
மனிதர்களால் அதிகரித்து வரும் புவி வெப்பமயமாதல் – மார்க்சிய நோக்கில்…
பேரா. டி. ஜெயராமன்
முதலாளித்துவ உலகில் இன்று உற்பத்தியும் நுகர்வும் அபரிமிதமான வளர்ச்சியை அடைந்துள்ளது. புதைபடிவ எரிபொருட்களாகிய நிலக்கரி, எரிவாயு, எண்ணெய் போன்ற பொருட்களை முழுமையாகப் பயன்படுத்தத் துவங்கியது என்பதுதான் இந்த வியத்தகு வளர்ச்சிக்கு அடிப்படை ஆதாரமாக உள்ளது. இப்படி மனிதப் பயன்பாடுகளின் காரணமாக அதிகரித்து வரும் புவி வெப்பமயமாதல் என்பது இன்றைய உலகின் மிகப் பெரிய பிரச்சினையாக மாறியிருக்கிறது. முதலில் இந்தப் பிரச்சினையின் தன்மை குறித்து வரையறை செய்வதென்பது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. ஏனென்றால், இதுகுறித்த விஞ்ஞானப்பூர்வமான புரிதல் இல்லாமல் போகும்போது, அது பல குழப்பங்களுக்கும் வழிவகுக்கிறது.
நிலக்கரி, எண்ணெய், எரிவாயு போன்ற புதைபடிவ எரிபொருட்களை முழுமையாகப் பயன்படுத்தத் துவங்கியதில் இருந்து, முதலாளித்துவத்தின் கீழ் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி துரிதப்படுத்தப்பட்டது. இவ்வாறு உற்பத்தி சக்திகள் வளர்ச்சியுறும்போது, உண்மையில் ஒரு முரண் எழுவதன் வெளிப்பாடுதான் இந்த புவி வெப்பமயமாதல். 21வது நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகளிலேயே இந்த முரண் வெளிப்படத் துவங்கிவிட்டது. உண்மையில் வர்க்க ஆட்சி என்பது இல்லாமல் இருந்திருக்குமானால், அனைவரின் சுதந்திரமான வளர்ச்சிக்கும் தேவையான பொருளாதார அடிப்படையை வழங்கி அனைவருக்குமான நல்வாழ்வை வழங்கும் வகையில் உற்பத்தி சக்திகள் வளர்ச்சி பெற்றிருக்கும்.
பசுங்கூட வாயுக்களின் வெளியேற்றமும் அதன் விளைவுகளும்
அதே நேரத்தில், இந்த புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டால் உருவாகும் பசுமை கூட வாயுக்கள், குறிப்பாக கார்பன் டைஆக்சைடு, மனித இனத்திற்கே ஒரு நிலையற்ற ஆபத்தை விளைவிக்கிறது. உலகம் முழுவதும் சராசரி புவி மேற்பரப்பு வெப்பநிலை ஒவ்வொரு 1000 பில்லியன் டன் கார்பன் டைஆக்சைடு வெளியேற்றத்திற்கும் 0.45°C அதிகரிக்கிறது. தொழில்துறை உருவாக்கத்திற்கும் வளர்ச்சிக்கும் முன்பாக 1850ஆம் ஆண்டில் இருந்து தொடங்கிய இந்த உயர்வு தற்போது சுமார் 1.1°C ஆக உயந்துள்ளது. புதைபடிவ எரிபொருட்களை தொடர்ந்து பயன்படுத்துவது, பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும், குறிப்பாக மனித சமூகத்திற்கு, மிகப் பிரத்தியேகமாக தனிமனிதனுக்கே, தீவிர விளைவுகளை ஏற்படுத்துவதாக உள்ளது.
இது வெறும் எதிர்மறை மட்டுமல்ல; யதார்த்தத்தில் உண்மையான முரணாகவும் இன்று எழுந்துள்ளது. ஏனெனில் இதன் மூலம் கிடைக்கும் நன்மையும் மனித இனத்திற்கான அச்சுறுத்தலும் ஒரே நேரத்தில் மூலக் காரணியின் தன்மையிலிருந்து, அதாவது, புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டிலிருந்து, உருவாவதன் காரணமாக எதிர்மறைகளின் ஒற்றுமையாகவும் அது இருக்கிறது.
உலக வெப்பமயமாதல் என்ற சவால், மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையேயான முரணின் ஒரு புதிய கட்டத்தைக் குறிக்கிறது. முதல்முறையாக, இயற்கையின் பௌதீக-வேதியியல் அம்சங்களில், மனித இனத்திற்கான நல்வாய்ப்பு என்பதே இந்த முரணின் முதன்மையான அம்சமாக மாறி முன்னுக்கு வந்துள்ளது. மருந்தியல் போன்ற மற்ற துறைகளில், இது முரண்பாட்டின் ஆதிக்க அம்சமாக ஏற்கனவே முன்னுக்கு வந்துள்ளது.
இந்த முரணைத் தீர்க்க வேண்டுமானால், புதைபடிவ எரிபொருட்கள் இல்லாத மாற்று மூலாதாரங்களிலிருந்து (சூரிய சக்தி, காற்று, நீர்மின் சக்தி, அணு சக்தி, கடல் அலை சக்தி, ஹைட்ரஜன், உயிரி எரிபொருட்கள் மற்றும் இன்னும் கண்டறியப்படாதவை எவை இருந்தாலும்) அவற்றின் மூலம் உற்பத்தித் துறை மற்றும் தொழில்துறைகள் இயங்க வேண்டும்.
தொழில்துறை மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை பசுங்கூட வாயுக்களின் வெளியேற்றத்திலிருந்து பிரித்தெடுப்பது என்பது மிகப் பெரிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சவாலாகும். மின் உற்பத்தி, நவீன போக்குவரத்து, நவீன விவசாயம், இன்னபிற துறைகளில் புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டை விலக்கி இயக்குவது என்பது இப்போதைக்கு இன்னும் சாத்தியமில்லாத ஒன்றே.
