
முதலாளித்துவ உற்பத்தி அமைப்பும் உற்பத்தி சக்திகளும்
பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா
- உற்பத்தி சக்திகளின் தொடர் வளர்ச்சி என்பது முதலாளித்துவ உற்பத்தி அமைப்பின் இலக்கணம் என்று கார்ல் மார்க்ஸ் ஐயப்பாடுகளுக்கு இடமின்றி தெளிவுபடுத்தியுள்ளார். இவ்வளர்ச்சி சீராக, தொய்வின்றி நிகழாது என்பதையும் அவர் விளக்கியுள்ளார். அவ்வப்பொழுது முதலாளித்துவ பொருளாதாரம் நெருக்கடிக்கு உள்ளாகும். மூலதன மறு உற்பத்தி சிக்கலுக்கு உள்ளாகும். இதற்கு அடிப்படை காரணம், உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கும், முதலாளித்துவ உற்பத்தி உறவுகளுக்கும் இடையிலான உள்ளார்ந்த முரண்பாடுகள்தான் என்பதை மார்க்ஸ் விளக்கியுள்ளார். சமகால முதலாளித்துவ அமைப்பு பற்றிய சில புரிதல்களில் மார்க்சின் அழுத்தமான இந்தப் படிப்பினை உள்வாங்கப்படுவதில்லை.
- மார்க்ஸ் தனது மூலதனம் நூலில் முன்வைத்துள்ள இன்னொரு முக்கியமான வாதம் முதலாளித்துவ அமைப்பின் மைய முரண்பாடான தொழிலாளி-முதலாளி வர்க்கப் போராட்டத்தின் காரணமாகவும், முதலாளிகளுக்கிடையே நிகழும் கடும் போட்டியாலும், மூலதனம் பெருநிறுவனங்களிடம் குவியும்; மையப்படுத்தப்படும் என்பதாகும். இதனால் முதலாளித்துவம் ஏகபோகத் தன்மை கொண்டதாக மாறும். ஒரு துறைக்குள் போட்டி என்பது, இவ்வாறு பின்னுக்கு தள்ளப்பட்டாலும், இதன் பொருள் போட்டி அழிந்துவிடுகிறது என்பதல்ல. போட்டியின் களம் ஒரு துறைக்குள் என்பதிலிருந்து, விரிவடைந்த உலகளாவிய தன்மை பெறுகிறது என்பதாகும்.
- மார்க்ஸ் மூலதனம் நூலில் முதலாளித்துவ வளர்ச்சி பற்றி அளித்த வெளிச்சத்தில் லெனின் மார்க்சீய புரிதலை மேலும் முன்னெடுத்து சென்றார். 1870களில் இருந்து முதல் உலகப்போர் துவங்கிய 1914ஆம் ஆண்டு வரையிலான காலத்தில், முதலாளித்துவ வளர்ச்சியின் தன்மையை லெனின் ஆய்வு செய்தார். இக்காலகட்டத்தில் போட்டி முதலாளித்துவம் உலகளவில் ஏகபோகமாக மாறிவிட்டது என்பதை கண்டறிந்தார். இந்த ஏகபோக முதலாளித்துவ கட்டத்தை முதலாளித்துவ அமைப்பின் ஏகாதிபத்திய கட்டம் என்று லெனின் வரையறுத்தார். உலகம் முழுவதையும் ஒரு சில முதலாளித்துவ வல்லரசுகள் பங்குபோட்டுக் கொண்டதையும், அவர்களுக்கிடையே போர்கள் வெடிக்கும் என்பதையும் மிகச்சரியாக கணித்தார், இத்தகைய புரிதலின் அடிப்படையில், ஏகாதிபத்தியம் பாட்டாளி வர்க்கப் புரட்சியின் நுழைவாயில் என்றும் தைரியமாக பிரகடனம் செய்தார். இப்பிரகடனம் ஆரூடம் அல்ல, ஆய்வு முடிவு என்பதை1917இல் நிகழ்ந்த ரஷ்ய புரட்சி மூலம் மெய்ப்பிக்கவும் செய்தார். அதே சமயத்தில், ஏகாதிபத்தியம் முதலாளித்துவ உற்பத்தி அமைப்பின் இறுதி கட்டம் என்பதையும் லெனின் வலியுறுத்தினார். எனினும், முதலாளித்துவத்தின் இறுதி கட்டத்திலும், அதன் அழிவுகட்டத்திலும், உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி தொடரும் என்பதையும் லெனின் மிகச் சரியாகவே கணித்தார்.
