கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை: உலகமயமாக்கல், நாடு மற்றும் வர்க்கப் போராட்டம்
பிரகாஷ் காரத்
தமிழில்: வெங்கடேஷ் ஆத்ரேயா
1998ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் 150வது ஆண்டு விழாவைக் கொண்டாடும்போது, அந்த அறிக்கை, உலகமயமாக்கப்பட்ட முதலாளித்துவம் எவ்வாறு உருவாகும் என்பதை பிரமிக்கத்தக்க தெளிவுடன் கணித்திருந்தது; பல முதலாளித்துவ விமர்சகர்களை வியக்க வைத்தது. சோவியத் ஒன்றியத்தின் அழிவிற்குப் பிறகு, உலக முதலாளித்துவ அமைப்பில் ஏற்பட்ட முதல் தீவிர நெருக்கடியும், முதலாளித்துவ பொருளாதார வல்லுநர்கள் மற்றும் சிந்தனையாளர்களின் கவனத்தை கம்யூனிஸ்ட் அறிக்கையை நோக்கி ஈர்த்ததற்கு மற்றொரு காரணமாகும்.
உலக முதலாளித்துவம் சோசலிசத்தின் “அழிவை” வெற்றிக்களிப்புடன் அறிவித்த ஏழு ஆண்டுகளுக்குள், பன்னாட்டு நிதி மூலதனம் ஏற்படுத்தும் பலவீனங்களும் அதன் கபளீகரத்தன்மையும் மையப்பொருளாகின. 1997-98 நெருக்கடி, முதலில் தென்கிழக்கு மற்றும் கிழக்கு ஆசியப் பொருளாதாரங்களில் தொடங்கியது. உலகின் சக்திவாய்ந்த பொருளாதாரமான ஜப்பான் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ரஷ்யாவில் சரிவு ஏற்பட்டது; பிரேசிலில் நெருக்கடி பரவியது. அதே நேரத்தில், உலகின் மிகவும் சக்திவாய்ந்த முதலாளித்துவ நாடான அமெரிக்கா, வளர்ச்சியடைந்து கொண்டிருந்தது. மூன்று வருடங்களுக்குப் பிறகு, 2000ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், நிலைமை மாறியது. நீண்ட கால மீட்சிக்குப் பிறகு, அமெரிக்கப் பொருளாதாரம் தற்போது மந்தநிலையில் உள்ளது. அமெரிக்காவும் ஜப்பானும் ஒரே நேரத்தில் மந்தநிலையில் இருப்பதால், உலகப் பொருளாதாரம் கடுமையான சரிவைச் சந்தித்து வருகிறது. ஏகாதிபத்தியத்தால் இயக்கப்படும் உலகமயமாக்கலின் கீழ் சர்வதேச நிதி மூலதனத்தின் நிலையற்றதன்மை இப்போது அம்பலமாகியுள்ளது. சர்வதேச நிதி அமைப்பின் தலைவர்கள் மக்கள் மீது ஏற்றிய சுமையின் விளைவை, 2001ஆம் ஆண்டின் இறுதியில் அர்ஜென்டினா அடைந்த துன்பங்கள் விளக்குகின்றன.
உலகமயமாக்கலும் ஏகாதிபத்தியமும்
வியக்கத்தக்க வகையில், கம்யூனிஸ்ட் அறிக்கை வர்ணிக்கும் முதலாளித்துவம் நாம் வாழ்ந்துவரும் சமகால முதலாளித்துவத்தை விவரிப்பது போன்ற உணர்வைத் தருகிறது. முதலாளித்துவ உறவுகளின் பரவல் குறித்து விவாதிக்கப்படும் கம்யூனிஸ்ட் அறிக்கையின் பத்திகளில், 21ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நிலவிய “உலகமயமாக்கப்பட்ட முதலாளித்துவம்” பற்றிய வர்ணனை எதிர்நோக்கப்பட்டுள்ளது:
“தமது சரக்குகளுக்கு தொடர்ந்து விரிவடையும் சந்தைகள் அவசியமாதலால், முதலாளி வர்க்கம் உலகம் முழுவதும் பரவி, தனக்கிடம் பிடித்துக்கொண்டு, அனைத்து இடங்களிலும் தனக்கென தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வது அதற்கு அவசியமாகிறது.”
கம்யூனிஸ்ட் அறிக்கையில் காணப்படும் முதலாளித்துவம் பற்றிய ஆய்வு முழுமையானதல்ல. பின்னர் மூலதனம் நூலில் மேலும் வளர்ந்து பக்குவம் பெறுகிறது. தொடர்ந்து, லெனின் எழுதியுள்ள ‘ஏகாதிபத்தியம்’ என்ற நூல் கம்யூனிஸ்ட் இயக்கம் புதிய முயற்சிகளை எடுக்க உதவியது. அப்போதிலிருந்து ஏகாதிபத்திய கட்டமைப்பிற்குள்ளேயே ஏற்பட்ட வளர்ச்சிகள், குறிப்பாக பன்னாட்டு ஊக நிதிமூலதனம் இருபதாம் நூற்றாண்டின் கடைசி இரண்டு பத்தாண்டுகளில் அடைந்த வளர்ச்சி, மார்க்சிய தத்துவத்திற்கும் உலகெங்கிலும் உள்ள தொழிலாளி வர்க்க இயக்கங்களும் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சமாக உள்ளது.
பத்தொன்பதாம் நூற்றாண்டில், அப்போது வளர்ந்து கொண்டிருந்த உலக முதலாளித்துவம் குறித்து கம்யூனிஸ்ட் அறிக்கை விவாதித்தாலும், ஏகாதிபத்தியத்தின் தற்போதைய உலகமயத் தாக்குதல், முன்னெப்போதும் இருந்திராத வகையில் உலக அளவில் முதலாளித்துவத்தின் பன்னாட்டுமயமாக்கல் மற்றும் (மூலதன) அணிதிரட்டல் ஆகியவை, தொழிலாளி வர்க்க இயக்கங்களுக்கு தேசிய மற்றும் உலக அளவில் புதிய பிரச்சினைகளை முன் நிறுத்துகின்றன.
