லெனின் நினைவு நூற்றாண்டு : லெனினது வரலாற்றுப் பரிசோதனை
என். குணசேகரன்
கடந்த நூறு ஆண்டுகளில் லெனின் பற்றி அடுக்கடுக்காக பல நூல்கள் இடைவிடாமல் வெளிவந்துள்ளன. அவற்றில் பல நூல்கள் லெனினின் சிந்தனைகள் மீது தாக்குதல் தொடுத்து எழுதப்பட்டவை. அவரை அவதூறு செய்தும், அவரது புரட்சிகர செயல்பாடுகளை இழித்தும், பழித்தும் எழுதப்பட்ட பல நூல்களும் வெளிவந்துள்ளன. அவரைப் பற்றிய நூல்கள் எப்படிப்பட்டதாக இருந்தாலும், ஒரு உண்மை மறைக்க முடியாதது. உலக சிந்தனைப் பரப்பில் லெனினது தாக்கம் நீடித்துக் கொண்டே இருக்கிறது என்பதே அந்த உண்மை.
அவரைப் பற்றிய பயனுள்ள ஆய்வு நூல்களும் பல வெளிவந்துள்ளன. அவற்றில் இரண்டு நூல்கள் இங்கே விவாதிக்கப்படுகிறது.
“லெனினை மறுகட்டமைத்தல்: அறிவாற்றல் சார்ந்த ஒரு வாழ்க்கை வரலாறு ” என்ற தலைப்பிலான நூலினை ஹங்கேரியைச் சார்ந்த லெனினிய ஆய்வாளர் தாமஸ் கிராஷ் எழுதியுள்ளார். ( “Reconstructing Lenin: An Intellectual biography “-Tamas Krausz)
நூலாசிரியர் லெனினியத்தை உருக்குலைத்திடாமல் விளக்கிட எடுத்துள்ள பெருமுயற்சியை உணர முடிகின்றது. இது பாராட்டுக்கு உரியது.
நூலாசிரியர் புரட்சிகர தத்துவ வரலாற்றை விளக்குவதில்தான் அதிக கவனம் செலுத்தியுள்ளார். ஒரு நூற்றாண்டுக்கு முன் நடைபெற்ற தத்துவ விவாதங்களை மீண்டும் மறுவாசிப்பு செய்திடவும், இன்றைய நிலைமைகளுக்கு பொருத்திப் பார்க்கவும் இந்த நூல் நம்மை அழைத்துச் செல்கிறது.
எனவே, இது வழக்கமான தனிநபர் வாழ்க்கை வரலாற்று நூல் அல்ல. லெனினிய கருத்தாக்கங்களின் வரலாறு என்று கூறலாம். “யார் லெனின்? ” என்ற முதல் அத்தியாயத்தில், குழந்தைப் பருவத்திலிருந்து உலகப் பாட்டாளி வர்க்கப் புரட்சியின் மாபெரும் தலைவராக லெனின் உயர்ந்த வரலாறு மிக நுண்ணிய அம்சங்களுடன் விளக்கப்படுகிறது. ஏற்கெனவே வெளிவந்த விவரங்களை தாண்டி பரந்த ஆராய்ச்சி விவரங்களுடன் ஆசிரியர் உரையாடுகிறார்.
இதோடு வாழ்க்கை வரலாறு முடிவடைந்துவிடுகிறது. அடுத்து வருகிற நானூறுக்கும் மேற்பட்ட பக்கங்கள் லெனினிய கருத்தாக்கங்களின் வரலாற்றை விளக்குகிறது.
