
லெனின் நூல்கள் தொகுப்பு : ஒரு அறிமுகம்
அன்வர் உசேன்
மார்க்சிய -லெனினிய சித்தாந்தத்தின் அடிப்படை கோட்பாடுகளை கற்பது ஒவ்வொரு கம்யூனிஸ்டின் இயக்கப்பணிகளுக்கு மிகுந்த உத்வேகமும் பயனும் அளிக்கும். அதற்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பது லெனினின் தேர்வு நூல்கள் ஆகும்.
- “மார்க்சியம் வறட்டு சூத்திரம் அல்ல; செயல்முறைக்கு வழிகாட்டி”
- “குறிப்பான சூழல் குறித்து குறிப்பான ஆய்வு”
- உண்மை அந்தரத்தில் தொங்குவது (abstract) அல்ல; அது குறிப்பானது”
எனும் அணுகுமுறைகள் மூலம் லெனின் உருவாக்கிய பல வழிகாட்டல்களை கற்கும் வாய்ப்பை இந்த தேர்வு நூல்கள் நமக்கு அளிக்கின்றன. இந்த இமாலய பணியை பாரதி புத்தகாலயம் சாதித்துள்ளது. லெனின் தேர்வு நூல்கள் 12 தொகுதிகளை உள்ளடக்கியது. ஒவ்வொரு தொகுதியும் பல முக்கிய நூல்களை உள்ளடக்கியிருந்தாலும் மிக முக்கியமான லெனின் படைப்புகள் மட்டும் வாசகர்களின் கவனத்துக்கு இங்கே தரப்படுகிறது.
1. காரல்மார்க்சின் வாழ்க்கை வரலாற்று சுருக்கம்.
2. மார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களும் மூன்று உட்கூறுகளும்.
ஆகிய இரு நூல்கள் மூலம் மார்க்ஸ் மற்றும் மார்க்சியம் குறித்து லெனினின் வார்த்தைகளில் கற்பதைவிட வேறு ஏதாவது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்க இயலுமா?
முதல் தொகுதியில் இடம் பெற்றுள்ள இந்த நூல்கள் மார்க்சிய ஆசான்கள் குறித்து மார்க்சியத்தை நடைமுறையில் சாதித்து காட்டிய இன்னொரு ஆசானிடமிருந்து அறிந்து கொள்ள நமக்கு பயன்படும். மார்க்ஸ் – ஏங்கெல்ஸ் பெயர்கள் பிரிக்க முடியாதவாறு இடம் பெறுகிறது. காரல் மார்க்சின் வாழ்க்கை குறித்து சுருக்கமாக ஆனால் மிகவும் ஆழமான கருத்து செறிவுடன் லெனின் முன்வைக்கிறார். மார்க்சியத்தின் தோற்றுவாய்கள் என்பது அன்று சிறந்து விளங்கிய ஜெர்மானிய தத்துவம்/ பிரெஞ்சு சோசலிசம்/ பிரிட்டனின் அரசியல் பொருளாதாரம் ஆகிய மூன்றும்தான் என கூறும் லெனின் அதன் உட்கூறுகளான தத்துவம்/ சோசலிசம்/ அரசியல் பொருளாதாரம் ஆகியவை குறித்து சுருக்கமாகவும் அற்புதமாகவும் விளக்குகிறார். மார்க்சியத்தின் அடிப்படைகளை புரிந்து கொள்ள இந்த நூல்கள் இன்றியமையாதவை.
கட்சியின் அமைப்பு கோட்பாடுகள்
சோசலிச புரட்சியின் போராட்டத்துக்கான வரலாற்றில் முதன்முதலாக கம்யூனிஸ்டு கட்சியின் அமைப்பு பற்றிய சித்தாந்த கோட்பாடுகளை உருவாக்கியது லெனின்தான். லெனினுக்கு முன்பு எந்த முன்மாதிரியும் இருக்கவில்லை. அத்தகைய ஒரு கம்யூனிஸ்டு கட்சி அமைப்பை உருவாக்க, லெனினும் அவரது ஆதரவாளர்களும் நடத்திய பெரும் போராட்டத்தை முதல் தொகுதியில் உள்ள “என்ன செய்ய வேண்டும்” எனும் படைப்பிலும், இரண்டாவது தொகுதி முழுவதுமாக உள்ள “ஓரடி முன்னால்- ஈரடி பின்னால்” எனும் படைப்பிலும் நம் கண் முன்னே நிறுத்துகிறார் லெனின். இந்த பிரச்சனையில் தொடர்புடைய இன்னொரு படைப்பு “எங்கிருந்து தொடங்குவது” என்பதாகும். இந்த சிறுபடைப்பு, தேர்வு நூல்களில் இடம் பெறவில்லை என்றாலும் அதுவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
தொழிற்சங்கங்களுக்கு அரசியல் தேவை இல்லை எனவும், அவை பொருளாதார கோரிக்கைகளில் மட்டும் கவனம் செலுத்தினால் போதுமானது எனவும் முன்வைக்கப்படும் வாதம் எவ்வளவு அபத்தமானது என்பதை “நாம் என்ன செய்ய வேண்டும்” நூலில் லெனின் முன்வைக்கிறார். இன்றைக்கும் BMS போன்ற சில தொழிற்சங்கங்கள் இத்தகைய வாதங்களை முன்வைக்கின்றனர். தொழிலாளர் போராட்டங்களில் உருவாகும் தொழிற்சங்க உணர்வை சோசலிச உணர்வாக மாற்றுவதன் முக்கியத்துவத்தையும் அதனை கம்யூனிஸ்டு கட்சிதான் செய்ய முடியும் என்பதையும் லெனின் விவரிக்கிறார். கம்யூனிஸ்டுகளின் பணியில் கிளர்ச்சி மற்றும் பிரச்சாரம் இரண்டு வடியங்களும் ஏன் தேவை என்பதையும், அவை இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன என்பதையும் “வேலையின்மை-அதன் காரணிகள்-விளைவுகள்” எனும் உதாரணம் மூலம் லெனின் போதிக்கிறார்.
