மோடியின் நிகழ்ச்சி நிரலா? மக்களின் நிகழ்ச்சி நிரலா?
என். குணசேகரன்
பாரதிய ஜனதா கட்சிக்கு அறுதி பெரும்பான்மை இல்லாத நிலையில் தனது நிகழ்ச்சி நிரலை அக்கட்சியால் தொடர்ந்து முன்னெடுக்க முடியுமா? பாஜகவின் நிகழ்ச்சி நிரல் என்பது ஆர் எஸ் எஸ் அமைப்பின் நிகழ்ச்சி நிரலான இந்துத்துவா இலக்குதான் என்பதை அனைவரும் அறிவார்கள். கடந்த 10 ஆண்டுகளில் இந்துராஷ்டிரம் அமைக்கும் தொலைநோக்கு இலட்சியத்தின் சில திட்டங்களை மோடி அரசு அமலாக்கியுள்ளது. தற்போது ஆட்சி அதிகாரம் அதற்கு மீண்டும் கிடைத்துள்ள நிலையில், மதசார்பின்மை, ஜனநாயகம் உள்ளிட்டு இந்தியா கொண்டுள்ள சிறந்த கோட்பாடுகளை முற்றாக அழித்தொழிக்கும் நடவடிக்கைகளில் மோடி ஆட்சி மேலும் முனைப்புடன் நடை போடுமா என்பதே தற்போதைய முக்கியமான கேள்வி. அதேபோன்று அடித்தட்டு வர்க்கங்களின் நலன்களை காவு கொடுத்து, மேலும் மேலும் பெருமுதலாளித்துவ உடைமை வர்க்கங்களின் நலனுக்காக இந்தியப் பொருளாதாரத்தை முன்னெடுக்க, முன்பைவிட முனைப்பாக மோடி ஆட்சி முயற்சிக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இந்த கேள்விகளுக்கு ஊடகவியலாளர்களும், அரசியல் ஆய்வாளர்களும் பல விளக்கங்களை அளிக்கலாம். உழைக்கும் மக்கள் இயக்கங்களும் வர்க்க இயக்கங்களும் ஆரூடங்களில் இறங்கி விவாதிக்க வேண்டியதில்லை. மோடி அரசாங்கம் முன்னெடுக்கும் ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சி நிரலை தடுக்கும் வகையில், மக்களிடையே விழிப்புணர்வை வலுப்படுத்துவதும், மக்கள் இயக்கங்களை தீவிரப்படுத்துவதும், பாட்டாளிவர்க்க ஒற்றுமையை வீரியமுடன் ஒருங்கிணைத்து, போராட்டங்களை முன்னெடுப்பதும் இன்றைய அவசர கடமைகளாக உள்ளன.
தொழிலாளர்கள், விவசாயிகள், நடுத்தர மக்கள் உள்ளிட்ட உழைக்கும் மக்களுக்கு ஒரு வரையறுக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல் தேவை. அந்தத் தளத்தில் நின்று, உழைக்கும் வர்க்கங்கள் அணி திரள வேண்டும். அந்த மாற்று நிகழ்ச்சி நிரலை உறுதியாகப் பற்றி, இன்று மக்களின் எதிரியாக உள்ள கார்பரேட் – வகுப்புவாத மோடி அரசின் நிகழ்ச்சி நிரலை முறியடிக்க வேண்டும்.
பாஜகவை நிராகரித்த மக்கள்
உண்மையில், மக்கள் தங்களின் எதிரியாக மோடி அரசினை கருதுகின்றனர் என்பதற்கு எடுத்துக்காட்டாகவே கடந்த நாடாளுமன்ற தேர்தல் அமைந்துள்ளது. 2019 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பாஜக பெற்ற இடங்களில் 63 இடங்களைப் பறித்து பாஜகவை மக்கள் தோற்கடித்திருக்கிறார்கள் என்பதும், 240 எண்ணிக்கைக்குள் பாஜகவை வீழ்ச்சியடைய செய்திருக்கிறார்கள் என்பதும், கணிசமான மக்கள் பாஜகவின் கொள்கைகளை நிராகரித்துள்ளனர் என்பதையே தெளிவாக்குகிறது.