அரசு பற்றிய லெனின் விவாதம்
ரஷிய அரசை வீழ்த்தி புரட்சி முன்னேறிட, ரஷிய அரசு பற்றிய துல்லியமான நிர்ணயிப்பு தேவைப்பட்டது. ரஷிய அரசின் தன்மை பற்றிய விவாதம் தீவிரமாக நடந்தது. இந்த விவாதத்தை நூலாசிரியர் நன்கு விளக்குகிறார். லெனின் இந்த விவாதத்தில் முக்கிய பங்காற்றியதையும், பிளக்கனவ் போன்ற மார்க்சியர்களோடு வாதப் போரில் ஈடுபட்டதையும் அவர் விளக்குகிறார். நூலாசிரியர் முக்கிய கருத்து வேறுபாடுகளை இவ்வாறு தொகுக்கிறார்.
“ரஷிய மார்க்சியர்களுக்கும், தாராளவாத அணுகுமுறைகளுக்கும் இடையே இரண்டு முக்கிய வேறுபாடுகள் இருந்தன. ரஷிய அரசு பற்றிய வரலாற்று ஆய்வில், வர்க்கப் போராட்டம் என்ற கோட்பாட்டை மார்க்சியர்கள் பொருத்தி ஆய்வு செய்தனர். இவ்வாறு ஆராய்கிற போது, பொதுவாக, ரஷிய அரசு என்று எடுத்துக் கொள்ளாமல், அது கடந்த காலங்களில் எந்த வடிவங்களில் எத்தகைய வர்க்கத் தன்மையுடன் இருந்தது என்பதையும் சேர்த்து ஆராய்ந்தனர். “
“இரண்டாவதாக, மார்க்சியர்கள் ரஷிய அரசு பற்றிய ஆய்வினை ரஷியாவில் முதலாளித்துவ வளர்ச்சியின் தனித்தன்மைகள் உள்ளிட்ட குறிப்பிட்ட பொருளாதார அம்சங்களோடு இணைத்து ஆராய்ந்தனர். போல்ஷ்விக்களும் மென்ஷ்விக்களும் அவரவர் அரசியல் திட்டங்களையொட்டி ரஷிய வரலாற்று நிகழ்ச்சிப் போக்குகளை ஆராய்ந்து விளக்கிட முயற்சித்தனர். ”
புரட்சி இலட்சியம் ஈடேற, ஒவ்வொரு நாட்டின் அரசு பற்றிய வரையறை அவசியம். அரசு பற்றிய விவாதம் இதற்கு வழிகாட்டுகிறது. அன்று ரஷியாவில் முன்வைக்கப்பட்ட பல வாதங்களை நூலாசிரியர் எளிய நடையில் விளக்கியுள்ளார்.
முதலாளித்துவ அமைப்பு பற்றிய விவாதமும் முக்கியமானது. ஜெர்மானிய மார்க்சியரான ரோசா லக்சம்பர்க் எழுதிய “மூலதனக் குவியல் ” என்ற நூல் கடும் சர்ச்சைக்கு உள்ளானது. அந்நூல் குறித்த தனது கருத்துக்களை 1913-ஆம் ஆண்டு லெனின் வெளியிட்டார்.
பல்வேறு உள்நெருக்கடிகளால் முதலாளித்துவம் சிதைந்துபோகும் என்ற ரோசா லக்சம்பர்கின் கருத்தை லெனின் ஏற்கவில்லை. ஒவ்வொரு நாட்டிலும் பல்வேறு விதமான உற்பத்தி முறைகள், பல்வேறு வளர்ச்சி வடிவங்கள், பிரத்தியேகமான நிலைமைகள் உள்ளன என்பதையும், அவற்றை ஆராய வேண்டுமெனவும் லெனின் வலியுறுத்தினார்.
ரஷியாவிற்கென்று பிரத்தியேகமான முதலாளித்துவ வளர்ச்சி இருப்பதை ஆழமாக கண்டறிந்தார் லெனின். இதனை “ரஷியாவில் முதலாளித்துவ வளர்ச்சி ” என்ற தனது நூலில் லெனின் விரிவாக விளக்குகிறார்.
