
இன்றைய உலக அரசியலும் இந்தியாவும் – பிரகாஷ் காரத்
பிரகாஷ் காரத்
(தோழர் பிரகாஷ் காரத் அவர்களிடம் முன்வைக்கப்பட்ட வாசகர் கேள்விகளுக்கு அளித்த பதில்களை இங்கு வழங்கியுள்ளோம். – ஆசிரியர் குழு)
கேள்வி: கட்சி மாநாட்டின் அரசியல் தீர்மானத்தில் “ஏகாதிபத்திய நாடுகளுக்கு இடையே மீண்டும் பதட்டங்கள் உருவாகி வருகின்றன… ஏகாதிபத்திய முரண்பாடுகள் வரும் நாட்களில் வெளிப்படும்” என்று குறிப்பிட்டுள்ளோம். இந்த ஏகாதிபத்திய முரண்பாடுகள் போர் மூலம் தீர்க்கப்படாவிட்டால், அவை எவ்வாறு தீர்க்கப்படும்?
பதில்: ஏகாதிபத்தியங்களுக்கு இடையேயான முரண்பாடுகள், அதாவது ஏகாதிபத்திய நாடுகளுக்கு இடையே இன்று நிலவுகின்ற முரண்பாடுகள், சில சமயங்களில் தீவிரமடையும்; மற்ற சமயங்களில் தணியலாம். இன்றைய சூழலில் ஏகாதிபத்தியங்களுக்கு இடையேயான முரண்பாடுகள், ஏகாதிபத்திய நாடுகளுக்கு இடையே மோதல்களுக்கும் போர்களுக்கும் வழிவகுப்பதில்லை. லெனின், ஏகாதிபத்தியங்களுக்கு இடையேயான முரண்பாடுகளின் தன்மையை விவரித்தபோது, அது ஏகாதிபத்திய நாடுகளுக்கு இடையே நடைபெறும் போர்களுக்கு ஒரு ஆதாரம் என்று கூறியிருந்தார். ஏனெனில், ஜெர்மன் நிதி மூலதனம் மற்றும் பிரிட்டிஷ் நிதி மூலதனம் போன்ற வெவ்வேறு நாடுகளின் நிதி மூலதனங்களுக்கு இடையேயான மோதல்தான் அதற்கு காரணம். தேசிய நிதி மூலதனங்களுக்கு இடையேயான போட்டி மற்றும் மோதலே போருக்கு வழிவகுத்தது. இதுவே முதல் உலகப் போர் மற்றும் இரண்டாம் உலகப் போரில் நடந்தது.
இருப்பினும், இருபதாம் நூற்றாண்டின் கடைசி காலாண்டில், நிதி மூலதனத்தின் குவியல் அதன் சர்வதேசமயமாக்கலுக்கு வழிவகுத்தது. இது சர்வதேச நிதி மூலதனம் மற்றும் நிதி மூலதனத்தால் உந்தப்பட்ட உலகமயமாக்கலின் சகாப்தத்தை அறிமுகப்படுத்தியது. வெவ்வேறு நாடுகளின் நிதி மூலதனங்கள் ஒன்றிணைந்தன. ஒருங்கிணைந்த, பன்னாட்டு நிதி மூலதனத்தின் தோற்றம், தேசிய நிதி மூலதனங்களுக்கு இடையேயான மோதல் கட்டத்தைத் தாண்டிவிட்டது. இதனால், பன்னாட்டு நிதி மூலதனத்தின் இருப்பு காரணமாக, எந்த ஒரு ஏகாதிபத்திய நாடும் மற்றொரு ஏகாதிபத்திய நாட்டுடன் போருக்குச் செல்வது என்பது அதன் நலன்களுக்கு உகந்ததல்ல. எனவே, ஏகாதிபத்தியங்களுக்கு இடையேயான முரண்பாடுகள் நிலவுகின்றபோதும், அவை அழுத்தத்தின் மூலமாகவோ, பேரம் மற்றும் சமரசங்களின் மூலமாகவோ தீர்க்கப்பட முயற்சிக்கப்படுகிறது. அமெரிக்கா இன்னும் ஆதிக்கம் செலுத்தும் ஏகாதிபத்திய சக்தியாக இருப்பதால், பொதுவாக மற்ற ஏகாதிபத்திய நாடுகள் வேறுபட்ட நலன்களைக் கொண்டிருந்தாலும், அதனுடன் சமரசம் செய்து கொள்கின்றன.
