மார்க்சிய ஆய்வு தடத்தில் இந்திய, தமிழக தத்துவங்கள்
என். குணசேகரன்
இந்திய, தமிழக தத்துவ சிந்தனை, ஆன்மீகம், இறையியல், மற்றும் கடவுள் சார்ந்ததாக மட்டும் சித்தரிக்கப்பட்டு வருகிறது. மறைந்த குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் “இந்திய தத்துவம் எனப்படுவது, சாரம்சத்தில் ஆன்மீக தத்துவமே” என்று இந்திய தத்துவத்தைப் பற்றிக் கூறியிருந்தார்.
அதனைப் பின்பற்றி, தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் பல்வேறு பிரதேசங்களில் பரிணமித்த பன்முக தத்துவ சிந்தனைகள் முழுவதையும் ஆன்மீக சிந்தனைகளாக சித்தரிக்கும் நடைமுறை நீடித்து வந்தது. ஆன்மீகம் சார்ந்த இலக்கியங்கள், மதக் கோட்பாடுகள் போன்றவையே தமிழக தத்துவ சிந்தனை என்ற வகையில் பேசப்பட்டு வந்துள்ளது.
இது முழு உண்மை அல்ல. மனித வாழ்க்கை மற்றும் இயற்கையின் இயக்கம் அனைத்தும் கடவுள் படைப்பு என்ற புள்ளியிலிருந்து ஆன்மீக சிந்தனைகள் துவங்குகின்றன. ஆனால், இதனை பல இந்திய, தமிழக தத்துவங்கள் ஏற்கவில்லை. கடவுள் மறுப்பு, நாத்திக கருத்துக்கள் தொன்மை இந்தியாவில் மக்களிடம் செல்வாக்கு செலுத்தி வந்துள்ளன.
ஐம்புலன்களாலும், ஆழ்ந்த பகுத்தறிவு செயல்பாட்டினாலும், மனித வாழ்க்கையையும், இயற்கையையும் அறியும் முயற்சிகள் தொன்மைக் காலத்திலிருந்தே தமிழகத்தில் நடந்து வந்துள்ளன. அனைத்தும் கடவுளின் படைப்பு என்கிற கண்ணோட்டமும், அனைத்தும் பொருளின் இயக்கம் என்கிற கண்ணோட்டமும், தமிழக தத்துவங்களிலும் இருந்து வந்துள்ளன. அதாவது, கருத்து முதல் வாதமும் பொருள் முதல் வாதமும் தமிழக தத்துவ களத்தில் போராடி வந்துள்ளன.
இந்திய, தமிழக தத்துவப் போராட்ட வரலாற்றை அறிவதற்கும், மேலும் மேலும் ஆராய்ந்து தெளிவு பெறுவதற்கும், மார்க்சிய தத்துவ ஆய்வு முறை பெரிதும் பலனளிக்கும். கடந்த கால தத்துவ சிந்தனைகளை மார்க்சிய வழியில் ஆராய்ந்து முடிவுகளுக்கு வருவது, சமூகத்தை பழமைவாத திசையில் கொண்டு செல்ல முயற்சிக்கும் சக்திகளை எதிர்கொள்ளவும், உழைக்கும் மக்களின் உன்னதமான எதிர்காலத்தை கட்டமைக்கவும் பயன்படும்.