- அண்மையில், முதலாளித்துவ உற்பத்தி அமைப்பில் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி தவிர்க்க முடியாதது என்ற கருத்து கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. ஒரு சில அறிஞர்கள் இக்கருத்தை புறக்கணிக்கின்றனர்; அல்லது நிராகரிக்கின்றனர். அவர்கள் முன்வைக்கும் வாதம் வருமாறு:
லெனின் ஏகாதிபத்தியம் என்ற நூலை எழுதிய காலத்தில் தேசிய நிதி மூலதனங்கள் ஒவ்வொரு நாட்டிலும் செயல்பட்டன என்றாலும், அவை தங்குதடையின்றி நாடுகடந்து பயணிக்கும் தன்மை கொண்டவையாக இல்லை. ஒரு நாட்டின் நிதி மூலதனம் இன்னொரு நாட்டுக்குள் நுழைந்தும், வெளியேறியும், தங்குதடையின்றி செயல்படும் வாய்ப்புகள் லெனின் காலத்தில் இல்லை. ஆனால், சமகால பன்னாட்டு முதலாளித்துவ அமைப்பில், நிதி மூலதனம் நாடு விட்டு நாடு பாயும் உரிமை பெற்றுள்ளது. இத்தகைய நிதி மூலதனம் பங்கு சந்தை உட்பட பல்வேறு வகை சந்தைகளில் ஊக நடவடிக்கைகள் மூலமாக லாபம் ஈட்டுவதை தனது பிரதான நடவடிக்கையாக கொண்டுள்ளது. எனவே, உற்பத்தியில் ஈடுபாடு கொண்ட மூலதனத்தில் இருந்து இது வேறுபடுகிறது. அரசுகள், முதலீடு மற்றும் மக்கள் நல நடவடிக்கைகளுக்காக செலவுகளை மேற்கொள்ளுவதை நிதி மூலதனம் எதிர்க்கிறது. பன்னாட்டு நிதி மூலதனம் பொருளாதாரத்தில் அரசின் பங்கை கடுமையாக எதிர்க்கிறது. இதன் ஆதிக்கம், தேசிய அரசுகள் முதலீடுகளை மேற்கொண்டும், இதர செலவுகளை அதிகரித்தும், கிராக்கியை மேம்படுத்துவதை சாத்தியம் அற்றதாக ஆக்குகிறது. கிராக்கியை மேம்படுத்தும் முனைவுகளை தேசிய அரசுகள் மேற்கொண்டால், அரசுகளின் வரவு-செலவு பற்றாகுறை கூடும், இதனால் அந்த நாடுகளில் பணவீக்கம் ஏற்படுவதோடு, அந்த நாட்டின் நாணயமும் மதிப்பிழக்கும் என்றும், அதனால் இத்தகைய நாடுகளில் இருந்து மூலதனம் பிற நாடுகளுக்கு வெளியேறி விடும் என்றும், நிதி மூலதனம் வலுவாக பிரச்சாரம் செய்வதுடன், பன்னாட்டு மற்றும் தேசிய நிதி அமைப்புகள் வாயிலாக சிக்கன நடவடிக்கைகளை திணிக்கிறது. மேலும் அரசுகள் மூலதனம் வெளியேறாமல் இருப்பதை உறுதிசெய்ய, அரசு செலவுகளை கட்டுப்படுத்தி, சிக்கன நடவடிக்கைகளை எடுப்பதோடு, செல்வந்தர்கள் மீதும் மூலதனத்தின் மீதும் வரி விதிக்கக்கூடாது என்பதை உலகெங்கும் உலா வரும் நிதி மூலதனம் வலியுறுத்துகிறது. ஏகாதிபத்திய வல்லரசுகளின் கடன் வலைகளில் சிக்கும் வளரும் நாடுகளில், சிக்கன நடவடிக்கைகள் என்பதே அரசுகளின் பிரதான கொள்கையாக அமைகிறது. பன்னாட்டு நிதி மூலதனம் நிர்ப்பந்திக்கும் கொள்கைகள், உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கு தடையாக அமைகிறது. மேலும் இத்தகைய கொள்கைகள் வருமான ஏற்றத்தாழ்வுகளை அதிகரித்து, கிராக்கியை சுருக்கி, உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கு தடையாக உள்ளன. இதனால் வளர்ந்த நாடுகளிலும் பின்தங்கிய நாடுகளிலும் தேக்க நிலையை ஏற்படுத்துகின்றன.