புரட்சிகரமான சித்தாந்தம் இல்லாமல் புரட்சிகரமான கட்சி இல்லை என சொல்லும் லெனின், அந்த புரட்சிகரமான சித்தாந்தம் வெல்ல வேண்டுமானால், அதனை அமலாக்குவதற்கு தகுதியான கட்சி இருக்க வேண்டும் என வாதிடுகிறார். தொழில்முறை புரட்சியாளர், அதாவது புரட்சியை மட்டுமே தொழிலாக கொண்டவர் எனும் கருத்தாக்கத்தை லெனின்தான் முதன்முதலில் முன்வைக்கிறார். அவர்கள்தான் கட்சியின் முதுகெலும்பு என குறிப்பிடுகிறார். ஒரு மையப்படுத்தப்பட்ட கட்சியையும் அதற்கான சித்தாந்த அடித்தளத்தையும் உருவாக்க லெனின் நடத்திய போராட்டத்தை “ஓரடி முன்னால்- ஈரடி பின்னால்” எனும் நூல் விளக்குகிறது.
ரஷ்ய சமூகத்தில் சோசலிசம் உருவாக்குவது குறித்து கட்சி திட்டத்தின் மீது RSDLP இரண்டாவது மாநாட்டில் மூன்று முக்கிய பிரச்சனைகளில் விவாதம் வெடிக்கிறது. அவை:
- தொழிலாளி வர்க்க சர்வாதிகாரம் எனும் கோட்பாடு
- விவசாயிகள் பிரச்சனை குறித்து அணுகுமுறை
- தேசிய இனங்களும் சுய நிர்ணய உரிமையும்
தொழிலாளர்கள் உட்பட அனைவருக்கும் வாக்குரிமை முதலாளித்துவ சமூகத்தில் கிடைத்துவிட்டதால் தொழிலாளி வர்க்க சர்வாதிகாரம் எனும் கோட்பாடு தேவையில்லை என சிலர் வாதிட்டனர். லெனின் இதனை நிராகரித்தார். அனைவருக்கும் வாக்குரிமை ஒரு முன்னேற்றம் என்றாலும், வர்க்க சமூகத்தில் இது சுரண்டலை அகற்றாது; தொழிலாளி வர்க்க சர்வாதிகாரம் கோட்பாட்டை கைவிடும் ஒரு அமைப்பு மார்க்சியத்தின் அடிப்படையில் செயல்படும் கம்யூனிஸ்டு கட்சியாக இருக்க இயலாது என லெனின் வாதிட்டார். தொழிலாளி வர்க்கத்தின் தலைமை பாத்திரம் மற்றும் தொழிலாளி- விவசாயி ஒற்றுமை குறித்து தனது வாழ்நாள் முழுவதும் லெனின் ஆய்வுகளை மேற்கொண்டு நடைமுறையில் அமல்படுத்தினார்.
கட்சி உறுப்பினர் தகுதி
லெனின் உருவாக்கிய கட்சி திட்டம் இரண்டாவது மாநாட்டில் அங்கீகரிக்கப்படுகிறது. இது லெனின் நடத்திய சித்தாந்த போராட்டத்தின் வெற்றி. “இஸ்க்ரா” குழுவின் வெற்றி. ஆனால் கட்சி அமைப்பு விதிகள் குறித்த விவாதம் வரும்பொழுது, இஸ்க்ரா குழுவிற்குள்ளேயே பிளவு உருவாகிறது. இந்த அமைப்பு விதிகள் என்ன?
- கட்சி உறுப்பினருக்கு இருக்க வேண்டிய தகுதிகள் என்ன?