தேர்தலில் வெளிப்பட்ட பாஜக எதிர்ப்புணர்வு மேலும் வலுப்பட வேண்டும். ஆனால், பாஜகவின் மீதான எதிர்ப்புணர்வு என்பதுடன் மக்களின் அரசியல் புரிதல் நின்றுவிடக் கூடாது. கார்ப்பரேட் இந்துத்துவா சித்தாந்தம் அடியோடு அகற்றப்பட வேண்டும். எனவே, இந்த தேர்தலோடு பாஜகவின் கார்பரேட் இந்துத்துவா கொள்கைக்கு எதிரான போர் முடிவடைந்து விடவில்லை. வலதுசாரி பிற்போக்கு கருத்தியலுக்கு எதிரான போராட்டம் தொடருகிறது.
தேர்தல் முடிவுகளின் மற்றொரு பக்கத்தையும் பார்க்க வேண்டியுள்ளது. பாஜக 2019ஆம் ஆண்டு பெற்ற வாக்கு சதவீதம் 37.7; 18-வது மக்களவைத் தேர்தலில் பாஜக பெற்ற வாக்கு சதவீதம் 36.56. அதாவது சதவீத அளவில் பாஜகவிற்கு ஏற்பட்டுள்ள சரிவு, சிறிய அளவிலானதே. இன்னமும் கணிசமான மக்கள் பாஜகவின் பிடியில் உள்ளனர் என்பதும், பாஜக மீது அவர்களுக்கு பற்று உள்ளது என்பதும் இந்த தேர்தலில் வெளிப்பட்டுள்ளது. இதிலும் கணிசமானவர்கள் இந்து அடையாள உணர்வு வலுப்பெற்ற, இந்துத்துவா ஆதரவு மன நிலையில் உள்ளவர்கள்.
மோடி மாயை
இந்த மக்களின் ஆதரவு உள்ளதால் மோடி அரசு தன்னுடைய பிற்போக்கு நிகழ்ச்சி நிரலை மீண்டும் முன்னெடுக்கும் ஆபத்து உள்ளது. அதேபோன்று, கார்ப்பரேட், பெருமுதலாளித்துவ சக்திகளை மேலும் வலுப்படுத்துகின்ற, அடித்தட்டு மக்களின் வாழ்வாதார நெருக்கடியை மேலும் தீவிரமாக்கும் ஆபத்தும் நிலவுகிறது.
பாஜகவின் மோசமான நிகழ்ச்சி நிரலின் தீய விளைவுகளை நன்குணர்ந்து, அந்த கட்சியை நிராகரித்த மக்கள் இனிவரும் காலங்களிலும் மோடி அரசின் மீதான தங்களது எதிர்ப்புக் குரலை வலுப்படுத்த வேண்டும். இந்தக் குரலின் வலிமையும், விரிவடையும் மக்கள் எதிர்ப்பு இயக்கமும்தான், மோடியின் மாயையில் மயங்கியிருக்கும் மக்களையும் அதிலிருந்து விடுவிக்கும் சூழலை உருவாக்கும். எனவே, உழைக்கும் மக்களின் இயக்கமும், மோடி அரசுக்கு எதிரான தளமாக அமைக்கப்பட்ட இந்தியா கூட்டணியும் முன்னை விட அழுத்தமாக அடியெடுத்து வைத்து முன்னேற வேண்டும். வர்க்க திரட்டலும் தீவிரமாக வேண்டும்.
கூட்டாட்சி பாதுகாக்கப்படுமா?
