
தொழிலாளர் ஒற்றுமையை உயர்த்திப்பிடிக்கும் சின்னியம்பாளையம்!
ஜனவரி-8 சின்னியம்பாளையம் தியாகிகள் தினம்
ஆர். செம்மலர்
எந்த உரிமைகளுமின்றி சுரண்டப்பட்டு வந்த இந்திய தொழிலாளி வர்க்கம், தனது வீரம் மிக்க போராட்டங்களாலேயே தனது நிலைமையை மாற்றியமைத்தது. 1946 ஆம் ஆண்டு, ஜனவரி 8ஆம் நாள் தூக்கிலிடப்பட்ட கோவை, சின்னியம்பாளையம் தியாகிகள் ராமையன், சின்னையன், ரங்கண்ணன், வெங்கடாசலம் நால்வரின் வாழ்க்கையும், தியாகமும், அந்த வீரச் சரிதத்தின் ஒரு பகுதியாகும்.
கோவை பகுதியில் முதல் பஞ்சாலையாக, 1888ஆம் ஆண்டில் ஸ்டேன்ஸ் மில் (சி எஸ் & டபிள்யூ மில்) தொடங்கப்பட்டது. பஞ்சாலைகளில் குவியும் லாபத்தின் மீது வேட்கையுற்று, கோவையின் நிலச்சுவான்தார்களும் ஒரு சில மேல்தட்டு விவசாயிகளும் 1900களில் பல பஞ்சாலைகளை உருவாக்கினார்கள். லட்சுமி மில், காளீஸ்வரா மில், சோமசுந்தரா மில் என்ற மால் மில், ரங்கவிலாஸ் மில், ராதாகிருஷ்ணா மில், பங்கஜா மில் உட்பட பற்பல உருவாகின. பிரதானமாக விவசாயத்தில் உழைத்து வந்த மக்கள் இந்த மில்களில் கூலித் தொழிலாளர்களாகினர்.
சூரியனைக் காணவே முடியாதபடி அதிகாலை 3.45 மணிக்கு மில்லுக்குள் நுழைந்தால் சக்கையாகி இரவு 7 மணிக்கு தான் வேலை முடியும். சில நிமிடம் தாமதமானாலும் வேலை தரப்படுவதில்லை. அடியாட்கள் தொழிலாளர்களை அடித்து வதைத்தனர். இளம் பெண்களும் கடும் வறுமை நிலை காரணமாக பஞ்சாலைத் தொழிலாளியாக மாறினர். அவர்கள் கடுமையான வேலைச் சூழலை சந்திப்பதுடன் பாலியல் சுரண்டலுக்கும் ஆட்பட்டனர்.
இத்தகைய சூழலில் காங்கிரஸ் கட்சியின், பிரபல வழக்கறிஞர் பாரிஸ்டர் ஐயங்கார் தொழிலாளர்கள் நலன் காக்க முன் வந்தார். சங்கம் உருவானது. ‘தொழிலாளர்கள் யாரும் அடிமைகள் இல்லை, குடிமக்கள்’ என்று அவர் காட்டிய வழிகாட்டுதலில் ஒன்றுபட்ட தொழிலாளிகள், அடிப்படை உரிமைகளுக்காகப் போராடினர். இதனால் 15 மணி நேர வேலை 12 மணி நேரமாக குறைக்கப் பட்டதுடன் ஒரு ரூபாய் சம்பள உயர்வும் கிடைத்தது. அடியாட்களை திருப்பியடிக்கவும் தைரியம் பெற்றனர். இதனால் வழக்குகளையும் சந்தித்தனர். சங்கம் அவர்களை ஒன்றுபடுத்தியது, வலிமையை உணர்த்தியது.
பல்வேறு மில்களில் பணி புரிந்த தொழிலாளிகளான காந்தி குப்புசாமி, பெரிய ராமசாமி, சின்ன ராமசாமியுடன் மில் தொழிலாளர்களும் தோழர்களுமான கே. ரமணி, கிருஷ்ணன், லட்சுமணன், கன்னாகுட்டி, ஆர்கிஷன், வெங்கிடுசாமி, காளியண்ணன் ஆகியோரும் தொழிற்சங்க முன்னணி ஊழியர்கள் ஆயினர்.
