இயக்கவியல் பொருள்முதல்வாதம் மத்தியகட்சிகல்விபாடக்குறிப்பு (பகுதி -4)
4. வரலாற்று அணுகுமுறை
வரலாற்று அணுகுமுறை என்பது உண்மையை சரியாக புரிந்துகொள்வதற்கான தொடக்கப் புள்ளியாகும். இது ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட செயல்முறை நடைபெறும் காலத்தையும், இடத்தையும் கணக்கில் கொள்வதோடு, “அடிப்படை வரலாற்றுத் தொடர்பை மறக்காமல், ஒவ்வொரு சிக்கலையும் வரலாற்றில் அது எவ்வாறு தோன்றியது என்ற கண்ணோட்டத்திலிருந்து ஆய்வு செய்வதுடன், அதன் வளர்ச்சியின் முக்கிய கட்டங்கள் என்ன, அதன் வளர்ச்சிக் நோக்கில் இன்று அது என்னவாக மாறியுள்ளது என்பதையும் ஆய்வு செய்வது” என்ற அவசியத்தையும் உள்ளடக்கியது. (லெனின்)
தோற்றம், வளர்ச்சி, முடிவு – கடந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம், தொடக்கம், இடைநிலை, முடிவு, பழமையும் புதுமையும் போன்ற எல்லா கருத்துக்களும் வரலாற்று அணுகுமுறையின் அம்சத்தை வெளிப்படுத்துகின்றன.
“திட்டவட்டமான நிலைமை பற்றிய திட்டவட்டமான ஆய்வு” என்ற லெனினுடைய கருத்து, வரலாற்று அணுமுறையை கச்சிதமாக உள்ளடக்கிய ஒன்றாகும்.
வரலாற்றை நோக்காத அணுகுமுறை மாயாவாதம், விருப்பவாதம், வளரும் போக்குகளை பற்றிய கண்மூடித்தனம் ஆகியவற்றிற்கு வழிவகுக்கும்.
தொகுத்துப் பார்த்தால் ‘செயல்முறைகளையும், நிகழ்வுப் போக்குகளையும் பற்றிய விரிவான புறநிலைப் பகுப்பாய்வு மேற்கொள்கையில், குறிப்பிட்ட வரலாற்று நிலைமையில், குறிப்பிட்ட சமூக நடைமுறையில், அவற்றின் வளர்ச்சிக்கான அகக் காரணிகளை ஆய்வு செய்வது அதன் சாரத்தை உள்வாங்கவும், அடிப்படைக் கூறுகளை தனித்துப் பர்க்கவும் வேண்டும். அரசியல், பொருளாதார, பண்பாட்டு மற்றும் கல்விச் செயல்பாட்டின் போது ஒவ்வொரு சமுதாய வளர்ச்சிக் கட்டத்திற்குமான அடிப்படையான பணியையும், அடிப்படையான பிணைப்பையும் தீர்மானிக்கும் திறனே நம்முடைய வெற்றிகரமான செயல்பாட்டுக்கு அவசியமானதாகும்.’
லெனின் வார்த்தைகளில் கூறுவதென்றால் “நாம் பொதுவாக ஒரு புரட்சிகரமான சோசலிசம் அல்லது கம்யூனிச கோட்பாடுகளை கடைப்பிடிக்கின்றவர்களாக இருந்தால் மட்டும் போதாது. மாறாக சமூக வளர்ச்சி என்னும் சங்கிலித் தொடரின் ஒவ்வொரு குறிப்பிட்ட தருணத்திலும் அதன் தொடர்புக் கண்ணியை கண்டறியும் திறன் பெற்றவர்களாக இருக்க வேண்டும். நம்முடைய அனைத்து வகையான அறிவாற்றலையும் கொண்டு இதனை உள்வாங்கிக் கொள்வதன் வழியாகவே சமுதாய வளர்ச்சி என்னும் முழுமையான சங்கிலித் தொடரை பிடித்து இழுத்து அடுத்த நிலைக்கு மாற்றமடைய செய்வதற்கு நாம் தயாராக முடியும்”
இயக்கவியல் அணுகுமுறையை எவ்வாறு பயன்படுத்துவது என்று கற்பதற்கான மிகச் சிறந்த வழி, கார்ல் மார்க்சின் மூலதனம் நூலையும் லெனினின் நூல்களையும் படிப்பதுதான். கார்ல் மார்க்ஸ் முதலாளித்துவத்தை ஆய்வுக்கு உட்படுத்தும் முறையில் இருந்தும், அரசியல் நடைமுறையின் ஒவ்வொரு திருப்பத்திலும் முக்கிய கண்ணிகளை லெனின் அடையாளம் காணும் முறையில் இருந்தும் இயக்கவியல் பொருள்முதல்வாதத்தின் மேதமையை நாம் உணர்ந்திட முடியும்.
