும் கூடுமானவரை பேரின்பனின் வார்த்தைகளின் வழியாகவே காண்போம்.
பழந்தமிழகமும் தத்துவமும்
தமிழக நிலப்பரப்பில் ஆதியில் நிலவிய சமுதாயத்தில், குறிஞ்சி, முல்லை மற்றும் மருதம் ஆகிய திணை நிலங்களும், அதற்கேற்ற உற்பத்தி முறைகளும் நிலவின. திணை கோட்பாட்டை பதிவு செய்திருக்கும் இலக்கண நூலான தொல்காப்பியம், பாகுபாடற்ற நிலையில் அமைந்த தொகுதியாக வாழும் மக்களையே திணை என்ற சொல்லால் குறிக்கிறது.
குறிஞ்சி, முல்லை, மருதம் ஆகிய மூன்று திணைகளின் உற்பத்தி முறைகளும், அருகருகே, அதே சமயம் அவற்றிற்குரிய தனித்தன்மைகளுடன் இயங்கின.
- குறிஞ்சி நில மக்கள் காடுகளில் இனக்குழுவாக வாழ்ந்தார்கள். வேட்டை மற்றும் உணவு சேகரித்தலில் ஈடுபட்டனர். காட்டைத் தீயிட்டுக் கொளுத்தியபின் அதில் தினை, மலை நெல் முதலியவற்றை பயிர் செய்தார்கள். இனக்குழு தலைமையை ஆதாரமாகக் கொண்ட நிர்வாகம் நிலவியது. கிடைப்பதை பகிர்ந்துண்ணும் பண்பு நிலவியது. முடிவுகளை இனக்குழு சபையாக மேற்கொண்டது.
- முல்லை நிலத்தில் கால்நடை மேய்ச்சலும், அதைச் சார்ந்த வேளாண்மையும் நிலவியது. ஆநிரை கவர்தல் மற்றும் மீட்டல் ஆகிய மோதல்கள் நிலவின. இங்கு இனக்குழு நிர்வாகமும், தலைமைக்கு கட்டுப்பட்ட விநியோகமும், வாழ்க்கை முறையும் நிலவியது.
இவ்விரு நிலப் பகுதிகளிலும், வர்க்கங்களோ வர்க்க மோதல்களோ இல்லை. இயற்கையின் சூழலால், உற்பத்தி முறையிலும், உற்பத்திப் பொருட்களை பகிர்ந்துகொள்வதிலும் வேறுபாடுகள் இருந்தன. மேலும், இந்நிலங்களில் பருவநிலைக்கேற்ப பாலைத் தன்மைகள் (வறட்சி) உருவாகின.
- மருத நிலத்தில் வேளாண்மைத் தொழில் நிலவியது. ஆற்றங்கரை நீர்ப்பாசனம் காரணமாக நிலைத்த வாழ்க்கை ஏற்பட்டது. இப்பகுதியில் உழுவோரும், உழுதுவித்து உண்போருமான வர்க்கங்களின் தோற்றம் ஏற்பட்டது. எனவே, வேந்தன் என்ற மன்னன் தலைமையிலான அரசு அமைப்பு செயல்பட்டது. வேளாண்மையால் கிடைத்த உபரியை அரசு பயன்படுத்திக் கொண்டது.
இந்த மருத நிலத்தில்தான் நகர நாகரீகம் உருவானது, வர்த்தகம் உருவாகி வளர்ந்தது. புதிய பொருட்களின் தேவை ஏற்பட்டது. அதற்காக வணிகம் மேலும் வளர்த்தெடுக்கப்பட்டது. வணிகம் வழியாக உலகத் தொடர்பும் கிடைத்தது.
ஓரிடத்தில் தங்கி வாழ்வதையும், உழைப்பு பிரிவினையையும் சாத்தியமாக்கிய மருதநில சமுதாயத்திலேயே மொழிக்கு எழுத்து வடிவமும், இலக்கண ஒழுங்கும் உருவாக்கப்பட்டது. சமூக வாழ்வு மேம்பட்டது, கலை, இலக்கியங்கள் உருவாகின. தத்துவங்கள் உருவாகின. கடந்த காலத்தின் வாய்மொழிப் பாடல்களும், மரபுகளும் தொகுக்கப்பட்டன.
எனவே, சுமார் 1,000 ஆண்டு கால வரலாற்று கட்டத்தில் எழுதப்பட்ட சங்க இலக்கியங்களில் ஆதிக்கால தமிழக வாழ்க்கை என்பது சாராம்சத்தில் மருத நில வாழ்வே ஆகும் என்பதை பேரின்பன் பதிவு செய்கிறார். மருத நில வாழ்க்கை இனக்குழு வாழ்க்கையின் மீதும் செல்வாக்கு செலுத்தியது.