வரலாற்றுப் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் சமகாலத்திற்கான மார்க்சியக் கோட்பாடு மற்றும் நடைமுறையைக் கண்டறிய, முதலில் மார்க்ஸ்-ஏங்கெல்சின் முதலாளித்துவம் மற்றும் முதலாளித்துவ சமூகம் குறித்த கருத்தாழமிக்க பகுப்பாய்வை உள்வாங்கி அதன் மீது நிற்பது அவசியம். அடுத்து, ஏகாதிபத்தியம் பற்றிய லெனினின் பகுப்பாய்வின் அடிப்படையில், உலக முதலாளித்துவத்தின் வளர்ச்சி இழையைக் கண்டறிய வேண்டும். ஏகாதிபத்தியம் என்பது உலகில், சமகாலத்தின் நிரந்தர இருப்பு என்பதை உணராமல் உலகமயமாக்கலுக்கு எதிராகப் போராட முடியாது. உலக நிதி மூலதனம்-உலக வங்கி முன்வைக்கும் “வளர்ச்சி”க்கான சட்டகத்தை சுதந்திர சந்தை விழுமியங்களை அடிப்படையாகக் கொண்ட ‘வளர்ச்சி’க்கான கோட்பாட்டை, உலகம் தழுவியதும் மற்றும் ஜனநாயக சமுதாயத்தின் வளர்ச்சிக் கோட்பாடாக ஏற்றுக்கொள்பவர்கள் மட்டுமே ஏகாதிபத்தியம் முன்பை விடவும் அதிக சுரண்டல் தன்மையுள்ளது; அதன் தாக்கம் உலகை சிதைக்கிறது; அழிக்கிறது என்பதை ஒப்புக்கொள்ள மறுப்பார்கள்.
நாடு: வர்க்கப் போராட்டக் களம்
உலகமயமாக்கப்பட்ட ஏகாதிபத்திய அமைப்பில் தேசிய அரசின் பங்கு என்பது இச்சூழ்நிலையில் மேலெழுந்துள்ள ஒரு குறிப்பிடத்தக்க பிரச்சனையாகும். இது வர்க்கப் போராட்டத்தின் மீது நேரடியாகத் தாக்கம் செலுத்த வல்லது. நாடுகளின் எல்லைகளைத் தாண்டி தடையின்றி ஊடுருவும் ஊக நிதி மூலதனத்தின் நிலையற்ற தன்மையையும் அது தரும் அழுத்தத்தையும் கட்டுப்படுத்துவதில் தேசிய அரசுகளின் தோல்வி காரணமாக நாடுகளின் இறையாண்மை அரிப்புக்குள்ளாகியுள்ளது. நிதி மூலதனத்தின் இத்தகைய தன்மையையும் அதன் அபரிமிதமான வளர்ச்சியையும் நாம் இங்கு விவாதிக்கப் போவதில்லை. ஆனால், நிதி மூலதனப் பாய்ச்சல் தேசிய அரசுகளுக்கு ஏற்படுத்தும் பெரும் சிரமங்களை நாம் அடையாளம் காணவேண்டியது அவசியம். ஏனெனில், உலக நிதி மூலதனம்-உலக வங்கி மற்றும் உலக வர்த்தக அமைப்பு ஆகியவை மூலமாக திணிக்கப்படும் கொள்கைகளை எதிர்க்கவோ, சுரண்டலைத் தடுக்கவோ முடியாதவையாக தேசிய அரசுகள் உள்ளன. எனவே, தேசிய அரசு என்ற அமைப்பின் வழியாகவும், தேசிய அரசை வர்க்கப் போராட்டங்களுக்கு மையமாக ஆக்குவதன் மூலமாகவும், இந்தத் தீங்கு விளைவிக்கும் போக்குகளை எதிர்கொள்ள முடியுமா என்பதுதான் கேள்வி.
இதற்கு, ‘வர்க்கப் போராட்டத்தின் களமாக தேசிய அரசு’ என்பது குறித்த சரியான புரிதல் தேவை. முதலாளித்துவ நடவடிக்கைகளின் உலகளாவிய தன்மையை கோடிட்டுக் காட்டும் கம்யூனிஸ்ட் அறிக்கை, அதே நேரத்தில், தேசிய எல்லைகளுக்குள் வர்க்கப் போராட்டம் என்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. “உட்பொருளில் இல்லாவிட்டாலும் வடிவத்தில், முதலாளித்துவ வர்க்கத்துடனான பாட்டாளி வர்க்கத்தின் போராட்டம் முதலில் ஒரு தேசியப் போராட்டமாகும். ஒவ்வொரு நாட்டின் பாட்டாளி வர்க்கமும், நிச்சயமாக, முதலில் தன் சொந்த நாட்டு முதலாளித்துவத்துடன் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள வேண்டும்”. மூலதனத்தின் உலகமயமாக்கல் பெருமளவில் அதிகரித்துள்ள போதிலும், இந்தக் கொள்கை, 150 ஆண்டுகளுக்குப் பிறகும், இன்றும் பொருந்துவதாக உள்ளது.
