தமிழக தத்துவ சிந்தனை: தொடக்ககாலபொருள்முதல்வாதம்
என். குணசேகரன்
(மறைந்த பேராசிரியர் நா. வானமாமலை அவர்கள் “பழந்தமிழ் இலக்கியத்தில் பொருள் முதல்வாத கருத்துக்கள்” என்ற ஆங்கில ஆராய்ச்சி கட்டுரையை சோசியல் சயின்டிஸ்ட் இதழில் எழுதினார். 1973ஆம் ஆண்டு வெளிவந்த இந்த மிக முக்கிய பங்களிப்பின் அரை நூற்றாண்டு நிறைவு பெற்றதையொட்டி ஒரு நினைவுக் கட்டுரை – ஆசிரியர்)
பொருட்களால் ஆன உலகம், இயற்கை, பிரபஞ்சம் போன்றவற்றுக்கும் மனித சிந்தனைக்கும் இடையிலான தொடர்பை விளக்குவதே தத்துவம் ஆகும்.
பொருள்தான் முதன்மையானது; அதன் பிரதிபலிப்பே சிந்தனை என்ற பார்வை பொருள்முதல்வாதம். சிந்தனைதான் முதன்மையானது; அதன் படைப்புதான் பொருள் என்பது கருத்துமுதல்வாத பார்வை. தத்துவ தளத்தில் இந்த இரண்டிற்குமான போராட்டம் எல்லா காலங்களிலும் நடந்து வருகிறது. கருத்து முதல்வாதம் எப்போதுமே உடைமை வர்க்கங்களின் நலனைப் பாதுகாக்கும் சிந்தனையாக இருந்து வந்துள்ளது. மாறாக, பொருள்முதல்வாதம் உழைக்கும் வர்க்கங்களின் நலன் சார்ந்து பேசுகிற தத்துவப் பார்வையாக இருந்து வருகிறது. இது தத்துவம் பற்றிய மார்க்சிய வரையறை.
இந்த விளக்கத்தின் அடிப்படையில் பார்த்தால், தமிழகத்தில் தொன்று தொட்ட காலம் முதலே தத்துவ சிந்தனைகள் நீடித்து வந்துள்ளன என்பதை அறிய முடியும். தொன்மைக்காலம் தொட்டு உற்பத்தி மற்றும் சிந்தனை வளர்ச்சியின் ஊடாக, தத்துவ சிந்தனையும் இருந்து வந்துள்ளது. எனவே தமிழக சிந்தனையில் தத்துவம் உள்ளதா, இல்லையா என்று கேட்பதை விடவும், தமிழக தத்துவ சிந்தனையில் கருத்து முதல்வாதம், பொருள் முதல்வாதம் இரண்டும் எவ்வாறு இடம்பெற்று வந்தன என்ற கேள்விதான் முக்கியமானது.
இதில் பொருள்முதல்வாத சிந்தனைகளைப் பற்றி பெரிதாக அக்கறை கொள்ளாத போக்கு அறிவுத்துறையினரிடம் இருந்து வந்துள்ளது. பண்டைய பொருள் முதல்வாதிகளின் சிந்தனைகள் மறைக்கப்பட்டுள்ளன. அவர்களது எழுத்துக்களும் கூட அழிக்கப்பட்டுள்ளன. இது இந்தியப் பொருள் முதல்வாதத்தை கண்டறிவதில் இப்பிரச்சனை ஒரு நீடித்த பிரச்சனையாக இருந்து வந்துள்ளது.
பண்டைய பொருள்முதல்வாத ஆய்வுகள்:
பொருள்முதல்வாதிகளின் நேரடியான படைப்புகள் ஏதும் இல்லாத நிலையில், அவற்றை அறிந்துகொள்வதற்கு ஆய்வாளர்கள் வேறு வழிமுறைகளை பின்பற்றினர். பொருள் முதல்வாதிகளின் கருத்துக்களை எதிர்த்து எழுதிய அவர்களது எதிரிகளின் எழுத்துக்களிலிருந்து பொருள்முதல்வாதத்தை மறுகட்டமைப்பு செய்தனர். இந்த பணி மகத்தானது.