தொன்மங்களும், தத்துவ உருவாக்கமும்
மனிதர்கள் இனக்குழுவாக வாழும்போது தனி மனிதர்களுடைய சிந்தனை தன்னியல்பாகவே குழுவின் சிந்தனையாக இருக்கிறது. எனவே, இனக்குழுதான் சிந்திக்கிறது. இயற்கையின் இயல்புகளை அறிவதற்கான அனுபவக் கண்ணோட்டம் உருவாகிறது. அவை இனக்குழு வாழ்நிலையிலேயே தத்துவமாக வடிவம் பெறாவிடினும், முன்னிலைப் பொருள்முதல்வாதமாக அமைந்து, பொருள் முதல்வாத தத்துவப் பார்வைக்கு அடித்தளம் அமைக்கின்றன.
இனக்குழு வாழ்க்கையில் நம்பிக்கை சார்ந்த தொன்மங்களும் உருவாகின்றன. பழந்தமிழக குடிகளிடம் தாய் தெய்வ நம்பிக்கை (வளமை வழிபாடு), ஆவி நம்பிக்கை (நடுகல் வழிபாடு) மற்றும் இயற்கைச் சீற்றங்களைப் பற்றிய தொன்மப் புனைவுகள் ஆகியவையும் உருவாகின.
உற்பத்தி முறையில் ஏற்படும் மாற்றம் புதிய சமுதாயத்தை உருவாக்குகிறது. இனக்குழுவாக அமைந்த குடிகள் மாற்றமடைகின்றன. அவ்வாறான மாற்றம் நடக்கும் போது, இனக்குழு சிந்தனையும், தொன்ம நம்பிக்கைகளும் சமூக உணர்வில் மேலோங்கி இருப்பது இயல்பானது. உற்பத்தியில் ஏற்படும் உபரியின் காரணமாக உழைப்புப் பிரிவினை உருவாவதுடன், சமுதாயத்தில் உடமை வர்க்கங்களும் உருவாகின்றன. இனக்குழு வாழ்க்கை முறை அழிகிறது. இந்த அழிவால் எழக்கூடிய துயரங்களை சமாதானப்படுத்தவும், புதிதாக எழும் வர்க்க சமுதாயத்திற்கான அடித்தளத்தை நிறுவவும் தத்துவ விளக்கங்களுக்கான தேவையும் எழுகிறது.
ஐரோப்பிய கண்டத்தில் இவ்வாறு எழுந்த சூழ்நிலையில் இனக்குழுக்களின் தொன்ம நம்பிக்கைகளுக்கும் – தத்துவங்களுக்கும் முரண்பாடு ஏற்பட்டது. அங்கே இந்த மோதல் தத்துவங்கள் தனியே இயங்குவதில் முடிந்தது. ஆனால் ஆசிய நாடுகளில் உருவான தத்துவங்கள், இங்கு நிலவிய தொன்மங்களை மறுகட்டமைத்து தன்வயப்படுத்தின.
தமிழின் சங்க இலக்கியங்களிலும் இப்போக்கை சுட்டிக்காட்டும் பேரின்பன், அதில் காணப்படும் தொன்ம மரபுகளை அடையாளப்படுத்துகிறார். அவையாவன; 1) வாய்மொழிப் பாடல்களின் மரபு, 2) சான்றோர் மற்றும் உயர்குடிகளை போற்றும் சமூக உறவு நிலை பற்றிய மரபு, 3) சமணம், பெளத்தம், ஆசீவகம் வழியான எழுத்துவடிவ இலக்கிய மரபு, 4) வேள்விச் சடங்கு மரபு .
இதில் முதல் மூன்று மரபுகளை தமிழகத்தில் வளர்க்கப்பட்ட தத்துவப் பார்வைகள் தன்வயமாக்கிக் கொண்டன. நான்காவதாக கூறப்படும் வேள்விச் சடங்கு மரபானது, வடக்கில் இருந்து இங்கே வந்த பார்ப்பனர்களிடம் நிலவியதாகும். இந்த மரபானது தொடக்க கால தத்துவச் சிந்தனைகளில் தாக்கம் செலுத்தவில்லை என்பதை சுட்டிக்காட்டும் பேரின்பன், பலிச் சடங்குகள், மன்னர்களை அண்டி வாழ்ந்ததால் பெற்றிருந்த சமூக அந்தஸ்து ஆகியவற்றின் அடிப்படையில் அவர்களுக்கென சமுதாயத்தில் இடம் இருந்தது என்பதையும் கூறுகிறார்.
