
மொழிவழி மாநிலங்களும் இந்துத்துவாவுக்கு எதிரான போராட்டமும்!
அன்வர்
மொழிவழி மாநிலங்கள் அமைந்து 70 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளன. பூகோள அடிப்படையில் இந்திய தேசத்தின் வயது 200 ஆண்டுகளுக்கு மிகாது. சில சமயங்களில் பேரரசுகளும் பல சமயங்களில் சிற்றரசுகளுமாக இன்றைய இந்திய நிலப்பரப்பு அமைந்தது. இதனை ஆக்கிரமித்த பிரிட்டன் தனது காலனிய சுரண்டலுக்காக சில அரசியல்-நிர்வாக கட்டமைப்புகளை உருவாக்கியது. காலனிய சுரண்டலை அதிகபட்சம் உறிஞ்சுவதுதான் இந்த நிர்வாக கட்டமைப்பின் அடிப்படை இலக்கு.
தேசப்பிரிவினைக்கு பின்னர் விடுதலை பெற்ற இந்தியா சென்னை மாகாணம்: (கன்னியாகுமரி இல்லாத தற்போதைய தமிழ்நாடு, மற்றும் ஆந்திரா, கேரளா, கர்நாடகாவின் சில பகுதிகள்), பம்பாய் மாகாணம் : (மகாராஷ்டிரா மற்றும் குஜராத்), வங்காள மாகாணம் (மேற்கு வங்கம்), ஐக்கிய மாகாணம்(உத்தரப் பிரதேசம்), மத்திய மாகாணம் (மத்தியப் பிரதேசம்), கிழக்கு பஞ்சாப் (பஞ்சாப், ஹரியானா, இமாச்சல பிரதேச பகுதிகள்) பீகார், ஒரிசா, அசாம் ஆகிய பிரிவுகளாக இருந்தன. மேலும் ஹைதராபாத்/மைசூர்/திருவிதாங்கூர்/ஜம்மு – காஷ்மீர்/ குவாலியர், இந்தூர் உள்ளிட்ட சமஸ்தானங்களின் கூட்டமைப்பு, ஜெய்ப்பூர், ஜோத்பூர் உள்ளிட்ட ராஜஸ்தான் சமஸ்தானங்கள்/ பாட்டியாலா ஆகிய பெரிய சமஸ்தானங்களும் நூற்றுக்கணக்கான சிறிய சமஸ்தானங்களும் இருந்தன.
கம்யூனிஸ்டு கட்சியின் சமரசமற்ற நிலை
விடுதலைக்கு பின்பு இந்தியாவின் நிர்வாக கட்டமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்பதில் கம்யூனிஸ்ட் கட்சி தெளிவான நிலை எடுத்தது. மக்கள் பேசும் மொழி அடிப்படையில் நிர்வாக அமைப்பு இருக்க வேண்டும் என கம்யூனிஸ்டு இயக்கம் எவ்வித சமரசமும் இல்லாமல் தொடர்ச்சியாக கோரி வந்தது. இந்தியா பல தேசிய இனங்கள் வாழும் ஒன்றியம்; இதற்கு அடிப்படை மொழி. எனவே மொழிவாரி மாநிலங்கள் அமைய வேண்டும் என்பது கம்யூனிஸ்ட் கட்சியின் நிலை. 1946ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வந்த பிரிட்டஷ் தூதுக்குழுவிடம் இத்தகைய விண்ணப்பத்தை கம்யூனிஸ்ட் கட்சி அளித்தது. விடுதலைக்கு பின்னரும் மொழிவாரி மாநிலங்களுக்கான விசாலாந்திரா/ ஐக்கிய கேரளம்/ சம்யுக்த மகாராஷ்ட்ரா போன்ற பல இயக்கங்களில் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்றது. மொழிவழி மாநிலங்கள் அமைவதுதான் மக்கள் ஆட்சி நிர்வாகத்தில் பங்கேற்பதற்கு வாய்ப்பு ஏற்படும். மேலும் மொழியை மையமாக கொண்ட பண்பாடும் ஏனைய நெறிமுறைகளும் பாதுகாக்கப்படும். எனவே மொழிவழி மாநிலங்கள் எனும் கோரிக்கை ஒரு முக்கிய ஜனநாயக கோரிக்கை என்பது கம்யூனிஸ்டு கட்சியின் நிலை ஆகும்.
