மார்க்சிய தத்துவ ஆசான் யெச்சூரிக்கு செவ்வணக்கம்!
ச. லெனின்
தோழர் யெச்சூரிக்கு இருந்த ஆழ்ந்த சித்தாந்த தெளிவும், செயலாற்றலும், மிக இளம் வயதிலேயே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட கட்சியின் உயர்பொறுப்பிற்கு அவர் வருவதற்கு ஆதாரமாக அமைந்தன. அந்த அடித்தளமே அவர் கொள்கை உறுதியோடு இறுதிவரை செயலாற்ற வழிவகுத்தது. “மார்க்சிய சித்தாந்தத்தை நடைமுறையில் பொருத்தவேண்டும் என்கிற ஒரே நோக்கத்திற்காகவே அதில் நாம் நிபுணத்துவம் பெறவேண்டும்” என்ற மாவோவின் கருத்தை யெச்சூரி தனது எழுத்துகளில் சுட்டிக்காட்டியுள்ளார். மாவோ முன்வைத்த வழிகாட்டுதலின் வழிபட்டே யெச்சூரியின் மார்க்சிய நிபுணத்துவம் வெளிப்பட்டது.
”இயக்கவியல் தத்துவமானது, முடிவான அறுதி உண்மை எனும் கருத்தாக்கங்களையும், அதனோடு தொடர்புடைய மனித குலத்தின் அறுதி நிலைகள் குறித்த கருத்தாக்கங்களையும் அழித்து ஒழிக்கிறது. அதற்கு இறுதியானது, அறுதியானது, புனிதமானது என்று எதுவிமில்லை” என்கிறார் எங்கெல்ஸ். இந்த இயக்கவில் பார்வை கொண்டே யெச்சூரியின் அனைத்து ஆய்வுகளும் அமைந்திருந்தன. மார்க்சியம் என்பது வளரும் தத்துவம் என்கிற வகையில், அவ்வப்பேது நிகழும் வரலாற்றுப்போக்குகளை இயக்கவில் கண்ணோட்டத்தில் ஆய்ந்தறிந்து அதன் அடிப்படையில் மார்க்சியத்தை மார்க்சியர்கள் வளர்த்தெடுக்கின்றனர். இந்தியாவில் இ.எம்.எஸ் காலத்திற்கு பிறகு அப்படியான ஒரு மார்க்சிய தத்துவாகதியாக யெச்சூரி விளங்கினார் என்றால் அது மிகையல்ல.
சோசலிசமே எதிர்காலம்
சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள மாற்றங்களின் அடிப்படையில் தற்கால உலக நிலைமைகளை ஆய்ந்தறிந்து, உலகமய காலத்தில் சோசலிசம் குறித்த யெச்சூரியின் பங்களிப்பு குறிப்பிடத்தகுந்ததாகும். சோசலிச சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சி குறித்த காரணகாரியங்களைச் சுட்டுவதற்கு முன்னதாக அதன் சாதனைகளையும் அது உலகிற்கு வழங்கிய அற்புதமான முன்னுதாரணங்களையும் விளக்குகிறார். ரஷ்யாவின் ”புரட்சிகரமான மாற்றங்கள் மனிதகுல நாகரிகத்தில் பண்பு ரீதியான மாற்றங்களைப் பாய்ச்சல் வேகத்தில் கொண்டுவந்தது. அவை நவீனநாகரிக உலகின் மீது அழிக்க முடியாத முத்திரைகளைப் பதித்துள்ளன. சோசலிச அமைப்பு முறை மிகக் குறுகிய காலத்தில் விரைவாகவும் உயர்ந்த தரத்திலுமான முன்னேற்றங்களைப் பதிவு செய்திருந்தது. இந்த மகத்தான முன்னேற்றங்கள் பின்னுக்குத்தள்ளப்பட முடியாதவை என்கிற நம்பிக்கையைத் தோற்றுவித்திருந்தது” என்று குறிப்பிடுகிறார்.
