செயற்கை நுண்ணறிவும் வேலைவாய்ப்பின் மீதான பாதிப்புகளும்
பேரா. பிரபாத் பட்நாயக்
தமிழில்: மோசஸ் பிரபு
எழுத்தாளர்களுக்கு மாற்றாக, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதை கண்டித்து கடந்த ஆண்டு அமெரிக்காவில் ஹாலிவுட் எழுத்தாளர்கள் ஒன்றிணைந்து செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டிற்கு எதிராக போராட்டம் நடத்தினர். சில கட்டுப்பாடுகளை விதிப்பதாக வாக்குறுதி அளித்தபோது போராட்டம் கைவிடப்பட்டது. ஆனால், அவர்கள் எழுப்பிய அடிப்படையான பிரச்சனைகளுக்கு இன்னும் முழுமையாக தீர்வு காணப்படவில்லை.
செயற்கை நுண்ணறிவு அறிமுகம் குறித்தும், அதன் நன்மை தீமைகள் குறித்தும், பல்வேறு கோணத்தில் பலர் எழுதியுள்ளனர். அது உண்டாக்கப்போகும் பெருவாரியான வேலையிழப்புகள் குறித்தே நாம் இங்கு விவாதிக்கவுள்ளோம். இது அறிவியல் வளர்ச்சிக்கு எதிரான வாதமல்ல. ஆனால், முதலாளித்துவ அமைப்பின் கீழ், செயற்கை நுண்னறிவு எவ்வாறு பயன்படுத்தப்படும் என்பதை மட்டும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். முதலாளித்துவ அமைப்பு, உலகின் பெரும்பாலான நாடுகளில் ஆதிக்கம் செலுத்துவதால், தொழிலாளி வர்க்கத்தின் வேலைத் தன்மை குறித்து தீவிரமாக நாம் விவாதிக்க வேண்டியுள்ளது.
முதலாளித்துவ சமூக அமைப்பில் செயற்கை நுண்ணறிவை அறிமுகப்படுத்துவதன் நோக்கம், மனிதர்களின் பணிச்சுமையை குறைப்பதற்காக அல்ல. மாறாக, வேலையின்மையை அதிகரிக்கவும், குறைவான ஆட்களை வைத்து உற்பத்தியை அதிகளவில் பெருக்குவதும்தான் அதன் குறிக்கோளாக இருக்கும். அதற்கு நேர் எதிராக, சோசலிச சமூக அமைப்பில், செயற்கை நுண்ணறிவு மனிதர்களின் பணிச்சுமையை குறைக்கும் நோக்கத்தோடு பயன்படுத்தப்படும். பணி செய்யும் நேரத்தையும் குறைக்கும் அதே நேரத்தில் ஊதியம் எந்த வகையிலும் குறைக்கப்படாது. வேலைப்பகிர்வு, உற்பத்தி பகிர்வு உள்ளிட்ட நெறிமுறைகள் பின்பற்றப்படும். முதலாளித்துவ சமூக அமைப்பில், வேலைப்பகிர்வு, உற்பத்தி பகிர்வு என்பதெல்லாம் சாத்தியமில்லாத தொலைவில் உள்ளது.
உதாரணமாக, 100 வேலையாட்கள் இணைந்து 8 மணி நேரத்தில் 500 பொருட்களை தயாரிக்கிறார்கள் எனில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் 50 வேலையாட்களே 8 மணி நேரம் வேலை செய்து 500 பொருட்களை தயாரிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டால், முதலாளித்துவ சமூகம் உடனடியாக 50 நபர்களை வேலையை விட்டு வெளியேற்றும். மீதமுள்ள 50 வேலையாட்களை வைத்து உற்பத்தியை தொடர்ந்து நடத்தும். இதனால் வேலையின்மை அதிகரிக்கும்; அல்லது இன்னொரு வகையில், 100 வேலையாட்களை வைத்து 1,000 பொருட்களை அதே கூலியில் தயாரிக்கும்படி நிர்பந்திக்கும். தொழிலாளிகளின் பணிச்சுமை எவ்வகையிலும் குறையாது. சுரண்டல் மேலும் அதிகரிக்கும். வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்தால், தொழிலாளர்களின் ஊதிய உயர்வு குறித்தோ, சங்கமாக இணையும் சிந்தனைகள் குறித்தோ, யோசிக்க முடியாது.