குறைவான வளர்ச்சியுடைய முதலாளித்துவ நாடுகளில், ஆளும் வர்க்கங்களின் பங்கை புரிந்துகொள்வது அவசியம். பெரும்பாலும் இந்நாடுகளில் முதலாளித்துவ-நிலப்பிரபு வர்க்கங்கள், தங்கள் நாடுகளுக்குள், தேவையான தன்னாட்சி பெற்ற முதலாளித்துவ வளர்ச்சிக்கான தேடலைக் கைவிட்டு, தடையற்ற சந்தை சார் நடவடிக்கைகளை ஏற்றுக்கொண்டு விட்டன. சோவியத் யூனியன் ஒரு எதிர் சக்தியாக இல்லாத உலகில், சர்வதேச நிதி மூலதனத்தின் உலகளாவிய தன்மையுடன் ஒருங்கிணைவது ஒன்றே அவர்களின் வர்க்க வளர்ச்சிக்கான ஒரே பாதையாகக் கருதப்படுகிறது. இருப்பினும், இது நிரந்தரத் தீர்வாக இருக்கமுடியாது. உலக முதலாளித்துவ அமைப்பில் முரண்பாடுகள் தீவிரமடையும்போது, உள்நாட்டு ஆளும் வர்க்கங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படும்.
சர்வதேச மூலதனப் பாய்ச்சலின் காரணமாக தேசிய அரசுகளுக்கு ஏற்படும் பாதிப்பு கணிசமானதாக இருந்தாலும், இதனை எதிர்த்து ஒன்றும் செய்ய இயலாது என அதனை மிகைப்படுத்தக் கூடாது. சந்தையை மூலதனப் பாய்ச்சலுக்குத் திறந்துவிடாமல், எந்த நாடும் வாழவோ வளரவோ முடியாது என கட்டுபெட்டித்தனமாக பன்னாட்டு நிதியமும் உலக வங்கியும் முன்வைக்கிறது. ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக, தென்-கிழக்கு ஆசிய நெருக்கடியும் இப்போது அர்ஜென்டினாவும், இத்தகைய கட்டுப்பாடற்ற மூலதனப் பாய்ச்சலின் முட்டாள்தனத்தை விளக்குகின்றன. தேசிய அரசு மட்டுமே, நிதி மூலதனம் கொள்ளையடிப்பதை ஒழுங்குபடுத்துவதற்கும் அதை சர்வதேச மன்றங்களின் நிகழ்ச்சி நிரலில் வைப்பதற்கும் ஒரே கருவியாக உள்ளதை இந்த நெருக்கடிகள் காட்டுகின்றன. உதாரணமாக, மலேசியாவின் மகாதீர் ஆட்சி வெளிப்படையாகவே முதலாளித்துவ ஆட்சியாக இருந்தபோதிலும், 1997-98 தென்கிழக்கு ஆசிய நெருக்கடியின்போது மூலதனக் கட்டுப்பாடுகளை விதித்து, இந்த உலகவங்கி-பன்னாட்டு நிதிய வறட்டு தத்துவத்திற்கு சவால் விட்டது.
தேசியமும் வர்க்கப் போராட்டமும்
உள்நாட்டு ஆளும் வர்க்கங்கள், நாட்டையும், அரசின் கருவிகளையும், சர்வதேச நிதி மூலதனத்தின் கட்டளைகளை நடைமுறைப்படுத்துவதற்குப் பயன்படுத்த நாம் விட்டுவிட முடியாது. உழைக்கும் மக்களின் உடனடிப் பாதுகாப்பு, ஏகாதிபத்திய மேலாதிக்க எதிர்ப்பு ஆகிய இரண்டு காரணங்களுக்காக, அரசின் திசையை மறுசீரமைப்பதற்கான போராட்டம், உறுதியுடன் நடத்தப்பட வேண்டும். இந்தப் போராட்டத்தில் தொழிலாளி வர்க்க இயக்கம் ஒட்டுமொத்த மக்களுக்குத் தலைமையேற்க வேண்டும். இதுதான் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் சூசகமாக கூறப்பட்டுள்ளது. அரசியல் மேலாதிக்கத்தைப் பெற வேண்டுமானால், தொழிலாளி வர்க்கத்தை “தேசத்தை வழிநடத்தும் வர்க்கமாக உயரவும்” மற்றும் “தன்னையே தேசமாக்கவும்” கம்யூனிஸ்ட் அறிக்கை அறிவுறுத்துகிறது. ஏகாதிபத்திய அடிபணிதலுக்கு எதிராக அதிகரித்துவரும், தொழிலாளி வர்க்கத் தலைமையிலான ஜனநாயக இயக்கங்களின் அழுத்தம், வர்க்க சக்திகளின் பலாபலத்தை தேசிய அளவில் மாற்றி, உள்நாட்டு ஆளும் வர்க்கங்கள் ஏகாதிபத்திய சார்புநிலை எடுப்பதைத் தடுக்கவும், எதிர்க்கவும் வழிகோலும்.
வர்க்கப் போராட்டம் தேசம் என்ற களத்தில்தான் பிரதானமாக நிகழும். இப்படிக் கூறுவது சர்வதேச அளவிலான போராட்டத்தை மறுப்பதாகாது. உள்நாட்டு வர்க்கங்கள் மற்றும் மக்களின் முன்னுரிமைகளின் அடிப்படையில் செயல்பட அரசை அனுமதிப்பதற்குப் பதிலாக, இன்றைய ஏகாதிபத்தியம் தனது கொள்கைகளைச் செயல்படுத்துவதற்கு தேசிய அரசை அடிபணியச் செய்ய முயல்கிறது. தேசத்தின் இறையாண்மையை இழப்பது, நேரடியாக மக்கள், அவர்களின் உரிமைகளுக்கான இறையாண்மையை இழப்பதில் முடிகிறது. மக்களின் இறையாண்மை, தேசிய அரசுகள் மற்றும் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஜனநாயக நிறுவனங்கள் மூலம் வெளிப்படுத்தப்படுகிறது. இறையாண்மையின் அரிப்பு என்பது பொருளாதார அடிப்படையில் மட்டும் அல்ல; அது அரசியல் நிறுவனங்களையும் ஜனநாயகத்தையும் குறைத்து மதிப்பிடுகிறது; மேலும் பொதுக் கல்வி, சுகாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்பிற்கான மக்களின் உரிமைகளைப் பாதிக்கிறது.