இந்த வாதத்தில் பெரும்பாலான அம்சங்கள் ஏற்புடையவை என்றாலும், இந்த வாதம் முற்றிலும் சரியானதா? இதில் இருந்து சமகால முதலாளித்துவ அமைப்பில் முழுக்க முழுக்க தேக்கநிலை மட்டுமே உள்ளது என்ற முடிவிற்கோ, உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி ஸ்தம்பித்து விட்டது என்ற முடிவிற்கோ போவது சரியாக இருக்குமா?
- நிதிமூலதன நடவடிக்கைகள் மீதான அரசு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, நாடு விட்டு நாடுபாயும் நிதி மூலதன செயல்பாடுகள் ஊக நடவடிக்கைகளுக்கு ஊக்கம் அளிக்கும் என்பது உண்மை. நிதி மூலதன ஆதிக்கத்தின் விளைவுகள் இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) திட்டத்தில் மிகச் சரியாகவே விளக்கப்பட்டுள்ளன. பன்னாட்டு நிதி மூலதன ஆதிக்கம் பற்றி கட்சி திட்டம் (பத்தி 2.6) கூறுவதில் ஒரு பகுதி வருமாறு:
உலகெங்கும் உலாவரும் நிதி மூலதனம் நாடுகளின் இறையாண்மையை தாக்குகின்றன. அபரிமிதமான லாபம் ஈட்டும் நோக்குடன் அனைத்து நாடுகளுக்குள்ளும் தங்கு தடையின்றி சென்று வர முனைகிறது. ஏகாதிபத்திய அமைப்பு இந்த ஊக நிதி மூலதனம் சார்பாக, அதன் கட்டற்ற பரவலுக்கு எதிரான அனைத்து தடைகளையும் தகர்க்கிறது. இம்மூலதனதிற்கு சாதகமான பேரத்தை உலகின் அனைத்துப்பகுதிகளிலும் திணிக்கிறது.
பன்னாட்டு நிதியம், உலக வங்கி, உலக வர்த்தக அமைப்பு ஆகியவை காலனி ஆதிக்க காலத்திற்குப் பின் நிலவும் இந்த அநீதியான உலக அமைப்பை பாதுகாக்கும் கருவிகளாகும். உருவாக்கப்பட்டுள்ள நிதிமூலதன மேலாதிக்கம் முன்னணி முதலாளித்துவ நாடுகளில் மந்தமான வளர்ச்சிநிலையை ஏற்படுத்துகிறது. நிதி மூலதன மேலாதிக்கம் மூன்றாம் உலக நாடுகளுக்கு தீவிரமான சுரண்டலையும் அதிகரிக்கும் கடன் சுமையையும் ஏற்படுத்துகிறது.
மிக முக்கியமாக இன்னொன்றையும் கட்சி திட்டம் கூறுகிறது:
இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் பன்னாட்டு சக்திகளின் பலாபலம் ஏகாதிபத்தியத்திற்கு சாதகமாக இருந்தாலும், முதலாளித்துவம் புதிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மூலம் தொடர்ந்து உற்பத்தி சக்திகளை வளர்த்தாலும், இவ்வமைப்பு நெருக்கடி நிறைந்து, முட்டுச்சந்தில் நிற்கும் அமைப்பாகவே உள்ளது. மேலும் ஒடுக்குமுறை, வர்க்க சுரண்டல் மற்றும் அநீதிகள் நிறைந்த அமைப்பாகவே உள்ளது.
அதாவது, கட்சி திட்டம் மிகச்சரியான இயக்கவியல் பார்வையில் நின்று, சமகால முதலாளித்துவத்தை விளக்குகிறது. நிதிமூலதன மேலாதிக்கம் வளரும் நாடுகளை கடுமையாக சுரண்டுகிறது; அதன் செயல்பாடு, வளர்ந்த நாடுகளின் வளர்ச்சி வேகத்தையும் குறைக்கும் விதத்தில் செயல்படுகிறது. அதேசமயம், முதலாளித்துவ அமைப்பின் இயல்பையொட்டி அதன்கீழ் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியும் தொடர்கிறது.