- கட்சி அமைப்பின் கட்டமைப்பு எப்படி இருக்க வேண்டும்?
- கட்சிக்குள் மத்தியத்துவமும் ஜனநாயகமும் எப்படி இருக்க வேண்டும்?
இஸ்க்ராவின் ஒரு சிறு குழு இஸ்க்ராவின் எதிர் பிரிவுடன் கைகோர்த்து லெனினுக்கு பின்னடைவை உருவாக்குகின்றனர். லெனின் ஆதரவாளர்கள் சிறுபான்மை ஆகிவிடுகின்றனர். எனினும் லெனின் முடிவை ஏற்றுக்கொள்கிறார். ஆனால் பின்னர் நடக்கும் ஒரு நிகழ்வு காரணமாக லெனின் மீண்டும் பெரும்பான்மை பெறுகிறார்.
கட்சி திட்டத்தை ஏற்றுக்கொண்டு தன்னை தானே கட்சி உறுப்பினர் என ஒருவர் அறிவித்து கொண்டால் போதுமானது; வேலை நிறுத்தத்தில் மட்டும் பங்கேற்பவர்கள் கூட கட்சி உறுப்பினர்களாக ஆகலாம் என மார்டோவ் வாதிடுகிறார். இதனை லெனின் கடுமையாக எதிர்க்கிறார். ஒரு கட்சி உறுப்பினர் கட்சி திட்டத்தை ஏற்பது மட்டுமல்ல; கட்சிக்கு நிதி உதவி செய்வது மட்டுமல்ல; ஏதாவது ஒரு கட்சி அமைப்பின் உறுப்பினராக இணைந்து, அதன் முடிவுகளை அமலாக்குவதும் அதன் கட்டுப்பாடுக்கு தன்னை உட்படுத்தி கொள்ளவும் வேண்டும் என லெனின் வாதிடுகிறர். மேலும் மையப்படுத்தப்பட்ட அடக்குமுறை அதிகாரங்களை கொண்ட அரசுக்கு எதிராக போராடும்பொழுது, கட்சியும் மையப்படுத்தப்பட்ட அமைப்பாக இருப்பது அவசியம் எனவும் லெனின் வலுவாக வாதிடுகிறார். இந்த வேறுபாடுகள்தான் RSDLPல் போல்ஷ்விக்- மென்ஷ்விக் எனும் பிரிவினையை உருவாக்கியது. மூலதனத்துக்கு எதிரான போராட்டத்தில் தொழிலாளி வர்க்கம் வசம் உள்ள ஓரே ஆயுதம் கட்சி ஸ்தாபனம்தான் எனும் முக்கிய கருத்தை இந்த நூலில்தான் லெனின் முன்வைக்கிறார்.
இன்று சிலர் கட்சி கட்டுப்பாடுக்குள் தம்மை உட்படுத்தி கொள்ள விரும்புவது இல்லை. தம்மை மார்க்சிய ஆதரவாளர்கள் என அழைத்து கொண்டு “சுதந்திர கம்யூனிஸ்டுகளாக” இருக்க விரும்புகின்றனர். இத்தகைய அணுகுமுறை மூலதனத்துக்கு எதிரான போராட்டத்தில் எந்த பலனும் தராது. மாறாக, கம்யூனிஸ்டு அமைப்பை எல்லையில்லாத பட்டிமன்றங்களாக மாற்றுவதில்தான் இது முடியும். கட்சி அமைப்பின் முடிவுகளுக்கும் கட்டுப்பாடுக்கும் தன்னை உட்படுத்தி கொள்ளாத ஒருவர் சிறந்த கம்யூனிஸ்ஸ்டாக இருக்க இயலாது. தரமான கட்சி உறுப்பினர்களை கொண்ட தரமான கட்சி என்பது மதுரை மாநாடு முன்வைத்துள்ள மிக முக்கிய கடமை. இந்த பணியில் ஓரடி முன்னால் எனும் இந்த நூல் நமக்கு சிறந்த வழிகாட்டியாக இருக்கும்.