இந்தியாவில் தற்போது உள்ள பிரச்சினை துல்லியமாக இதுதான். மூன்றாம் உலக நாடுகளில், இந்தியா ஒப்பீட்டளவில் மிகவும் வளர்ந்த முதலாளிவர்க்கத்தையும், குடியரசுத்தன்மை கொண்ட அரசியலமைப்பையும் கொண்டுள்ளது. இது குறைபாடுள்ளதாக இருந்தபோதிலும் செயல்படும் பாராளுமன்ற ஜனநாயகத்தைக் கொண்டுள்ளது. 1990களில் இந்திய ஆளும் வர்க்கங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட “உலகமயமாக்கல்” நிகழ்ச்சி நிரல், இந்த வகை ஜனநாயகத்தின் மீது நேரடித் தாக்குதலுக்கு வழியமைத்தது.
இடதுசாரிகள் கோட்பாட்டு அளவில் இந்தக் கருத்துடன் ஒத்துழைக்க மறுத்து, ஏகாதிபத்திய அழுத்தங்களுக்கு எதிராகத் தொடர்ந்து எதிர்ப்பைக் கட்டியெழுப்பி வந்துள்ள போதிலும், பொருளாதாரக் கொள்கை மாற்றங்களின் அடிப்படையில் மட்டும் உண்மையான மாற்றத்தைக் முன்னிறுத்த முடியாது; அவை முக்கியமானவையானாலும், போதுமானவை அல்ல. இது இறையாண்மை, ஜனநாயகம் மற்றும் மக்களின் ஒற்றுமைக்கான போராட்டம் அரசியல்-சித்தாந்தக் கூறுகளைக் கொண்டிருக்க வேண்டும். கம்யூனிஸ்ட் அறிக்கை அடிக்கோடிட்டுக் காட்டுவது போல், “வர்க்கப் போராட்டம் அடிப்படையில் ஒரு அரசியல் போராட்டம்”. உலகளாவிய ஏகாதிபத்திய மேலாதிக்க அமைப்பில் செயல்படும் தேசத்தில் வர்க்கப் போராட்டத்தை நாம் எவ்வளவு திறம்பட நடத்துகிறோம் என்பதைச் சார்ந்தே மூன்றாம் உலக நாடுகளில் மார்க்சியக் கோட்பாடுகளின் வளர்ச்சி மற்றும் நடைமுறைகளில் முன்னேற்றம் சாத்தியமாகும்.
உலக முதலாளித்துவத்தின் வெற்றிகரமான எழுச்சியை சரியாக முன்னறிவித்த கம்யூனிஸ்ட் அறிக்கையானது தேசிய தடைகளை உடைக்கும் அதன் திறனைப் பற்றி மிகை நம்பிக்கை கொண்டிருந்தது. “முதலாளித்துவத்தின் வளர்ச்சி, வர்த்தக சுதந்திரம், உலகச் சந்தை, சீரான தன்மை, உற்பத்தி முறை போன்றவற்றின் காரணமாக மக்களிடையே தேசிய இன வேறுபாடுகள் மற்றும் முரண்பாடுகள் நாளுக்கு நாள் மேலும் மேலும் மறைந்து வருகின்றன…….” என்று அது கூறியது. ஏகாதிபத்தியத்தால் தூண்டப்பட்ட தேசங்களுக்கிடையிலான விரோதங்கள் மற்றும் தேசிய மோதல்களினால், இருபதாம் நூற்றாண்டு மக்களைப் பேரழிவிற்குள்ளாக்கிய இரண்டு உலகப் போர்களைக் கண்டது. முதலாளித்துவ ஆட்சியின் எழுச்சியானது தேசிய மோதல்களை அதிகப்படுத்துகிறது; அதன் விளைவுகள் முதலாளித்துவத்திலிருந்து மாறுகின்ற நாடுகளிலும் தொடர்கின்றன என்பது கண்கூடு.
மத–இன அடிப்படைவாதம்: பிற்போக்குத்தனமான எதிர்வினை
ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டம், தற்போதைய சூழலில், மூன்றாம் உலக நாடுகள் மற்றும் முன்னாள் சோசலிச நாடுகளில் நிலவும் இன-தேசிய-மதப் பிரச்சனைகளால் சிக்கலானதாகவும், கடினமானதாகவும் மாறியுள்ளது. தடையற்ற சந்தைக் கோட்பாடுகளின் அமலாக்கம், சோசலிச சித்தாந்தத்தின் பின்னடைவு, சமூக மற்றும் பண்பாட்டு வெளியில் உலகமயமாக்கல் என்ற அழிவுச் சக்தியின் தாக்கம் ஆகியவை இன-மத அடையாள உணர்வுகளைத் தூண்டியுள்ளன; அல்லது மேலும் மோசமாக்கியுள்ளன.