மார்க்ஸ், ஏங்கெல்சின் வழிகாட்டுதல்
தொன்மைக் காலத்திலிருந்து இந்தியாவிலும், தமிழகத்திலும் தத்துவப் போராட்டம் நிகழ்ந்து வருகிறது. இதனை மார்க்சியத்தின் துணை கொண்டு ஆராய்கிறபோதுதான், தற்கால சவால்களை எதிர்கொள்வதற்கான வலுவான கருத்தியல் தளம் அமைகிறது,
கார்ல் மார்க்சுடன் இணைந்து மார்க்சியத்தை வளர்த்தெடுத்த ஃபிரெட்ரிக் ஏங்கெல்ஸ், தத்துவத்தில் பொருள்முதல்வாதத்திற்கும் கருத்துமுதல் வாதத்திற்கும் நடைபெறும் போராட்டம்தான் அடிப்படையான பிரச்சனை என விளக்கியுள்ளார். ”ஜெர்மனிய தத்துவம்” “இயற்கையின் இயக்கவியல்” “டூரிங்கிற்கு மறுப்பு” போன்ற பல நூல்களில் மார்க்சிய மூலவர்கள் தங்களது தத்துவ ஆய்வு முறையை விளக்கியுள்ளனர். அவர்களின் இயக்கவியல் பொருள்முதல்வாதம் மற்றும் வரலாற்றுப் பொருள்முதல்வாதம், பல துறைகளுக்கும் பொருந்தக் கூடிய ஒரு விரிவான, நவீன, அறிவியல் ரீதியான ஆய்வு முறையாக திகழ்கிறது.
தத்துவத்தில் எழுகிற முரண்பாடுகளின் ஊற்று எது? சமூக, பொருளாதார இயக்கத்தின் வெளிப்பாடாகவே தத்துவக் களத்தில் சர்ச்சைகளும், முரண்பாடுகளும், மோதல்களும் நடந்து வருவதாக ஏங்கெல்ஸ் விளக்கினார். இதில் பொருள் முதல்வாதம் அறிவியல் ரீதியான, முற்போக்கான, உலக கண்ணோட்டம் என்பதும், கருத்துமுதல்வாதம் பிற்போக்கான, பழமைவாத சித்தாந்தங்களோடு இணைந்து வளர்கிற கண்ணோட்டம் எனவும் ஏங்கெல்ஸ் விளக்குகிறார்.
எது அடிப்படையான உண்மை? பொருட்களால் ஆன உலகமும், பொருட்கள் ஒன்றோடொன்று வினையாற்றும் நிலையும்தான் உண்மை என்பது பொருள்முதல்வாதம். உணர்வு, கருத்துக்கள், சிந்தனைகள் அனைத்தும் எதார்த்த உலகின் பிரதிபலிப்பாக உருவாகின்றன என பொருள் முதல்வாதம் கருதுகிறது,
இதனால்தான் பொருள் முதல்வாதம் எதார்த்த உலகினை கூர்மையாக அணுகி, அறிவியல் ரீதியில் உண்மைகளை அறியும் கண்ணோட்டமாக திகழ்கிறது என ஏங்கெல்ஸ் கூறினார். உலகைப் புரிந்து கொள்வதற்கான கருவியாக மட்டுமல்லாது, இந்த உலகை மாற்றுவதற்கான கருவியாகவும் இயக்கவியல் பொருள் முதல்வாதம் பயன்படுகிறது.
இதற்கு மாறாக, கருத்துக்கள், உணர்வுகள், ஆன்மீக சக்திகள் போன்றவற்றை அடிப்படையான உண்மையாக கருத்துமுதல்வாதம் கருதுகிறது. இந்த கருத்துக்களின் வெளிப்பாடாகவே எதார்த்த உலகு இருக்கிறது என கருத்துமுதல்வாதம் வாதிடுகிறது.
தற்போதுள்ள சமூக ஏற்றத்தாழ்வுகளை மாற்றிடாமல், அப்படியே நீடிக்கச் செய்கிற கண்ணோட்டமாக, கருத்துமுதல்வாதம் உள்ளது என்று ஏங்கெல்ஸ் விமர்சிக்கிறார். எதார்த்த உலகை மறைத்து, ஆன்மீக, மத அடிப்படையிலான விளக்கங்களை அது அளிக்கிறது.
கார்ல் மார்க்ஸ் “அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு கருத்துரை” நூலில் மிகச் சிறப்பாக சமூக இயக்கத்தையும் சமூக சிந்தனை இயக்கத்தையும் விளக்குகிறார்.
“மனிதர்கள் தங்களுடைய வாழ்க்கைக்காக ஈடுபடும் சமூக உற்பத்தியில் திட்டவட்டமான உறவுகளில் தவிர்க்க முடியாத வகையில் ஈடுபடுகிறார்கள். இந்த உறவுகள் அவர்களுடைய கருத்துக்களிலிருந்து தனித்து நிற்பவை யாகும்”.