இந்தியாவின் கூட்டாட்சி கட்டமைப்பை கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசு தகர்த்து வருகிறது. மாநிலங்களின் நிதியாதாரங்களை மோடி அரசு பறித்து வந்துள்ளது. ஜிஎஸ்டி. வரி வசூல் ஏற்படுத்தும் இழப்பினை சரிக்கட்ட மாநிலங்களுக்கு நிதி அளிக்க மத்திய அரசு மறுத்து வந்துள்ளது. மாநிலங்களிலின் வருவாய் மீது வரிக் கொள்ளையை நிகழ்த்தும் மத்திய அரசு, மாநிலங்கள் செய்துவரும் மக்கள் நல திட்ட செலவுகளை கட்டுப்படுத்த நிர்ப்பந்தித்து வருகிறது.
இவ்வாறு மாநிலங்களின் உரிமை பறிக்கப்படும் சூழல் இன்னும் தொடருமா என்கிற கேள்வி எழுப்பப்படுகிறது. ஏனென்றால், ஆந்திராவின் தெலுங்குதேசம், பீகாரின் ஐக்கிய ஜனதாதளம் போன்ற மாநில கட்சிகளின் ஆதரவோடு மோடியின் ஆட்சி தற்போது நடைபெற்று வருவதால், மாநிலங்களின் மீதான தாக்குதலின் தீவிரம் குறையும் என்று என்று சிலர் கருதுகின்றனர். இவ்வாறு நம்புகிறவர்கள் மோடி அரசாங்கம், சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் இருவரின் நிர்ப்பந்தத்திற்கு பணிந்து கூட்டாட்சி மீதான தாக்குதல் குறையும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஆனால் ஒட்டுமொத்த மோடி அரசின் கொள்கை கட்டமைப்பில் பெரிய மாற்றங்கள் எதுவும் வராது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் லட்சியமான இந்து ராஷ்டிரம், அதிகார பகிர்வு கொண்ட மாநிலங்கள் என்ற கட்டமைப்பை ஏற்கவில்லை. மையப்படுத்தப்பட்ட அதிகாரம்தான் இந்து ராஷ்டிரத்தின் உயிர்நாடி. இதில் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை. மக்களின் இயக்கம்தான் உண்மையான கூட்டாட்சிக் கோட்பாட்டைப் பாதுகாக்கும் சக்தியாகும்.
வர்க்க நிகழ்ச்சி நிரல்
மக்களின் இயக்கம் எனும்போது, வர்க்கங்களின் ஒற்றுமையும் வர்க்கங்களின் ஒன்றுபட்ட போராட்டமும்தான். வர்க்கங்களின் நலன் காக்கும் நிகழ்ச்சி நேரலை முன்வைத்து மட்டுமே மோடியின் நிகழ்ச்சி நிரலை முற்றாக தடுத்து நிறுத்த முடியும். அத்துடன், சிறுபான்மை மக்கள், பெண்கள், தலித் மக்கள், பழங்குடி மக்கள், மாணவர்கள், வாலிபர்கள் என பல தரப்பினரும் இந்த மக்கள் இயக்கத்தின் உள்ளடக்கமாக விளங்குவார்கள்.