காங்கிரசின் பல்டி
விடுதலைக்கு முன்பு காங்கிரசின் நிலையும் மொழிவழி மாநிலங்கள்தான். 1920ஆம் ஆண்டு நாக்பூர் தீர்மானம்/ 1928ஆம் ஆண்டு மோதிலால் நேரு கமிட்டி/ 1945 காங்கிரசின் தேர்தல் அறிக்கை ஆகியவை இதனை வலியுறுத்தின. ஆனால் விடுதலைக்கு பின்பு தேசப்பிரிவினையை காரணம் காட்டி காங்கிரஸ் தனது நிலைபாட்டில் பல்டி அடித்தது. 1948ஆம் ஆண்டு எஸ்.கே.தர் கமிட்டியும் 1949ஆம் ஆண்டு நேரு-பட்டேல்- பட்டாபி சீதாராமையா கமிட்டியும் இந்த கோரிக்கையை நிராகரித்தன. தேசத்தின் ஒற்றுமைக்காக என நேரு அரசாங்கம் கூறினாலும் முதலாளித்துவ அரசுமுறை தனது சந்தை நலனுக்காக எப்பொழுதும் மையப்படுத்தப்ப்ட்ட நிர்வாக முறையையே நாடும். புதிதாக சுரண்டலுக்கான சுதந்திரத்தை பெற்ற இந்திய முதலாளித்துவமும் அந்த வழியையே தேர்வு செய்ய முனைந்தது.
எனினும் மக்களின் விருப்பம் வேறாக இருந்தது. இங்கு இரு தலைவர்களின் நீண்ட உண்ணாவிரதமும் அதன் விளைவாக அவர்களின் மரணமும் மொழிவழி மாநில போராட்டத்தின் முக்கிய மைல் கல்களாக இருந்தன. ஒன்று, காந்திஜியுடன் பணியாற்றிய பொட்டி சிறீ ராமுலு அவர்கள் விசாலாந்திரா அமைக்கப்பட வேண்டும் என 56 நாள் உண்ணாவிரதம் இருந்து 1952இல் உயிர் நீத்தார். இரண்டு, சென்னை மாகாணத்துக்கு தமிழ்நாடு என பெயரிட வேண்டும் எனும் கோரிக்கையையும், வேறு பல கோரிக்கைகளையும் முன்வைத்து சங்கரலிங்கனார் உண்ணாவிரதம் இருந்து 1956இல் 77வது நாளில் உயிர்நீத்தார். பொட்டி சிறீ ராமுலுவின் உயிர் தியாகம் தெலுங்கு பேசும் மக்களிடையே போரட்டத்தை விளைவித்தது. இந்த போராட்டத்தின் வீச்சு நேரு அரசை பின்வாங்க வைத்தது. ஆந்திரா நாட்டின் முதல் மொழிவழி மாநிலமாக உருவானது. சங்கரலிங்கனாரின் உண்ணாவிரதத்தை சீர்குலைக்க காங்கிரஸ் மாநில அரசாங்கம் அவரை தாக்குவது உட்பட பல முனைப்புகளை முன்னெடுத்தனர். அதனை முறியடித்ததில் கம்யூனிஸ்டு கட்சி ஊழியர்களுக்கு முக்கிய பங்கு உண்டு. அதனால்தான் தான் இறந்த பின்னர் தனது உடலை கம்யூனிஸ்டுகளிடம் ஒப்படைக்க வேண்டும் என அவர் உயில் எழுதி வைத்தார். அவரின் உயிர்த்தியாகம்தான் பின்னர் சென்னை மாநிலம் என்பது தமிழ்நாடு என பெயர் பெற (அண்ணா அரசாங்கத்தில்) காரணமாக அமைந்தது.
கம்யூனிஸ்டு கட்சியின் கொள்கை நிலைபாடு
ஆந்திரா மாநிலம் அமையும் பொழுது ஒரு முக்கிய பிரச்சனையில் முரண்பாடுகள் வெடித்தன. தமிழ்நாடு காங்கிரஸ்காரர்கள் சென்னையும் திருப்பதியும் தமிழ்நாட்டுக்கு வேண்டும் என கோரினர். ஆந்திரா காங்கிரசார் அவற்றை ஆந்திராவுக்கு கோரினர். கம்யூனிஸ்ட் கட்சி மட்டும்தான் இரு மாநிலங்களிலும் ஒரே நிலையை எடுத்தது. தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கமிட்டி திருப்பதி ஆந்திராவுக்கு எனவும் ஆந்திரா கம்யூனிஸ்டு கமிட்டி சென்னை தமிழ்நாட்டுக்கு எனவும் தீர்மானங்கள் இயற்றின.