தேவி பிரசாத் சட்டோபாத்யாயா போன்ற மார்க்சியர்கள் இந்த வழிமுறையில் இந்திய பொருள்முதல்வாத கருத்துக்களை மறுகட்டமைப்பு செய்துள்ளனர். இதன் மூலம் அவர்கள் இந்திய பொருள்முதல்வாத சிந்தனை வளத்தை வெளிக் கொணர்ந்தனர். மார்க்சியர்கள் அல்லாத தட்சிண நாராயண சாஸ்திரி,சக்கரவர்த்தி நயினார் போன்றவர்களும் சமஸ்கிருத ஆதாரங்களில் இருந்து பொருள் முதல்வாத சிந்தனையை வெளிக்கொணர முயற்சித்துள்ளனர். பிரதானமாக, அத்வைதம் பற்றிய விளக்க உரைகள், சமண, பௌத்த, நியாய, வைசேஷிக நூல்களிலிருந்து பொருள்முதல்வாதத்தை கட்டமைக்க அவர்கள் முயற்சித்துள்ளனர்.
உழைக்கும் வர்க்கத்தின் தத்துவப் பார்வையே பொருள்முதல்வாத கண்ணோட்டம். எனவே, அதன் இந்திய பாரம்பரியத்தை வெளிக்கொணர வாழ்நாளை தியாகம் செய்தவர் தேவி பிரசாத் சட்டோபாத்யாயா. “லோகாயதம்” போன்ற பல நூல்களை அவர் எழுதினார். இதற்காக இந்திய பாட்டாளி வர்க்க இயக்கம் என்றென்றும் அவருக்கு நன்றிக் கடன்பட்டுள்ளது.
அவரைத் தொடர்ந்தும் அவரது பாதையில் பலர் முயற்சித்துள்ளனர். 1970களில் நா. வானமாமலை போன்றவர்கள் முன்முயற்சி மேற்கொண்டனர். அவர்களது போற்றத்தக்க பணியை பின் தொடர தமிழக அறிவுத்துறையினர் முன்வரவில்லை.
வட இந்தியாவில் தொன்மையான பல ஆதாரங்களை ஆய்வு செய்து, பொருள் முதல்வாத பாரம்பரியத்தை வெளிக்கொண்டு வந்தது போன்று தமிழகத்தின் தொன்மையான ஆதாரங்களை வெளிக்கொணர்ந்து ஆராயப்படவில்லை. தற்போது கீழடி போன்ற பகுதிகளில் அகழாய்வுகள் முன்னேறி வரும் நிலையில் இதில் தொடர் ஆராய்ச்சி தேவைப்படுகிறது.
பேராசிரியர் நா.வா. முன்னெடுப்பு
நா. வானமாமலை போன்றவர்களின் எழுத்துக்கள், மீண்டும் பேசுபொருளாக வேண்டும். அவற்றை மீண்டும் உழைக்கும் மக்கள் சிந்தனையில் கொண்டு செல்வது பாட்டாளி வர்க்க இயக்கத்தின் கடமை. இன்றைய இந்துத்துவா சூழலில் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக திகழ்கிறது.
பேராசிரியர் நா. வானமாமலை அவர்கள் “பழந்தமிழ் இலக்கியத்தில் பொருள் முதல்வாத கருத்துக்கள்” என்ற நீண்ட கட்டுரை எழுதியுள்ளார். (“தமிழர் பண்பாடும்,தத்துவமும்”, கட்டுரை தொகுப்பு; என்.சி. பி. ஹெச். நிறுவன வெளியீடு; 1978). முன்னதாக,1973ஆம் ஆண்டு சோசியல் சயின்டிஸ்ட் ஆங்கில இதழில் இந்தக் கட்டுரையை பேராசிரியர் நா. வானமாமலை எழுதியுள்ளார்.