முன்னிலைப் பொருள்முதல்வாதம்
காலத்தால் முந்தைய சங்கப் பாடல்கள், மனித வாழ்க்கையின் இலக்கை பேசும்போது, ‘நிலைத்த வளமான வாழ்க்கைக்கான இன்ப நாட்டத்தை’ வலியுறுத்துகின்றன. அதன் மூலம் தாம் வாழும் உலகத்திலேயே, மேம்பட்ட வாழ்க்கையை முன்வைக்கும் பொருள்முதல்வாதப் பார்வையையே வெளிப்படுத்துகின்றன. சமுதாயத்தில் உருவாகும் வறுமை, பசி, நோய் முதலிய மனிதத் துயரங்களுக்கு இதே பார்வையுடன் தீர்வை முன்வைக்கின்றன. துயரங்களுக்கு சமூக நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டும் என்ற அறமே, சங்க பாடல்களில் முன்வைக்கப்படுகிறது. மேலும் மானுட சமத்துவம் போற்றப்படுகிறது.
மருத நிலத்தில் வர்க்க வேறுபாடுகள் உருவாகியிருந்தன. வர்க்க சமுதாயத்தின் இயல்பு காரணமாக வறுமை/வளமை ஏற்றத்தாழ்வும் உருவானது. எனவே, இந்த நிலைமையை தத்துவப் பார்வையில் விளக்க வேண்டிய தேவை எழுகிறது. சங்க இலக்கியங்கள் செல்வச் சேர்ப்பை கண்டிக்கவில்லை. மாறாக, அன்பும் அறனும் உடைய அப்பாடல்களில் செல்வந்தர்கள் போற்றப்பட்டனர். அழிந்துகொண்டிருந்த இனக்குழுக்கள், குடிவாழ்வில் பின்பற்றிய அறமே இலக்கியங்களால் போற்றப்பட்டது. இனக்குழு வாழ்வில் மூத்தோரையே தலைவராக ஏற்ற நிலைமை மாறி, அறிவுடையோர் அரசுக்கு தலைமையேற்க வேண்டும் என்று கற்றலுக்கு முதன்மை இடம் தரப்பட்டது.
அதே சமயம், வாழ்வின் இன்ப துன்பங்களை விளக்கும் ‘நிலையாமை’ குறித்த இலக்கியங்களும் உருவாகின. ஆனால் அந்த விளக்கங்கள் தொடக்க காலத்தில் கருத்துமுதல்வாத நோக்கில் இல்லை என்பதை தேவ. பேரின்பன் இந்த நூலில் பதிவு செய்கிறார். “நில்லா உலகம் புல்லிய நெறித்தே” எனும் தொல்காப்பிய பாடல், வாழ்வில் நிலையாமைப் பிரச்சனையை பொருள் முதல்வாத நோக்கிலேயே அணுகுவதை எடுத்துக்காட்டுகிறார்.
கொடுமணல் அகழாய்வில் கிடைக்கப்பெற்ற கி.மு 408ஆம் ஆண்டைச் சேர்ந்த திஸ்ஸ என்ற பெளத்த பெயர் பதிக்கப்பட்ட ஓடு கிடைத்துள்ளதை சுட்டிக்காட்டும் பேரின்பன், தத்துவ அமைப்புகள் தமிழ் நிலத்திற்கு வருகை தந்த கி.மு 400 – கி.மு 500 காலகட்டத்தையே தமிழர் தத்துவத்தின் தோற்றுவாயாகக் கொள்ளலாம் என்கிறார். இவ்வாறு, தமிழகத்தில் வளர்க்கப்பட்ட தத்துவ நோக்கு பழந்தமிழக குடிவாழ்வில் வேர்கொண்டிருந்தது. வெளியில் இருந்து வந்து சேர்ந்த தத்துவப் பார்வைகளோடு கைகோர்க்கவும், ஏற்று செழுமைப்படுத்தவும் செய்தது.
இலக்கணத்தில் தத்துவ நோக்கு
இலக்கண நூலான தொல்காப்பியத்திலேயே பழந்தமிழகத்தில் நிலவிய பொருள்முதல்வாதச் சிந்தனைகளை எடுத்துக் காட்டுகிறார் பேரின்பன். இவ்வாறான முயற்சி, பேரின்பனின் தனித்துவமான தேடல் முயற்சியை எடுத்துக் காட்டுகிறது. எழுத்துக்களின் ஆக்கம் பற்றிய தொல்காப்பிய விளக்கத்தை குறிப்பிட்டு, அந்த விளக்கமே பொருள்முதல்வாத தத்துவ நோக்கில் இருப்பதை சுட்டிக்காட்டுகிறார்.
