திருநெல்வேலி எழுச்சியில் வ.உ.சி : புரட்சிவானத்தில் ஒரு விடிவெள்ளி !
இரா. சிந்தன்
திருநெல்வேலி எழுச்சியில் வ.உ.சி புரட்சிவானத்தில் ஒரு விடிவெள்ளி!
இரா. சிந்தன்
‘திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சியும் 1908’ என்ற ஆய்வு நூலுக்கு, 2024 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, நூலாசிரியரும் ஆய்வாளருமான ஆ.இரா.வெங்கடாசலபதி, திருநெல்வேலி எழுச்சிக்கான நினைவிடங்களை நெல்லையிலும் தூத்துக்குடியிலும் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
1908 திருநெல்வேலி எழுச்சி, தமிழ்நாட்டின் வரலாற்றில் முத்திரை பதித்த ஏகாதிபத்திய எதிர்ப்புக் கிளர்ச்சியாகும். அந்த எழுச்சிக்கு அடித்தளமாக அமைந்த வரலாற்று நிகழ்வுகள் இன்றும் ஆழ்ந்து கற்க வேண்டியவை. அதன் முழுப் பரிணாமத்தை வெளிக்கொண்டுவருவதில் மிகச் சில ஆய்வாளர்களே ஈடுபட்டுள்ளனர். அதில் ஆ.இரா.வெங்கடாசலபதி தனித்து நிற்கிறார். சுமார் 40 ஆண்டுகளை அவர் இந்த ஆய்வுக்காகச் செலவிட்டுள்ளார்.
எழுச்சியின் போது நடந்தவை
1908 ஆம் ஆண்டு மார்ச் 12 ஆம் தேதி, வியாழக்கிழமை, வ.உ.சிதம்பரனார், சுப்பிரமணிய சிவா மற்றும் பத்மநாபன் ஆகிய மூவர் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் அநியாயமாகக் கைது செய்யப்பட்டனர். இந்தக் கைது நடவடிக்கை தொடர்ந்து கலகம் எழும் என்பது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக இருந்த லியோனெல் மாலிங் விஞ்ச் இதை நன்கு அறிந்தே இந்த நடவடிக்கையை மேற்கொண்டார்.
ஆத்திரமடைந்த மக்கள் கிளர்ந்தெழுந்தனர். நெல்லையிலும் தூத்துக்குடியிலும் மார்ச் 13 ஆம் தேதியும், தச்சநல்லூரில் மார்ச் 14 ஆம் தேதியும் மக்கள் எழுச்சிகள் வெடித்தன. ஆனால், அந்த எழுச்சியின் நிகழ்வுகள் வன்முறையை வழிபடக்கூடிய கும்பல் செயல்பாடாக இல்லை. திரண்டுவந்த மக்கள் வெள்ளையர்களுக்கு எதிராக முழக்கமிட்டனர். அரசின் சொத்துக்களும் கட்டடங்களும் அழிக்கப்பட்டன. காவல்துறையின் அடக்குமுறைக்கு எதிரான கலவீச்சு இருந்தது. வெள்ளையரல்லாத காவலர்களைப் பார்த்து, “நீங்கள் சுதேசியா, இல்லை பரதேசியா?” என்று கேள்வி கேட்கும் அறச்சீற்றம் இருந்தது. குதிரை வண்டிக்காரர்கள், வணிகர்கள், நாவிதர்கள், வண்ணார்கள், தொழிலாளர்கள் என அனைத்துத் தரப்பினரும் சாதி, மத வேறுபாடு ஏதுமின்றி இந்த எழுச்சியில் பங்கேற்றனர்.
அப்போது நெல்லையில் 397 ஐரோப்பியர்கள் மட்டுமே வாழ்ந்தனர். அவர்களில் பெரும்பாலோர் பாளையங்கோட்டையில் வசித்தனர். தூத்துக்குடியில் சிலர் கப்பல்களில் தஞ்சம் புகுந்தனர். ஆனால், ஐரோப்பியர்களைக் குறிவைத்து எந்த வன்முறையும் நடக்கவில்லை.
ஆனால், காலனி ஆட்சியின் காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். ஆறு மாதங்களுக்குத் தண்டக்காவல் படை நிறுத்தப்பட்டது. திமிர் வரி வசூலிக்கப்பட்டது. சமூகத்தில் மத, சாதிப் பிளவுகளை ஏற்படுத்த முயற்சிகள் நடந்தன. இருப்பினும், பிரிட்டிஷ் சதிகளை முறியடித்து, ஏகாதிபத்தியச் சுரண்டலுக்கு எதிரான மக்கள் எழுச்சியாகவே வரலாற்றில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டது ‘1908 திருநெல்வேலி எழுச்சி’.
திருநெல்வேலி எழுச்சியைப் பற்றி மேலும் அறிய, வெங்கடாசலபதியின் நூலைப் படிக்கலாம். இந்தக் கட்டுரையில் திருநெல்வேலி எழுச்சியின் அடித்தளங்களையும், ஏகாதிபத்திய எதிர்வினையின் நோக்கங்களையும் ஆராய்வோம்.
தூக்கம் கலைந்தது
கிழக்கிந்திய கம்பெனி ஆட்சிக் காலத்தில், தமிழ்நிலப்பரப்பில் 1806 ஆம் ஆண்டில் வேலூரில் நடைபெற்ற வெள்ளையர் எதிர்ப்பு எழுச்சி வரலாற்றுச் சிறப்புமிக்கதாகும். ஆனால், பிரிட்டிஷ் பேரரசின் கீழ் வந்த பின்னர், ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வுக்கு வடிவம் கொடுக்க முடியாத நிலையில், ‘தூங்குமூஞ்சி மாகாணம்’ என்ற இழிபுகழுக்கு ஆளாகியிருந்தது மதராஸ் மாகாணம். அதில் திட்டவட்டமான உடைப்பை ஏற்படுத்தியது திருநெல்வேலி. அங்கே என்ன நடந்தது?
- சுதேசி முழக்கம்: சுதேசி முழக்கம் என்பது உள்நாட்டுத் தொழில்களை ஆதரிப்பதையும், சுயச்சார்பையும் வலிமையாக முன்வைத்தது. வங்காளத்தில் உருவான அந்த முழக்கம், மதராஸ் மாகாணத்திலும் வரவேற்கப்பட்டது. ஆனாலும், அதனை நடைமுறைப்படுத்தும் உற்பத்திச் செயல்பாடுகளும் வணிகமும் கண்ணாடி தயாரிப்பு, சோப்பு, மெழுகுவர்த்தி, தீப்பெட்டி ஆகியவற்றோடு நின்றுவிட்டன. வங்கியை உருவாக்கும் முயற்சிகளும் ஒரு இயக்கம் என்ற தன்மையைப் பெறவில்லை. இப்படியான நேரத்தில், சுதேசிப் பிரச்சாரம் திருநெல்வேலியில் ஒரு மக்கள் இயக்கமாக வளர்ந்தது. இந்த அம்சம், திருநெல்வேலி எழுச்சிக்கு முதல் அடித்தளமாக அமைந்தது.