இந்த ஆராய்ச்சி முடிவுகள் உலக ஏகாதிபத்தியத்தின் பலவீனமான கண்ணியாக ரஷியா விளங்குவதையும், புரட்சிக்கு ரஷியா சாதகமாக இருப்பதையும், தொழிலாளி-விவசாய வர்க்கக் கூட்டணி அமைத்து அதிகார மாற்றத்தை சாதிக்க வேண்டுமென்ற கருத்துக்கு லெனின் வந்தார்.
புரட்சி அரசியல் கலை
“மாற்று ” “மாற்று அரசியல் ” முதலளித்துவதிற்கு மாற்று என்றெல்லாம் பேசப்படும் சூழலில், லெனினது அணுகுமுறை பற்றி நூலாசிரியர் தரும் விளக்கம் முக்கியமானது.
எதிர்ப்படும் பல்வேறு மாற்றுக்களில் ஒரு வழியை கண்டறிந்து அங்கீகரிப்பது என்பதுதான், புரட்சி அரசியல் கலையில் அடங்கியியுள்ள முக்கிய அம்சமாக ஆசிரியர் கூறுகிறார்.
அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் வழி, பாட்டாளி வர்க்க விடுதலை நோக்கிலான தீவிர, புரட்சி நடவடிக்கையாக இல்லாமல் போகலாம்; துவக்க நடவடிக்கை என்பது அன்றைய சூழலில் எது சாத்தியமான வழி என்பதிலிருந்து கூட நிச்சயிக்கப்படலாம்.
ஆனால், லெனினிய சிந்தனையில் மாற்று எவ்வாறு தெரிவு செய்யப்படுகிறது?
- முதலில் எது சாத்தியம், எது சாத்தியமில்லை என்பதனை தீர்மானிக்க, அடிப்படை என்ன? குறிப்பிட்ட சூழல்தான் என்பது லெனினியம்.
- குறிப்பிட்ட சூழல் எனும் போது வரலாற்று சூழல் முக்கியமானது.
- அன்று நிலவும் அரசியல் சக்திகளுக்கிடையிலான உறவுகள்,
- ஒவ்வொரு வர்க்கத்தின் அரசியல் செல்வாக்கு,
- மாற்றத்திற்கான இலக்கு மற்றும் திசைவழி,
- தொழிலாளி வர்க்கத்தின் நீடிக்கக்கூடிய கூட்டாளிகளை அணிதிரட்டுவதற்கான தொலைநோக்கு உத்தி
இந்த அம்சங்கள் அனைத்தையும் ஆராய்ந்து, செயலுக்கான வியூகம் அமைக்க லெனினியம் கற்றுத் தருகிறது. அதுவே உண்மையான மாற்றத்தை நிகழ்த்தும்.
இன்றைய உலகில் செயல்படும் பல புரட்சிகர இயக்கங்கள் ஒவ்வொரு நாட்டின் தன்மைக்கேற்ப புரட்சிகர உத்திகளையும், நடைமுறைத் திட்டங்களையும் உருவாக்குவதில் தடுமாறுகின்றன. திட்டவட்டமான நிலைமைகளை துல்லியமாக ஆராய்ந்து, உரிய உத்திகளை உருவாக்க முடியவில்லை என்றால் தோல்வியே தொடர்கதையாகிடும்.
புரட்சிகர உத்திகளே லெனினது வாழ்க்கையாக இருந்தது. ரஷியப் புரட்சி, சோஷலிச நிர்மாணம், புரட்சிக் கட்சி அமைப்பு, உலக ஏகாதிபத்தியத்தின் இயங்கு தன்மை என பல தளங்களில் அவரது சிந்தனையும், அவர் நடத்திய கருத்துப்போர்களும் அமைந்தன. இவை அனைத்தும் நூலில் விளக்கப்படுவதால், புரட்சிகர உத்திகள் பற்றிய அறிவை செழுமையாக்கிக் கொள்ள இந்நூல் உதவிடும்.