மதப் பிரிவினைவாத இயக்கங்கள், தீவிரவாதம் மற்றும் இன-சாதி மோதல்களின் எழுச்சி ஆகியவை உலகின் அனைத்து பகுதிகளிலும் தேசிய-அரசுகள் மற்றும் பன்மைத்தேசிய அரசுகள் எதிர்கொள்ளும் தற்போதைய நெருக்கடிக்கு ஒரு எதிர்வினையே ஆகும். ஏகாதிபத்தியம் அத்தகைய சக்திகளுக்கு இடமளித்து இணைந்துகொள்ளும் திறன் கொண்டது என்பது உலகறிந்தது. அமெரிக்க ஏகாதிபத்தியம் அத்தகைய திறனை வெளிப்படுத்தி, தெற்காசியப் பகுதிகளில், 1996-97-இல் ஆப்கானிஸ்தானில் தலிபான்களுடனும்; 1980இல் பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளுடனும், அதேசமயம் இந்தியாவில் உள்ள இந்து மத அடிப்படைவாதிகளுடனும் நல்லுறவை ஏற்படுத்திக்கொண்டது. சிறுபான்மையினர் மீதான ஆளும் வர்க்கத்தின் பிற்போக்கான, ஜனநாயகமற்ற அணுகுமுறையினால் மக்களிடையே ஏற்படும் ஒற்றுமைக் குலைவிற்கும், குறுங்குழுவாத சக்திகளின் எழுச்சிக்கும், ஏகாதிபத்தியத்தின் துணை எப்பொழுதும் இருப்பதால், அதைத் தொழிலாளி வர்க்க இயக்கமும் இடதுசாரிகளும் எதிர்த்துப் போரிட வேண்டியுள்ளது.
இன, மதச் சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கும் ஒரு வலுவான ஜனநாயக இயக்கத்தை அர்ப்பணிப்புடன் கட்டியெழுப்பாதவரை, தேசிய அளவிலான இடதுசாரி மேலாதிக்கத்தைக் கனவு காண முடியாது. ஒரு ஏகாதிபத்திய எதிர்ப்பு தேசியவாதத்திற்கு தொழிலாளி வர்க்கம் தலைமை தாங்க வேண்டுமானால், பிற்போக்குத்தனம் ‘பெரிய’ அளவானாலும் ‘சிறிய’ அளவானாலும் அதனை எதிர்கொள்வது அவசியம். பிரிவினைவாதத்தை எதிர்க்கவும், சிறுபான்மையினரின் ஜனநாயக உரிமைகளைக் காக்கவும், தெற்காசிய நாடுகளிலிருந்து கிடைத்த அனுபவத்தைக் கொண்டு, இடதுசாரிகள் கூட்டாட்சி தத்துவத்தையும், பிராந்திய சுயாட்சிக் கொள்கையையும் கையிலெடுக்க அதிக அழுத்தம் தரவேண்டும். மேலும், இன்றைய காலகட்டத்தில், அரசு நிர்வாகம் மற்றும் பொருளாதாரத் துறைகளில் முடிவெடுக்கும் அதிகாரங்களைப் பரவலாக்குவதற்கான போராட்டத்தில், மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டமும் ஓரளவு பிரதிபலிக்கிறது.
உலகமயமாக்கலும் இராணுவ பலமும்
முதலாளித்துவம் எவ்வாறு சமூகத்திற்குள் நிலப்பிரபுத்துவ உறவுகளை உடைத்தும், வெளியில் உற்பத்தி மற்றும் வர்த்தகத்தை விரிவாக்குவதன் மூலம் “நாகரீகமடையாத நாடுகளின்” தடைகளை நொறுக்கியும் வளர்கிறது என்பதை கம்யூனிஸ்ட் அறிக்கை தெளிவாக விவரித்துள்ளது. குறிப்பாக, அறிக்கையில், இராணுவ பலத்தைப் பயன்படுத்துவதைப் பற்றியும், காலனியாதிக்கம் பற்றியும் அதிகம் இடம்பெறவில்லை. “உற்பத்திப் பொருட்களின் மலிவான விலையே” மேலே குறிப்பிட்ட அனைத்துத் தடைகளையும் தகர்க்க முதலாளித்துவம் பயன்படுத்தும் ஒரு “சக்திவாய்ந்த ஆயுதம்” ஆகும் என்றே அதில் கூறப்படுகிறது.
எனினும், மார்க்ஸ் தனது அடுத்தடுத்த படைப்புகளில், இந்தியா, சீனா போன்ற முதலாளித்துவத்திற்கு முந்தைய மற்ற சமூகங்களில் பிரிட்டிஷ் காலனி ஆதிக்கம், போர், ஆக்கிரமிப்பு மற்றும் கொள்ளை ஆகியவற்றின் அடிப்படையில் நிறுவிய காலனி ஆட்சிகளைப் பற்றியும், அவை ஏற்படுத்திய சிதைவுகள் பற்றியும் தெளிவாகப் பேசியுள்ளார்.
ஏகாதிபத்தியத்தின் வளர்ச்சி இராணுவ பலத்தைப் பயன்படுத்துவதையும் பேரழிவு ஆயுதங்களின் வளர்ச்சியையும் அதிகப்படுத்தவே செய்தது. முந்தைய நூற்றாண்டுகள் அனைத்தைக் காட்டிலும் 20ஆம் நூற்றாண்டு அதிக மக்கள் (யுத்தங்களில்) கொல்லப்பட்டதைக் கண்டது. ஏகாதிபத்திய அமைப்பை நிலைநிறுத்துவதற்கு இராணுவ பலத்தைப் பயன்படுத்துவது என்பது, இப்போது ஏகாதிபத்தியத்தால் ஊக்கப்படுத்தப்பட்ட உலகமயமாக்கலின் தாக்குதலுக்கு ஏற்றவாறு ஒரு புதிய பரிணாமத்தை அடைந்துள்ளது. அமெரிக்காவின் தலைமையில், அதிநவீன இராணுவ சாதனங்களின் பயன்பாடு மற்றும் அதன் வீச்சு ஆகியவை அதிகரித்து வருவது, உலகமயமாக்கலின் கீழ் ஏகாதிபத்திய அமைப்பின் ஒரு முக்கிய அம்சமாகும்.
அமெரிக்காவின் புதிய இராணுவக் கொள்கை இரண்டு காரணிகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது. அவை, பனிப்போர் முடிவுக்குப் பிறகான அமெரிக்க பொருளாதார, இராணுவ பலத்தின் மேலாதிக்கம் மற்றும் இராணுவத்தில் உயர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் வளர்ந்து வரும் அதன் ஏகபோகம் ஆகியவையாகும்.