அதாவது, பொருளாதார உலகில், உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியில், ஒரு குறிப்பிட்ட கட்டத்தில், அதற்கு ஏற்றவாறு உற்பத்தி உறவுகள் அமைகின்றன. எடுத்துக்காட்டாக, நிலப்பிரபுத்துவ அமைப்பில் பெரு நில உடைமையாளர்களும், பண்ணையடிமைகளும் இருப்பது போன்று, முதலாளித்துவ சமூகத்தில் முதலாளிகள், தொழிலாளிகள் என்கிற உற்பத்தி உறவுகள் உருவாகின்றன.
“இந்த உற்பத்தி உறவுகளின் ஒட்டுமொத்தமே சமூகத்தின் பொருளாதார அமைப்பாக, அதன் உண்மையான அடித்தளமாக அமைகிறது. இதன் மீது சட்டம், அரசியல் என்ற மேற்கட்டுமானம் எழுப்பப்பட்டு, அதனோடு பொருந்தக்கூடிய சமூக உணர்வின் குறிப்பிட்ட வடிவங்களும் உருவாகின்றன. பொருளாதார வாழ்க்கையின் உற்பத்தி முறை, சமூக, அரசியல், அறிவுலக வாழ்க்கையின் பொதுவான போக்கை நிர்ணயிக்கிறது. மனிதர்களின் உணர்வு, அவர்களுடைய சமூக வாழ்க்கை நிலையை நிர்ணயிப்பதில்லை. அவர்களுடைய சமூக வாழ்க்கை நிலையே, அவர்களுடைய உணர்வை நிர்ணயிக்கிறது.” என்று மார்க்ஸ் விளககுகிறார்.
மேலும் விளக்கும்போது…”பொருளாதார அடித்தளத்தில் ஏற்படும் மாற்றங்கள் மாபெரும் மேற்கட்டுமானம் முழுவதையும் சீக்கிரமாகவோ அல்லது சற்று தூரமாகவோ மாற்றியமைக்கின்றன” என்று குறிப்பிடுகிறார்.
பொருளாதார, உற்பத்தி நிலைமைகள், சமூகத்தின் அடிப்படையாக உள்ளன. இந்த பொருளாதார அடிப்படை மீதுதான், குறிப்பிட்ட சமூகத்தின் தத்துவ சிந்தனைகள் மற்றும் பல்வேறு வகை சித்தாந்தங்கள் எழுகின்றன. இவை மேல்கட்டுமானம் எனப்படும். அடிப்படை, மேற்கட்டுமானத்திற்கு இடையே இயங்கியல் ரீதியான பிணைப்பு உள்ளது என்பது மார்க்ஸ் – ஏங்கல்சின் அணுகுமுறை.
கருத்துக்கள், மதங்கள், தத்துவங்கள் போன்றவை, சுதந்திரமாக உருவாவதில்லை. மாறாக, எதார்த்த நிலைமைகளின் பிரதிபலிப்பாக உருவாகின்றன. இந்திய, தமிழக தத்துவங்களின் தோற்றத்திற்கும், வளர்ச்சிக்கும், அவ்வப்போது நிலவிய பொருளாதார இயக்கம் அடிப்படையாக இருந்து வந்துள்ளது. இந்தக் கோணத்திலிருந்து, மேற்கத்திய தத்துவ வளர்ச்சியை ஏங்கெல்ஸ் விளக்குகிறார். இதே அணுகுமுறை இந்திய, தமிழக தத்துவ வளர்ச்சிக்கும் பொருந்தும்.
மார்க்சிய அணுகுமுறை இந்திய, தமிழக பொருள்முதல்வாதத்தை ஆய்வு செய்வதற்கான சிறந்த ஆய்வு முறையாகவும், வழிகாட்டுதலாகவும் அமைந்துள்ளது.
சார்வாகம் – தொன்மை தத்துவம்
இந்திய பொருள்முதல்வாதம் சார்வாகம், உலகாயதம் என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. தொன்மைத் தமிழகத்தில் பூதவாதம் என்றும் அழைக்கப்பட்டு வந்துள்ளது.