சங்கத்தில் செயல்பட்ட சின்னியம்பாளையம் தோழர்கள் ரங்கணன், ராமையன், வெங்கடாசலம், சின்னையா ஆகிய நால்வரும் ஆலை வாயில் பேச்சாளர்களாகவும், கலைஞர்களாகவும் மாறினார்கள். தோழர் கிருஷ்ணபிள்ளை இவர்களுக்கான வழிகாட்டுதல் தந்து உதவினார்.
இந்த நிலைமையை முதலாளி வர்க்கம் வேடிக்கை பார்க்குமா? 1936ஆம் ஆண்டு கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்ட ஐயங்காரை கைது செய்து அலிப்புரம் சிறைக்கு அனுப்பியது பிரிட்டிஷ் அரசாங்கம். அதன் பிறகு தொழிற்சங்கத்திற்கு தலைமையேற்ற பாசுதேவ், லட்சுமி மில்லில் நடந்த தொழிலாளர் போராட்டத்தை காட்டிக் கொடுத்தார் (1937). ராமநாதன், ஈரோடு டாக்டர் கிருஷ்ணசாமி போன்றவர்கள் தலைமையும் மிக மோசமானதாக அமைந்தது. எனவே தமக்கு தாமே தலைமையேற்க வேண்டும் என்ற அவசியத்தை தொழிலாளர்கள் உணரத் தொடங்கினார்கள்.
இந்தக் காலகட்டத்தில் உலகம் முழுவதும் வலுவடைந்து வந்த பாட்டாளி வர்க்கப் போராட்டங்களால், வெள்ளை அரசாங்கம், ஒரு நாளின் வேலை நேரத்தை ஒன்பது மணி நேரமாகக் குறைத்தது. ஆனால் இதை அமலாக்காமல் வஞ்சனை பல செய்த முதலாளிகளை எதிர்த்து கோவை பஞ்சாலைகளில் தொடர் போராட்டங்கள் நடந்தன. இந்த நேரத்தில் தான் தோழர்கள் கே ரமணி, பூபதி, என் சி சேகர், ஆர் கே கண்ணன், ஆர்கிஷன் ஆகியோர் கம்யூனிஸ்ட் முதல் கிளையின் உறுப்பினர்கள் (1939) ஆயினர்.
1941 காலகட்டத்தில் சின்னியம்பாளையத் தோழர்களும் சாதி, நட்பு, ஊர் ஆகிய வேறுபாடுகளைக் கடந்து, கம்யூனிஸ்ட் கட்சியின் செயல் வீரர்களாக ஆயினர். பொய் வழக்கில் தோழர் ரமணி கைது செய்யப்பட்ட சமயத்தில், கோவை சதி வழக்கில் தலைவர்கள் உள்ளிட்டு 17 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். எனவே, தோழர்கள் உமாநாத், எம் ஆர் வெங்கட்ராமன், பி ராமமூர்த்தி, ஜீவானந்தம் ஆகிய பல தலைவர்களும் வந்து தொழிலாளர் போராட்டங்களுக்கு வழிகாட்ட அங்கு வந்தனர். மில் வாசல்களில் செங்கொடி பட்டொளி வீசிப் பறந்தது.
இரண்டாம் உலகப்போர் சூழலில் அரசியல் நடவடிக்கைகளும், தொழிற்சங்க நடவடிக்கைகளும் தடை செய்யப்பட்டன. எனவே, மீண்டும் மில்களில் மேஸ்திரிகள், வாட்ச்மேன்கள், அடியாட்களின் அட்டகாசங்களும் அடக்குமுறைகளும் மீண்டும் தொடங்கியது. பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் தொடர்ந்தன.
இந்த நேரத்தில் பெண் தொழிலாளிகள் இருவரை பாலியல் வன்கொடுமை செய்ததை எதிர்த்து நின்ற முன்னணி பெண் தொழிலாளியை அடியாள் பொன்னான் தனது கூட்டாளிகளோடு சேர்ந்து பாலியல் வல்லுறவு செய்தான். இதை அறிந்ததும் தொழிலாளிகள் ஆத்திரம் கொண்டு தட்டிக் கேட்டனர். இந்த நடவடிக்கையின்போது, ஒருவருக்கொருவர் மீதான தாக்குதலில் பொன்னான் இறந்து போனான். ஆனால், சின்னியம்பாளையம் தோழர்கள் நால்வரின் மீதும் இது கொலை வழக்காக பதியப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டனர். தகுந்த சந்தர்ப்பமாக இதைப் பயன்படுத்தி, முதலாளிகளும் வெள்ளை அரசாங்கமும் செய்த சூழ்ச்சியில் நான்கு தோழர்களுக்கும் தூக்கு தண்டனை வழங்கப்பட்டது.