வாஷிங்டனை மையமாகக் கொண்ட ஒரு ஆய்வுக் குழு 2023ஆம் ஆண்டு மட்டும் 668 வெறுப்புப் பேச்சுக்கள் நிகழ்த்தப்பட்டு இருப்பதை பட்டியலிட்டுள்ளது. இவை அனைத்தும் இஸ்லாமியர்களை குறிவைத்து நிகழ்த்தப்பட்டவை. பாஜக ஆளும் மாநிலங்களில் பேசப்பட்ட வெறி பேச்சுக்கள் இவை. அதேபோன்று உத்தரப்பிரதேசத்தில் மிக அதிகமாக தலித் மக்களை குறிவைத்து தாக்குதல்கள் நடந்துள்ளன. தலித், பிற்படுத்தப்பட்ட மக்கள், பழங்குடி மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் இடஒதுக்கீட்டு கொள்கையை ஆர்எஸ்எஸ் அமைப்பு சித்தாந்த அடிப்படையில் எதிர்க்கிறது. உண்மையில், இந்த தேர்தலில் பாஜக அறுதிப் பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றிருந்தால், இட ஒதுக்கீட்டு முறையும் ஒழிக்கப்படும் சூழல் உருவாகியிருக்கும். எனவே, சிறுபான்மையினர், தலித், பழங்குடி மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் எழுச்சி பாஜகவுக்கு எதிராக களத்திலும், கருத்தியல் அடிப்படையிலும் வலுப்பட வேண்டும். வன்முறை, படுகொலை, வெறுப்பு பிரச்சாரம் அரசு அமைப்புகளைக் கொண்டு எதிர்க்கட்சிகளை வேட்டையாடும் ஜனநாயக விரோதம் அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமெனில், வலுவான மக்கள் இயக்கம் மாற்றுப் பாதையில் எழுச்சியுடன் முன்னேற வேண்டும். இதில் சிறுபான்மை, தலித், பழங்குடி மற்றும் பிற்படுத்தப்பட்ட உழைக்கும் மக்கள் முக்கிய அங்கம் வகிக்க வேண்டும்.
ஆர்.எஸ்.எஸ் பரிசீலனை எதற்கு?
அனைத்து கட்சிகளும் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தங்களது வெற்றி தோல்விகளை பரிசீலிக்கின்றனர். அதே சமயத்தில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் தங்களுக்கு தேர்தலில் கிடைத்த ஆதாயங்களைப் பற்றி ஆழமான பரிசீலனையில் இறங்கியுள்ளதாக தெரிகிறது. “ஆர்எஸ்எஸ். அமைப்பின் உண்மையான ஒரு சேவக் ஆணவத்துடன் நடந்து கொள்ள கூடாது” என்று ஆர்எஸ்எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் பேசியுள்ளார். இந்தப் பேச்சு, மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்களின் தேர்தல் பிரச்சாரம், தேர்தல் செயல்பாடுகள் பற்றிய விமர்சனம் என்று பலர் விளக்கம் அளிக்கின்றனர்.
அதேபோன்று, ஆர்.எஸ்.எஸ் அதிகாரப்பூர்வ ஏடான ஆர்கனைசர் பத்திரிகையில் “களத்தில் கடுமையாக பணியாற்றினால்தான் இலக்குகளை அடைய முடியும். போஸ்டர்களையும், செல்ஃபிக்களையும் சமூக ஊடகத்தில் பகிர்வது போன்ற வேலைகள் மட்டும் வெற்றிக்கான இலக்கை எட்ட முடியாது” என்று ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தவாதியான ரத்தன் ஷார்தா எழுதினார். ஊடகங்கள், சமூக ஊடகங்களை பயன்படுத்தி மோடியின் புராணம் பாடப்பட்டதை ஆர்எஸ்எஸ் தலைவர் விமர்சித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காததால், ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பாஜக தலைமையின் தவறுகள், குறிப்பாக, மோடி – ,அமித்ஷாவின் தேர்தல் வியூகங்களால்தான் இந்த தோல்வி நேர்ந்திருப்பதாக முடிவுகளுக்கு வரக்கூடும். ஆனால், உள்ளுக்குள் நிலவுவதாக ஊடகங்கள் சொல்லுகிற இந்த சண்டை, சச்சரவுகள் எல்லாம் ஏதோ இந்துத்துவா இயக்கம் தன்னை மாற்றிக் கொள்வதற்கு விவாதிப்பதாக ஒருவர் கருதினால், அது அவரது அறியாமையைத்தான் வெளிப்படுத்தும்.
இவை அவர்களது இந்துத்துவா இலக்கை மாற்றிக் கொள்வதற்கான முயற்சிகள் அல்ல. மாறாக இன்னும் வேகமாக இந்துத்துவா நிகழ்ச்சி நிரலை அமலாக்குவதற்கும், அதில் பலர் இழைக்கும் தவறுகள், விலகல்களை சரி செய்வதற்கும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள். எனவே, களத்திலும், கருத்தியல் தளத்திலும், மக்கள் மனங்களிலிருந்தும் பாஜகவை முற்றாக அப்புறப்படுத்துவதுதான் சரியான தீர்வாக அமையும். இதற்கு மக்களுக்கான மாற்று நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் மக்கள் அணி திரள வேண்டும்.
