
அண்ணல் காந்தியும், இன்றைய போராட்டமும் !
ஜி. ராமகிருஷ்ணன்
இந்திய சுதந்திர போராட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றியவர் அண்ணல் காந்தி ஆவார். சாதி, மதம், இனம் ஆகியவற்றைக் கடந்து அனைத்துப் பகுதி மக்களையும் ஏகாதிபத்திய ஆட்சிக்கு எதிராகத் தட்டியெழுப்பியவர் அவர்.
தென்னாப்பிரிக்காவிலிருந்து நாடுதிரும்பிய காந்தி நடத்திய முதல் சத்தியாகிரகப் போராட்டம், பீகார் மாநிலத்தில் சம்பரான் பகுதி விவசாயிகளின் பிரச்சனைகளுக்காக நடைபெற்றது. அவர் மட்டுமல்லாமல் தனது மகனையும் அந்தப் போராட்டத்தில் ஈடுபட வைத்தார். அதில் கிடைத்த வெற்றியால் ‘திங்கதியா’ எனப்படும் சுரண்டல் முறை (நிலத்தில் கட்டாயப்படுத்தி ஆவாரம் பயிரிடச் செய்தல்) ஒழிக்கப்பட்டது. அந்தப் போராட்டத்தில் காந்தியால் கண்டறியப்பட்டவர்தான், பின்னாளில் குடியரசுத் தலைவராக உயர்ந்த ராஜேந்திர பிரசாத்.
1917இல் துவங்கிய அந்த விவசாயிகள் போராட்டத்தில் இருந்து 1942இல் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கம் வரை பல போராட்டங்களை காந்தி தலைமையேற்று நடத்தினார். பலமுறை காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தியதால், அவரது உடல் கடுமையான பாதிப்புக்குள்ளானது. சுமார் ஆறு ஆண்டுக் காலம் கைது செய்யப்பட்டுச் சிறையில் இருந்தார்.
1947 ஆகஸ்ட் 15 அன்று தில்லியில் நடைபெற்ற சுதந்திர தினத்தன்று பண்டித நேரு மூவர்ணக் கொடியைச் செங்கோட்டையில் ஏற்றினார். சுதந்திரத்தை நாடே கொண்டாடியது; உலகமே வரவேற்றது. “செய் அல்லது செத்துமடி” என்ற முழக்கத்தை முன்வைத்து மக்கள் சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்று அறைகூவல் விடுத்த காந்தி, அன்றைய தினம் தில்லியில் இல்லை. ஏன் தெரியுமா?
ஆகஸ்ட் மாதம் 9ஆம் தேதியே காந்தி கொல்கத்தா நகரத்திற்குச் சென்றுவிட்டார். அங்கு அரசு செய்தித்துறை அதிகாரி ஒருவர் சுதந்திர தின விழா வாழ்த்துச் செய்தியைக் காந்தியிடம் கேட்டிருக்கிறார். மேலும் இரண்டு அதிகாரிகள் வந்து காந்தியிடம் அதேபோன்று வாழ்த்துச் செய்தியைக் கேட்டார்கள். “செய்தி ஒன்றுமில்லை” என்று காந்தி கூறிவிட்டார். அந்த அளவுக்கு வேதனையில் இருந்தார் காந்தி.