தூக்கு தண்டனைக்கு சற்று முன் சங்கத் தலைவர்கள் பூபதி, பி. ராமமூர்த்தி, கே. ரமணி ஆகியோரை நேரில் சந்தித்த சின்னியம்பாளையம் தியாகிகள் நால்வரும், ‘ எங்கள் நால்வரை அழித்து விட்டால் செங்கொடியை, கம்யூனிச கருத்துகளை அழித்து விட முடியுமா ? முடியவே முடியாது. எங்களைப் போல ஆயிரம் ஆயிரம் பேர்கள் முன்னணிக்கு வருவார்கள். அவர்களை வளர்த்து ஊக்குவித்து சங்கம் கட்டும் பணியை நீங்கள் உறுதி குலையாமல் செய்திட வேண்டும். அந்த வாக்குறுதியை எங்களுக்கு தாருங்கள். தொழிலாளிகளைப் பிரித்து வைத்து முதலாளிகள் கொழுத்து வருகிறார்கள். தொழிலாளி வர்க்க ஒற்றுமையைக் கட்டிக் காக்க நமது தொழிலாளர்கள் முன் வர வேண்டும். அதன் அடையாளமாய் எங்கள் நால்வரையும் ஒன்றாய் புதையுங்கள் ‘ என்று வேண்டுகோள் விடுத்தனர். அதன்படியே தியாகிகள் நால்வரும் ஒரே சமாதியில் அடக்கம் செய்யப் பட்டனர்.
வீரம் செறிந்த இந்தப் போராட்டங்கள் வீண் போகவில்லை என்பதை காலம் நமக்குக் காட்டியது. கோவையின் மில்களில் மட்டுமல்ல; திருப்பூர் மில் தொழிலாளி வாழ்வையும் மாற்றிக் காட்டியது. பஞ்சாலை தொழிலாளர்கள் நிரந்தர தொழிலாளிகளாக ஷிப்ட் முறையில் எட்டு மணி நேர வேலை, சம்பளம், பஞ்சப்படி, போனஸ், ஈ எஸ் ஐ, பி எஃப் , போன்ற பல்வேறு சட்ட உரிமைகளும் சலுகைகளும் பெற்றிருந்தனர். அவர்களே பிற தொழிற்சங்கங்களுக்கும் முன்னோடியாய் இருந்து ஊக்கமளித்தனர்.
1990 களில் உருவான புதிய பொருளாதார மற்றும் தொழில் கொள்கையால் மில்களில் மட்டுமல்ல; மற்றுமுள்ள அனைத்து நிறுவனங்களிலும் நிரந்தர பணி முறை அழிக்கப்பட்டு ஒப்பந்த முறை வர ஆரம்பித்தது. இன்றைய பாஜக ஒன்றிய அரசு, ஒட்டுமொத்த தொழிலாளர் சட்டங்களையும் சீர்குலைத்து சுரண்டலை தீவிரமாக்க செயல்படுகிறது. மதவெறியையும், சாதி அடையாளத்தையும் பயன்படுத்துவதன் மூலம் தொழிலாளி வர்க்க ஒற்றுமையை சீர்குலைக்கும் முயற்சிகளும் வேகமெடுத்துள்ளன. இந்த நிலைமையை உறுதியோடு எதிர்க்க சின்னியம் பாளையம் தியாகிகள் இப்போதும் நமக்கு உள்ளூக்கம் தருகிறார்கள். தொழிலாளர் ஒற்றுமை தொழிற்சங்க ஒற்றுமை இத்துடன் அனைத்து மக்களின் ஒற்றுமையையும் வலுப்படுத்தி தீவிரமான போராட்டங்களை முன்னெடுப்போம். மார்க்சிய ஒளியில், வர்க்கப் போராட்டத்தில் தொடர்ந்து முன்னேறுவோம்!
You may also like
No comments
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.

Leave a Reply