
சாதிகளின் மக்கள் தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீட்டு விகிதம் தீர்மானிப்பது சரியான அணுகுமுறையா?
இரா. சிந்தன்
சாதிவாரி இடஒதுக்கீடு, வகுப்புவாரி இடஒதுக்கீடு ஆகிய வார்த்தைகள் கடந்த காலத்தில் பெரும்பாலும் ஒன்றுக்கொன்று மாற்றாகப் பயன்படுத்தப்பட்டன. ஆனால், சாதிகளின் மக்கள்தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீட்டு விகிதத்தை நிர்ணயிக்க வேண்டும் என்ற வாதங்கள் முன்வைக்கப்படுவதால், இந்த இரண்டுக்கும் இடையிலான வேறுபாட்டை முதலில் நுணுக்கமாக அணுகி தெளிவுபட வேண்டும்.
இந்தியச் சமூகத்தில் சாதி என்பது வெறும் கலாச்சார அடையாளம் அல்ல; சமூக, கல்வி, பொருளாதார, அரசியல் அதிகாரங்களைப் படிநிலையாக அமைத்துச் சுரண்டும் வரலாற்றுச் சமூக அமைப்பாக அது உள்ளது. இப்போதும் செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் ஆயிரக்கணக்கான சாதிகளும் துணைச் சாதிகளும் உள்ளன. எனவே நாம் தனிச் ‘சாதிவாரியாக’ இட ஒதுக்கீடு வழங்குவதில்லை. மாறாக சமூக, கல்வி மற்றும் பொருளாதாரப் பின்னடைவின் அடிப்படையில் பட்டியல் சாதி, பட்டியல் பழங்குடி, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (வேறு சில மாநிலங்களில் அதி-பிற்படுத்தப்பட்டோர்) ஆகிய பட்டியல் வகுப்புகளாக வகைப்படுத்துகிறோம்.
இப்படிப் பட்டியலிடுவதற்கான அடிப்படை சமூக நீதிப் பார்வையே ஆகும். வரலாற்று ரீதியாக ஒடுக்கப்பட்ட சாதிகள் கல்வியிலும், பொருளாதாரத்திலும், சமூக நிலையிலும் பின்னடைந்துள்ள நிலைமையைக் கணக்கிலெடுத்தே பட்டியல்கள் தீர்மானிக்கப்படுகின்றன. அதனால்தான் காலேல்கர் கமிசன்/ மண்டல் கமிஷன் என இரண்டுமே சமூக / கல்விப் பின்னடைவையே முதன்மை அளவுகோலாகக் கொண்டு, பொருளாதார நிலையையும் இணைத்து ஆய்வுகளை மேற்கொண்டன.
இதற்கு மாறாக, சாதிவாரி மக்கள்தொகையை கொண்டு இட ஒதுக்கீட்டு விகிதங்கள் தீர்மானிக்க வேண்டும் என்ற வாதம் உள்ளது. இது சமூகநீதியல்ல. இந்த வாதங்கள் எழுவதற்கான உடனடிக் காரணம் சாதிவாரி கணக்கெடுப்பின் அவசியம் பற்றிய தவறான புரிதல், அடிப்படைக் காரணம் சாதி அடையாளங்களை வாக்கு வங்கியாகத் திரட்டும் அடையாள அரசியல் ஆகும்.
சாதிவாரிக் கணக்கெடுப்பின் மூலம், ஒவ்வொரு சாதிகளின் சமூகப் பொருளாதார நிலைமையை புள்ளியியல் அடிப்படையில் அறிந்துகொள்வது மிக அவசியம். சி.பி.ஐ(எம்) இந்த வலியுறுத்தலை முரணின்றி தொடர்ந்து மேற்கொள்கிறது. எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்திய பின்னணியில் சாதிவாரிக் கணக்கெடுப்பும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், கால மாற்றத்தில் ஒவ்வொரு சாதியும் அடைந்துள்ள மாற்றங்களை சமூக, கல்வி, பொருளாதார நிலைமைகளை வெளிக்கொண்டுவர வேண்டும். குறிப்பாக, பட்டியல் சாதிகளைப் போலவே பிற பிற்படுத்தப்பட்ட சாதிகளின் மெய்யான நிலைமைகள் ஆராயப்பட வேண்டும்.
அவ்வாறு கணக்கிட்ட பிறகு, இட ஒதுக்கீட்டு விகிதத்தை தீர்மானிப்பதில் மக்கள் தொகை மட்டும் ஒரு காரணியாக முடியாது.
இப்போதுள்ள நடைமுறைப்படி பட்டியல் சாதி / பட்டியல் பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு, மக்கள் தொகை விகிதத்திற்கு நேர் விகிதத்தில் உள்ளது. ஆனால், தனியொரு சாதியின் எண்ணிக்கை அடிப்படையில் அல்ல. சில சாதிகளின் நிலை மிக மோசமாக இருப்பது கண்டறியப்பட்டபோது, உள் இடஒதுக்கீடு கோரிக்கை எழுந்தது. உள் இட ஒதுக்கீட்டுக்கு அடிப்படையாக இருப்பதும் மக்கள்தொகை அல்ல; ஒடுக்கப்பட்ட நிலையின் தீவிரம்தான்.
