
மோடி தலைமையிலான ஆர்.எஸ்.எஸ். – பாஜக ஆட்சி: வெஞ்சினம் மிக்கதொரு நவ பாசிஸம்
அசோக் தவாலே
90 ஆண்டுகளுக்கு முன்பு, மகத்தான பாசிஸ எதிர்ப்பாளரும், கம்யூனிஸ்ட் போராளியுமான கியோர்கி டிமிட்ரோவ், 1935 ஆகஸ்ட் 2ஆம் நாளன்று கம்யூனிஸ்ட் அகிலத்தின் ஏழாவது காங்கிரஸில், அதன் பொதுச்செயலாளர் என்ற வகையில் வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க அறிக்கையில், பாசிஸம் குறித்து இவ்வாறு மிகத் துல்லியமாகப் பகுப்பாய்வு செய்திருந்தார்:
“பாசிஸம் எத்தனை வகையான முகமூடிகளைப் போட்டுக் கொண்டாலும் சரி, அது தன்னை எத்தகைய வடிவங்களில் காட்டிக் கொண்டாலும் சரி, அது அதிகாரத்திற்கு வரும் வழிகள் எத்தகையதாக இருந்தாலும் சரி, பாசிஸம் என்பது திரளான உழைக்கும் மக்கள் மீது மூலதனம் தொடுக்கும் மிகக் கொடூரமான தாக்குதலாகும்; பாசிஸம் என்பது கட்டுப்படுத்தும் கடிவாளம் ஏதுமற்ற பேரினவாதம்; நாடுகளை போர்களின் மூலம் இணைத்து விழுங்குவதற்கான ஓர் அமைப்பு; பாசிஸம் என்பது வெறித்தனமான பிற்போக்குத்தனம்; அதேநேரத்தில், அது ஓர் எதிர்ப்புரட்சி சக்தியாகவும் உள்ளது; பாசிஸம் என்பது தொழிலாளி வர்க்கத்திற்கும், அனைத்து உழைக்கும் மக்களுக்கும் மிகவும் கொடூரமான ஓர் எதிரி!” (அழுத்தம், மூலத்தில் உள்ளபடியே தரப்பட்டுள்ளது)
கியோர்கி டிமிட்ரோவின் தேர்ந்தெடுக்கப்பட்ட சில உரைகளும் எழுத்துக்களும், இன்றளவும் பெரிதும் மதிப்புக்குரியவை. ஆகார் புக்ஸ் நிறுவனம் 2021ஆம் ஆண்டில் வெளியிட்டுள்ள ‘பாசிஸம் மற்றும் போருக்கு எதிராக’ என்ற அவரது நூலில் இவற்றை நாம் காணலாம். இன்று நாம் பொதுவாகக் குறிப்பிடுகின்ற, அடால்ஃப் ஹிட்லரின் கீழ் அமைந்த ஜெர்மன் வகைப்பட்ட பாசிஸம், பெனிடோ முசோலினியின் கீழ் அமைந்த இத்தாலிய வகைப்பட்ட பாசிஸம் ஆகியவற்றை டிமிட்ரோவ் மிகச் சிறப்பாக பகுப்பாய்வு செய்திருந்தார்.
கடந்த 90 ஆண்டுகளில், தவிர்க்க முடியாத வகையில் உலகம் மாறியிருப்பதைப் போலவே, பாசிஸத்தின் வெளிப்பாடுகளும், இயல்பாகவே, காலத்திற்குக் காலமும், நாட்டுக்கு நாடும் மாறியுள்ளன. இன்று இந்தியாவிலுள்ள நிலைமை குறித்து விவரிக்கையில், 2025 ஏப்ரலில் மதுரையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது காங்கிரஸின் அரசியல் தீர்மானத்தின் முதல் பத்தி (0.1) கீழ்கண்ட வார்த்தைகளுடன்தான் தொடங்குகிறது:
“23வது காங்கிரஸிற்குப் பிந்தைய காலப்பகுதியானது மோடி அரசால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட இந்துத்துவ- கார்ப்பரேட் ஆட்சியின் சக்திகளுக்கும், அதை எதிர்த்த மதசார்பற்ற – ஜனநாயக சக்திகளுக்கும் இடையே வளர்ந்து வரும் மோதலைக் குறிப்பதாக அமைகிறது. பிற்போக்குத்தனமானதொரு இந்துத்துவ நிகழ்ச்சிநிரலைத் திணிப்பதற்கான அழுத்தமும், எதிர்க்கட்சிகளையும் ஜனநாயகத்தையும் ஒடுக்குவதற்கான எதேச்சாதிகார உந்துதலும், நவ பாசிஸ குணாம்சங்களை எடுத்துக் காட்டுகின்றன.”