கேள்வி: ஐரோப்பிய ஒன்றிய அரசாங்கங்கள் ஏன் ரஷ்ய எதிர்ப்பு மனப்பான்மையுடன் உள்ளன? உக்ரைன் படையெடுப்பிற்குப் பிறகு ரஷ்ய தாக்குதல் குறித்த அவர்களின் பயம் நியாயமானதா? ஐரோப்பிய ஒன்றிய மக்களும் வலுவான ரஷ்ய எதிர்ப்பு உணர்வுகளை கொண்டுள்ளார்களா?
பதில்: மேற்கு ஐரோப்பாவின் ரஷ்ய எதிர்ப்பு நிலைப்பாட்டிற்கு ஒரு வரலாற்றுப் பின்னணி உள்ளது. இது சோவியத் யூனியன் காலத்திலிருந்து தொடர்கிறது. அப்போது ஐரோப்பா இரண்டு முகாம்களாகப் பிரிக்கப்பட்டது. ஒன்று, அமெரிக்க தலைமையிலான நேட்டோ; மற்றொன்று, சோவியத் யூனியன் தலைமையிலான வார்சா ஒப்பந்தம். சோவியத் யூனியன் முடிவுக்கு வந்த பின்னரும், நேட்டோ கூட்டணி ரஷ்யாவை பலவீனப்படுத்த முயன்று வருகிறது. ஏனெனில், சோவியத்திற்கு பிந்தைய ரஷ்யாவையும் அது ஒரு போட்டியாளராகவும் அச்சுறுத்தலாகவும் பார்க்கிறது. உண்மையில் அப்போது [சோவியத் சிதைவு சமயத்தில்] ரஷ்யாவுக்கு அளித்த வாக்குறுதிக்கு எதிராகச் சென்று, நேட்டோவின் கிழக்கு நோக்கிய விரிவாக்கமே உக்ரைனில் போருக்கும் புதிய மோதலுக்கும் வழிவகுத்தது.
முதலில், வார்சா ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இருந்த அனைத்து கிழக்கு ஐரோப்பிய நாடுகளும், நேட்டோவுக்குள் கொண்டுவரப்பட்டன. உக்ரைன், சோவியத் யூனியனின் ஒரு பகுதியாக இருந்தது. மேற்கத்திய நாடுகளின் கூட்டணி உக்ரைனை நேட்டோவுக்குள் இழுக்க முயன்றபோது, ரஷ்யா அதை தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகக் கருதி, உக்ரைன் மீது தாக்குதலைத் தொடங்கியது. ஐரோப்பிய ஒன்றியத்தின் பல்வேறு நாடுகளின் மக்கள் ஒரே வகையாக, வலுவான ரஷ்ய எதிர்ப்பு உணர்வுகளைக் கொண்டுள்ளனர் என்று கூற முடியாது. முன்னர் சோவியத் ஆதிக்கத்தின் கீழ் இருந்த போலந்து மற்றும் செக் குடியரசு போன்ற நாடுகளில் ரஷ்ய எதிர்ப்பு உணர்வுகள் வலுவாக உள்ளன என்பது உண்மையே. ஆனால், மற்ற முக்கிய மேற்கு ஐரோப்பிய நாடுகளில் ரஷ்ய எதிர்ப்பு உணர்வுகள் ஆதிக்கம் செலுத்துகின்றன என்று கூற முடியாது. இந்த நாடுகளில், ஆளும் வர்க்கங்களும் ஊடகங்களும் பல தசாப்தங்களாக ரஷ்ய எதிர்ப்பு பிரச்சாரத்தை பரப்பி வருகின்றன. அது அதன் விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.