- சுதேசி ஸ்டீம் நேவிகேசன் கம்பெனி: இவ்வாறு இயக்கமாக மாறிய சுதேசிப் பிரச்சாரம், தூத்துக்குடி துறைமுகத்தில் ஒரு புதிய நம்பிக்கையாக மாறியது. அதுதான் சுதேசி ஸ்டீம் நேவிகேசன் கம்பெனி என்ற கப்பல் நிறுவனம். காலனி ஆதிக்கத்தில் இருந்த இந்தியர்கள் தங்கள் வர்த்தகப் போக்குவரத்துக்காகச் சொந்தமாக ஒரு கப்பல் நிறுவனத்தை உருவாக்கிய முதல் முயற்சியாக அது அமைந்தது. பிரிட்டிஷ் மூலதனத்திற்கு சவால் விட்ட சுதேசி மூலதனத்தின் போராட்ட அம்சம், திருநெல்வேலி எழுச்சியின் இரண்டாவது அடித்தளமாகும்.
- தொழிலாளர் போராட்டம்: ஒட்டச் சுரண்டப்பட்டு வந்த தொழிலாளர்களுடைய போராட்டத்தில் சுதேசி இயக்கம் கைகோர்த்த நடவடிக்கை, மூன்றாவதும் மிக முக்கியமானதுமான அம்சமாகும். இந்திய விடுதலை இயக்கத்தை வலுப்படுத்த வேண்டுமானால், அது மக்களிடம் வேரூன்றுவதுடன், மக்கள் சந்தித்துவரும் பிரச்சனைகளுக்குத் தீர்வையும் தர வேண்டும் என்ற தெளிவு அதில் வெளிப்பட்டது. இந்தத் தெளிவு ஏகாதிபத்திய சக்திகளுக்கும், முதலாளித்துவச் சுரண்டல் கூட்டத்திற்கும் அச்சமூட்டி நடுங்கச் செய்தது என்றுதான் சொல்ல வேண்டும்.
1908 ஆம் ஆண்டில், கர்சன் பிரபு கூறியவை இங்கே குறிப்பிடத்தக்கது: “கிளர்ச்சி ஆங்கில முதலாளித்துவம் இந்தியத் தொழில்சக்தி மீது கொண்டிருக்கும் எதேச்சாதிகாரக் கட்டுப்பாட்டிற்கு எதிரானது மட்டுமல்ல; முடிவில் ஆங்கில ஆட்சியையே அழிக்கும் நோக்கம் கொண்டது என்று அதிகார வர்க்கத்தினர் கருதுகிறார்கள்” (அரவிந்தரின் வந்தே மாதரம் இதழ்). எனவே, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் தன்னுடைய ஆட்சிக்கே ஆபத்தாக முடியும் என்று கருதிய எழுச்சிகளை எதிர்பார்த்திருந்தது.
மக்கள் இயக்கமாக மாற்றிய வ.உ.சி.
பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான மனநிலை பற்றி, மாவட்ட ஆட்சியர்கள் அவ்வப்போது அறிக்கை அனுப்பி வைப்பது வழக்கம். மாகாண அரசுக்கு 1906 டிசம்பர் மாதத்தில் அவ்வாறு வந்த அறிக்கைகளில், திருநெல்வேலி மாவட்டத்தில், குறிப்பாக தூத்துக்குடி நகரத்தில், வெள்ளையர் எதிர்ப்பு மேலோங்கியிருப்பதாகக் கூறப்பட்டிருந்தது. அதன் காரணகர்த்தா வ.உ.சிதம்பரனார் என்றே சொல்லலாம்.
தூத்துக்குடி கீழமை நீதிமன்றத்தில் எளிய இரண்டாம் நிலை ப்ளீடராக இருந்த வ.உ.சிதம்பரனார், மக்களிடையே ஆழமான தாக்கம் ஏற்படுத்தும் தனித்துவமான தலைவராகப் பரிணமிக்கத் தொடங்கியபோது, அவரின் வயது 33 மட்டுமே. தேச விடுதலை இயக்கத்தால் ஊக்கம் பெற்ற அவரை மிதவாதிகளின் நடவடிக்கை ஈர்க்கவில்லை. சொற்ப எண்ணிக்கையில் அமர்ந்து கொண்டு, ஒட்டச் சுரண்டிவரும் ஆட்சியாளர்களுக்கு எதிராகத் தீவிர நடவடிக்கைகளே தேவை என்ற நிலையெடுத்தார்.
அவர் தமிழில் அரசியல் சொற்பொழிவுகளைத் தொடங்கினார். அதன் மூலம் வணிகர்கள், நடுத்தர வர்க்கங்களைத் தாண்டி எளிய உழைப்பாளி மக்களை ஈர்க்கத் தொடங்கினார். இந்தப் பொதுக்கூட்டங்கள் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்குச் சவால் விடுவதாக இருந்தது மட்டுமல்லாமல், சுதந்திரமான, பிரதிநிதித்துவ அரசாங்கம் வேண்டும் என்ற கோரிக்கைகள் பேசப்பட்டதாகவும் பிரிட்டிஷ் காவல்துறையின் சி.ஐ.டி ஆவணங்கள் காட்டுகின்றன. இவ்வாறுதான் சுதேசி இயக்கம் ஒரு மக்கள் இயக்கமானது.
சுதேசி இயக்கத்தால் ஊக்கம் பெற்ற பொதுமக்களிடம் வெள்ளையருக்கு எதிரான உணர்வு வளர்ந்தது. குறிப்பாக, 1908 திருநெல்வேலி எழுச்சி நடப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு நிலைமை சூடாகியது. வெள்ளையர்களைக் கண்டாலே பணிவு காட்டிய மக்கள், இப்போது வெறுப்புடன் நோக்கினார்கள். அவர்கள் தம்மை அவமானப்படுத்தவும் சீண்டவும் முற்பட்டார்கள் என்று ஐரோப்பியர்கள் கருதும் நிலைமை உருவாகிவிட்டது.