இயக்கவியலின் சாரம் என்று லெனின் குறிப்பிட்ட திட்டவட்டமான சூழல் குறித்த திட்டவட்டமான ஆய்வில் ஏற்பட்ட வழுவல் அல்லது எதார்த்தத்திற்கு மாறான திரிபு வேலைகள் அதன் வீழ்ச்சிக்கு வழிவகுத்தன என்றார். “வீழ்ச்சியடைந்த முதலாளி வர்க்கம் நூறு மடங்கு வலிமையுடன் திருப்பித்தாக்கும் என்று லெனின் விடுத்திருந்த எச்சரிக்கை கவனத்தில் கொள்ளப்படவில்லை என்பதோடு, உண்மை நிலைகள் திரித்துக் கூறப்பட்டதும், குறிப்பாக மார்க்சிய லெனினியத்தின் புரட்சிகர உள்ளடக்கத்திலிருந்து திசை மாறிச்செல்லும் போக்கும் பிந்தைய ஆண்டுகளில் சோவியத் யூனியனில் காணப்பட்டது என்று யெச்சூரி சுட்டிக்காட்டுகிறார். முதலாளித்துவம் தனது சித்தாந்தத்தை மிகச்சிரியாக அமலாக்கினால் தோற்றுப்போகும், கம்யூனிசம் தனது சித்தாந்தத்தைத் தவறாக அமலாக்கினால் தோற்றுப்போகும் என்று இ.எம்.எஸ் குறிப்பிட்டதை மேற்கண்ட அம்சங்கள் எடுத்துக்காட்டின. அதேநேரம், சோசலிசத்தைக் கட்டமைப்பதற்கான ஆயத்த (Readymade) வழிமுறைகள் எதுவும் இல்லை. ”மனிதகுல முன்னேற்றத்தில் இதுவரை வேறு எவரும் பயணிக்காத பாதையில் சோசலிசம் பயணம் மேற்கொண்டது. முன்னரே தீர்மானிக்கப்பட்ட திட்டமோ விதிமுறைகளோ எதுவும் அதற்கு இல்லை” என்பதையும் யெச்சூரி குறிப்பிடுகிறார்.
பாட்டாளி வர்க்க புரட்சியானது நீண்ட காலம் பிடிக்கக் கூடியது எனவும் கவனத்துடனும் எச்சரிக்கை உணர்வுடனும் நடைபெறக்கூடிய ஒரு நடைமுறை எனவும், முதலாளி வர்க்கப் புரட்சியைப்போல் விரைவாகவும் வெளிப்படையான பிரகாசத் தன்மையுடனும் நடைபெறும் ஒன்றல்ல எனும் மார்க்சின் வார்த்தைகளைக் கவனப்படுத்துகிறார். ரஷ்ய அனுபவத்தைக் கருத்தில் கொண்டு உற்பத்தி சக்திகளை வளர்த்தெடுக்கவும் நவீன உலக நிலைமைகளைக் கவனத்தில் கொண்டு அதை எதிர்கொள்ளும் ஆற்றலுடன் கூடிய வகையில் சோசலிசத்தை சீனாவில் கட்டியெழுப்புவதற்காகவும் சீனா செய்துவரும் சீர்திருத்தங்களையும் நடவடிக்கைகளையும் யெச்சூரி சுட்டிக்காட்டுகிறார். சோவியத் ரஷ்யா வீழ்ந்தவுடன், சோசலிசம் தோற்றுவிட்டது என்று பிரச்சாரம் செய்த முதலாளித்துவவாதிகளின் முகத்தில் அறைவதுபோல், முதலாளித்துவத்தின் வெற்றி எங்கே இருக்கிறது எனறு கேள்வி எழுப்பினார். முதலாளித்துவத்தின் நவ தாராளமய பொருளாதாரக் கொள்கைகளின் விளைவாக உழைக்கும் ஏழை, எளிய மக்கள் சந்திக்கும் துயரங்களை ஆதாரங்களோடு முன்வைக்கிறார். இதுதான் முதலாளித்துவத்தின் வெற்றியா என்று கேள்வி எழுப்புகிறார். பசி, பட்டினி, போர் என ஏகாதிபத்தியத்தின் கொடும் கரங்களில் சிக்குண்டுள்ள மக்களின் வலிகளை எடுத்துரைத்து, இவற்றிலிருந்தெல்லாம் உலகம் விடுபடுவதற்கான ஒரே வழி சோசலிசம்தான் என்பதை அவர் நிறுவுகிறார். எதார்த்த நிலைமைகளிலிருந்து எதிர்காலத்திற்கான நம்பிக்கையை யெச்சூரி வழங்குகிறார்.