நியாயமான ஓர் உலகில், இந்த முயற்சியின் விளைவாக வரக்கூடிய சுமை, வளங்கள், திறன்களின் அடிப்படையில் நியாயமாக பகிரப்பட வேண்டும். அதாவது, வளர்ந்து வரும் நாடுகளில், பசி பட்டினியை பின்னுக்குத் தள்ளி, உணவுப் பாதுகாப்பிற்கான உற்பத்தியை உத்தரவாதப்படுத்தும் வகையில், பின்னடைவுகளை தீர்க்கவும், வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டினை அடிப்படையாகக் கொண்டிருக்கும் தொழில்நுட்பங்களையே பயன்படுத்த வேண்டியிருக்கும். இதற்கிடையில், தற்போதுள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தேவைகளும் குறைவுகளும், சர்வதேச ஒத்துழைப்பின் அடிப்படையில் புதிய அறிவு மற்றும் புதுமைகள் கொண்டு தீர்க்கப்பட வேண்டும்.
ஆனால் இவ்வாறான ஒழுங்கமைந்த, தர்க்கரீதியான மாற்றம், குறிப்பாக, சர்வதேச ஒத்துழைப்பின் அடிப்படையில், நடைபெறுவதற்கான வாய்ப்பு இன்றைய உலகில் குறைவாகவே தெரிகிறது. உற்பத்திச் சக்திகளின் இயல்பு சார்ந்த மாற்றம், குறிப்பாக சர்வதேச ஒத்துழைப்பின் அடிப்படையில், ஒரு சுயாதீனமாக செயல்படக்கூடிய செயல்முறை அல்ல. காரணம், இந்த மாற்றம் தொழில்துறையையும் பொருளாதார உறவுகளையும் மீறி நடக்க முடியாது. அதேபோல், கோவிட்-19 தொற்றுநோயை எதிர்கொள்ளும்போது கூட, சந்தைகளின், லாபங்களின் மேலாதிக்கத்தை இழந்துவிடக் கூடாத வகையில், சர்வதேச ஒத்துழைப்பு மிகக் குறைந்த அளவிலேயே நடைபெற்றது என்பதையும் நாம் மறந்துவிடலாகாது.
மாற்றத்திற்கான முதலாளித்துவ எதிர்ப்பும் பாசிச சூழ்நிலையும்:
முதலாளித்துவத்தின் தர்க்க நியாயங்கள் தொழில்நுட்ப முன்னேற்றத்தை ஊக்குவிப்பதாக இருந்தாலும், உண்மையில், பெரிய அளவிலான தொழில்நுட்ப மாற்றங்கள் முதலாளித்துவத்தின் ஒரு பெரிய பகுதியினருக்கு பயனளிக்கும் வகையில் இல்லாவிட்டால் அவை நிகழாது. இரண்டாவதாக, அத்தகைய மாற்றத்தால், முதலாளிகள் லாபம் அடைவார்களா அல்லது இழப்பார்களா என்பது அவர்களுக்குத் தெரியவில்லை என்றால், இந்த மாற்றம் அரசால் தங்கள் மீது திணிக்கப்படாமல், சந்தைக்கு விடப்படுவதையே எப்போதும் விரும்புகிறார்கள். தற்போதுள்ள தொழில்நுட்பத்தின் ஆதிக்க நிலையிலிருந்து பயனடையும் மூலதனப் பிரிவு, ஒரு புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தக் கட்டாயப்படுத்தும் அரசின் எந்தவொரு முயற்சியையும் எப்போதுமே எதிர்க்கும்.
அதேநேரத்தில், இந்தப் பிற்போக்குப் பிரிவானது முழுமையான கட்டுப்பாட்டை தன்னிடம் கொண்டிருக்கவில்லை என்பதை, ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள சில G-7 பொருளாதாரங்களால் பசுங்கூட வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட சில மிதமான முயற்சிகளிலிருந்து தெரிந்து கொள்ளலாம். அதேநேரத்தில், காலநிலை மாற்றத்தின் சிக்கலை தீவிரமாக எடுத்துக் கொள்ளும் சில பிரிவுகள், பசுங்கூட வாயு வெளியேற்றத்தின் தாக்கங்களையும், புதைபடிவ எரிபொருட்களிலிருந்து விலகிச் செல்ல வேண்டியதன் அவசியம் குறித்தும் தீவிரமாக சிந்தித்தாலும், முதலாளித்துவத்திற்கு முந்தைய எச்சங்களை இன்னும் பொருளாதாரத்திலும் சமூகத்திலும் கொண்டுள்ள வளரும் நாடுகளின் மீதுதான் இந்தச் சுமையை மடைமாற்றுகின்றன. வளரும் நாடுகளில், முடிந்தவரையில் சிறிய அளவிலான வளர்ச்சி மற்றும் மேம்பாட்டை அனுமதிப்பதன் மூலம், பசுங்கூட வாயுக்களின் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தி தங்கள் சுமையைக் குறைக்க விரும்புகின்றன. இந்த முறையில், முடிந்தவரையில், உலகளாவிய தெற்கு நாடுகளில், குறிப்பாக அதிக எண்ணிக்கையிலான ஏழை நாடுகளில், எரிசக்தி அணுகலைக் கட்டுப்படுத்துதல், தொழில்துறை வளர்ச்சி, நுகர்வில் கட்டுப்பாடுகளை விதிப்பது, அதே நேரத்தில் அதிக கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தை உறிஞ்சுவதற்கு ஏற்ப, பெரிய அளவில் தாவரங்களைப் பாதுகாக்கும் இடமாக மாற்றுவது ஆகியவை அடங்கும்.
