மீண்டும் மீண்டும் வாசிக்கப்படும் மூலதனம் முதல் தொகுதிக்கான தேடலை முன்வைத்து!
மார்செல்லோ முஸ்டோ
கார்ல் மார்க்ஸ் எழுதிய மூலதனம் நூல் முதலில் வெளியானதில் இருந்து பல பத்தாண்டுகள் கடந்தாலும், அது காலாவதியானதாக எத்தனை முறைகள் ஒதுக்கப்பட்டாலும், அது மீண்டும் மீண்டும் விவாதத்தின் மையத்திற்கு வருகிறது. 157 ஆண்டுகள் பழமையான அந்த நூல் (முதன்முதலில் செப்டம்பர் 14, 1867 அன்று வெளியிடப்பட்டது) “அரசியல் பொருளாதாரத்தின் விமர்சனம்” சிறந்த படைப்பிற்கான எல்லா நல்ல பண்புகளையும் கொண்டுள்ளது: ஒவ்வொரு முறை படிக்கும்போதும், புதிய சிந்தனைகளைத் தூண்டுவதுடன் நமது கடந்த காலத்தை விளக்கியதைப் போலவே போலவே நிகழ்காலத்தின் முக்கியமான அம்சங்களை விளக்கும் ஆற்றல் கொண்டுள்ளது.
மூலதனம் நூலின் ஒரு பெரிய பலம் என்னவென்றால், அது இன்றைய நிகழ்வுகளை சரியான வரலாற்றுப் பின்னணியில் பார்க்க உதவுகிறது. பிரபல இத்தாலிய எழுத்தாளர் இட்டாலோ கால்வினோ சொன்னதுபோல, ஒரு சிறந்த படைப்பு, ஏன் சிறந்தது என்றால், அது “இன்றைய நிகழ்வுகளை வெறும் பின்னணி இரைச்சலாக மாற்றிவிடுகிறது”. இத்தகைய படைப்புகள் தவிர்க்க முடியாத முக்கிய கேள்விகளை எழுப்புகின்றன. அவற்றைச் சரியாகப் புரிந்துகொள்ளவும், அந்தப் புரிதலின் வழி ஒரு பாதையைக் கண்டுபிடிக்கவும் உதவுகின்றன. இதனால்தான், இத்தகைய சிறந்த படைப்புகள் எப்போதும் புதிய தலைமுறை வாசகர்களுக்கு ஆர்வமூட்டுகின்றன. காலம் மாறிய பின்னரும், தேவைப்படும் இடத்திலேயே இருக்கின்றன.
157 ஆண்டுகளுக்கு முன்பாக, முதன் முதலில் வெளியான மூலதனம் நூலைப் பற்றி நாம் சொல்லக் கூடியது இதுதான். உலகின் எல்லா மூலைக்கும் முதலாளித்துவம் பரவி, வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் நுழைந்திருப்பதால், மூலதனம் நூலின் முக்கியத்துவம் உண்மையில் இன்னும் அதிகரித்துள்ளது.
2007-8 ஆண்டுகளில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட பிறகு, மார்க்சின் இந்த முக்கிய நூலை மீண்டும் படிப்பது ஒரு உண்மையான தேவையாக இருந்தது – நடைபெற்ற நிகழ்வுகளுக்கு ஒரு உடனடி பதிலாகவும் இருந்தது. பெர்லின் சுவர் தகர்க்கப்பட்ட பின்னர், மார்க்சின் இந்த மாபெரும் படைப்பு மறக்கப்பட்டிருந்தாலும், முதலாளித்துவத்தின் அழிவுகரமான வெறியின் உண்மையான காரணங்களைப் புரிந்துகொள்ள, அது இன்னும் பயனுள்ள வழிமுறைகளை வழங்கியது. எனவே, உலகின் பங்குச் சந்தைகள் நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்களை இழந்து, பல நிதி நிறுவனங்கள் மூடப்பட்ட சில மாதங்களில், மூலதனம் நூல் அதற்கு முந்தைய இருபது ஆண்டுகளில் விற்றதை விட அதிகமான பிரதிகள் விற்பனையானது.