கட்சியின் தனித்தன்மை
முதலாளித்துவ ஜனநாயக புரட்சியில் கம்யூனிஸ்டு கட்சியும் தொழிலாளி வர்க்கமும் பங்கேற்க வேண்டுமா கூடாதா என்பதே மூன்றாவது தொகுதியில் உள்ள ஜனநாயகப் புரட்சியில் சமூக – ஜனநாயகவாதத்தின் இரண்டு போர்த்தந்திரங்கள் நூலின் மையக்கருத்து ஆகும். ஆம் என்பதே லெனினின் வலுவான கருத்தாக இருந்தது. நிலப்பிரபுத்துவ ஆட்சிமுறை தூக்கி எறியப்பட்டு, குடியரசு ஆட்சி அமைந்தால் அது தொழிலாளி வர்க்கத்துக்கு சாதகமான ஒன்றே! எனவே இத்தகைய முதலாளித்துவ ஜனநாயக புரட்சியை கட்சி ஆதரிக்க வேன்டும். அதே சமயத்தில் இந்த எழுச்சியின் தலைமை பாத்திரத்தில் தொழிலாளி வர்க்கம் இருக்க வேண்டும் எனவும், அதற்காக தொழிலாளி – விவசாயி வர்க்க ஒற்றுமை உருவாக்கப்பட வேண்டும் எனவும் லெனின் குறிப்பிடுகிறார். எக்காரணம் கொண்டும் தொழிலாளி வர்க்கமும் அதன் கட்சியும் தமது தனித்தன்மையை இழக்க கூடாது என்பது லெனினின் மிக முக்கிய வழிகாட்டல் ஆகும்.
இந்த வழிகாட்டல் இன்றைக்கும் நமக்கு பொருந்தக் கூடிய ஒன்றே! நவபாசிச சக்திகளுக்கு எதிராக நடக்கும் போராட்டத்தில், இதர முதலாளித்துவ கட்சிகளுடன் இணைந்து செயல்படும் அதே நேரத்தில், இடதுசாரிகள் தமது மாற்று அரசியலையும் தனித்தன்மையையும் முன்னெடுக்க வேண்டும். எத்தகைய அரசியல் போராட்டத்திலும் தொழிலாளி வர்க்க கட்சி தனது தனித்தன்மையை இழக்க கூடாது என்பது நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய லெனினிய வழிகாட்டல் ஆகும்.
மூன்றாவது தொகுதியில் உள்ள இரண்டாவது முக்கிய நூல், தேசங்களின் சுயநிர்ணய உரிமை குறித்தானது. அன்றைய ஜார் மன்னனின் காலகட்டத்தில் ரஷ்ய தேசிய இனம் ஏனைய தேசிய இனங்களை அடக்க எத்தனித்தது. இதனை லெனின் கடுமையாக எதிர்த்தார். வர்க்க போராட்டத்தையும் தேசிய இனப்பிரச்சனையையும் எப்படி இணைப்பது என்பதை லெனினும் ஸ்டாலினும் பல படைப்புகளிலும் விளக்குகின்றனர். தேசிய இனப்பிரச்சனையை மார்க்சிய கோணத்தில் எவ்வாறு உள்வாங்குவது எனும் கோட்பாடை இந்த நூலிலும் இன்னும் பல நூல்களிலும் லெனின் விளக்குகிறார்.
பின் தங்கிய தேசத்தில் புரட்சி
“ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்சகட்டம்” எனும் மிக முக்கிய நூல் 4வது தொகுதியில் உள்ளடங்கும். அரசியல் பொருளாதார ஆய்வில் கார்ல் மார்க்ஸ்- ஏங்கெல்சின் மூலதனம் எனும் மகத்தான படைப்புக்கு பின்னர் மிகப்பெரிய மார்க்சிய பங்களிப்பு லெனினின் இந்த ஆய்வு ஆகும்.
சுதந்திரமான போட்டி முதலாளித்துவம் எனும் கட்டத்திலிருந்து ஏகபோகம் மற்றும் ஏகாதிபத்திய கட்டத்துக்கு முதலாளித்துவம் பயணித்துவிட்டது என்பதை லெனின் முன்வைக்கிறார். இதன் விளைவாக முதலாளித்துவம் அனைத்து நாடுகளிலும் சீராக வளர்ச்சியை காணவில்லை. இந்த வளர்ச்சி சமச்சீரற்ற முறையில் உருவானது. எனவே முதலாளித்துவம் எனும் சங்கிலியில் பலவீனமான கண்ணியை உடைக்க முடியும் என்பதையும் லெனின் முன்வைக்கிறார்.