மேம்பட்ட முதலாளித்துவ நாடுகளில், நிதித்துறை, தொழில்துறை ஆகிய இரண்டிலும் ஆதிக்கம் செலுத்தும் ஏகபோக மூலதனம், புதுப்பிக்கத்தக்க அல்லது புதைபடிவ எரிபொருள் அல்லாத, (அணுசக்தி உள்ளிட்ட) எரிசக்தி ஆதாரங்களை நோக்கிச் செல்வதற்கான முயற்சியை மேற்கொள்ளத் தயங்குவதில் இருந்து, இதை நாம் மிகவும் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். இப்படி புதைபடிவ எரிபொருட்களிலிருந்து விலகிச் செல்வதற்கு எதிராக நிற்கும் ஜி-7 நாடுகளில், தனது கூட்டாளிகளுடன் தலைமை தாங்கி அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஏகபோக மூலதனம் முக்கியமாக நிற்கிறது. மற்றபடி, பல முதலாளித்துவ பிரிவுகள், குறிப்பாக கார்ப்பரேட்டுகள், இப்படி புதுப்பிக்கத்தக்க ஆதாரங்களை நோக்கிய மாற்றத்தில் தாங்கள் ஆதாயம் அடைவோமா, இல்லையா என்பது தெளிவாக இல்லாதபோது, இந்த மாற்றம் அரசால் விதிக்கப்படுவதற்குப் பதிலாக சந்தையின் முன்பாக வைக்கப்படவேண்டும் என்றே விரும்புகின்றன.
இந்த நிலைப்பாடு, வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளின் நாகரிகச் சமூகத்தில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை இயக்கங்கள், பல்வேறு அரசியல் கொள்கைகளைக் கொண்ட ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் பிரச்சினைகள் அல்லது காலநிலை மாற்றம் குறித்த ஆய்வினை மேற்கொள்ளும் விஞ்ஞானிகள் உட்பட பலராலும் பெரிதும் ஆதரிக்கப்படுகிறது. “Limits to Growth” 1972 என்ற வளர்ச்சிக்கான வரம்புகள் என்ற புத்தகம் 1972 இல் Club of Rome ஆல் வெளியிடப்பட்டது! (ரோம் கிளப் என்பது 1968 ஆம் ஆண்டு இத்தாலி நாட்டின் ரோம் நகரில் நிறுவப்பட்ட உலகளாவியதொரு சிந்தனை மன்றம் (global think tank) ஆகும். இது முக்கியமான உலகளாவிய பிரச்சினைகளைக் கண்டறிந்து, அவற்றைத் தீர்ப்பதில் கவனம் செலுத்தும் அறிவுஜீவிகள் மற்றும் வணிகத் தலைவர்களைக் கொண்ட அமைப்பு). இதுவே இதற்கான அறிவியல் ஆதாரமாக பயன்படுத்தப்படுகிறது. இது, சீனாவின், இந்தியாவின், தற்போதைய திறன்மிகு பொருளாதார வளர்ச்சியை உலகின் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கு முக்கிய ஆபத்துகளாக அடையாளம் காட்டுகிறது. மேலும், குறைந்தபட்சம் ஓரளவு காலநிலை சவாலைத் தீர்ப்பதற்கான அடிப்படையாக, இந்தக் கொள்கை, தற்போது தெற்காசியா, சப் சஹாரா ஆப்பிரிக்கா மற்றும் மத்திய, தென் அமெரிக்காவின் வளர்ச்சியைத் தடுக்கவேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டு, முழுமையானதொரு கட்டுப்பாட்டினை, அல்லது ஒப்பீட்டளவில் ஒரு கட்டுப்பாட்டை முன்மொழிகிறது.
புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டிலிருந்து துரிதமாக மாற வேண்டிய அவசியத்தை ஏற்க மறுக்கும் ஏகபோக முதலாளித்துவப் பிரிவு, வெளிப்படையாக, பகுத்தறிவற்ற, அறிவியல் விரோதக் கண்ணோட்டத்துடன் ஒரே மாற்றாக இதனை முன்வைக்கிறது. இந்தக் கண்ணோட்டம் மிகவும் தீங்கு விளைவிக்கக் கூடியதாகும். வளரும் நாடுகளுக்கான தேர்வாக, ஒரேயடியாக “climate denialism” அதாவது “புதைபடிவ எரிபொருட்களை எரிப்பது போன்ற மனித நடவடிக்கைகளால் காலநிலை மாற்றம் ஏற்படவில்லை என்ற வாதத்தை” முன்வைப்பது அல்லது உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கான முயற்சிகளை முற்றாகக் கைவிடுவது என்பது முன்வைக்கப்படுகிறது.
வளரும் நாடுகளை, காலநிலை நடவடிக்கைகளில் (காலநிலை நடவடிக்கை என்பது புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டிலிருந்து பசுங்கூட வாயு வெளியேற்றத்தைக் குறைத்தல், அதிக மீள்தன்மை கொண்ட உள்கட்டமைப்பை உருவாக்குதல் மற்றும் காலநிலை மாற்ற தாக்கங்களுக்குத் தயாராகுதல், சரிசெய்தல் போன்றவை) ஈடுபட வைப்பதற்காக, முன்னேறிய முதலாளித்துவ நாடுகளின் காலநிலை சார்பு நடவடிக்கை பார்வை (“காலநிலை சார்பு நடவடிக்கை பார்வை” என்பது காலநிலை மாற்றத்தை நிவர்த்தி செய்வதற்கான அவசரத் தேவையை அங்கீகரிக்கின்ற, அதன் காரணங்களையும் தாக்கங்களையும் குறைப்பதற்கான நடவடிக்கைகளை ஆதரிக்கின்ற ஒரு முன்னோக்கை உள்ளடக்கியது.) தெற்கில், விவசாயம் மற்றும் சிறு உற்பத்தியில் ஈடுபடும் சிறு உற்பத்தியாளர்கள், பெரும் எண்ணிக்கையில் வறுமையிலும் பற்றாக்குறையிலும் இருப்பதற்கு முக்கிய காரணமாக, காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை மட்டும் சித்தரிக்க முயல்கிறது. இதற்கான ஆதாரமாக பல கல்வி ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் உண்மையில் வறுமையின் மூல காரணங்கள் சமூக, பொருளாதார, அரசியல் காரணிகள்தான் என்பதை அது புறக்கணிக்கிறது.