“பழந்தமிழ் இலக்கியத்தில் பொருள் முதல்வாத கருத்துக்கள்” என்ற கட்டுரையில் கி.மு 2 ஆம் நூற்றாண்டு முதல் தொடங்கி கி.பி 3 ஆம் நூற்றாண்டு வரையுள்ள காலத்தில் உருவான தமிழ் இலக்கிய நூல்களில் காணப்படும் தத்துவக் கருத்துக்களை அவர் ஆராய்ந்துள்ளார்.
இந்த தமிழ் இலக்கியங்களில் உள்ள சான்றுகளை வைத்து புறநானூறு, பத்துப்பாட்டு நூல்களில் உள்ள உலகியல் கருத்துக்களைக் கொண்டு அன்றைய சமூகத்தின் பொருள்முதல்வாத சிந்தனை பற்றிய விளக்கங்களை தருகிறார் நா.வா.
மணிமேகலை, நீலகேசி போன்ற பௌத்த, சமண சமய நூல்களில் பொருள் முதல்வாத கருத்துக்களை எதிர்த்து பல கருத்துக்கள் சொல்லப்படுகின்றன. பௌத்த, சமண நிலைப்பாடுகளை உயர்த்திப் பேசுவதற்கு பொருள் முதல்வாதத்தை விமர்சித்த கருத்துக்கள் இந்த நூல்களில் முன்வைக்கப்படுகின்றன. பேராசிரியர் நா.வா. அவற்றை ஆராய்ந்து தொகுத்துள்ளார். அதன் மூலம் பொருள் முதல்வாதக் கருத்துக்களின் தாக்கமும் செல்வாக்கும் பண்டைத் தமிழர்களிடையே இருந்துள்ளன என்பதை பதிவு செய்துள்ளார்.
நீலகேசிக்கு முன்னுரை எழுதிய பேராசிரியர் சக்கரவர்த்தி நயினார் பூதவாதம் அன்றைய சூழலில் செல்வாக்கு பெற்றிருந்தது என்பதற்கு ஒரு சான்றினை அளிக்கின்றார். கி.மு ஆறாவது நூற்றாண்டிலேயே தென்னிந்தியாவில் பூதவாதம் கற்கத் தகுந்த மதிப்புடைய தத்துவமாக இருந்தது என்பதை விளக்குகிறார். அத்துடன், பூதவாதத்தை கற்பதற்காக, வட இந்தியாவிலிருந்து தத்துவத்தை பயில்கிற அறிஞர்கள் வந்தார்கள் என்ற செய்தியும் அதில் சொல்லப்படுகிறது.
தென்னிந்தியாவில் நிலவிய தத்துவங்களில் தொன்மையானது பொருள் முதல்வாதம் என்பதற்கு சமஸ்கிருத நூல்களில் இருந்து கிடைத்த சான்றுகள்தான் அடிப்படையாக உள்ளன. இந்த முடிவினை பதிவு செய்துள்ள தட்சிண நாராயண சாஸ்திரி, சக்ரவர்த்தி நயினார் ஆகிய இருவரும் தமிழக இலக்கிய சான்றுகளை ஆராய்ந்திடவில்லை.
சங்க இலக்கியங்களில் புறநானூறு பண்டைய தமிழரின் வாழ்க்கை பற்றிய கருத்துக்களை பேசுகிறபோது பொருள் முதல்வாத நிலைகள் தென்படுகின்றன. இந்த நூலின் காலம் “இனக்குழுக்கள் அழிந்து நிலவுடைமை தோன்றிய காலம்” என்று பேராசிரியர் நா.வா. வரையறுக்கிறார்.