ரஷியப் புரட்சி என்ற வரலாற்று பரிசோதனை மேற்கொண்ட ஒரு தலைவனைப் பற்றிய நூலை உயர்ந்த தரத்துடன் உருவாக்கியுள்ளார், தாமஸ் கிராஷ். இன்றும் லெனினியம் தேவைப்படுகிறது என்ற உண்மையை மேலும் அழுத்தமாக அவர் பதிந்துள்ளார்.
“மீள் ஆய்வில் லெனின் “
பல நாடுகளில் செயல்பட்டு வரும் இடதுசாரிகள் சிலரிடம் ஒரு தவறான எண்ணவோட்டம் உள்ளது. சோசலிசத்தை அடைவதற்கு கடுமையான விதிகளும், அமைப்புச் சட்டங்களும் கொண்ட ‘புரட்சிகரமான கட்சி’ தேவையில்லை என்றும், மக்கள் எழுச்சிகளோடு இணைந்து நிற்கும் ஒரு சாதாரண அமைப்பு இருந்தால் போதும் என்றும் அவர்கள் கருதுகின்றனர்.
குறிப்பாக, “என்ன செய்ய வேண்டும் ” நூலில் லெனின் வரையறுக்கும் கட்சி அமைப்பு, கூடாது என்றும், அத்தகைய ‘கட்சி’ தான் ‘ஸ்டாலினிசம்’ என்ற அடக்குமுறை வடிவம் எடுத்தது என்றும் அவர்கள் வாதிடுகின்றனர். அதாவது, புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சி கட்டுவதற்கான லெனினியக் கோட்பாடுகள் அவசியமில்லை என்பது அவர்களின் கருத்து. இந்தியாவிலும் இக்கருத்துகளுக்கான ஆதரவாளர்கள் உண்டு.
சோவியத் வீழ்ச்சி, சில நாடுகளில் கம்யூனிஸ்ட் இயக்கம் வளர்ச்சி பெறாத சூழல் போன்ற பல காரணங்களால், லெனினியத்தை மறுக்கின்ற இது போன்ற கண்ணோட்டங்கள் உருவாகின்றன. உண்மையான மார்க்சிய இயக்கம் இந்தத் தவறுகளை எதிர்த்து கருத்துப் போராட்டம் நடத்திட வேண்டும்.
இந்த சித்தாந்தப் போராட்டத்திற்கு உறுதுணையாக உதவிடும் நூலாக 2005ஆம் ஆண்டு வெளிவந்து இன்றும் விவாதிக்கப்படுகிற “மீள் ஆய்வில் லெனின் ” (Lenin Rediscovered) என்ற நூல் அமைந்துள்ளது. லார்ஸ் டி லீஹ் எழுதிய இந்த நூல் 1902 ஆம் ஆண்டு லெனின் எழுதிய “என்ன செய்ய வேண்டும்? ” நூலைப் பற்றிய விரிவான ஆராய்ச்சி. ரஷ்ய, ஜெர்மானிய ஆதாரங்களை பெரும் அளவில் திரட்டியதோடு மட்டுமல்லாது, “என்ன செய்ய வேண்டும் ” நூலின் ரஷிய மூல நூலைப் புதிதாக மொழிபெயர்த்து நூலோடு இணைத்துள்ளார்.
கட்சியில் ஜனநாயகம்
லெனினது வரலாற்றுச் சிறப்பு பெற்ற ‘என்ன செய்ய வேண்டும்’ நூல் மார்க்சிய இயக்கத்திற்கு ஓர் அடிப்படை நூல். அதனை கற்றுத் தேர்ந்து விட்டோம் என்ற பலரது பெருமிதத்தை உடைத்தெறிந்து, லெனினது உண்மையான சிந்தனையோட்டத்தை லார்ஸ் வெளிக் கொணருகிறார். அவரது ஆதாரங்களையும், விளக்கங்களையும் ஆழமாக படிக்கும் ஒருவர், உண்மையான மேம்பட்ட ஜனநாயகம் கொண்ட ஒரு கம்யூனிஸ்ட் கட்சி அமைப்பையே லெனின் உருவாக்க விரும்பினார் என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.