சொல்வளமும் அறிவாற்றலும்
“திட்டவட்டமான சூழல்கள் குறித்து, திட்டவட்டமான ஆய்வை மேற்கெள்வதுதான் இயக்கவியலின் உயிர்நாடி” என்று மாமேதை லெனின் வலியுறுத்தியதை மிகக் தீவிரமாக தனது வாழ்நாள் முழுக்க சீத்தாராம் யெச்சூரி பின்பற்றினார். இந்தியச் சமூகத்தில், சமூக ஒடுக்குமுறைகள் குறித்தும், மதவதம் குறித்தும், மொழி உரிமைகள் குறித்தும் அவரது ஆய்வுகளும் கருத்தாக்கங்களும் முக்கியமானவையாகும். அடையாள அரசியல் முன்னெழுந்த தென்னூறுகளின் காலத்தில் யெச்சூரியின் பங்களிப்பு அவற்றை மார்க்சிய நோக்கில் அணுகுவதற்கு உதவியது. இந்தியாவில் வகுப்புவாத சக்திகளின் வளர்ச்சியையும் அதை எதிர்கொள்வதிலும் முன்னணி வீரராகவே திகழ்ந்தார். பொது மக்கள் ஏற்கும் வகையில் அவற்றை எடுத்துரைக்கும் சொல்வளத்தையும் அறிவாற்றலையும் யெச்சூரி பெற்றிருந்தார்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் பங்கேற்பதில் துவங்கி, குறைந்தபட்ச செயல்திட்டத்தை வகுப்பது, அதில் தலையிடுவது எனக் குறிப்பிடுத்தகுந்த பணிகளை அவர் செய்தார். இப்படியான முன்னெடுப்புகளின்போது, பல அம்சங்களை மார்க்சிய நோக்கில் ஆய்ந்து சில முடிவுகளுக்கு அவர் வந்தார். இந்த ஆய்வின் முடிவுகளை, அது வலியுறுத்தப்படுவதற்கான எல்லைவரை உறுதியாக முன்வைத்துள்ளார். சித்தாந்தத்தை நடைமுறைப்படுத்தும்போது கைகொள்ள வேண்டிய உத்திகளையும், அதன் அமலாக்கத்தையும், அதனால் ஏற்படவுள்ள விளைவுகளையும், முன்வைத்து நடத்தப்படும் உட்கட்சி விவாதங்களே அமைப்பை முன்னகர்த்துகின்றன. சித்தாந்தம், அமலாக்கம், படிப்பினை என்பதன் அடிப்படையில் நடைபெறும் உட்கட்சிப் போராட்டங்கள், அதனை மேலும் வளர்த்தெடுக்கின்றன. அகநிலை வாதங்களில் சிக்குண்டிருக்கும் கருத்தாக்கங்கள், இவ்வாறான தொடர் விவாதங்களின் மூலமாகவும், படிப்பினைகளின் மூலமாகவுமே, புதிய வழியைக் கண்டடைகின்றன. “கம்யூனிஸ்ட கட்சியின் அரசியல் – ஸ்தாபன செயல் வல்லமையைத் தீர்மானிக்கும் ஒரு காரணியாக ‘அகநிலை வாதத்திற்கு’ எதிரான போராட்டம் திகழ்கிறது” என்கிறார் யெச்சூரி. எவ்வளவு விரிந்த விவாதங்களை முன்வைத்தபோதும், கட்சியின் ஜனநாயக மத்தியத்துவக் கோட்பாட்டிற்கு உட்பட்டதாகவே அவை அமைந்திருந்தன.
நயமான முதலாளித்துவ கருத்தாக்கங்கள்
எப்போதும் போல் முதலாளித்துவ கருத்தாக்கத்தால் உந்தப்பட்ட ஊடகங்களும் சில தனிநபர்களும், யெச்சூரி சிறப்பானவர்; ஆனால், அவரது கருத்துக்களுக்குக் கட்சி இடம் கொடுக்கவில்லை. அந்த நேரத்தில் அவர் கூறியதை ஏற்றிருந்தால், கட்சி இப்படி இருந்திருக்கும்; அப்படி இருந்திருக்கும் என்றெல்லாம் கம்யூனிசத்தின் வளர்ச்சியின் மீது மிகுந்த அக்கறை உள்ளவர்கள்போல், நயமாக பேசியும் எழுதியும் வருகின்றனர். முன்மொழிவுகளும், ஏற்பும், மறுப்பும், அமலாக்குவதும், படிப்பினைகளும் எனப் பயணிப்பதுதான கம்யூனிஸ்ட் இயக்கமாகும். தனிநபர் சாகசவாதத்தை முன்மொழியும் முதலாளித்துவ வாதிகளுக்கு இவை புரிபடாது; அல்லது உள்நோக்கத்தோடு அவ்வாறு காட்டிக்கொள்வர்.
“ஒரு கம்யூனிஸ்டுக்கு மார்க்சிய – லெனினிய கோட்பாடுகளே அவர்களின் நடவடிக்கை அனைத்திலும் அவர்களின் வாழ்நாள் முழுவதிலும் வழிகாட்டியாக அமைந்திருக்கிறது. தொழிலாளி வர்க்கத்தின் வெற்றி, மனிதக் குலத்தின் விடுதலை, கம்யூனிசத்தின் வெற்றி எனும் ஒரே லட்சியமே அவரின் செயல்பாடுகளைத் தீர்மானிக்கிறது” என்கிறார் ஸ்டாலின். கம்யூனிஸ்ட் இயக்கத்தைப் பொறுத்தவரை கட்சி உறுப்பினர்களைக் கட்சியும், கட்சியைக் கட்சி உறுப்பினர்களும் வளர்க்கின்றனர். ஒன்று தாழ்ந்தும் ஒன்று உயர்ந்தும் நிற்பதில்லை. இரண்டும் ஒன்றோடொன்று ஒருங்கிணைந்வையாகும். அந்த ஒருங்கிணைவின் வெளிப்பாடுதான் யெச்சூரி.