1946இல் தொடங்கி நாடு முழுவதும் பல மாநிலங்களில் இந்து-முஸ்லிம் மக்களுக்கிடையே கலவரம் மூண்டது. மேற்கு வங்காளம், கிழக்கு வங்காளம், பீகார், தில்லி, கராச்சி, லாகூர் உள்ளிட்ட பல பகுதிகளில் நடைபெற்ற கலவரங்கள், படுகொலைச் சம்பவங்களில் ஒரு மதத்தினர் இன்னொரு மதத்தினரைத் தாக்கிப் படுகொலை செய்யும் அவலங்கள் நடைபெற்றன. குழந்தைகள், மகளிர், முதியோர் என்ற வேறுபாடில்லாமல் விரட்டி விரட்டித் தாக்கும் கொடூரம் அரங்கேறியது. 1946 இறுதியில் நவகாளியில் (இன்றைய வங்காளதேசத்தின் ஒரு மாவட்டம்) ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட இந்துக்களும் இஸ்லாமியர்களும் கொல்லப்பட்டனர். இவ்வாறு கலவரம் நடைபெற்ற பகுதிகளுக்கெல்லாம் காந்தி நேரடியாகச் சென்றார். தான் கனவு கண்ட சுதந்திர இந்தியா இதுவல்ல என்று வேதனைப்பட்டு, 15.8.1947 அன்று சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை.
1947 ஆகஸ்ட் 15 அன்று கொல்கத்தாவில் பிரார்த்தனைக்குச் சென்றபோது இஸ்லாமியர்கள், இந்துக்கள் என மத வித்தியாசமில்லாமல் 30 ஆயிரம் பேர் பங்கேற்றனர். அதைக் கண்டு காந்தி மகிழ்ச்சி அடைந்தார். ஆனால் ஆகஸ்ட் 31 அன்று நிலைமை மீண்டும் மோசமானது. கொல்கத்தா நகரத்தில் மீண்டும் கலவரம் வெடித்தது. இரவு காந்தி தூங்கிக்கொண்டிருந்தபோது, அவர் தங்கியிருந்த அறையை நோக்கிக் கல் எறிந்திருக்கிறார்கள். அறைக்கு வெளியே கூட்டம் கூடிவிட்டது. ஒருவர் கத்தியால் காந்தியைத் தாக்க முயற்சித்தார். அங்கு விரைந்து வந்த காவல்துறைக் கண்காணிப்பாளர் காந்திக்குப் பாதுகாப்பு அளித்துள்ளார். அன்று இரவு 10 மணிக்குக் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் துவக்கப் போவதாக மேற்கு வங்காள கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜகோபாலாச்சாரிக்குக் காந்தி கடிதம் எழுதிவிட்டார்.
கவர்னர் ஜெனரல் ராஜாஜி பதறியடித்துக்கொண்டு வந்து காந்தியைச் சந்தித்தார்.
குண்டர்களுக்கு எதிராக நீங்கள் உண்ணாவிரதம் இருப்பதா? என்று ராஜாஜி கேள்வி எழுப்பினார்.
காந்தி: குண்டர்களை உருவாக்குவதே நாம்தான். நம்முடைய அனுதாபமும் நீண்டகால ஆதரவும் இல்லாமல் அவர்களால் நீடிக்க முடியாது. குண்டர்களுக்குப் பின்னால் இருக்கும் இதயங்களைத் தொட விரும்புகிறேன்.
ராஜாஜி: ஒருவேளை நீங்கள் இறந்துவிட்டால், காட்டுத்தீ மிக மோசமான முறையில் பரவும்.
காந்தி: நல்லவேளை, அதைப் பார்க்க நான் உயிருடன் இருக்கமாட்டேன். என்னால் இயன்றதைச் செய்து முடித்தவனாக இருப்பேன்.
79 வயதை எட்டியிருந்த அண்ணல் காந்தி, பல அரசியல் தலைவர்கள் விடுத்த வேண்டுகோளை நிராகரித்து, உண்ணாவிரதப் போராட்டத்தைத் துவக்கினார். அடுத்த நாள் அண்ணல் காந்தியைச் சந்தித்து, இந்து, இஸ்லாம், சீக்கிய மதத் தலைவர்கள், வகுப்பு நல்லிணக்கத்தைக் காப்போம் எனக் கூட்டறிக்கை சமர்ப்பித்தனர். இதையடுத்து, யாரும் எதிர்பாராத வகையில் கொல்கத்தா நகரில் அமைதி திரும்பியது. காந்தியிடம் உண்ணாவிரதம் முடித்துக்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தனர். அதையேற்று அவர் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்.