‘கொல்நெஞ்சு, பல், இதழ், நா, மூக்கு, அண்ணம் முதலிய எட்டு வகையான உடல் உறுப்புகளின் நெறிப்படுத்தப்பட்ட ஒலியே எல்லா எழுத்துக்களின் ஆக்கத்திற்கும் காரணம் – (எழுத்து 83)’ என்கிறது தொல்காப்பியத்தின் பாடல். மேலும், எல்லா எழுத்துக்களும் மனித முயற்சியால் பிறப்பதே என்பதுடன், சொல் வகைகளை உயர்திணை மற்றும் அஃறிணை என பிரிக்கும்போது, அறிபவர் உயர்திணையாகவும், அறியப்படும் பொருள் அஃறிணையாகவும் விளக்கம் தருகிறது.
அதேபோல, பொருள்முதல்வாதப் பார்வையில் நின்று ஒருவர் வாழும் சூழலுக்கு ஏற்பவே உணர்வும், ஒழுங்கும் உருவாகின்றன என்பதை தொல்காப்பியத்தின் திணைக் கோட்பாடு வரையறுக்கிறது. திணைக்குரிய நிலமும் பொழுதுமே அதன் முதற்பொருளாகக் கொள்ளப்படுகின்றன. தெய்வம், உணவு, விலங்குகள், மரங்கள், செடிகொடிகள், பறவை, தொழில், யாழ் போன்றவைகளை கருப்பொருளாக முன்வைக்கும் தொல்காப்பியம், நிலத்துக்கும், பொழுதுக்கும் மேம்பட்ட கடவுள் என்று பேசவில்லை. தெய்வம் நிலத்திற்குரியதானது என்ற நம்பிக்கைகளை பதிவு செய்தாலும், கருத்து முதல்வாத தத்துவ நோக்கில் நின்று ஆன்மா, பரம்பொருள் எதையும் பேசவில்லை என்பதை பேரின்பன் சுட்டுகிறார்.
இருப்பினும், சிலர் தொல்காப்பியத்தில் நால்வர்ண அமைப்பு வலியுறுத்தப்படுவதாக கூறி, அதனை வேத மரபுக்கு உட்பட்ட நூலாக விளக்க முற்படுகிறார்கள். அதற்கு ஆதாரமாக அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் ஆகியோரை வரிசைப்படுத்தியுள்ள தொல்காப்பிய பாடலினை முன்வைக்கின்றனர். பேரின்பன் அது உண்மையா என்பதை ஆய்வு நோக்கில் விளக்குகிறார். அந்த ஆய்வில் தொல்காப்பியம் வரிசைப்படுத்தும் நான்கு குடிகள், மருத நிலத்தில் அரசு சார்ந்து இயங்கிய உயர் குடி கூட்டத் தொகுதிகளே என்பது புலப்படுகிறது. இவர்கள் அந்தக் காலத்தின் உடமை வர்க்கங்களாக இருந்ததையும், தொல்காப்பியத்தில் கொல்லர், தச்சர், ஆயர், இழிசனர் முதலிய பல உழைப்பாளர்களும், பாணர், கூத்தர், விறலியர் போன்ற தொல் குடியினரும் பதிவு செய்யப்பட்டுள்ளதை எடுத்துக் காட்டும் பேரின்பன், இவை வர்க்க நிலைகளே என்பதையும், தொல்காப்பியத்தில் பிறப்பின் அடிப்படையில் உயர்வும், தாழ்வும் கற்பிக்கிற வருண படிநிலை (கீதை பாடுவதைப் போல, அவற்றை கடவுளே உருவாக்கி நிலைநாட்டியதாக) இடம்பெறவில்லை என்பதையும் பேரின்பன் நிலைநாட்டுகிறார்.
மூன்று கோட்பாடுகள்
தமிழ் மொழியில் தத்துவ அறிதலானது காட்சிகள், தரிசனங்கள் என்றே அழைக்கப்பட்டது. ஏனெனில், சங்க காலத்தில் நிலவிய தத்துவங்களான பூதவாதம், சாங்கியம் மற்றும் ஆசீவகம் போன்றவை காட்சியையே தமக்கு ஆதாரமாகக் கொண்டிருந்தன. ‘காட்சி’ என்பது ஒரு பொருளின் இயல்பை அறிவது பற்றியது ஆகும். மேலும், சங்க பாடல்களில் இந்த அறிதல் பொறி வழி அறிதல், மனம் வழி அறிதல் என இரு நிலைகளில் விளக்கப்பட்டது.
அறிதலின் ஆறு நிலைகளை தொல்காப்பியம் பாடுகிறது.
“ஒன்றறிவது உற்றறிவதுவே
இரண்டறிவதுவே அதனோடு நாவே
மூன்றறிவதுவே அவற்றோடு மூக்கே
நான்கறிவதுவே அவற்றோடு கண்ணே
ஐந்தறிவதுவே அவற்றோடு செவியே
ஆறறிவதுவே அவற்றோடு மனனே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே.”