தவறன புரிதல்
ஒரு சில அரசியல்பொருளாதார அறிஞர்கள் நிதி மூலதன ஆதிக்கம் பற்றிய இத்தகைய சரியான புரிதலில் இருந்து வேறுபட்டு, சமகால முதலாளித்துவத்தில் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியையே மறுக்கும் போக்கிற்கு இரையாகியுள்ளனர். இதனை நாம் ஏற்க முடியாது.
- நாம் கணக்கில் கொள்ளவேண்டியுள்ளது. ஏராளமான உபரிகள் பெரும் பன்னாட்டு, உள்நாட்டு முதலாளிகளிடமும் கம்பெனிகளிடமும் குவியும்பொழுது, அவற்றில் ஒருபகுதியாவது ஆலைத்தொழில் உற்பத்தியிலும் சேவைத்துறை முதலீடுகளிலும் செலவிடப்படுகிறது என்பதை மறந்துவிடக் கூடாது. முதலாளிகளுக்கு இடையிலான போட்டியும் தொடர்கிறது. இவற்றின் விளைவாக, இத்துறைகளின் உற்பத்தி பெருகுவது மட்டுமின்றி, ஏராளமான புதிய தொழில்நுட்ப முன்னேற்றங்களும் நிகழ்கின்றன. மிகப்பெரிய கம்பெனிகளுக்கிடையே முன்பிருந்ததைப் போலவே பன்னாட்டு சந்தைகளை கைப்பற்றுவதற்கு கடும் போட்டி நிலவுவதை நாம் காண்கிறோம்.
- மொத்த தேசிய உற்பத்தி மதிப்பில் சேவைத்துறையின் பங்கு அதிகரிக்கிறது; பொருள் உற்பத்தி துறைகளின் பங்கு குறைந்து வருகிறது என்ற தரவில் இருந்து, உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி நிகழவில்லை என்ற முடிவுக்கு வருவது தவறாகும். எடுத்துக்காட்டாக, தகவல் தொழில்நுட்ப துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத்தால் வலுப்பெறும் துறைகளை அரசு புள்ளிவிவர ஏடுகளில் சேவைத்துறை என்று அழைப்பது, இத்துறைகளில் ஏற்படும் முன்னேற்றங்கள், வேளாண்மை, ஆலை தொழில் போன்ற பொருள் உற்பத்தித்துறைகளில் உற்பத்தி திறனை கணிசமாக கூட்டுகிறது என்பதை காணத் தவறுவதற்கு ஒரு காரணமாகிறது. தேச உற்பத்தி மதிப்பின் சதவிகிதமாகத்தான் வேளாண்மை, ஆலைத்துறை ஆகியவற்றின் உற்பத்தி பங்கு குறைந்துள்ளது. ஆனால் அத்துறைகளில் உற்பத்தி முன்பை விட கூடியுள்ளது. முக்கியமாக, உற்பத்தி திறன் தொடர்ந்து கூடியுள்ளது. பல துறைகளில் புதிய தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட்டு களம் இறக்கப்படுகின்றன.
- நிதி மூலதன ஆதிக்கம் ஊக செயல்பாடுகளை ஊக்குவிப்பதால், சமகால முதலாளித்துவத்தில் உண்மையான மூலதன சேர்க்கையும் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியும் நிகழ்வதில்லை என்ற கருத்து தவறானது. முதலாளித்துவ உற்பத்தி அமைப்பின் தர்க்க விதியே, உற்பத்தி சக்திகளை வளர்ப்பது என்பதுதான். முத்லாளித்துவத்தையும் அதன் உடமை உறவுகளையும் கணக்கில் கொண்டால், உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி செல்வந்தர்களுக்கே பெரும் பயன் அளிப்பதில் வியப்பு ஏதுமில்லை. நம்மை சுற்றி வேளாண்மை, தொழில், சேவைத்துறைகள் என்று அனைத்துத் துறைகளிலும் தொடர்ந்து ஏற்பட்டு வரும் தொழில் நுட்ப வளர்ச்சி, முதலாளித்துவ அமைப்பின் வீழ்ச்சி காலத்திலும் இவ்வமைப்பில் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி என்பது மையமான அம்சம் என்று நமக்கு நினைவூட்டுகிறது. இத்தகைய அறிவியல்-தொழில்நுட்ப வளர்ச்சியை கணினி துறையில் மட்டுமின்றி, பல்வேறு தொழில் துறைகளில், வேளாண்மையில், மருத்துவத்தில், கல்வியில், போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு சார்ந்த துறைகளில், பொதுவாக அனைத்து அறிவியல்துறைகளில், அன்றாட வாழ்க்கை சார்ந்த பல துறைகளில் நாம் கண்டு வருகிறோம்.