துறைமுக நகரமாக அமைந்த தூத்துக்குடியில், வணிகப் பேரவை என்ற ஒரு முதலாளிகள் அமைப்பு இருந்தது. அதில் ஐரோப்பியர் அல்லாதோருக்கு அனுமதியும் இல்லை. பிப்ரவரி 24 ஆம் தேதி, 1908 ஆம் ஆண்டில், தூத்துக்குடி வணிகப் பேரவையின் தீர்மானம், கடற்கரையிலும் மற்ற இடங்களிலும் நடக்கும் ராஜ விரோதக் கூட்டங்களில் ஐரோப்பியர்களின் வாழ்க்கைக்கும், சொத்துக்களுக்கும் அச்சுறுத்தல் விடுக்கும் விதத்தில் சுப்பிரமணிய சிவா பேசுவதாகவும், அதை வ.உ.சிதம்பரம் ஆதரிப்பதாகவும் குறிப்பிட்டு, அவ்வாறே ஒரு கடிதத்தை அனுப்பி வைத்தார்கள்.
வெள்ளையர் எதிர்ப்பு என்பது வெறுப்பினால் உருவானதில்லை. ஐரோப்பியர்கள்தான் முதலாளிகளாக இருந்தார்கள். ஆலைகளில் தொழிலாளர்கள் ஒட்டச் சுரண்டப்பட்டார்கள். கப்பல் துறைமுகமும் ஆங்கிலேய முகவர்களின் வசமே இருந்தது. எனவே, வெள்ளையர் என்றாலே அது ஆளும் வர்க்கம், அதிகார வர்க்கம் ஆகும்.
மூலதனத்தோடு உரசிய சுதேசிக் கப்பல்
மக்கள் இயக்கமாக வளர்ந்த சுதேசிப் பிரச்சாரம், திட்டவட்டமான செயல்பாடுகளில் வெளிப்பட்டது. இப்போது வரலாற்றில் ‘கப்பலோட்டிய தமிழராக’ அறியப்படும் வ.உ.சிதம்பரனார், கப்பல் நிறுவனத்தைக் கட்ட முயற்சித்தது மூலதனக் கட்டுப்பாட்டின் மீதான எதிர்வினையே ஆகும்.
வ.உ.சியின் வாக்குமூலம் ஒன்றில் இவ்வாறு கூறுகிறார்: “1906 ஆம் ஆண்டில் தூத்துக்குடியில் சில வணிகர்கள் பி.ஐ (கப்பல்) நிறுவனத்தால் அவமதிக்கப்பட்டார்கள். அவர்கள் தூத்துக்குடி-கொழும்பு இடையில் ஒரு சுதேசி கப்பல் இயக்க வேண்டும் என்று சொன்னார்கள். நானும் அவர்களோடு இணைந்திட கேட்டுக் கொள்ளப்பட்டேன். எனவே, என்னுடைய ப்ளீடர் வேலையை விட்டுவிட்டு, கப்பல்களை வாங்கி 6 மாதங்களுக்கு இயக்கி சேவை வழங்கினோம்.”
பிரிட்டிஷ் பெருமூலதனத்தின் அழுத்தத்திற்கு எதிராக எத்தனித்து வளர்ந்த இந்திய மூலதனத்தின் எதிர்வினையே கப்பல் நிறுவனம் என்பதை இந்த வாக்குமூலம் காட்டுகிறது. சுதேசி இயக்கத்தின் மக்கள் ஆதரவு இந்த நிறுவனத்திற்கு வெகுமக்கள் தளத்தைக் கொடுத்தது.
சுதேசி கப்பல் எதிர்கொண்டு மோதிய பி.ஐ. நிறுவனம் சாதாரணமானதல்ல. அதற்கு உலகம் முழுவதும் 100 கப்பல்கள் சொந்தமாக இருந்தன. ஆண்டுக்கு 6.5 லட்சம் டன் சரக்குகளைக் கையாண்டது. தூத்துக்குடி-கொழும்பு இடையிலான போக்குவரத்தை ஏகபோகமாக மேற்கொண்டு வந்தது. பொருட்கள், தொழிலாளர்கள், அரசாங்கத் தகவல் தொடர்புகள் பி.ஐ. கப்பல்களில் மேற்கொள்ளப்பட்டன. (தூத்துக்குடிக்கு ரயில் இணைப்பு 1875 ஆம் ஆண்டிலேயே வந்திருந்தது.)
1906 அக்டோபர் மாதத்தில் சுதேசி ஸ்டீம் நேவிகேசன் கம்பெனி லிமிடெட் பதிவு பெற்றது. சென்னை, கடலூர், தஞ்சை, மதுரை, சேலம் மாவட்டங்களுக்கும் கொழும்புவுக்கும் பயணம் செய்து முதலீட்டுப் பங்குகளைச் சேர்த்தார் வ.உ.சிதம்பரனார். கடும் முயற்சிக்குப் பின் சுதேசி கப்பல் நிறுவனம் ரூ.10 லட்சம் முதலீட்டைத் திரட்டியது. 40 ஆயிரம் பங்குகளை ரூ.25 மதிப்பில் வாங்கிய தேசப் பற்று மிக்க ஏழைகளும் பணக்காரர்களும் இதனைச் சாத்தியமாக்கினார்கள். காலியா, லாவி என இரண்டு கப்பல்கள் வாங்கப்பட்டன.
கப்பல் நிறுவனத்தை இயக்கிட ஆண்டுக்கு ரூ.4 லட்சத்து 85 ஆயிரம் தேவை எனக் கணக்கிடப்பட்டது. வெற்றிகரமாக இயக்கினால் ரூ.10 லட்சம் லாபமாகக் கிடைக்கும் என்று வ.உ.சி. மதிப்பிட்டார். ஒருவேளை பி.ஐ. நிறுவனம் கட்டணத்தைக் குறைத்தால் அதனாலும் இந்தியர்களுக்கு லாபமே என்று அவர் கருதினார். எதிர்பார்த்தபடியே, வணிகப் போட்டி கட்டணக் குறைப்பைக் கொண்டுவந்தது. முதல் இரண்டு ஆண்டுகளில் சென்னை மாகாண அரசாங்கம் நேரடியாகத் தலையீடு செய்யவில்லை. ஆனால், உள்ளூர் நிர்வாகம் ஒருதலைப்பட்சமாக இருந்தது.
அரசியலும், மூலதனமும்
ஜூலை மாத இறுதியில் 24 ஆம் தேதி தூத்துக்குடி துறைமுகத்தில் சுதேசி கப்பல் (லாவி) மீது உரசல் ஏற்பட்டது. ஆகஸ்ட் 1 ஆம் தேதியன்று கொழும்பு துறைமுகத்தில் மற்றொரு உரசல் ஏற்பட்டது. செப்டம்பர் 13 ஆம் தேதி காலியா கப்பல் கொழும்பு துறைமுகத்தில் லேய்ட் அப் ஆகிறது. இவ்வாறு தொடர்ந்த அடாவடிக்குப் பின்னால் இருந்தது பிரிட்டிஷ் அரசாங்கத்தின் ஆதரவுதான்.
