மூன்றாம் முறையாய் மோடி
பிரகாஷ் காரத்
1952 ஆம் ஆண்டில் நடைபெற்ற நம் நாட்டின் முதல் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு, அதிக பின்விளைவுகளைக் கொண்டிருக்கும் தேர்தலாக 18வது மக்களவை தேர்தல் எதிர்க்கட்சிகளாலும், அரசியல் விமர்சகர்கள் பலராலும் பார்க்கப்பட்டது. நரேந்திர மோடி தலைமையிலான பத்தாண்டு கால பாஜக அரசாங்கத்திற்குப் பிறகு, இந்தத் தேர்தல் ஒரு முக்கியமான திருப்புமுனை நிகழ்வாகக் கருதப்பட்டது. இதன் விளைவு, இந்தியா முழு வீச்சிலான இந்துத்துவ சர்வாதிகார நாடாக மாறப்போகிறதா, அல்லது, அரசின் கட்டமைப்பில் ஒரு சில சர்வாதிகார எச்சங்களைக் கொண்ட, அரசமைப்புச் சட்டப்படியான ஒரு பாராளுமன்ற ஜனநாயகமாக தொடரப் போகிறதா என்பதை முடிவுசெய்யும். நரேந்திர மோடியும் பாஜகவும் இத்தேர்தலில் மிருகப் பெரும்பான்மை பெற்றால், இந்த மாற்றம் விரைவுபடுத்தப்படும்.
நாட்டின் மதச்சார்பற்ற-ஜனநாயகக் கோட்பாட்டிற்கும் அரசியலமைப்புச் சட்டத்தின் இருத்தலுக்கும் ஏற்பட்ட இந்த அச்சுறுத்தல்தான் எதிர்கட்சிகள் ஒன்றாக இணைந்து, இந்தியா என்கிற பரந்துபட்ட ஒரு மேடையை உருவாக்கிட தூண்டியது. கூட்டணி என்று அழைக்கப்பட்டாலும், அது அப்படியல்லாமல், தேர்தல் உடன்படிக்கைகள், அல்லது தொகுதி உடன்பாடுகள் மூலமாக பாஜகவுக்கு எதிரான வாக்குகள் சிதறுவதைத் தவிர்ப்பதற்காகவும், கூடுமானவரை இந்த வாக்குகளை சேகரிப்பதற்காகவும், மாநில அளவில் தேர்தல் புரிந்துணர்வுக்கு வரக்கூடிய எதிர்க்கட்சிகளின் தளர்வான ஒரு சேர்க்கையாகவும் இருந்தது.
இந்த கட்சிகளுடைய மாறுபட்ட தன்மைகளையும், ஒரு சில மாநிலங்களில் கட்சிகளின் முரண்பட்ட நலன்களையும் கருத்தில் கொள்ளும்போது, அறுதிப்பெரும்பான்மையுடன் தொடர்ச்சியாக இரண்டு முறை மத்தியில் தன்னுடைய அதிகாரத்தை வலுப்படுத்திக்கொண்ட பாஜகவை எதிர்கொள்வதற்கான ஒரே நடைமுறை வழியாக, இந்த குறைந்தபட்ச அணுகுமுறைதான் இருந்தது.
அரைகுறையாக இருந்தாலும், இந்த ஏற்பாடு, ஓரளவு வெற்றியளித்தது என்பது, கடந்த 2014-க்குப் பிறகு முதன்முறையாக பாஜக அறுதிப்பெரும்பான்மையைப் பெறவில்லை என்கிற அம்சத்தில் வெளிப்பட்டது. பாஜக 240 இடங்களை பெற்றது. முந்தைய மக்களவையில் அது பெற்றிருந்த 303 இடங்களைவிட இம்முறை 63 இடங்கள் குறைவாகப் பெற்றது. இது அறுதிப் பெரும்பான்மைக்கு 32 இடங்கள் குறைவு. இந்தியா கூட்டணி கட்சிகள் 234 இடங்களைப் பெற்றன, அறுதிப் பெரும்பான்மைக்கு 38 இடங்கள் குறைவு. தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் ஒட்டுமொத்தமாக 42.5 சதவிகித வாக்குகளையும், இந்தியா அணியின் கட்சிகள் 40.2 சதவிகித வாக்குகளையும் பெற்றன; இரண்டு கூட்டணிகளுக்கும் இடையில் வாக்கு வித்தியாசம் 2 சதவிகிதத்திற்கும் குறைவு (1.9 சதவிகிதம்)
தேர்தலுக்குப் பிந்தைய நிலை
எனவே, 400-க்கும் மேற்பட்ட இடங்கள் என்கிற கோஷத்துடன் தேர்தலுக்குச் சென்ற பாஜகவுக்கு தேர்தல் முடிவுகள் பின்னடைவை ஏற்படுத்தின. இருந்தாலும், தேர்தலுக்குப் பிந்தைய சூழ்நிலையில், இந்த பின்னடைவு எதை உள்ளடக்கி இருக்கும் என்கிற நிதானமான கணிப்பை நாம் பெறுவது அவசியம்.