தொழிலாளி வர்க்க கட்சியின், தொழிலாளி வர்க்கத்தின் புரட்சிகர உணர்வு மற்றும் ஸ்தாபன கட்டமைப்பு எனும் அகநிலை சாதகமாக இருக்குமானால், ஒரு தனிப்பட்ட தேசத்தில் கூட, அதுவும் பொருளாதார ரீதியாக பின் தங்கிய தேசத்தில் கூட, புரட்சி சாத்தியமே எனும் புதிய கோட்பாடை லெனின் இந்த நூலிலும் ஐரோப்பிய ஐக்கிய நாடுகள் எனும் நூலிலும் (இந்த நூலும் 4ஆம் தொகுதியில் உள்ளடங்கும்) முன்வைக்கிறார். அதுவரை சோசலிச புரட்சி என்பது முன்னேறிய நாடுகளில் கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் நடக்கும் எனும் மதிப்பீடுதான் இருந்தது. இதற்கு மாறாக லெனினின் மதிப்பீடு உருவானது. அது சாத்தியமே என்பதையும் நவம்பர் புரட்சி நிலைநாட்டியது. முதலாளித்துவத்தின் புதிய கட்டம் மற்றும் ஒரு தேசத்தில் புரட்சியின் சாத்தியப்பாடு குறித்து லெனினின் பங்களிப்பு இந்த நூலின் சிறப்பு அம்சம். முதலாளித்துவ கட்டமைப்புக்குள் உருவாகும் மாற்றங்களை உள்வாங்காமல் கம்யூனிஸ்டு கட்சி இயங்க இயலாது. அந்த வழிகாட்டுதல்தான் இந்த நூலின் மையக்கருத்தாகும். இன்று முதலாளித்துவம் “நாசகர நவீன தாராளமயம்” எனும் அடுத்த கட்டத்தை அடைந்துள்ளது. முதலாளித்துவத்தின் கட்டமைப்பில் உருவாகும் மாற்றங்களை அறிந்து கொள்ள இந்த நூல் நமக்கு வழிகாட்டியாக உள்ளது.
முதலாளித்துவ புரட்சியிலிருந்து சோசலிச புரட்சிக்கு
1917 பிப்ரவரியில் ஜார் மன்னனின் ஆட்சி தூக்கியெறியப்பட்ட பின்னர், லெனின் ஏப்ரலில் ரஷ்யா திரும்புகிறார். முதலாளி வர்க்கத்தின் தலைமையில் ஒரு தற்காலிக அரசு அமைகிறது. அதே சமயம் பல இடங்களில் உழைப்பாளிகளின் சோவியத் அமைப்புகளும் உருவாயின. எனினும் அதிகாரங்கள் முதலாளித்துவ அரசிடம்தான் இருந்தன. இந்த முதலாளித்துவ அரசு, தொழிலாளர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற போவது இல்லை என்பதை லெனின் உணர்ந்தார். எனவே சோசலிச புரட்சிக்கு தயாராகும்படி கட்சியை வேண்டுகிறார். இந்த மதிப்பீடை போல்ஷ்விக் பிரிவினர் கூட முதலில் ஏற்கவில்லை. ஆனால் லெனின் சலியாது கீழ்மட்ட கமிட்டிகளை சந்தித்து உரையாடுகிறார். இதன் பயனாக கட்சியில் பெரும்பாலோர் லெனினின் மதிப்பீடை ஏற்கின்றனர். இதன் முக்கிய திருப்புமுனையாக 7வது மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில்தான் சோசலிச புரட்சியை நோக்கி பயணிப்பது என முடிவாகிறது. கட்சியின் பெயரும் கம்யூனிஸ்ட் கட்சி என பொருத்தமான பெயர் பெறுகிறது.
ஜார் மன்னனின் ஆட்சி தூக்கியெறியப்பட்டதில் ரஷ்ய சமூகம் மகிழ்ச்சியில் திளைத்திருக்க, அதன் உள்முரண்பாடுகளை பகுப்பாய்வு செய்யும் மார்க்சிய தெளிவு லெனினுக்கு இருந்தது. லெனினின் மிகச்சரியான வாதங்கள் போல்ஷ்விக்குகளை மட்டுமல்ல; மென்ஷ்விக்குகளையும் ஏற்றுக்கொள்ள வைத்தது என்பது லெனினின் தலைமை பண்பையும் ஆளுமையையும் நிரூபிக்கிறது. பிப்ரவரி முதலாளித்துவ புரட்சி மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றாது எனவும் சோசலிச புரட்சிக்கு தயாரிக்க வேண்டும் எனவும் லெனின் உருவாக்கிய மதிப்பீடு அசாதாரணமானது. இது தொடர்பான பல முக்கிய குறிப்புகள் 5வது தொகுதியில் அடங்கியுள்ள லெனினின் ஏப்ரல் குறிப்புகள் மற்றும் கட்சியின் 7 வது மாநாடு பற்றிய ஆவணங்களில் உள்ளன.
அரசு எனும் அடக்குமுறை எந்திரம்
மார்க்சிஸ்டுகள் கற்க வேண்டிய அரசு பற்றிய கோட்பாடு முக்கியத்துவமானது; கடினமான முயற்சி தேவைப்படுவது. முதலாளித்துவ அரசானது, குடியரசு உட்பட எந்த வடிவத்தில் இருந்தாலும், அது மூலதனத்தின் லாபக்கொள்ளையை பாதுகாக்கும் நிர்வாக முறைகள்தான். எனவே அரசு என்பது ஒரு அடக்குமுறை கருவி என்பதே மார்க்சிய புரிதல் ஆகும்.