பிரிட்டிஷ் அரசாங்கத்துடன் பி.ஐ. நிறுவனம் நெருக்கமாக இருந்தது. அரசின் வணிகத் தொடர்புக்கும், தகவல் தொடர்புக்குமான தேர்வாக மட்டுமன்றி, ராணுவத் தேவைக்கும் பி.ஐ. கப்பல்களே பயன்பட்டு வந்தன. இரண்டு உலகப்போர்களில் பிரிட்டிஷ் படைகளை அழைத்துச் செல்வதற்கு அந்த நிறுவனம் தன் கப்பல்களை வழங்கியது. 1857 ஆம் ஆண்டில், முதல் சுதந்திரப் போராட்டத்தை நொறுக்குவதற்கு பிரிட்டிஷ் ஆயுதப் படைகளை அழைத்துச் செல்ல பி.ஐ. நிறுவனமே உதவியது. அதிகாரத்துடனான நெருக்கத்தைச் சுயலாபத்துக்குப் பயன்படுத்திக் கொண்டு போட்டியாளர்களைச் சிதைக்கவும், அழிக்கவும் தயக்கமின்றிச் செயல்பட்டது.
இப்படியான நிலைமையை உணர்ந்த வ.உ.சிதம்பரனார், சுதேசி கப்பல் நிறுவனத்துக்கு ஆதரவாக அரசியல் இயக்கத்தைத் துடிப்போடு கட்டமைக்க வேண்டும் எனக் கருதினார். அந்தத் திசையில் துணிந்து செயல்பட்டார். ஆனால், சுதேசி கப்பல் நிறுவன முதலீட்டாளர்களில் ஒரு பகுதியினர், மிதவாத நிலைப்பாடு எடுத்தார்கள். தம் வர்க்கத்தன்மையின் காரணமாக ஊசலாட்டம் அடைந்தார்கள். வ.உ.சிக்கு எதிராக நிலையெடுத்தார்கள்.
சுதேசி இயக்கத்தைத் தீவிரப்படுத்திய வ.உ.சியின் பேச்சுக்களைப் பிரிட்டிஷ் நிர்வாகம் எச்சரிக்கையோடு குறிப்பெடுத்தது. ஆனாலும், நிலைமையை மடைமாற்றுவது எப்படியென்றும், மக்கள் எழுச்சியை அடக்குவது எப்படியென்றும் அறியாமல் திணறிக் கொண்டே இருந்தார்கள். இப்படியான சூழலில், 1907 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதி, ஆளுநரின் நேர்முக உதவியாளராக இருந்த லியோனெல் மாலிங் விஞ்ச் என்பவரைத் திருநெல்வேலி மாவட்டத்திற்கு ஆட்சியராக அனுப்பியது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம். சுமார் 25 ஆண்டுகால நிர்வாக அனுபவம் கொண்ட விஞ்ச், விடுதலை வேட்கையில் தகித்துக் கொண்டிருந்த திருநெல்வேலியில் அதன் சூட்டை உணர்ந்தார்.
ஆலைத் தொழிலாளர்கள் எழுந்தனர்
மேலே கண்ட கப்பல் நிறுவனம் லண்டனில் பதிவு பெற்றிருந்தது. இந்தியாவில் அதன் முகவர் கல்கத்தாவில் இருந்தார். தூத்துக்குடி துறைமுகத்தில் அதற்கென்று துணை முகவராக ‘ஏ அண்ட் எப் ஹார்வி பிரதர்ஸ் அண்ட் பின்னிஸ்’ (இனி ஹார்வி) என்ற நிறுவனம் இருந்தது. அந்த நிறுவனமும் வெள்ளை முதலாளியுடையதுதான். அவர்கள்தான் கப்பல்களைக் கையாண்டார்கள்.
ஹார்வி நிறுவனத்தின் முதன்மைத் தொழில் பருத்தி கொள்முதலும், பின்னர் நூற்பாலை உற்பத்தியுமாக அமைந்திருந்தது. மதராஸ் மாகாணத்தின் தெற்குப் பகுதியில் அவர்கள் பல ஆலைகளை நிறுவினார்கள். அதில் தூத்துக்குடி நகரத்தில் அமைக்கப்பட்டது ‘கோரல் மில்’ என்ற நூற்பாலை ஆகும். சுதேசி இயக்கம் சூடுபிடித்த காலத்தில் கோரல் ஆலையில் சுமார் 1,500 தொழிலாளர்கள் வேலை செய்தார்கள். 1,100 குதிரைத்திறன் கொண்ட இயந்திரம் அமைந்திருந்தது. ஆண்டுக்கு 2,500 டன் நூல் நூற்கப்பட்டது. அந்த நிறுவனத்திற்கு தூத்துக்குடியே தலைமையகமாக இருந்தது.
கோரல் ஆலை தன் தொழிலாளர்களை ஒட்டச் சுரண்டி விரிவடைந்தது. ஆலையின் பங்குதாரர்கள் 60 சதவீதம் லாபப் பங்கு பெற்றார்கள். தொழிலாளர்கள் வேலை நேரக் கட்டுப்பாடில்லாமல் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர். 12 வயது சிறுவர்களும் தொழிலாளர்களாகப் பணியாற்றினார்கள். வார விடுமுறை இல்லை. உணவருந்தப் போதிய இடைவேளை கிடையாது. உடல்நலக் குறைவால் விடுமுறை எடுத்தால் ஊதியம் மறுக்கப்பட்டது. ஊதியத்தை இழந்தால் பரவாயில்லை என விடுமுறையில் சென்ற தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்பினால் வேலை நிச்சயமில்லை என்ற நிலைமை இருந்தது. தொழிலாளர்கள் தவறு செய்தாலும், வெள்ளை அதிகாரிகள் வரும்போது குறுக்கே சென்றாலும் அவர்களைப் பிரம்பால் அடித்தார்கள்.
இப்படி வதக்கப்பட்ட, தம்முடைய நிலைமைக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்தார்கள். வ.உ.சி., அந்தப் போராட்டத்திற்கான தயாரிப்பிலும், போராட்டத்திலும் உடன் நின்றார். ஊதிய உயர்வு, வார விடுமுறை, இதர விடுமுறைச் சலுகைகள் அவர்களுடைய கோரிக்கைகளாக இருந்தன.