மூலதனம் நூலின் மீதான இந்த ஆர்வம், இடதுசாரி அரசியல்வாதிகளை தொற்றிக்கொள்ளவில்லை என்பது மோசமானது. சீர்திருத்தவே முடியாத இந்த முதலாளித்துவ அமைப்பை, சிறு சிறு மாற்றங்களுக்கு உட்படுத்துவதன் மூலம் சரி செய்யலாம் என்று தவறாக அவர்கள் நம்பினார்கள். அவர்கள் ஆட்சிக்கு வந்தபோது, வளரும் சமூக-பொருளாதார ஏற்றத்தாழ்வுகளையும், தொடரும் சுற்றுச்சூழல் பிரச்சனைகளையும் சிறிதும் குறைக்க வழியில்லாத சிறு சிறு நடவடிக்கைகளை மட்டுமே எடுத்தனர். அதனாலான விளைவுகளையே, நாம் இப்போது பார்த்து வருகிறோம்.
ஆனால் அதே சமயத்தில், மூலதனம் நூலின் மீது மறுபடியும் உருவான ஆர்வத்தின் காரணமாக, மற்றொரு தேவை நிறைவடைந்தது. மார்க்ஸ் தனது அறிவு முயற்சியின் பெரும்பகுதியை செலவிட்ட இந்த நூலின் மிகவும் நம்பகமான பதிப்பு எது என்பதைத் துல்லியமாகக் கண்டறியும் தேடல் வேகமடைந்தது. சமீபத்திய ஆய்வுகளின் உதவியுடன் அந்த தேடல் மேற்கொள்ளப்பட்டது.
அதுவரையில், மார்க்ஸ் தனது ஆய்வை எப்படி உருவாக்கி, மேம்படுத்தினார் என்ற கேள்விக்கு நீண்ட காலமாக பதில் கிடைத்திருக்கவில்லை.
மூலதனம் நூலின் முதல் தொகுதியின் பல பதிப்புகள்
அந்த ஜெர்மானிய புரட்சியாளர், கையெழுத்துப் பிரதியை முதன்முதலில் தயாரித்த போது (1857-58) அவரின் எண்ணம் அந்த வேலையை ஆறு தொகுதிகளாக மேற்கொள்வதாக அமைந்திருந்தது. அதில் முதல் மூன்று தொகுதிகள் மூலதனம், நிலவுடைமை மற்றும் கூலி உழைப்பு பற்றியதாக இருக்கும்; பிந்தைய தொகுதிகள் அரசு, வெளிநாட்டு வர்த்தகம் மற்றும் உலக சந்தை பற்றியதாக இருக்கும்.
ஆண்டுகள் செல்லச்செல்ல, இத்தகைய பெரிய திட்டத்தை நிறைவேற்ற முடியாது என்பதை மார்க்ஸ் உணர்ந்தார். எனவே, இது அவரை நடைமுறைக்கு ஏற்ற ஒரு திட்டத்தை உருவாக்க வைத்தது. அவர் கடைசி மூன்று தொகுதிகளை விட்டுவிட்டு, நிலவுடைமை மற்றும் கூலி உழைப்பு பற்றிய சில பகுதிகளை மூலதனம் பற்றிய புத்தகத்தில் சேர்க்க நினைத்தார். அதன் பின்னர் அந்த நூல் மூன்று பகுதிகளாக கருதப்பட்டது: தொகுதி I மூலதன உற்பத்தி செயல்முறை பற்றியது, தொகுதி II மூலதன சுழற்சி செயல்முறை பற்றியது, மற்றும் தொகுதி III ஒட்டுமொத்த முதலாளித்துவ உற்பத்தி செயல்முறை பற்றியது. இவற்றுடன் ஒரு தொகுதி IV – கோட்பாட்டின் வரலாறு பற்றியது – சேர்க்கப்பட வேண்டும் என்று ஆலோசித்திருந்தார். ஆனால் அதை அவர் தொடங்கவில்லை. இது பெரும்பாலும் உபரி மதிப்புக் கோட்பாடுகள் என்ற நூலுடன் தவறாக குழப்பப்படுகிறது.
