மோடி அரசின் மேலும் ஒரு தாக்குதல்
பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா
அறிமுகம்
இதுவரை ஒன்றிய அரசின் பட்ஜெட்டை தொடர்ந்து ஏழு முறை தாக்கல் செய்துள்ள நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் பிப்ரவரி 1, 2025 எட்டாம் முறையாக பட்ஜெட் தாக்கல் செய்தார். இவரது பட்ஜெட்களை தொடர்ந்து கவனித்தால், இவை எதிலும் மக்கள் நலன் சார்ந்த பார்வை இருந்ததில்லை என்பதைக் காண முடியும். இவரது எட்டாவது பட்ஜெட்டும் இதேபாணியில்தான் அமைந்துள்ளது. அதிதீவிர நவீன தாராளமய கொள்கைகள் மூலம் இந்திய பொருளாதாரத்தை, இந்நாட்டு, பன்னாட்டு பெருமுதலாளித்துவ நிறுவனங்கள் கையில் ஒப்படைக்கும் பாதையில்தான் இந்த பட்ஜெட்டும் பயணிக்கிறது.
நாட்டின் நிலைமை – தொடரும் துயரம்
பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஒன்றிய அரசை ஆண்டு வரும் பாஜக-ஆர்எஸ்எஸ், நாட்டின் பொருளாதாரத்தை நாசமாக்கி வருகிறது. 2014 – 15 காலத்தில் உலக சந்தையில் கச்சா எண்ணய் விலை தொடர்ந்து சரிந்தபோது கூடுதல் கலால் வரி போட்டு மக்களுக்கு நிவாரணம் மறுத்தது. அதனை தனது பொருளாதார ஆய்வறிக்கையில் சாதனையாக சிலாகித்து கொண்டாடியது. 2016 நவம்பரில் பணமதிப்பு இழப்பு நடவடிக்கை மூலம் பொருளாதாரத்தை முற்றிலுமாக சிதைத்தது. மக்களை மந்தநிலை பொருளாதாரத்திலும் கடும் நெருக்கடியிலும் தள்ளியது. இருந்த வேலை வாய்ப்புகளையும் பறித்தது. சிறு குறு தொழில்முனைவோர், சிறு குறு வேளாண் உற்பத்தியாளர்கள், அனைத்து நகர, ஊரக உழைக்கும் மக்கள் என பல பகுதி மக்களின் வாழ்க்கையை இந்த நடவடிக்கை பெரிதும் பாதித்தது. இதனை தொடர்ந்து 2017இல் மிகவும் கோளாறான ஜிஎஸ்டி வரிவிதிப்பை அமலாக்கியது. இது மாநிலங்களின் வரி நிர்ணய உரிமையை பறித்து, மாநில சுயாட்சி கோட்பாட்டை மறுத்தது மட்டுமின்றி, மக்கள் மீது மிகப்பெரிய சுமையாக மறைமுக வரிவிதிப்பை செய்தது. அக்டோபர் 2019இல் கார்ப்பரேட் லாபவரியை 30%இல் இருந்து 22% ஆகக் குறைத்து, இதனால் அரசுக்கு ஆண்டுக்கு 1.45 லட்சம் கோடி ரூபாய் வரி இழப்பை ஏற்படுத்தியது. (இந்த வரி வருமான இழப்பின் ஒருபகுதியை மாநிலங்கள் சுமந்தன என்பதும் கவனிக்கத் தக்கது.) இதற்கு சில மாதங்கள் முன்பே, மந்தநிலையை காரணம் காட்டி, ஒன்றிய அரசு முதலாளிகளுக்கு சுமார் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு வரிச்சலுகை அளித்திருந்தது. இதெல்லாம் போதாதென்று, 2020 பட்ஜெட்டில் கிட்டத்தட்ட 