- சில அறிஞர்கள் சமகால ஏகபோக முதலாளித்துவத்தில் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி தொய்வு அடைந்துள்ளதாக மட்டும் கருதுவதில்லை. நவீன முதலாளித்துவம் உருவான காலத்திற்கும் இக்கருத்து பொருந்தும் என்ற நிலை எடுக்கின்றனர். நீண்ட காலமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்து என்னவென்றால், ஐரோப்பாவில் (குறைந்த பட்சம், பிரிட்டன் நாட்டில்) முதலாளித்துவம் நோக்கிய நகர்வு விவசாயத்தில் ஏற்பட்ட உற்பத்தி சக்திகளின் குறிப்பிடத்தக்க வளர்ச்சியால் சாத்தியமானது என்பதாகும். இந்த வேளாண் உற்பத்தித்திறன் வளர்ச்சியை “வேளாண் புரட்சி” என்றும் அறிஞர்கள் அழைக்கின்றனர். இக்கருத்தை ஏற்கும் சில அறிஞர்கள் பிரிட்டன்/ஐரோப்பாவில் முதலாளித்துவம் நிலைநாட்டப்பட்டதற்கு வேளாண் புரட்சிதான் பிரதான காரணம் என்று வாதிடுகின்றனர். ஆனால் இக்கருத்து ஏற்கத்தக்கதல்ல. மூலதனம் நூலில் கார்ல் மார்க்ஸ் முதலாளித்துவ அமைப்பு உருவானதற்கு, ஆரம்ப மூலதன சேர்க்கை (“ஆதி திரட்டல்”) அடிப்படையானது என்பதை மிகச்சிறப்பான வகையில் நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறார். குறிப்பாக, முதலாளித்துவம் உருவாக நிகழ்ந்த ஆரம்ப மூலதன சேர்க்கையில், இரண்டு அம்சங்களை மார்க்ஸ் நம்முன் வைக்கிறார். ஒன்று, காலனி நாடுகளை சூறையாடி சேர்க்கப்பட்ட வளங்கள் ஆரம்ப மூலதன சேர்க்கையில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதேபோல், இரண்டாவது அம்சம் என்னவென்றால், உள்நாட்டில் விவசாயிகள், கைவினைஞர்கள், உடலுழைப்பு தொழிலாளர்கள் உள்ளிட்ட ஊரக, சிறுநகர உழைக்கும் மக்களிடமிருந்து நிலங்களையும் உற்பத்தி கருவிகளையும் பறித்து, வலுவிழந்தவர்களாக ஆக்கப்பட்ட உழைக்கும் மக்கள் படையும் முதலாளித்துவ உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றது.
- முதலாளித்துவம் உருவாகும் பொழுது ஆரம்ப மூலதன சேர்க்கையின் இவ்விரு அம்சங்களும் முக்கிய பங்கு வகித்தன என்பதை அங்கீகரிப்பது மிகச்சரியான பார்வைதான்; முக்கியம்தான். ஆனால், இந்த சரியான புரிதலில் இருந்து, முதலாளித்துவ உருவாக்கத்தில் இதர சில உட்காரணங்களின் பங்கை மறுப்பது சரியல்ல. குறிப்பாக, வேளாண் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி – பகுதி இயல்பாகவும், பகுதி துவக்க நிலை முதலாளித்துவ உறவுகளால் உந்தப்பட்டும் – நிகழ்ந்ததையும் முதலாளித்துவ உருவாக்கத்தில் அதன் பங்கையும் மறுப்பது ஏற்புடையதல்ல; அவசியமும் அல்ல. அதேபோல், பிரிட்டனில் இந்த வேளாண் புரட்சியின் பகுதியாக பொது நிலங்களும் மேய்ச்சல் நிலங்களும், அரசின் ஆதரவுடன் பெரும் நிலப்பிரபுக்களால் வேலி போட்டு வளைக்கப்பட்டு, அந்நிலங்களில் பயிர் சாகுபடியும் கால்நடை தொழிலும் செய்துவந்த ஏராளமான விவசாயிகள் வெளியேற்றப்பட்டதும், ஒருசில பெருஉடமையாளர்களிடம் இவ்வாறு கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் குவிந்தும், ஏராளமான சிறு உற்பத்தியாளர்களும் விவசாயிகளும் உடமைகளை இழந்து கூலிப் படையாக மாறியதும், முதலாளித்துவ அமைப்பின் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்தன என்பதை மறுப்பதும் பொருத்தமல்ல. பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் முதலாளித்துவம் உருவானது ஒரே மாதிரியான வகையில் அமையவில்லை என்றாலும், நிலம் கையகப்படுத்தல், கூலிப்படை உருவாக்கப்படுதல், வேளாண் உற்பத்தி சக்திகள் அதிகரித்து உற்பத்தித்திறன் உயர்தல் ஆகியவை முதலாளித்துவ அமைப்பின் உருவாக்கத்தில் நடந்தன என்பதே வரலாற்றியல் அறிஞர்களின் பொதுக் கருத்து.