தொன்மையான இந்தப் பொருள்முதல்வாத சிந்தனையை ஆழமாக ஆய்வு செய்து, பல நூல்களை எழுதி, இந்திய தத்துவ ஆராய்ச்சிக்கு மகத்தான பங்களிப்பு செய்தவர் பேராசிரியர் தேவி பிரசாத் சட்டோபாத்யாயா. மற்ற தத்துவ ஆசிரியர்கள் இந்திய கருத்து முதல்வாத தத்துவ சிந்தனைகளை பாராட்டி எழுதி வந்த நிலையில், தேவி பிரசாத் மார்க்சிய ஆய்வு முறையைக் கையாண்டு, இந்திய தத்துவத்தை ஆராய்ந்தார் ;மறைக்கப்பட்ட பொருள் முதல் வாத சிந்தனை வளர்ச்சியை வெளிக்கொண்டு வந்தார்.
இந்தியாவின் தொன்மையான பொருள்முதல்வாத தத்துவமான சார்வாகம் தற்போது அதிகம் பேசப்படாத தத்துவ சிந்தனை மட்டுமல்ல; தொன்மைக் காலத்திலிருந்து மறைக்கப்பட்டும், அவதூறு செய்யப்பட்டும் வந்துள்ள தத்துவம். தற்போதும் கூட,சார்வாகர்களின் கருத்துக்கள் இந்திய தத்துவப் பாடங்களில் எதிர்மறையான விளக்கங்களோடுதான் விவரிக்கப்படுகிறது; தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வரும் தத்துவமாகவும் அது உள்ளது.
உண்மையில், அன்றைய சமூகத்தில் சார்வாகர்கள் பகுத்தறிவுவாதி களாகவும் சமூக விமர்சகர்களாகவும் செயல்பட்டு வந்துள்ளனர் என்பதை தேவி பிரசாத் சட்டோபாத்யாயாவின் ஆராய்ச்சிகள் எடுத்துரைக்கின்றன.
பொருள்முதல்வாதமும், கடவுள் மறுப்பு நாத்திகமும் இந்திய சிந்தனையில் இயங்கி வந்தன. இதனை தேவி பிரசாத் சட்டோபாத்யாயா இவ்வாறு குறிப்பிடுகிறார்: “இந்திய வரலாற்றில் பொருள்முதல்வாத தத்துவமும் கூட மிகத் தொன்மையான காலத்திலிருந்து வழக்கில் இருந்து வந்துள்ளதை அறிய முடியும்; உபநிடதம் எவ்வாறு பழைமையானதோ, அதற்குக் குறையாமல் தொன்மையானத் தத்துவம், பொருள்முதல்வாதம்; சுமார் கி.மு. 6 அல்லது 7 நூற்றாண்டு பழமையானது என அதன் காலத்தைக் கணிக்க முடியும் “
எனவே, ஆன்மிக, கருத்துமுதல்வாத பாரம்பரியம் மட்டுமே இந்திய, தமிழக தத்துவப் பாரம்பரியம் என்று கூறுவது ஒரு வரலாற்றுப் புரட்டு.
சார்வாக தத்துவம் வேதங்களின் அதிகாரத்தை எதிர்க்கிறது. ஆன்மா, மேல் உலகம், மறுபிறப்பு போன்றவற்றை வெறும் மூட நம்பிக்கைகள் என விமர்சித்து, அவை அனைத்தையும் எதிர்த்து வந்துள்ளது. அறிவு பெறுவதற்கான ஆதாரம் புலன்களால் கிடைக்கும் அனுபவம்தான் என்று சார்வாகர்கள் எடுத்துரைத்தனர்.
அன்றைய சாதிய கட்டமைப்பில் பெரும்பான்மை உழைக்கும் மக்களை அடிமைப்படுத்தி, ஆதிக்கம் செலுத்திய பிராமண மேலாதிக்கத்தையும், மதத்தின் பெயரால் மக்களை கொடுமைப்படுத்திய செயல்களையும் கடுமையான விமர்சனத்திற்கு உட்படுத்தியவர்கள் சார்வாகர்கள் .