லெனின்கூட பிந்தைய காலங்களில் “என்ன செய்ய வேண்டும்? ” நூலை வாசிப்பவர் அது எழுதப்பட்ட சூழலை நன்கு புரிந்துகொண்டு வாசிக்க வேண்டுமென வலியுறுத்தினார். அந்தச் சூழலின் முழுப் பரிமாணங்களையும் விரிவாக எடுத்துரைத்து, லெனினது சிந்தனையை நமக்கு அளிக்கிறார் லார்ஸ்.
கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்பாடான ஜனநாயக மத்தியத்துவம் குறித்தும் லெனினது சிந்தனையோட்டம் தவறாக புரிந்துகொள்ளப்பட்டது. ஜெர்மானிய மார்க்சியரான ரோசா லக்சம்பர்க் அதீதமான “மத்தியத்துவம் ” ரஷியாவில் எதிர்வரும் புரட்சியைத் தடுத்துவிடும் என்று கூறினார். ஆனால், அவரது கருத்து தவறாக முடிந்தது. 1917இல் போல்ஷ்விக் கட்சி லெனின் தலைமையில் புரட்சியை வெற்றிகரமாக்கியது. ஆக, லெனினிய அமைப்புக் கோட்பாடுகள்தான் புரட்சிக்கு இட்டு செல்லும் என்பது 1917 அனுபவம்.
ரஷியப் புரட்சியின் உண்மையான கதாநாயகர்கள் யார்? நிச்சயமாக ரஷிய தொழிலாளி வர்க்கமும், தொழிலாளிகள், விவசாயிகள் அமைத்த வர்க்க கூட்டணியும்தான். ஆனால் தொழிலாளி வர்க்கத்தின் மீது லெனின் அவநம்பிக்கை கொண்டிருந்ததாக பலர் எழுதுகின்றனர். இதற்கு அடிப்படையாக “என்ன செய்ய வேண்டும் ” நூலில் ‘தொழிலாளர்கள் தங்களது பொருளாதார போராட்டங்களினால் தொழிற்சங்க உணர்வைத்தான் பெறுவார்கள்; சோசலிச உணர்வு வெளியிலிருந்து புகட்ட வேண்டும்‘ என்று லெனின் எழுதியதை ஆதாரமாக எடுத்துக்காட்டுகின்றனர்.
தொழிலாளர்களின் வர்க்க வல்லமை
இந்த தவறான கருத்தையும் ஏராளமான ஆதாரங்கள், விளக்கங்களுடன் அம்பலப்படுத்துகிறார் லார்ஸ். உண்மையில் மேற்கண்ட கருத்து கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர்களுக்கு அளிக்கப்பட்ட வழிகாட்டுதல். சோசலிச உணர்வை தொழிலாளர்களுக்கு ஏற்படுத்துவதில் அவர்கள் தவறிடக்கூடாது. அவ்வாறு தவறினால், தொழிலாளர் எழுச்சி திசை தவறி பயனற்றுப் போய்விடும்; புரட்சி வாய்ப்பு கைநழுவிடும் என்ற காரணங்களால்தான் மேற்கண்ட கருத்தினை லெனின் பதிவு செய்துள்ளார்.
லெனின் எழுதிய அந்தச் சூழல் ரஷிய தொழிலாளி வர்க்கம் ஜார் ஆட்சியை எதிர்த்து தீவிரமாகப் போராடி வந்த காலம். இந்த சாதகமான சூழலை சோசலிஸ்ட்கள் பயன்படுத்தி, புரட்சியை முன்னேற்றிட முயற்சிக்க வேண்டும் என்பது லெனினது எண்ணம்.
