
எதிர்ப்புரட்சி வரலாற்றில் வேர் பிடித்த ஆர்.எஸ்.எஸ்.
அசோக் தவாலே
மராட்டிய மாநிலம் நாக்பூரில் 1925 அன்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தொடங்கப்பட்டது. பாசிசத் தன்மைகொண்ட இந்த அமைப்பின் தோற்றத்தை விளக்கும்போது, 1919-24 கிலாபத் இயக்கம், 1922 செளரி செளராவில் நடைபெற்ற சம்பவங்களின் காரணமாக ஒத்துழையாமை இயக்கத்தை திடீரென்று மகாத்மா காந்தி திரும்பப் பெற்றுக் கொண்டதால் ஏற்பட்ட பொதுவான ஏமாற்றம் ஆகிய பின்னணியை காரணியாக குறிப்பிடுவார்கள். இவை முக்கியமானவை என்றாலும், 20ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் மராட்டிய மாநிலத்தில் ஏற்பட்ட ஆழமான சமூக, அரசியல் மாற்றங்களுக்கான எதிர்வினையாக ஆர்.எஸ்.எஸ் உருவாக்கம் அமைந்ததும் உண்மையே ஆகும்.
பிராமணர்-அல்லாதார் இயக்கத்தின் எழுச்சி, தலித் உரிமைக் கோரிக்கைகள், முற்போக்கு சமூக சீர்திருத்த நீரோட்டங்கள், தொழிலாளர்-விவசாயி அணி திரட்சி ஆகியவற்றோடு 1917 ஆம் ஆண்டு ரஷ்யாவில் வெற்றியடைந்த சோசலிசப் புரட்சியைத் தொடர்ந்து இடதுசாரி அரசியலின் தொடக்க காலப் பரவல் ஆகியவற்றின் காரணமாக உயர்சாதி மேலாதிக்கம் – குறிப்பாக பிராமண மேலாதிக்கம் – கூடுதல் சவாலான சூழலை எதிர்கொண்டது. இப்படியான ‘சீர்குலைவு’ என்று அவர்கள் வரையறுத்த சமூக சக்திகளை எதிர்கொள்வதற்காக இந்து சமுதாயத்தை வகுப்புவாத அடிப்படையில், மனுவாத பண்பாட்டுக் கட்டமைப்பின்படி மறுசீரமைக்கும் முயற்சியாக ஆர்.எஸ்.எஸ். உருவானது.
நாட்டில், பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும், இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் நிலவிய சூழலை சுருக்கமாக ஆராய்ந்தால், காலனி ஆதிக்கத்தின் கீழிருந்த இந்தியாவில், கூடுதலான அரசியல் நடவடிக்கைகள் கொண்ட பிராந்தியங்களின் ஒன்றாக மராட்டியமும் அமைந்திருந்ததைப் பார்க்க முடியும். சாதி எதிர்ப்பு, பிராமண எதிர்ப்பு அரசியல் நாட்டின் பல பகுதிகளை விடவும் மராட்டியத்தில் முன்கூட்டியே, அதிக வலிமையோடு வளர்ந்தது.
ஜோதிராவ்பூலேவும், சாகுமகராஜும், பிராமணரல்லாதார் இயக்கமும்
தேர்தல் அரசியலையும், அரசு நிர்வாகத்தையும் தாண்டிய சித்தாந்த சவாலை பிராமணரல்லாதார் இயக்கம் ஏற்படுத்தியது. இந்த இயக்கம், 1873 ஆம் ஆண்டில் உருவான சத்ய சோதக் சமாஜ் (உண்மையைத் தேடுவோர் சங்கம்) பணியில் வேர் பிடித்ததாகும். இந்த அமைப்பின் தலைவர் பூலே, சூத்திரர்களையும், அதி சூத்திரர்களையும் ஒடுக்கக்கூடியதாக படிநிலைச் சாதியமைப்பை அடையாளம் கண்டார்.