65,000 கோடி ரூபாய்க்கு வருமான வரி சலுகைகளை வசதியானவர்களுக்கு அளித்தது. இவற்றால் அரசுக்கு ஏற்படும் வரிவருமான இழப்புகளை ஈடுகட்டும் நோக்குடன், உழைக்கும் மக்களின் அன்றாட நுகர்வு செலவின் மீது ஜிஎஸ்டி வாயிலாக கடும் வரிச்சுமையை ஏற்றியது. இதனைத் தொடர்ந்து கோவிட் தொற்று வந்த காலத்தில் உரிய மருத்துவ வசதிகளை விரைந்து அளிக்கவில்லை. புலம்பெயர் தொழிலாளிகளை ஆதரவற்று நடுரோட்டில் நிறுத்தியது. மாநிலங்களை உயர் வட்டியில் கடன் வாங்க வைத்தது. வேலையும் வாழ்வாதாரமும் இல்லாமல் தவித்த மக்களுக்கு போதுமான நிவாரணம் அளிக்க மறுத்தது. தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய பல பத்து லட்சம் சாவுகள் நிகழ்ந்தன. இந்தியாவின் மொத்த உற்பத்தி மதிப்பு (ஜிடிபி) 2020 -21இல் கிட்டத்தட்ட 7-8 சதவீதம் சரிந்தது. இதற்கு மத்தியில் விவசாயத்தை முற்றிலுமாக அழிக்கவல்ல மூன்று கருப்புச் சட்டங்களை கொல்லைப்புற வழியாக பாராளுமன்றத்தில் திணித்து நிறைவேற்றியது.
கரோனா தொற்றுக்குப்பின் ஐந்து ஆண்டுகளில் மந்தநிலை இன்னும் விலகவில்லை. அவ்வப்பொழுது மிகையான வளர்ச்சி விகிதங்களை அரசு அறிவித்தாலும், அவை நம்பத்தக்கதாக இல்லை. 2023-24இல் வளர்ச்சிவிகிதம் எட்டு சதம் என்று அறிவித்த அரசு, 2024-25இல் அது ஆறு சதத்தை எட்டுமா என்று ஏங்கி கொண்டிருக்கிறது. மறுபக்கம் அரசின் புள்ளிவிவரங்கள் சொல்ல முயலும் கதையாடலுக்கு நேர் மாறாக, நகரங்களிலும் கிராமங்களிலும் வேலையின்மை பூதாகரமாக அதிகரித்துள்ளது. வேளாண் நெருக்கடி தொடர்கிறது. மறுபுறம் மக்களின் எதிர்ப்பும் கடந்த சில ஆண்டுகளாக வலுத்து வருகிறது. விவசாயிகளின் வீரமிக்க போராட்டங்கள், மூன்று மக்கள் விரோத, வேளாண் விரோத சட்டங்களை குப்பைத் தொட்டியில் போடவைத்தது. தொழிலாளி வர்க்கத்தின் ஆதரவும், உருவாகிவரும் விவசாயி-தொழிலாளி கூட்டணியும், இதில் முக்கிய பங்கு ஆற்றியது. ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத முனைவுகளும் கடும் எதிர்ப்பை சந்திக்கின்றன. கடந்த ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் அதிகார அமைப்புகள் அனைத்தையும் தவறாக பயன்படுத்தியும் பணத்தை வாரி இறைத்தும், தீவிர மதவெறி பிரச்சாரம் செய்தும்கூட, பாஜக 60 தொகுதிகள் குறைவாகத்தான் பெற முடிந்தது. இந்திய பொருளாதாரத்தின் மந்தநிலை தீவிரமாகி வருவது போராட்டங்களை நோக்கி மக்களை செல்ல வைக்கிறது. பெரும் பொருளாதார துயரில் மக்கள் வாடுவதும் தொடர்கிறது.