பின்னிணைப்பு:
இயக்கவியலின் சுருக்கம்
இயக்கவியல் முறையில் பயன்படுத்த வேண்டிய அனைத்தையும் மதிப்பிட, தோழர் லெனின் அதன் முறைகளை 16 அம்சங்களில் வகைப்படுத்துகிறார். (Philosophical Notebooks, Volume 38, Lenin’s Collected Works, p221)
இயக்கவியலின் கூறுகள்
- எடுத்துக் கொண்ட பொருளின் புறவயத்தன்மை (குறிப்பிட்ட ஒரு பொருள் அதுவாகவே நிலவுகிறது). நிலவும் எதார்த்தத்தின் வெளிச்சத்தில் பார்த்தல். குறிப்பிட்ட பொருளையும், நிகழ்வுப்போக்கையும் அதுவாகவே காணவேண்டும், இன்னொரு பொருளுக்கோ, நிகழ்வுப் போக்கிற்கோ ஒத்ததாக பார்க்க கூடாது. அதற்காக, பொருளை நாம் மொத்தத்தில் இருந்து பிரித்துப் பார்க்க வேண்டும். இயக்கவியலை பொருத்தமட்டில் எதுவுமே அதன் சூழலில் இருந்து பிரிக்க முடியாது. ஆனாலும், அது உண்மையில் நிலவுவதால், முதலில் அதனை மொத்தத்தில் இருந்து பிரித்து ஆய்வு செய்யப்பட வேண்டும். அதன் பிறகுதான் அதன் சூழ்நிலையையும் கணக்கில் கொண்டு ஆய்வு செய்ய வேண்டும்.
- குறிப்பிட்ட ஒரு பொருள் மற்றவைகளுடன் கொண்டுள்ள பன்முக உறவின் முழு மொத்தம். எல்லா பொருளும், நிகழ்வுப் போக்கும் மற்ற பொருட்களோடும் நிகழ்வுப் போக்குகளோடும் கொண்டுள்ள உறவை மொத்தமாக பார்த்து மதிப்பிடப்பட வேண்டும்.
- இந்த பொருளின் வளர்ச்சிதான் அதன் சொந்த இயக்கம் அதன் சொந்த வாழ்வு. அனைத்து எல்லா பொருளும், நிகழ்வுப் போக்கும் பெரும் அண்டத்தின் பகுதிகளே, ஒவ்வொரு பொருளும், நிகழ்வுப் போக்கும் தன்னளவில் மாற்றச் செயல்முறையில்தான் இருக்கிறது. ஒவ்வொரு பொருளும், நிகழ்வுப் போக்கும் வளர்வதை அதன் சொந்த இயக்கத்தையும், வாழ்க்கையையும் கொண்டே மதிப்பிடப்படுகிறது.
- இந்தப் பொருளில் காணப்படும் உள் முரண்பாட்டுத் தன்மை. வளர்ச்சி என்பதே எப்பொழுதும் உள் முரண்பாட்டால் ஏற்படக்கூடிய விளைவாக இருந்தாலும், அது வெளியே கொண்டுள்ள உறவைப் பொருத்தும் அமைகிறது. ஒவ்வொரு பொருளுக்கும், நிகழ்வுப் போக்கும் உள்ளே நிலவும் முரண்பாட்டின் போக்கை கண்டறிய முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
- பொருள் என்பது எதிர்மறைகளின் ஒற்றுமை அல்லது தொகுப்பு ஆகும். ஒவ்வொரு பொருளும், நிகழ்வுப் போக்கும் எதிர்மறைகளின் ஒன்றுபட்ட தொகுப்பாக பார்க்க வேண்டும்.
- எதிர்நிலைகளின் முரண்பட்ட இயக்கம், போராட்டமாக வெளிப்படுகிறது. எதிர்மறைகளுக்குள் நிலவும் மோதல் அல்லது அந்த மோதலின் பல்வேறு வடிவங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
ஒவ்வொரு பிரச்சனையும் அதனளவில் சிக்கலானது, ஒன்றோடொன்று தொடர்புடைய பல்வேரு அம்சங்களால் ஆனது. பகுப்பாய்வும், தொகுத்துக் கூறலும் ஒருங்கிணைந்த செயல்முறையின் மூலம் சிக்கல்களை புரிந்துகொள்ள முடியும். எனவே தோழர் லெனின் முடிவுகளை கண்டறியும் வழிமுறையை பின்வருமாறு விவரிக்கிறார்.