மதச் சட்டத்தில் பிராமணர் அதிகாரத்தை நியாயப்படுத்துவதை கேள்வி கேட்ட பூலே, சமூக ஒடுக்குமுறைக்கு எதிராகவும், சுயமரியாதைக்காகவும், அரசியல் உரிமைகளுக்காகவும் போராட அடிமட்ட சாதிகளை ஊக்குவித்தார். அவருடைய புகழ்பெற்ற ‘குலாம்கிரி’ (அடிமைத்தனம் – 1873) என்ற நூல், சாதியமைப்பே அடிமைத்தனம் என்று அடித்துக் கூறியது. அவர் எழுதிய மற்றொரு புகழ்பெற்ற நூல் ‘ஷெட்கர்யாச்சா ஆசூத்’ (விவசாயியின் சவுக்கடி) (1881), நிலப்பிரபுத்துவ அமைப்பை எதிர்க்கும் விவசாயிகளை ஆதரித்தது.
ஜோதிராவ் பூலேவும், மனைவி சாவித்ரிபாய் பூலேவும் (1831-1897) இணைந்து பாலின சமத்துவப் பிரச்சினையை வலுவாக முன்னெடுத்தார்கள். 1848 ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் பெண்களுக்கான பள்ளியை புனேவில் அவர்கள் நிறுவினார்கள். அதே ஆண்டில்தான் கார்ல் மார்க்சும், ஃபிரடெரிக் ஏங்கெல்சும் எழுதிய கம்யூனிஸ்ட் அறிக்கை முதன்முதலில் வெளியானது.
கெயில் ஓம்வெட் என்ற சமூகவியல் அறிஞர் எழுதிய ‘காலனிய சமூகத்தில் பண்பாட்டு கிளர்ச்சி’ என்ற புகழ்பெற்ற ஆய்வு நூலில், மராட்டியத்தில் எழுந்த பிராமணரல்லாத இயக்கத்தை, காலனியக் காலத்தின் வலுவான சாதி எதிர்ப்பு அணி திரள்வுகளில் ஒன்றென விவரிக்கிறார். பிரிட்டிஷ் காலனியாட்சியில், கல்வியும், அதிகாரமட்ட வேலை வாய்ப்புகளும் பிராமண உயர் அடுக்கினரை வலுப்படுத்தியது. இந்த நிலைமை, விலக்கப்பட்ட உணர்விலிருந்த பிற சாதிகளிடம் கசப்பை உருவாக்கியது என்று அவர் கூறுகிறார். 1910 – 1930 காலகட்டத்தில் செயல்பட்ட சத்ய சோதக் இயக்கம், பிராமண எதிர்ப்புணர்வை முன்னெடுத்து ஒரு விரிவான விவசாய, சமூக இயக்கமாக பரிணமித்தது என்கிறார். இந்தக் காலகட்டத்திலேயே ஆர்.எஸ்.எஸ். தோற்றுவிக்கப்பட்டது.
இந்த வளர்ச்சிப் போக்குகளின் முக்கியத்துவம் மிகையானதல்ல. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கல்வி, நிர்வாகம், இதழியல், அறிவுசார் பணிகளில் பிராமணர்கள் தம் மக்கள் தொகை விகிதத்திற்கும் கூடுதலான செல்வாக்கைக் கொண்டிருந்தனர். பிராமணரல்லாதார் இயக்கம் இந்த ஆதிக்கத்தை நேருக்கு நேர் எதிர்த்து நின்றது. மராட்டியத்தின் மேற்கு பகுதியில் அமைந்த கோலாப்பூரில், 1902ஆம் ஆண்டிலேயே கல்வியிலும், அரசு வேலைகளிலும் பிராமணர் அல்லாதாருக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டை அறிமுகப்படுத்திய முதல் நபராக சாகு மகராஜ் (1874-1922) திகழ்ந்தார். பிராமண சமூகத்திற்கு இருந்த சலுகைகளையும் அவர் வெளிப்படையாக விமர்சித்தார். கேசவ்ராவ் ஜேதே (1896-1959), தினகர் ராவ் ஜவால்கர் (1898-1932) ஆகியவர்கள் பிராமணரல்லாதார் இயக்கத்தின் தலைவர்களாவர்.