- ஐரோப்பாவிலும் சரி, பிரிட்டன் நாட்டிலும் சரி, முதலாளித்துவ உற்பத்தி அமைப்பின் உருவாக்கத்தில் வேளாண் புரட்சியும் அதனால் அதிகரித்த வேளாண் உற்பத்தி திறனும் குறிப்பிடத்தக்க பங்கு எதுவும் வகிக்கவில்லை என்ற வாதம் சரி என்று கருத, போதுமான, தெளிவான தரவுகள் இல்லை. மாறாக, வேளாண் உற்பத்தித் திறன் உயர்வும், “வேளாண் புரட்சி”யும் முதலாளித்துவ அமைப்பு பிரிட்டனிலும் பல ஐரோப்பிய நாடுகளிலும் முதலாளித்துவம் உருவாக முக்கிய பங்கு அளித்தன என்பதே பெரும்பாலான அறிஞர்களின் கருத்தாக உள்ளது. சில அறிஞர்கள் முதலாளித்துவ அமைப்பு உருவாகிய காலத்தில், தலா (per capita) வேளாண் உற்பத்தி மதிப்பு குறிப்பிடும்படியாக உயரவில்லை என்ற கருத்தை முன்வைக்கின்றனர். வேளாண் துறையில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் பிற துறைகளுக்கு, குறிப்பாக தொழில் துறைகளுக்கு, சென்ற சூழலில் வேளாண் துறையின் தலாஉற்பத்தி என்பது வேளாண் உற்பத்தி திறனை அளக்க பொருத்தமான அளவுகோல் அல்ல. குறிப்பிட்ட கால இடைவெளியில் நிகழும் உற்பத்தி திறன் உயர்வை மதிப்பிடும் பொழுது, ஐரோப்பாவில் இருந்தும், பிரிட்டனில் இருந்தும், ஏராளமான உழைப்பாளி மக்கள் உலகின் பிற பல நாடுகளுக்கு – குறிப்பாக வட மற்றும் தென் அமரிக்க நாடுகளுக்கு – புலம் பெயர்ந்து சென்றனர். ஆகவே, வேளாண் உற்பத்தித்திறன் உயர்வை கணிக்க ஒரு ஏக்கரில் உற்பத்தியின் மதிப்பு அல்லது ஒரு வேளாண் உழைப்பாளியின் சராசரி உற்பத்தி மதிப்பு என்ற அடிப்படையில் கணக்கிடுவதே பொருத்தமாக இருக்கும். அதுவே வேளாண் உற்பத்தி திறன் உயர்வு முதலாளித்துவ உருவாக்கத்திற்கு அளித்த பங்கை நமக்கு புலப்படுத்தும். இந்த வாதங்களுக்கு அப்பாற்பட்டு முதலாளித்துவம் மேலை நாடுகளில் உருவானபொழுது களத்திற்கு வந்த புதிய தொழில்நுட்பங்கள், உற்பத்தி முறைகள், அறிவியல் துறைகளின் பெரும் முன்னேற்றங்கள் ஏற்படுத்திய தாக்கம், வேளாண்துறையில் உற்பத்தி மற்றும் உடமை உறவுகளில் ஏற்பட்ட மாற்றங்களின் தாக்கம் ஆகியவற்றையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.