1908 பிப்ரவரி 27, வேலை நிறுத்தம் தொடங்கியது. முதலாளிக்காகப் பிரிட்டிஷ் அரசாங்கம் துடித்தது. திருநெல்வேலியில் இருந்து 20 போலீசாரும், 2 அதிகாரிகளும் தூத்துக்குடிக்கு அனுப்பப்பட்டனர். கூட்டங்கள் தடை செய்யப்பட்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சிவகாசியில் இருந்து மேலும் 30 போலீசார் வரவழைக்கப்பட்டனர். மறுநாளே மாவட்ட ஆட்சியர் விஞ்ச் வந்து சேர்ந்ததுடன், போராட்டத்தை அடக்கும் முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டன.
முதலில் ரவுடிகளை வைத்துத் தொழிலாளர்களை மிரட்டிப் பார்த்தது ஆலை நிர்வாகம். அதுபற்றி சுதேசமித்திரன் இதழ் இவ்வாறு கூறியது: “சென்ற வியாழக்கிழமை காலையில், தூத்துக்குடி பரதேசிக் கம்பெனியைச் சேர்ந்த மாணிக்கமாச்சாரி எனும் ஒரு மனிதன் சில போக்கிரிகளைக் கூட்டிக் கொண்டு வேலை நிறுத்தம் செய்திருக்கும் கூலியாட்களின் வீடுகளுக்குள் பிரவேசித்து, அவர்களைப் பலவிதமாய்ப் பயமுறுத்தி வேலைக்குத் திரும்பும்படி தூண்டியதில் ஒன்றும் நடக்கவில்லை. சாயங்காலம், இந்த ஆட்களும் வேறு சில கான்ஸ்டபிள்களும் கூடிக் கொண்டு வேலை நிறுத்தக்காரர்களில் சில சிறுவர்களைப் பலவந்தமாய்ப் பிடித்து இழுத்துக் கொண்டு போய் பரதேச கப்பற் கம்பெனி ஆபீசுக்குள் அடைத்து வைத்திருந்தார்கள்” (மார்ச் 7, 1908). ஆனால், இந்த முயற்சி தோற்றது. போராட்டம் மேலும் வலுவடைந்தது.
வெற்றிக்கு வழிவகுத்த உத்தி!
1908 காலகட்டத்தில், தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்து போராடுவது மிகவும் கடினமான செயலாகும். பட்டியுடன் மட்டுமே போராட நேரிடும். வ.உ.சி பொதுமக்களிடம் நிதி திரட்டி தொழிலாளர்களின் பட்டினியைப் போக்கிட ஏற்பாடு செய்தார். வெங்கட்ராமய்யர் என்ற ஒரு வழக்கறிஞர் திரட்டிய நிவாரண நிதியில் ஒரு வாரத்துக்குரிய உணவுப் பொருட்கள் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டன. தற்காலிக மாற்று வேலை ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.
தூத்துக்குடி இணை மாஜிஸ்திரேட் ராபர்ட் ஆஷ், மிரட்டலுக்கு முயற்சி செய்தான். அதற்காக வ.உ.சியைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். இந்தச் சந்திப்பில் இருவருக்கும் கடும் முரண் ஏற்பட்டது. மில் தொழிலை மோசம் செய்ததாகக் குற்றம் சாட்டிப் பேசினான் ஆஷ். கூலியாட்களைக் கொடுமை செய்து வருத்தியதால் வேலை நிறுத்தம் நடக்கிறது என்று பதிலுரைத்தார் வ.உ.சி. படைக்குத் தான் அஞ்சப்போவதில்லை என்றும் கூறி வந்தார். வ.உ.சி. பின்பற்றிய உத்திக்குப் பலன் கிடைத்தது. இறுதியில் போராட்டம் வென்றது.
மார்ச் மாதம் ஆறாம் தேதி, ஆலை நிர்வாகத்தின் அழைப்பின் பேரில் வ.உ.சி ஐம்பது தொழிலாளர்களுடன் சென்று மேலாளரைச் சந்தித்தார். “அன்று மாலை, சுப்பிரமணிய பிள்ளை மீண்டும் வ.உ.சியைச் சந்தித்து, ஊதியத்தை அதிகரிக்கவும், வேலை நேரத்தைக் குறைக்கவும், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அளிக்கவும் ஆலை நிர்வாகம் ஒப்புக் கொண்டதாகத் தெரிவித்தார்” (தி இந்து, 7 மார்ச் 1908).
ஒன்பது நாட்கள் தொடர்ந்த வேலை நிறுத்தம் வெற்றிபெற்றது. இதன் விளைவாக, தூத்துக்குடி நகரசபை, இரயில்வே கம்பெனி, ஐரோப்பிய நிறுவனங்கள் பலவும் அவர்களுடைய ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்தியதுடன், அவர்களைச் சற்று மேம்பட்டு நடத்தத் தொடங்கினார்கள். கோரல் மில் வேலை நிறுத்தம் முடிந்த மறுநாள், பர்மா கம்பெனி ஒன்றில் இரண்டு ஊழியர்களை ஒரு ஆங்கிலோ-இந்தியன் அடித்துவிட்டதாக, அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்தார்கள். மார்ச் 10 ஆம் தேதியன்று, நகரசபையின் சுத்திகரிப்புத் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கேட்டு வேலை நிறுத்தம் செய்தனர். இவர்களைப் பின்பற்றி, நகரசபையில் பணியாற்றாத சுத்திகரிப்புத் தொழிலாளர்களும் வேலை நிறுத்தம் செய்தார்கள் என்று அடுக்கடுக்காகக் கிடைத்த பலன்களைப் பதிவு செய்கிறார் ஆ.சிவசுப்பிரமணியன்.
புரட்சியின் மீது நம்பிக்கை
வ.உ.சி., தனது நடைமுறை உத்தியின் மூலம் மக்கள் ஒற்றுமையை உருவாக்கி வந்தார். படித்தவர்களையும், ஆலைத் தொழிலாளர்களையும் ஒன்றாக்கினார். மில் கூலிகள் என்று இழிவாக அழைக்கப்பட்ட ஆலைத் தொழிலாளர்கள் போராடவும், உரிமைகளைப் பெறவும் தூத்துக்குடி நகரமே ஆதரவளித்தது. 1908 ஜனவரி மாதத்தில் ஏராளமான பொதுக்கூட்டங்கள் நடந்தன. சுப்பிரமணிய சிவா 8 ஆம் தேதி வந்து சேர்ந்தார். பத்மநாபன் 28 ஆம் தேதி வந்தார். கிட்டத்தட்ட எல்லா நாட்களுமே பொதுக்கூட்டங்கள் நடந்தன.