சங்க இலக்கிய பாடல்கள் இயற்றப்பட்ட 500 ஆண்டுகள் வேட்டையாடுகிற, ஆடு, மாடு மேய்க்கும் இனக்குழு வாழ்க்கை அழிந்து கொண்டிருக்கும் காலகட்டமாக இருந்துள்ளது; தனி சொத்துரிமையும் அரசும் தோன்றிய வரலாற்றுக் காலமாக அது இருந்துள்ளது.
அந்த நிலையில், பழைய சமுதாயத்தின் கருத்துக்கள், தத்துவங்கள், குறிக்கோள்கள் புதிய சமுதாயத்தின் சிந்தனைகளோடு முரண்பட்டதாக உள்ளன. இனக்குழு சமுதாயத்தில் சமயம், கடவுள் கருத்துக்கள் இருக்கவில்லை. மாறாக, சடங்குகள் மேற்கொள்ளப்படும் பழக்கமே இருந்தது. ஆனால் நில உடைமை வர்க்க சமுதாயம் தோன்றுகிறபோது, சமயங்கள் நிலைபெறத் துவங்கின. இப்படிப்பட்ட சமுதாய வளர்ச்சியில் உலகாயதம் எனும் சிந்தனையும் அல்லது அதன் துவக்க கட்டமான முன்னிலை உலகாயதம் (proto-materialism) எனப்படும் கருத்துக்களும் நிலவி வந்துள்ளன.
உலகியல் வாழ்க்கை
மனித வாழ்க்கை, எதார்த்தமான பிரச்சனைகளால் ஆனது. அது மாயை அல்ல; எங்கிருந்தோ ஒரு சக்தி எதுவும் வாழ்க்கையை வழிநடத்துவதில்லை. மனிதர்களே அந்த பிரச்சனைகளை தங்களது செயல்களால் தீர்க்க முயல்கின்றனர். இவ்வாறு புற உலக நிகழ்வுகளை அங்கீகரித்து பாடிய பாடல்கள் ஏராளமாக உள்ளன. அவை பொருள் முதல்வாத சிந்தனைகளே.
அது போன்ற பல பாடல்கள் புறநானூற்றில் உள்ளன. அதில் பேரெயில் முறுவலார் என்கிற புலவர், தனது நண்பனான மன்னன் நம்பி நெடுஞ்செழியன் இறந்தபோது பாடிய பாடலை பேராசிரியர் நா.வா. எடுத்துக்காட்டாக முன்வைத்துள்ளார்.
“தொடியுடைய தோள் மணந்தனன்” என்று துவங்கி,
செற்றோரை வழி தபுத்தனன்
நட்டோரை உயர்பு கூறினன்
வலியரென வழிமொழியலன்
மெலியரென மீக்கூலனன்
…………………………………………..
இரந்தோர்க்கு மறுத்தறியலன்
வருபடை எதிர் தங்கினன்
……………………………………………….
மயக்குடைய மொழி விடுத்தனன் …”
இந்தப் பாடலில் மன்னனின் திறன்மிகு செயல்பாடுகள், குணங்களைப் போற்றி புலவர் பாடுகிறார். அந்த மன்னன் நண்பர்களுக்கு உதவினான்; அவனை பாடல்களால் மகிழ்வித்த பாணர், புலவர்களை உணவும் பரிசிலும் கொடுத்து உபசரித்தான்; பகைவர்களோடு வீரத்தோடு போராடியவன்; மனைவியை மகிழ்ச்சியோடு வாழச் செய்தவன். இவ்வாறு செல்கிற அந்த பாடலில் இறைவனைப் பற்றியோ, மேல் உலகு பற்றியோ எந்த செய்தியும் இல்லை. எதார்த்தமான உலகியல் வாழ்க்கை எடுத்துரைக்கப்படுகிறது. எனவே இதில் பொருள் முதல்வாத சிந்தனை தெறிப்பதை மறுப்பதற்கில்லை.
இவ்வாறான மற்றொரு சிந்தனை வெளிப்படுகிற பிசிராந்தையார் எழுதிய ஒரு பாடலையும் பேராசிரியர் நா.வா. எடுத்துக்காட்டாக முன்வைக்கின்றார்.