- வேளாண் உற்பத்தி திறன் உயர்வு ஐரோப்பா மற்றும் பிரிட்டனில் முதலாளித்துவ உருவாக்கத்தில் ஆற்றிய பங்கை மறுக்கும் சில அறிஞர்கள், சமகால உலக முதலாளித்துவத்தில், வளரும் நாடுகளில் நிலவும் நவதாராளமய கொள்கை சட்டகம் ஆதிக்கம் செலுத்துவதால், இதன்கீழ் உற்பத்தி சக்திகள் தேக்கமாகவே உள்ளன என்று கருதுகின்றனர். தாராளமய கொள்கைகள் கிராக்கியை மட்டுப்படுத்தும் என்ற கெய்ன்சீய கோட்பாட்டை முன்வைக்கின்றனர். இதில் பகுதி உண்மை உள்ளது என்றாலும், இதனையும் மீறி, முதலாளித்துவ அமைப்பின் உள்ளார்ந்த தன்மை காரணமாக, உற்பத்தி சக்திகள் பல துறைகளில் அதிகரித்து வருவதை நாம் அன்றாடம் காண்கிறோம்.
- மார்க்சீய பார்வையில் முதலாளித்துவ அமைப்பில் உற்பத்தி சக்திகள் வளர்வது தவிர்க்க முடியாதது. இத்தகைய முதலாளித்துவ வளர்ச்சி மூலதனத்தை வலுப்படுத்தும்; தொழிலாளி வர்க்கத்தை வலுவிழக்க வைக்க முனையும். இதை நாம் அறிவோம். ஆனால் இதன் பொருள் வளர்ச்சி நிகழாது என்பதோ, வளர்ச்சி நிராகரிக்கப்படவேண்டும் என்பதோ அல்ல. முதலாளித்துவத்தின் இயக்க விதிகளையும் விளைவுகளையும் இயக்கவியல் நிலைபாட்டில் நின்றே மார்க்ஸ் ஆய்வு செய்தார். நாம் இதனை எப்பொழுதும் நினைவில் கொள்வது அவசியம். மார்க்சீய வரலாற்றுப்பார்வை முதலாளித்துவ அமைப்பில் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி, முரண்பட்ட விளைவுகளை கொண்டிருக்கும் என்பதை வலுவாக முன்வைக்கிறது. முதலாளித்துவ அமைப்பில் நிகழும் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி, உடனடியாக மூலதனத்தை வலுப்படுத்தி, தொழிலாளி வர்க்கத்தை பலவீனப்படுத்தும். ஆனால், மறுபக்கம், முதலாளித்துவ அமைப்பின் அடிப்படையான லாப விகிதத்தையும் தொடர்ந்து பலவீனப்படுத்தும். முதலாளித்துவ வளர்ச்சியின் முரண்பாடுகள் தீவிரமடைவது தொழிலாளி வர்க்கத்தின் வலிமையை கூட்டும். மேலும், முதலாளித்துவ அமைப்பில் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியில் ஏற்படும் ஒவ்வொரு முன்னேற்றமும், எதிர்காலத்தில் சோசலிச புரட்சிகள் வெற்றி பெறும்பொழுது மானுட நலனை மேம்படுத்தும் பங்கை ஆற்றும்.
- முதலாளித்துவ உற்பத்தி அமைப்பின் வீழ்ச்சி கட்டத்திலும் உற்பத்தி சக்திகள் வளர்கின்றன என்ற கருத்து கள யதார்த்தத்தை கணக்கில் கொள்கிறது. சில விமர்சகர்கள், இக்கருத்து முதலாளித்துவத்திற்கு மெருகேற்றுகிறது என்று விமர்சிக்கின்றனர். ஆனால் சமகாலத்தில் நிகழ்ந்துவரும் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி, உழைக்கும் மக்கள் வாழ்வை மேம்படுத்த வல்லது என்பதை அவர்களால் மறுக்க முடியாது. அத்தகைய மேம்பாடு, முதலாளித்துவத்தின்கீழ் உழைப்பாளி மக்களுக்கு நிகழாது என்பது உண்மைதான். இதன்பொருள் முதலாளித்துவ அமைப்பை தூக்கி எறிவது அவசியம் என்ற வாதம் மேலும் வலுவடைகிறது என்பதுதான். முதலாளித்துவத்தின் அழிவுகட்டத்திலும் உற்பத்தி சக்திகள் வளர்கின்றன என்ற உண்மையை மறுப்பது; அல்லது பெரிதும் குறைத்து மதிப்பிடுவது, முதலாளித்துவத்தை வீழ்த்துவது என்ற இலக்கை அடைய உதவியாக இருக்காது.