25 ஆண்டுகளுக்கு முன்பு, 2000ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கட்சித் திட்டம் இந்த அபாயத்தை சுட்டிக் காட்டியிருந்தது:
“வகுப்புவாதம் மற்றும் பாசிஸத் தன்மை கொண்ட ஆர்.எஸ்.எஸ். தலைமையிலான கூட்டணியின் எழுச்சியும், மத்தியில் அதன் அதிகாரக் கைப்பற்றலும் மதசார்பற்ற அடித்தளங்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. அரசு நிறுவனங்கள், நிர்வாகம், கல்வி முறை, ஊடகங்கள் ஆகியவற்றை வகுப்புவாத மயமாக்க திட்டமிட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பெரும்பான்மை வகுப்புவாதத்தின் வளர்ச்சியானது சிறுபான்மை வகுப்புவாத சக்திகளை வலுப்படுத்துவதோடு, நாட்டின் ஒற்றுமைக்கும் ஆபத்தை விளைவிப்பதாகும். பாஜக மற்றும் அதன் வகுப்புவாத மேடைக்கு பெரு முதலாளித்துவ பிரிவுகளின் ஆதரவு என்பது நாட்டில் ஜனநாயகம், மதசார்பின்மை ஆகியவற்றுக்கு மோசமான விளைவுகளை உருவாக்கும்.” (பாரா 5.7) “மத ரீதியான வகுப்புவாதத்தை அடிப்படையாகக் கொண்ட பாசிஸப் போக்குகள் வலுப்பெறும் அபாயத்தை அனைத்து மட்டங்களிலும் உறுதியாக எதிர்த்துப் போராட வேண்டும்.” (பாரா 5.8)
“பாரதீய ஜனதா கட்சி, பிளவுவாத, வகுப்புவாத அடித்தளத்தைக் கொண்ட பிற்போக்குத்தனமான ஒரு கட்சியாகும். இதன் பிற்போக்குத்தனமான உள்ளடக்கம், இதர மதங்களுக்கு எதிரான வெறுப்புணர்வு, சகிப்புத்தன்மையின்மை, தீவிர தேசியவாத பேரினவாதத்தை அடிப்படையாகக் கொண்டது. பாசிஸத் தன்மை கொண்ட ராஷ்ட்ரீய சுயம்சேவக் சங், அதை வழிநடத்தி, மேலாதிக்கம் செலுத்திவரும் நிலையில், பாஜக சாதாரணமானதொரு முதலாளித்துவக் கட்சி அல்ல.” (பாரா 7.14)
மோடி ஆட்சியில் நவ பாசிஸத்தின் வெளிப்பாடுகள்
திட்டமிட்ட கும்பல் கொலைகள்: மோடி ஆட்சியில்தான் 2014ஆம் ஆண்டு முதல் சிறுபான்மையினர் மீதான திட்டமிட்ட, வெளிப்படையான, கும்பல் படுகொலைகள் என்ற மிகவும் கொடூரமான இயக்கம் தொடங்கியது. அது இன்னும் தடையின்றித் தொடர்கிறது. 2014ஆம் ஆண்டுக்கு முன்பு, இது போன்ற நிகழ்வுகள் குறைவு. மோடியின் இந்துத்துவா அடிப்படையிலான ஆட்சி, மனித இயல்பின் மிக மோசமான அம்சங்களை வெளிக்கொண்டு வந்துள்ளது என்பதையே, இந்தக் கும்பல் கொலைகளுக்கான இயக்கம் எடுத்துக் காட்டுகிறது. 2014ஆம் ஆண்டு முதல் நாட்டில் பரவியுள்ள முற்றிலும் வகுப்புவாதத் தன்மை கொண்ட சூழ்நிலையும் அதை சாத்தியமாக்கியுள்ளது. இறைச்சிக்காக பசுவை வெட்டுவது, மாட்டிறைச்சியை ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு எடுத்துச் செல்வது, கால்நடைகள் மற்றும் ஆடு திருட்டு, லவ் ஜிஹாத் போன்ற பலவும் இத்தகைய கும்பல் கொலைகளுக்கான முக்கிய ‘காரணங்கள்’ ஆகும். ஏறக்குறைய எப்போதுமே, இந்த நிகழ்வுகளுக்காகக் கூறப்பட்ட காரணங்கள் தவறானவை என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளன.
2,000க்கும் மேற்பட்ட முஸ்லீம்களை படுகொலை செய்து, நூற்றுக்கணக்கான முஸ்லீம் பெண்களை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கி, நூற்றுக்கணக்கான பச்சிளம் குழந்தைகளை உயிரோடு எரித்த 2002ஆம் ஆண்டின் மிகக்கொடூரமான குஜராத் வகுப்புவாத படுகொலை வெறியாட்டத்தில், அன்றைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் முக்கிய பங்கினை நாம் கருத்தில் கொள்வோமெனில், இத்தகைய வகுப்புவாத வன்முறை நமக்கு வியப்பை அளிக்காது. நாட்டின் பிரிவினைக்குப் பிறகு, இந்தியாவில் நிகழ்ந்த, மிக மோசமான ஒரே வகுப்புவாத வெறியாட்டம் இது என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
வகுப்புவாதக் கலவரங்களும், இன அழிப்பிற்கான அறைகூவல்களும்: 2017க்கும் 2022க்கும் இடைப்பட்ட காலத்தில், இந்தியாவில் 2,900 வகுப்புவாத சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன என்று மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த ராய் டிசம்பர் 7, 2022 அன்று மாநிலங்களவையில் தெரிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இவற்றில் டெல்லியில் நடைபெற்ற கலவரமும் ஒன்று. மோடி ஆட்சியின் முதல் மூன்று ஆண்டுகளில், 2014 முதல் 2016 வரை, 2,885 வகுப்புவாத வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்ததாக குற்றங்கள் குறித்த பதிவுகளுக்கான தேசிய கழகத்தின் பதிவுகள் எடுத்துக் காட்டுகின்றன. ராம நவமி, அனுமன் ஜெயந்தி தொடர்பான ஊர்வலங்கள், சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்த சங் பரிவாரத்தால் திட்டமிட்டு பயன்படுத்தப்படுகின்றன.