பிராமணரல்லாதார் இயக்கத்தையும், தலித் இயக்கங்களையும் ஆய்வு செய்த வரலாற்றாசிரியர் எலினோர் ஜெல்லியட், இந்தப் போராட்டங்கள் மராட்டிய மாநிலத்தின் அரசியல் பண்பாட்டை எப்படி மாற்றியமைத்தன என்று எடுத்துக் காட்டுகிறார். சாதி எதிர்ப்பு அணி திரட்டலின் காரணமாக சமூக சீர்திருத்தம் என்பது அடிமட்ட சாதிகளுக்கும், தலித் மக்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம், சுயமரியாதை ஆகிய கோரிக்கைகளோடு கூடுதலாக பிணைக்கப்பட்டது என்று அவர் கூறுகிறார்.
இந்துராஜ்ஜியமும் அம்பேத்கரும்
இந்த மாற்றங்களை மேலும் தீவிரப்படுத்துவதாக டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் தோற்றம் அமைந்திருந்தது. அம்பேத்கர் இந்து சமூகத்தில் சீர்திருத்தம் கோருவதோடு நிற்கவில்லை; சாதியின் விதிகளையும், அதன் கட்டமைப்பையும் – ஒட்டுமொத்த அடிப்படையையே கேள்விக்குள்ளாக்கினார். தலித் மக்களுக்கான அமைப்பையும், செய்தித்தாள்களையும், அரசியல் பிரச்சாரங்களையும், போராட்ட அணிதிரட்டல்களையும் கொண்டு, முன்னெப்போதும் காணாத ஒரு இயக்கத்தை உருவாக்கினார்.
1927 ராய்கட் மாவட்டத்தின் மகத் பகுதியில், தலித் மக்களின் தண்ணீர் உரிமைக்காக முன்னெடுக்கப்பட்ட மகத் சவ்தார் குள சத்தியாகிரகமும், முற்றிலும் பிற்போக்குத்தனமான பண்டைய நூல் மனுஸ்மிருதியை பகிரங்கமாக எரிக்கும் நடவடிக்கையும், 1930-35 வரை நாசிக்கில் நடந்த காலாராம் கோயில் நுழைவு சத்தியாகிரகமும், தனி அரசியல் பிரதிநிதித்துவத்திற்கான கோரிக்கையும், இந்து மத நூல்களைப் பற்றிய விமர்சனங்களும் அப்போதைய சமூக நிலை மீதான தீவிரமான சவாலாக அமைந்தன.
1938ஆம் ஆண்டில், மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டத்தின் மன்மாட் பகுதியில் நடைபெற்ற ரயில்வே தொழிலாளர் மாநாட்டில் பேசும்போது, “எனது பார்வையின்படி இந்த நாட்டில் தொழிலாளர்கள் இரண்டு எதிரிகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. பிராமணீயமும் முதலாளித்துவமுமே அந்த இரண்டு எதிரிகள்” எனத் தெளிவாக அறிவித்தார்.
‘சாதியை அழித்தொழிக்க’ அம்பேத்கர் போராடினார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அதற்கு நேர்மாறாக ‘சாதியை நிலைநிறுத்த’ விரும்புகிறது. அம்பேத்கர் விரும்பியபடி முதலாளித்துவத்திற்கு முடிவுகட்டுவதற்கு பதிலாக, கள்ளக்கூட்டு முதலாளித்துவத்தை வலுப்படுத்தவே ஆர்.எஸ்.எஸ். விரும்புகிறது. நமது மகத்தான சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை ஆர்.எஸ்.எஸ். ஒருபோதும் எதிர்க்கவில்லை. அது ஏகாதிபத்தியத்திற்கு உதவும் வகையில் தனது வகுப்புவாத நடவடிக்கைகளை முன்னெடுத்தது.