நிறைவாக
- இக்கட்டுரையில் ஒரு மையமான அம்சத்தை மட்டுமே வலியுறுத்தியுள்ளோம். அது என்னவென்றால், முதலாளித்துவ உற்பத்தி அமைப்பு எல்லா காலங்களிலும் – தனது வீழ்ச்சி காலத்திலும் கூட – உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியை தனது இயல்பாக கொண்டிருக்கும் என்பதுதான். முதலாளித்துவத்தை வீழ்த்த விரும்பும் நாம் இதனை குறைத்து மதிப்பிடக்கூடாது. உள்வாங்கிக் கொள்ள வேண்டும். ஆனால் இக்கருத்து சரியாக புரிந்துகொள்ளப்படவேண்டும். முதலாளித்துவ அமைப்பு திட்டமிடப்படாத உற்பத்தி அமைப்பாகும். அதன் அடிப்படை முரண்பாடு தொழிலாளி-முதலாளி வர்க்க முரண்பாடாகும். இவ்வமைப்பில் இதன் அடிப்படை முரண்பாடு எல்லா காலத்திலும் இயந்திரமயமாக்கலை முன்னெடுக்க செய்யும். முதலாளிகளுக்கு இடையிலான போட்டியும் அதேவகையில் செயல்படும். இவ்வமைப்பில், ஒருபுறம் உற்பத்தி சக்திகள் இதனால் வேகமாக அதிகரிக்கும். ஆனால் இந்த அமைப்பின் உற்பத்தி உறவுகள் பெரும்சொத்து மற்றும் வருமான ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கும். கிராக்கியை மட்டுப்படுத்தும். உற்பத்தி மேலும் மேலும் சமூக மயமாகும். ஆனால் அதன் அனுபோகம் தனிஉடமை தன்மை கொண்டதாகவே இருக்கும். இந்த முரண்பாட்டால் கிராக்கி பிரச்சினை மீண்டும் மீண்டும் எழும். மேலும் இயந்திரமயமாக்கலால் உபரி மதிப்பை உருவாக்கும் நேரடி உழைப்பின் பங்கு, ஒட்டு மொத்த முதலீட்டின் விகிதமாக கணக்கிடுகையில் ஒப்பீட்டளவில் குறையும். இது அவ்வப்பொழுது லாப விகிதத்தை குறைக்கும் வகையில் செயல்படும். இதனால் முதலாளித்துவ வளர்ச்சியில் லாப விகிதமும் குறையும் போக்கை கொண்டதாகவே இருக்கும். இவ்விரு அம்சங்களும் – கிராக்கி பற்றாக்குறையும், லாபவிகிதத்தின் குறையும் போக்கும் – மூலதன மறு உற்பத்தியை மீண்டும் மீண்டும் சிக்கலாக்கும். எனவே, எல்லா காலத்திலும் உற்பத்தி சக்திகளை வளர்ப்பது முதலாளித்துவ உற்பத்தி அமைப்பின் இயல்பு என்ற போதிலும், அவ்வமைப்பில் மீண்டும் மீண்டும் நெருக்கடிகள் வெடிக்கும்; அமைப்பின் வளர்ச்சி ஸ்தம்பிக்கும். இத்தகைய தருணங்களில், வர்க்க போராட்டம் தீவிரமடைந்து, ஆங்காங்கு முதலாளித்துவ அமைப்பின் ஆதிக்கத்தை தகர்க்க வாய்ப்புகள் ஏற்படும். எனவே, இக்கட்டுரையில் நாம் வலியுறுத்தியுள்ள அம்சம் – இவ்வமைப்பின் வீழ்ச்சிகாலத்திலும் கூட உற்பத்தி சக்திகள் வளரும் என்ற அம்சம் – முதலாளித்துவத்திற்கு அழகு ஊட்டும் முயற்சி அல்ல. அதனை ஆழமாக புரிந்து கொண்டு வர்க்கப்போராட்டத்தை முன்னெடுக்கவேண்டும் என்பதே நாம் உள்வாங்க வேண்டிய படிப்பினை.
You may also like
No comments
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

Leave a Reply