புல்டோசர் மூலம் வழங்கப்படும் நீதி: பாஜக ஆளும் மாநிலங்களில், குறிப்பாக, உத்திரப் பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் இதர மாநிலங்களில், குற்றம் சாட்டப்பட்ட முஸ்லீம்களின் வீடுகளை, புல்டோசர் கொண்டு இடிப்பதென்பது வழக்கமானதொரு நிகழ்வாகி விட்டது. யோகி ஆதித்யநாத்-இன் கீழ் இயங்கும் உத்திரப் பிரதேச மாநிலம் ‘புல்டோசர் ராஜ்யத்தின்’ மையம் என்பதாக இழிபுகழ் பெற்றுள்ளது. டெல்லியில் உள்ள ஜஹாங்கீர்புரி, ஹரியானாவின் நுஹ் ஆகிய இடங்களில் பல கட்டிடங்கள் இடித்துத் தள்ளப்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கான அப்பாவி முஸ்லீம் குடும்பங்கள் இவ்வாறு வீடுகள் இடிக்கப்பட்டதன் விளைவாக, தங்களிடம் இருந்த அனைத்தையும் இழந்து நிற்கின்றன. இதற்கு எவ்வித இழப்பீடும் இல்லை.
சிறுபான்மையினர் மீதான பன்முகத் தாக்குதல்கள்
அதிர்ச்சியூட்டும் உதாரணம் என்னவெனில், மணிப்பூர் மாநிலத்தில் 2023 மே மாதத்தில் தொடங்கிய படுகொலை மற்றும் பாலியல் வன்கொடுமை வெறியாட்டம் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகும் தொடர்வதாகும். மணிப்பூரில் மெய்த்தி இனத்தவர் பழங்குடியினரல்லாத இந்துப் பெரும்பான்மையினராகவும், குக்கி பழங்குடி இனத்தவரான கிறித்துவர்கள் சிறுபான்மையினராகவும் உள்ளனர். எனவே, இந்த மோதலுக்கு பாஜக வகுப்புவாத சாயம் பூச முயன்றுள்ளது. மாநிலத்திலும் மத்தியிலும் ஆளும் பாஜக அரசுகளின் குற்றச் செயல்கள், மணிப்பூர் குறித்து பிரதமர் நரேந்திர மோடியின் காதைக் கிழிக்கும்படியான மவுனம் ஆகியவை அங்கு நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளன.
கர்நாடகா மாநிலத்தில் ஹிஜாப் பிரச்சனை, உத்திரப் பிரதேசத்தில் ஹலால் பிரச்சனை ஆகியவை ஆர்.எஸ்.எஸ். – பாஜகவால் எழுப்பப்பட்டன. இவை முறையே மாநில சட்டமன்றம் மற்றும் மக்களவை தேர்தல்களுக்கு முன்பாக, இந்த இரு மாநிலங்களிலும் சிறுபான்மையினரை குறிவைக்கப் பயன்படுத்தப்பட்டன.
இத்தகைய வகுப்புவாத தாக்குதல்கள் முஸ்லீம்களுக்கு மட்டுமேயானதல்ல. அவை கிறித்துவர்கள் மீதும் நீட்டிக்கப்படுகின்றன. ஐக்கிய கிறித்துவ அமைப்பு (United Christian Forum) தெரிவிக்கும் தரவுகளின்படி, 2023ஆம் ஆண்டில், கிறித்துவ தேவாலயங்கள், போதகர்கள் மீது 720 தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. 2022ஆம் ஆண்டில் இவ்வாறு 509 தாக்குதல்கள் நடைபெற்றன. இவை 2014ஆம் ஆண்டில் நடைபெற்ற இதுபோன்ற 147 சம்பவங்களை ஒப்பிட்ட தரவுகள் ஆகும்.