1871இல் நடந்த முதல் தொழிலாளி வர்க்க புரட்சியான “பாரிஸ் கம்யூன்” ஏன் தோல்வி அடைந்தது என்பதை ஆய்வு செய்த மார்க்ஸ் – ஏங்கெல்ஸ், புரட்சிக்கு பின்னர் முதலாளித்துவத்தின் பழைய அரசு இயந்திரத்தை பயன்படுத்துவது சோசலிசத்தின் தற்கொலைக்கு சமம் என குறிப்பிடுகின்றனர். இதனை ஆழமாக உள்வாங்கினார் லெனின். 6வது தொகுதியில் இடம் பெற்றுள்ள “அரசும் புரட்சியும்” எனும் படைப்பு/ இதே கருத்தை மிக எளிமையாக விளக்கும் வகையில் 10வது தொகுதியில் இடம் பெற்றுள்ள “அரசு” எனும் தலைப்பில் ஒரு பல்கலைகழகத்தில் லெனின் ஆற்றிய கருத்து செறிவு மிக்க உரை/ 9வது தொகுதியில் உள்ள “பாட்டாளி வர்க்க புரட்சியும் துரோகி காரல் கவுட்ஸ்கியும்” ஆகிய நூல்களில் மிக விரிவாக அரசு பற்றிய மார்க்சிய கோட்பாடுகளை லெனின் விளக்குகிறார்.
“அரசும் புரட்சியும்” எனும் நூலை 1917ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் லெனின் எழுதினார். அப்பொழுது ரஷ்யாவின் தற்காலிக முதலாளித்துவ அரசு, லெனின் மீது கைது ஆணையை பிறப்பித்திருந்தது. எனவே தலைமறைவாக இருந்தபொழுது இந்த நூலை லெனின் எழுதினார். ஏற்கெனவே இந்த நூலுக்கான அடிப்படை குறிப்புகளை வெளிநாட்டில் தங்கியிருந்தபொழுது தயாரித்திருந்தார். எனினும், இந்த மிக முக்கிய நூல் 1918ஆம் ஆண்டு நவம்பர் புரட்சிக்கு பின்னர்தான் வெளியிடப்பட்டது.
ஒரு காலத்தில் சிறந்த மார்க்சியவாதியாக இருந்த கவுட்ஸ்கி பின்னர் சந்தர்ப்பவாதியாக மாறினார். 1918ஆம் ஆண்டு அவர் “பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்” எனும் ஒரு நுலை எழுதினார். அந்த நூலை படித்தவுடன் லெனினின் எதிர்வினையை அவருக்கு உதவியாளராக இருந்த விளாடிமிர் போன்ச்-புரூயேவிச் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார்: “கவுட்ஸ்கியின் நூலை படித்தவுடன் லெனினுக்கு முகம் சிவந்துவிட்டது. அசாத்திய கோபம் கொப்பளித்தது. கவுட்ஸ்கி மார்க்சியத்தை சிதைத்துவிட்டார் என ஆவேசம் கொண்டார். உடனடியாக அதற்கு பதில் எழுத வேண்டும் என கருதினார். 1918ஆம் ஆண்டு சோவியத் நிர்வாகம் பல சவால்களை சந்தித்த பொழுதும், அதில் அவர் கவனம் செலுத்திய பொழுதும், இரவு நீண்ட நேரம் பல நாட்கள் அமர்ந்து கவுட்ஸிக்கு பதில் எழுதினார்” என பதிவு செய்கிறார்.
தானே ஆராதிக்கும் நாடாளுமன்ற உரிமைகளையும் ஜனநாயக பண்புகளையும் தனது லாபக்கொள்ளைக்கு தடையாக இருக்கும் எனில் முதலாளித்துவ அரசு அவற்றை சிதைக்க தயங்காது. இதனை 1975 அவசரகால நிலை எடுத்து காட்டியது. இன்றைய நவ பாசிச கூறுகளை கொண்ட அரசு இன்னும் கொடூரமாக இதனை வெளிப்படுத்தி கொண்டுள்ளது. அரசு எனும் அடக்குமுறை கருவி குறித்து கம்யூனிஸ்டுகளுக்கு எவ்வித பிரமையும் இருக்க கூடாது எனும் படிப்பினையை மேற்கண்ட நூல்கள் நமக்கு ஆழமாக போதிக்கின்றன.