கட்சி எல்லாவற்றுக்கும் மேலானது
“உட்கட்சிப் போராட்டம் என்பது கட்சி ஸ்தாபனத்தைப் பலப்படுத்தி அதன் போராட்ட ஆற்றலைப் பெருக்கும் ஆயுதம்” என்கிற மாவோவின் வார்த்தைகளையும், “கட்சி என்பது எல்லாவற்றுக்கும் மேலானது; தலைசிறந்த ஸ்தாபன அமைப்பைக் கொண்ட தொழிலாளி வர்க்கத்தின் மிகமிக உணர்வு மிக்க, தீரமான மிகக் கட்டுப்பாடான படையாக அமைந்ததாகும்” என்கிற லெனினின் கூற்றையும் முழுமையாக உள்வாங்கிச் செயலாற்றியவர் யெச்சூரி.
வரலாறு தனிநபர் சாகசங்களால் படைக்கப்படுவதில்லை என்கிற மார்க்சிய புரிதல் நம்மை ஸ்தாபனத்தின் அவசியத்தை நோக்கி நகர்த்துகிறது. இப்புரிதலைத் தனது எழுத்துகளிலும் செயலிலும் யெச்சூரி தொடர்ந்து வெளிப்படுத்தினார். எவ்வளவு சிறப்பான ஆய்வை மேற்கொண்டபோதும், அதன் பலனாக எவ்வளவு சிறப்பான அரசியல் நிலைப்பாட்டை எடுத்தாலும், அதன் அமலாக்கம் என்பது கட்சி ஸ்தாபனத்தின் வலுவைப் பொறுத்தே அமையும் என்பதை வலியுறுத்தினார். “அரசியல் நிலைப்பாடு நூறு சதவீதம் சரியாக இருக்கலாம். ஆனால், இந்த சரியான நிலைப்பாட்டை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வல்லமை படைத்த ஸ்தாபனம் இல்லையெனில், அந்த நூறு சதமான சரியான நிலைபாட்டிற்கு எந்த அர்த்தமும் இல்லை” என்கிற ஸ்டாலினின் வார்த்தைகளைக் கட்சி ஸ்தாபனத்தில் யெச்சூரி விலியுறுத்தினார். மக்களிடம் அரசியல் உணர்வை வளர்த்தெடுப்பதற்கும், புரட்சிகர எழுச்சிக்கு அவர்களைத் தயார்படுத்துவதற்கும், கட்சி ஸ்தாபனத்திற்கு முக்கியப் பங்குண்டு என்பதைச் சுட்டிக்காட்டினார். மாணவர் இயக்கத்தில் செயல்பட்ட காலம்தொட்டு அந்தப் புரிதலோடே செயலாற்றினார். அதுவே, அவசர நிலை காலக்கட்டத்திலும் பல்கலைக்கழகச் செயல்பாட்டை முடக்க நினைத்த அரசின் அடக்குமுறைக்கு எதிராக மக்களிடம் நிதி திரட்டி, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஒத்துழைப்போடு, பல்கலைகழகத்தைத் தொடர்ந்து நடத்த வைத்தது. மார்க்சிய தத்துவ ஒளியாகவும், ஆற்றல் மிகுந்த செயல் திறனாகவும் விளங்கிய தோழர் யெச்சூரி நமக்கு என்றும் வழிகாட்டுவார். செவ்வணக்கம் தோழர்.
You may also like
1 comment
Comments are closed.
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

பூசி மொழுகி மிகவும் மேலோட்டமாக எழுதப்பட்டிருக்கிறது. எச்சுரி
பொறுப்பேற்தற்கு முன்னரே நாடாளுமன்ற சந்தர்ப்ப வாதம் மாநிலக்குழுக்களை
தொத்திக் கொண்டது. கட்சி புரட்சிகர தன்மையை இழந்து விட்டது.
நெறிப்படுத்துமியக்கம் தோல்வியை சந்தித்துவிட்டது எச்சுரியின் கனவு நிறைவேற
கட்சி உறுப்பினர்களின் தன்மையில் குழுக்களின் வேலை முறையில் மாற்றம் தேவை
என்ற வகையில் எழுதுவது அவசியம் என்பது என்கருத்து