வளரும் நாடுகளில் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி என்பதைப் பொறுத்த வரையில், புவி வெப்பமடைதல் பிரச்சினை என்பது, அந்த நாடுகளின் ஆளும் வர்க்கங்களுக்கும், மக்களுக்கும் ஏகாதிபத்தியத்துடனான முரண்பாட்டை அதிகரிக்கிறது. எனவே, வளரும் நாடுகளின் ஆளும் வர்க்கங்களிடையே ஏகாதிபத்தியத்துடனும், ஏகாதிபத்தியக் கொள்கைகளுடனும், பொதுவான ஒத்துழைப்பு காணப்பட்டாலும், காலநிலை மாற்றத்தின் பின்னணியில் ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வு மிகவும் வலுவாக உள்ளது.
ஆனால், முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில் காலநிலை மாற்றம் குறித்த பிரச்சினையில் தொடர்ந்து நீடித்து வருகிற பிளவு, வளரும் நாடுகளிடையேயும் உருவாக்கப்படுகிறது. சிவில் சமூகத்தின் சில குறிப்பிடத்தக்க பிரிவுகளும், ஆளும் உயரடுக்குக்கு முன்னேறிய முதலாளித்துவ அரசுகளின் சிவில் சமூகம் மற்றும் ஆளும் உயரடுக்குடன் ஒத்துழைத்து கைகோர்க்க முயல்கின்றன. அத்தகைய சார்புநிலையை ஊக்குவிப்பதற்காக எடுக்கப்படும் பிற வழிகளில், உலகளாவிய வடக்கு, தெற்கு பகுதிகளுக்கு இடையே வெளிப்படையான, விஞ்ஞானப்பூர்வமான ஒத்துழைப்பை ஊக்குவிப்பதும் அடங்கும். இருப்பினும், நடைமுறையில், இது பெரும்பாலும், வளர்ந்து வரும் நாடுகளில் காலநிலை தொடர்பான பிரச்சினைகள் குறித்த சில சுற்றுச் சூழல் ஆராய்ச்சிகளுக்கு, ஒப்பீட்டளவில் மிகச் சிறிய அளவில் தொகைகளை ஒதுக்கீடு செய்வதாக மட்டும் குறுக்கப்படுகிறது. முன்னேறிய முதலாளித்துவ நாடுகள் மற்றும் அவற்றின் அறிவியல் சமூகங்களின் தேவைகள் மற்றும் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப, வளர்ந்து வரும் நாடுகளின் விஞ்ஞானப்பூர்வமான நிகழ்ச்சி நிரலை அடிபணியச் செய்வதற்காகவே இது செய்யப்படுகிறது.
வளர்ந்து வரும் நாடுகளின் ஆளும் உயரடுக்குகள், தெற்குலகத்தில் உலகளாவிய வறுமை மற்றும் பற்றாக்குறை என்பது மொத்தமாக காலநிலை சார்ந்ததுதான் என்ற வாதத்தால் கவரப்படுகிறார்கள். ஏனெனில், இது அவர்கள் நாட்டிற்கும் பொருளாதாரத்திற்கும் அவர்கள் கடமைப்பட்டிருக்கும் அடிப்படை பொறுப்பை செய்யாமல் இருந்து கொள்ள உதவுகிறது; மேலும் தங்கள் நாட்டு உழைப்பாளி மக்களின் தற்போதைய வாழ்வினை சரி செய்ய வேண்டிய பொறுப்பையும் செய்யாமல் இருந்து கொள்ள உதவுகிறது.
ஆயினும்கூட, வளர்ந்து வரும் நாடுகளின் அரசுகள், இன்னும் பணக்கார வளர்ந்த நாடுகளின் நிர்ப்பந்தங்களுக்கு கணிசமான எதிர்ப்பை தெரிவிக்கின்றன. ஏனெனில் வளர்ந்த நாடுகளின் கோரிக்கைகள் மற்றும் நிபந்தனைகள் மிக வெளிப்படையாகவே அந்நாடுகளுக்கு சாதகமாக இருப்பதாலும், மிகப் பெரிய அளவில் வளரும் நாடுகளின் மீது தாக்கத்தையும் விளைவுகளையும் கொண்டுள்ளதால், எந்த வளர்ந்து வரும் நாட்டு அரசாங்கமும் இதற்கு உடன்பட முடியாது.
உலகளாவிய காலநிலை பேச்சுவார்த்தைகள், வளரும் நாடுகளுக்கும் முன்னேறிய முதலாளித்துவ நாடுகளுக்கும் இடையிலான நீடித்த தொடர்ச்சியான முரண்பாட்டிற்கானதாகவே இருந்து வருகிறது. வளர்ந்து வரும் நாடுகளின் வாதங்கள் பெரும்பாலும் தாராளமயமாக்கலுக்கு முந்தைய அல்லது உலகமயமாக்கலுக்கு முந்தைய சகாப்தத்தை நினைவூட்டும் விதத்தில், சுயசார்புடைய தொழில்துறை வளர்ச்சி என்ற மிகவும் வலுவான இருப்பைக் கொண்டிருந்த அப்போதைய நிகழ்ச்சி நிரலை வலியுறுத்தும் வகையில் உள்ளது.