பியூ ஆய்வு மையம், அதன் ‘சமூக விரோத குறியீடு’களில், இந்தியாவை பாகிஸ்தானுடன் ‘மிக உயர்ந்த’ பிரிவில் வைத்துள்ளது. மேலும் தொடர்ந்து மோசமடைந்து வரும் போக்கையும் அது குறிப்பிட்டுள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டம் – தேசிய மக்கள் பதிவேடு – குடிமக்களுக்கான தேசிய பதிவேடு: மத அடையாளத்துடன் குடியுரிமையை இணைத்தல்: 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மோடி ஆட்சி இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற பிறகு, இந்துத்துவா கதையாடலை வலுப்படுத்த அது பல முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டது. ஆகஸ்ட் 1, 2019 அன்று முத்தலாக் சட்டம் நடைமுறைக்கு வந்தது. ஆகஸ்ட் 31 அன்று, அசாம் மாநிலத்தின் பாஜக அரசு தனது குடிமக்களுக்கான இறுதி செய்யப்பட்ட தேசிய பதிவேட்டை (என்.ஆர்.சி.) வெளியிட்டது. நவம்பர் 9 அன்று, உச்சநீதிமன்றம் தனது பாபர் மசூதி தீர்ப்பை அளித்தது. இந்தத் தீர்ப்பு, அயோத்தியில் மசூதி இருந்த இடத்தை ராமர் கோயில் கட்டுவதற்காக ஓர் அறக்கட்டளையிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டது. டிசம்பர் 11 அன்று குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) நிறைவேற்றப்பட்டது.
குடியுரிமையை மத அடையாளத்துடன் இணைப்பதன் மூலம், குடியுரிமை குறித்த மதசார்பற்ற கருத்தாக்கத்தை அப்பட்டமாக மீறும் ஒரு சட்டமே குடியுரிமை திருத்தச் சட்டமாகும். சட்டபூர்வமான ஆவணங்கள் ஏதுமின்றி, அண்டை நாடுகளிலிருந்து இந்தியாவில் குடியேறியவர்களுக்கு, அவர்கள் இந்து, சீக்கிய, பவுத்த, அல்லது கிறித்துவ மதங்களைச் சேர்ந்தவர்களாக இருப்பின், இந்தச் சட்டத்தின்கீழ் குடியுரிமை வழங்கப்படும். ஆனால் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு அல்ல. இந்தச் சட்டத்தின் கீழான விதிகள் 2024 மார்ச் மாதத்தில், அதாவது 2024 மக்களவை தேர்தலுக்குச் சற்று முன்பாக அறிவிக்கப்பட்டன.
குடியுரிமை திருத்தச் சட்டத்தோடு (சி.ஏ.ஏ.) கூடவே, தேசிய மக்கள்தொகை பதிவேட்டை (என்.பி.ஆர்.) புதுப்பிப்பதையும் மோடி அரசு நோக்கமாகக் கொண்டுள்ளதோடு, குடிமக்களின் தேசிய பதிவேட்டை (என்.ஆர். சி.) யும் உருவாக்குகிறது. இது, குடிமக்களின் பின்புலத்தை சரிபார்க்க, அரசு அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்குகிறது. அதிலும் கூட சிறுபான்மையினர் மீண்டும் குறிவைக்கப்படுவார்கள். பாஜக இந்த முயற்சியை முதலில் அசாமில் தொடங்கியது. அங்கு இந்த முயற்சி பேரழிவு மிக்க முடிவுகளைத் தந்தது. அம்மாநிலத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) பெருமளவிலான, வன்முறை நிரம்பிய போராட்டங்களை எதிர்கொண்டது.
அவமானத்திற்கு ஆளாகும் ஜம்மு-காஷ்மீர் மக்கள்: 2019 ஆகஸ்ட் 5 அன்று, ஜம்மு-காஷ்மீர் மாநிலம் தரமிறக்கப்பட்டு, இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. மேலும் ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் அமைப்புச் சட்டத்தின் 370வது மற்றும் 35ஏ பிரிவுகள் ரத்து செய்யப்பட்டன. இந்தியாவில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில்தான் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ளனர். இந்தக் காரணத்திற்காகவே, அது எப்போதுமே ஆர்.எஸ்.எஸ். – பாஜகவின் இலக்காக இருந்து வருகிறது. அதன்பிறகு, பல மாதங்களுக்கு ஜம்மு-காஷ்மீரில் கட்டவிழ்த்து விடப்பட்ட காட்டுமிராண்டித்தனமான ஒடுக்குமுறையும் அடக்குமுறையும் எப்போதுமே இந்திய ஜனநாயகத்தின் இருண்ட அத்தியாயங்களில் ஒன்றாக நீடிக்கும்.