தென்னிந்தியாவில் பாஜக வளர்ச்சி?
மக்களவையில் பேசிய மோடி, தென்னிந்தியாவிலும் பாஜக வலுவான சக்தியாக வளர்ந்து வருவதை சிலாகித்து பேசினார். தமிழகத்தில் அதிமுக கரைந்து வருவதையும், தாங்கள் தனிப்பெரும் சக்தியாக வளர்ந்து வருவதாகவும் பாஜகவினர் பேசி வருகின்றனர். பல அரசியல் ஆய்வாளர்கள், திமுக, அதிமுக என்ற இரு துருவ அரசியல் முடிவுக்கு வந்துவிட்டதாக கருத்துக்களை பரப்பி வருகிறார்கள்.
இந்து ஆங்கில இதழ் வெளியிட்ட ஆய்வில், திமுக, அதிமுக ஆகிய இரு தரப்பினரின் வாக்கு தளத்தில் மிகச் சிறிய அரிப்பு ஏற்பட்டு, அது பாஜகவிற்கும், நாம் தமிழர் கட்சிக்கும் சென்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. ஆனால், திமுக, அதிமுக ஆகிய கட்சிகளின் ஆதரவுத் தளம் பெருமளவில் குறையாமல் நீடித்து வருகிறது. இதனால்தான், 234 சட்டமன்ற தொகுதிகளில் ஒரு தொகுதியில் கூட பாஜக முன்னணிக்கு வர இயலவில்லை. எனினும் பாஜக 11.24% வாக்குகளை பெற்றுள்ளதை சாதாரணமாக கடந்து செல்ல முடியாது.
திமுக பிரச்சாரத்தில் “திராவிட மாடல்” என்பதை முன்வைத்தது. அந்த முழக்கம் ஒரு பகுதி மக்களை ஈர்த்தது. ஆனால், திமுக மீதான அதிருப்தி வாக்குகள் பாஜகவிற்கும் நாம் தமிழர் கட்சிக்கும் சென்றிருப்பதை தேர்தல் புள்ளி விவரங்களில் காண முடிகிறது.
புதிய பாதையில் தமிழகம்
திராவிட கருத்தியலின் சமூக சீர்திருத்த, சமூக நீதி சார்ந்த கொள்கைகளையும் உள்ளடக்கி, பொருளாதார சமத்துவம் நோக்கிய புதிய பாதையில் தமிழகம் பயணிக்க வேண்டும். அத்தகைய நிகழ்ச்சி நிரல்தான் பெருவாரியான உழைக்கும் மக்களை உளப்பூர்வமாக வென்றெடுக்கும் அச்சாணியாகத் திகழும்.
உறுதியான, உழைக்கும் மக்களின் நிகழ்ச்சி நிரல்தான் தமிழ்நாட்டிற்கும் தேவை. நாம் தமிழர் கட்சி முன்வைக்கும் குறுகிய இனவாத முழக்கங்களிடமிருந்தும், பாஜகவின் நால்வருண சமூக பிற்போக்கு, பெரு முதலாளித்துவ, நிலப்பிரப்புத்துவ கொள்கைகளுக்கும் மாறுபட்டதாக அது அமையும். விரிந்து பரந்த வர்க்க ஒற்றுமைக்கான நிகழ்ச்சி நிரலாகவும் அது அமையும்.