அனைவருக்கும் தெரிந்ததுபோல, மார்க்ஸ் மூலதனம் நூலின் தொகுதி I ஐ மட்டுமே முழுமையாக முடித்தார். இரண்டாவது மற்றும் மூன்றாவது தொகுதிகள் அவரது இறப்புக்குப் பின்னரே வெளிவந்தன; அவை 1885 மற்றும் 1894 ஆண்டுகளில் முறையே வெளியிடப்பட்டன. இது ஃபிரெடெரிக் ஏங்கெல்சின் பெரும் பதிப்பு முயற்சியால் சாத்தியமானது.
இந்த இரண்டு தொகுதிகளின் நம்பகத்தன்மையைக் குறித்து சில அறிஞர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். எழுதி முடிக்கப்படாத, துண்டுதுண்டான கையெழுத்துப் பிரதிகளின் அடிப்படையில் இவை தொகுக்கப்பட்டவை. பல ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டவை மேலும் இவற்றில் பல தீர்க்கப்படாத கோட்பாட்டுப் பிரச்சனைகளைக் கொண்டிருந்தன என்று கடுமையான கேள்விகளை வைத்தார்கள். அதே சமயம், ஒரு சிலர் மட்டுமே இன்னொரு, குறைந்த சிக்கலான கேள்வியை எழுப்பி அதற்கு பதில் தேடினார்கள். அந்தக் கேள்வி, மூலதனம் நூலின் முதல் பாகத்திற்கு இறுதிப் பதிப்பு உண்மையில் இருந்ததா என்பது.
இந்த விவாதம் மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் பதிப்பாளர்களின் கவனத்திற்கு மீண்டும் வந்துள்ளது. சமீப ஆண்டுகளில் மூலதனம் நூலின் பல முக்கியமான புதிய பதிப்புகள் வெளிவந்துள்ளன. 2024இல், பிரேசில், இத்தாலி மற்றும் அமெரிக்காவில் சில பதிப்புகள் வெளிவந்தன. அமெரிக்காவில், பால் ரீட்டர் மொழிபெயர்ப்பாளராகவும் பால் நார்த் ஆசிரியராகவும் இருந்து ஒரு பதிப்பு வந்துள்ளது. கடந்த ஐம்பது ஆண்டுகளில் முதல் புதிய ஆங்கில பதிப்பான இந்த நூலை (மொத்தம் நான்காவது) இந்த வாரம் பிரின்ஸ்டன் பல்கலைக்கழக அச்சகம் வெளியிட்டது.
1867இல் வெளியிடப்பட்டு, இருபது ஆண்டுகளுக்கும் மேலான ஆராய்ச்சிக்குப் பிறகு, மார்க்ஸ் அந்தத் தொகுதியின் அமைப்பில் முழுமையாக திருப்தி அடையவில்லை. அவர் அதை ஆறு நீண்ட அத்தியாயங்களாக மட்டுமே பிரித்திருந்தார். முக்கியமாக, மதிப்புக் கோட்பாட்டை விளக்கிய விதம் அவருக்கு திருப்தி அளிக்கவில்லை. அதை இரண்டு பகுதிகளாகப் பிரிக்க வேண்டியிருந்தது: ஒன்று முதல் அத்தியாயத்தில், மற்றொன்று கையெழுத்துப் பிரதி ஒப்படைக்கப்பட்ட பிறகு அவசரமாக எழுதப்பட்ட ஒரு பின்னிணைப்பில். எனவே மூலதனம் நூலின் முதல் தொகுதியை எழுதும் பணி, அது அச்சிடப்பட்ட பின்னரும் கூட மார்க்சின் ஆற்றலில் சிறு பகுதியை உறிஞ்சிக்கொண்டிருந்தது.
1872-1873 காலகட்டத்தில் விற்பனைக்கு வந்த, மூலதனம் நூலின் முதல் பாகத்தின் இரண்டாவது பதிப்பிற்காக, மார்க்ஸ் மதிப்புக் கோட்பாட்டின் முக்கியமான பகுதியை மீண்டும் எழுதினார். நிலையான மூலதனம் மற்றும் மாறுபடும் மூலதனம் பற்றிய வேறுபாட்டையும், உபரி மதிப்பு பற்றிய பல கூடுதல் விளக்கங்களையும் அதில் சேர்த்தார். இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்பத்தின் பயன்பாடு பற்றியும் எழுதினார். மேலும் புத்தகத்தின் முழு அமைப்பையும் மாற்றியமைத்தார், அதை ஏழு பகுதிகளாகவும், இருபத்தைந்து அத்தியாயங்களாகவும் பிரித்தார். ஒவ்வொரு அத்தியாயமும் கவனமாக, பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது.