இவ்வாறு எந்தவிதச் சமரசத்திற்கும் இடமில்லாமல் மதக் கலவரத்தைத் தடுத்து நிறுத்த, நாட்டின் பல பகுதிகளுக்குக் காந்தி சென்றார். இவரை உயிரோடு விட்டால் தங்கள் நோக்கத்தை நிறைவேற்ற முடியாது எனக் கருதிய ஆர்.எஸ்.எஸ். கும்பல் சதித்திட்டம் தீட்டியது. 1948 ஜனவரி 30ஆம் தேதி நாதுராம் கோட்சே காந்தியைச் சுட்டுக் கொலை செய்தார்.
மக்கள் ஒற்றுமையை, மதச்சார்பின்மையை, மத நல்லிணக்கத்தைப் பாதுகாத்திட, தனது உயிரைப் பணயம் வைத்துத் தனது இறுதிமூச்சுவரை காந்தி போராடினார். காந்தி படுகொலைக்குப் பிறகு ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்பட்டது. பிறகு தடை நீக்கப்பட்டது. கடந்த 2014ஆம் ஆண்டு பாசிசத் தன்மை கொண்ட ஆர்.எஸ்.எஸ். வழிகாட்டக்கூடிய பாஜக ஆட்சிக்கு வந்தது. எந்த இந்துத்துவக் கருத்தியல் காந்தியைக் கொன்றதோ, அந்தக் கருத்தியலை பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு, ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்கப் பரிவார் அமைப்புகள் கடந்த 11 ஆண்டுக் காலமாக வேக வேகமாக நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.
10.11.1948 அன்று இந்தியப் பிரதமர் பண்டித நேரு ஆர்.எஸ்.எஸ். தலைவர் கோல்வால்கருக்கு எழுதிய கடிதத்தில், ஆர்.எஸ்.எஸ். குறித்துக் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டிருக்கிறார்.
”ஆர்.எஸ்.எஸ்.சுடன் தொடர்புடையவர்களின் உண்மையான நோக்கங்களுக்கும், பல்வேறு தளங்களில் அவர்களின் செயல்பாடுகளுக்கும், மேற்கொண்டிருக்கும் வழிமுறைகளுக்கும், அது அறிவித்துள்ள நோக்கங்களுக்கும் சிறிதும் தொடர்பு இல்லை எனத் தோன்றுகிறது. அதன் உண்மையான நோக்கங்கள் இந்திய பாராளுமன்றத்தின் முடிவுகளுக்கும் நடைமுறைக்கு வர இருக்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கும் முற்றிலும் எதிரானவை என்றும் தோன்றுகிறது. எங்களுக்குக் கிடைத்த தகவலின்படி, அதன் நடவடிக்கைகள் தேச விரோதமானவை. பல நேரங்களிலும் சதித்தன்மை கொண்டவை, வன்முறையானவை” என்று சுட்டிக்காட்டினார்.
பிரதமர் நேரு ஆர்.எஸ்.எஸ். தலைவருக்குக் கடிதம் எழுதும்போது, அந்த அமைப்பு ஆட்சி அதிகாரத்தில் இல்லை. ஆனால் கோல்வால்கர் உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் மனுநீதியின் அடிப்படையில்தான் அரசியல் சட்டம் அமைய வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். மனுநீதியின் அடிப்படையில் அரசியல் சட்டத்தை உருவாக்கினால்தான் இந்தியாவை இந்து ராஷ்டிரமாக மாற்ற முடியும் என்று கருதினார்கள். தற்போது ஒன்றிய பாஜக அரசு ஆர்.எஸ்.எஸ்.சின் 100 ஆண்டுக் கால அஜண்டாவான இந்துத்துவம் – இந்து ராஷ்டிரத்தை நிர்மாணித்திட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
பாஜக அதிகாரத்திற்கு வரும் போதெல்லாம் அரசு இயந்திரத்திற்குள் ஊடுருவும் வாய்ப்பு அதற்குக் கிடைக்கிறது. அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கலாச்சாரத்துறை, கல்வித்துறை, வரலாற்று ஆய்வுத்துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்து, தங்களது இந்துத்துவக் கருத்தியலை முன்னெடுத்து வருகிறது.