‘பாகிஸ்தான் அல்லது இந்தியப் பிரிவினை’ (1945) என்ற தனது புத்தகத்தில் அம்பேத்கர் எழுதினார்:
“இந்து ராஜ்ஜியம் ஒரு உண்மையாக மாறினால், அது இந்த நாட்டிற்கு மிகப்பெரிய பேரழிவாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை… இது சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்திற்கு அச்சுறுத்தலாகும். அந்த வகையில் அது ஜனநாயக விரோதமாக அமையும். என்ன விலை கொடுத்தேனும் இந்து ராஜ்ஜியத்தை தடுக்க வேண்டும்.”
சாதிப் பிரிவினைக்கு எதிராக அம்பேத்கரும், சாதி எதிர்ப்பை தீவிரமாக முன்னெடுக்கும் சக்திகளும் கொண்டுள்ள நிலைப்பாட்டிலிருந்து, ஆர்.எஸ்.எஸ் நிலைப்பாடு கூர்மையாக வேறுபட்டதாகும். அம்பேத்கர் சாதி ஒழிக்கப்பட வேண்டும் என்றார். அரசமைப்புச் சட்ட பாதுகாப்பும், அதிகாரப்பகிர்வும் தலித் மக்களுக்கு அவசியம் என்றார். ஆர்.எஸ்.எஸ் அமைப்போ ஒழுக்கம், ஒற்றுமை, ஒரே இந்து அடையாளம் என்றது. சாதிப் படிநிலையின் அடிப்படைகளோடு நேரடியாக மோதுவதையே தவிர்த்துவிட்டது.
சமூக ‘சமத்துவத்திற்கும்’, ‘இணக்கத்திற்கும்’ இடையில் காணப்படும் இந்த வேறுபாடு, தீர்க்கமான கருத்தியல் பிளவினை எடுத்துக் காட்டும் அம்சமாகும். ஆர்.எஸ்.எஸ் சிந்தனையாளர்கள், சாதி அடிப்படையிலான மோதல்கள் இந்து நாகரிக ஒற்றுமையை பலவீனப்படுத்துவதால், மோதல்களைக் குறைக்க வேண்டும் என்று அவ்வப்போது கூறினார்கள். இவ்வாறு, இணக்கத்திற்கான வாதங்கள் சாதியப் படிநிலைகளை ஊக்கப்படுத்தி பாதுகாக்கவே செய்கின்றன என்று கூறி, சாதி எதிர்ப்பு சக்திகள் அவற்றை எதிர்த்தனர்.
இடதுசாரிகளுடனான கூர்மையான வேறுபாடு
ரஷ்யாவில் 1917ஆம் ஆண்டில் நடந்த மாபெரும் சோசலிசப் புரட்சியின் விளைவாக, மராட்டியத்திலும் இந்தியா முழுவதும் இடதுசாரிப் போக்குகள் வளர்ச்சியடைந்தன. 1920 – 1930 காலகட்டத்தில் விவசாய இயக்கங்கள் வளர்ந்தன; நிலவுடைமைச் சுரண்டலுக்கு எதிராக அவர்கள் போராடினர். தொழிற்சங்க இயக்கங்கள் உருவாகி வளர்ந்தன. சோசலிச அரசியல் வேகமாக விரிவடைந்தது. அன்றைய பம்பாய், இந்தியாவின் முக்கிய தொழில்துறை நகரமாக இருந்தது. கிர்னி காம்கார் தொழிற்சங்கம் போன்ற வலுவான தொழிலாளர் சங்கங்கள் ஏற்பட்டன. ஜவுளி ஆலைத் தொழிலாளர்களிடம் கம்யூனிஸ்ட் செல்வாக்கு அதிகமாக இருந்தது. 1920ஆம் ஆண்டில் அன்றைய பம்பாயில் நடைபெற்ற முதல் மாநாட்டில் ஏ.ஐ.டி.யூ.சி உருவாக்கப்பட்டது. சுதந்திரப் போராட்ட வீரர் லாலா லஜபதி ராய் அதன் முதல் தலைவராக தேர்வானார்.