“மனிதகுல நலன்களுக்காக” காலநிலை நெருக்கடியைத் தீர்ப்பதில் “முன்னேற்றத்தை” அடைவதற்கான உலகளாவிய காலநிலை பேச்சுவார்த்தைகளின் “தோல்வி”யை வெளிப்படையாக ஒப்புக் கொண்டு, அது குறித்து கையைப் பிசைந்து கொண்டு நிற்பதென்பது தவறானது. ஏனெனில், இது புவி வெப்பமடைதலைச் சமாளிக்கத் தேவையான கூட்டு நடவடிக்கைகளை எடுக்காமல், குறிப்பாக, அரசியல், பொருளாதாரத் துறையில் உள்ள உண்மையான முரண்பாடுகளை கவனத்தில் கொள்வதை தவறவிடுகிறது.
மார்க்சிய இடதுசாரி அணுகுமுறையும் அதிலுள்ள குழப்பங்களும்
காலநிலை மாற்றப் பிரச்சினையைப் புரிந்துகொள்வதில், இடதுசாரி, குறிப்பாக கம்யூனிஸ்ட் / மார்க்சிய இடதுசாரி அணுகுமுறை, பல்வேறு குழப்பமான நிலைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த குழப்பமான நிலைபாடுகள் தெளிவான புரிதலை உருவாக்குவதற்குத் தடையாக உள்ளன. அந்தக் குழப்பங்களில் ஒன்று: சுற்றுச்சூழல் பிரச்சனைகள், பாரம்பரிய மார்க்சிய கோட்பாட்டிற்கு அப்பாற்பட்டவை என்றும், இவை சமூக வர்க்க அமைப்புகளின் பங்கு மற்றும் முக்கியத்துவத்தை மீறும் தன்மையுடையவை என்றும் கருதப்படுவது. எனவே, மார்க்சியம் சுற்றுச்சூழல் பிரச்சனைகளைக் கையாளக் கூடிய வகையில், வர்க்க பகுப்பாய்விற்கு அப்பாற்பட்ட கூறுகளையும் சேர்த்து கூடுதலாக தனது பார்வையை விரிவுபடுத்துவது அவசியமாகிறது. இந்தப் பிரச்சினையின் “முதல்” வடிவமாக – அதன் பதிப்பாக காலநிலை மாற்றம் கருதப்படுகிறது.
நடைமுறையில், இந்தக் கருத்து (இந்தியா உட்பட) இன்னும் கணிசமான இடத்தைப் பிடித்துள்ளது. அதன் பல வெளிப்பாடுகளில் ஒன்றுதான், முன்னேறிய முதலாளித்துவ நாடுகளின் பல்வேறு சிந்தனைப் பள்ளிகளால் முன்வைக்கப்படும் காலநிலை நடவடிக்கை நிகழ்ச்சி நிரலை விமர்சனமின்றி ஏற்றுக் கொள்வதாகும். சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான ஆர்வத்தில், இந்தக் கருத்து, உழைக்கும் மக்கள் மீது சுமத்தக்கூடிய சுமையை, அவர்களுடைய வாழ்வாதார வசதிகளின் விலை அதிகரிப்புக்கு வழிவகுப்பதை, உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியில் அது சுமத்தும் பொதுவான மந்தநிலையை கவனத்தில் கொள்ளத் தவறுகிறது. இவற்றில், கடைசியாகக் கூறப்பட்ட பிரச்சனை தவிர்க்க முடியாததாகும். ஏனெனில் தொழில்துறை, போக்குவரத்து, பொது உள்கட்டமைப்பு போன்ற பல துறைகளில், புவி வெப்பமடைதலைத் தடுக்கும் வகையில் தேவையான அளவில் பசுங்கூட உமிழ்வுகளை எவ்வாறு குறைப்பது என்பது இன்னும் தெளிவாகவே தெரியவில்லை. அதனால், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் மின்சார வாகன போக்குவரத்து போன்ற குறைந்த உமிழ்வு தொழில்நுட்பங்களை முன்னதாக அறிமுகப்படுத்துவது, சேவைகளின் தரம் குறைவதற்கும், ஏற்கனவே உள்ள சேவைகளை மேம்படுத்தும் நோக்கத்திலிருந்து விரிவாக்கத்தை மெதுவாக்குவதற்கும், அல்லது அதிகச் செலவுகளுக்கு வழிவகுப்பதற்கும் காரணமாகிறது — இவை அனைத்தும் பெரும்பான்மையான மக்களுக்கே சுமையாக மாறும்.
சுற்றுச்சூழல் அல்லது காலநிலை தொடர்பாக முன்வைக்கப்படும் திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் — அவை எந்தப் பகுதியில் இருந்து வந்தாலும், உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், முன்னேறிய முதலாளித்துவ நாடுகளின் திட்டங்கள், அல்லது பன்னாட்டு நிறுவங்களின் அல்லது தனிப்பட்ட பில்லியனர்களின் தொண்டு நிறுவனங்களில் இருந்து வந்தாலும் — எந்தவித விமர்சனமும் இன்றி ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. இதற்குக் கீழுள்ள தர்க்கம் தெளிவாக “மனிதகுலம் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சினை” என்பதன் பேரிலான நடவடிக்கையாகும். இதில், வர்க்க அடிப்படையிலான புரிதலும் பார்வையும் கொண்டு, உருவாக்க வேண்டிய இயல்பான எச்சரிக்கைகள் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்படுகின்றன.