பன்னாட்டு நிலைமைகள்
தற்சமயம் பன்னாட்டு அரசியல்-பொருளாதார சூழலும் நிலைமைகளை சிக்கலாக்கியுள்ளது. இதனால், ஏற்கெனவே மந்தநிலையில் உள்ள இந்திய பொருளாதாரம் ஏற்றுமதி மூலம் கிராக்கியை உயர்த்தி, பொருளாதார மீட்சி பெற முடியாது என்ற நிலை உருவாகியுள்ளது. மேலை முதலாளித்துவ நாடுகளிலும் பணவீக்கம், வேலையின்மை ஆகியவை தீவிரம் அடைந்து வருகின்றன. பல ஐரோப்பிய நாடுகளில் உலகளாவிய முதலாளித்துவ வலது திருப்பத்தால் அரசியல் நெருக்கடியும் வந்துள்ளது. அமெரிக்காவில் டிரம்ப் ஜனாதிபதி ஆகியுள்ளார். மேற்கு ஆசியாவும் உக்ரைன்(நேட்டோ)-ரஷ்யா யுத்தமும் பதற்றத்தை அதிகப்படுத்தியுள்ளன. இந்திய ஆளும் வர்க்கம் திக்கு தெரியாமல் திகைத்து நின்றாலும், அதன் இந்திய-பன்னாட்டு பெருமுதலாளிகள் ஆதரவுப்பாதையில் எந்த மாற்றமும் இல்லை. இந்தப்பாதையில் உழைப்பாளி மக்களுக்கான பொருளாதார மீட்சி என்பது நிகழ வாய்ப்பு இல்லை.
ஒன்றிய பட்ஜெட் 2025-26
இத்தகைய சூழலில் 2025 – 26 பட்ஜெட் பொருளாதார மீட்சியை பெற உதவாது. இதன் சில அம்சங்களை காண்போம்.
பட்ஜெட் முன்வைத்துள்ள மதிப்பீடுகள்படி, வரும் நிதி ஆண்டுக்கான ஒன்றிய அரசின் மொத்த செலவு கடந்த ஆண்டு பட்ஜெட் மதிப்பை விட 4% தான் அதிகம். விலைவாசி உயர்வை கணக்கில் கொண்டால், இது உண்மையளவில் வீழ்ச்சி. மேலும் அரசின் கூற்றுப்படி வளர்ச்சி விகிதம் 6-7 % என்று வைத்துக்கொண்டால், உண்மை அளவில் தேச உற்பத்தி மதிப்பின் சதவிகிதமாக பார்த்தால், அரசு செலவில் சரிவு நிகழும் என்று உறுதிபட கூறலாம். இது மந்தநிலையை தீவிரமாக்கும். மீட்சியை ஏற்படுத்தாது. இத்தகைய நிலைக்கு முக்கிய காரணம் அரசு நவீன தாராளமய கொள்கைகளை தீவிரமாக பின்பற்றுவதுதான். அரசின் கவனம் பட்ஜெட்டில் காணப்படும் ஃபிஸ்கல் (fiscal) பற்றாக்குறையை குறைப்பதில்தான் உள்ளது.