பூர்வகுடிகள், முதுமை வருவதும், இறப்பு நேரிடுவதும் கவலை ஏற்படுத்தும் பிரச்னைகளாக எதிர்கொண்டனர். அதனால் இளமை மாறாமல் மகிழ்ச்சியோடு வாழ்வதற்கு பல மருந்துகளை தேடி அலைந்தனர். கற்பனையான பல கதைகள் அவர்களிடையே உலவி வந்துள்ளன. இதற்கு நேர் மாறாக, புற வாழ்க்கையே இன்பமான வாழ்க்கைக்கு அடிப்படை என்ற கருத்தோடு பிசிராந்தையார் பாடல் ஒலிக்கிறது.
யாண்டு பலவாக நரையில ஆகுதல்
யங்காகியர் என வினவுதிராயின் …..
என்று துவங்குகிறார் பிசிராந்தையார். அதாவது, வயது முதிர்ந்தவராய் இருந்தும் ஏன் தலை நரைக்கவில்லை என்று கோப்பெருஞ்சோழன் கேட்ட கேள்விக்கு, பதிலாக பல காரணங்களை அடுக்குகிறார் பிசிராந்தையார்.
தமது மனைவி, மக்கள் அறிவுடையோராக உள்ளனர்; அவரது இளையவர்கள் அவர் மனம் போல் நடந்து கொள்வது; அரசன் பலரால் தீங்கு வராமல் காத்து வருவது; தனது ஊரில் நல்லவர்கள் பலர் வாழ்ந்து வருவது போன்ற காரணங்களால் தனது தலை நரைக்காமல் இருப்பதாக முடிக்கிறார் பிசிராந்தையார். இவை அனைத்தும் புறவய காரணங்கள்தான்.
தனது தோற்றம் இளமையாக இருப்பதற்குக் காரணம் ‘ஆண்டவன் அருள்’ என்று இதில் பேசப்படவில்லை. உலகியல் காரணங்களே பேசப்படுகின்றன.
பேராசிரியர் இப்பாடல் பற்றி குறிப்பிடுகிறார்:
“உலகாயதர் கண்ணோட்டத்தை அடிப்படையாக கொண்ட சிந்தனைகள் இவை. தந்திர யோக முயற்சிகளோ, உள்மனத்தை தோண்டுவதோ, அம்ருதத் தாரையை சுவைப்பதோ இன்பத்திற்கான காரணங்கள் அல்ல; உலக வாழ்க்கை அனுபவங்களே இன்பத்திற்கு காரணம்….” என்று இங்கு குறிப்பிடப்படுவதை நா.வா. சுட்டிக் காட்டுகிறார்.
இது போன்ற பாடல்களில் நவீன கால பொருள் முதல்வாத கருத்துக்கள் பேசப்படவில்லை என்பது உண்மைதான். என்றாலும் கூட, ஆரம்ப கால பொருள்முதல்வாதம் அல்லது முன்னிலை பொருள்முதல்வாதம் என்கிற சிந்தனைகள் பரவலாக பேசப்படுகின்றன.
சங்க காலத்திற்குப் பிறகு வந்த புலவர்கள், மன்னனைப் பாடி பரிசில் வாங்கிக்கொள்கிறபோது, தெய்வங்கள் மன்னனைப் பாதுகாத்து அருள் புரிய வேண்டுமென்று வேண்டிக் கொள்வார்கள். ஆனால், புறநானூற்றுப் பாடல்களில் இதுபோன்ற வேண்டுதல்கள் இருப்பதில்லை என்று மற்றோர் எடுத்துக்காட்டையும் பேராசிரியர் நா.வா. வழங்குகிறார்.