ஆனால், சோசலிச சமூக அமைப்பு தொழிலாளி வர்க்க நிலையிலிருந்து இதை அனுகும்போது, உற்பத்தி குறையாமல், அதற்கு ஈடாக தொழிலாளிகளின் பணி நேரம் குறைக்கப்படும்; கூடுதலாக புதியவர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும். தொழிலாளிகளுக்கு கூடுதல் ஓய்வு நேரமும் கிடைக்கும். இதுதான் முதலாளித்துவம் அறிவியல் வளர்ச்சியை பயன்படுத்துவதற்கும், சோசலிசம் அறிவியல் வளர்ச்சியை பயன்படுத்துவதற்கும் உள்ள வித்தியாசம். எனவேதான், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் முதலாளித்துவ கட்டுப்பாட்டில் இருப்பதால், அது வேலையிழப்பை ஏற்படுத்தும் ஆபத்து உள்ளது என்கிறோம்.
19ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில், இங்கிலாந்தில் ஜவுளி உற்பத்தி துறையில் இயந்திரங்களை அறிமுகப்படுத்தும்போது, கைத்தறி தொழிலாளிகளுக்கு வேலையிழப்பு ஏற்பட்டது. எனவே, தொழிலாளிகள் ஒரு கூட்டமாய் ஒன்றிணைந்து இயந்திரங்களை அடித்து உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அவர்களின் கோபம் இயந்திரத்தின் பக்கம் திரும்பியது; அல்லது அவ்வாறு கருதும் சூழலை முதலாளிகள் உருவாக்கினர். ஆனால், இயந்திரத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலாளித்துவம் ஏற்படுத்திய சுரண்டலை அவர்கள் முதன்மை முரண்பாடாக கருதவில்லை. ஒரு இயந்திரம் வரும்போது, தொழிலாளிகள் வேலை இழக்கும்போது, ஏற்படுகிற கோபம் நியாயமானதே. ஆனால், அது இயந்திரத்தின் மீது வராமல், அதை கட்டுப்படுத்தும் முதலாளிகள் நடத்தும் சுரண்டலுக்கு எதிராக வரவேண்டும். வேலை இழப்பு செய்யாமல் மாற்று வழிகளை சிந்திக்க வேண்டும். அன்று நடந்த எதிர்ப்பு போல் இல்லாமல், இன்று நாம் பதிவு செய்யும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்கான எதிர்ப்பு என்பது முதலாளித்துவ அமைப்பிற்கு எதிரான எதிர்ப்பாக இணைத்து பார்க்கிறோம். இது செயற்கை நுண்ணறிவு என்ற அறிவியல் வளர்ச்சிக்கு எதிரான எதிர்ப்பு அல்ல என்பதில் உறுதியாக இருக்கிறோம்.
19ஆம் நூற்றாண்டு முதல் இன்றுவரை இயந்திரங்கள் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் என்று கூறிய பொருளாதார நிபுனர்களின் கணிப்பு எப்போதும் தவறாக இருந்திருக்கிறது என்பதை வரலாறு நிருபித்துக்கொண்டே வருகிறது. அதில், பிரபலமான பொருளாதார நிபுணர் டேவிட் ரிக்கார்டோ என்பவர் வேலையிழப்புகள் ஏற்பட்டால் லாப விகிதம் அதிகரிக்கும்; இதனால் லாபம் பெருகி புதிய வேலை வாய்ப்புகளுக்கான முதலீடு உருவாகும் என்றார். முதலாளித்துவ பொருளாதாரத்தில் மொத்த தேவையின் மீது பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பே இல்லை என்று வாதிட்டார். தொழிலாளிகளின் ஊதியங்கள் அனைத்தும் சந்தைகளில் நுகரப்படும். நுகரப்படாத முதலாளிகளின் லாபங்கள் சேமிக்கப்பட்டு, மீண்டும் புதிய முதலீடுகளுக்கு வழிவகுக்கும் என்றார். லாப விகிதங்கள் அதிகமானால் முதலீடுகளும் மூலதன சரக்குகளும் அதிகரிக்கும். இதன் விளைவாக சரக்குகளின் எண்ணிக்கையும் வேலைவாய்ப்பும் அதிகரிக்கும் என்றார். ரிகார்டோ, முதலாளிகளின் லாபத்தை பெருக்க வழி சொல்லும் ஒரு பொருளாதார நிபுணர். அவர் இயந்திரங்களை அறிமுகப்படுத்தும்போது, அது தற்காலிகமாக சில வேலையிழப்புகளை உண்டாக்கலாம். ஆனால், சில நாட்களில் அது கூடுதலான வேலைவாய்ப்புகளை உருவாக்கும். இயந்திரங்கள் இல்லாத காலகட்டத்தில் இருந்த வேலை வாய்ப்புகளைவிட, இயந்திரங்கள் அறிமுகமான பிறகு வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளது என்றார்.