செல்வந்தர்களை கொழுக்க வைக்கும் வரி கொள்கை
செல்வந்தர்கள் மற்றும் பெரும் கம்பனிகளின் வருமானத்தின் மீது தக்க அளவில் வரிவிதித்து வரிவசூல் செய்து அரசு நாட்டு வளர்ச்சிக்கான வளங்களை திரட்ட முடியும். ஆனால் செல்வந்தர்களின் அரசு அல்லவா இது! தேர்தலில் வெற்றிபெற, இந்தப் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான செல்வங்கள் வைத்திருக்கும் நபர்கள் தானே பணம் கொடுப்பார்கள். அவர்கள் மீது குறைந்த அளவுதான் வரிபோடலாம் என்பதற்கு ஒரு பிரச்சார கதையாடல் முன்வைக்கப்படுகிறது. “வரி விகிதத்தை உயர்த்தினால் செல்வந்தர்கள் தங்கள் செல்வங்களை எடுத்துக்கொண்டு குறைவாக வரி விதிக்கும் இடங்களுக்கு ஓடி விடுவார்கள், இருக்கும் வேலைகளும் போய்விடும்” என்ற மிரட்டல்தான் அந்த கதையாடல். ஒன்றிய பட்ஜெட் தரும் தரவுகளின்படி ஒன்றிய அரசின் மொத்த வரவில் கார்ப்பரேட் வரிகள் தருவது 17% தான். தனி நபர் வருமான வரி தருவது 22%. ஆனால் சாதாரண மக்களை கசக்கிப்பிழிந்து வசூலிக்கப்படும் ஜிஎஸ்டி, கலால் வரி, சுங்கவரி உள்ளிட்ட மறைமுக வரிகள் மூலம் ஒன்றிய அரசு தனது மொத்த வரவில் 27% பெறுகிறது. கடன் வாங்குவதன் மூலம் தனது வரவில் 24% ஐ ஒன்றிய அரசு பெறுகிறது. பிரச்சினை இதோடு முடிவதில்லை. கொடுப்பவர் திறன் வரிபோட்டு வளங்களை திரட்ட அரசு மறுப்பதால், அந்த செல்வந்தர்களிடம் இருந்தே கடன் வாங்கி, அவர்களுக்கு ஆண்டு தோறும் கணிசமான வட்டியும் கொடுக்கிறது. எவ்வளவு கொடுக்கிறது? நடப்பு ஆண்டான 2024-25இல் மட்டும் ரூ 11,38,000 கோடியை வட்டியாக செல்வந்தர்களுக்கு அரசு கொடுத்துள்ளது. வரும் ஆண்டில் பட்ஜெட் மதிப்பீட்டின்படி ரூ 12,75,000 கோடி ஒன்றிய அரசின் வட்டி செலவு. மறுபக்கம் ஒன்றிய அரசு மக்களுக்கான மானியங்களை வெட்டுகிறது. உர மானியம், உணவு மானியம் மற்றும் எரிபொருள் மானியம் ஆகிய மூன்று முக்கிய மானியங்களுக்காக ஒன்றிய அரசு ரூ 4 லட்சம் கோடிக்கும் குறைவாகவே செலவிடுகிறது. உழைக்காத செல்வந்தர்களுக்கு ஆண்டுதோறும் வட்டியாக பல லட்சம் கோடிகள், உழைக்கும் மக்களின் மானியங்களுக்கு வெட்டு என்பதே ஒன்றிய அரசின் கொள்கை!
அடுத்து அரசின் சில ஒதுக்கீடுகளை பரிசீலிப்போம்.
அரசின் செலவு ஒதுக்கீடுகள்
மக்களை தாக்கி மட்டுமே வருமானத்தை பெருக்க முயலும் ஒன்றிய அரசு மறுபுறம் பற்றாக்குறையை மட்டுப்படுத்த ஒதுக்கீடுகளை சுருக்குகிறது. மக்களின் தேவைக்கும் அரசின் ஒதுக்கீட்டிற்கும் சம்மந்தமே இல்லை. அட்டவணை 1 சில துறைகளுக்கான ஒதுக்கீடுகளை காட்டுகிறது.