அயோத்தியில் ராமர் கோயில் தொடக்க விழா
2019 நவம்பர் 9 அன்று உச்சநீதிமன்றம் வழங்கிய, பரவலாக விமர்சிக்கப்பட்ட, தீர்ப்பிற்குப் பிறகு, ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டதன் முதல் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், 2020 ஆகஸ்ட் 5 அன்று, பிரதமர் நரேந்திர மோடி அயோத்தியில் ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார். 2024 ஜனவரி 22 அன்று, ஆர்.எஸ். எஸ். தலைவர் மோகன் பகவத் மற்றும் பலர் முன்னிலையில், அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா நடைபெற்றது. நாட்டின் பிரதமர் தலைமை பூசாரியாக செயல்பட்ட அந்த அரசு ஆதரவிலான விழா, அரசும் மதமும் ஒன்றிணைவதை குறிப்பிடுவதாக அமைந்தது. ராமர் கோயில் திறப்பு விழாவிற்கான முக்கிய சிறப்பு அழைப்பாளர்களில் பெருந்தொழிலதிபர்களான கவுதம் அதானி, முகேஷ் அம்பானி, ரத்தன் டாடா மற்றும் பல பாலிவுட் நட்சத்திரங்கள், கிரிக்கெட் வீரர்கள், ஆன்மீகத் தலைவர்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், 2024 மக்களவை தேர்தலில், உத்திரப் பிரதேசத்தில் பாஜக சந்தித்த மிகப்பெரும் தேர்தல் பின்னடைவுகளை, அயோத்தி ராமர் கோயில் திறப்புவிழாவினால் தடுக்க முடியவில்லை. எனவேதான், வகுப்புவாத துருவ முனைப்பை மேலும் தீவிரப்படுத்த, இந்துத்துவ சக்திகள் இப்போது காசியில் உள்ள ஞானவாபி மசூதியையும், மதுரா நகரில் உள்ள இத்கா மசூதியையும் கோயில்களாக மாற்றுவதற்கு கூடுதல் கவனம் செலுத்தி வேலை செய்யத் தொடங்கியுள்ளன. இது அரசு நிர்வாகம் மற்றும் நீதித்துறையின் உடந்தையோடு, 1991ஆம் ஆண்டின் வழிபாட்டுத் தலங்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டத்தை மீறுவதன் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.
ஜாகியா ஜாஃப்ரி- மாலேகாவ்ன் குண்டுவெடிப்பு வழக்குகளில் நீதிமன்றத் தீர்ப்புகளின் கூர்மையான முரண்பாடு: உச்சநீதிமன்றத்தின் பாபர் மசூதி தீர்ப்பிற்கு முற்றிலும் மாறான வகையில், ஜாகியா ஜாஃப்ரி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வருந்தத்தக்க ஒன்றாக இருந்தது. (2002ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் வெடித்தெழுந்த வகுப்புவாதக் கலவரத்தில் வகுப்புவாதக் கும்பலால் கொடூரமாகக் கொல்லப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இஷான் ஜாஃப்ரியின் மனைவிதான் ஜாகியா). தேவையற்ற வகையிலும், எவராலும் கோரப்படாத நிலையிலும், உச்சநீதிமன்றம் வெளியிட்ட கருத்துக்களைத் தொடர்ந்து, போராளி பத்திரிக்கையாளரும் மனித உரிமை ஆர்வலருமான டீஸ்டா செதல்வாட், முன்னாள் (குஜராத் மாநில) காவல்துறை அதிகாரி ஆர். பி. ஸ்ரீகுமார் ஆகியோரை அரசாங்கம் உடனடியாகக் கைது செய்தது. மேலும், ஏற்கனவே சிறையில் அடைக்கப்பட்டுள்ள (குஜராத் மாநில) முன்னாள் காவல்துறை அதிகாரி சஞ்சீவ் பட் மீது மேலுமொரு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இத்தகைய நீதியின் அதிர்ச்சியூட்டும் மற்றொரு கேலிக்கூத்தாக, 2008ஆம் ஆண்டு நடைபெற்ற மாலேகாவ்ன் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பிரக்யா சிங் தாக்கூர், பிரசாத் புரோஹித் உள்ளிட்ட ஏழு பேரையும் நிரபராதிகள் என சிறப்பு என் ஐ ஏ நீதிமன்றம் சமீபத்தில் விடுவித்தது. மும்பை தீவிரவாதத் தாக்குதலின்போது உயிரிழந்த தியாகி ஹேமந்த் கர்காரே, இந்த குண்டுவெடிப்பு வழக்கில் மேற்கொண்ட கடுமையான புலனாய்வுப் பணிகள் அனைத்தும் இதன் மூலம் செல்லாக் காசாக மாற்றப்பட்டது.
இலக்குகள் ஆகும் தலித்களும் பழங்குடிகளும்
மோடி ஆட்சியின் கடந்த 11 ஆண்டுகளில், தலித்கள், பழங்குடிகள் மற்றும் பெண்கள் மீதான தாக்குதல்கள் கூர்மையாக அதிகரித்ததில், மநுஸ்மிருதியின் மீதான ஆர்.எஸ்.எஸ்.ஸின் அடிப்படையான விசுவாசம் வெளிப்பட்டது. 2013 முதல் 2022வரை, தலித்களுக்கு எதிரான குற்றங்கள் 46.11 சதவீதமும், பழங்குடிகளுக்கு எதிரான குற்றங்கள் 48.15 சதவீதமும் அதிகரித்துள்ளன என்பதை குற்றப் பதிவேட்டிற்கான தேசிய கழகத்தின் தரவுகள் காட்டுகின்றன. இந்தக் காலப்பகுதியில், தலித்கள் மீதான வன்கொடுமைகளின் அதிர்ச்சியூட்டும் பல நிகழ்வுகளை நாம் கண்டிருக்கிறோம். குறிப்பாக, குஜராத் மாநிலத்தின் உனாவில், நான்கு தலித் இளைஞர்கள் பொதுவெளியில் கசையடிக்கு ஆளாயினர். அதைப் போன்றே, ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த ரோஹித் வெமூலாவின் சோகமான, நிறுவன ரீதியான படுகொலையைக் கூறலாம்.