மேலும், ரஷ்ய மொழிபெயர்ப்பின் (1872) செயல்முறையை மார்க்ஸ் மிக நெருக்கமாகக் கவனித்தார். பிரெஞ்சு பதிப்பிற்காக, இன்னும் அதிக ஆற்றலைச் செலவிட்டார். இதுவும் 1872 -1875 காலகட்டத்தில் வெளிவந்தது. மேலும் அந்த நூலின் மொழிபெயர்ப்பைச் சரிபார்க்க அவர் எதிர்பார்த்ததை விட அதிக நேரம் செலவிட வேண்டியிருந்தது. மொழி பெயர்ப்பாளரின் மிகவும் நேரடியான உரையில் திருப்தி அடையாத மார்க்ஸ், பிரெஞ்சு வாசகர்களுக்கு இயக்கவியல் விளக்கம் நிறைந்த பகுதிகளை எளிதாக்குவதற்காக முழுப் பக்கங்களை மீண்டும் எழுதினார். அவர் தேவையானதாகக் கருதிய மாற்றங்களையும் செய்தார். இவை பெரும்பாலும் “மூலதன திரட்டல் செயல்முறை” பற்றிய இறுதிப் பிரிவில் இருந்தன. மேலும் அதனை கூடுதலான அத்தியாயங்களாகப் பிரித்தார். பிரெஞ்சு பதிப்பின் பின்னுரையில், மார்க்ஸ் பிரெஞ்சு பதிப்பிற்கு “அசலில் இல்லாத ஒரு தனித்த அறிவியல் மதிப்பு உள்ளது” என்றும் எழுதினார். மேலும் “ஜெர்மன் மொழி தெரிந்த வாசகர்களும் இதைப் படிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.
1877 ஆம் ஆண்டில் ஒரு ஆங்கில பதிப்பு பரிந்துரைக்கப்பட்டபோது, அதன் மொழிபெயர்ப்பாளர் “இரண்டாவது ஜெர்மன் பதிப்பை பிரெஞ்சு பதிப்புடன் ஒப்பிட வேண்டியது அவசியம்” என்று மார்க்ஸ் சுட்டிக்காட்டியதில் வியப்பில்லை. ஏனெனில் இந்த பிந்தைய பதிப்பில் அவர் “புதிதாக சிலவற்றைச் சேர்த்திருந்தார் மற்றும் பல விஷயங்களை சிறப்பாக விவரித்திருந்தார்”. இவை வெறும் எழுத்து நடை மாற்றங்கள் அல்ல. பல்வேறு பதிப்புகளில் அவர் சேர்த்த மாற்றங்கள், அவரால் தொடர்ந்த ஆய்வுகளின் முடிவுகளையும், எப்போதும் வளர்ந்து வரும் அவரது விமர்சன சிந்தனையின் வளர்ச்சிகளையும் உள்ளடக்கியது.
மார்க்ஸ், அடுத்த ஆண்டு, மீண்டும் பிரெஞ்சு பதிப்பினை ஆய்வு செய்தார், அதன் நேர்மறை – எதிர்மறை அம்சங்களை எடுத்துக்காட்டினார். மூலதனம் நூலின் ரஷ்ய மொழிபெயர்ப்பாளர் நிகோலாய் டேனியல்சனுக்கு எழுதிய கடிதத்தில், பிரெஞ்சு உரையில் “பல முக்கியமான மாற்றங்களும் சேர்க்கைகளும் உள்ளன” என்று குறிப்பிட்டார். ஆனால் “குறிப்பாக முதல் அத்தியாயத்தில், விளக்கத்தை ‘தட்டையாக்க’ வேண்டியிருந்தது” என்றும் ஒப்புக்கொண்டார். எனவே “பண்டம் மற்றும் பணம்” மற்றும் “பணத்தை மூலதனமாக மாற்றுதல்” பற்றிய அத்தியாயங்கள் “முழுவதுமாக ஜெர்மன் உரையைப் பின்பற்றி மொழிபெயர்க்கப்பட வேண்டும்” என்பதை அவர் தெளிவுபடுத்த வேண்டியிருந்தது. எப்படியிருந்தாலும், பிரெஞ்சு பதிப்பானது வெறும் மொழிபெயர்ப்பை விட கூடுதலான முக்கியத்துவம் கொண்டது என்று சொல்லலாம்.
