இயக்கவியல் பொருள்முதல்வாதம்: மத்திய கட்சி கல்வி பாடக்குறிப்பு (பகுதி -3)
3) வளர்ச்சியின் அடிப்படை விதிகள்
எல்லாமே வளர்ச்சிப் போக்கிலே இருந்து வருவதாகவே இயக்கவியல் பார்க்கிறது. எதுவும் நிலையாக இல்லை. துளியூண்டு பொருளில் இருந்து பிரம்மாண்டமான பொருள் வரை எல்லாமே வளர்ச்சிப் போக்கில் உள்ளன. இந்த வளர்ச்சிப் போக்கும் சில விதிகளுக்கு உட்பட்டது. மாற்றத்தையும் வளர்ச்சியையும் உருவாக்க வல்ல இந்த இயக்கம் எங்கிருந்து வந்தது? வளர்ச்சியை வழிநடத்துவதும் அதன் திசை வழியை தீர்மானிப்பதும் எது? இந்த கேள்விகளுக்கெல்லாம் விடையை வளர்ச்சியின் விதிகளின் வழியாகத் தெரிந்து கொள்ள முடியும். முக்கிய விதிகள் மூன்று உள்ளன.
அ. எதிர்மறைகளின் ஒற்றுமையும் போராட்டமும் – முரண்பாட்டின் விதி
ஒவ்வொரு பொருள் அல்லது நிகழ்வு போக்கிலும் எதிர்மறைகள் அடங்கியுள்ளன. அதாவது ஒன்றுக்கொன்று எதிரான சக்திகளும், பரிணாமங்களும் ஒவ்வொரு பொருளுக்குள்ளும் நிகழ்வு போக்கிற்குள்ளும் இருக்கின்றன. இயக்கம் என்பது இந்த எதிர்மறைகளுக்கு உள்ளான மோதல்களின் காரணமாகவே உருவாகிறது. எதிர்மறைகளின் இந்த மோதல்களே முரண்பாடு எனப்படும். எந்த ஒரு பொருளிலும் அல்லது நிகழ்வு போக்கிலும் இயல்பாகவே எதிர்மறையான குணம் இருக்கிறது. அந்த எதிர்மறை தான் ஒற்றுமைப்படுவதாகவும், மோதிக் கொள்வதாகவும் முரண்பட்ட தன்மையுடன் இருக்கின்றன. ஆனால் ஒற்றுமை என்பது தற்காலிகமானது தான். நம்மைச் சுற்றி உள்ள பொருள்கள் மற்றும் நிகழ்ச்சிப் போக்குகளுக்குள் இவ்வாறான நிகழ்வுகளை அதிகம் பார்க்க முடியும். வேறு வார்த்தைகளில் சொன்னால், எதிர்மறைகளின் ஒற்றுமைக்கு நிறைய உதாரணங்கள் உள்ளன அவற்றில் சிலவற்றை காண்போம்.
| கனிம உலகம் | ||
| அணு | நேர்மறை உட்கரு | எதிர்மறை எலக்ட்ரான் |
| அடிப்படைத் துகள் | பாசிட்ரான் | எதிர்மின்னி |
| கோள்களின் இயக்கம் | ஈர்ப்பு | விலக்கு விசை |
| ஆர்கானிக் உலகம் | ||
| வளர்சிதை மாற்றம் | சீரணித்துக்கொள்ளல் | பிரித்து வெளியேற்றுதல் (dissimilation) |
| இனங்களின் தோற்றம் | பண்புகளில் திடீர்மாற்றம் | பண்புகளின் தொடர்ச்சி |
| நரம்பியல் செயல்பாடு | தூண்டல் | தடுத்தல் |
| மனித சமூகம் | ||
| மோதல் | சுரண்டப்படுவோர் | சுரண்டுவோர் |
| சிந்தனை செயல்முறை | ||
| தர்க்க அறிவு | பகுத்தாய்தல் | தொகுத்துக்கூறல் |
| கருத்தாக்கம் | உறுதிப்பாடு | |
| கணிதம் மற்றும் இயந்திரவியல் | ||
| பிளஸ் (+) | கழித்தல் (-) | |
| வகையீடு | தொகையீடு | |
| வினை | எதிர்வினை | |
| சமூக வளர்ச்சியும் வர்க்கப் போராட்டமும் & பொருளாதாரம் | ||
| உற்பத்தி சக்திகள் | உற்பத்தி உறவுகள் | |
| நிலப்பிரபு | விவசாயி | |
| முதலாளி | பாட்டாளி | |
| பொருளாதாரத் துறையில் | பயன் மதிப்பு | பரிவர்த்தனை மதிப்பு |
அட்டவணையில் பல்வேறு வகையான முரண்பாடுகள் இடம்பெற்றுள்ளன. முக்கிய முரண்பாடுகள், மைய முரண்பாடு ஆகியவற்றை உதாரணமாக பார்க்கலாம்.