மக்களவையில் பெரும்பான்மை பலத்திற்காக தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஐக்கிய ஜனதா தளம் போன்ற தன்னுடைய தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளை நம்பியிருப்பது என்பது, ஒரு கட்சி சர்வாதிகார ஆட்சியை நோக்கிய பாஜகவின் தடையற்ற நகர்வுக்கு ஒரு சில கட்டுப்பாடுகளை ஏற்படுத்தியுள்ளது. இருந்தபோதிலும், பாஜக-ஆர்.எஸ்.எஸ் பின்பற்ற விரும்புகிற பாதையில் முட்டுக்கட்டையை உருவாக்குகிற ஒரு சூழ்நிலையாக இது இல்லை. வேறு வகையில் சொல்வதென்றால், பாஜக சந்தித்துள்ள தேர்தல் பின்னடைவானது, இந்துத்துவ-கார்ப்பரேட் நிகழ்ச்சிநிரலை தலைகீழாக மாற்றிவிட வழிவகுக்காது; அதேசமயம், கூடுதலான எதிர்ப்பை முன்னெடுப்பதற்கும், போராட்டத்தை தொடர்வதற்குத் தேவையான ஆதாரங்களை திரட்டுவதற்குமான கூடுதலான வழியையும் அது உருவாக்கி இருக்கிறது.
தேர்தல் தரவுகள் மற்றும் வாக்களிக்கும் முறை குறித்த ஆழமான பகுப்பாய்வு, அதீத நம்பிக்கையை ஏற்படுத்துகிற முடிவுகளுக்கு ஒருவர் வருவது குறித்து எச்சரித்திட வேண்டும். பாஜகவின் வாக்கு சதவிகிதத்தைப் பொறுத்தவரை, கடந்த 2019 தேர்தலில் அது பெற்ற 37.7 சதவிகித வாக்கில் , 1.1 சதவிகிதம் எனும் சிறிய அளவில் சரிவு ஏற்பட்டு, இந்த தேர்தலில் அதன் வாக்கு சதவிகிதம் 36.6 ஆக இருக்கிறது. பாஜகவுடைய இந்துத்துவத்தால் ஈர்க்கப்பட்ட வாக்காளர் பகுதி கணிசமாக இருப்பதையும், ஒருங்கிணைக்கப் பட்டிருப்பதையும் இது சுட்டிக்காட்டுகிறது. தன்னுடைய துருவமுனைப்பு போக்கை மேன்மேலும் கூர்மைப்படுத்தி, தன்னுடைய இந்துத்துவ பிளவுவாத நிகழ்ச்சிநிரலை வலுப்படுத்திக்கொள்வதற்கு, பாஜக இந்த பரந்துபட்ட இந்துத்துவ அடையாளத்தை நம்பியிருக்க முடியும்.
தேர்தலுக்கு பிந்தைய சூழ்நிலையையும், மோடி அரசாங்கத்தின் மூன்றாவது பதவிக்காலம் செல்லக்கூடிய திசையையும் நாம் சரியாக மதிப்பீடு செய்வதற்கு, சமூகப் பொருளாதார மற்றும் கலாச்சார தளத்தில், கடந்த 10 ஆண்டுகால மோடியின் ஆட்சி ஏற்படுத்திய மாற்றங்களை நாம் சரியாக உள்வாங்கிப் புரிந்துகொள்ள வேண்டும். இந்தியக் குடியரசையும், அரசியல் முறைமையையும் மறுவடிவமைப்பு செய்வதற்காக ஆர். எஸ். எஸ் வகுத்துக்கொடுத்த வரைவுத்திட்டத்தின் அடிப்படையில், முந்தைய இரண்டு மோடி அரசாங்கங்களும் விரிவான அளவில் செயல்பட்டன.
பொருளாதாரத்தை வலதுசாரிப் பாதையில் மாற்றியமைப்பதையும், ஜனநாயகம் மற்றும் கூட்டாட்சியை சிதைத்து, சர்வாதிகார ஆட்சியாக அரசியல் கட்டமைப்பை மாற்றி வடிவமைப்பதையும் உள்ளடக்கிய இந்த மாற்றத்திற்கு, இந்துத்துவ கார்ப்பரேட் கூட்டு அடிப்படையாகத் திகழ்கிறது; கருத்தியல் மற்றும் கலாச்சார தளத்தில் இந்திய அரசின் மதச்சார்பற்ற தன்மையை நீக்குவதற்கும், கல்வி மற்றும் கலாச்சார அமைப்புகளை இந்துத்துவ பாதையில் வடிவமைப்பதற்குமான திட்டமாக இந்தக் கூட்டு திகழ்கிறது.
இந்துத்துவ கார்ப்பரேட் கூட்டணி
பாஜகவின் கடந்த பத்தாண்டு கால ஆட்சி, அரசாங்கத்திற்கும், ஆளுங்கட்சிக்குமான பெரு முதலாளித்துவ ஆதரவு தொகுக்கப்பட்டதைக் கண்ணுற்றது. இந்த ஆதரவின் தனித்துவம் என்னவெனில், பெரு முதலாளித்துவத்தின் இந்துத்துவ கருத்தியல் தழுவல்தான். உண்மையில், குஜராத்தின் முதல்வராக நரேந்திர மோடி செயல்பட்ட நாட்களில்தான் இந்துத்துவ-கார்ப்பரேட் கூட்டணியின் இணைப்பு தொடங்கியது.
‘துடிப்பான குஜராத்’ உச்சிமாநாடுகளை அடுத்தடுத்து நடத்தியதன் வாயிலாகத்தான், வளர்ந்துவந்த பெருவணிக அதிபர்களின் குழு ஒன்று, மோடியை ‘நாட்டின் தலைமை நிர்வாக அதிகாரியாக’ ஆதரித்தது. முகேஷ் மற்றும் அனில் அம்பானி, கௌதம் அதானி, ரத்தன் டாடா, சுனில் மிட்டல், ஜெம்ஷெட் கோத்ரேஜ் மற்றும் பிறர் இதில் உள்ளடங்கியிருந்தனர்.