உற்பத்தி சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்கும் இடையில் எந்த வேறுபாட்டையும் காணாத கருத்துக்களும் இதில் உள்ளன. முதலாளித்துவம் மிகப்பெரிய தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு வழிவகுத்துள்ளது; புதைபடிவ எரிபொருட்களைப் பயன்படுத்தி மேலும் துரிதப்படுத்தப்பட்டுள்ளது என்ற சந்தேகத்திற்கு இடமில்லாத உண்மையிலிருந்து, தொழில்நுட்பம் என்பதே உட்பொதிக்கப்பட்ட முதலாளித்துவம் என்ற முடிவுக்கு அவர்கள் வருகிறார்கள். இதை அவர்களது சொல்லாடல்களின் உதாரணங்களின் மூலம் நம்மால் விளக்க முடியும். “fossil capital” அதாவது “புதைபடிவ (எரிபொருள்) மூலதனம்” போன்ற சொற்களைப் பயன்படுத்துவதன் மூலமும், அல்லது தொழிலாளியின் மீதான முதலாளித்துவத்தின் சக்தியை நீராவி இயந்திரத்தின் கண்டுபிடிப்பும் பயன்பாடும் குறிக்கிறது என்று கூறுவதன் மூலமும், உற்பத்தி உறவுகளிலிருந்து உற்பத்தி சக்திகளின் ஒப்பீட்டு அளவிலான சுயாதீனமான ஒப்பீட்டு சுயாட்சியை மறுக்கிறது. அத்தகைய பார்வை, காலநிலை மாற்றத்தின் சூழலில், மூலதனத்திற்கும் அதன் நலன்களுக்கும் எதிரான வர்க்கப் போராட்டம் என்பதிலிருந்து, தொழில்நுட்பத்திற்கு எதிரான போராட்டமாகக் கவனத்தைத் திசை திருப்புகிறது. இந்த அணுகுமுறை, நடைமுறையில் ஒரு முட்டுச்சந்தாக மாறிவிடும். ஏனெனில் அவர்களின் தர்க்கம், முதலாளித்துவத்தின் கீழ் உற்பத்தி செய்யப்படும் எதுவும் தவிர்க்க முடியாமல் கறைபட்டுள்ளது என்கிற பார்வையுடன், காலநிலை நெருக்கடியைத் தீர்ப்பதற்கான புதைபடிவ எரிபொருள் அல்லாத தொழில்நுட்பங்கள், சோசலிசத்தின் கீழ் மட்டுமே எழ முடியும் என்பதை நோக்கியதாக மாறிவிடுகிறது.
‘romanticism’ – வீரம் செறிந்த எதிர்வினையின் காதல்வாத வெகுஜன வாதச் செறிவுகள்- சுற்றுச்சூழல் பார்வைகளும் அறிவியலுக்கு எதிரான அணுகுமுறைகளும்
மார்க்சியப் பார்வை என்று கூறிக் கொள்ளும் இந்தக் கோணங்கள், உலகம் முழுவதும் — இந்தியாவையும் உள்ளடக்கி — காலநிலை நெருக்கடி மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சனைகளுக்கான வீரம் செறிந்த எதிர்வினையின் காதல்வாத, வெகுஜன வாதச் செறிவுகளுடன் ஒரு ஒத்துழைப்பை, கலப்பினை ஏற்படுத்திக் கொள்கின்றன. காலநிலை நெருக்கடி, இந்தப் போக்குகளுக்குப் புத்துயிர் கொடுத்துள்ளது. இவை காலநிலை நெருக்கடியைச் சமாளிக்க, அறிவியலின் அவசியத்தை – விஞ்ஞானத்தின் முக்கியத்துவத்தை மறைக்கின்றன. அதே நேரத்தில், பழங்குடி மக்களின் அறிவு அல்லது உள்ளூர் சமூகங்களின் அறிவு, காலநிலை நெருக்கடியைத் தீர்க்க முடியும் என்று கூறுகின்றன.
காலநிலை நெருக்கடியில் இது மிகவும் துரதிர்ஷ்டவசமான அணுகுமுறையாகும், ஏனெனில் புவி வெப்பமடைதலின் விளைவுகள், பழங்குடி மக்கள் மற்றும் உள்ளூர் சமூகங்கள் உட்பட, மனிதகுலம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கும் மேலாகத் தகவமைத்துக் கொண்டதை விட அதிகமாக இருக்கலாம். உலகளாவிய தெற்கில் இத்தகைய உணர்வு, சுற்றுச்சூழல் சேதத்தைக் கட்டுப்படுத்துகிறோம் என்ற வாதத்தின் அடிப்படையில் வளர்ச்சியை எதிர்க்கிறது. ஆனால், உண்மையில், இந்த நாடுகளில் தொடர்ந்து நிலவும் பெரிய அளவிலான வளர்ச்சியின் பற்றாக்குறையை, அதாவது, “சுற்றுச்சூழல் சேதத்தை கட்டுப்படுத்துவது” என்ற பெயரில், இந்த நாடுகளில் உள்ள *வறுமையைத் தொடர்ந்து அனுமதிக்கத் தயாராக இருக்கிறது.
காலநிலை மாற்றம் குறித்த இந்த விவாதத்தில், இத்தகைய போக்குகளுக்கு இணையாக, biodiversity அதாவது உயிரினப் பன்மை (அல்லது) உயிர்ச் செறிவு என்பது காதல்வாதத்தினை நோக்கி இன்னும் வலுவாகத் திரும்பச் செய்கிறது. குறிப்பாக உயிரினப் பன்மையைப் பொறுத்தவரை, முன்னேறிய முதலாளித்துவ நாடுகளின் சிவில் சமூகமும் அரசாங்கங்களும், தெற்குலகில் வேலைவாய்ப்பு வழங்குதல், வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் உட்பட இந்தப் பிராந்தியங்களின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டில் ஏற்படும் தாக்கத்தை ஆராயாமல், அவை குறித்து அக்கறை கொள்ளாமல், இந்தப் பிராந்தியங்கள் பெரிய அளவில் உயிரி வளங்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதை ஊக்குவிக்கின்றன.