தீர்மானகரமான முரண்பாடுகளை நாம் முக்கிய முரண்பாடுகள் என்கிறோம். இன்றைய உலக சமூக அமைப்பில் 4 முக்கிய முரண்பாடுகள் நிலவுகின்றன. அவையாவன,
அ. மூலதனத்திற்கும் உழைப்பிற்கும் இடையிலான முரண்பாடு
ஆ. ஏகாதிபத்திய நாடுகளுக்கும் வளரும் நாடுகளில் வாழும் மக்களுக்கும் இடையே உள்ள முரண்பாடு
இ. ஏகாதிபத்திய நாடுகளுக்கு இடையிலான முரண்பாடு
ஈ. ஏகாதிபத்தியத்திற்கும் சோசியலிசத்திற்கும் இடையே உள்ள முரண்பாடு.
இந்தியச் சமூகத்தில் மூன்று முக்கிய முரண்பாடுகள் உள்ளன. அவை அ) ஏகாதிபத்தியத்திற்கும் இந்திய மக்களுக்கும் இடையிலான முரண்பாடு. ஆ)
நிலப்பிரபுக்களுக்கும் ஏழை விவசாயிகளுக்கும் இடையிலான முரண்பாடு
இ) இந்திய ஏக போக மூலதனத்திற்கும் மக்களுக்கும் இடையிலான முரண்பாடு.
முக்கிய முரண்பாடுகளாக பலவும் இருக்கும்போதும், குறிப்பிட்ட ஒரு கட்டத்தில் இவற்றில் ஏதாவதொரு முரண்பாடு முன்னுக்கு வரும். அதை நாம் மைய முரண்பாடு என்கிறோம். இந்த மைய முரண்பாட்டிற்கான தீர்வு, இதர முக்கிய முரண்பாடுகளுக்கான தீர்வுகளை வேகப்படுத்தக்கூடிய பங்கினை ஆற்றுகின்றன.
இவ்வாறு எந்த முரண்பாட்டுக்கான தீர்வு மற்ற முரண்பாடுகளுக்கான தீர்வினைத் தீர்மானிக்கிறதோ அதுவே மைய முரண்பாடு என்று அழைக்கப்படுகிறது. உலகில் நிலவும் நான்கு முக்கிய முரண்பாடுகளுக்குள் ஏகாதிபத்தியத்திற்கும் சோசலிசத்திற்கும் இடையிலான முரண்பாடு மைய முரண்பாடாகும்.
மேலும் முரண்பாடுகளில் நட்பு முரண்பாடு பகை முரண்பாடு என இருவகை உள்ளது. இது முரண்பாட்டின் தன்மையைப் பொறுத்து தீர்மானிக்கப்படுகிறது. பொதுவாக இரண்டு எதிர்மறைகளுக்குள் இருக்கின்ற முரண்பாட்டின் தன்மை சமரசம் செய்ய முடியாத ஒன்றுக்கொன்று விரோதமானதாக இருக்குமானால் அது பகை முரண்பாடாகும். உதாரணமாக மூலதனத்திற்கும் உழைப்பிற்கும் இடையிலான முரண்பாட்டை பேச்சுவார்த்தை மூலம் அல்லது எந்த வகையிலும் சமரசப்படுத்த இயலாது. அதேபோலத்தான் ஏகாதிபத்தியத்திற்கும் சோசலிசத்திற்குமான முரண்பாடும். அதேசமயம் ஏழை விவசாயிக்கும் நடுத்தர விவசாயிக்கும் இடையே ஏற்படும் முரண்பாடு அல்லது தொழிலாளி வர்க்கத்திற்கும் நடுத்தர வர்க்கத்திற்கும் இடையில் ஏற்படும் முரண்பாடு சமரசப்படுத்த கூடியவை ஆகும். ஆகவே அவை நட்பு முரண்பாடாகும்.
பகை முரண்பாடு நட்பு முரண்பாடு இவை பற்றிய மிகச்சரியான புரிதல் இல்லை என்றால் அது ஒரு புரட்சிகர போராட்டத்தை வளர்த்தெடுப்பதற்கு தடையாக மாறும்.
ஒரு பொருளுக்குள் அல்லது நிகழ்வு போக்கிற்குள் இருக்கிற உள் முரண்பாடுகளைப் போல அவற்றிற்கு வெளியே வெளி முரண்பாடுகளும் உள்ளன. உள் முரண்பாடு வளர்ச்சிக்கான முக்கிய காரணியாக அமைகிறது. வெளி முரண்பாடு உள் முரண்பாட்டின் மீது தாக்கங்களை செலுத்துகிறது. ஒரு நாட்டின் புரட்சிகர இயக்கத்தின் வெற்றியானது, அந்த நாட்டில் நிலவும் சமகால உள் முரண்பாடுகளின் தீவிரத்தன்மையைப் பொருத்தே அமையும். அதே சமயம் ஒரு நாட்டின் புரட்சிகரப் போராட்டத்தை வேகப்படுத்தும் வெளி முரண்பாடாக, சர்வதேச சூழ்நிலைகள் பாத்திரம் வகிக்கின்றன.