அட்டவணை 1
| இனம் | 2023-24 | 2024-25 பட்ஜெட் மதிப்பீடு | 2024-25 திருத்தப்பட்ட மதிப்பீடு | 2025-26 பட்ஜெட் மதிப்பீடு |
| கல்வி | 123365 | 125638 | 114054 | 128650 |
| ஆரோக்கியம் | 81594 | 89287 | 88032 | 98311 |
| வேளாண் மற்றும்அதனை சார்ந்தவை | 145995 | 151851 | 140859 | 171437 |
| ஊரக வளர்ச்சி | 241193 | 265808 | 190675 | 266817 |
| எம் என் ரேகா | 89153.71 | 86000.00 | 86000.00 | 85851.06 |
தொகை கோடி ரூபாய்களில்
மேலே தரப்பட்டுள்ள அனைத்து ஒதுக்கீடுகளும் மிகவும் சொற்பமானவையே. மேலும் நான்கு ஆண்டுகளாக அவை சிறிதளவே அதிகரித்துள்ளன. விலைவாசி உயர்வை கணக்கில் கொண்டால் சில துறை ஒதுக்கீடுகள் சரிந்துள்ளன. இதில் மிகப்பெரிய கொடுமை பாஜக அரசு ஊரக வேலை உறுதி சட்டத்தின்கீழ் அமைந்துள்ள ஊரக வேலை உறுதி திட்டத்தை – எம் என் ரேகாவை -ஒழித்துக்கட்ட உறுதி பூண்டிருப்பதுதான். 2004-2009 ஐ.மு. கூட்டணி அரசு காலப்பகுதியில் இடதுசாரிகளின் ஆதரவை சார்ந்து ஒன்றிய ஆட்சி இருந்தபொழுது, இடதுசாரிகள் வலுவாக கோரியதால்தான் ஊரக வேலை உறுதி என்பது சட்டமாக வந்தது (National Rural Employment Guarantee Act). இதன்படி இத்திட்டத்தில் பதிவு செய்யும் ஒவ்வொரு ஊரக குடும்பத்திற்கும் ஒன்றிய அரசு ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை தரவேண்டும்; நிர்ணயிக்கப்படும் கூலியும் குறைந்தபட்ச கூலிக்கு கீழே செல்லக்கூடாது என்று சட்டம் கூறுகிறது. ஆனால் கடந்த பத்து ஆண்டுகளில் இத்திட்டத்திற்கான ஒதுக்கீடுகள் உண்மை அளவில் தொடர்ந்து குறைக்கப்பட்டு வருகின்றன என்பதை அட்டவணை 1 நமக்கு தெரிவிக்கிறது. வரும் நிதி ஆண்டில் பதிவு செய்துள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் 100 நாட்கள் வேலை உறுதி செய்ய கிட்டத்தட்ட 4 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய வேண்டும். அதில் நான்கில் ஒரு பங்கை. கூட அரசு செய்யவில்லை. எம் என் ரேகா (MNREGA) என்பது அரசின் கருணையால் வந்த வேலை திட்டம் அல்ல; நாட்டின் பாராளுமன்றம் நிறைவேற்றிய சட்டம். பாராளுமன்றத்தை மதிப்பதாக மண்டியிட்டு தரையை முத்தமிடும், செல்பி வெளியிடும் மோடியின் அரசு இச்சட்டத்தை அப்பட்டமாக மீறுகிறது.
வேளாண் நெருக்கடி தீவிரமாக உள்ள சூழலில், விவசாயிகள் தற்கொலைகள் தொடரும் பின்புலத்தில், வேளாண் மற்றும் வேளாண் சார் துறைகளுக்கும் ஊரக வளர்ச்சிக்கும், ஊரக வேலை வாய்ப்புகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ள ஒன்றிய அரசு ஒதுக்கீடுகள் கேலி கூத்து என்றுதான் கூற வேண்டும்.
வேலையின்மை, வறுமை இல்லாத இந்தியாவா?