முந்தைய தொழிலாளிகள் இயந்திரத்தின் அறிமுகம் நீண்டகாலமோ அல்லது குறுகிய காலமோ வேலைவாய்ப்பிற்கு மிகப்பெரிய கேடு விளைவிக்கிறது என்று கருதினர். இதற்கு மாறாக, பொருளாதார நிபுணர் ரிக்கார்டோ, அது உண்மை எனில், அப்போது ஏன் ஐரோப்பாவில் வேலையின்மை தொடர்ந்து அதிகரிக்கவில்லை? என்ற கேள்வியை முன்வைத்தார். ஐரோப்பாவில் வேலையின்மை ஏற்படாததற்கு இரண்டு காரணம் இருக்கிறது.
முதல் காரணம்: மிதமான வெப்பமுள்ள பகுதிகளுக்கு மிகப்பெரியளவில் ஐரோப்பிய மக்கள் இடம்பெயர்ந்தார்கள். ஏற்கனவே அங்கு வசித்திருந்த பூர்வகுடி மக்களின் நிலங்களை ஆக்கிரமித்தனர். இந்த ஆக்கிரமிப்பு நடைமுறையால் ஐரோப்பிய பொருளாதார பாதிப்புகளும் வேலையின்மையும் குறைவாக காணப்பட்டது. 19ஆம் நூற்றாண்டில் துவங்கி முதலாம் உலகப்போர் வரை சுமார் 50 மில்லியன் ஐரோப்பியர்கள் கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆப்ரிக்காவிற்கு இடம் பெயர்ந்துள்ளாதாக நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் ஆர்த்தர் லூயிஸ் தெரிவிக்கிறார்.
இரண்டாவது காரணம்: ஐரோப்பாவில் வேலையின்மை அதிகமாக இல்லாததற்கு, இந்தியா மற்றும் சீனா ஆகிய அடிமை நாடுகளில் நிலவிய முதலாளித்துவத்திற்கு முந்தைய சமூக அமைப்பில், ஐரோப்பிய பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டு வியாபாரமானது முக்கிய காரணம். இதனால், அந்ததந்த நாடுகளின் உள்ளூர் தொழில்கள் நலிவடைந்தது; கைவிஞைர்கள் உள்ளிட்ட பல தொழில்களில் ஈடுப்பட்டவர்களுக்கு வேலை பறிபோனது. அடிமையாக்கப்பட்ட நாடுகள் வேலையில்லா திண்டாட்டத்தில் தவித்த அதே நேரத்தில், ஐரோப்பா வேலைவாய்ப்பை பெற்ற பகுதியாக உருவானது.
பெருநகர முதலாளித்துவத்திற்கு ஏகாதிபத்தியம் வழங்கிய, மேலே குறிப்பிடப்பட்ட இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள், தற்போது நவ தாராளவாத முதலாளித்துவ அமைப்பின் கீழ் பலனளிக்கக் கூடியவையாக இல்லை. ஏனெனில், கெய்னீசியன் கொள்கையில் கெய்ன்ஸ் கூறியதுபோல, உள்நாட்டு கிராக்கியை உத்தரவாதப்படுத்துவதற்கு ஏதுவாக, முதலாளித்துவத்திற்கு முந்தைய சந்தைகள் செய்ததைப் போல, முதலாளித்துவப் பிரிவினருக்கான கிராக்கியை உருவாக்க, பெருநகரங்களுக்குள் உள்நாட்டு வேலைவாய்ப்பை அதிகரிக்க, அரசுச் செலவினங்களை செய்ய வேண்டும் என்பதோ அல்லது அதிகப்படுத்த வேண்டும் என்பதோ நவதாராளவாத முதலாளித்துவத்திற்கு அருவருப்பான விஷயம். உண்மையில், அது நவதாராளவாத முதலாளித்துவத்தின் கீழ் இனி வேலை செய்யாது என்பது தற்போதைய நீடித்த நெருக்கடி நிலையிலிருந்து தெளிவாகிறது. இந்தச் சூழ்நிலையில், செயற்கை நுண்ணறிவினை பெரிய அளவில் பயன்படுத்துவது, பெருநகரங்களில் மட்டுமல்ல, எல்லாப் பகுதிகளிலும் பெரிய அளவில் வேலையின்மையை உருவாக்கும். வேலையில்லாத் திண்டாட்டத்தை எதிர்கொள்வதற்கு, இந்தப் பிரச்சினையில் வலுவான குரல் எழுப்ப வேண்டியது எழுத்தாளர்கள் மற்றும் பின்னணிக் குரல் கலைஞர்கள் மட்டுமல்ல; சாதாரண தொழிலாளர்களும் பயங்கரமான வேலையின்மையை சந்தித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த இக்கட்டான வேலையின்மை நெருக்கடிச் சூழலைத் தடுக்க, பொருத்தமான கோரிக்கைகளை எழுப்பி, தொழிலாளர்களின் போராட்டங்கள் தொடங்கப்படுவதும் முழு வீச்சில் நடத்தப்படுவதும் முக்கியம்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