இந்த நிகழ்ச்சி நிரல் திராவிட கருத்தியல் 1930களில் முன்னெடுத்த பகுத்தறிவு சார்ந்த அறிவியல் மனப்பான்மை, சாதி ஒழிப்பு, பெண்ணுரிமை, சமூக நீதி போன்ற கொள்கைகளை புதிய சூழலில் முன்னெடுப்பதாக இருக்கும். திராவிட இயக்கத்தின் வர்க்கத் தன்மை காரணமாக பின்தங்கியிருந்த உண்மையான நிலவினியோகம், தொழிலாளி, விவசாயி நலன்களை பாதுகாக்கிற தொழில், விவசாய கொள்கைகள் உள்ளிட்ட இடது மாடல் கொள்கைகள் கொண்டதாகவும் அமைந்திடும்.
வர்க்கப் போராட்ட பாதை
மோடி ஆட்சிக்கு எதிராக, அனைத்து வர்க்க பிரிவினரும் கடந்த 10 ஆண்டுகளில் போராடி வந்தனர். தொழிற்சங்கங்கள் ஒன்று சேர்ந்து பல அகில இந்திய வேலைநிறுத்தங்களை நடத்தி வந்துள்ளனர். அதேபோன்று, விவசாயிகளின் வரலாறு காணாத எழுச்சியால் மோடி அரசாங்கம் மூன்று விவசாய சட்டங்களை திரும்பப் பெறும் நிலை ஏற்பட்டது.
இந்த விவசாய போராட்டங்கள் வலுவாக நடைபெற்ற ஹரியானா, பஞ்சாப், உத்தரப் பிரதேசத்தின் மேற்கு பகுதி, ராஜஸ்தான், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் பாஜக தேர்தலில் தோல்வியை சந்தித்துள்ளது. இந்தியா கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன. இதிலிருந்து படிப்பினைகள் பெற வேண்டும். இன்றைய விவசாய நெருக்கடி, தொழில் நெருக்கடி, வேலையின்மை, விலை உயர்வு போன்ற மக்களின் வாழ்வாதார பிரச்சனைகளில் மாற்று கண்ணோட்டத்துடன் மக்கள் இயக்கம் பலம் பெற வேண்டும். வர்க்கங்கள் அணி திரட்டப்பட வேண்டும். இந்த வர்க்கப் போராட்ட பாதையே இந்துத்துவா நிகழ்ச்சி நிரலை முறியடித்து மக்கள் நலனுக்கான நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பதற்கான சூழலை ஏற்படுத்தும்.
நகர்ப்புற நெருக்கடி
கடந்த பல பத்தாண்டுகளாக பாஜகவின் செல்வாக்கு இந்தியாவின் பெரிய நகரங்களில் இருந்து வருவதை காண முடியும். தற்போது நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலிலும் ஓரளவு பெரிய நகரங்களில் பாஜக தன்னுடைய தளத்தை தக்க வைத்துள்ளது.
இருந்தாலும். வேகமாக வளர்ந்து வரும் நகரங்களிலும். நகர்ப்புறமாக வளர்ந்து வரும் கிராமப் பகுதிகளிலும் பாஜக தோல்வியை தழுவியுள்ளது. இதன் பொருள் என்ன? மோடி அரசின் நவீன தாராளமய கொள்கைகள் நகர்ப்புற நெருக்கடிகளையும், நகர்ப்புற, அடித்தட்டு உழைக்கும் மக்களின் அன்றாட வாழ்க்கை இன்னல்களையும் தீவிரமாக்கியுள்ளது. மோடி அரசின் நகர்ப்புற கொள்கைகள் அனைத்தும், பாஜக முன்வைக்கும் மத அடையாள திரட்டல் நிகழ்ச்சி நிரலை மீறி, கடும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. எனவே நகர்ப்புற மக்கள் இயக்கம், நகர்ப்புறங்களின் தொழிலாளர்கள், முறைசாரா, சமூக பாதுகாப்பற்ற வேலைகளில் வறிய வாழ்க்கை நடத்தும் உழைப்பாளிகள் நலனுக்கான கோரிக்கைகளை கொண்ட மாற்று நிகழ்ச்சி நிரலே பாஜகவை நகர்ப்புறங்களில் இருந்து துடைத்தெறியும்.