இந்திய நாட்டின் ஆகப்பெரிய அவமானம், தொடரும் பரவலான வறுமை. இளைஞர்கள் எதிர்காலத்தை இருட்டாக்கும் முக்கிய பிரச்சினை அதீதமான வேலையின்மை. இவை இரண்டுமே நகரங்கள், கிராமங்கள் என்று நாடு முழுவதும் இருக்கும் கொடுமைகள். இப்பிரச்சினைகளை பற்றி பட்ஜெட் எந்த அக்கறையும் காட்டவில்லை. அரசின் “அறிஞர்கள்” தங்கள் பூதக்கண்ணாடிகளையும் மைக்ரோஸ்கோப்புகளையும் வைத்து நாடு முழுதும் தேடிப்பார்த்து இந்தியாவில் வறுமையே இல்லை என்று “கண்டுபிடித்து” பிரகடனமும் பிரச்சாரமும் செய்துவருகிறார்கள். ஆனால் ஒன்றிய அரசின் தேசிய புள்ளியியல் அமைப்பு மூலம் நடந்த ஆய்வுகள் சொல்லும் செய்தி கிட்டத்தட்ட 26% அரசின் வறுமை கோட்டுக்கு கீழே உள்ளனர் என்பது தான். அரசின் வறுமைக்கோடு என்பதையே உண்மையில் “சாகாக் கோடு” என்றுதான் நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு நவீன நாகரீக சமூகம் என்ற அளவுகோல்படி இந்திய மக்களில் பெரும் பகுதியினர் வறுமையில் இருப்பதாகத்தான் நாம் பார்க்க வேண்டும். நம்முடன் தனது வளர்ச்சி பயணத்தை துவக்கிய மக்கள் சீனம் வறுமையை பெருமளவிற்கு ஒழித்துவிட்டது என்பது சோசலிச அமைப்பின் வலிமையை காட்டுகிறது. ஆனால் மோடி அரசின் பட்ஜெட்டுகளும் அதி தீவிர தாராளமய கொள்கைகளும் வறுமையை குறைக்கவோ, ஒழிக்கவோ உதவாது. வேலையின்மை பிரச்சினையிலும் இதுதான் கசப்பான உண்மை.
என்ன செய்ய வேண்டும்?
இடதுசாரி இயக்கங்கள் ஒன்றிய அரசின் பெருமூலதன, புதிய தாராளமய கொள்கைகளுக்கு மாற்றாக, ஒரு வளர்ச்சி பாதையை தொடர்ந்து நாட்டு மக்கள் முன் வைத்துவருகின்றன. இதன் சில முக்கிய அம்சங்களை காண்போம்.
முதலாவதாக, நாட்டின் வளர்ச்சியில் அரசின் பங்கு முதன்மையானதாக இருக்கவேண்டும். சில முக்கிய முன்னெடுப்புகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.
நாட்டில் நிலவும் மிக அதிகமான சொத்து மற்றும் வருமான ஏற்றத்தாழ்வுகளை கணக்கில் கொண்டு பெரும் செல்வந்தர்கள் மீது 4% சொத்துவரி விதிக்கப்படவேண்டும்; உயர் வருமானம் பெறுவோரிடம் இருந்து கூடுதல் விகிதத்தில் வருமான வரிகள் பெறப்பட வேண்டும். அரசிடம் இதன்மூலம் வந்து சேருகின்ற வரவுகளில் கணிசமான பகுதி மாநிலங்களுக்கு நியாயமான வகையில் பகிர்ந்தளிக்கப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு மூலமாக மக்கள் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் பல்வேறு பணிகளும் திட்டங்களும் அமலாக்கப்படவேண்டும். மாநில அரசுகளும் தங்கள் வசம் உள்ள வரி மற்றும் இதர வருமானங்களை அங்கீகரிக்கப்பட்ட வகையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு பகிர்ந்தளித்து, உள்ளாட்சிகள் அளவில் மக்கள் பங்கேற்புடன் ஒதுக்கீடுகளை இறுதியாக்கி, செலவுகள் நெறிமுறைகளை பின்பற்றி மேற்கொள்ளப்பட வேண்டும்.