சோசலிசத்தை பாதுகாக்க உக்கிர போராட்டம்
சோசலிச புரட்சியை நடத்துவதைவிட அதனை பாதுகாப்பது மிகவும் கடினமான ஒன்று என லெனின் ஒருமுறை குறிப்பிட்டார். நவம்பர் புரட்சிக்கு பின்னர் சமாதானம் பற்றிய ஆணையை லெனின் பிறப்பித்தார். போரிட்டுக் கொண்டுள்ள நாடுகளை உடனடியாக போரை நிறுத்துமாறு இந்த ஆணை வற்புறுத்தியது. நிலத்தை நிலப்பிரபுக்களிடமிருந்து பறித்து விவசாயிகளிடம் அளிக்கும் ஆணையும் லெனின் உடனடியாக பிறப்பித்தார். இதன் மூலம் 40 கோடி ஏக்கர் நிலங்கள் விவசாயிகளுக்கு கிடைத்தன. மேலும் விவசாயிகளுக்கு 50 கோடி தங்க ரூபிள் அளவுக்கான கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. இன்னொரு ஆணை மூலம் செஞ்சேனையும் கப்பற்படையும் உருவாக்கப்பட்டன. நிலப்பிரபுக்களை மேற்பார்வையிட ஏழை விவசாயிகள் கொண்ட குழு ஒரு ஆணை மூலம் உருவாக்கப்பட்டது. தொழிலாளர்கள்- விவசாயிகள் ஒற்றுமைக்கு லெனின் மிகுந்த முக்கியத்துவம் அளித்தார்.
சோவியத் புரட்சி வெற்றி பெற்ற பின்னர் லெனின் தலைமையில் கம்யூனிஸ்டுகள் சந்தித்த மிகப்பெரிய சவால்கள் மற்றும் நெருக்கடிகள் 1917 முதல் 1920 வரையிலான கால கட்டம் ஆகும். இதில் முதன்மையானது ரஷ்யாவை போரிலிருந்து வெளிக்கொண்டு வருவது. இதற்காக அதீத பாதகம் கொண்ட நிபந்தனைகளை ஜெர்மனி விதித்தது. ஒருபுறம் நச்சுப்பல் பிடுங்கப்பட்ட கருநாகமாய் உள்நாட்டு வர்க்க எதிரிகளின் சதி செயல்கள்; இன்னொரு புறம் இளம் சோசலிச சமூகத்தை சிதைக்க வெளிநாட்டு ஏகாதிபத்திய எதிரிகள். மறுபுறம் ஜெர்மனியின் நிபந்தனைகள். இத்தகைய சூழலில் சோசலிசத்தை பாதுகாப்பதுதான் முதன்மையான கடமை எனவும், அதற்காக சிறிது கால அவகாசம் பெறுவது அவசியம் எனவும் லெனின் முடிவெடுத்தார். ஜெர்மனியின் நிபந்தனைகளை ஏற்க வேண்டும் என லெனின் பரிந்துரைத்தார். கமனேவ்/ டிராட்ஸ்கி/ புகாரின் போன்ற பலரும், மென்ஷ்விக்குகளும் இது சரணாகதி என வர்ணித்தனர். எனினும் சமாதானத்தின் அவசியம் குறித்த லெனினின் மதிப்பீடை போல்ஷ்விக் கட்சியின் பெரும்பாலோரும் மக்களும் ஏற்றுக்கொண்டனர். இதுகுறித்து உருவான பிரெஸ்ட்- லிடோவ்ஸ்க் ஒப்பந்தம் குறித்து ஏராளமான குறிப்புகளும் உரைகளும் 7வது மற்றும் 8வது தொகுதிகளில் இடம் பெற்றுள்ளன. இந்த சமரச ஒப்பந்தம் மூலம்தான் ரஷ்ய கம்யூனிஸ்டுகள் எதிர்சக்திகளை வெற்றிகரமாக முறியடித்து உலகின் முதல் சோசலிச சமூகத்தை பாதுகாத்தனர்.
சோசலிசத்தை பாதுகாக்க நெகிழ்வு தன்மை
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு போர்களை முடிவுக்கு கொண்டு வந்த பின்னர் ரஷ்ய கம்யூனிஸ்டுகள் சந்தித்த மிகப்பெரிய பிரச்சனை உணவு பஞ்சம் ஆகும். இயற்கையிலேயே மக்களிடம் இது அதிருப்தியை உருவாக்கியது. “இதுதான் சோசலிசம் எனில் இது இல்லாமல் போகட்டும்” என ஒரு கிராம பெண்மணி கோபத்துடன் கூறியதாக, அன்னா லூயிஸ் ஸ்ட்ராங் தனது “ஸ்டாலின் சகாப்தம்” எனும் நூலில் குறிப்பிடுகிறார். அந்த அளவுக்கு மக்களின் கோபம் இருந்தது. இந்த சமயத்தில்தான் லெனின் தலைமையிலான போல்ஷ்விக்குகள் “புதிய பொருளாதார கொள்கைகளை” அமலாக்கினர். பெரும்பாலான உற்பத்தி சக்திகள் அரசின் கைகளில் உள்ள அதே சமயத்தில், சில பிரிவுகளில் சிறு முதலாளிகள், நடுத்தர விவசாயிகள் தனியார் உற்பத்தியில் அனுமதிக்கப்பட்டனர். இது நிலைமையில் முன்னேற்றத்தை உருவாக்கியது. எனினும் இதற்கான தேவை முடிந்தவுடன் இந்த கொள்கைகளை லெனின் திரும்ப பெற்றார். இந்த நெகிழ்வுத் தன்மை மூலம் உடனடி நெருக்கடியை ரஷ்ய கம்யூனிஸ்டுகள் சமாளித்தனர். இத்தகைய அணுகுமுறை இல்லையெனில், அது சோசலிசத்துக்கு ஆபத்தாக கூட மாறியிருக்கும். இது பற்றிய பல விவரங்கள் 12வது தொகுதியில் இடம் பெற்றுள்ளன.