- பகுத்து ஆய்தல் மற்றும் தொகுத்தளித்தல் இரண்டின் ஒற்றுமை – ஒரு முழுமையின் பல்வேறு பகுதிகளை பிரித்து பார்ப்பதும், பகுதிகளை தொகுத்து அளிப்பதும்.
- ஒவ்வொரு பொருளின் (அல்லது நிகழ்வுப் போக்கு இன்ன பிறவற்றின்) உறவுகள் பல வகைப்பட்டவை மட்டுமல்ல அவை பொதுவானவை, அனைத்தையும் தழுவியவை (universal). (செயல்முறை, நிகழ்வுப் போக்கு உள்ளிட்ட) எல்லாமே மற்றவைகளோடு தொடர்புடையவை. ஒவ்வொரு பொருளும், நிகழ்வுப் போக்கும் மற்ற பொருள் அல்லது நிகழ்வுப் போக்கோடு தொடர்பு கொண்டது ஆகும்.
- எதிர்மறைகளின் ஒற்றுமை மட்டுமல்ல, ஒவ்வொரு உறுதிப்பாடும், பண்பு அம்சங்களும், சாய்மானமும், உட்கூறுகளும் என அனைத்தில் ஏற்பட்டுவரும் மாற்றங்களும் ஒருமைப்பட்டு உள்ளன. (Not only the unity of opposites, but the transitions of every determination, quality feature, side, property into every other.
- புதிய பக்கத்தையும், உறவுகளையும் இன்ன பிறவற்றையும் கண்டறியும் செயல்பாட்டிற்கு முடிவே இல்லை.
- பொருள், நிகழ்வுப் போக்குகள், செயல்முறைகள் இன்ன பிறவற்றைக் குறித்த மனிதர்களின் அறிவுக்கு எல்லையில்லை. தோற்றத்தில் இருந்து அதன் சாரத்தை நோக்கியும், குறைவாக அறிந்ததில் இருந்து அதிகம் அறிவதை நோக்கியும் இடையராமல் முன்னேற்றம் நடக்கிறது.
- சேர்ந்து நீடித்திருப்பது தொடங்கி ஒன்றின் மாற்றத்திற்கு காரணமாவது வரை ஒவ்வொன்றும் கொண்டுள்ள தொடர்பும், ஒன்று மற்றொன்றோடு கொண்டிருக்கும் சார்பும் ஆழமான, பொதுவான நிலைமைகள் ஆகும். எதிர்மறைகளுக்கு இடையிலான இந்த மோதல் வளர்ச்சிக்கு அடிப்படையாக இருப்பதுடன் புதிய பண்பு நிலையை உருவாக்கும். புரட்சிகர மாற்றத்திற்கும் காரணியாக உள்ளது. ஒரு கட்டத்தில் இருந்து மற்றொரு கட்டத்தை நோக்கிய இந்த புரட்சிகர பாய்ச்சலின் முக்கியமான குண நலன்கள் பின்வருமாறு விவாதிக்கப்படுகின்றன.
- உயர்ந்த நிலைக்குச் செல்லும்போதும், கீழ் நிலையில் நிலவிய சில அம்சங்களும், கூறுகளும் மீண்டும் வரலாம்.
- பழையன கழிதலும் புதியன புகுதலும் (நிலை மறுப்பின் நிலை மறுப்பு)
- உருவத்துடன் உள்ளடக்கம் போராடுகிறது. நேர்மாறான போராட்டமும் நடக்கிறது. உருவம் தூக்கியெறியப்படுகிறது, உள்ளடக்கம் மாற்றமடைகிறது.
- அளவில் ஏற்படும் மாற்றம் பண்பு நிலையில் ஏற்படும் மாற்றமாகிறது, பண்புநிலையில் ஏற்படும் மாற்றம் அளவில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.(15, 16, 9)
சுருக்கமாக, இயக்கவியல் என்பது எதிர்மறைகளின் ஒற்றுமை பற்றிய கோட்பாடு எனலாம். இது இயக்கவியலின் சாரத்தை எடுத்துக் காட்டுகிறது, அதே சமயம் பல விளக்கங்களும், வளர்த்தெடுப்பும் தேவை.
(நிறைவுற்றது)
தமிழில்: வசந்தன், மதுரை
You may also like
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