தேர்தல் ஆணையத்தையும், நாடாளுமன்ற நடைமுறைகளையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்த பாஜக, நீதித்துறையையும் வளைத்திட மறைமுகமாகவும், நேரடியாகவும் பல நிர்ப்பந்தங்களைக் கொடுத்து வருகிறது. குடியுரிமைத் திருத்தச் சட்டம், வக்பு வாரியத் திருத்தச் சட்டம், ஒளிப்பதிவு (சினிமாடோகிராபி) திருத்தச் சட்டம், இந்தியத் தண்டனைச் சட்டம், சாட்சியச் சட்டம், குற்றவியல் சட்டம் ஆகியவற்றைத் திருத்திப் புதிய சட்டங்களைக் கொண்டுவந்தது. 29 தொழிலாளர் நலச் சட்டங்களைத் திருத்தி நான்கு தொகுப்புகளாகக் கொண்டுவந்தது, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் திருத்தம், புதிய கல்விக் கொள்கை 2020 (கல்வியைக் காவி மயமாக்கித் தங்களுடைய கருத்தியலைக் கொண்டு செல்வது) போன்று பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
“மொத்தத்தில் இந்துத்துவத்தை அரசின் சித்தாந்தமாக ஆக்குவதற்கும், மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசை இந்து ராஷ்டிரமாக மாற்றுவதற்குமான ஆர்.எஸ்.எஸ்.சின் செயல் திட்டத்தைப் பாஜக அரசு தீவிரமாகச் செயல்படுத்தி வருகிறது” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு நிகழ்வு அரசு நிதி உதவியுடன், பிரதமரே மதச் சடங்குகளை முன்நின்று நடத்திடும் நிகழ்வு நடைபெற்றது. அரசியலமைப்புச் சட்டத்தின்படி அரசு மதத்தில் இருந்தும், மதச் சடங்குகளில் இருந்தும் விலகி இருக்க வேண்டும். இத்தகைய மதச்சார்பின்மைக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டதுதான் இந்திய அரசியலமைப்புச் சட்டம். இதைத்தான் அண்ணல் காந்தி திரும்பத் திரும்ப வலியுறுத்தினார்.
“மதம் என்பது தனிநபர் சார்ந்தது. அதற்கு அரசியலில் இடமில்லை. மதச்சார்பின்மையை அடிப்படையாகக் கொண்டு அரசு செயல்பட வேண்டும். இந்தியா இந்துக்களுக்கு மட்டுமானதல்ல; பாகிஸ்தான் முஸ்லிம்களுக்கு மட்டுமானதல்ல என்பதை நாம் அங்கீகரிக்க வேண்டும்” என காந்தி வலியுறுத்தினார். கடுமையான மதக்கலவரம் நடைபெற்ற நவகாளிக்குச் சென்ற காந்தி, மக்களிடையே பேசுகையில், “நீங்கள் நெசவாளர்களாக இருங்கள்; மீனவர்களாக இருங்கள்; விவசாயிகளாக இருங்கள். இருப்பினும் உங்கள் மதத்தை மறந்துவிடுங்கள்” என்றார். இத்தகைய கோட்பாட்டின் அடிப்படையில்தான் இந்திய அரசியல் சட்டம் உருவாக்கப்பட்டது. மதச்சார்பின்மை என்ற கோட்பாட்டையே ஏற்றுக்கொள்ளாத பாஜக, தான் ஆளும் பல மாநிலங்களில் சிறுபான்மையினரைக் குறிவைத்துச் சட்டங்களை இயற்றி வருகின்றன.