இதனால்தான் தொழிலாளர்கள் தங்களது பொருளாதாரத் தேவைகளுக்காகத்தான் நிற்பார்கள்; அதற்கு மேல் அவர்களிடம் எதுவும் எதிர்பார்க்கக்கூடாது என்று வாதிட்ட பொருளாதாரவாதத்தை எதிர்த்துப் போராடினார் லெனின். பொருளாதாரக் கோரிக்கைகளுக்காக மட்டுமல்லாது, அரசியல் சுதந்திரத்திற்காகப் போராடுகிற புரட்சிகர வல்லமை கொண்ட வர்க்கம், தொழிலாளி வர்க்கம் என்று உறுதியாக வாதிட்டார் லெனின்.
லெனினியம் என்பது ஒரு சர்வாதிகார, கொலைகாரத் தத்துவம் என்ற பொய்யான ஒரு சித்திரத்தை உடைத்தெறியும் நூலாக இந்த நூல் அமைந்துள்ளது. உண்மையான மனிதத்துவமும், ஜனநாயகமும் கொண்ட உன்னதமான தத்துவம், லெனினியம் என்பதை லார்ஸ், தனது 867 பக்க நூலில் நிறுவுகிறார். அவரது பல வாதங்களில் மாறுபாடு இருந்தாலும், நூலின் ஆராய்ச்சி மேன்மையையும், லெனினியம் பற்றிய புரிதலை ஆழப்படுத்துகிற அதன் சிறப்பையும் குறைத்து மதிப்பிட முடியாது.
“பாட்டாளி வர்க்கம் அதிகாரத்திற்காக நடத்தும் போராட்டத்தில், அதற்கு, ஸ்தாபனம் என்ற ஒன்றைத் தவிர வேறு ஓர் ஆயுதம் கிடையாது ” என்று லெனின் எழுதினார். கோடானுகோடி உழைக்கும் வர்க்கங்கள் சுரண்டலிலிருந்து விடுதலை பெறுவதைப் பற்றி இடையறாமல் சிந்தித்தவர் லெனின். எனவே, கட்சி அமைப்பு பற்றிய சிந்தனை லெனினுடைய சிந்தனையில் முக்கிய இடம் பெற்றிருந்தது. “என்ன செய்ய வேண்டும் ” நூலில் விளக்குவதற்குத் துவங்கிய அவர், அடுத்தடுத்த கட்டங்களில் அக்கருத்தாக்கங்களை மேலும் மேலும் செதுக்கி வரையறைகளை உருவாக்கினார்.
உழைக்கும் வர்க்க புரட்சிகர அரசியலுக்கு, கட்சி அமைப்புக்கான ஒற்றுமையைக் கட்டுவதில், லெனின் மகத்தான பங்காற்றினார். இதன் வழியாக, மார்க்சியத்திற்கு வளமையான பங்களிப்பை லெனினியம் செய்துள்ளது.
லெனின் சிந்தனையைப் பற்றி எழுதியுள்ள மார்க்சிய மேதை லூகாக்ஸ் மற்றொரு ஒற்றுமையைச் சுட்டிக் காட்டினார். ஒரு நாட்டிற்குள் ஓர் இயக்கம் மேற்கொள்ளும் செயல்பாட்டிற்கும், உலக உழைக்கும் மக்களின் புரட்சிகர விடுதலைக்குமான நெருக்கமான பிணைப்பையும், ஒற்றுமையையும் அடையாளம் காணச் செய்கிறது லெனினியம். எனவே, இயக்கத்தின் ஒவ்வொரு செயல்பாட்டையும் உலக வர்க்க விடுதலையை இணைத்துப் பார்க்கும் இடையறாத பயிற்சியில்தான் லெனினியத்தில் தேர்ச்சி என்பது கிட்டும்.
உண்மையான லெனினியத்தை புரிந்து கொள்ள உதவிடும் நூலாக “மீள் ஆய்வில் லெனின் ” திகழ்கிறது.
You may also like
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