அமெரிக்கா உலகளவில் தனது பாத்திரத்தை தக்கவைத்துக் கொள்ள தன் அபரிமிதமான இராணுவ வலிமையைப் பராமரித்து மேலும் வளர்த்து வருகிறது. இந்த பாத்திரம் மூன்று அம்சங்கள் கொண்டது. ஒன்று, ஏகாதிபத்திய அமைப்பை பாதுகாத்து பராமரிக்க இந்த இராணுவ வலிமை தேவைப்படுகிறது. இரண்டு, ஏகாதிபத்திய முகாமில் பிற மேலாதிக்க நாடுகள், குறிப்பாக, ஜெர்மனி, ஜப்பான் போன்ற நாடுகளுடன் தன் தலைமையில் அமெரிக்கா கூட்டணியை அமைத்துள்ள போதிலும், ஏகாதிபத்திய முகாமில் தன் தலைமையை செயல்படுத்த அதன் அபரிமிதமான வலிமை அவசியமாகிறது. இறுதியாக, ஈராக் போன்ற மிகவும் பலவீனமான மூன்றாம் உலக நாடுகளைக் குறிவைத்துத் தாக்குவதன் மூலம், தனது உலக வல்லரசு அந்தஸ்தை நிலை நாட்டிக்கொள்ள முனைகிறது. தனது (ராணுவ) பலத்தை பயன்படுத்திக் கீழ்ப்படிய வைப்பதற்கும், அதிகாரத்தின் முன் மண்டியிடச் செய்வதற்கும் இது ஓர் அருமையான எடுத்துக்காட்டாகும்.
சோவியத் யூனியனின் அழிவுடன் அமெரிக்க இராணுவ பலம் குறைக்கப்படவில்லை. இதற்காக, அமெரிக்காவின் ஆளும் வட்டாரங்கள், பனிப்போருக்குப் பிறகு, அதன் ஏகாதிபத்திய நலன்களுக்கு எதிரான புதிய அச்சுறுத்தல்களைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. “ரவுடி அரசுகள்” என்ற கருத்து வடிவமைக்கப்பட்டது. ஈராக், ஈரான் மற்றும் வட கொரியா போன்ற நாடுகள் “ரவுடி அரசு”களாகவும், அவை அமெரிக்காவின் நலன்களுக்கு அச்சுறுத்தலை அளிக்கும் வல்லமை கொண்டவையாகவும் கட்டமைக்கப்பட்டன. இந்த “ரவுடி அரசுகள்” அச்சுறுத்தக்கூடியவை என்ற எண்ணத்தை நம்பகமானதாக மாற்றுவதற்காக, அவர்கள் பேரழிவு ஏற்படுத்தும் ஆயுதங்களை உருவாக்கிப் பயன்படுத்தும் வல்லமையும் எண்ணமும் கொண்டவர்களாக, திட்டமிட்ட வகையில் பிரச்சாரம் கட்டவிழ்த்து விடப்பட்டது. அமெரிக்கா வகுத்துள்ள இந்தப் புதிய உலக ஒழுங்கில், இராணுவ பலத்தைப் பயன்படுத்துவது தடையின்றி மேற்கொள்ளப்படுகிறது.
1991 வளைகுடாப் போரில் தொடங்கி, அமெரிக்காவின் இராணுவ வியூகம் வெளிப்பட்டது. வான்வழி குண்டுவீச்சு, ஏவுகணைத் தாக்குதல்கள் மற்றும் எதிரியின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார உள்கட்டமைப்பை முடக்குவதற்கு அமெரிக்கா தனது உயர் தொழில்நுட்ப ஆயுதங்களை எவ்வாறு பயன்படுத்தும் என்பதற்கு யூகோஸ்லாவியா மீதான 78 நாள் குண்டுவீச்சு ஒரு முக்கிய எடுத்துக்காட்டு. அமெரிக்காவின் தூண்டுதலின் கீழ் நேட்டோ ஒரு புதிய போர்த்தந்திர கோட்பாட்டை ஏற்றுக்கொண்டது. இது உலகின் எந்தப் பகுதியிலும் நேட்டோ நாடுகளின் தலையீட்டை அங்கீகரிக்கிறது. அமெரிக்கா மீதான 2001 செப்டம்பர் 11 தாக்குதல்கள் “பயங்கரவாதத்திற்கு எதிரான போர்” என்ற போர்வையில் ஒரு புதிய தாக்குதலுக்கு மேடை அமைத்துக் கொடுத்துள்ளன. ஆப்கானிஸ்தான் மீதான போர், அமெரிக்கா தலைமையிலான இராணுவக் கூட்டணிக்கு, ஒத்துழைப்பு அளிக்காத நாடுகளுக்கு எதிராக இதேபோன்ற இராணுவ சாகசங்களை மேற்கொள்ளத் துணிவு அளித்துள்ளது.
புஷ், நிர்வாகப் பொறுப்பேற்ற பிறகு, அமெரிக்காவின் நீண்டகாலத் தந்திரத்தை விவரிக்கும் கூட்டு நடவடிக்கை-2020ஐ பென்டகன் உருவாக்கியுள்ளது. இது “முழுமையான, பரந்துவிரிந்த ஆதிக்கம்”, அதாவது “தனியாகவோ அல்லது மற்ற கூட்டாளிகளுடன் இணைந்தோ செயல்பட்டு” எந்தவொரு எதிரியையும் தோற்கடிக்கவும், முழு அளவிலான இராணுவ நடவடிக்கைகளில் எந்தவொரு சூழ்நிலையையும் கட்டுப்படுத்தவும் அமெரிக்கப் படைகளுக்கு இருக்கும் திறன் பற்றி பேசுகிறது.
