
கம்யூனிசத்தின் கோட்பாடுகள்
ஃப்ரெடெரிக் எங்கெல்ஸ்
கம்யூனிஸ்ட் லீக்-குக்காக 1847-இல் எங்கெல்ஸ் இரண்டு வரைவுத் திட்டங்களை (Draft Programmes) கேள்வி-பதில் வடிவில் தயாரித்தார். முதலாவதை, 1847 ஜூன் மாதத்தில், “Draft of Communist Confession of Faith” என்ற பெயரிலும், இரண்டாவதை, அக்டோபர்-நவம்பர் மாதத்தில், “Principles of Communism” என்ற பெயரிலும் எழுதினார். இவற்றுள் இரண்டாவது வரைவு முதன்முதலாக 1914-இல் ஜெர்மனியில் சமூக ஜனநாயகக் கட்சி இதழில் வெளியிடப்பட்டது. முதல் வரைவு 1968-ஆம் ஆண்டில்தான் முதன்முதலாகக் கண்டறியப்பட்டு, 1969-இல் ஹம்பர்க்கில் வெளியிடப்பட்டது. இரண்டு வரைவுகளையும் ஒப்பிட்டு நோக்கினால், “கம்யூனிசத்தின் கோட்பாடுகள்” என்னும் இந்த இரண்டாவது வரைவு, முதலாவது வரைவின் திருத்தப்பட்ட வடிவமாகத் தோன்றுகிறது. கம்யூனிஸ்ட் லீக்கின் இரண்டாவது மாநாட்டில் (1847, நவம்பர் 29 – டிசம்பர் 8) மார்க்ஸும் எங்கெல்ஸும் இரண்டாவது வரைவில் காணப்படும், கம்யூனிசத்தின் விஞ்ஞான அடிப்படையிலான கோட்பாடுகளை வலியுறுத்திப் பேசினர். கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையைத் தயாரிக்கும் பொறுப்பை மாநாடு இருவருக்கும் வழங்கியது. மார்க்ஸ், எங்கெல்ஸ் இருவரும் சேர்ந்து ‘கம்யூனிஸ்ட் அறிக்கை’யை உருவாக்கும்போது, “கம்யூனிசத்தின் கோட்பாடுகள்” என்னும் இந்த வரைவு அறிக்கையில் காணப்படும் கருத்துருக்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டனர்.
இதன் ஆங்கில மூலம் 1969-இல் மாஸ்கோ, முன்னேற்றப் பதிப்பகம் வெளியிட்ட தேர்வு நூல்கள், தொகுதி-1, பக்.81-97 இல் உள்ளது.
ஆங்கில மொழியாக்கம்: பால் ஸ்வீஸி.
இத்தமிழ் மொழிபெயர்ப்பில் சதுர அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளவை அனைத்தும் மொழிபெயர்ப்பாளரின் குறிப்புகளாகும்.
கேள்வி 1: கம்யூனிசம் என்றால் என்ன?
கம்யூனிசம் என்பது பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்கான சூழ்நிலைகள் பற்றிய கொள்கை விளக்கம் ஆகும்.
கே 2: பாட்டாளி வர்க்கம் என்றால் என்ன?
பாட்டாளி வர்க்கம் என்பது சமுதாயத்தில் நிலவுகிற, முற்றாக தன் உழைப்பை விற்பனை செய்வதன் மூலம் மட்டுமே வாழ்ந்து வருகிற, எந்த வகையான மூலதனத்திடம் இருந்தும் லாபம் பெற்றுக் கொள்ளாத ஒரு வர்க்கமாகும். இந்த வர்க்கத்தின் இன்பமும் துன்பமும், வாழ்வும் சாவும், இதன் இருப்பும்கூட, உழைப்புக்கான தேவையின் மீதே சார்ந்திருக்கின்றன. அதன் காரணமாக, மாறிக்கொண்டே இருக்கும் வணிக நிலைமையை, கட்டுப்பாடற்ற வணிகப் போட்டியின் புரியாத போக்குகளை சார்ந்திருக்கின்றன. ஒரு சொல்லில் கூறுவதெனில், பாட்டாளி அல்லது பாட்டாளி வர்க்கம் என்பது 19-ஆம் நூற்றாண்டின் உழைக்கும் வர்க்கத்தைக் குறிக்கிறது.[1]
கே 3: பாட்டாளிகள் என்பவர்கள் எப்போதுமே இருந்திருக்கவில்லையா?
இல்லை. ஏழை மக்களும் தொழிலாளி வர்க்கத்தினரும் எப்போதும் இருந்து வந்துள்ளனர். மேலும், தொழிலாளி வர்க்கம் பெரும்பாலும் ஏழ்மையாகவே இருந்துள்ளது. ஆனால், இதற்கு முன்னர், இன்று இருப்பதைப் போன்ற சூழ்நிலைமைகளில் வாழ்ந்து வருகின்ற தொழிலாளர்களும் ஏழை மக்களும், வேறு சொற்களில் கூறுவதெனில், இன்றைய சுதந்திரமான, கட்டுப்பாடற்ற [வணிகப்] போட்டிகள் எப்போதும் இருந்திருக்கவில்லை; அதைப் போலவேதான், இன்றைய பாட்டாளி வர்க்கத்தினரும். (தொடரும்)
—————————————————————————————————————————————-
[1] மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகியோர் பின்னாளில் எழுதிய நூல்களில், “உழைப்பை விற்று”, “உழைப்பின் மதிப்பு”, “உழைப்பின் விலை” என்னும் சொல்தொடர்களுக்குப் பதிலாக, மிகவும் துல்லியமாக, “உழைப்புச் சக்தியை விற்று”, “உழைப்புச் சக்தியின் மதிப்பு”, “உழைப்புச் சக்தியின் விலை” என்னும் சொல்தொடர்களைப் பயன்படுத்தியுள்ளனர்.
தமிழில்: மு. சிவலிங்கம்
You may also like
No comments
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

Leave a Reply