மிக மோசமாக பாதிக்கப்பட்ட பெண்கள்
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான மிகக் கொடூரமான வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. நம் நாட்டில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 86க்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்குகளும், பெண்களுக்கு எதிரான 49 குற்றங்களும் நடைபெறுகின்றன. இச்சம்பவங்களில் பெரும்பாலானவை பாஜக ஆளும் உத்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான், பீகார் போன்ற மாநிலங்களில்தான் நடந்துள்ளன. உத்திரப் பிரதேசத்தின் ஹத்ராஸில் ஒரு தலித் பெண் கும்பலாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டது; அதே மாநிலத்தின் உன்னாவ் மற்றும் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் கத்துவாவில், திர்ணாமூல் ஆட்சி செய்யும் மேற்கு வங்கத்தில் ஆர். ஜி. கர் மருத்துவமனை சம்பவம் போன்றவை பயங்கரமான சில எடுத்துக்காட்டுகள் ஆகும். 2017ஆம் ஆண்டு முதல் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் 94.47 சதவீதம் அதிகரித்துள்ளதாக குற்றப் பதிவேட்டிற்கான தேசியக் கழகம் பதிவு செய்துள்ளது.
2002ஆம் ஆண்டில் குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற மதவெறியாட்டத்தின்போது, 14 முஸ்லீம்களை படுகொலை செய்தது; 21வயதே ஆன கர்ப்பிணிப் பெண்ணான பில்கிஸ் பானுவை கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியது; அவரது மூன்று வயது மகளைக் கொன்றது ஆகிய குற்றங்களுக்காக தண்டனை விதிக்கப்பட்ட 11 குற்றவாளிகளை பாஜக தலைமையிலான குஜராத் மாநில அரசு விடுவித்தது மிகுந்த அதிர்ச்சியூட்டும் நிகழ்வுகளில் ஒன்றாகும். இந்த 11 குற்றவாளிகளின் விடுதலை, இந்திய விடுதலையின் 75வது ஆண்டு விழாவை ஒட்டி – ஆகஸ்ட் 15, 2022 – மற்றும் குஜராத் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாகவும் நடைபெற்றுள்ளது என்பது அம்மாநிலத்தில் வகுப்புவாத துருவ முனைப்பை மேலும் கூர்மைப்படுத்தும் நோக்கத்துடன் தான் என்பதை தெளிவாக்குகிறது.
மனித குலத்திற்கு எதிரான கொடூரமான குற்றங்களைச் செய்த இந்த 11 குற்றவாளிகளும் குஜராத் மாநில அரசால் விடுவிக்கப்பட்டு, சுதந்திர மனிதர்களாக சிறையிலிருந்து வெளிவரும்போது, அவர்கள் ‘சன்ஸ்காரி பிராமணர்கள்’ என்று மாலை அணிவித்து வரவேற்கப்பட்டனர். இந்த விடுதலையை எதிர்த்து, பில்கிஸ் பானு மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட பலரும் உச்சநீதிமன்றத்தில் பல ரிட் மனுக்களை தாக்கல் செய்தனர். இறுதியாக, ஜனவரி 8, 2024 அன்று உச்சநீதிமன்றம் தன் தீர்ப்பை வழங்கியது. பாலியல் வன்கொடுமை மற்றும் படுகொலைகளுக்காக தண்டிக்கப்பட்ட இந்த 11 குற்றவாளிகளும் சிறை அதிகாரிகளிடம் சரணடைய வேண்டும்; அவர்கள் மீண்டும் சிறைக்கு அனுப்பப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
வங்காளிகள் மீதான தாக்குதல்கள்
கடந்த சில மாதங்களாகவே, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள வங்காளிகள், குறிப்பாக புலம்பெயர்ந்த ஏழைத் தொழிலாளர்கள், வங்க தேசத்திலிருந்து ஊடுருவியவர்கள் என்று சித்தரிக்கப்படுகின்றனர்; வேட்டையாடப்படுகின்றனர்; சித்திரவதை செய்யப்படுகின்றனர்; நாடு கடத்தப்படுகின்றனர். மத்திய உள்துறை அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள டெல்லி காவல்துறை வெளியிட்ட ஒரு கடிதம் வங்காள மொழியை ‘பங்களாதேஷ் மொழி’ என்று விஷமத்தனமான வகையில் அடையாளப்படுத்தியுள்ளது. இதில் உள்ளார்ந்த முக்கியமான விஷயம் என்னவெனில், வங்க தேசத்தை சேர்ந்தவர்கள் பொதுவாக முஸ்லீம்கள்; அவர்கள் குறிவைக்கப்பட வேண்டும் என்பதே இத்தகைய நடவடிக்கைகளின் நோக்கமாக உள்ளது.