ஆவணம் குறிப்பிடுவதாவது: “நமது நலன்கள் மற்றும் தேவைகளின் உலகளாவிய தன்மையை கணக்கில் கொண்டு, அமெரிக்கா, வெளிநாட்டில் இருக்கும் தனது படைகளைப் பராமரிப்பதையும், முழுமையான பரந்து விரிந்த மேலாதிக்கத்தை அடைவதற்கும், உலகளாவிய அதிகாரத்தைத் துரிதமாக வெளிப்படுத்தும் திறனையும் நிலைநாட்ட வேண்டும்.” அமெரிக்காவில் செப்டம்பர் 11 நடந்த தீவிரவாதத் தாக்குதல், அமெரிக்காவின் ஆளும் வட்டாரங்களுக்கு தனது புதிய கோட்பாட்டை நடைமுறைப்படுத்த முன்னெப்போதும் இல்லாத வாய்ப்பை ஏற்படுத்தியது.
ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச விதிமுறைகளை புறக்கணித்து உலகம் முழுவதும் வெட்கக்கேடான இராணுவ ஆக்கிரமிப்பில் அமெரிக்கா மற்றும் அதன் நேட்டோ கூட்டாளிகளை ஈடுபடத் தூண்டுவது பயங்கரவாத அச்சுறுத்தல் அல்ல. ஏகாதிபத்திய முகாமின் தலைவர் என்ற முறையில், அமெரிக்கா தொடர்ந்து எந்த ஒரு சாத்தியமான எதிரியையும் அல்லது ஏகாதிபத்திய அமைப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடிய எவரையும் பலத்தைக் கொண்டு அடக்க எப்போதும் முனைப்பாக உள்ளது. இந்த விஷயத்தில், கம்யூனிஸ்ட் அறிக்கை எழுதப்பட்ட பத்தொன்பதாம் நூற்றாண்டில் காலனிய சக்திகள் இராணுவ பலத்தைப் பயன்படுத்தியதைப் போலவே, 21ஆம் நூற்றாண்டில் உலகமயமாக்கல் பயன்படுத்தப்படுவது தெளிவு.
அமெரிக்காவின் இராணுவ மேலாதிக்கத்திற்கு எதிரான போராட்டமும், நாடுகளின் தேசிய இறையாண்மையை காலில் போட்டு மிதிக்கும் வெட்கக்கேடான இராணுவ ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டமும் மீண்டும் தேசிய-அரசை மையமாகக் கொண்டே உள்ளது. இராணுவத் தாக்குதல்களுக்கு எதிரான நடவடிக்கைகளின் அடிப்படையானது முழு மக்களையும் அணிதிரட்டும் ஏகாதிபத்திய எதிர்ப்பு தேசியவாதமாக இருக்க வேண்டும். அடக்குமுறை ஆட்சியாக இருந்தபோதிலும், ஈராக்கில் சதாம் ஹுசைன், இந்த அணிதிரட்டலின் அடிப்படையில்தான் இதுவரை உயிர் பிழைத்துள்ளார்.
தொழிலாளி வர்க்கத்தின் முக்கிய பங்கு
கம்யூனிஸ்ட் அறிக்கை சமூகத்தின் புரட்சிகர மாற்றத்தில் தொழிலாளி வர்க்கத்தின் பங்கிற்கு அளித்துள்ள முக்கியத்துவத்தின் மீதுதான் அறிக்கையின் மையக்கருத்தை மறுப்பதற்கான அனைத்து முயற்சிகளும் கவனம் செலுத்துகின்றன. கடந்த பத்தாண்டுகளில் சோசலிசத்தில் ஏற்பட்ட பின்னடைவுகள், மார்க்சியக் கோட்பாட்டின் இந்தப் பகுதியை மறுபரிசீலனை செய்ய முற்படும் போக்கை மேலும் வலுப்படுத்தியுள்ளன. இந்தத் திருத்தல்வாதத்திற்கு மாறாக, உலகமயமாக்கலுக்கு எதிரான போராட்டத்தின் சமீபத்திய அனுபவம் தொழிலாளி வர்க்கத்தின் மையப் பாத்திரத்தை வலியுறுத்துவதற்குப் போதுமான ஆதாரங்களை வழங்குகிறது. இந்த வர்க்கம் மட்டுமே, தன் தற்காப்புக்காக என்றபோதிலும், ஏகாதிபத்திய தாக்குதலை எதிர்கொண்டு தொடர்ந்து முன்பின் முரணற்று எதிர்வினை செய்துள்ளது.
1995ஆம் ஆண்டு பிரெஞ்சு தொழிலாளர்கள் வேலைநிறுத்தம், 1996இல் ஒரு மாதம் நீடித்த, தென் கொரிய தொழிலாளர்களின் வீரமிக்கப் பொது வேலைநிறுத்தம், 2000இல் தனியார்மயமாக்கலுக்கு எதிராக தென்னாப்பிரிக்கத் தொழிலாளர்களின் மூன்று நாள் வேலைநிறுத்தம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பெருமுதலாளி சார்புக் கொள்கைகளுக்கு எதிராக மேற்கு ஐரோப்பிய நாடுகளில் வளர்ந்துவரும் ஒருங்கிணைந்த தொழிற்சங்கப் போராட்டங்களின் புதிய தொடக்க வடிவங்கள் ஆகியவை, வரவிருக்கும் நாட்களில் தொழிலாளர்கள் வகிக்கப்போகும் முக்கிய பாத்திரத்தை உறுதிப்படுத்துகிறது. 1999இல் சியாட்டிலில் தொடங்கப்பட்ட உலகமயமாக்கலுக்கு எதிரான வெகுஜன எதிர்ப்புகளின் புதிய நிகழ்வு மற்றும் சமீபத்தில் 2001இல் நடந்த ஜி-8 உச்சிமாநாட்டின்போது ஜெனோவாவில் நடந்த போராட்டங்களில் தொழிலாளி வர்க்கம் மற்றும் தொழிற்சங்கங்களின் குறிப்பிடத்தக்க பங்கேற்பைக் காணமுடிந்தது.