இயற்கை பொருட்களால் ஆனது என்ற பூதவாதம் தமிழகத்தில் வளர்த்தெடுக்கப்பட்டது. தொன்மை தமிழகத்தில் வளர்ந்திருந்த வணிகம், உற்பத்தி உள்ளிட்ட பொருளாதார செயல்பாடுகளின் தாக்கம் காரணமாக, தத்துவ சிந்தனையில் பகுத்தறிவு, பொருள் முதல்வாத, நாத்திக சிந்தனைகள் உருவெடுத்தன.
ஆனால், பொருளாதார உற்பத்தியின் பலன்கள் அன்று ஆதிக்கம் செலுத்திய வர்க்கங்களின் உடைமையாக இருந்தன. மேலாதிக்கம் செலுத்திய வர்க்கங்களின் சிந்தனையாக, கருத்துமுதல்வாத, ஆத்திக கருத்துக்கள் இருந்தன. அன்றைய அரசு நிர்வாக அமைப்புக்கள், ஆதிக்க வர்க்கங்களின் அதிகாரத்திற்கு கட்டுப்பட்டு இருந்ததால் கருத்துமுதல்வாதம் சமூக சிந்தனையில் ஆதிக்கம் செலுத்தியது.
தமிழக தத்துவத்தில் மார்க்சிய ஆய்வு நெறி
தேவி பிரசாத் சட்டோபாத்யாயாவின் ஆய்வு நெறியில், தமிழக தத்துவத்தில் பொருள்முதல்வாதம் குறித்த ஆய்வுகள் நிகழ்ந்துள்ளன. பழந்தமிழர் இலக்கியங்களில் பரவலாக பதியப்பட்டுள்ள பொருள்முதல்வாத கருத்துக்களைப் பற்றி, மார்க்சிய சிந்தனையாளர் நா.வானமாமலை ஆய்வு செய்துள்ளார். மணிமேகலை, நீலகேசி போன்ற பௌத்த, சமண சமய நூல்களில் பொருள்முதல்வாத கருத்துக்களை எதிர்த்து பல கருத்துக்கள் சொல்லப்படுகின்றன. பௌத்த, சமண நிலைப்பாடுகளை உயர்த்திப் பேசுவதற்கு பொருள்முதல்வாதத்தை விமர்சித்த கருத்துக்கள் இந்த நூல்களில் முன்வைக்கப்படுகின்றன. பேராசிரியர் நா.வா., அவற்றை ஆராய்ந்து தொகுத்துள்ளார். அதன் மூலம் பொருள்முதல்வாதக் கருத்துக்களின் தாக்கமும் செல்வாக்கும் பண்டைத் தமிழர்களிடையே இருந்துள்ளன என்பதைப் பதிவு செய்துள்ளார்.
இந்த ஆராய்ச்சியை வளர்த்தெடுக்கும் பணியை மார்க்சிய அறிஞர் தேவ பேரின்பன் உள்ளிட்டோர் மேற்கொண்டனர். எனினும் அந்த முயற்சிகள் முன்கொண்டு செல்லப்படவில்லை. இந்த ஆராய்ச்சி மேலும் வளர ஆக்கமும் ஊக்கமும் அளிப்பது தமிழக நலனுக்கு உகந்தது.
தமிழகத்தில் இனக்குழு வாழ்க்கையின் போது, இயற்கையின் இயக்கத்தை அறிவதற்கான அனுபவரீதியான சிந்தனைகள் உருவாகி, அவை தத்துவ சிந்தனைக் கீற்றுகளாக வடிவம் பெற்றுள்ளன. பொருள் முதல்வாத சிந்தனையின் துவக்கமான முன்னிலை பொருள் முதல்வாதம் எழுந்தது.