கேள்வி: டிரம்ப் ரஷ்யாவிற்கு அருகில் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை நிலைநிறுத்த திட்டமிடுவது போல தெரிகிறது. இதற்கு பதிலளிக்கும் விதமாக, ரஷ்யா “ஓரேஷ்னிக்” ஏவுகணைகளை பெருமளவில் உற்பத்தி செய்யக் கருதுகிறது. இந்த இராணுவமயமாக்கலின் தீய சுழற்சி வரும் காலங்களில் எவ்வாறு முன்னேறும்?
பதில்: உக்ரைன் போர் தொடர்பாக ஜனாதிபதி டிரம்ப், ரஷ்யா குறித்து ஆக்ரோஷத்துடனும், மென்மையாகவும் மாறி மாறி பேசி வருகிறார். ரஷ்யாவிற்கு அருகில் இரண்டு அமெரிக்க அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை சமீபத்தில் நிலைநிறுத்தியது அவரது கணிக்க முடியாத நடவடிக்கைகளில் ஒன்றாகும். இதற்கு பதிலளிக்கும் விதமாக, ரஷ்யா இடைநிலை-தூர அணுசக்தி படைகள் ஒப்பந்தத்திலிருந்து (INF ஒப்பந்தம்) விலகியுள்ளது. உண்மையில், அமெரிக்காவும் ரஷ்யாவும் ஏற்கனவே ஒப்பந்தத்தில் தங்கள் பங்கேற்பை நிறுத்திவிட்டன. கடந்த சில ஆண்டுகளில், அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையேயான ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தங்கள் முடிவுக்கு வந்துவிட்டன; அல்லது அவை புதுப்பிக்கப்படவில்லை. ஒட்டுமொத்தமாக, புதிய அதிநவீன ஏவுகணைகள் மற்றும் ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. அனைத்து முக்கிய சக்திகளும் ஆயுதப் போட்டியில் அதிகளவில் நுழையும் ஆபத்தான போக்கு உள்ளது.
கேள்வி: ஒருபுறம், இந்தியா அமெரிக்காவின் இளைய இராணுவப் பங்காளியாக இருக்க விரும்புகிறது. மறுபுறம், அது பிரிக்ஸ் அமைப்பில் தனது ஈடுபாட்டைப் பற்றி பெருமை பேசுகிறது. இது முரண்பாடானது அல்லவா? அமெரிக்க சார்பு அல்லது பிரிக்ஸ் சார்பு – எந்த சார்பு நிலை வளர வாய்ப்புள்ளது?
பதில்: அடிப்படை உண்மை என்னவென்றால், கடந்த ஒன்றரை தசாப்தங்களாக இந்தியா அமெரிக்காவுடன் ஒரு செயல்தந்திர கூட்டணியில் நுழைந்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான அதிகார சமநிலையின்மையைக் கருத்தில் கொண்டு, இந்தியா ஒரு துணைப் பங்காளியின் நிலையில் உள்ளது. இருப்பினும், நமது கட்சி [சிபிஐ(எம்)] குறிப்பிட்டது போல, உலகில் பல்துருவபோக்கு அதிகரித்து வருகிறது. பிரிக்ஸ் மற்றும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியா உறுப்பினராக இருப்பது இந்த பல்துருவ உலகத் தன்மையின் வெளிப்பாடாகும். அதாவது, அமெரிக்காவுடன் செயல்தந்திர ரீதியாக இணைந்திருந்தாலும், இந்தியா மற்ற மன்றங்கள் மற்றும் குழுக்களின் ஒரு பகுதியாக இல்லாமல் இருக்க முடியாது. இந்தியா இதுவரை பிரிக்ஸ் குறித்து ஆர்வமாக இல்லை. அமெரிக்காவுடனான அதன் செயல்தந்திர கூட்டணி, உண்மையில் பிரிக்ஸ் போன்ற மன்றங்களைப் பயன்படுத்துவதற்கான அதன் திறனைக் கட்டுப்படுத்தியுள்ளது. அதேநேரம், அமெரிக்க சார்பு அல்லது பிரிக்ஸ் சார்பு என்பதாக இந்தியா இருக்கப் போவதில்லை. டிரம்ப் இந்தியா மீது 50 சதவீத வரி விதித்த சமீபத்திய மோதல், அமெரிக்காவுடன் நம்மை இணைத்துக் கொள்வது நமது தேசிய நலன்களுக்கும், இறையாண்மைக்கும் தீங்கு விளைவிக்கும் என்பதைக் காட்டுகிறது. அரசியல் ரீதியாக மோடி அரசாங்கத்தை கட்டாயப்படுத்த நாட்டில் ஒரு வலுவான இயக்கம் இல்லாவிட்டால், அமெரிக்காவுடனான தனது கூட்டணியை மோடி அரசாங்கம் முறித்துக் கொள்ளாது.