ஆ. அளவு மாற்றத்தில் இருந்து பண்பு மாற்றம்
இயக்கத்தின் காரணமாகவே மாற்றம் ஏற்படுகிறது. அந்த மாற்றம் வளர்ச்சிக்கு இட்டுச் செல்கிறது. வளர்ச்சியின் பாதையில் முதலில் தோன்றுவது அளவு மாற்றமே. ஆனால் இது மெதுவாக நிகழ்கிறது. அளவு மாற்றத்தின் ஒரு குறிப்பான கட்டத்தில் பண்பு ரீதியான மாற்றம் நிகழ்கிறது. அந்த குறிப்பான கட்டத்தில் மாற்றம் வேகமெடுக்கிறது. இந்த பண்பு மாற்றத்தின் மூலம் ஒரு பொருளோ அல்லது நிகழ்வுப்போக்கோ மற்றொரு புதிய நிலைக்கு மாறிச் செல்கின்றன.
உதாரணமாக, தண்ணீரை சூடேற்றத் தொடங்கும்போது வெப்பம் அதிகமாக இருக்காது. எனவே அது திரவ நிலையிலேயே இருக்கிறது. ஆனால் வெப்பத்தின் அளவு அதிகமாகும்போது, (அழுத்தம் அதிகரித்து) குறிப்பிட்ட கட்டத்தில், அதாவது வெப்ப நிலை 100 டிகிரி செல்சியஸ் ஆகும்போது தண்ணீர் ஆவியாகி புதிய நிலைக்கு மாறிச் செல்கிறது. குறிப்பிட்ட கட்டத்தில் பண்பு மாற்றம் ஏற்படுகிறது. அளவு மாற்றம் இல்லாமல் பண்பு மாற்றம் ஏற்படாது.
மேலும் சில உதாரணங்களைக் காணலாம்…
பூமியிலிருந்து மேலே எறியப்படும் எந்த ஒரு பொருளும் புவி ஈர்ப்பு விசையின் காரணமாக கீழே விழுந்துவிடுகிறது. அதேசமயம் எறியப்படும் பொருளின் வேகத்தை அதிகப்படுத்தி கொண்டே இருந்தால் அப்பொருள் கீழே திரும்பாது. அது பூமியின் புவி ஈர்ப்பு விசையின் வளையத்தை தாண்டி அண்டவெளிக்குள் சென்று விடும். இதுவும் அளவு மாற்றம் பண்பு மாற்றம் அடைவதை குறிக்கிறது.
முதலாளித்துவத்தில் இருந்து சோசலிசத்திற்கு சமூகம் புரட்சிகரமான மாற்றத்திற்கு உள்ளாவது ஒரு பண்பு மாற்றம் ஆகும். முதலாளித்துவத்திற்கு எதிரான மக்களின் எதிர்ப்பு போராட்டங்களை அளவு மாற்றமாக கருத வேண்டும். இந்த அளவு மாற்றம் தான் சமூக மாற்றம் எனும் பண்பு மாற்றத்தை ஏற்படுத்துகிறது. அதாவது ஒரு புதிய சோசயலிச சமூகத்தின் உருவாக்கமே பண்பு மாற்றம் ஆகும்.
ஆதிப் பொதுவுடமை சமூகத்தில் இருந்து அடிமைச் சமூகம் உருவானதும் அடிமைச் சமூகத்தில் இருந்து நிலப்பிரபுத்துவ சமூகம் உருவானதும் நில பிரபுத்துவ சமூகத்தில் இருந்து முதலாளித்துவ சமூகம் உருவானதும் முதலாளித்துவ சமூகத்தில் இருந்து முதலில் சோசலிசமும் பின்னர் கம்யூனிச சமூகம் உருவாவதும் இவை எல்லாம் பண்பு மாற்றத்திற்கான எடுத்துக்காட்டுகள் ஆகும்.
பண்பு மாற்றம் காரணமாக ஒரு நிலையிலிருந்து இன்னொரு புதிய நிலைக்கு செல்லும்போது பழையதிலிருந்த சரியான முற்போக்கான கூறுகள் ஒன்று கூட புதிய நிலைக்கு சென்ற பின் பாதுகாக்கப்படாது என்று தவறாக புரிந்து கொள்ளக் கூடாது. சரியானவைகள் எதுவாக இருந்தாலும் பாதுகாக்கப்பட வேண்டியவை எதுவாக இருந்தாலும் அவையெல்லாம் புதிய நிலையிலும் பாதுகாக்கப்படும். அடிமைச் சமூக அமைப்பில் உருவாக்கப்பட்ட விஞ்ஞானம் கலை இலக்கியம் எல்லாம் நில பிரபுத்துவ சமூக அமைப்பினால் நிராகரிக்கப்படவில்லை. அவற்றையெல்லாம் பாதுகாத்தது மட்டுமின்றி நில பிரபத்துவ சமூக அமைப்பை மேலும் வளர்த்தெடுத்தது. அதே போல் தான் நில பிரபுத்துவ சமூக அமைப்பின் கருவில் உருவான நேர்மறையான கண்டுபிடிப்புகள் அனைத்தும் முதலாளித்துவ சமூக அமைப்பால் பாதுகாக்கப்பட்டு மேலும் வளர்த்து எடுக்கப்பட்டது.