மார்க்சும் ஏங்கெல்சும் இந்த விஷயத்தில் வேறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருந்தனர். ஆசிரியர் புதிய பதிப்பில் மகிழ்ச்சியடைந்தார், அதை முந்தைய பதிப்புகளை விட பல பகுதிகளில் மேம்பட்டதாகக் கருதினார். ஆனால் ஏங்கெல்ஸ், சில கோட்பாட்டு முன்னேற்றங்களைப் பாராட்டிய போதிலும், பிரெஞ்சு மொழியால் திணிக்கப்பட்ட இலக்கிய பாணி குறித்து சந்தேகத்தை வெளிப்படுத்தினார். “ஆங்கில மொழிபெயர்ப்பிற்கு பிரெஞ்சு பதிப்பை அடிப்படையாகக் கொள்வது ஒரு பெரிய தவறாக இருக்கும்” என்று எங்கெல்ஸ் குறிப்பிட்டு எழுதினார்.
எனவே, தனது நண்பரின் மரணத்திற்கு சில காலம் பின்னர் வெளியான தொகுதி ஒன்றின் மூன்றாவது ஜெர்மன் பதிப்பு (1883) தயாரிக்க கேட்டுக்கொள்ளப்பட்டதும், எங்கெல்ஸ் அதில் “மிகவும் அவசியமான மாற்றங்களை மட்டுமே” செய்தார். மேலும் அதற்காக அவர் எழுதிய முன்னுரையில், மார்க்ஸ் தனது (மூலதனம் நூலின்) “தொகுதி I இன் உரையின் பெரும் பகுதியை மீண்டும் எழுத விரும்பினார்,” ஆனால் உடல்நலக் குறைவு அவரைத் தடுத்தது என்பதை குறிப்பிட்டார். எங்கெல்ஸ், ஆசிரியரால் பல இடங்களில் திருத்தப்பட்ட ஒரு ஜெர்மன் பிரதியையும், பிரெஞ்சு மொழிபெயர்ப்பின் ஒரு பிரதியையும் பயன்படுத்தினார். இதில் மார்க்ஸ் அவசியமாகக் கருதிய மாற்றங்களைக் குறிப்பிட்டிருந்தார். எங்கெல்ஸ் குறைவான தலையீட்டையே செய்தார். “ஆசிரியர் தானே மாற்றியிருப்பார் என்ற என் உறுதியான நம்பிக்கையின்றி இந்த மூன்றாம் பதிப்பில் ஒரு வார்த்தை கூட மாற்றப்படவில்லை” என்று தெரிவித்தார். எனினும், மார்க்ஸ் சுட்டிக்காட்டிய அனைத்து மாற்றங்களையும் அவர் சேர்க்கவில்லை.