பட்டியல் சாதிகளை தவிர மற்ற பிரிவுகளுக்கு மக்கள்தொகையின் நேர்விகிதத்தில் இட ஒதுக்கீடு இல்லை. பிற்படுத்தப்பட்ட சாதிகளின் வகைப்பாட்டில் பொருளாதார நிலைமைகளிலும், கல்வி மற்றும் அதிகார நிலைமைகளிலும் பாரதூரமான மாறுபட்ட நிலைமைகள் உள்ளன. இட ஒதுக்கீட்டின் மொத்த சதவீதம் 50% என வரம்பு விதிக்கப்பட்டதாலும், வேறு பல காரணங்களாலும் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டு விகிதம் போதிய அளவு உயர்த்தப்படவில்லை. தமிழ்நாட்டின் கடும் போராட்டத்தின் விளைவாக 69% இட ஒதுக்கீடு உள்ளது. ஆனாலும் இதுவும் கூட மக்கள் தொகைக்கு நேர்விகிதம் என்ற கணக்கீட்டில் தீர்மானிக்கப்பட்டதல்ல.
ஏனென்றால், இட ஒதுக்கீட்டின் அடிப்படை பிரதிநிதித்துவ அம்சமும், சமூகத்தில் நிலவும் படிநிலைச் சுரண்டலை தகர்க்கும் அம்சமும் சேர்ந்தே உள்ளது.
சாதிய படிநிலைச் சுரண்டலின் சமூக, பொருளாதார/வர்க்க அடித்தளங்களை மனதில் கொள்வது மிக அவசியம். அதில் நின்று சாதிப் படிநிலைச் சுரண்டலை கூர்மையாக எதிர்க்க வேண்டும். தோழர் இ.எம்.எஸ். மிகச் சரியாக குறிப்பிட்டதைப் போலவே, முற்பட்ட சமூகங்களின் சமூக, பொருளாதார / கலாச்சார நிலைக்கு சமமாக ஒடுக்கப்பட்ட மக்களும் வர வேண்டும். எனவே, நூற்றாண்டுகளாக மறுக்கப்பட்ட கல்வி, வேலைவாய்ப்பு, அதிகாரம், சுயமரியாதையை ஆகியவற்றை மீட்டெடுக்கும் பல செயல்முறைகளில் – நிலச்சீர்திருத்தம், பொதுக் கல்வி, பொதுச் சுகாதாரம், அனைவருக்கும் வேலைவாய்ப்பு, வீட்டுவசதி, சமூகப் பாதுகாப்பு போன்ற ஜனநாயக மாற்றங்களும் இணைய வேண்டும்.
இட ஒதுக்கீட்டுக்கு அடிப்படை இந்த சமூகநீதிப் பார்வையே ஆகும். அது சாதிய படிநிலைச் சுரண்டலை முற்றாக ஒழிக்கும் ஆயுதமாகவே இருக்க வேண்டும். அவ்வகையில் தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு விரிவாக்கப்பட வேண்டும். சாதி ஒடுக்குமுறை இல்லாத, வர்க்கச் சுரண்டலற்ற ஒட்டுமொத்த சமூக விடுதலைப் போராட்டத்துடனும் இணைக்கப்பட வேண்டும்.
இந்த புரிதலை சி.பி.ஐ(எம்) தனது கட்சி திட்ட ஆவணத்தில் தெளிவாக கூறுகிறது: “முதலாளித்துவ வளர்ச்சிப் பாதையிலான சமூகம் ஏற்கெனவே இருந்த சாதிய முறையுடன் சமரசம் செய்துகொண்டது. இந்திய முதலாளி வர்க்கமே கூட இந்த சாதிய வேறுபாடுகளை வளர்த்து விடுகிறது. தலித் மக்களில் மிகப் பெரும் பகுதியினர் உழைக்கும் வர்க்கத்தின் பகுதியாக உள்ள நிலையில், சாதிய முறைக்கும், தலித் மக்கள் மீதான ஒடுக்குமுறைக்கும் எதிரான ஒற்றுமை, உழைக்கும் மக்களின் ஒற்றுமையே ஆகும். சமூக சீர்திருத்த இயக்கங்கள் மூலம் சாதிய முறை மற்றும் அதன் அனைத்து வடிவத்திலான சமூக ஒடுக்குமுறையை எதிர்த்துப் போராட வேண்டியது ஜனநாயகப் புரட்சியின் முக்கியமான பகுதியாகும். சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் வர்க்கச் சுரண்டலுக்கு எதிரான போராட்டத்துடன் பின்னிப்பிணைந்த ஒன்றாகும்.”
இவ்வாறான, சமூக நீதிப் பார்வையை பின்னுக்கு தள்ளினால் அது சாதிகளின் மக்கள்தொகை வலிமை அடிப்படையிலான சண்டையாக மாறும். இதனால், ஒவ்வொரு சாதியும் அடையாளமாக வலுப்படுவதுடன், ஒன்றுக்கு ஒன்று எதிராக மோதும்படி கொம்பு சீவப்படும். இது பாதிக்கப்பட்ட மக்களுக்குள்ளாகவே போட்டியையும் பிளவையும் உருவாக்கும்.
சாதிகளை இப்போதுள்ள நிலைமையிலேயே பராமரித்துக் கொண்டு, மத வெறுப்பின் அடிப்படையில் பரந்த இந்து அடையாளத்தை உருவாக்க நினைக்கும் ஆர்.எஸ்.எஸ்/பாஜக நோக்கத்திற்கு இந்த பிளவுபட்ட சூழல் உதவவும் கூடும். எனவேதான், சாதிவாரியாக மக்கள்தொகை அடிப்படையில் விகிதங்களை தீர்மானிக்கும் கோரிக்கையை தொடக்கத்திலேயே சி.பி.ஐ(எம்) எதிர்க்கிறது.
You may also like
No comments
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

Leave a Reply