சோசலிசமும், கம்யூனிசமும் மேற்கிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பிளவுவாத சித்தாந்தங்கள் என்று கூறியது ஆர்.எஸ்.எஸ். அந்த அமைப்பின் தலைவராக இருந்த எம்.எஸ். கோல்வால்கர், “முஸ்லீம்களும், கிறிஸ்தவர்களும், கம்யூனிஸ்டுகளும் எங்கள் மூன்று எதிரிகள்” என்று மிக மோசமாக முன்வைத்தார் (1940). ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் அதன் பரிவாரமும், பாஜகவும் இந்தக் கூற்றை எப்போதும் பின்பற்றி வருகிறார்கள்.
உயர்சாதி ஆதிக்கம்
கிறிஸ்டோப் ஜாஃப்ரலோட் என்ற அரசியல் ஆய்வாளர், இந்தியாவின் இந்து தேசியவாத இயக்கங்கள் உயர்சாதி சமூகப் பழமைவாதத்தால் பெரிதும் வடிவமைக்கப்பட்டுள்ளன என்பதை பலமுறை சுட்டிக்காட்டியுள்ளார். இந்துத்துவா மற்றும் சாதி குறித்து அவர் எழுதிய ஒரு முக்கியமான கட்டுரையில், “தொடக்கம் முதலே இந்து தேசியவாத இயக்கம், அதன் சமூகப் பழமைவாத தன்மையினால் உயர்சாதியினராலேயே தலைமைதாங்கப்பட்டு வருகிறது” என்று கூறுகிறார்.
தொடக்ககால ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்து மகாசபா ஆகிய அமைப்புகளின் தலைமையில் நடுத்தர வர்க்க மராட்டிய பிராமணர்களின் ஆதிக்கம் காணப்பட்டது. வி.டி. சாவர்கர், பி.எஸ். மூஞ்சே, கே.பி. ஹெட்கேவார், எம்.எஸ். கோல்வால்கர், எம்.டி. தியோராஸ், கே.எஸ். சுதர்சன், மோகன் பகவத் ஆகிய அனைவரும் பிராமணப் பின்னணி கொண்டவர்கள். இதுவரை பிராமணர் அல்லாத ஆர்.எஸ்.எஸ் தலைவராக இருந்த ஒரே நபர் ராஜேந்திர சிங்; அவரும் ராஜ்புத் தாக்கூர் என்ற உயர்சாதியைச் சேர்ந்தவரே.
இவ்வகையில், சாதி மற்றும் வர்க்க அடிப்படையிலான அரசியல் எழுச்சிகளுக்கு எதிரான ஒரு ‘எதிர் அணிதிரட்டலாக’ ஆர்.எஸ்.எஸ். செயல்பட்டது. பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள், விவசாயிகள், தொழிலாளர்கள் ஆகியோரின் தனித்துவமான அரசியல் அடையாளங்கள் சுயாதீன அரசியல் சக்திகளாக வளர்வதை அனுமதிப்பதற்குப் பதிலாக, அவற்றை பரந்த ‘இந்து’ அடையாளத்திற்குள் உறிஞ்சிக்கொள்ள ஆர்.எஸ்.எஸ். முயன்றது.
அதே நேரத்தில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பை வெறுமனே பிராமண ஆதிக்கத்தைப் பாதுகாக்கும் சதியாக மட்டும் புரிந்துகொள்ள முடியாது. வரலாற்று யதார்த்தம் அதைவிட சிக்கலானது. தனது சமூக மறுவடிவமைப்பு முயற்சிகளின் ஒரு பகுதியாக, இந்த அமைப்பு தனது ஆரம்பகால உயர்சாதி அடித்தளத்தைத் தாண்டி விரிவடைந்தது. பின்னர் வந்த பல தசாப்தங்களில், இதர பிற்படுத்தப்பட்ட சாதியினரிடமும், தலித் மற்றும் ஆதிவாசி சமூகங்களிடமும் கூட தீவிர உறுப்பினர் சேர்க்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது.