மோடி மீது அவர்கள் வைத்த நம்பிக்கை பொய்த்துப்போகவில்லை. மோடி அரசின் இரண்டு பதவிக் காலங்களும், முன்னுதாரணம் இல்லாத அளவிற்கு, பெருமூலதனத்தின் நலன்களை ஆதரிப்பதற்கான தொடர் கொள்கைகளையும், சலுகைகளையும் கண்டன. வரிச் சலுகைகள்; கார்ப்பரேட் வரி விகிதம் 30 சதவிகிதத்தில் இருந்து 22 சதவிகிதமாக குறைக்கப்பட்டது; 2014-2023 வரை 17.46 லட்சம் கோடி மதிப்பிலான வங்கிக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன; பொதுத்துறை நிறுவனங்களில் தனியார்மயமாக்கல் மற்றும் பங்குகளை விற்பனை செய்தது; தேசிய பணமாக்கல் திட்டத்தின் மூலமாக 6 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பொது சொத்துக்களை விற்பனை செய்தது; சுரங்க மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக சுற்றுச்சூழல் விதிமுறைகளை நீர்த்துப்போகச் செய்தது போன்றவை இதில் அடங்கும்.
அதனால்தான் மக்களவைத் தேர்தல் முடிவுகள், 1991 மக்களவைத் தேர்தலில் பெரு முதலாளித்துவ வர்க்கத்தின் ஒரு பிரிவு, காங்கிரஸ் கட்சிக்கான தங்களுடைய பாரம்பரிய ஆதரவைக் கைவிட்டு, முதல் முறையாக பாஜகவை ஆதரித்ததைப் போல, பாஜகவிற்கான பெரு முதலாளித்துவ வர்க்கத்தின் ஆதரவு குறைந்ததையோ அல்லது அவர்களில் ஏதாவதொரு பிரிவினரின் விலகலையோ சுட்டிக் காட்டவில்லை.
எனவே, மோடி அரசாங்கத்தின் மூன்றாவது பதவிக்காலம், பொருளாதாரம் மற்றும் சேவைத்துறையின் ஒவ்வொரு துறையிலும், பெரு முதலாளித்துவ வணிகத்தை விரிவுபடுத்துவதற்கான கூடுதல் கொள்கைகளையும் வசதிகளையும் கண்டிடும் என்று எதிர்பார்க்கலாம். இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில், டாடா ஏர்பஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஸ்பானிஷ் நிறுவனம் மூலம், சி-295 இராணுவ சரக்கு விமானத்தை பொருத்தும் ஒரு கூட்டு நிறுவன ஆலை வதோதராவில் தொடங்கப்பட்டது. இது போன்ற, அமெரிக்க, மற்றும் பிற மேற்கத்திய ஆயுத உற்பத்தி நிறுவனங்களுடனான பல கூட்டு வர்த்தகமுயற்சிகள் வரவிருக்கின்றன. டாடா, அதானி, எல்&டி, மகிந்திரா, அம்பானி குழுமங்கள் போன்ற சில முன்னணி கார்ப்பரேட்டுகள் ராணுவ தொழிற்துறை வளாகமாக வளரவிருக்கிற இந்தத் துறைக்குள் நுழைந்துள்ளன.
எனவே மூன்றாவது பதவிக்காலம் என்பது, பாரபட்சமான ஆதரவைப் பெற்றுவருகிற கார்ப்பரேட் நிறுவனங்கள் தேசிய சாம்பியன்கள் என்று அழைக்கப்படும் அளவிற்கு ஆதரிப்பதற்கான புத்தாக்க உந்துவிசையைக் காணும். ஏற்கனவே கடந்த பத்து ஆண்டுகளில், நிதி சாரா துறையில் ஐந்து பெருவணிக நிறுவனங்கள் வளர்ச்சி கண்டுள்ளன. இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை ஆளுநர் விரால் ஆச்சார்யா நடத்திய ஆய்வின்படி, ரிலையன்ஸ் (முகேஷ் அம்பானி குழுமம்), டாடா குழுமம், ஆதித்ய பிர்லா குழுமம், அதானி குழுமம் மற்றும் பாரதி டெலிகாம் ஆகிய ஐந்து பெரிய நிறுவனங்கள் தங்கள் கைகளில் சொத்துக்களைக் குவித்து வருகின்றன. நிதி சாரா துறையின் மொத்த சொத்துக்களில் இந்த நிறுவங்களின் பங்கு 1991-இல் இருந்த 10 சதவிகிதத்திலிருந்து 2021 -இல் கிட்டத்தட்ட 18 சதவீதமாக உயர்ந்துள்ளது.
பாதுகாப்பு உற்பத்தித் துறையில், தனியார் துறையின் பங்கு சீராக உயர்ந்து வருகிறது. 2023-24 ஆம் ஆண்டில், மொத்த பாதுகாப்பு உற்பத்தி துறையில் தனியார் துறையின் பங்கு 22 சதவீதமாக (ரூ. 16,411 கோடி) இருந்தது. எந்தவொரு ஒழுங்குமுறை அல்லது சட்ட நடவடிக்கைகளிலிருந்தும் பெரு முதலாளித்துவ வணிக நிறுவனங்களைக் காப்பாற்றிட, மோடி அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இது அதானி குழுமத்தின் விஷயத்தில் தெளிவாக தெரிந்தது, அதன் பங்குச் சந்தை விலை கையாளுதல் உட்பட ஏராளமான சட்ட மீறல்கள் ஹிண்டன்பர்க் அறிக்கையின் மூலம் அம்பலப்படுத்தப்பட்டன.