முந்தைய சங்கப் பாடல்களில் வறுமை, பசி, நோய் போன்ற மனித துன்பங்களுக்கு தீர்வுகள் பேசப்படுகின்றன. அறநெறி, ஆட்சி முறை, மானுட சமத்துவம் போன்ற தளங்களில்தான் துன்ப துயரங்களுக்கான தீர்வுகள் முன்வைக்கப்படுகின்றன. இவற்றில் பொருள் முதல்வாதப் பார்வையே முக்கிய பங்கு வைக்கிறது.
இந்த வகை சிந்தனையோடு இணைந்ததாக துவக்ககால கடவுள் நம்பிக்கையும் வளர்ந்தது. இயற்கையின் இயக்கத்தை முழுவதும் புரிந்து கொள்ள இயலாத சூழலில் இனக்குழு வாழ்க்கையில் நம்பிக்கை சார்ந்த வழிபாட்டு நடைமுறைகள், தாய்த் தெய்வ நம்பிக்கை, நடுகல் வழிபாடு எனும் ஆவி வழிபாட்டு நம்பிக்கைகள் ,இயற்கைச் சீற்றங்கள் பற்றிய அச்சத்தால் எழுகிற புனைவுகள் போன்றவையும் வளர்ந்தன.
உற்பத்தி முறையில் வளர்ச்சி ஏற்படுகிறபோது படிப்படியாக இனக்குழு வாழ்க்கை அழிந்து, வர்க்க சமுதாயம் வளர்ச்சி பெறுகிறது. உற்பத்தியில் ஏற்படும் உபரியை அபகரித்து வளரும் வர்க்கங்களும், அந்த வர்க்கங்களால் அடிமைப்படுத்தப்பட்ட மக்களும் என்கிற வர்க்கப் பிரிவினை உருவாகிறது. இந்த வர்க்க சமுதாயத்தின் தேவைகளுக்கு ஏற்ப தத்துவ சிந்தனைகளும் உருவாகின்றன. மதக் கோட்பாடுகள், கடவுள் வழிபாடு சார்ந்த பல, சடங்கு நடைமுறைகள் மேலும் மேலும் வளர்கின்றன.
பிற்காலத்தில், குறிப்பாக நிலப்பிரபுத்துவம் வளர்ந்த சூழலில் ,வடக்கே பரவியிருந்த வேத மதம், தமிழகத்தில் அரசர்கள், பிராமணர்கள் மற்றும் ஆளும் வர்க்கங்களின் துணையோடு தமிழகத்திலும் வளர்க்கப்பட்டது. வைதீகம் வேரூன்றிய நிலையில், சாதிய அடிமைத்தனமும் வேரூன்றியது. நிலவுடைமை உற்பத்தி முறையும்,நிலப்பிரபுத்துவ உறவுகளும் இந்த நிலைக்கு அடிப்படைக் காரணங்களாக அமைந்தன. அதாவது, வைதீக பிற்போக்கு சித்தாந்தங்கள் இங்கே தழைப்பதற்கு, இங்கிருந்த வர்க்க உறவுகள், வர்க்க முரண்பாடுகள் வாய்ப்பாக அமைந்தன.
விவசாய உற்பத்தியின் உபரியை ஆளுகிற வர்க்கங்கள் கையகப்படுத்தின. இதற்கு கோயில்கள் அதிகார மையமாக செயல்பட்டன. பக்தி இயக்க காலத்தில், உயர் சாதி பிராமண கருத்தியல் வலுப்பெற்று, சாதி ஒடுக்கு முறைகள் நிலைப்பெற்றன. இதே காலத்தில் ஒடுக்குமுறைகளை எதிர்த்த பொருள் முதல்வாத சிந்தனைகளை பரப்பிய சித்தர்களும் தத்துவப் பங்களிப்பு செய்துள்ளனர்.
தேவி பிரசாத் அவர்கள் இந்திய பொருள் முதல் வாதம் ஒடுக்குமுறைக்கு ஆளானதையும், பொருள் முதல்வாதிகளின் படைப்புகள் ஒன்று கூட இல்லாமல் அழிக்கப்பட்டன என்றும் எழுதியுள்ளார். அத்வைதம் பற்றிய விளக்க உரைகள், சமண, பௌத்த, நியாய வைசேஷிகம் நூல்களிலிருந்து பல ஆராய்ச்சியாளர்கள் பொருள்முதல்வாத சிந்தனைகளை கட்டமைக்க முயற்சித்துள்ளனர்.