இன்று உழைக்கும் வர்க்கம் மறையவோ, அளவில் குறையவோ இல்லை. முன்னேறிய முதலாளித்துவ நாடுகளிலும் இதுவே உண்மை நிலை. ஆனால் தொழிற்படையின் உள்கட்டமைப்பு மாறிவிட்டது. இந்தியாவில், தொழிலாளர்கள் மத்தியில் சாதி மற்றும் இன வேறுபாடுகள் தொழிலாளர்களின் உணர்வில் தொடர்கின்றன. அரசியல் மற்றும் அமைப்புசார் நடவடிக்கைகளுக்குத் துணையாக, கருத்தியல் மற்றும் பண்பாட்டு ரீதியிலான தலையீடு மூலம் வர்க்க உணர்வை உருவாக்குவதில் மிகக் குறைந்த கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இது தவிர, பொதுவாக தொழிற்சங்கங்களுக்கும் தொழிலாளி வர்க்க இயக்கத்திற்கும் பெண் தொழிலாளர்களின் பங்களிப்பு பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது. தொழில்துறையில் பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என கம்யூனிஸ்ட் அறிக்கை எதிர்பார்த்தது. “நவீன தொழில்துறை அதிகமாக வளர்ச்சியடையும்போது, பணிபுரியும் ஆண்களின் எண்ணிக்கையை விட பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்”. உழைப்புச் சக்தியை மலிவாகப் பெறுவதற்காக பெண்கள் அதிக அளவில் வளர்ந்து வரும் பாட்டாளி வர்க்கத்தின் ஒரு பகுதியாக மாற்றப்படுவர்.
ஏகாதிபத்தியத்தால் உந்தப்படும் உலகமயமாக்கலில், முதலாளித்துவத்தின் ஒரு முக்கிய அம்சம் என்னவென்றால், குறைந்த ஊதியத்தில் பகுதி நேர மற்றும் ஒப்பந்த வேலைகள் மூலம் சுரண்டப்படும் தொழிலாளர்களில் கணிசமான பகுதி பெண்களாக இருப்பதாகும். வளரும் நாடுகளிலும் இதே நிகழ்வு காணப்படுகிறது. இந்திய உழைப்பு படையில் பெண்களின் எண்ணிக்கை 12.7 கோடி. குறைந்த ஊதியம் பெறும், இரட்டிப்புச் சுரண்டலுக்கு உள்ளாகும் இந்தப் பெண் தொழிலாளர்களை பாட்டாளி வர்க்க இயக்கத்திற்குள் கொண்டுவருவது முக்கியமான விஷயம். அவர்களை பாட்டாளி வர்க்கத்தின் ஒரு பகுதியாக அங்கீகரித்து அணிதிரட்டாமல், தொழிற்சங்கங்களின் முன்னேற்றமும், தொழிலாளி வர்க்க இயக்கம் ‘தேசிய’ இயக்கமாக வளர்வதும் சாத்தியமற்றது.
கம்யூனிஸ்ட் அறிக்கையானது முதலாளித்துவம் பற்றிய வெறும் பகுப்பாய்வு அல்ல; மாறாக, மனிதகுலத்தை விடுவிக்க தொழிலாளி வர்க்கத்தை அடித்தளமாக கொண்ட ஒரு சமூகப் புரட்சிக்கான முதல் அறைகூவல் ஆகும். இதுவே அதன் ஈர்ப்பு சக்தி. ஒரு புரட்சிகரக் கட்சிக்கான முன்தேவையாக தொழிலாளி வர்க்கத்தின் அமைப்புசார் அணிதிரட்டலின் அவசியத்தை அது முன்வைக்கிறது. எனவே, முதலாளித்துவ உலகமயமாக்கலின் நாசகர நடவடிக்கைகளுக்கு எதிரான ஒரு புரட்சிகர இயக்கத்தையும் நடைமுறைத் தந்திரத்தையும் உருவாக்குவதற்கான பயணத்தின் தொடக்கப் புள்ளி இதுவாகும்.
அறிக்கை, சோசலிசத்திற்கான தொழிலாளி வர்க்கத்தின் உலகளாவிய இயக்கத்தை முன்வைக்கிறது. அதே வேளையில், அது ஒவ்வொரு நாட்டின் சமகால யதார்த்தங்களுக்கும் கவனம் செலுத்துகிறது. அறிக்கையின் கடைசி பகுதி வெவ்வேறு நாடுகளில் உள்ள கம்யூனிஸ்டுகள் மற்றும் பிற அரசியல் கட்சிகளுக்கு இடையிலான உறவுகளைக் குறித்துப் பேசுகிறது. முதலாளித்துவத்தை அகற்றும் முக்கிய நோக்கத்தையும், மாற்று அமைப்பை நிறுவுவதற்கான அடிப்படை அணுகுமுறையையும் அறிக்கை குறிப்பிடும் அதே வேளையில், "இந்த நடவடிக்கைகள் வெவ்வேறு நாடுகளில் நிச்சயமாக வெவ்வேறு விதமாக இருக்கும்" என்பதையும் சுட்டிக்காட்டுகிறது.
ஏகாதிபத்திய உலகமயமாதலின் இந்தக் காலகட்டத்தில், அது பரப்பும் பொய்ப் பிரச்சாரத்தையும் மீறி கம்யூனிஸ்ட் அறிக்கை நீடித்து நிலைத்து நிற்கிறது.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