இந்துத்துவத்திற்கும் கார்ப்பரேட் பெருநிறுவனங்களுக்கும் இடையிலான தொடர்பு என்பது உறுதியாக உள்ளது என்பதோடு, வரும் நாட்களிலும் அது தொடரும். இந்துத்துவா-கார்ப்பரேட் கூட்டணியை எதிர்கொள்வதற்கான தந்திரங்களை அளவிடும் போது இந்த அம்சம் சரியாக பரிசீலிக்கப்பட வேண்டும்.
இந்துத்துவக் கொள்கையைக் கடைப்பிடித்தல்
மோடி ஆட்சியின் பத்து ஆண்டுகளில் இந்துத்துவம் ஆளும் வர்க்கங்களின் மேலாதிக்க சிந்தனையாக மாறியுள்ளது. இந்துத்துவத்தை வகுப்புவாத அரசியலின் பொதுவான ஒரு வகைமையாகப் பார்ப்பது தவறு. 1980-கள் வரை, ஆளும் வர்க்கம் வகுப்புவாத சக்திகளை சந்தர்ப்பவாத முறையில் பயன்படுத்தி, தொழிலாளர்களை பிளவுபடுத்தி, தங்களுடைய வர்க்க ஆட்சியை ஒருங்கிணைத்து வந்தது. 1990 களில் ராம் ஜன்மபூமி இயக்கத்தால் குறிக்கப்பட்ட இந்துத்துவ சக்திகளின் எழுச்சியானது, ஆர். எஸ். எஸ் மற்றும் இந்துத்துவ சக்திகள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் ஏற்றமிகு வளர்ச்சியை தொடங்குவதற்கு உதவியது. இந்துத்துவம் என்பது இந்திய அரசை மாற்றியமைக்கவும் மறுசீரமைக்கவும் அரசு அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கான ஒரு அரசியல் திட்டமாகும்.
மோடி அரசாங்கத்தின் பத்து ஆண்டுகளில், பாஜக-ஆர். எஸ். எஸ் அமைப்பின் மைய நிகழ்ச்சி நிரலான -370 வது பிரிவை ரத்து செய்தல், அயோத்தியில் ராமர் கோயில் மற்றும் பொது சிவில் சட்டம் ஆகியவற்றில் -இரண்டு நிறைவேற்றப்பட்டன. பிரிவு 370 ரத்து செய்யப்பட்டு, நீதிமன்ற தீர்ப்பின் வாயிலாக, சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டப்பட்டது. மூன்றாவது பிரச்சினையைப் பொருத்தவரை, உத்தராகண்ட் போன்ற மாநிலங்களில் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து தொடங்கி, பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. ஆனால் இந்துத்துவ திட்டம் மிகவும் பரந்ததாகவும் ஆழமானதாகவும் இருக்கிறது. கல்வி முறை, கலாச்சார மதிப்பீடுகள் மற்றும் சமூக நியதிகளை மறுவடிவமைப்பு செய்திட அரசு அதிகாரம் பயன்படுத்தப்பட இருக்கிறது.
இதற்காக, பத்தாண்டு கால மோடி ஆட்சியானது, புதிய கல்விக் கொள்கையையும், பெரும்பான்மைவாத சித்தாந்தத்தையும் முன்னெடுத்துச் செல்வதற்காக, அரசு ஆதரவுபெற்ற கலாச்சார நிறுவனங்களின் தலையீடுகளையும் கண்டது.
இந்துத்துவ திட்டம் இரண்டு நிலைகளில் செயல்படுத்தப்படுகிறது. அரசு அளவில், அரசுடைய மதச்சார்பின்மையை ஒழிப்பதற்கு கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அரசு மற்றும் அரசியலமைப்பு நிறுவனங்களில் திட்டமிட்ட ஊடுருவல் மூலமும் இது நிறைவேற்றப்படுகிறது. உயர் நீதித்துறையோ அல்லது இராணுவப் படைகளோகூட இந்த சீரழிவிலிருந்து தப்பவில்லை. இந்துத்துவ சித்தாந்தத்தின் மீது நம்பிக்கை கொண்ட நீதிபதிகள் உச்ச நீதிமன்றத்தில் பதவியில் இருக்கிறார்கள். சமீபத்தில், கல்கத்தா உயர்நீதிமன்றத்தில் ஒரு நீதிபதி ஓய்வு பெறுகையில் ஆர். எஸ். எஸ் அமைப்புடன் தான் கொண்டிருந்த வாழ்நாள் தொடர்பை அறிவித்தார். பதவியில் இருந்த மற்றொரு நீதிபதி, தனது நீதிபதி பதவியை ராஜினாமா செய்துவிட்டு, ஒரு சில நாட்களில் பாஜகவில் சேர்ந்தார்; மேலும் மக்களவைத் தேர்தலில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினரானார். மத்தியில், பாஜக தலைமையிலான அரசு இருக்கும் வரை, அரசு நிறுவனங்களில் ஊடுருவுகின்ற, சீரழிக்கின்ற செயல்முறையில் எந்த ஒரு குறைபாடும் இருக்காது.