இதேபோன்று தமிழக பொருள் முதல்வாதமும் வேட்டையாடப்பட்டு வந்துள்ளது என்பதை பல ஆதாரங்கள் வழியாக அறிய முடிகிறது. கருத்து முதல்வாத கருத்தியல் கொண்ட ஆளும் வர்க்கங்கள் உழைக்கும் வர்க்க சிந்தனையை ஒடுக்கியதில் வியப்பேதுமில்லை.
தமிழகத்தில் இனக்குழு வாழ்க்கையிலிருந்து வர்க்க சமுதாயத்திற்கு மாறுகிற காலகட்டத்தில் தத்துவ சிந்தனைகளும் வளர்ச்சி பெற்றன. நில உடைமை காலத்தில் கருத்து முதல்வாத சிந்தனை வலுவான ஆதிக்கம் பெற்றது. இவ்வாறு நிகழ்ந்த சமூக மாற்றங்கள், அவற்றை ஒட்டி தத்துவ சிந்தனைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் அனைத்தும் மேலும் மேலும் ஆய்வுக்குரியதாக அமைந்துள்ளன.
தொல்காப்பியம் எழுதப்பட்ட காலத்தில் வர்க்கப் பிரிவினைகள் நிலவினாலும், சாதிய கட்டமைப்பு அடிப்படையில், கடவுள் பெயரால் வர்ண பேதங்கள் ஆழமாக வேரூன்றவில்லை. அதனால்தான் தொல்காப்பியத்தில் பல கருத்துக்கள் பொருள் முதல்வாத வகை சார்ந்ததாக உள்ளன.
தொல்காப்பியம் ஐம்புலன்களின் வழியாக அறிதல் நிகழ்வு நடப்பதை பேசுகிறது. அறிவை பெறுவதற்கு கடவுளின் துணையை நாடாமல் ஐம்புலன்களை நாடுகிற தன்மையை பேசுவது பொருள்முதல்வாத பார்வையே.
தமிழகத்தில் வளர்ந்த தத்துவம் முன் வைத்த மூன்று கோட்பாடுகளான, அணுக் கோட்பாடு (பூதவாதம்), வினைக் கோட்பாடு, ஊழ் கோட்பாடு ஆகியன பொருள் முதல்வாத கோட்பாடுகளாக அமைந்துள்ளன. நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் உள்ளிட்ட பொருட்களின் இயக்கமே இந்த உலகு என்கிற பொருள் முதல்வாதத்தின் அடிப்படையான வாதம், தொல்காப்பியம் முதல் பல தமிழ் இலக்கியங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. சமண, பௌத்த, ஆசிவக தத்துவங்களும் இதே தன்மையில் அணுக் கொள்கையை முன் வைத்தன.
இன்றைய சூழலிலும் சமூகத்தில் நிலவும் வர்க்கப் பகைமை காரணமாக கருத்துமுதல்வாதம் மேலாதிக்க நிலையிலும், அதனோடு போராடும் தத்துவமாக பொருள்முதல்வாத, அறிவியல் சிந்தனையும் இயங்கி வருகின்றன.
தமிழகத்தின் தொன்மையான சிந்தனைகள் சிறப்பானவை. அந்தக் காலகட்டத்தின் வர்க்க முரண்பாடுகள், வாழ்வாதாரத் தேவைகளுக்கான பொருளியல் முறைகள் மற்றும் உற்பத்தி கருவிகளின் வளர்ச்சி ஆகியவற்றின் வெளிப்பாடாகத்தான் தமிழக சிந்தனையும் இயங்கியது. இந்த வளர்ச்சியை ஒருங்கிணைத்து ஆராய வேண்டும்.