மக்களுக்கான மாற்று
மதசார்பின்மை, ஜனநாயகம், பொருளாதார இறையாண்மை, உண்மையான கூட்டாட்சி, சமூகநீதி ஆகியவையே இந்த மாற்று நிகழ்ச்சி நிரலின் முக்கிய அடித்தளம்.
*விலைவாசியை கட்டுப்படுத்துதல்,
*உணவு பாதுகாப்பு,
*பொது சுகாதாரத்தை வலுப்படுத்துதல், “வேலைவாய்ப்பு,
*நிலச் சீர்திருத்தம் *அனைவருக்கும் கல்வி உரிமை
*உயர் கல்வியில் தனியார்மயத்தை ஒழிப்பது *ஊழல் ஒழிப்பு
*அணிசேரா வெளியுறவுக் கொள்கை
*விவசாயிகளுக்கு ஆதார விலையை உறுதி செய்வது *ரூபாய் 26,000 குறைந்தபட்ச, சட்டப்பூர்வ ஊதியத்தை உறுதி செய்வது,
*பொது விநியோக திட்டத்தை விரிவுபடுத்துவது. *அனைத்து துறைகளிலும் கண்மூடித்தனமான, தனியார்மயத்தை தடுத்து நிறுத்துவது
*குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியம்
*பொதுத்துறை தனியார் மயமாக்கலை தவிர்ப்பது.
*தனியார் துறையில் இடஒதுக்கீடு
*பெரும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கூடுதலான வரி விதிப்பு.
*நீதித்துறை, தேர்தல் ஆணையம் மற்றும் அரசியல் அமைப்பு சார்ந்த நிறுவனங்களின் சுதந்திரம், சுயாட்சியை பாதுகாப்பது.
*மக்களின் உரிமைகளை நசுக்கும் சட்டங்களை ரத்து செய்ய வைப்பது.
*குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்வது. *ஆதிதிராவிடர், பழங்குடி மக்கள் நலன்களை பாதுகாப்பது,
*பெண்கள், குழந்தைகள் மீதான தாக்குதலை தடுக்க நடவடிக்கைகள். *பெண்களுக்கு சம உரிமை *விவசாய தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் *தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை விரிவாக்குவது
*உள்ளாட்சியில் ஜனநாயகம் *அனைத்து மொழிகளுக்கும் சமத்துவம்.
இது போன்ற, இன்னும் பல பல்வேறு துறை சார்ந்த மக்களின் கோரிக்கைகளை முன்வைத்து மக்களின் இயக்கம் வலுப்படுத்தப்பட வேண்டும்.
இந்த மாற்று கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு, உழைக்கும் வர்க்கங்கள் அணிதிரட்டப்பட்டால், இந்தியாவை இந்துத்துவாவின் பிடியிலிருந்து அகற்றி, மக்கள் சமத்துவத்தை நோக்கி பயணிக்கும் சூழலை ஏற்படுத்த முடியும்.
You may also like
2 comments
Comments are closed.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

நல்ல கட்டுரை
கட்டுரையை ஒரே மூச்சில் முழுமையாக வாசித்து முடித்தேன்
தேர்தலுக்குப் பிறகு உள்ள அரசியலை புரிந்து கொள்ள எனக்கு உதவுகிறது திராவிடக் கட்சிகள் முதற்கொண்டு மாநில கட்சிகள் எதுவும் தற்போது கூட்டாட்சி கட்டமைப்புக்கு எதிரான தாக்குதலை எதிர்த்து குரல் எழுப்புவார்கள் ஆனால் அது வெறும் ஈனக்குரலாகவே இருக்கும் அவர்களை பொறுத்தவரை அவர்களது ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் மாநில நலன்களையோ மக்கள் நலன்களுக்கு பின்னால் இருந்து கொண்டு அவர்களது சுயநலன்களையே பாதுகாக்க முற்படுவார்கள் என்பது அது கருத்து