மக்கள் மத்தியிலும், சமூகத்திலும் களமட்டத்தில் செயல்படுவது என்பது ஆர். எஸ். எஸ் அமைப்பும் இந்துத்துவ சக்திகளும் செயல்படுகிற மற்றொரு நிலையாக இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் பல்வேறு அமைப்புகளின் இந்தப் பணிதான், மக்களிடையே இந்துத்துவ உணர்வுக்கான அடித்தளத்தை உருவாக்குகிறது. இஸ்லாமியர்களை ‘அவர்கள்’ என்று திட்டமிட்டு குறிவைப்பதன் மூலமும், தேசியவாதம் என்கிற போர்வையில் இந்துத்துவ உணர்வுகளை தூண்டிவிடுவது, சாதி மற்றும் துணை சாதி அடையாளங்களை பரந்துபட்ட இந்து அடையாளத்தின் கீழ் திரட்டுவது -அனைத்தும் கடந்த பத்தாண்டில் அரசின் ஆதரவுடன் செயல்படுத்தப்பட்டன.
தேர்தலுக்கு பிந்தைய சூழ்நிலையிலும், மோடி அரசாங்கத்தின் மூன்றாவது பதவிக்காலத்தின் தொடக்கத்திலும், இந்த அரசாங்கம் ஒரு கூட்டணி அரசாங்கம் என்கிற உண்மை, மேல்குறிப்பிட்ட இரண்டு மட்டங்களிலும் செயல்படும் இந்துத்துவ திட்டத்திற்கு ஒரு தடையாக இருக்கிறது என்பது நிரூபணமாகவில்லை.
மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான சில வாரங்களுக்குப் பிறகு, பாஜக ஆளும் மாநிலங்களில் இஸ்லாமிய சிறுபான்மையினர் மற்றும் சில இடங்களில் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்தன. சிறுபான்மையினருடன் மோதல்களைத் தூண்டுவதற்காக ராம நவமி ஊர்வலங்கள், பிள்ளையார் சதுர்த்தி பூஜை, அல்லது துர்கா பூஜை போன்ற மத விழாக்களைப் பயன்படுத்தும் அதே முறை மீண்டும் பின்பற்றப்பட்டது. அசாம், உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், மகாராஷ்டிராவில் பதவியில் உள்ள பாஜக மாநில அரசாங்கங்கள், மதங்களுக்கு இடையிலான திருமணங்கள், கட்டாய மதமாற்றம் அல்லது இறைச்சி மற்றும் கால்நடை வர்த்தகத்தின் மீதான கட்டுப்பாடுகள் போன்ற பிரச்சினைகளில் இஸ்லாமிய சமூகத்தை குறிவைக்க புதிய சட்டங்களையும் நடவடிக்கைகளையும் கொண்டு வந்தன.
ஒன்றிய அளவில், வக்ஃப் உடைமை மீதான இஸ்லாமியர்களுடைய உரிமைகளைப் பறிக்க முற்படும் வக்ஃப் (திருத்த) மசோதாவை அரசாங்கம் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. மீண்டும் இங்கே, மாநில அளவிலோ அல்லது அடிமட்ட அளவிலோ இந்துத்துவ நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பதற்கான உந்துதல் பாதிக்கப்படாது. இந்த நிகழ்ச்சி நிரலைப் பின்பற்றுவதற்கு, தெலுங்கு தேசமோ அல்லது ஐக்கிய ஜனதா தளமோ எந்த எதிர்ப்பையும், கருத்துவேறுபாட்டையும் வெளிக்காட்டவில்லை. மாறாக, ‘திருப்பதி லட்டு சர்ச்சை’, தெலுங்கு தேசம் கட்சி இந்த பிரச்சினையை வகுப்புவாத பிரச்சனையாக மாற்றுவதற்கு எவ்வாறு சந்தர்ப்பவாதமாக களத்தில் குதித்துள்ளது என்பதைக் காட்டுகிறது.
இந்தப் பகுதியின் நிறைவாக, தேர்தல் தீர்ப்பின் பின்னணியில், இந்தியக் குடியரசை மறுவடிவமைப்பு செய்வதற்கு அரசியலமைப்பு சட்டத்தை திருத்துகிற பெரும் லட்சியத் திட்டத்தை பாஜக நிறுத்தி வைக்க வேண்டியிருக்கும். அதே வேளையில், அதனுடைய இந்துத்துவ திட்டத்தின் பிற பரிமாணங்கள் தங்குதடையின்றி தொடரும். ஒன்றிய அரசின் கொள்கை மாற்றங்களுக்கான நெம்புகோல்களைப் பயன்படுத்துவதும், அரசின் பல்வேறு அங்கங்களில் முக்கிய நிர்வாகிகளை நியமிப்பதும் தொடரும். இதனோடு, ஆர். எஸ். எஸ் மற்றும் இந்துத்துவ அமைப்புகளின் துருவமுனைப்பை கூர்மைப்படுத்துவதற்கும், பெரும்பான்மை இந்து உணர்வுகளை ஒருங்கிணைப்பதற்குமான நடவடிக்கைகள் இடைவிடாமல் கடைப்பிடிக்கப்படும்.