ஜனநாயகத்தின் மீதான கொலைவெறித் தாக்குதல்கள்
இத்தகைய வகுப்புவாத, சாதீய, பேரினவாத சதித்திட்டங்கள் தொடர்ந்த போதிலும், மோடி-ஷா தலைமையிலான இந்த பாஜக ஆட்சியின் வெகுஜன ஆதரவு என்பது கீழிறங்கிக் கொண்டே இருந்தபோதிலும், – அதைத்தான் 2024 மக்களவை தேர்தல் முடிவுகளில் வியக்கத்தக்க வகையில் நாம் கண்டோம் – 11 ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய, ஜனநாயகத்தின் மீதான அவர்களின் முழு அளவிலான தாக்குதல் மேலும் பெருமளவிற்குத் தீவிரமடைந்துள்ளது.
கடந்த 11 ஆண்டுகளில் தேசத் துரோகச் சட்டம், தேசிய பாதுகாப்புச் சட்டம்(என் எஸ் ஏ), சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (உவாபா), அதற்கு மேலாக, சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்ற இதர மத்திய அரசு முகமைகள், அரசியல் ரீதியான எதிரிகளுக்கு எதிராக கடுமையான வகையில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளதையும் நாம் காண்கிறோம். மகாராஷ்ட்ரா, மத்தியப் பிரதேசம், கர்நாடகா, கோவா ஆகிய மாநிலங்களில் ஊழல், பணபலம், அமலாக்கத்துறை-சிபிஐ மூலமான அச்சுறுத்தல்கள் மூலம் எதிர்க்கட்சி மாநில அரசுகள் அகற்றப்பட்டது பாஜக – ஆர் எஸ் எஸ் கூட்டணி மேற்கொண்ட ஜனநாயகப் படுகொலையின் மற்றொரு அம்சமாகும். எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த இரண்டு முதலமைச்சர்கள் – அர்விந்த் கேஜ்ரிவால், ஹேமந்த் சோரேன் ஆகியோர் – புனையப்பட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் சிறையில் தள்ளப்பட்டனர்.
நூற்றுக்கணக்கான அப்பாவி மனித உரிமை ஆர்வலர்கள், அறிவுஜீவிகள், மாணவர்கள், பத்திரிக்கையாளர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாமல், பல ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பீமா கோரேகான் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட 16 மனித உரிமை ஆர்வலர்கள், அறிவுஜீவிகளும் அடங்குவர். இவர்களில் சிலர் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக இன்னும் சிறையில் வாடுகின்றனர். அவர்களில் நிறுவன ரீதியான புறக்கணிப்பின் விளைவாக கொலையுண்ட 84 வயதான அருட்தந்தை ஸ்டேன் சுவாமியும் ஒருவர். பிரபீர் புர்காயஸ்தா, சித்திக் கப்பன், முகமது ஜுபைர் போன்ற மூத்த பத்திரிக்கையாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். சுயேச்சையான செய்தி இணையதளமான ‘நியூஸ்கிளிக்’ செயல்பட முடியாத வகையில் முடக்கப்பட்டது. மாணவர் தலைவர்களான உமர் காலித், ஷர்ஜீல் இமாம் போன்ற பலரும், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக உவாபா சட்டத்தின்கீழ் விசாரணையின்றி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
பாஜக தலைமையிலான மகாராஷ்ட்ரா அரசு சமீபத்தில் மகாராஷ்ட்ரா சிறப்பு பொது பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. நகர்ப்புற நக்சல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவது என்ற பெயரில் அனைத்து கருத்து வேறுபாடுகளையும் நசுக்க இது முற்படுகிறது.
இப்போது பெரிதும் கண்டிக்கத்தக்கதொரு நடவடிக்கையாக, பாஜக, இந்திய தேர்தல் ஆணையத்தையே தனது சார்பில் செயல்பட வைக்கிறது. முற்றிலும் ஊழல்மிக்க இந்த பாஜக-தேர்தல் ஆணையக் கூட்டணி சமீபத்திய இரண்டு நிகழ்வுகளில் வெளிப்பட்டது. லட்சக்கணக்கான உண்மையான வாக்காளர்களின் வாக்குரிமையைப் பறிப்பதையும், லட்சக்கணக்கில் போலி வாக்காளர்களை சேர்ப்பதையும் இவை நோக்கமாகக் கொண்டுள்ளன. இதன் மூலம் ஒட்டுமொத்த தேர்தல் நடைமுறையையுமே போலியான ஒன்றாக இவை மாற்றுகின்றன.
இவற்றில் ஒன்று, பீகாரில் வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிரத் திருத்தம் (எஸ் ஐ ஆர்) என அழைக்கப்படுவதாகும். அவர்கள் அதையே பின்னர் நாடு முழுவதும் அமல்படுத்த விரும்புகின்றனர். இரண்டாவது, 2024 மக்களவை தேர்தலில் பெங்களூரு (மத்திய) மக்களவை தொகுதியில் அடங்கிய மகாதேவபுரா சட்டமன்றத் தொகுதியில் காணப்பட்ட மிக மோசமான வாக்குத்திருட்டு ஊழல் ஆகும். இதை நாடு முழுவதிலும் உள்ள பல மக்களவை தொகுதிகளில் மேலும் பல மடங்காக செய்திருக்க முடியும்.