இவ்வாறு வகைப்படுத்தும் தொல்காப்பியம், புலன்களின் வழியாக அறிதலின் தொடர்ச்சியாகவே மனிதர்கள் பகுத்து அறிவதை முன்வைக்கிறது. இது, அறிதல் பற்றிய பொருள்முதல்வாத விளக்கமாக அமைந்துள்ளது என்கிறார் பேரின்பன்.
இவ்வாறு தமிழகத்தில் வளர்க்கப்பட்ட பொருள்முதல்வாத தத்துவ இயலின் மூன்று கோட்பாடுகளை வரிசைப்படுத்துகிறார்.
- அணுக்கோட்பாடு (பூத வாதம்)
- வினைக் கோட்பாடு
- ஊழ் கோட்பாடு
அணுக் கோட்பாடு
இயற்கை என்பது பொருட்களால் ஆனது என்ற பூதவாதமே தமிழ் இலக்கியங்கள் பதிவு செய்துள்ள முதல் தத்துவ நிலைப்பாடாகும்.
நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் ஆகிய பொருட்களின் இயக்கமே உலகம் என்கிறது ஒரு தொல்காப்பிய பாடல் (1689). மேலும், ஐம்பூதங்களும் ஒரே தன்மையுடையன அல்ல; அவை வேறுபட்டும், ஒன்றையொன்று சார்ந்தும் இருப்பதே அவற்றின் இயற்கை என்கிறது ஒரு புறப்பாடல்.
தமிழகத்தில் சமண – பெளத்த அணுக் கொள்கைகளும், வணிகத்தின் வளர்ச்சியினால் வந்து சேர்ந்த கிரேக்க-ரோமானிய அணுக் கொள்கைகளும் விவாதிக்கப்பட்டுள்ளன. பூதங்கள் நான்கா அல்லது ஐந்தா என்ற பிரச்சனையும், உயிர் என்பது தனியாக ஒரு பொருளா என்ற விவாதமும் நடந்துவந்தது. அணுக்கள் பிறந்தவையோ, பிறப்பித்தவையோ இல்லை என்பதை ஆசீவகம், சாருவாகம், சமணம் முதலிய பொருள்முதல்வாத தத்துவங்கள் வலியுறுத்துகின்றன.
பொருட்களின் – இயற்கையின் இயக்கத்திற்கும், அவற்றின் சுபாவங்களே காரணம். எந்தவொரு இடத்தில் இருந்தும் கடவுள் எதையும் இயக்குவதில்லை. கடவுள் என்ற ஒன்று இல்லை என சமணர்கள் சுபாவவாதம் என்ற பொருள்முதல்வாதத்தை வளர்த்தெடுத்தனர்.
வினைக் கோட்பாடு
பொருளை அதன் வினையின் மூலமாக அறிதல் என்பது தொல்காப்பியத்தில் வலியுறுத்தப்படுகிறது. வினை என்பதை காலத்தோடும், கருவியோடும் தொடர்புபடுத்தும் தொல்காப்பியம், பெயர்ச் சொல்லுக்கு காலம் கிடையாது என்றது.
வினையே செய்வது செயப்படு பொருளே
நிலனே காலம் கருவி (தொல்காப்பியம் 596)
இந்தப் பாடல் மூலம், தொழில் முதல் நிலையின் மீதுதான் உற்பத்தி அமைகிறது – பயன் விளைகிறது என்ற பொருள்முதல்வாத பார்வை வெளிப்படுகிறது.
இயக்கம்தான் இயற்கையின் சுபாவம் என்று வினையை விளக்குகின்றனர் சமணர்கள். புத்தர், பொருளின் இயல்பை ‘இருப்பதும்’ உருவாவதுமான இயக்கப் போக்கில் காணவேண்டும் என்கிறார்.
ஆனால், மருதநிலத்தின் வர்க்க சமுதாய அமைப்பின் காரணமாக, வினை பற்றிய தத்துவப் பார்வையில் பல்வேறு நெகிழ்வுப் போக்குகள் ஏற்பட்டன. வினை புரிந்தவர் அதன் பலனை அனுபவித்தே ஆக வேண்டும் என்று சமண, பெளத்த தத்துவங்கள் விளக்கம் முன்வைத்தன. அதனை ஆசீவக தத்துவம் ஏற்கவில்லை. நல்வினை செய்தால் தீமை இல்லை என்று அகநானூறு (101) பாடல் குறிப்பிடுகிறது. மேலும் அந்த பாடல் வினைக்கு அறிவு உதவ வேண்டும் என்கிறது. வினை அறத்தோடும், அறிவோடும், அன்போடும் கூடியதாக அமைய வேண்டும் என்கிறார் வள்ளுவர். இவ்வாறு, வினை பற்றிய கோட்பாட்டில் ஏற்பட்ட கருத்துமுதல்வாத திரிபுகளையும் பேரின்பன் சுட்டிக்காட்டுகிறார். இருப்பினும், சங்கப்பாடல்களில் குறிப்பிட்ட வினைக்கான காரணமாக, இறைவனை, ஒரு மேம்பட்ட சக்தியை சுட்டிக்காட்டும் போக்கு அப்போது உருவாகவில்லை.