சர்வாதிகாரத்தின் கட்டுமானம் அப்படியே இருக்கிறது
பத்தாண்டு கால மோடி அரசாங்கத்தின் குறிப்பிட்ட அம்சங்களில் ஒன்று, அதன் சர்வாதிகார இயக்கம். இது ஜனநாயக உரிமைகளைப் பறித்தல், எதிர்க்கட்சியினரையும், எதிர்ப்பாளர்களையும் குறிவைப்பதற்காக கொடூர சட்டங்களைப் பயன்படுத்துதல் ஆகிய செயல்களை உள்ளடக்கி இருந்தது. இந்த சர்வாதிகாரத்தன்மை மோடி அரசாங்கத்தின் இரண்டாம் ஆட்சிக்காலத்தில் ஒருங்கிணைக்கப்பட்டது. அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வு முகமை, வருமான வரித்துறை ஆகிய மத்திய முகமைகளை துஷ்பிரயோகம் செய்யும் போக்கு தீவிரமடைந்தது-பல எதிர்க்கட்சி தலைவர்கள் குறிவைக்கப்பட்டார்கள்; இரண்டு முதல்வர்கள் கைது செய்யப்பட்டார்கள்; கொடூரமான கருப்பு பண மோசடி சட்டத்தின் கீழ், பிற நூற்றுக்கணக்கானோர் சட்டத்துக்குப் புறம்பான நடவடிக்கைகள் தடுப்புச்சட்டத்தின் (UAPA) கீழ் கைது செய்யப்பட்டார்கள்.
சர்வாதிகாரத்தன்மையின் மற்றொரு அம்சம் கூட்டாட்சி மற்றும் மாநில உரிமைகள் மீதான தாக்குதல். பிரிவு 370- ஐ நீக்குவது என்கிற உச்சத்தை இது அடைந்து, 2019 ஆகஸ்டில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக துண்டாடப்பட்டது.
எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு நிதி ஆதாரங்கள் மறுக்கப்பட்டன, ஆளுநர்கள் மாநில அரசின் விவகாரங்களில் அப்பட்டமாக தலையிடுவதற்காகப் பயன்படுத்தப்பட்டனர். தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களின் ஆளுநர்கள் மாநில அரசுகளின் செயல்பாடுகளையும், மாநில சட்டப்பேரவைகளின் அதிகாரங்களையும் சீர்குலைப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டனர். டில்லியின் லெப்டினன்ட் கவர்னர் தில்லி அரசின் முழுக் கட்டுப்பாட்டை எடுத்துக் கொண்டார்.
சர்வாதிகாரத்தின் கட்டுமானத்தில் எந்த மாற்றமும் இல்லை. மோடி அரசின் மூன்றாம் பதவிக்காலத்தின் முதல் ஒரு சில நாட்களில், மத்திய முகமைகள், கொடூர சட்டங்களைப் பயன்படுத்தி கருத்துவேறுபாடுகளை ஒடுக்கும் போக்கில் எந்த தளர்வும் ஏற்படவில்லை.
தன்னுடைய இரண்டாவது பதவிக்காலத்தில் நரேந்திர மோடி, நாடாளுமன்றம், மாநில சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான, ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ முறையை கொண்டுவரும் விருப்பத்தை அறிவித்தார்.
இந்த நோக்கத்திற்காக முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான கமிட்டி ஒன்று நியமிக்கப்பட்டது. கோவிந்த் கமிட்டியின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டது, மூன்றாவது பதவிக்காலத்தில் ஒன்றிய அரசின் முதல் நடவடிக்கைகளில் ஒன்றாக அமைந்தது. ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டம், மிகவும் மையப்படுத்தப்பட்ட, ஒற்றையாட்சி அரசியல் அமைப்பை உருவாக்கிடும். இந்த அம்சத்தை செயல்படுத்துவது என்பது, பல அரசியலமைப்பு திருத்தங்களை உள்ளடக்கியிருக்கும், மாநில சட்டமன்றங்களின் பதவிக்காலத்தை குறைத்து, மத்திய அரசின் தலையீட்டை அதிகரித்திடும்.
தற்போது, தங்களுக்குத் தேவையான அரசியலமைப்பு திருத்தங்களைக் கொண்டுவருவதற்கு அவசியமான, மக்களவை மற்றும் மாநிலங்களவையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை ஆளும் கூட்டணி பெற்றிருக்கவில்லை. இருந்தபோதிலும், பாஜக சர்வாதிகார, மையப்படுத்தப்பட்ட அரசியல் அமைப்பு என்கிற தனது குறிக்கோளுக்கான பொதுக் கருத்தைத் திரட்டும் நோக்கில், ‘ஒரே நாடு, ஒரு தேர்தல்’ அமைப்பைப் பரப்பிவருகிறது.
பாஜக-ஆர்எஸ்எஸ் அமைப்பால், கூட்டாட்சிக் கொள்கையை மறுக்கும் வகையில் அரசியலமைப்புச் சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டுவர முடியாது என்றாலும், மாநிலங்களுடைய உரிமைகளை நீர்த்துப்போகச் செய்வதற்கும், நிதி, பொருளாதாரம் அல்லது அரசியல் தளங்களில் கூட்டாட்சி உள்ளடக்கத்தை அழிப்பதற்குமான, ஒன்றிய அரசு போக்கில் எந்தவித மாற்றமும் இருக்காது. இந்துத்துவா-கார்ப்பரேட் கூட்டணிக்கு எதிரான தற்போதைய போராட்டத்தின் இன்றியமையாத பகுதியாக, மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான, கூட்டாட்சி தத்துவத்தின் மீதான தாக்குதலை எதிர்ப்பதற்கான போராட்டமும் இருக்கும்.