முதுகுடுமி பெருவழுதியை புலவர் நன்மாறன் பாராட்டி பாடுகிறபோது “கடற்கரை மணலை போல உனது ஆயுள் நாட்கள் மிகுவதாக” என்று வாழ்த்துகிறார். மற்றொரு பாடலில் “நுரை மீதேறப் பெற்ற அலை பொங்கும் கடலின் மணல் போல் உன் ஆண்டுகள் மிகுவதாக” என்று வாழ்த்துரைக்கிறார்
இந்தப் பாடல்கள், இவ்வுலக வாழ்க்கை உண்மை எனவும், இன்பத்தை இவ்வுலக வாழ்க்கையிலே எட்டலாம் என்ற கண்ணோட்டத்துடன் எழுதப்பட்டுள்ளன. “இனக்குழு உலக கண்ணோட்டத்தின் எச்சமாக முன்னிலை உலகாயத கருத்துக்களைப் புறப்பாடல்களில் காணலாம்” என்று கூறுகிறார் நா.வானமாமலை.
உலகின் தோற்றம் – இயக்கம்
பொருள்முதல்வாத முறையில் முக்கியமானது நம்மைச் சுற்றியுள்ள இயற்கை, பிரபஞ்சம் போன்றவற்றின் தோற்றம் தொடர்பான பிரச்சனை. இவை அனைத்தும் பொருட்களால் ஆனது என்று பேசுவது பொருள் முதல்வாதம்.
ஒரு பொருள்முதல்வாதி பொருளிலிருந்து உலகம் தோன்றியது; பிரபஞ்சம் தோன்றியது; இதற்கு கடவுள், இறை சக்தி எதுவும் காரணம் இல்லை என்று வாதிடுகிறார்.
ஆன்மீக வாதமும், கருத்து முதல்வாதமும் இந்த உலகம், உலக இயக்கம் அனைத்திற்கும் ஆண்டவனே காரணம்; ஆண்டவனால் அனைத்தும் படைக்கப்பட்டது; அனைத்தும் அவனால் இயக்கப்படுகிறது; அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்கிற கருத்துக்களை எல்லாம் கருத்து முதல்வாதம் பேசுகின்றது.
அந்த வகையில் பார்க்கிறபோது, புறநானூற்றுப் பாடல்களில் ஐந்து பூதங்கள் (சடப்பொருள்) பற்றி விவரிக்கப்படுகிறது. நீர், நிலம், வளி (காற்று), ஆகாயம், தீ ஆகியவற்றால் பிரபஞ்சம் உருவானது என்ற சிந்தனை விவரிக்கப்படுகிறது. ஒவ்வொரு பூதத்திற்கும் உள்ள இயற்கையான குணங்களையும் இந்த பாடல்களில் விளக்கப்படுகிறது. புறப்பாடல்களில் உணவிற்கும் ஐம்பூதங்களுக்கும்,உயிருக்கும் உள்ள தொடர்பு பற்றி பல கருத்துக்கள் சொல்லப்படுகின்றன.
ஒரு புலவர் மன்னனிடம் உணவு என்பது இரண்டு பூதங்களின் சேர்க்கை என்றும், அவை நீரும் நிலமும் என்றும், இவ்விரண்டு பூதங்களும் சேருவதற்கு மனித முயற்சி தேவை என்றும் கூறுகிறார். உடல் என்பது உணவின் பிண்டம்; உணவு என்பது நீரும் நிலமும்; நீரும் நிலமும் சேரும் பொழுது உடலும் உயிரும் உண்டாகின்றன. இந்தக் கருத்துக்களில் பொருள் முதல்வாதக் கண்ணோட்டம் இருப்பதை காண முடியும்.
உடலை உணவுதான் உருவாக்குகிறது என்கிற பொருள்முதல்வாதக் கருத்தை சங்க நூல்களில் பரவலாக காணலாம் என்று பேராசிரியர் நா.வா. கூறுகிறார். பஞ்சபூதங்களின் சுபாவம் எனப்படும் இயற்கை குணங்களை அறிந்து கொண்டால், மனிதன் பஞ்சபூதங்களை தனது தேவைக்கேற்ப பயன்படுத்தலாம் என்கிற அறிவியல்பூர்வமான கருத்தும் புறப்பாடல்களில் வருவதை பேராசிரியர் நா.வா. சுட்டிக்காட்டுகிறார்.
சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு அறிவியல் கருத்துக்கள் பேசப்பட்டன என்பதை இப்பாடல்களில் அறிய முடியும். மேலும், மணிமேகலை, நீலகேசி காப்பியங்களின் பூதவாதக் கருத்துக்களை பேராசிரியர் நா. வானமாமலை விளக்குகிறார். தொன்மையான உலகாயத, பூதவாதக் கருத்துக்கள் வளர்ந்து தர்க்கரீதியான சிந்தனை வளர்ந்தது.
பழைய இனக்குழு வாழ்க்கை அழிந்து வரும் நிலையில், புதிய நில உடைமை வாழ்க்கை தோன்றி வளரும் நிலை ஏற்படுகிறது. கூட்டுழைப்பு, கூட்டுணவு உள்ளிட்ட இனக்குழுக்களின் கூட்டு வாழ்க்கை அழிந்து வருகிறது. இதனால் சமூக முரண்கள் தீவிரமடைகிறது. ஏழை, செல்வந்தர் ஏற்றத்தாழ்வு நில உடைமை காலத்தில் தீவிரம் பெறுகிறது. அந்தக் காலகட்டத்தில் பரவியிருந்த பொருள்முதல்வாதம், படிப்படியாக தேய்ந்தது. கருத்து முதல்வாதமும், ஆன்மீகவாதமும் வலுப்பெறுகிற சூழல் வளர்ந்தது.
மார்க்சிய இயக்கவியல் பார்வையோடு இந்த மாற்றங்களை பேராசிரியர் நா.வா. விளக்கியுள்ளார். மறைக்கப்பட்டும், அழிக்கப்பட்டும் வந்துள்ள நமது பொருள் முதல்வாத தத்துவ மரபுதான் அடிமைத்தனத்தாலும், கடும் சாதிய ஒடுக்குமுறை கட்டமைப்பினாலும், அடக்கி ஒடுக்கப்பட்டு வந்துள்ள மக்களின் சிந்தனை மரபாக, தமிழகத்திலும் நீடித்து வந்தது.
அந்த முற்போக்கு பாரம்பரியத்தை வளர்த்தெடுக்க வேண்டும். தமிழக பாட்டாளி வர்க்கங்கள் சுரண்டலிலிருந்து விடுதலை என்கிற இலக்கை நோக்கி பயணப்பட வேண்டுமென்றால், தமிழகத்தின் தொன்மையான பொருள் முதல்வாத பாரம்பரியத்தை புதிய சூழலுக்கு ஏற்றவாறு முன்னெடுக்க வேண்டும்.
You may also like
1 comment
Comments are closed.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

நல்ல முயற்சி, பண்டைய தமிழர்கள் இயற்கையை கூர்ந்து கவணிக்கும் ஆற்றல்
உள்ளவர்கள் என்பதை அறிய முடிகிறது.. ,தமிழக ஆன்மீகவாதிகளே வேத சமய சடங்குகளை
எதிர்த்துள்ளனர் ஹெகல் மாதிரி இயக்க இயலை கண்ட ஆன்மீக வாதிகளாக
இருந்துள்ளனர் அதுபற்றியும் எழுதுவது அவசியம் அதைவிட முக்கிய பிரச்சினை
ஏன் இந்திய த த்துவ போர் அறிவியலை வளர்க்காமல் சனாதன பார்வையை
இன்றுவரை பேணுவதின் மர்மமென்ன? சந்திரயான் ஏவியவர்களே பழமைவாத
த்தை பேணுவதேன்? இது பற்றி எழுதுவது அவசியம் ,