இந்த மாற்றம் அரசியல் ரீதியாகவும் அதற்கு பலனளித்தது. சமூக முரண்பாடுகளை ‘இந்து நாகரிகத்திற்கே எதிரான அச்சுறுத்தல்’ என மறுவரையறை செய்ததன் மூலம், சாதி பிளவுகளை வைத்துக் கொண்டே இந்துக்களை ஒருங்கிணைக்கும் அரசியல் வடிவத்தை ஆர்.எஸ்.எஸ். உருவாக்கியது. அதேவேளையில், சாதி எதிர்ப்பு, வர்க்க அடிப்படை அரசியல் ஒரு தீவிர மாற்றுச் சக்தியாக வளர்வதையும் அது கட்டுப்படுத்தியது.
மனுசட்டங்களுக்கு தீவிர ஆதரவு
ஆர்.எஸ்.எஸ். எப்போதுமே மனுஸ்மிருதியையும், பிராமணீயத்தையும் உறுதியாகப் பாதுகாத்து வருகிறது. ராமாயணத்திலும் மகாபாரதத்திலும் இடம்பெறும் சம்பூகன், ஏகலைவன் மற்றும் சீதை தொடர்பான சமூக அநீதிக் கதைகளை நாம் அனைவரும் அறிவோம். மனுஸ்மிருதி என்பது ‘சட்ட வகுப்பாளர்’ என்று கூறப்படும் மனுவால் எழுதப்பட்ட சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான நூலாகும். இந்த நூல் முற்றிலும் பிராமணியமானது. அது சூத்திரர்களையும் (விவசாயிகள், கைவினைஞர்கள்), பெண்களையும் மனிதர்களாகவே கருதவில்லை.
மனுஸ்மிருதி மரபின்படி தலித் மக்கள் சூத்திரர்களாகக் கூட கருதப்படவில்லை என்பதை இங்கே நினைவில் கொள்ள வேண்டும். அவர்கள் இன்னும் கீழ்நிலைக்கு தள்ளப்பட்டு, நால்வருண அமைப்புக்கு வெளியே வைக்கப்பட்டனர். மகாத்மா ஜோதிராவ் பூலே அவர்களை “ஆதி சூத்திரர்கள்” என்று குறிப்பிட்டார். சூத்திரர்களும் பெண்களும் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்று மனுஸ்மிருதியில் கூறப்படும் பகுதிகள், எந்தவொரு உணர்வுள்ள மனிதரின் ரத்தத்தையும் கோபத்தில் கொதிக்கச் செய்யும் அளவுக்கு உள்ளன.
ஆயினும் சாவர்கர் எழுதினார்:
“மனுஸ்மிருதியே நமது இந்து தேசத்திற்கு வேதங்களுக்குப் பிறகு மிகவும் போற்றத்தக்க மறைநூலாகும். பண்டைய காலம் முதலே நமது கலாச்சாரம், வழக்கங்கள், சிந்தனை மற்றும் நடைமுறைகளின் அடிப்படையாக அது இருந்து வருகிறது. இந்த நூல் பல நூற்றாண்டுகளாக நமது தேசத்தின் ஆன்மீக மற்றும் தெய்வீக முன்னேற்றத்தை விதிமுறைப்படுத்தி வந்துள்ளது. இன்றும் கோடிக்கணக்கான இந்துக்கள் தங்கள் வாழ்க்கையிலும் நடைமுறையிலும் பின்பற்றும் விதிகள் மனுஸ்மிருதியையே அடிப்படையாகக் கொண்டவை. இன்று மனுஸ்மிருதியே இந்துச் சட்டமாக உள்ளது.” (‘மனுஸ்மிருதியில் பெண்கள்’, சாவர்கர் சமக்ரா, தொகுதி 4)
கோல்வால்கர் மனுவை “உலகின் முதல் மற்றும் மிகச் சிறந்த சட்ட இயற்றுநர்” என்று பாராட்டினார். மேலும், “உலகின் அனைத்து மக்களும் இந்துஸ்தானத்திற்கு வந்து, இந்த மண்ணின் ‘முதலில் பிறந்தவர்கள்’ எனக் கூறப்படும் பிராமணர்களின் புனித பாதங்களில் தங்கள் கடமைகளை கற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் தனது சட்ட நூலில் கூறுகிறார்” என குறிப்பிட்டார்.