உதாரணமாக, உத்தரபிரதேசத்தில் ‘லவ் ஜிகாத்’ என அழைக்கப்படும் இரு மதத்தினருக்கிடையே திருமணம் நடைபெற்றால் ஆயுள் தண்டனை விதிக்கப்படும் எனச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. ‘நில ஜிகாத்’, ‘உணவு ஜிகாத்’ போன்ற புதிய சொற்கள் இஸ்லாமியர்களைச் சிக்கவைப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளன.
இந்துத்துவ சக்திகள் சிறுபான்மையினருக்கு எதிரான தங்களது பிரச்சாரத்தில் கிறிஸ்தவர்களையும் குறிவைக்கின்றனர். 2023ஆம் ஆண்டு கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் 734ஆக இருந்தது, அது 2024ஆம் ஆண்டில் 834ஆக அதிகரித்துள்ளது. தேவாலயங்கள், பிரார்த்தனைக் கூட்டங்கள் மீதான தாக்குதல்கள், கடுமையான மதமாற்றச் சட்டங்களைக் கொண்டுவந்து கடுமையான குற்ற வழக்குகள் பதியும் சம்பவங்கள் பல மாநிலங்களில் நடைபெற்று வருகின்றன. மதரீதியாக மக்களைப் பிளவுபடுத்தி, மக்கள் ஒற்றுமையைச் சீர்குலைக்கும் இந்த வேலைகளைப் பாஜக அரசும், சங்கப் பரிவார் அமைப்புகளும் செய்து கொண்டே இருக்கின்றன. பாஜக அரசின் செயல்பாடுகளையும், சங் பரிவார் அமைப்புகளின் நடவடிக்கைகளை எதிர்ப்பவர்களைக் கைது செய்து, ஜாமீனில் வெளியே வர முடியாத அளவிற்குச் சட்டங்கள் திருத்தப்பட்டுள்ளன. தேசியப் புலனாய்வு முகமை, பயங்கரவாதத் தடுப்புச் சட்டம், சட்டவிரோத பணப் பரிமாற்றச் சட்டங்களைத் திருத்தி, எதிர்க்கட்சிகள், பாஜக எதிர்ப்பு ஊடகவியலாளர்கள், சமூகச் செயல்பாட்டாளர்கள் என அனைவரையும் ஒடுக்கி வருகிறார்கள்.
குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்தற்காக உமர் காலித் உள்ளிட்ட பலர் ஐந்தாண்டுகளுக்கும் மேல் ஜாமீன் மறுக்கப்பட்டுச் சிறையில் வாடி வருகிறார்கள். பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் பல ஆண்டுகளாகச் சிறையில் வாடி வருகின்றனர். திருத்தப்பட்ட புதிய தண்டனைச் சட்டத்தின் அடிப்படையில் ஒன்றிய அரசை விமர்சித்த ஊடகவியலாளர்கள் கரண் தாப்பர், சித்தார்த்த வரதராஜன் ஆகியோருக்குத் தேச விரோதச் செயலில் ஈடுபட்டதாக நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
சுதந்திரப் போராட்ட காலத்தில் காந்தி, கம்யூனிஸ்ட் தலைவர்கள் உள்ளிட்ட பலர் மீது தேசத் துரோக வழக்குகள் தொடுக்கப்பட்டன. 1922ஆம் ஆண்டு ‘யங் இந்தியா’ என்ற இதழில் ஒரு மாவட்ட நீதிபதியின் கடிதத்தை வெளியிட்டதற்காக அண்ணல் காந்தி மீது தேசத் துரோக வழக்கு தொடரப்பட்டது. அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று மும்பை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது. மக்கள் நலன் சம்பந்தப்பட்ட ஒரு கடிதத்தை இதழில் வெளியிட்டது என்பது சட்டவிரோதமானது அல்ல எனக்கூறி மன்னிப்புக் கோர அண்ணல் காந்தி மறுத்துவிட்டார். மும்பை உயர்நீதிமன்றம் அவருக்குத் தண்டனை வழங்கி, அவரைச் சிறையிலடைத்தது. இத்தகைய சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும் என்று காந்தி வலியுறுத்தினார்.