ஊழ் கோட்பாடு
வினைக் கோட்பாட்டை ஒட்டி, ஊழ் என்ற கோட்பாடும் வளர்க்கப்பட்டது. ஆசீவகர்கள் இதனை வளர்த்தார்கள். ஊழ் கோட்பாட்டின் வளர்ச்சியை தமிழர் தத்துவ இயலில் ஒரு மகத்தான முன்னேற்றம் என்கிறார் பேரின்பன்.
பொதுவாக ‘ஊழ்’ என்பதை கர்மா, பிறவிப்பலன் என்று ஆன்மீக நிலைப்பாட்டிலேயே பலரும் விளக்குகின்றனர். ஆனால் ஊழ் என்பது இயக்கத்தின் கோட்பாடு ஆகும். “உலகம் அணுக்களால் ஆக்கப்பட்டது. அணுக்கள் என்றும் நிலையானவை. அவற்றுக்கு அழிவு இல்லை. புதிய அணுக்கள் தோன்றுவதுமில்லை. பழைய அணுக்கள் கழிவதும் இல்லை. பொருட்களின் உருவாக்கம் அணுக்களின் சேர்க்கையால் நடைபெறுகிறது. அணுக்களின் சேர்க்கைத் தன்மைக்கு ஏற்றார் போல, அவைகளின் தன்மைகள் பொருளுக்கு ஏற்படுகின்றன. மேலும் இந்தப் பொருளின் இயக்கம், அதன் நியதியின் (ஊழ்) படியே நடைபெறும்” எனக் கூறுகின்றனர் ஆசீவகர்கள். இவ்வாறு ஊழ் கோட்பாடு பொருள் இயக்கத்தின் உள்ளார்ந்த போக்கை வலியுறுத்துகிறது.
“பழையன கழிதலும், புதியன புகுதலும் வழுவல;
காலவகையினானே” (462) என்கிறது நன்னூல்.
திருக்குறளில் இந்த ஊழ் கோட்பாடு மேலும் வளர்த்தெடுக்கப்படுகிறது, ‘ஆகூழ் (ஆகிவரும் ஊழ்), போகூழ் (போகின்ற ஊழ்) என்று ஊழினை இரண்டாக பிரிக்கிறது என்பதை எடுத்துக்காட்டும் பேரின்பன், ஊழ் என்ற சொல்லுக்கு மலர்தல் மற்றும் உதிர்தல் என இரண்டு பொருட்கள் உள்ளன, அந்தச் சொல்லே மலர்வதே உதிர்வது, உதிர்வதே மலர்வது என்பதை உணர்த்துகிறது என்கிறார். பொருள் இயக்கத்தின் நியதியில், ஆகூழ் மற்றும் போகூழ் இரண்டும் இணைந்தே வருகிறது என்பதைத்தான் நிலை மறுத்தலின் நிலை மறுத்தல் என்ற இயக்கவியல் விதியை நோக்கிய வளர்ச்சியாக – மகத்தான முன்னேற்றமாக குறிப்பிடுகிறார் பேரின்பன்.
வணிகத் தடங்களும் தத்துவமும்
மருதநிலத்தில் உருவான வேளாண்மையின் உபரி, வணிகத்தை வளர்த்ததை ஏற்கனவே குறிப்பிட்டோம். இவ்வாறான வளர்ச்சிப் போக்கில் புதிய பொருட்களுக்கான தேவை உருவாகியது. இதன் காரணமாகவே வணிகம் விரிவடைந்தது.
தமிழகத்தின் நீண்ட கடல் எல்லையாக அமைந்துள்ள நெய்தல் நிலம் ஒரு தனித்துவமான வளர்ச்சிப் போக்கிற்கு காரணமாக அமைந்தது. கடல் காற்றுகள் மூலம் நாவாய் செலுத்தி, அதன் மூலம் கிரேக்கத்தின் வணிகர்களோடு தொடர்பு உருவானது. எனவே, இவ்வாறான ஏற்றுமதி வருவாயைச் சார்ந்த அரசுகள் (தமிழகத்தின் தனித்துவமான வளர்ச்சிப் போக்காக) முல்லை நிலத்தில் உருவாகின.