இந்தப் பொதுக்கூட்டங்களில் பேசப்பட்ட விசயங்களையும் நாம் கவனிக்க வேண்டும். பிப்ரவரி மாதத்தில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில், சுப்பிரமணிய சிவா, 1905 ரஷ்யாவில் ‘புரட்சியின் ஒத்திகை’ என்று அழைக்கப்பட்ட மக்கள் பேரெழுச்சிப் போராட்டத்தைக் குறிப்பிட்டு, பின்வருமாறு பேசினார்: “ரஷ்யப் புரட்சி மக்களுக்கு நல்லதைச் செய்துள்ளது. புரட்சிகள் உலகுக்கு நன்மையைத்தான் செய்யும். இந்தியாவில் மில்களில் வேலைபார்க்கும் கூலிகள் இரண்டு வாரங்கள் வேலை நிறுத்தம் செய்தால், மான்செஸ்டர் மாநகரம் பட்டினி கிடக்கும் நிலை ஏற்படும். நமது கூலித்தொழிலாளர்கள் நாள் முழுவதும் கடுமையாக உழைத்து ஒரு மாதத்திற்கு 3, 4 ரூபாய் மட்டுமே சம்பாதிக்க, ஐரோப்பியர்கள் வெறும் கையெழுத்தைப் போட்டு மாதம் 400, 500 ரூபாய் சம்பாதிக்கிறார்கள். வங்கத்தில் சணல் தொழிலாளிகளும், வடமேற்கு வங்க ரயில்வே தொழிலாளர்களும் வேலை நிறுத்தப் போராட்டம் செய்து கூலி உயர்வு பெற்றுள்ளார்கள்.”
இவ்வாறாக, சுதேசி இயக்கமானது, ஏகாதிபத்திய சுரண்டலை வீழ்த்துவதில், தொழிலாளி வர்க்கத்தின் தவிர்க்கவியலாப் பாத்திரத்தை உணர்ந்ததாகவும், அவர்களுக்கே உணர்த்துவதாகவும் மாறிவந்தது.
ஏகாதிபத்திய தாண்டவம்
இந்தப் போக்குகள் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களையும், ஆளும் வர்க்கங்களையும் அதிரச் செய்தன. 1908 மார்ச் 7 ஆம் தேதியன்று, “சுதேசிகளின் கை வலுத்துவிட்டது. திங்கட்கிழமை அவர்கள் நடத்த திட்டமிட்டுள்ள ஒரு பிரம்மாண்டக் கூட்டத்தை நிறுத்தியே ஆக வேண்டும்” என்று தலைமைச் செயலர் அட்கின்சனுக்கு நேர்முகக் கடிதத்தை அனுப்பி வைத்தார் திருநெல்வேலி ஆட்சியர் விஞ்ச். உடனடியாக, திட்டமிட்ட அடக்குமுறைத் தாண்டவம் தொடங்கியது.
மார்ச் 9 ஆம் தேதி, வ.உ.சிதம்பரனார், சிவா, பத்மநாப ஐயங்கார் ஆகியோருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டது. இந்த அழைப்பாணையை விளக்கி, மார்ச் 8 மாலை 6 மணிக்கு நடந்த பொதுக்கூட்டத்தில் 4,000 பேர் பங்கேற்றதாகக் காவல் அதிகாரியின் குறிப்பு தெரிவிக்கிறது. அந்தக் கூட்டத்தில், மக்கள் மீது வ.உ.சிதம்பரனார் செலுத்திய செல்வாக்கு அசாதாரணமாக இருந்ததாகவும் அந்த அதிகாரி குறிப்பிடுகிறார்.
மார்ச் 10 ஆம் தேதி, தூத்துக்குடியில் விபின் சந்திர பாலர் விடுதலையைக் கொண்டாடக் கூடாது என்று ஆட்சியர் உத்தரவிட்டுத்தான் அழைப்பாணை அனுப்பியிருந்தார். அந்த உத்தரவின் மீதான விசாரணை முடிந்த கையோடு, நெல்லையப்பர் கோயிலில் இருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு, தாமிரவருணி ஆற்றங்கரையில் விபின் சந்திரபாலர் விடுதலையைக் கொண்டாடினார்கள் அவர்கள். பின்னர், மார்ச் 10 ஆம் தேதி திட்டமிட்டபடி தூத்துக்குடியிலும் விழா நடந்தது. இந்த விழாவில் கலந்துகொள்ள அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து, பர்மா எண்ணெய் நிறுவன ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்தார்கள்.
இத்தனை எழுச்சியான சூழ்நிலையில்தான், மார்ச் 12 ஆம் தேதி, வ.உ.சி உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டனர். இந்தக் கைதினை ஒட்டி நடந்த எழுச்சியின் விபரங்களை முன்பே பார்த்தோம்.
அண்மையில் வெற்றியைச் சுவைத்திருந்த கோரல் ஆலைத் தொழிலாளர்களும், வ.உ.சி கைதைக் கண்டித்து வேலை நிறுத்தம் செய்தார்கள். வரலாற்றில் பதிவான, இந்திய தொழிலாளி வர்க்கத்தின் முதல் அரசியல் வேலை நிறுத்தமாக அது மாறியது. குதிரை வண்டிக்காரர்கள், கசாப்புக்கடைக்காரர்கள், நாவிதர்கள், வண்ணார் வேலை நிறுத்தம் செய்தார்கள். சுதேசி இயக்கத்தை விமர்சனம் செய்த ஒரு வக்கீலுக்குப் பாதி சவரம் செய்துகொண்டிருந்த நாவிதர், அப்படியே விட்டுவிட்டு வந்துவிட்டார்.
வரலாற்றில் அதற்கு முன்பு கண்டிருக்காத அந்த மாபெரும் எழுச்சி, துப்பாக்கிக் குண்டுகளாலும், அடுத்தடுத்த அடக்குமுறைகளாலும் அடக்கப்பட்டது.
பறிக்கப்பட்ட வெற்றிகள்
கோரல் ஆலைத் தொழிலாளர்கள் மார்ச் 20 ஆம் நாள் வேலைக்குத் திரும்பினார்கள். முன்பு, 9 நாட்கள் வேலை நிறுத்தம் செய்து போராடிப் பெற்றிருந்த கூலி உயர்வைத் தரமாட்டோம் என்று மறுத்தான் வெள்ளை முதலாளி. வெற்றி பறிக்கப்பட்டது. வ.உ.சி., கைது செய்யப்பட்டதால், முறையான தொழிற்சங்கத்தை உருவாக்குவது தடுக்கப்பட்டது. அடக்குமுறைகள் இத்துடன் நிற்கவில்லை; எழுச்சியில் பங்கேற்றதாக நூற்றுக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டு, அந்த வழக்குகள் சிறப்பு கவனத்துடன் நடத்தப்பட்டன.