உயிரினப் பன்மை மற்றும் விவசாயம் பற்றிய காதல்வாதப் பார்வைகள், மேம்பட்ட முதலாளித்துவ நாடுகளின் சிவில் சமூகம் மற்றும் நிறுவனங்களுக்கு, தெற்குலகில் விவசாயத்தில் மேலும் தொழில்நுட்ப முன்னேற்றம் ஏற்படாமல் தடுத்து நிறுத்தவும், பின்வாங்கவும் ஏற்ற வகையில் ஒரு முக்கிய கருத்தியல் கருவியாக மாறியுள்ளன. அவை விவசாயத்தை கார்பன் பிரித்தெடுக்கும் களமாக மாற்றவும், தெற்குலகில் உணவு உற்பத்தியின் பங்கைக் குறைக்கவும் முயல்கின்றன. முன்னேறிய முதலாளித்துவ நாடுகளிலும் வளரும் நாடுகளிலும் உள்ள இடதுசாரிகளின் முக்கிய பிரிவுகள், தெற்குலகின் சிறு உற்பத்தியாளர்களைப் பாதுகாப்பதில், இத்தகைய காதல்வாதத்துடன் பொதுவான ஒரு ஒத்துழைப்பை, கலப்பினை ஏற்படுத்திக் கொள்கின்றன. சிறு உற்பத்தியாளர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடி அடிப்படையில் சுற்றுச்சூழலுடன் தொடர்பு கொள்ளும் தன்மை கொண்டது என்றும், “சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும்” வகையிலான தொழில்நுட்பம் நெருக்கடியை அதிகரிக்கிறது என்றும் வாதிடுவதன் மூலம் அவர்கள் தங்கள் நிலைப்பாட்டை நியாயப்படுத்துகிறார்கள்.
இந்த ரொமாண்டிக் அணுகுமுறையால் சிறு உற்பத்தியாளர்கள் சந்திக்கும் நெருக்கடி, சுற்றுச்சூழல் சார்ந்ததுதான் என்கிற வாதத்தில், “சுற்றுச்சூழலுக்கு சேதம் ஏற்படுத்தும்” தொழில்நுட்பங்கள் இந்த நெருக்கடியைக் கூர்மை செய்கின்றன என்கிற வாதத்தில், உண்மையில், புதிய தொழில்நுட்பங்கள் மூலம் சிறு உற்பத்தியாளர்களும் நன்மை பெறலாம் என்பதும், கூட்டுறவுகள் மற்றும் கூட்டு உற்பத்தி மூலம் பெரிய அளவிலான உற்பத்தியின் பலன்கள் பகிரப்படலாம் என்பதும், புறக்கணிக்கப்படுகின்றன. ஏனெனில், இவர்களின் பார்வையில் தொழில்நுட்பமே நெருக்கடியின் மூலக் காரணியாகவும், “சுரண்டலும் வர்க்க ஆதிக்கமும்”இரண்டாம் நிலையாகவும் பார்க்கப்படுகிறது. ஒரு புதிய திருப்பமாக, தற்போது கார்ல் மார்க்ஸ் தன் வாழ்நாளின் கடைசி ஆண்டுகளில் (அதாவது, அவருடைய குறிப்புப் புத்தகங்களில் உள்ள வாழ்க்கைக் குறிப்புகள் மூலம் தெரியவருகிறது என்று கூறப்படுகிறது), மூலதனவாதத்தின் அடிப்படை நெருக்கடிக்கான காரணம் முதன்மையாகச் சுற்றுச்சூழல் சார்ந்ததே என்ற கருத்தை நோக்கி சாய்ந்திருந்தார் என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. ஆனால், மார்க்ஸின் எழுத்துகள் மற்றும் ஆய்வுகள் எதுவும் இத்தகைய முடிவுக்கு ஆதாரமாக அமையவில்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. இந்தக் கருத்துக்களுக்கு ஒரு புதிய திருப்பமாக, மார்க்ஸ் கூட தனது பிற்காலங்களில் (அவரது குறிப்பேடுகளில் உள்ள ஓரக் குறிப்புகளில் கூறப்பட்டுள்ளபடி), முதலாளித்துவ நெருக்கடிக்கான அடிப்படைக் காரணம் முதன்மையாக சுற்றுச்சூழல் தன்மை கொண்டது என்ற கருத்தையே கொண்டிருந்தார் என்று இப்போது வாதிட முயற்சிக்கப்படுகிறது. மார்க்ஸின் மிகப்பெரிய படைப்புகள் அத்தகைய முடிவுக்கு எந்த அடிப்படையையும் வழங்கவில்லை என்றாலும், இது வேண்டுமென்றே பிரச்சாரம் செய்யப்படுகிறது.
ஏனெனில் அவர்களின் பார்வையில் தொழில்நுட்பம் சுரண்டலை மாற்றியமைத்து, வர்க்க ஆட்சியை சிறிய அளவிலான உற்பத்தியின் நெருக்கடிக்கு முக்கியமாகக் கொண்டுள்ளது. இந்தக் கருத்துக்களுக்கு ஒரு புதிய திருப்பமாக, முதலாளித்துவ நெருக்கடிக்கான அடிப்படைக் காரணம் முதன்மையாக சுற்றுச்சூழல் தன்மை கொண்டது என்ற கருத்தையே கொண்டிருந்தார் என்று இப்போது வாதிட முயற்சிக்கப்படுகிறது. மார்க்ஸின் மிகப்பெரிய படைப்புகள் அத்தகைய முடிவுக்கு எந்த அடிப்படையையும் வழங்கவில்லை என்றாலும் இது நிகழ்கிறது.
இத்தகைய குழப்பங்கள், உலகளவில் சுற்றுச்சூழல் விவாதங்களில் மார்க்சிய இடதுசாரி அணுகுமுறை புறக்கணிக்கப்படுவதற்கு வழிவகுக்கின்றன. அமெரிக்கா உள்ளிட்ட முன்னேறிய நாடுகளில் புதைபடிவ எரிபொருள் ஆதரவு எப்படி பசுமை நடவடிக்கைகளை பின்தள்ளுகிறது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. இந்த விவாதங்கள் தற்போது, ஏகாதிபத்தியத்திற்கும், அவற்றின் ஆளும் கட்சிகள் வழிநடத்தும் வளர்ந்து வரும் நாடுகளுக்கும் இடையிலான ஒரு மோதலாகவே அதிகமாக வெளிப்படுகிறது.