இவை அனைத்திற்கும் மேலாக தாங்கமுடியாத துயரமாக விளங்குவது, 30 நாட்களுக்கு சிறையில் அடைக்கப்பட்ட பிரதமர், முதல்வர்கள், மற்றும் அமைச்சர்களை பதவியிலிருந்து நீக்க பாஜக தலைமையிலான மத்திய அரசு கொண்டுவர விரும்பும் மூன்று புதிய மசோதாக்கள் ஆகும். எதிர்க்கட்சிகளையே நேரடி இலக்காகக் கொண்ட இந்த ஜனநாயக விரோத, நவ பாசிஸ நகர்வின் ஆபத்தான தாக்கங்கள் மிகவும் வெளிப்படையாகவே தெரிகின்றன.
சுருக்கமாகச் சொல்வதெனில், நாடாளுமன்றம், நீதித்துறை, தேர்தல் ஆணையம் என அனைத்து அரசியல் அமைப்புச் சட்டரீதியான அமைப்புகளுமே பாஜக – ஆர் எஸ் எஸ் கூட்டணியால் திட்டமிட்டு சீர்குலைக்கப்படுகின்றன. எனவேதான் ‘வி-டெம்’ ஆய்வு நிறுவனம் இந்தியாவை ‘தேர்தல் மூலமான சர்வாதிகாரம்’ என்று அழைத்தது. 1975ஆம் ஆண்டில் முறையான அவசரநிலை இந்தியாவில் அமலில் இருந்தபோது இருந்த நிலையை இந்தியா எட்டியுள்ளது என்று சர்வதேச ஐடியா என்ற அமைப்பு கூறியிருந்தது. ‘எல்லைகளற்ற நிருபர்கள் அமைப்பு’ இந்தியாவில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது என்று தெரிவித்துள்ளது. 2025ஆம் ஆண்டிற்கான உலக பத்திரிக்கை சுதந்திரக் குறியீடு உலகின் 180 நாடுகளில் இந்தியாவை 151வது இடத்தில் வைத்துள்ளது. ஆர்.எஸ்.எஸ். – பாஜக ஆட்சியின் கீழ், இந்தியா இன்று அறிவிக்கப்படாத அவசர நிலையை நோக்கி இறங்கி வருகிறது.
முடிவுரை
அவ்வகையில், மோடி அரசும், பாஜக-ஆர்.எஸ்.எஸ்.ஸும் ஆட்சியில் நீடித்திருப்பது என்பது, ஏழைகள் மீதும், உழைக்கும் மக்களின் அனைத்து பிரிவினரின் மீதும், மேலும் கடுமையான தாக்குதல்களைக் கொண்டுவருவதாகவே இருக்கும். இத்தகைய ஆட்சி நீடிப்பதென்பது அரசுக்கு நெருக்கமான உள்நாட்டு, வெளிநாட்டு கார்ப்பரேட்களை மேலும் விரிவான அளவில் கொழுக்க வைக்கும் என்பதே பொருளாகும். மேலும், இது முன்னெப்போதும் கண்டிராத அளவிற்கு ஊழல்களையும், மோசடிகளையும் மேற்கொள்ளும். ஏகாதிபத்தியத்திடம் மேலும் கூடுதலான அடிமைத்தனமிக்க சரணாகதியை அர்த்தப்படுத்துவதாகவும் இது இருக்கும். ஆர்.எஸ்.எஸ். ஒரு பாசிஸ வகைப்பட்ட அமைப்பு என்ற நிலையில், அவர்களுக்கு ஹிட்லரும் முசோலினியும் உண்மையான முன்மாதிரிகளாக இருக்கும் நிலையில், ஆட்சியில் அதன் நீடிப்பு என்பது, ஜனநாயகம், மதச்சார்பின்மை, நாட்டின் இறையாண்மை, கூட்டாட்சிக் கோட்பாடு, சமூக- பொருளாதார நீதி மற்றும் இந்திய அரசியல் அமைப்பின் முடிவைக் குறிப்பதாகவே இருக்கும்.
என்ன விலை கொடுத்தேனும், ஆர்.எஸ்.எஸ்., பாஜக, சங் பரிவார் ஆகியவை தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இவற்றை எதிர்க்கும் அனைத்து மதசார்பற்ற, ஜனநாயக சக்திகளின் விரிவான ஒற்றுமையை மேலும் வலுப்படுத்துவதன் மூலமும், துரிதமாகவும், நீடித்த வகையிலும் இடதுசாரி சக்திகளை வலுப்படுத்துவதன் மூலமும், வரும் நாட்களில் நிலையான, புதுமையான, வலுமிக்க, தத்துவார்த்த ரீதியான, அரசியல்ரீதியான, கிளர்ச்சிமிக்க, அமைப்புரீதியான போராட்டங்களின் மூலமும் இந்த அழிவு சக்திகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
தமிழில்: வீ. பா. கணேசன்
You may also like
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