எங்கெல்ஸ் முழுமையாக மேற்பார்வையிட்ட ஆங்கில மொழிபெயர்ப்பு (1887) மூன்றாவது ஜெர்மன் பதிப்பை அடிப்படையாகக் கொண்டது. இரண்டாவது ஜெர்மன் பதிப்பைப் போலவே, இந்த உரையும், பிரெஞ்சு மொழிபெயர்ப்பை விட மேலானது என்று அவர் உறுதிபடக் கூறினார் – குறிப்பாக, நூலின் அத்தியாயங்கள் கட்டமைப்பில். ஆங்கில பதிப்பின் முன்னுரையில், பிரெஞ்சு பதிப்பானது, முக்கியமாக “மூலப் பொருளின் முழு தாக்கத்தையும் மொழிபெயர்ப்பில் இழக்க வேண்டியிருந்த இடங்களில், ஆசிரியர் தானே எதைத் தியாகம் செய்ய தயாராக இருந்தார் என்பதைச் சோதிக்க” பயன்படுத்தப்பட்டது என்று எங்கெல்ஸ் எழுதினார். “மார்க்சை எவ்வகையில் மொழிபெயர்க்கக் கூடாது” என்று எங்கெல்ஸ் எழுதியிருந்த கட்டுரையில், ஜான் ப்ரோட்ஹவுசின் மேற்கொண்ட மோசமான *மூலதனம்* சில பக்கங்களின் மொழிபெயர்ப்பை எங்கெல்ஸ் கடுமையாக விமர்சித்தார், “வலுவான ஜெர்மன் மொழியை மொழிபெயர்க்க வலுவான ஆங்கிலம் தேவை . . . புதிதாக உருவாக்கப்பட்ட ஜெர்மன் சொற்களுக்கு ஆங்கிலத்தில் அதற்கு நிகரான புதிய சொற்களை உருவாக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.
நான்காவது ஜெர்மன் பதிப்பு 1890ஆம் ஆண்டு வெளியானது; இதுதான் எங்கெல்சினால் தயாரிக்கப்பட்ட கடைசி பதிப்பாகும். அதிக நேரம் கிடைத்ததால், பிரெஞ்சு பதிப்பில் மார்க்ஸ் செய்த பல திருத்தங்களை இந்த பதிப்பில் அவரால் இணைக்க முடிந்தது, அதே வேளையில், மற்றவற்றை அவர் விலக்கிவிட்டார். இதன் முன்னுரையில் எங்கெல்ஸ் கூறியதாவது, “பிரெஞ்சு பதிப்பையும் மார்க்சின் கையெழுத்துப் பிரதி குறிப்புகளையும் மீண்டும் ஒப்பிட்டு பார்த்த பின்னர், அந்த மொழிபெயர்ப்பிலிருந்து ஜெர்மன் உரைக்கு மேலும் சில சேர்க்கைகளைச் செய்துள்ளேன்.” இவ்வாறு குறிப்பிட்ட அவர் தனது இறுதி முடிவில் மிகவும் திருப்தியடைந்தார். இதன் பின்னர் 1914இல் கார்ல் கவுட்ஸ்கி தயாரித்த பிரபல பதிப்பு மட்டுமே மேலும் சில மேம்பாடுகளைச் செய்தது.
இறுதிப் பதிப்பைத் தேடி
1890ஆம் ஆண்டில் எங்கெல்ஸ் வெளியிட்ட மூலதனம் நூலின் தொகுதி I, உலகெங்கிலும் பெரும்பாலான மொழிபெயர்ப்புகள் மேற்கொள்ளப்படுவதற்கான முதன்மைப் பதிப்பாக மாறியது. இன்றுவரை, இந்த பதிப்பின் தொகுதி I அறுபத்தாறு மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இவ்வாறு வெளியான மொழியாக்கங்கள் ஐம்பத்தொன்பதில் தொகுதி II மற்றும் தொகுதி III ஆகியவையும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. எங்கெல்ஸுடன் இணைந்து எழுதப்பட்ட கம்யூனிஸ்ட் அறிக்கைக்கு பின், இந்த நூல் ஐந்நூறு மில்லியனுக்கும் அதிகமான பிரதிகள் அச்சிடப்பட்டிருக்கலாம். மாவோ எழுதிய சிறிய சிவப்பு புத்தகம், இதைவிட அதிக விநியோகத்தைக் கொண்டிருந்தது — அரசியல், தத்துவம் அல்லது பொருளாதாரத்தின் வேறு எந்த குறிப்பிடத்தக்க நூலும் மூலதனம் தொகுதி I-இன் விநியோகத்திற்கு ஒப்பிடத்தக்க பதிப்புகளை கொண்டிருக்கவில்லை.