விஞ்ஞானத்தில் நியூட்டன் மேக்ஸ்வெல் பாயில் ஐன்ஸ்டீன் டார்வின் போன்றோர்களின் கண்டுபிடிப்புகள், இலக்கியத்தில் ஷேக்ஸ்பியர் ஹோமர் காளிதாசன் யூகோ தாகூர் போன்றோர்களின் படைப்புகள், கலையில் ரபேல் டாவின்சி போன்றோர்களின் படைப்புகள் இவை எல்லாமே ஒட்டுமொத்த மனித நாகரீகத்தின் விலைமதிப்பற்ற சொத்துக்களாகும்.
மனித சமூகத்தில் நிலைமறுப்பின் நிலைமறுப்பு
ஆதி பொதுவுடைமை சமுதாயத்தின் நிலையை மறுத்து, அடிமைச் சமுதாயம் உருவானது. அடிமைகளை தனியார் சொத்துடைமையை மாற்றிக் கொண்ட முதல் நிலை சுரண்டல் சமுதாயமாக அடிமைச் சமுதாயம் இருந்தது. அந்த அடிமைச் சமுதாயம் என்ற நிலைமை மறுத்து உருவானதே நிலப்பிரபுத்துவ சமுதாயம். அதன் நிலையை மறுத்து முதலாளித்துவ சமுதாயம் வந்தது. அந்த நிலை மீண்டும் மறுக்கப்பட்டு சோசலிச சமுதாயம் வந்தது. அதன் தொடர்ச்சியாக கம்யூனிச சமுதாயம் உருவாகும். மனித சமுதாய அமைப்பின் முன்னேற்றம் இவ்வாறுதான் நடந்தேறுகிறது. குறிப்பிட்ட சமுதாய அமைப்பிற்கு ஏற்ற உற்பத்தி சக்திகள் முழுமையான வளர்ச்சியை எட்டாமல், எந்த சமுதாய அமைப்பும் அழிவுறாது என்பதை இங்கே குறிப்பிட வேண்டும். பழைய சமுதாயத்தின் அழிவிற்கான சூழ்நிலைமைகள், அந்த சமுதாயத்திலேயே நிலவுகின்ற உற்பத்தி உறவுகளுக்கு இடையில் நடக்கும் தீவிர மோதலின் விளைவாக, அதன் உற்பத்தி சக்திகள் தங்கள் முழுமையான வளர்ச்சியை எட்டுவதன் மூலம் உருவாகின்றன.
நிலைமறுப்பின் நிலை மறுப்பு வழியாகத்தான் வளர்ச்சி நடந்தேறும். ஆதிப் பொதுவுடைமை சமுதாயத்தில் உருவாகிய மனித நாகரீகமானது, வளர்ச்சியடைந்து கம்யூனிச சமுதாயத்திற்கு நிலை மறுப்பின் நிலை மறுப்பு வழியாகத்தான் மாறிச் செல்கிறது. இதன் பொருள் மீண்டும் பழைய சமுதாய அமைப்பிற்கே திரும்புவது அல்ல. ஆதிப் பொதுவுடைமை சமுதாயத்தில் மனிதர்கள் நாகரீகமாகவும், கரடுமுரடாகவும் இருந்தார்கள். இயற்கையின் விதிகளைப் பற்றிய அறியாமையில் இருந்தார்கள். எதிர்கால கம்யூனிச சமுதாயத்தில் மனித குலமானது மிக உயர்ந்த நாகரீக நிலையை அடைந்திருக்கும். இயற்கையின் விதிகளைப் பற்றிய கூடுதலான அறிவைப் பெற்று, மனித மேம்பாட்டுக்கு அவைகளை பயன்படுத்தக்கூடியதாக இருக்கும்.
நிலைமறுப்பின் நிலை மறுப்பு – இயற்கையில் விதையானது தனது நிலையை மறுத்து செடியாக புறப்படுகிறது. செடி மறுக்கப்பட்டு மலர்கள் பூத்துக் குலுங்கும் கிளைகள் கொண்ட மரம் ஆகிறது. அவற்றிலிருந்து கனிகள் உருவாகின்றன. கனிகளுக்குள் பல விதைகள் உருவாகின்றன. ஒரு விதை எண்ணிலடங்கா பல விதைகளை உருவாக்குகிறது. நிலை மறுப்பின் நிலை மறுப்பு மூலம் ஏற்படும் வளர்ச்சியை புரிந்து கொள்வதற்கு இது உதாரணமாகும்.
இந்த வளர்ச்சிப் போக்கு என்பது ஒரு நேர்க்கோட்டு வளர்ச்சி அல்ல. மாறாக அது சூழல் ஏணி வளர்ச்சித் தன்மை உடையதாகும். அதன் மூலமாகவே அதன் உச்ச நிலையை அடைகிறது. கடந்த காலத்தில் இருந்து எதிர்காலத்திற்கு செல்லக் கூடிய வகையில் இந்த வளர்ச்சி முறை இருக்கிறது.