உள்ளூர் வழக்குரைஞர்களின் சுதேசிய ஈடுபாடு காரணமாக, தூத்துக்குடி துணை நீதிமன்றத்தையே ஒழித்துவிட வேண்டும் அல்லது குறைந்தபட்சம் வேறு ஊருக்கு அப்புறப்படுத்த வேண்டும் என்று தூத்துக்குடி வணிகப் பேரவை அரசை வற்புறுத்தித் தீர்மானம் நிறைவேற்றியது. சென்னையில் இருந்து ஈ.பி.பவல் என்ற ஆங்கிலேயர் பப்ளிக் பிராசிக்கியூட்டராக நெல்லைக்கு வந்தார். மற்றொரு அரசாங்க வக்கீலாக டி.ரிச்மண்டு வாதாடினார். தண்டனையில் இருந்து எவரும் தப்பக்கூடாது என்ற நோக்கத்திலேயே இவ்வாறு வழக்கறிஞர்கள் அமர்த்தப்பட்டார்கள். திருநெல்வேலி அமர்வு நீதிமன்றம் எவருக்குமே ஜாமீன் வழங்கவில்லை. உயர் நீதிமன்றத்தை அணுகித்தான் ஜாமீன் கூட பெற முடிந்தது. இப்படிப்பட்ட நீதிபதி தீர்ப்பை மட்டும் நியாயமாக வழங்குவாரா?
ஆனால், மருத்துவமனை சிப்பந்திகள், அஞ்சல் துறை ஊழியர்கள், மாவட்ட முன்சீப் என அனைவருமே சாட்சி சொல்ல தயங்கினார்கள். கட்டாயப்படுத்தியும் எவரும் மசியவில்லை. ஆனால், விடுமுறையைக் கூட ஒத்திவைத்து வழக்கு விசாரணை தொடர்ந்தார் நீதிபதி.
1908 ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் அரசாங்கம் மேற்கொண்ட பல்வேறு தண்டனைக் குறைப்புகளும் கூட திருநெல்வேலி எழுச்சியின் கைதிகளுக்கு வழங்கப்படவில்லை. “இந்த நாட்டின் ஆட்சியை அழிக்க முயன்ற குற்றம் புரிந்தோருக்குச் சலுகை காட்டுவது நல்லதன்று. இவர்கள் செய்த குற்றமும் அடைந்த தண்டனையும் அண்மையில்தான் [உயர்நீதிமன்றத்தால்] உறுதி செய்யப்பட்டிருக்கும் இத்தருணத்தில், இவர்களுக்குச் சலுகை காட்டுவது நமது பலவீனம் எனத் திரித்துக் கூறப்படுவதற்கும் வாய்ப்புள்ளது” என்று குறிப்பிட்டுக் கடிதம் அனுப்பினான் திருநெல்வேலி ஆட்சியர் விஞ்ச்.
வஞ்சம் தீர்த்தது வெள்ளை ஆட்சி
எழுச்சியைத் தூண்டிவிட்டு, வன்முறையால் வீழ்த்தியது ஆளும் வர்க்கத்தின் திட்டமிட்ட நடவடிக்கையே நிறுவ இன்னும் சில சான்றுகள் உள்ளன.
மதராஸ் மாகாணத்தின் ஆளுநர் சர் ஆர்தர் லாலியுடன், மிதவாதியான குருசாமி அய்யர் தலைமையிலான ஒரு தூதுக்குழு சந்தித்துச் சலுகை வேண்டியது. அந்தக் குழு வ.உ.சியை விட்டுக் கொடுத்துக் கெஞ்சியது. ஆனால், ஆளுநர் லாலியின் கருத்துக்கள் நீண்டகால பகையின் வெளிப்பாடாக இருந்தன. “பொதுமக்கள் வெள்ளையரிடமும், அதிகாரிகளிடமும் வெளிப்படையாகக் காட்டிய பகைமையும் வெறுப்பும், வேண்டுமென்றே அதிகாரத்திற்கு எதிராகச் செயல்பட்ட முறையும், அரசின் நடவடிக்கைகள் சரியே என்று உறுதி செய்வதாக” கூறினார் அவர். ஆளுநருக்கு நெருக்கமான எல்.எம்.விஞ்ச் திருநெல்வேலி ஆட்சியராக அனுப்பப்பட்டதை முன்பே கண்டோம். அவன் ஆஷுக்கு எழுதிய கடிதங்களில், சுதேசி இயக்கத்தையும், கப்பல் கம்பெனியையும் முறிப்பதில் காட்டிய தனிப்பட்ட வெறுப்பும், வேகமும் தெரிய வருகின்றன.
மார்ச் 19, 1908 அன்று, ஆஷுக்கு எல்.எம்.விஞ்ச் எழுதிய கடிதத்தில், தலைமைச் செயலாளர் அட்கின்சனுக்கு (தலைமைச் செயலர்) … ‘நமது மூன்று நண்பர்களின் மீதும் (வ.உ.சி., சிவா, பத்மநாப அய்யங்கார்) இராஜ துரோக நடவடிக்கை எடுக்க அரசாங்க அனுமதி பெற்று, அவர்கள் மூவரும் சிறையில் வசதியாக இருக்க வழி செய்யுமாறு’ கேட்டுக் கொண்டிருப்பதை எள்ளலுடன் குறிப்பிட்டுள்ளார்.
எழுச்சி ஒடுக்கப்பட்டு, சுதேசிகள் நிலைகுலைந்திருந்த சூழலில், சுதேசி கப்பல் நிறுவனத்தின் அலுவலகத்திற்கு, அலுவல் நேரம் முடிந்த பின்னர் நுழைந்தார் ஆஷ். அப்போது, அவர் கம்பெனியின் பங்குதாரர் பதிவேட்டைக் காட்டுமாறு அங்கிருந்த கடைநிலை ஊழியரை மிரட்டியுள்ளார்.
இதனைக் கே.ஆர்.குருசாமி அய்யர் ஆஷுக்கு எழுதிய கடிதம் அம்பலப்படுத்துகிறது: “சென்ற சனிக்கிழமை, 21 ஆம் தேதி, பின் மாலை, டாக்டர் வான்லாங் பெரியுடன் சுதேசி கம்பெனியின் அலுவலகத்திற்குத் தாங்கள் சென்று, கம்பெனிச் சட்டப்படி ஒரு ரூபாய் கட்டணத்தைக் கொடுத்து, பங்குதாரர் பதிவேட்டைக் காட்டுமாறும், அவ்வாறு காட்டாவிட்டால் அபராதம் விதிக்கப்படுமென்றும், கம்பெனி ஊழியரிடம் தாங்கள் கூறியதாக நிர்வாக இயக்குனர்கள் அறிய வருகிறார்கள். தங்கள் நோக்கம் அலுவல் பூர்வமானதா, அல்லவா என்பது தெரியவில்லை. இன்றைய சூழ்நிலையில், கம்பெனி ஊழியர்களுக்கு இந்த நிகழ்ச்சி அச்சமளிக்கிறது” (மார்ச் 23, 1908) எனக் குறிப்பிடுகிறார்.