ஆந்திரா மாநிலம் அமைந்தவுடன் இதே போன்ற பல்வேறு கோரிக்கைகள் இயற்கையிலேயே எழுந்தன. எனவே நேரு அரசாங்கம் மாநிலங்கள் மறுசீரமைப்பு ஆணையம் அமைத்தது. இந்த ஆணையத்திடம் ஒரு விரிவான மனுவை கம்யூனிஸ்டு கட்சி அளித்தது. மொழிவழி மாநிலங்கள் அமைவதற்கு எதிராக முன்வைக்கப்படும் அனைத்து வாதங்களையும் கட்சி நிராகரித்தது. எல்லை பகுதிகளில் எந்த பகுதி எந்த மாநிலத்துடன இணைய வேண்டும் என்பதற்கு ஒரு கிராமத்தை அளவாக எடுத்து கொண்டு அந்த கிராமத்தில் எந்த மொழி பேசும் மக்கள் அதிகமாக உள்ளனரோ அந்த மொழிவழி மாநிலத்தில் இணைக்கப்பட வேண்டும் எனவும் கட்சி கோரியது. இதன் அடிப்படையில்தான் கேரளா/ கர்நாடகம்/ சென்னை மாகாணம் (தமிழ்நாடு) ஆகிய மாநிலங்கள் உருவாயின. கன்னியாகுமரியை தமிழ்நாட்டில் இணைப்பதற்கும் போராட்டம் நடந்தது. அதற்கு பின்னரும் பிரச்சனை முடிவுக்கு வரவில்லை. பம்பாய் மாகாணத்தை பிரித்து மகாராஷ்ட்ரா மற்றும் குஜராத் மாநிலங்கள் அமைய பெரிய போராட்டம் நடைபெற்றது. அதேபோல பஞ்சாப்/ ஹரியானா மாநிலங்களும் உருவாயின. இந்த அனைத்து போராட்டங்களிலும் கம்யூனிஸ்டு கட்சி முன்னணியில் இருந்தது.
ஆர்.எஸ்.எஸ். நிலைபாடு
ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மொழிவழி மாநிலங்கள் அமைவதை தொடக்கத்திலிருந்தே எதிர்த்தது. ஒரே தேசம்-ஒரே மொழி எனும் அதன் முழக்கத்துக்கு மொழிவழி மாநிலங்கள் சாவுமணி அடிக்கும் என்பதையும், இந்தியாவை ஒற்றைத்தன்மை கொண்ட ஒரு இந்து நாடாக உருவாக்குவதற்கு மொழிவழி மாநிலங்கள் எனும் அமைப்பு தடைக்கல்லாக இருக்கும் என்பதையும் சங் பரிவாரம் நன்கு அறிந்திருந்தது. இந்தியாவின் ஒரே மொழியாக சமஸ்கிருதம் இருக்க வேண்டும் எனவும், அதுவரை சமஸ்கிருதமயமாக்கப்பட்ட இந்தி மொழி தேச மொழியாக இருக்க வேண்டும் என்பதும் கோல்வால்கரின் கூற்று. அதுதான் இன்றுவரை சங் பரிவாரத்தின் நிலை. எனவேதான் அவர்கள் மற்ற மொழி அல்லது பண்பாடுகளுக்கு உரிய முக்கியத்துவம் தருவது இல்லை.
மொழிவழி மாநிலங்கள் அமைக்கும் பொழுது அந்த மாநிலத்தில் உள்ள மொழி சிறுபான்மையினரை பாதுகாக்கும் அவசியத்தையும் கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தியது. மேலும் ஓரே மாநிலத்தில் அனைத்து பகுதிகளும் சமச்சீரான பொருளாதார வளர்ச்சியின் அவசியத்தையும் கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தியது. ஆனால் முதலாளித்துவ வளர்ச்சியில் அது நடப்பது இல்லை. எனவே ஒரே மொழி பேசும் மாநில மக்களிடையே முரண்பாடுகள் ஏற்படுகின்றன. அதன் விளைவுதான் தெலுங்கானா உருவானதாகும். மொழிவழி மாநிலத்தை இரண்டாக பிரிப்பது பொருத்தமானது அல்ல என மதிப்பிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தெலுங்கானா கோரிக்கையை ஆதரிக்கவில்லை. இந்துத்துவாவை எதிர்த்த போராட்டத்தில் மொழிகளின் உரிமை முக்கிய பங்கு வகிக்கிறது. அதற்கு அடிப்படை காரணம் மொழிவழி மாநிலங்கள் எனும் ஜனநாயக கோரிக்கைதான் எனில் மிகை அல்ல.
You may also like
No comments
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

Leave a Reply