நிலை மறுப்பின் நிலை மறுப்பு என்றால்
1. இடையறாத வளர்ச்சி 2. முன்னேற்ற திசையிலான வளர்ச்சி 3. மீண்டும் வருதல் ஆனால் முன்னைக் காட்டிலும் உயர்ந்த நிலைக்கு வருதல் என்று பொருள் தரும்.
இயக்க இயல் வழிமுறை
நம்முடைய கற்றலையும், ஆய்வு முறையையும், நடைமுறையையும் சரியான திசையில் செலுத்துவதுதான் இயக்கவியல் பொருள்முதல்வாதத்தை விவாதிப்பதன் முதன்மையான நோக்கம் ஆகும். புதிய நிகழ்ச்சிப்போக்குகளையும், செயல்முறைகளையும் ஆய்வு செய்யும்போதும் விளக்கும் போதும் எழக்கூடிய எந்தவொரு சிக்கலுக்கும் தீர்வைத் தரக்கூடிய விஞ்ஞான அணுகுமுறையை அது நமக்குத் தருகிறது.
இயக்கவியல் அணுகுமுறையை பின்வருமாறு தொகுத்துக் கூறலாம்
புறநிலை அணுகுமுறை
நம்மைச் சுற்றியுள்ள செயல்முறைகளையும், நிகழ்ச்சிப் போக்குகளையும் கற்று மதிப்பீடு செய்வதற்கான புறநிலை அணுகுமுறை என்றால், உள்ளதை உள்ளபடியே காண்பதாகும். அதனை எளிமைப்படுத்தவோ, சிக்கலாக்கவோ கூடாது. புறநிலை ஆய்வில்/மதிப்பீட்டில், வாழ்க்கை பற்றிய எதார்த்தமான சித்தரிப்பு அவசியமாகும், வாழ்வின் முன்னேற்றத்திற்கு காரணமாக முக்கியப் போக்குகளை வெளிப்படுத்த வேண்டும். முன்னேற்றத்தை தீர்மானிக்கும் சக்திகளை எடுத்துக்காட்ட வேண்டும். “சமூக நிகழ்ச்சிப் போக்குகள் பற்றிய கண்ணோட்டமானது உண்மைகளையும், வளர்ச்சியின் உண்மையான போக்குகளையும் பற்றிய உறுதியான புறநிலை ஆய்வின் அடிப்படையில் அமைய வேண்டும்” என்று லெனின் குறிப்பிட்டார்.
அக நிலைவாதம்
புறநிலை அணுகுமுறைக்கு நேர்மாறானதுதான் அகநிலை வாதம். இயற்கையிலும், சமுதாயத்திலும் நிலவும் புறநிலை விதிகளைக் கண்டுகொள்வதில்லை. சமுதாய விதிகளைப் பற்றி அலட்சியம் காட்டுவதுடன், சிந்தனையை சர்வ வல்லமை கொண்டதாக கருதுகிறது அகநிலைவாதப் பார்வை. தனிமனித விருப்பங்களும், நோக்கங்களும், சுயநலக் கண்ணோட்டமும், பாரபட்சமும் இன்ன பலவும் கற்றல் நடைமுறையைச் சிதைப்பதன் மூலம், புறநிலை அணுகுமுறையின் அடிப்படையிலான மதிப்பீடுகளை கொச்சைப்படுத்துகிறது. இந்த அகநிலைவாதத்திற்கு எந்த வடிவத்தில் நிலவினாலும், செயல்பாடு மட்டுமே அதற்கு எதிரான ஒரே உத்திரவாதம் ஆகும்.
2.விரிவடைந்த பார்வை (Comprehensiveness)
நடைமுறைகளையும், நிகழ்வுப் போக்குகளையும் புறநிலை அணுகுமுறைக்கு உட்படுத்திட அதனை விரிவடைந்த பார்வையோடு ஆய்வு செய்வது அவசியமாகும். அப்படிப்பட்ட ஆய்வின் வழியாகத்தான் நாம் எடுத்துக்கொண்ட நடைமுறையிலோ, நிகழ்வுப் போக்கிலோ உள்ள தலையான அம்சத்தை தனிமைப்படுத்தி அதன் சாரத்தை புரிந்துகொள்வதும், தீர்வுக்கான பாதையில் பணிகளை முடிவு செய்யவும் முடியும்.
விரிவடைந்த பார்வை என்றால், ஒன்றின் எல்லா வகையான அம்சங்களையும், இயல்புகளையும், சக்திகளையும், செல்வாக்குகளையும் உள்ளடக்கி பார்த்து, அதன் எல்லா வகையான உறவுகளையும், பரஸ்பர தொடர்புகளையும் வெளிக்கொண்டுவரும் பார்வையாகும். சிறப்பு, தற்காலிகம், எளிமை, முழுமையும் – பகுதியும், உருவமும் உள்ளடக்கமும், புறநிலையும் அகநிலையும், தோற்றமும் சாரமும் என எல்லா வகைகளையும் பயன்படுத்தி அந்த விரிவான ஆய்வை மேற்கொள்வதன் மூலம், குறிப்பிட்ட நடைமுறை அல்லது நிகழ்வுப் போக்கின் அவசியமான, குறிப்பான அம்சங்களைக் கண்டறிய வேண்டும். இந்தக் கோட்பாடு மீறப்படுமானால், முடிவு ஒருதலைப் பட்சமானதாகவும், அரைகுறையாகவும், தன்னிச்சையாகவும், மேம்போக்காகவும் இருக்கும். வெண்ணையை வைத்துக் கொண்டே நெய்க்கு அலைவது போல இருக்கும். எடுத்துக்கொண்ட விசயத்தின் முக்கிய அம்சங்களை/ சங்கிலியின் கண்ணிகளை கண்டுகொள்ளும் திறனற்று போகும்.