சர்வாதிகாரத்திற்கு எதிரான, ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான போராட்டமும் இந்துத்துவா-கார்ப்பரேட் கூட்டணிக்கு எதிரான போராட்டத்துடன் ஒருங்கிணைந்த முறையில் பிணைக்கப்பட்டுள்ளன, ஏனெனில், புதிய தாராளமயக்கொள்கைக்கும், வகுப்புவாதத்திற்கும் இடையிலான இந்த அச்சுதான், சர்வாதிகாரத்திற்கு வழிவகுக்கும் பேரழிவுக்கூறுகள் மிக்க தூண்டுகோலாக இருக்கிறது.
அமெரிக்காவுடனான நட்புறவு
மோடி அரசு தனது இரண்டாவது பதவிக்காலத்தில், அமெரிக்காவுடனான கேந்திர மற்றும் இராணுவ உறவுகளை உறுதியாகப் பிணைத்தது. நாற்கர கூட்டமைப்பு (குவாட்) தலைமைகளுடைய உச்சிமாநாடு அளவுக்கு உயர்த்தப்பட்டது, மேலும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவுக்கு எதிரான குவாட் கூட்டமைப்பை ஒரு பாதுகாப்பு மற்றும் கேந்திர கூட்டணியாக மாற்றுவதற்கான அமெரிக்காவின் முயற்சிகளை இந்தியா படிப்படியாக ஒப்புக்கொண்டது.
கேந்திர இராணுவ ஒத்துழைப்பின் மூன்று அடிப்படை ஒப்பந்தங்களில் மூன்றாவது மற்றும் இறுதி ஒப்பந்தம்-அடிப்படை பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தம் (BECA)- அக்டோபர் 2020 -இல் கையெழுத்தானது. மத்திய அமெரிக்க மற்றும் இந்தோ-பசிபிக் இராணுவக் கட்டளை தலைமையகங்களில் இராணுவ தொடர்பு அதிகாரிகளை நியமிக்கும் பணி தொடர்ந்தது.
அமெரிக்க இராணுவ உபகரணங்களை வாங்குவது கடுமையாக அதிகரித்து வருகிறது. கடந்த ஏழு ஆண்டுகளில், 31 ப்ரிடேட்டர் ட்ரோன்களை வாங்குவதற்கான சமீபத்திய 2.99 பில்லியன் டாலர் ஒப்பந்தம் உட்பட, அமெரிக்காவிடமிருந்து 15 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை இந்தியா வாங்கியுள்ளது. தற்போது நடைபெற்று வரும் காசா போரில் இந்தியா இஸ்ரேலுக்கு ஆதரவளித்த விதத்திலும், அதன் இனப்படுகொலை போருக்கு உதவுவதற்கு ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை ஏற்றுமதி செய்த விதத்திலும், இந்த உறவுகளின் விளைவுகளைக் காணலாம்.
The Hindutva forces, despite their vaunted ultra-nationalism, have always been pro-imperialist and will continue to pursue this alliance in the coming days.
மிதமிஞ்சி விளம்பரப்படுத்தப்பட்ட தங்களுடைய தேசியவாதம் ஒரு புறம் இருக்க, இந்துத்துவ சக்திகள் எப்போதுமே ஏகாதிபத்திய ஆதரவு நிலைப்பாட்டில்தான் இருந்து வருகின்றன. வரக்கூடிய நாட்களில் இந்த கூட்டணியை மேன்மேலும் முன்னெடுத்துச் செல்லும்
சி.பி.ஐ(எம்) மற்றும் இடதுசாரிகளை வலுப்படுத்த வேண்டும்
மோடி அரசின் இந்துத்துவா மற்றும் புதிய தாராளமய நிகழ்ச்சி நிரலுக்கு எதிரான போராட்டத்தின் அனுபவத்திலிருந்து சில படிப்பினைகளை நாம் பெற வேண்டும். தற்போதைய புள்ளியில், இந்துத்துவா அச்சுறுத்தலுக்கு எதிரான போராட்டம், கார்ப்பரேட் ஆதரவு, புதிய-தாராளமய கொள்கைகளுக்கு எதிரான போராட்டத்துடன் ஒருங்கிணைந்த தொடர்புடையது என்பதை அங்கீகரிப்பது முக்கியம். பாஜக மற்றும் இந்துத்துவ சக்திகளை தனிமைப்படுத்துவதற்கான போராட்டம் சிபிஐ (எம்) மற்றும் இடதுசாரி சக்திகளின் வளர்ச்சியோடு இணைக்கப்பட்டுள்ளது.
மோடி அரசின் பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிரான போராட்டம் கடந்த சில ஆண்டுகளில் தீவிரமடைந்து வலுப்பெற்றது. 2020-21 ஆம் ஆண்டு மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரான ஓராண்டு கால, வரலாற்று சிறப்புமிக்க விவசாயிகளின் போராட்டத்தைக் கண்டது; விவசாயத்தில் கார்ப்பரேட்களின் நுழைவையும், விவசாயச் சந்தை சுரண்டலையும் எளிதாக்கும் நோக்கம் கொண்ட சட்டங்கள் அவை. மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டிய கட்டாயம் அரசுக்கு எழுந்தபோது, அரசாங்கத்தின் அடிப்படை கொள்கைகளுக்கு எதிரான முதல் குறிப்பிடத்தக்க வெற்றியோடு இந்த போராட்டம் முடிவுக்கு வந்தது.