கேள்வி: இஸ்ரேல் பாலஸ்தீனத்திற்கு எதிராக, குறிப்பாக காசாவில், நிகழ்த்தும் கொடூரமான இனப்படுகொலை பற்றி அறிந்திருந்தும், ஏன் எந்த சக்திவாய்ந்த நாடும் இஸ்ரேலுக்கு எதிராக நேரடியாக தலையிடவில்லை – காசா மக்களுக்கு உதவி வழங்குவதில்கூட தலையிடவில்லை? சீனா மற்றும் ரஷ்யா காசாவிற்கு ஆதரவை வழங்கின. இது மிகவும் பாராட்டத்தக்கது. ஆனால் அவை ஏன் நேரடியாக தலையிடவில்லை?
பதில்: இஸ்ரேலின் காசா இனப்படுகொலைக்கு, உலகம் முழுவதிலும் இருந்து வெளிப்படும் எதிர்வினைகள் காட்டுவது என்னவென்றால், இந்த தொடர்ச்சியான அட்டூழியத்திற்கு எதிராக, எந்தவொரு முற்போக்கான தலையீட்டையும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதிக்கம் முடக்கியுள்ளது தெரிகிறது. பாலஸ்தீன மக்களின் தற்போதைய அவல நிலைக்கு முக்கிய காரணம், சக அரபு நாடுகளின் துரோகமாகும். இவர்களில் மிகவும் சக்திவாய்ந்த இரண்டு நாடுகளான எகிப்தும், சவுதி அரேபியாவும், அமெரிக்காவின் உறுதியான கூட்டாளிகளாக உள்ளன. இவை இஸ்ரேலுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க மறுத்துவிட்டன. ஜோர்டான், ஐக்கிய அரபு அமீரகம், மொராக்கோ போன்ற இதர அரபு நாடுகளும் அமெரிக்காவுடன் கூட்டணி வைத்துள்ளன. ரஷ்யா மற்றும் சீனாவை ஒரே நிலையில் பார்க்க முடியாது. ரஷ்யா ஒரு முதலாளித்துவ சக்தி. தற்போது அது உக்ரைனில் அதன் போரில் மும்முரமாக உள்ளது. சீனா பாலஸ்தீன விடுதலைக்கு தொடர்ந்த ஆதரவை அளித்துள்ளது. அதேநேரம் தற்போதைய சர்வதேச சூழ்நிலையில், அது அரசியல் மற்றும் வெளியுறவு சார்ந்த ஆதரவை மட்டுமே வழங்க முடியும்.
தமிழில்: அபிநவ் சூர்யா
You may also like
1 comment
Leave a Reply Cancel reply
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

கடைசி பதிலில், ரஷ்ய முதலாளித்துவ சக்தி என்கிறார். சீனா எந்த சக்தி என குறிப்பிடப்படவில்லையே ஏன்?
கேள்வியாளர்களின் பெயர், மாநிலம் குறிப்பிட்டால் அது அந்த மாநிலத்தின் தத்துவார்த்த அமைப்பு நிலை ஓரளவு அறிய உதவும்.