3.வளர்ச்சிப் போக்கு
குறிப்பிட்ட செயல்முறையும், நிகழ்வுப் போக்குகளும் அவற்றின் வளர்ச்சிப் போக்கையும், அதாவது அகநிலையில் செயல்படும் மாற்றத்திற்கான ஆதாரங்களை கணக்கில் கொண்டே ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட செயல்முறை அல்லது நிகழ்ச்சிப் போக்கின் சாரத்தை அறிந்துகொள்ள வேண்டுமென்றால் அவற்றின் வளர்ச்சிப் போக்கின் அக ஆதாரங்களை அறிந்தாலே சாத்தியமாகும். அதாவது வளர்ச்சிப் போக்கிற்கு உந்துதலாக அமைந்த முரண்பாடுகளை ஆய்வு செய்ய வேண்டும். “சிந்தனையும், சமுதாயமும் உள்ளிட்ட இயற்கையின் அனைத்து நிகழ்வுப் போக்குகள் மற்றும் செயல்முறைகளில் முரண்பாடான, ஒன்றையொன்று விலக்கக் கூடிய, எதிரெதிர் போக்குகளை” அறிவதும், “ஒற்றை முழுமையைப் பிளந்து அதன் முரண்பட்ட பகுதிகளை அறிந்துகொள்வதும் இயக்கவியலின் சாராம்சம் ஆகும்” (லெனின்)
4. வரலாற்று அணுகுமுறை
வரலாற்று அணுகுமுறை என்பது உண்மையை சரியாக புரிந்துகொள்வதற்கான தொடக்கப் புள்ளியாகும். இது ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட செயல்முறை நடைபெறும் காலத்தையும், இடத்தையும் கணக்கில் கொள்வதோடு, “அடிப்படை வரலாற்றுத் தொடர்பை மறக்காமல், ஒவ்வொரு சிக்கலையும் வரலாற்றில் அது எவ்வாறு தோன்றியது என்ற கண்ணோட்டத்திலிருந்து ஆய்வு செய்வதுடன், அதன் வளர்ச்சியின் முக்கிய கட்டங்கள் என்ன, அதன் வளர்ச்சிக் நோக்கில் இன்று அது என்னவாக மாறியுள்ளது என்பதையும் ஆய்வு செய்வது” என்ற அவசியத்தையும் உள்ளடக்கியது. (லெனின்)
தோற்றம், வளர்ச்சி, முடிவு – கடந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம், தொடக்கம், இடைநிலை, முடிவு, பழமையும் புதுமையும் போன்ற எல்லா கருத்துக்களும் வரலாற்று அணுகுமுறையின் அம்சத்தை வெளிப்படுத்துகின்றன.
“திட்டவட்டமான நிலைமை பற்றிய திட்டவட்டமான ஆய்வு” என்ற லெனினுடைய கருத்து, வரலாற்று அணுமுறையை கச்சிதமாக உள்ளடக்கிய ஒன்றாகும்.
வரலாற்றை நோக்காத அணுகுமுறை மாயாவாதம், விருப்பவாதம், வளரும் போக்குகளை பற்றிய கண்மூடித்தனம் ஆகியவற்றிற்கு வழிவகுக்கும்.
தொகுத்துப் பார்த்தால் ‘செயல்முறைகளையும், நிகழ்வுப் போக்குகளையும் பற்றிய விரிவான புறநிலைப் பகுப்பாய்வு மேற்கொள்கையில், குறிப்பிட்ட வரலாற்று நிலைமையில், குறிப்பிட்ட சமூக நடைமுறையில், அவற்றின் வளர்ச்சிக்கான அகக் காரணிகளை ஆய்வு செய்வது அதன் சாரத்தை உள்வாங்கவும், அடிப்படைக் கூறுகளை தனித்துப் பர்க்கவும் வேண்டும். அரசியல், பொருளாதார, பண்பாட்டு மற்றும் கல்விச் செயல்பாட்டின் போது ஒவ்வொரு சமுதாய வளர்ச்சிக் கட்டத்திற்குமான அடிப்படையான பணியையும், அடிப்படையான பிணைப்பையும் தீர்மானிக்கும் திறனே நம்முடைய வெற்றிகரமான செயல்பாட்டுக்கு அவசியமானதாகும்.’