நான்கு தொழிலாளர் தொகுப்பு சட்டங்களுக்கு எதிரான மத்திய தொழிற்சங்கங்களுடைய கூட்டு எதிர்ப்பு முன்னெடுத்த தொழிலாளர் வர்க்கத்தின் போராட்டங்களும், இந்த சட்டங்கள் அமல்படுத்தப்படுவதை தாமதப்படுத்தியுள்ளன. சமீப காலகட்டத்தில் சம்யுக்தா கிசான் மோர்ச்சா மற்றும் மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டுமேடை உருவாகியுள்ளது. பொதுத்துறை நிறுவனங்களின் தனியார்மயமாக்கல் மற்றும் பொதுத்துறை நிறுவன பங்குகளை விற்பனை செய்வதற்கு எதிராக பல துறை ரீதியான போராட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்கள் நடைபெற்றுள்ளன. திட்டப்பணி தொழிலாளர்கள், மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித்திட்ட தொழிலாளர்கள் மற்றும் முறைசாரா துறை தொழிலாளர்களின் பல்வேறு பிரிவினருடைய போராட்டங்களும் முன்னேற்றம் கண்டன.
இந்தப் போராட்டங்கள் அரசியல் தாக்கத்தை ஏற்படுத்திட வேண்டுமெனில், அவை, இந்துத்துவ எதிர்ப்பு, வகுப்புவாத எதிர்ப்பு பிரச்சாரங்களோடும் அணிதிரட்டல்களோடும் இணைக்கப்பட வேண்டும். உழைக்கும் மக்களுக்கு வர்க்க உணர்வு ஊட்டப்பட வேண்டும். இந்துத்துவ வகுப்புவாதத்தின் பிற வகையான வகுப்புவாதத்தின் பிற்போக்கான, பிளவுபடுத்தும் பங்கினை இது அம்பலப்படுத்தும். அப்போதுதான், பாஜக-ஆர்எஸ்எஸ், இந்துத்துவ கார்ப்பரேட் கூட்டணிக்கு எதிரான போராட்டம் அரசியல் ரீதியாக முன்னேற்றம் அடைய முடியும்.
இந்தக் கடமையை நிறைவேற்றுவதற்கு, இடதுசாரிகளின் முன்னணிப் படையாக விளங்கும் சிபிஐ(எம்)-இன் சுயபலத்தை வளர்ப்பது முதலாவதான, முதன்மையான தேவையாகிறது. வர்க்க, வெகுஜனப் போராட்டங்கள் மூலம் கட்சியின் சுயபலத்தை வளர்த்திட முடியும். இதற்கு கிராமப்புற ஏழைகள், கிராமப்புற செல்வந்தர்களின் கூட்டணியால் சுரண்டப்படுவதற்கு எதிரான கூலிப் போராட்டங்களை முன்னெடுப்பதற்கு அணிதிரட்டப்பட வேண்டும். கிராமப்புறங்களில் வர்க்கப் போராட்டத்தின் முக்கிய அம்சம் இதுதான். வர்க்க, வெகுஜனப் பிரச்சினைகளில் தொடர்ச்சியான உள்ளூர் போராட்டங்கள் இல்லாதது என்கிற பலவீனத்தை நாம் கடந்திட வேண்டும். இத்தகைய போராட்டங்களை கட்சி முன்னெடுத்து, ஓரளவிலான பலன்களைப் பெறும்போதுதான், கட்சியினால் வெகுஜன அடித்தளத்தைப் பெற முடியும். மூன்றாவது முக்கியமான பகுதி, இந்த அடித்தளத்தை ஒருங்கிணைப்பதற்கான அரசியல்ரீதியான, கருத்தியல்ரீதியான பணியாகும்.
இந்துத்துவத்தை ஒரு சித்தாந்தமாக ஏற்றுக்கொண்ட ஆளும் வர்க்கங்களுக்கான மாற்றின் கரு மையமாக இடதுசாரிகளால் மட்டுமே திகழ்ந்திட முடியும். எனவே, இடதுசாரிகளை ஒட்டுமொத்தமாக வலுப்படுத்துவது அவசியம்; இடதுசாரிகளின் கூட்டு நடவடிக்கைகளை, கூட்டு அரசியல் தலையீடுகளை வலுப்படுத்துவதே இதற்கு முதல் படி. மற்ற மதச்சார்பற்ற எதிர்க்கட்சிகளைப் போலல்லாமல், நவீன தாராளமயக் கொள்கைகளுக்கு எதிரான போராட்டத்தை இடதுசாரிகளால் மட்டுமே முன்னெடுத்துச் செல்ல முடியும். இடதுசாரிகளால் மட்டுமே, முதலாளித்துவ-நிலப்பிரபுத்துவ, ஏகாதிபத்திய ஆதரவு கொள்கைகளுக்கு உண்மையான மாற்றான, இடதுசாரி – ஜனநாயக மாற்றை முன்வைப்பதற்காக, பிற ஜனநாயக சக்திகளை ஒன்றிணைக்க முடியும்.
ஜனநாயகம், மதச்சார்பின்மை, கூட்டாட்சியைப் பாதுகாப்பது போன்ற பிரச்சினைகளில், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளுடைய வலுவான நிலைப்பாட்டை இந்தியா கூட்டணி பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதோடு கூடவே, பாஜவுக்கு எதிரான தேர்தல் போராட்டங்களை முதன்மையாக முன்னெடுத்திட, மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளின் பரந்த ஒற்றுமையும் வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.
தமிழில்: நர்மதாதேவி
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