பொதுத்துறை முதலீடுகள் கணிசமாக உயர்த்தப்படவேண்டும். குறிப்பாக, வேளாண்மை, ஊரக வளர்ச்சி, கட்டமைப்பு உருவாக்கம், ஆரோக்கியம், கல்வி ஆகிய துறைகளில் முதலீடுகள் அரசால் மேற்கொள்ளப்பட வேண்டும். இம்முனைவுகள் அனைத்தும் மாநில உரிமைகள், உள்ளாட்சி ஜனநாயகம் ஆகிய கோட்பாடுகளுடன் முற்றிலும் இயைந்து இருக்க வேண்டும்.
பட்ஜெட் அல்லது ஒரு ஆண்டுக்கான ஒன்றிய அரசின் வரவு-செலவு என்ற எல்லையை தாண்டி, ஒவ்வொரு கிராமப்புற குடும்பத்திற்கும் ஓரளவு சாகுபடி நிலம் கிடைக்கும் வகையில், கிடப்பில் போடப்பட்டுள்ள முந்தைய கால நிலச் சீர்திருத்த சட்டங்களை கையில் எடுத்து அமலாக்குவது அவசியம். இதன்மூலம் தான் ஒவ்வொரு கிராம குடும்பத்திற்கும் வருமானம் உயரவும் ஊரக சந்தைகள் விரிவடைவதும் உள்நாட்டு சந்தை விரிவாக்கமும் நிகழும். சிறு குறு தொழில் வளர்ச்சிக்கும் வேலை வாய்ப்புகள் பெருகவும், நிலச் சீர்திருத்தமும் நில மறுவிநியோகமும் உதவும் என்பது உலக அனுபவம் ஆகும். சுதந்திர இந்தியாவில் இடதுசாரிகள் ஆட்சியின் கீழ் கேரளம், மேற்குவங்கம் மற்றும் திரிபுரா மாநிலங்களில் வலுவான நில சீர்திருத்தங்களும் நில மறு விநியோகமும் நடந்தன. இம்மாநிலங்களில் ஊரக மற்றும் வேளாண் வளர்ச்சிக்கும், பொதுவாக பொருளாதார வளர்ச்சிக்கும் இவை உறுதுணையாக இருந்தன.
ஒன்றிய அரசின் பட்ஜெட் இப்பாதைக்கு நேர்மாறாக, அரசு வசம் உள்ள பொதுத்துறை தொழில் சொத்துக்களை சில ஆண்டுகளுக்கு தனியாரிடம் குத்தகைக்கு விட்டு பணம் ஈட்டலாம் என்ற நாசகர பாதையில் மேலும் பயணிக்கலாம் என்ற முன்மொழிவை வைத்துள்ளது. இது பெரும் ஆபத்து மட்டுமல்ல; மெல்ல மெல்ல பொதுத்துறை சொத்துக்களை தனியார் பெரும் கம்பனிகளுக்கு தாரை வார்க்கும் பாதையாகும். அதேபோல் அரசுக்கு பொன்முட்டையிடும் வாத்தாக இருக்கும் ஆயுள்காப்பீட்டு கழகத்தை பலவீனப்படுத்தும் வகையில் ஆயுள் காப்பீட்டு துறையில் 100 சதம் அந்நிய முதலீட்டை அனுமதிக்கலாம் என்று ஒன்றிய பட்ஜெட் முன்மொழிகிறது. 2008ஆம் ஆண்டு உலக முதலாளித்துவ நெருக்கடியின் பொழுது அமெரிக்க இன்சுரன்ஸ் க்ரூப் உட்பட பல பெரும் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் திவாலானதும், அவற்றை மேலை நாட்டு அரசுகள் மக்கள் பணத்தை செலவழித்துக் காப்பாற்றியதும் நாம் நினைவில் கொள்ளவேண்டிய செய்திகள்.
சாமானிய உழைக்கும் மக்களுக்கு எதிரான கார்ப்பரேட் ஆதரவு ஒன்றிய அரசின் 2025-2026 க்கான பட்ஜெட்டை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவோம்! இடதுசாரி மாற்று ஆலோசனைகளை கொண்டு செல்வோம்!
You may also like
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