இடது சீர்குலைவு வாதத்திற்கு எதிராக
இடதுசாரி சீர்குலைவுவாதம் என்பது உலகெங்குங்குமுள்ள கம்யூனிஸ்டு இயக்கம் சந்திக்கும் ஒரு திரிபு ஆகும். அதிதீவீர முழக்கங்களை முன்வைக்கும் இந்த திரிபு, சில சிறந்த இளம் கம்யூனிஸ்டு தோழர்களை ஈர்த்து விடுகிறது. ஆனால் உண்மையில் இது புரட்சி இயக்கத்தை சீர்குலைக்கும் ஆபத்தை கொண்டது. இந்திய கம்யூனிஸ்டு இயக்கமும் கூட இத்தகைய திரிபுகளை “நக்சலிசம்” வடிவத்திலும், பின்னர் “மாவோயிஸ்டு” வடிவத்திலும் சந்தித்தது. இது குறித்து லெனின் உருவாக்கிய “இடதுசாரி சிறுபிள்ளைத்தனமும் குட்டி முதலாளித்துவ மனோபாவமும்” எனும் படைப்பும், “இடதுசாரி கம்யூனிசம் – இளம் பருவக் கோளாறு” எனும் படைப்பும் சித்தாந்த களஞ்சியம் எனில் மிகை அல்ல. இவை முறையே 8வது தொகுதியிலும் 10வது தொகுதியிலும் இடம் பெற்றுள்ளன.
குறிப்பாக “இடதுசாரி கம்யூனிசம் இளம் பருவக்கோளாறு” எனும் லெனினின் நூலை ஒவ்வொரு கம்யூனிஸ்டும் கற்பது மிக அவசியமாகிறது. லெனின் இந்த நூலை 1920ம் ஆண்டு ஏப்ரல் மாதம் எழுதினார். இந்த நூல் ஜூன் மாதம் வெளியிடப்பட்டது. ஜூலை மாதத்தில் கம்யூனிஸ்டு அகிலத்தின் இரண்டாவது மாநாடு நடந்தது. அதில் பங்கேற்க வந்த அனைத்து பிரதிநிதிகளுக்கும் இந்த ஆவணம் வழங்கப்பட்டது.
- நாடாளுமன்றத்தில் கம்யூனிஸ்டுகள் பங்கேற்பது தேவை இல்லை.
- தொழிற்சங்கங்கள் போன்ற அமைப்புகளில் கம்யூனிஸ்டுகள் பங்கேற்பது வீண் வேலை.
- தனிமனித படுகொலைகள் நியாயமே!
- விதிவிலக்கின்றி சமரசம் எப்பொழுதும் எந்த வடிவத்திலும் கூடாது
என இடதுசாரி சீர்குலைவுவாதிகள் முன்வத்த தவறான கோட்பாடுகளை லெனின் மிகக் கடுமையாக விமர்சித்தார்.
இந்தியாவிலும் இடது சீர்குலைவுவாதிகள் :
- தேர்தல் பாதை திருடர் பாதை
- நாடாளுமன்றம் பன்றிகளின் தொழுவம்
- தொழிற்சங்கம் போன்ற பிற்போக்குத்தனமான அமைப்புகளில் நேரத்தை வீணடிக்ககூடாது
- ஆயுதம் தாங்கிய புரட்சிதான் ஒரே வடிவம்
- எதிரி வர்க்கங்களின் தனி நபர் பிரதிநிதிகளை கொல்வது புரட்சிக்கு உத்வேகம் ஊட்டும்.
என்றெல்லாம் கூறிவந்துள்ளனர். லெனின் இத்தகைய அபத்தமான கருத்துகளுக்குதான் மேற்கண்ட நூலில் பதில் தருகிறார்.
மேலும் லெனினின் மிகப்பெரிய பங்களிப்பான மூன்றாவது அகிலம் அமைக்கப்பட்ட காலகட்டத்தையும் இந்த லெனின் தொகுப்பு நூல்கள் முன்வைக்கின்றன. மார்க்சிய அறிவு பெட்டகமாய் திகழும் லெனின் தேர்வு நூல்களை கற்பது நமக்கு சிறந்த சித்தாந்த பயிற்சியை தரும் என்பதில் ஐயமில்லை.
You may also like
No comments
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

Leave a Reply