லெனின் வார்த்தைகளில் கூறுவதென்றால் “நாம் பொதுவாக ஒரு புரட்சிகரமான சோசலிசம் அல்லது கம்யூனிச கோட்பாடுகளை கடைப்பிடிக்கின்றவர்களாக இருந்தால் மட்டும் போதாது. மாறாக சமூக வளர்ச்சி என்னும் சங்கிலித் தொடரின் ஒவ்வொரு குறிப்பிட்ட தருணத்திலும் அதன் தொடர்புக் கண்ணியை கண்டறியும் திறன் பெற்றவர்களாக இருக்க வேண்டும். நம்முடைய அனைத்து வகையான அறிவாற்றலையும் கொண்டு இதனை உள்வாங்கிக் கொள்வதன் வழியாகவே சமுதாய வளர்ச்சி என்னும் முழுமையான சங்கிலித் தொடரை பிடித்து இழுத்து அடுத்த நிலைக்கு மாற்றமடைய செய்வதற்கு நாம் தயாராக முடியும்”
இயக்கவியல் அணுகுமுறையை எவ்வாறு பயன்படுத்துவது என்று கற்பதற்கான மிகச் சிறந்த வழி, கார்ல் மார்க்சின் மூலதனம் நூலையும் லெனினின் நூல்களையும் படிப்பதுதான். கார்ல் மார்க்ஸ் முதலாளித்துவத்தை ஆய்வுக்கு உட்படுத்தும் முறையில் இருந்தும், அரசியல் நடைமுறையின் ஒவ்வொரு திருப்பத்திலும் முக்கிய கண்ணிகளை லெனின் அடையாளம் காணும் முறையில் இருந்தும் இயக்கவியல் பொருள்முதல்வாதத்தின் மேதமையை நாம் உணர்ந்திட முடியும்.
பின்னிணைப்பு:
இயக்கவியலின் சுருக்கம்
இயக்கவியல் முறையில் பயன்படுத்த வேண்டிய அனைத்தையும் மதிப்பிட, தோழர் லெனின் அதன் முறைகளை 16 அம்சங்களில் வகைப்படுத்துகிறார். (Philosophical Notebooks, Volume 38, Lenin’s Collected Works, p221)
இயக்கவியலின் கூறுகள்
- எடுத்துக் கொண்ட பொருளின் புறவயத்தன்மை (குறிப்பிட்ட ஒரு பொருள் அதுவாகவே நிலவுகிறது). நிலவும் எதார்த்தத்தின் வெளிச்சத்தில் பார்த்தல். குறிப்பிட்ட பொருளையும், நிகழ்வுப்போக்கையும் அதுவாகவே காணவேண்டும், இன்னொரு பொருளுக்கோ, நிகழ்வுப் போக்கிற்கோ ஒத்ததாக பார்க்க கூடாது. அதற்காக, பொருளை நாம் மொத்தத்தில் இருந்து பிரித்துப் பார்க்க வேண்டும். இயக்கவியலை பொருத்தமட்டில் எதுவுமே அதன் சூழலில் இருந்து பிரிக்க முடியாது. ஆனாலும், அது உண்மையில் நிலவுவதால், முதலில் அதனை மொத்தத்தில் இருந்து பிரித்து ஆய்வு செய்யப்பட வேண்டும். அதன் பிறகுதான் அதன் சூழ்நிலையையும் கணக்கில் கொண்டு ஆய்வு செய்ய வேண்டும்.
- குறிப்பிட்ட ஒரு பொருள் மற்றவைகளுடன் கொண்டுள்ள பன்முக உறவின் முழு மொத்தம். எல்லா பொருளும், நிகழ்வுப் போக்கும் மற்ற பொருட்களோடும் நிகழ்வுப் போக்குகளோடும் கொண்டுள்ள உறவை மொத்தமாக பார்த்து மதிப்பிடப்பட வேண்டும்.
- இந்த பொருளின் வளர்ச்சிதான் அதன் சொந்த இயக்கம் அதன் சொந்த வாழ்வு. அனைத்து எல்லா பொருளும், நிகழ்வுப் போக்கும் பெரும் அண்டத்தின் பகுதிகளே, ஒவ்வொரு பொருளும், நிகழ்வுப் போக்கும் தன்னளவில் மாற்றச் செயல்முறையில்தான் இருக்கிறது. ஒவ்வொரு பொருளும், நிகழ்வுப் போக்கும் வளர்வதை அதன் சொந்த இயக்கத்தையும், வாழ்க்கையையும் கொண்டே மதிப்பிடப்படுகிறது.
- இந்தப் பொருளில் காணப்படும் உள் முரண்பாட்டுத் தன்மை. வளர்ச்சி என்பதே எப்பொழுதும் உள் முரண்பாட்டால் ஏற்படக்கூடிய விளைவாக இருந்தாலும், அது வெளியே கொண்டுள்ள உறவைப் பொருத்தும் அமைகிறது. ஒவ்வொரு பொருளுக்கும், நிகழ்வுப் போக்கும் உள்ளே நிலவும் முரண்பாட்டின் போக்கை கண்டறிய முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
- பொருள் என்பது எதிர்மறைகளின் ஒற்றுமை அல்லது தொகுப்பு ஆகும். ஒவ்வொரு பொருளும், நிகழ்வுப் போக்கும் எதிர்மறைகளின் ஒன்றுபட்ட தொகுப்பாக பார்க்க வேண்டும்.