இரும்பு, தாதுப் பொருட்கள், விலை உயர்ந்த கற்கள், தங்கம் போன்ற இயற்கை ஆதாரங்களே ஏற்றுமதி செய்யப்பட்டன. மருதநில வேளாண்மை வளர்ச்சியை ஒட்டி உள்நாட்டுத் தேவை அதிகரித்தது. எனவே இயற்கை வள ஆதாரங்களுக்காகவும், வணிகத் தடங்களுக்காகவும் வேந்தர்களுக்கு இடையே மோதலும், போர்களும் உருவாகின. போரில் மோதிக் கொண்ட மருத நில அரசுகளும், முல்லை நில அரசுகளும் வெற்றிக்குப் பின் வேளாண் பிரதேசங்களை வணிகத் தடத்துடன் இணைப்பது நடந்தது. இனக்குழு வாழ்க்கை நிலவிய குறிஞ்சி நிலத்திலும், முல்லை நிலத்திலும் வள ஆதாரங்களை அரசுகள் கைப்பற்றியதால், இனக்குழுக்கள் வாழ்வதற்கே போராடும் நிலை ஏற்பட்டது. இந்தக் காலகட்டத்தில்தான் தமிழ் இலக்கியங்கள் ‘நிலையாமையை’ விளக்கின, ஈகை, கொடை போன்ற கருத்தாக்கங்களும் தத்துவத் தளத்தில் விவாதங்களை உருவாக்கியது.
“தேய்தல் உண்மையும் பெருகல் உண்மையும்
மாய்தல் உண்மையும் பிறத்தல் உண்மையும்
அறியாதோரையும் அறியக்காட்டி” புறம் 21
என்ற புறப்பாடல் நிலவும் உண்மையின் இரு எதிரெதிர் நிலைகளைப் பேசுகிறது.
முல்லை நிலத்தில் உருவான ஏற்றுமதி சார்ந்த தனித்துவமான அரசுகள் பற்றி பேரின்பன் குறிப்பிடுகிறார். எனினும் அதுபற்றி கூடுதல் விவரிப்பை அவர் மேற்கொள்ளவில்லை என்பது ஒரு குறையே. எனினும் கிரேக்கத்தின் அயோனியா என்ற பகுதியோடும் (யவனர்கள்), வடக்கே மெளரியத்தோடும் கிடைக்கப்பற்ற வணிகத் தொடர்புகள் தத்துவவியலையும், பண்பாட்டையும் வலிமைப்படுத்தியதை விவரித்துள்ளார்.
கிரேக்கத்தின் கிழக்கு கடற்கரையில் அமைந்த பகுதி அயோனியா. இங்கு செயல்பட்ட தத்துவ ஞானிகள் கடவுள் கொள்கையை நிராகரித்தவர்கள். பிரபஞ்சத்தின் இயற்கையை முதன்மைப்படுத்தியவர்கள். அவர்களின் அணுக்கொள்கை தமிழ்நாட்டிற்கு வந்தது. விவாதிக்கப்பட்டது. சமணம் – பெளத்தம், ஆசிவாகம் ஆகியவை தத்துவங்களாக இங்கு வந்திருந்த போதிலும், வணிகத் தடங்கள் உருவானதை ஒட்டி, அவை சமயங்களாக நிலைபெறத் தொடங்கின.
சமண – பெளத்த ஆசீவக சமயங்கள் துன்ப வாழ்வில் இருந்து விடுபட துறவை வலியுறுத்தின. செல்வம் ஏழைகளுக்கும், தேவைப்படுவோருக்கும் பயன்பட வேண்டும் – துன்பங்களுக்கு தீர்வு காணப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தின. சங்ககால வாழ்வின் அடிப்படைச் சமூக அலகுகளாக இருந்த திணை வாழ்வும், நகர எழுச்சியும் கி.பி இரண்டாம் நூற்றாண்டுக்கு பிறகு வீழ்ச்சியைக் கண்டன. சமண – பெளத்த சமயங்களில் வழிபாட்டுக்குரிய மாற்றங்கள் ஏற்பட்டன. அவை புத்தரையும், தீர்த்தங்கரர்களையும் வழிபடத் தொடங்கின.