இந்த இடத்தில் தமிழ் மொழியின் சிறப்பான வளர்ச்சி பற்றி சிந்திப்பது அவசியம். மொழி வளர்ச்சி என்பது சூன்யத்தில் நடைபெறுவதில்லை. மனிதர்களின் கூட்டு உழைப்பினால் வளர்ந்த மொழி, சமூக – பொருளாதார வளர்ச்சியின் ஊடாக பெரு வளர்ச்சி பெறுகிறது. இதில் தத்துவ சிந்தனைகளின் வளர்ச்சியும் தத்துவத்தின் இரு பிரிவுகளுக்கு இடையே நடந்த போராட்டமும் மொழி வளம் பெருக வழி வகுக்கிறது. தமிழக தத்துவ விவாதங்கள் தமிழ் மொழிக்கு வளமை சேர்த்தன. பொருளாதாரத் தளத்தில் நடந்த வர்க்க போராட்டமும், தத்துவ தளத்தில் நடந்த போராட்டமும் தமிழ் மொழிக்கு செம்மை சேர்த்தன.
இதர மக்கள் பிரிவுகளின் சிந்தனைகளை விட, தமிழர் தத்துவம் மிகவும் உயர்ந்தது என்ற அதீதமான புரிதல் பொருத்தமானது அல்ல. இது தமிழக சிந்தனைகளில் உள்ள பிற்போக்கு, பழமை வாதங்களை விமர்சனமற்ற முறையில் அணுகும் தவறுகளுக்கு இட்டுச் செல்லும். அத்தகைய பெருமிதம் சார்ந்த அணுகுமுறை, அன்றைக்கு பரவியிருந்த பொருள் முதல்வாத, அறிவியல் சிந்தனை ஓட்டத்தை இன்றைய காலகட்டத்தில் வளர்த்தெடுத்து செயல்பட வேண்டிய தேவையை புறக்கணிப்பதாக அமைந்திடும்.
தமிழகத்தில், பாட்டாளி வர்க்கங்கள் சுரண்டலிலிருந்து விடுதலை என்கிற இலக்கை நோக்கி பயணப்பட வேண்டுமென்றால், தமிழகத்தின் தொன்மையான பொருள்முதல்வாத பாரம்பரியத்தை புதிய சூழலுக்கு ஏற்றவாறு மார்க்சிய வழியில் முன்னெடுக்க வேண்டும்.
தொன்மைக் காலத்திலிருந்து பொருள் முதல்வாதம், அறிவியல் சிந்தனை ஆகியனவற்றை ஆளும் வர்க்கங்கள் தொடர்ந்து அழித்தொழிக்க முயற்சித்தாலும், இன்று வரை இந்த சிந்தனைகள் தொடர்கின்றன. ஏனெனில், சுரண்டலில் இருந்தும், அடிமைத்தனத்திலிருந்தும், விடுதலை காண வேண்டும் என்ற மானுடத்தின் போராட்டம் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்தப் போராட்டத்தின் வெற்றியோடு இணைந்ததாக பொருள் முதல்வாத தத்துவத்தின் முன்னேற்றமும் அமைந்திடும்.
விடுதலைக்கான அந்த போராட்டப் பயணம் ஒரு புதிய சோசலிச சமூகத்தைப் படைப்பதில் வெற்றி பெறும். இயக்கவியல் பொருள் முதல் வாதம் மக்களின் மேலான வாழ்வியலாக மலர்ந்திடும்.
ஆதார நூல்கள்:
“உலோகாயதம்” – தேவி பிரசாத் சட்டோபாத்யா
“இந்திய நாத்திகம்” – தேவி பிரசாத் சட்டோபாத்யா
தமிழர் பண்பாடும், தத்துவமும் – பேராசிரியர் நா.வானமாமலை கட்டுரை தொகுப்பு; என்.சி பி ஹெச் நிறுவன வெளியீடு;1978
“பழந்தமிழ் இலக்கியத்தில் பொருள் முதல்வாத கருத்துக்கள்”-பேராசிரியர் நா.வானமாமலை, ஆங்கில ஆராய்ச்சி கட்டுரை, சோசியல் சயின்டிஸ்ட் இதழ்,1973
“தமிழர் வளர்த்த தத்துவங்கள்” – தேவ. பேரின்பன்
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