- எதிர்நிலைகளின் முரண்பட்ட இயக்கம், போராட்டமாக வெளிப்படுகிறது. எதிர்மறைகளுக்குள் நிலவும் மோதல் அல்லது அந்த மோதலின் பல்வேறு வடிவங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
ஒவ்வொரு பிரச்சனையும் அதனளவில் சிக்கலானது, ஒன்றோடொன்று தொடர்புடைய பல்வேரு அம்சங்களால் ஆனது. பகுப்பாய்வும், தொகுத்துக் கூறலும் ஒருங்கிணைந்த செயல்முறையின் மூலம் சிக்கல்களை புரிந்துகொள்ள முடியும். எனவே தோழர் லெனின் முடிவுகளை கண்டறியும் வழிமுறையை பின்வருமாறு விவரிக்கிறார்.
- பகுத்து ஆய்தல் மற்றும் தொகுத்தளித்தல் இரண்டின் ஒற்றுமை – ஒரு முழுமையின் பல்வேறு பகுதிகளை பிரித்து பார்ப்பதும், பகுதிகளை தொகுத்து அளிப்பதும்.
- ஒவ்வொரு பொருளின் (அல்லது நிகழ்வுப் போக்கு இன்ன பிறவற்றின்) உறவுகள் பல வகைப்பட்டவை மட்டுமல்ல அவை பொதுவானவை, அனைத்தையும் தழுவியவை (universal). (செயல்முறை, நிகழ்வுப் போக்கு உள்ளிட்ட) எல்லாமே மற்றவைகளோடு தொடர்புடையவை. ஒவ்வொரு பொருளும், நிகழ்வுப் போக்கும் மற்ற பொருள் அல்லது நிகழ்வுப் போக்கோடு தொடர்பு கொண்டது ஆகும்.
- எதிர்மறைகளின் ஒற்றுமை மட்டுமல்ல, ஒவ்வொரு உறுதிப்பாடும், பண்பு அம்சங்களும், சாய்மானமும், உட்கூறுகளும் என அனைத்தில் ஏற்பட்டுவரும் மாற்றங்களும் ஒருமைப்பட்டு உள்ளன. (Not only the unity of opposites, but the transitions of every determination, quality feature, side, property into every other.
- புதிய பக்கத்தையும், உறவுகளையும் இன்ன பிறவற்றையும் கண்டறியும் செயல்பாட்டிற்கு முடிவே இல்லை.
- பொருள், நிகழ்வுப் போக்குகள், செயல்முறைகள் இன்ன பிறவற்றைக் குறித்த மனிதர்களின் அறிவுக்கு எல்லையில்லை. தோற்றத்தில் இருந்து அதன் சாரத்தை நோக்கியும், குறைவாக அறிந்ததில் இருந்து அதிகம் அறிவதை நோக்கியும் இடையராமல் முன்னேற்றம் நடக்கிறது.
- சேர்ந்து நீடித்திருப்பது தொடங்கி ஒன்றின் மாற்றத்திற்கு காரணமாவது வரை ஒவ்வொன்றும் கொண்டுள்ள தொடர்பும், ஒன்று மற்றொன்றோடு கொண்டிருக்கும் சார்பும் ஆழமான, பொதுவான நிலைமைகள் ஆகும். எதிர்மறைகளுக்கு இடையிலான இந்த மோதல் வளர்ச்சிக்கு அடிப்படையாக இருப்பதுடன் புதிய பண்பு நிலையை உருவாக்கும். புரட்சிகர மாற்றத்திற்கும் காரணியாக உள்ளது. ஒரு கட்டத்தில் இருந்து மற்றொரு கட்டத்தை நோக்கிய இந்த புரட்சிகர பாய்ச்சலின் முக்கியமான குண நலன்கள் பின்வருமாறு விவாதிக்கப்படுகின்றன.
- உயர்ந்த நிலைக்குச் செல்லும்போதும், கீழ் நிலையில் நிலவிய சில அம்சங்களும், கூறுகளும் மீண்டும் வரலாம்.
- பழையன கழிதலும் புதியன புகுதலும் (நிலை மறுப்பின் நிலை மறுப்பு)
- உருவத்துடன் உள்ளடக்கம் போராடுகிறது. நேர்மாறான போராட்டமும் நடக்கிறது. உருவம் தூக்கியெறியப்படுகிறது, உள்ளடக்கம் மாற்றமடைகிறது.
- அளவில் ஏற்படும் மாற்றம் பண்பு நிலையில் ஏற்படும் மாற்றமாகிறது, பண்புநிலையில் ஏற்படும் மாற்றம் அளவில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.(15, 16, 9)
சுருக்கமாக, இயக்கவியல் என்பது எதிர்மறைகளின் ஒற்றுமை பற்றிய கோட்பாடு எனலாம். இது இயக்கவியலின் சாரத்தை எடுத்துக் காட்டுகிறது, அதே சமயம் பல விளக்கங்களும், வளர்த்தெடுப்பும் தேவை.
(நிறைவுற்றது)
தமிழில்: வசந்தன், மதுரை
You may also like
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