திருக்குறளின் தத்துவம்
களப்பிரர் காலத்தில் (கி.பி 3 ஆம் நூற்றாண்டு) வேளாண்மையே வாழ்வுக்கு ஆதரமான தொழிலாக மாறியது. இதனால் எழுந்த பூசல்களை எதிர்கொள்ள வேண்டிய இளம் பருவ அரசு தோன்றியது. தாய்வழிச் சமூகம் அழிந்து, தந்தை வழிச் சமூகம் மேலாண்மை பெற்றது. எனவே, “புதிய சமூக முரண்களுக்கு தத்துவ விளக்கம் கொடுக்கவும், வர்க்க சமூகத்தின் வாழ்க்கை முறையில் லட்சிய இலக்குகளை முன்வைக்கவும், திருக்குறள் முயற்சிக்கிறது. திருக்குறள், ஆணாதிக்க குடும்ப நெறிகளை முன்வைக்கிறது. அதே சமயம், சமுதாய வாழ்க்கையில் முன்வைக்கப்படும் இலட்சியங்கள் ஆதிப் பொதுமை குறித்தானவை. தொல்குடி சமூகத்தின் பண்புகளை புதுப்பிக்கும் நோக்கம் கொண்டவை” என்கிறார் பேரின்பன்.
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்றும், “பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புக” என்றும் வள்ளுவம் உரைப்பது – அழிந்துவந்த குடிவாழ்க்கையின் குரலாகும். கொடுங்கோல் ஆட்சி நடத்தி மக்களை ஆற்றாது அழச் செய்தால், அதுவே மன்னனை அழித்துவிடும் வள்ளுவர் எச்சரிக்கிறார். அரசன் எனப்படுவோன் குடிகளின் காவலனாக இருக்க வேண்டும் என்கிறார். வர்க்க சமூகத்தின் மீது விமர்சனத்தை முன்வைக்கும் திருக்குறள், அதனை தூக்கியெறியச் சொல்லவில்லை. தீவினையற்ற வாழ்வே அறவாழ்வு என்கிறது. மனிதர்கள் முயன்றால், ஊழையும் உப்பக்கம் காண்பர் என்பதன் மூலம், இயக்கத்தின் போக்கையும், இயற்கையின் இயல்பையும் மனித முயற்சியால் வசப்படுத்திக் கொள்ள முடியும் என்கிறது.
திருக்குறளின் தத்துவம் பற்றிய விசாரணையில் ஈடுபட்டு, மாற்றத்திற்கும், உயர்வுக்கும் எண்ணத்தை, சிந்தனையை தொடக்கப் புள்ளியாக முன்வைக்கும் திருக்குறளின் ‘அகநிலை கருத்துமுதல்வாதப்’ பார்வையை எடுத்துக் காட்டுகிறார் பேரின்பன். இவ்வாறு இயக்கத்தின் தொடக்கமாக மனதைக் காணும் அவரின் கருத்துகள், பெளத்தம் முன்வைக்கும் அக போதனை என்பதிலிருந்து எழுகின்றன. இவ்வாறு கருத்துமுதல்வாதத்தை முன்வைக்கும் திருக்குறள், அசோகரின் காலத்துக்கு பின் சுமார் ஐந்து நூற்றாண்டுகள் கழித்து எழுதப்பட்டது. அதே சமயம், குறளானது அர்த்த சாஸ்திரத்தையோ, ஸ்மிருதிகளையோ ஏற்கவில்லை. குடி வாழ்வின் திணைக் கடவுள்கள் எதையும் போற்றாத திருக்குறள், தெய்வங்களுக்கு மேலானது அறம் என்றே போதித்தது.
இவ்வாறாக, பழந்தமிழகத்தில் இனக்குழு வாழ்க்கையில் உருவான முன்னிலைப் பொருள்முதல்வாதப் பார்வை, இங்கு உருவான தத்துவங்களில் தாக்கம் செலுத்தியதையும். சுமார் 1,500 ஆண்டுகள் இங்கே பொருள்முதல்வாத தத்துவ நோக்கே மக்களால் வளப்படுத்தப் பட்டிருப்பதையும், சங்க இலக்கிய ஆதாரங்கள் மற்றும் வரலாற்று உண்மைகளின் துணையோடு படம்பிடிக்கிறது இந்த நூல். வடக்கே நிலைபெற்றிருந்த வேத மதம் இங்கே வெறும் சடங்கு நிலையில் நிறுத்தப்பட்ட அதே காலத்தில், வைதீகத்தை எதிர்த்து உருவாகிய சிந்தனைகள் இங்கே வரவேற்கப்பட்டதற்கு பொருள்முதல்வாத சிந்தனை மேலோங்கியிருந்த சூழலே காரணம் என்பதை இந்த நூல் நிறுவுகிறது. பிற்காலத்தில், தமிழகத்தில், அரசர்களின் துணையோடு, வைதீகம் வளர்க்கப்பட்டதன் பொருளியல் அடித்தளம் என்ன?, அவ்வாறான சூழலில் பொருள்முதல்வாத தத்துவங்கள் அதை எவ்வாறு எதிர்கொண்டு போராடின என்பதை அடுத்த கட்டுரையில் காண்போம்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