இருப்பினும் கூட, எது சிறந்த பதிப்பு என்ற விவாதம் ஒருபோதும் ஓயவில்லை. இந்த ஐந்து பதிப்புகளில் எது சிறந்த கட்டமைப்பைக் கொண்டுள்ளது? எந்தப் பதிப்பு மார்க்சின் பிற்கால தத்துவார்த்த கருத்துக்களைக் கொண்டுள்ளது? எங்கெல்சினால் நூற்றுக்கணக்கான மாற்றங்களை மேற்கொள்ள வேண்டியிருந்த மூலதனம் நூலின் மற்ற இரண்டு தொகுதிகளைப் போன்ற சிக்கல் முதல் தொகுதிக்கு இல்லை என்றாலும் கூட, இது இன்னும் தலைவலியாகவே உள்ளது.
சில மொழிபெயர்ப்பாளர்கள், புதிய ஆங்கில பதிப்பில் ரீட்டர் மற்றும் நார்த் செய்தது போல, 1872-73 பதிப்பை அடிப்படையாகக் கொள்ள முடிவு செய்துள்ளனர் — இது மார்க்சினால் திருத்தப்பட்ட கடைசி ஜெர்மன் மொழி பதிப்பு ஆகும். 2017 ஆம் ஆண்டில் வெளியான ஜெர்மன் பதிப்பு (தாமஸ் குசின்ஸ்கி பதிப்பித்தது) ஒரு மாற்றுப் பதிப்பை முன்மொழிந்தது — அந்த நூல் மார்க்சின் சொந்த நோக்கங்களுக்கு அதிக உரிமை கோரியதன் வழியாக — பிரெஞ்சு மொழிபெயர்ப்புக்காகத் தயாரிக்கப்பட்ட, ஆனால் எங்கெல்ஸால் புறக்கணிக்கப்பட்ட, கூடுதல் மாற்றங்களை உள்ளடக்கியிருந்தது. மேலே குறிப்பிட்டுள்ளவற்றில், முதல் தேர்வு ஜெர்மன் பதிப்பை விட நிச்சயமாக மேலானதாக இருக்கும் பிரெஞ்சு பதிப்பின் பகுதிகளைப் புறக்கணிக்கும் வரம்பைக் கொண்டுள்ளது, அதே நேரத்தில், இரண்டாவது முடிவு குழப்பமான மற்றும் படிப்பதற்குக் கடினமான நூலையே உருவாக்கியுள்ளது.
எனவே, ஒவ்வொரு பதிப்பிற்கும் மார்க்ஸ் மற்றும் எங்கெல்ஸ் செய்த மாறுபாடுகளைக் கொண்ட பின்னிணைப்பு மற்றும் இதுவரை ஜெர்மன் மற்றும் மற்ற சில மொழிகளில் மட்டுமே வெளியிடப்பட்ட மார்க்சின் முக்கியமான ஆயத்த கையெழுத்துப் பிரதிகளையும் கொண்ட பதிப்புகளே சிறந்தவை ஆகும். எவ்வாறாயினும், மூலதனம் நூலின் முதல் தொகுதிக்கு இறுதிப் பதிப்பு என்று எதுவும் இல்லை. மார்க்ஸ் மற்றும் எங்கெல்ஸ் செய்த திருத்தங்களின் முறையான ஒப்பீடு இன்னும் அவர்களின் மிகக் கவனமான மாணவர்களின் ஆராய்ச்சியைப் பொறுத்தே உள்ளது.
அவ்வப்போது மார்க்ஸ் பழமைவாதியாக சித்தரிக்கப்பட்டுள்ளார். அவருடைய அரசியல் சிந்தனையின் எதிர்ப்பாளர்கள், அவரை தோற்கடிக்கப்பட்ட ஒருவராக அறிவிக்க விரும்புகின்றனர். ஆனால் உண்மையில், அவர் மீண்டும் ஒருமுறை, புதிய தலைமுறை வாசகர்கள், ஆர்வலர்கள் மற்றும் அறிஞர்களால் கையில் எடுக்கப்பட்டுள்ளார். முதலாளித்துவத்தைப் பற்றிய அவரது விமர்சனம் மீண்டும் வாசிக்கப்படுவது, தற்போதைய இருண்ட காலத்தில் இருந்து நல்லதொரு எதிர்காலத்திற்கான மாற்றத்திற்கு ஒரு சிறிய, நல்ல, அறிகுறியேயாகும்.
(ஜாகோபின் இதழில் எழுதியது)
தமிழில்: இரா. சிந்தன்
You may also like
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