கோல்வால்கர் மேலும் எழுதினார்:
“இந்து மக்கள் என்போர் விராட் புருஷன்; சர்வ வல்லமையுடைய இறைவன் அவர்களிலே வெளிப்படுகிறார். அவர்கள் ‘இந்து’ என்ற சொல்லைப் பயன்படுத்தாவிட்டாலும், புருஷ சூக்தத்தில் வரும் பின்வரும் விளக்கத்தில் அது தெளிவாகிறது. அதில் சூரியனும் சந்திரனும் அவரது கண்கள் என்றும், நட்சத்திரங்களும் வானமும் அவரது நாபியிலிருந்து உருவாக்கப்பட்டவை என்றும், பிராமணர் அவரது தலை, க்ஷத்திரியர் கைகள், வைசியர் தொடைகள், சூத்திரர் கால்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. அதாவது இந்த நான்கு வருண அமைப்பைக் கொண்ட இந்து மக்கள் தாமே நமது கடவுள். இறைமை குறித்த இந்த உயர்ந்த பார்வையே நமது ‘தேசம்’ என்ற கருத்தின் மையமாகும். மேலும் இது நமது சிந்தனையில் ஊடுருவி, நமது பண்பாட்டு பாரம்பரியத்தின் பல தனித்துவமான கருத்துக்களுக்கு தோற்றமளித்துள்ளது.”
(சாய்வெழுத்து அசல் உரையிலேயே உள்ளது.)
(மேலுள்ள இரண்டு மேற்கோள்களும் We or Our Nationhood Defined என்ற நூலில் இருந்து எடுக்கப்பட்டவை.)
இன்றைய மிக முக்கியப் பணி
ஆர்.எஸ்.எஸ்-பாஜகவின் இலக்காக இஸ்லாமிய, கிறிஸ்தவ மத சிறுபான்மையினர் மட்டும் இல்லை. அவர்களின் மனுஸ்மிருதி ஆதரவு நிலையில் இருந்து பார்க்கும்போது, தலித்துகள், பழங்குடிகள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பெண்களும் பாதிப்புகளை எதிர்கொள்கிறார்கள். பாட்டாளி வர்க்கமும், விவசாயிகளும், நடுத்தர வர்க்கத்தின் பெரும் பிரிவுகளும் என உழைக்கும் மக்களின் அனைத்து பகுதியுமே ஏகாதிபத்தியச் சார்பு, கார்ப்பரேட் ஆதரவு ஆர்.எஸ்.எஸ்-பாஜக கூட்டின் காரணமாக அநாகரீகமான தாக்குதல்களை பலமுனைகளில் எதிர்கொள்கின்றனர்.
அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல்களின் கடுமையான முடிவுகளைக் கணக்கில் கொண்டு பார்க்கும்போது, மக்களுக்கும், ஒட்டுமொத்த நாட்டுக்குமே ஆபத்தான எதிரிகளான ஆர்.எஸ்.எஸ்-பாஜக கூட்டினை தனிமைப்படுத்துவதும், தோற்கடிப்பதும் தவிர இந்தியாவில் வேறெந்தப் பணியும் அவசர முக்கியத்துவமானதாக இல்லை. அனைத்து இடதுசாரி, ஜனநாயக, மதச்சார்பற்ற சக்திகளும் இந்த மிக முக்கியப் பணியை வலிமையுடன் முன்னெடுக்க தம்மை தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும்.
தமிழில்: இரா.சிந்தன்

Leave a Reply