அமெரிக்க ஏகபோக மூலதனத்தின் புதிய எதிர்வினை
குறிப்பாக, அமெரிக்க ஏகபோக மூலதனத்தின் சில பிரிவுகளின் புதிய மற்றும் ஆக்ரோஷமான எதிர்த் தாக்குதலாலும், (அதாவது, உலக வெப்பமயமாதலை மட்டுப்படுத்த எடுக்க வேண்டிய எதிர்நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை முற்றாக மறுக்கும் நிலைபாடு) அமெரிக்கா புதைபடிவ எரிபொருள் உற்பத்தியை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாலும், முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில் காலநிலை நடவடிக்கை போதுமானதாக இல்லாததாலும், காலநிலை மாற்றத்தின் தீய விளைவுகளை மட்டுப்படுத்தும் வகையிலான – ஏற்கனவே போதுமானதாக இல்லாமல் இருந்த – மேம்பட்ட முதலாளித்துவ நாடுகளின் பசுமை நடவடிக்கைகள் இப்போது மேலும் மந்தமாகிவிடும். சில ஐரோப்பிய அரசுகளும், அங்குள்ள சிவில் சமூகத்தின் சில பிரிவுகளும், பெரிய வளர்ந்து வரும் நாடுகள் காலநிலை மாற்றத்திற்கான தங்கள் நடவடிக்கைகளை அதிகரிப்பதன் மூலம், எப்படியாவது இடைவெளியை ஏதேனும் ஒருவகையில் நிரப்ப முடியும் என்ற பார்வையை ஊக்குவிக்கின்றன. இது ஓரளவுக்கு சீனாவுக்குப் பொருந்தக்கூடியதாக இருக்கலாம். ஆனால், இந்தியாவிற்கு இதில் எந்தவிதமான பொருத்தப்பாடும் இல்லை. இடதுசாரிகள் இந்தக் கண்ணோட்டத்தை எந்தவிதத்திலும் ஏற்கக் கூடாது. குறிப்பாக, இந்தியாவுக்கு இது மிகவும் முக்கியமானதாகிறது. ஏனெனில், டெல்லியில் மோடி ஆட்சியின் கீழ், கொள்கை உருவாக்கத்தில் காணப்படும் ஆணவப் போக்கினை கருத்தில் கொள்வது அவசியமாகிறது.
இந்தியாவிலும், தெற்குலகின் பெரும்பகுதியிலும், தொழில்துறை இன்னும் முன்னேற்றம் காண வேண்டியுள்ளது. அதே போல விவசாயத்துறை இன்னும் தீவிரமாக வளர வேண்டியுள்ளது. ஆனாலும், வளர்ந்து வரும் நாடுகளில் பெரியவை எப்படியாவது வளர்ச்சியடைந்த நாடுகளை (leapfrogging)பாய்ச்சல் வேகத்தில் கடந்து, தொழில்நுட்ப ரீதியாக முன்னேறி, ஒரு ஸ்திரமான சகாப்தத்தில் நிலைத்து நிற்க முடியும் என்று, வளர்ந்து வரும் நாடுகளில் உள்ள ஆளும் உயரடுக்கினர் பெரும்பாலும் ஒரு மயக்கத்தில் உள்ளனர். இதற்கு ஆதரவாக மிகச் சிறிய ஆதாரங்களே உள்ளன. சில முக்கியமான விதிவிலக்குகளைத் தவிர (முக்கியமாக சீனாவை), பெரும்பாலான வளர்ந்து வரும் நாடுகள் தொழில்நுட்ப முன்னேற்றத்தில் பின்தங்கிய நிலையிலிருந்து முன்னணி நிலைக்கு தாவிக் குதிக்கவில்லை. இந்த வகை முன்னேற்ற முயற்சிகள், வெற்றி அடைய முடியாத சூழலில், அதன் சுமைகளை தெற்குலக உழைப்பாளி மக்கள்தான் சுமக்க வேண்டிய நிலை ஏற்படும்.
பூமியின் வெப்பநிலை உயர்வைத் தடுத்து நிறுத்த, புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டிலிருந்து திறம்பட விலகி, அந்த சவாலை எதிர்கொண்டு தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டுமானால், நீண்ட கால அடிப்படையில் அறிவியல் முன்னேற்றமும், தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளும் அவசியமாக இருக்கும். வெப்பநிலை அதிகரிப்பு அதிகமாக இருந்தால், சவாலை எதிர்கொள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் தேவை அதிகமாக இருக்கும். இருப்பினும், பெரும்பான்மையான மனிதகுலத்தின் நல்வாழ்வைப் பலிகொடுத்து, கடந்த காலத்தின் புராதன சுற்றுச்சூழல் சமநிலைக்குத் திரும்ப முடியாது. தற்போதைய வளர்ச்சிக்கு ஈடு கொடுத்து, அதற்கான பணிகளை அவசரமாகச் செய்யாமல், முன்னேறவும் முடியாது.
மிக முக்கியமாக, உலகளாவிய ஒத்துழைப்பும், நாடுகளுக்கு இடையேயும், நாடுகளுக்குள்ளும் இந்த சவாலைச் சந்திப்பதில், சுமையை சமமாகப் பகிர்ந்து கொள்ளும் நியாயமான சுமைப் பகிர்வும் மிக முக்கியமான, அவசரமான, அரசியல் தேவையாகும். ஆனால், இந்தப் பகிர்தலும், அவசர அரசியல் தேவையும் மிகவும் குறைவாகவே உள்ளது என்பது வருந்தத்தக்கது. புவி வெப்பமடைதலை கட்டுப்படுத்தும் பாதை, மனிதகுலத்தின் மற்ற பகுதிகளின் சக்தியைக் கட்டுப்படுத்தவும், இறுதியில் அதை மீறி சமாளிக்கவும், ஒரு உலகளாவிய அரசியல் போராட்டத்தின் வழியாகவே தவிர்க்க முடியாமல் செல்ல வேண்டியதாக இருக்கும்.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