பின்னொரு நாளில், ஆஷுக்கு ஆட்சியர் விஞ்சு எழுதிய கடிதத்தில், எழுச்சியை ஒடுக்கி முடித்துவிட்டதைக் குறிப்பிடுகிறார். “சுமூகமான உறவுகள் மீட்கப்பட்டுவிட்டன. தண்டக்காவல் வரியான ரூ.60 ஆயிரத்தில் 40 ஆயிரம் ரூபாய் நெல்லையில் வசூலிக்கப்பட்டது. தூத்துக்குடியில் இப்போதுதான் வசூல் தொடங்கியுள்ளது என்று குறிப்பிட்டதுடன், சுதேசிகளின் வளங்கள் முடியும் தருவாயில் இருக்கிறது என்றும், அவர்களுடைய நீராவிக் கப்பல் கொழும்பில் ஜப்தி செய்யப்பட்டுள்ளதென்றும் அறிகிறேன். கம்பெனி திவாலாகும் நாள் அதிகத் தொலைவில் இல்லை” என்றார்.
நெல்லையில் எழுச்சி நடந்த ஒரே மாதத்தில், ஆஷ் கோதாவரி மாவட்டத்திற்கு மாற்றப்பட்டார். 1908 இறுதியில், அவர் சாத்தூருக்கு வந்தார். பின்னர், சில ஆண்டுகள் திருநெல்வேலி ஆட்சியராகப் பொறுப்பேற்றார். தொடர்ச்சியான அடக்குமுறைகளால் நிலைகுலைந்த சுதேசி இயக்கம் பின்னர் மங்கியது. 1910 ஜூன் மாதத்தில், சுதேசி கப்பல் நிறுவனம் தொழிலை நிறுத்திக் கொண்டது. 1911 மே மாதத்தில், காலியா, லாவி ஆகிய இரண்டு கப்பல்களும் விற்கப்பட்டன. 1911 ஜூன் மாதத்தில், ஆஷ் கொல்லப்பட்டார். ஆஷ் கொலையைத் தொடர்ந்து, தேசிய இயக்கத்தின் தீவிர தலைவர்கள் இன்னும் சிலர் குறிவைத்துப் பழிவாங்கப்பட்டார்கள்.
எனவே, அவர்கள் சுதேசி இயக்கத்திற்கு இருந்த மக்கள் ஆதரவையும், சுதேசி இயக்கம் ஒன்றுதிரட்டிய சுதேசி மூலதனத்தையும், சுதேசி இயக்கத்தினால் ஊக்கம் பெற்ற தொழிலாளி வர்க்க எழுச்சியையும் குறிவைத்து அழித்தார்கள், அதற்காகத் திட்டமிட்ட வன்முறையை ஏவினார்கள் என்பதும் இதன் மூலம் நிரூபணமாகிறது. ஒருவேளை, சுதேசி இயக்கம் அனைத்து நகரங்களிலும் விரிவாகி வளர்ந்திருந்தால், இப்படியான அடக்குமுறை சாத்தியமாகியிருக்காது. அதனாலேயே அது முளையில் கிள்ளப்பட்டது. திருநெல்வேலி எழுச்சியின் படிப்பினைகளைத் தேசிய விடுதலை இயக்கம் முறையாக உள்வாங்கியிருக்குமானால், தமிழ்நாட்டின் அரசியலில் அதுவொரு புரட்சிகர விடிவெள்ளியாக மிளிர்ந்திருக்கும் என்று அறுதியிட்டுச் சொல்ல முடியும். ஆனால், தேசிய இயக்கத்திலிருந்த மிதவாதிகள் வ.உ.சியின் பாதையை வெறுத்தார்கள்.
பத்தாண்டுகளுக்குப் பிறகுதான் ஏ.ஐ.டி.யூ.சி உருவானது. கம்யூனிஸ்ட் இயக்கம் தமிழ்நாட்டில் வேர் பிடிக்க இன்னும் இருபதாண்டுகள் ஆனது.
1917 ரஷ்யப் புரட்சியின் வெற்றிக்கு முன்பாகவே, தமிழ்நாட்டில் தோன்றிய இந்த விடிவெள்ளி உடனே மறைந்திருக்கலாம். ஆனாலும், அதன் கனல் அணையவில்லை. 1920 ஆம் ஆண்டு, காங்கிரஸ் கட்சியின் சென்னை மாநில மாநாட்டில், வ.உ.சிதம்பரனார் தீர்மானங்களை முன்மொழிந்து பேசினார். அப்போது, அவர் ‘இரயில்வே, தபால், தந்தி, போலீஸ் ஆகிய துறைகளில் தொழிற்சங்கங்கள் நமது கட்டுப்பாட்டிற்குள் இன்னும் வரவில்லை. மக்கள் கூறுவது போல, அரசாங்கம் செயல்படாவிட்டால், இத் தொழிற்சங்கங்களை வேலை நிறுத்தம் செய்யும்படி தூண்ட வேண்டும். காங்கிரஸ்காரர்கள் இந்தத் தொழிற்சங்கங்களை ஊக்குவித்து, தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துவிட்டால், உடனடியாக சுயராச்சியம் கிடைத்துவிடும்.” மற்றொரு தருணத்தில், அவர் சென்னை மாநில சட்டமன்றத்தில், தொழிலாளர்களாலும், தொழிற்சங்கங்களாலும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தக்க எண்ணிக்கையில் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
பாட்டாளி வர்க்கத்தின் மீதான வ.உ.சியின் உறுதி மிக்க நம்பிக்கை, இன்றும் துருவ வழிகாட்டியாக முன் செல்கிறது.
(இந்தக் கட்டுரைக்கான கூடுதல் தரவுகள், சலபதி எழுதிய ‘சுதேசி ஸ்டீம்’ என்ற ஆங்கில நூல், ‘ஆஷ் அடிச்சுவட்டில்’ என்ற ஆய்வுக் கட்டுரை, ஆ.சிவசுப்பிரமணியம் எழுதிய “வ.உ.சியும்: முதல் தொழிலாளர் வேலை நிறுத்தமும்” ஆகிய நூல்களில் இருந்து பெறப்பட்டன.)
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