சமீபகாலத்தில் தேசத் துரோகச் சட்டம் 124 ஏ பிரிவை உச்சநீதிமன்றம் இடைக்காலமாக நிறுத்திவைத்தது. தேசத் துரோகப் பிரிவின் கீழ் வழக்குப் பதியக் கூடாது என்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பி.வி.ரமணா தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது. பிரிட்டீஷ் காலத்து ஆள் தூக்கிச் சட்டத்தை வைத்துக்கொண்டு, ஒன்றிய அரசுக்கு எதிராகக் கருத்துத் தெரிவிப்பவர்களைத் தேசத் துரோகிகளாகச் சித்தரிப்பதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று ‘இந்து’, ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ உள்ளிட்ட ஊடகங்கள் தலையங்கம் தீட்டின. ஆனால் மோடி தலைமையிலான அரசு, காலாவதியாகிப் போன காலனியாதிக்கச் சட்டங்களைக் கைவிடுவதாகவும், திருத்துவதாகவும் கூறி அதைவிட மோசமான சட்டங்களைக் கொண்டுவந்துள்ளது. 124 ஏ பிரிவுக்குப் பதில், புதிய பாரதிய நியாய சன்ஹிதா என்ற சட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ள பிரிவு 152, பிரிட்டீஷ் ஆட்சிக் காலத்தில் இருந்த சட்டத்தை விட மோசமானது.
காந்தியின் தலைமையிலான தேசிய தேசிய இயக்கமும், கம்யூனிஸ்ட் இயக்கமும் தேச விடுதலைக்காக, ஏகாதியத்தியத்தை எதிர்த்து அளப்பறிய தியாகங்களைச் செய்துள்ளன. அத்தகைய பின்னணியில்தான் மதச்சார்பின்மை, ஜனநாயகம், கூட்டாட்சி, சுயசார்பு பொருளாதார கொள்கை ஆகிய விழுமியங்களைக் கொண்ட அரசியல் சட்டம் உருவாகியது. இந்த அடிப்படைகளை தகர்த்து வீழ்த்தி, நாட்டை எதேச்சதிகார இந்துத்துவமாக மாற்றியமைக்க ஒன்றிய பாஜக அரசும், ஆர்.எஸ்.எஸும் முயற்சிக்கின்றன. அதனை அனுமதிக்க முடியாது. ஆர்.எஸ்.எஸ்/பாஜக செயல் திட்டத்தை முறியடித்து, நவீன இந்தியாவை பாதுகாப்போம்.
You may also like
1 comment
Comments are closed.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

காந்தியைிடமிருந்து மார்க்சிஸ்ட்டுகள் கற்க வேண்டிய பாடங்களுண்டு. இக்கட்டுரை அதை சுட்டிக் காண்பிக்காமல் ஏதேதோ எழுதி குழப்புகிறது. மக்களை திரட்டுவதில் அவருக்கிருந்த திறமை மார்க்சிஸ்ட்டுகளுக்கு பாடமாகும் . இந்து மத நம்பிக்கை யுள்ளவர்களை பஜனை கூட்டத்தின் மூலம் மூடச் சடங்குகளையும், இஸ்லாமிய விரோத உணர்வையும் தாண்டி பார்க்கவைத்தார் . கல்வி பரவாத காலத்தில் பெரும் திரளாக மக்களை திரட்டியதில் அவரது வழி சரியானது. நமது அரசியல் நிர்ணயசட்டத்தில் உள்ள நிறை குறைகளை சுட்டிக்காட்டாமல் அதையும் புகழ்ந்து தள்ளுவது சரியல்ல இந்துத்வா அபாயத்தை விட மோடியின் பொருளாதார கோட்பாடே ஆபத்தானது. அதை முறியடிக்க பெரும் திரளாக மக்களை திரட்டாமல் கூட்டணி உபாயம் உதவாது.