ஜூலை 30 தியாகிகள் தினம் : வர்க்கப் போராட்டத்தின் வழிகாட்டி
புதுச்சேரி. வெ. பெருமாள்
ஜூலை 30 தியாகிகள் தின நிகழ்வுகள், புதுச்சேரி பஞ்சாலை தொழிலாளி வர்க்கத்தின் எழுச்சிமிகு போராட்டத்தின் வீரகாவியமாகும்.
88 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1936 ஜூலை 30இல் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் சுழல் பீரங்கிக்கு 12 பஞ்சாலைத் தொழிலாளர்கள் இரையாகி, தெற்காசியாவில் முதன்முதலில் 8 மணி நேர வேலை உரிமையை பெற்றிட்ட வரலாற்று நிகழ்வு அது. சுரண்டலையும், ஏகாதிபத்தியத்தையும் ஒரு சேர எதிர்த்திட்ட எழுச்சிமிகு வர்க்க போராட்டத்தின் அடையாளமும் ஆகும்.
பிரெஞ்சு ஏகாதிபத்தியம் வருகை
1673இல் வணிகம் செய்ய வந்த பிரஞ்சியர்கள் புதுச்சேரி கடற்கரையின் மணல் திட்டில் குடியேறினர். புதுச்சேரி நகரம் பிரஞ்சியர் வருகைக்கு பின்னரே உருவானது என்றாலும், புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம், சந்திரநாகூர் ஆகிய இந்தியப் பகுதிகளை அவர்கள் அடிமைப்படுத்தினர். 1700களில் துவக்கத்தில் இருந்து வரி வசூலிக்கத் துவங்கினர். வரி வருவாயில் பிரஞ்சிந்திய பகுதிகளில் வளர்ச்சிப் பணிகளுக்கு செலவிடாமல் தனது ஆட்சிப் பரப்பை விரிவுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் ஆங்கிலேய ஏகாதிபத்தியம் பிரெஞ்சு ஏகாத்திபத்தியத்திடம் தனது ஆட்சிப்பரப்பினை இழக்க நேரிட்டது. இவ்வாறு பிரஞ்சிந்திய பகுதிகள் 1791 தொடங்கி 1816 வரை 3 முறை சுமார் 37 ஆண்டுகள் ஆங்கிலேயர் வசம் இருந்தன. ஐரோப்பிய ஒப்பந்தப்படி ஆக்கிரமிப்பு முயற்சியில் ஈடுபடக் கூடாது என எச்சரித்து மீண்டும் பிரஞ்சியரிடம் இந்தியப் பகுதிகள் ஒப்படைக்கப்பட்டன.
பஞ்சாலைகள் துவக்கம்
பிரெஞ்சு ஏகாதிபத்தியம் தனது ஆளுகைக்கு உட்பட்ட இந்தியப் பகுதியில் நிர்வாகம் செய்ய முனைந்தது. இந்தப் பின்னணியில் பொதுப்பள்ளிகள், ரோமண்ட் ரோலண்ட் உள்ளிட்ட நூலகங்கள் துவங்கப்பட்டன. 1829இல் சவானா மில் என்ற சுதேசி பஞ்சாலை, 1890இல் கெப்ளா மில் என்ற ஸ்ரீபாரதி பஞ்சாலை, 1898இல் ரோடியர் மில் என்ற AFT ஆகிய பஞ்சாலைகள் துவங்கப்பட்டன. விவசாயம், கைத்தறி ஆகிய புராதன தொழில்களும் இருந்தன. பருத்தி விவசாய உற்பத்திக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டன.
சுதேசி, பாரதி, ரோடியர் பஞ்சாலைகளில் 12,000க்கும் மேற்பட்ட ஆண், பெண் தொழிலாளர்கள், சிறார்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். சூரியன் வருவதற்கு முன் வேலைக்குச் சென்று சூரியன் மறைந்தபின் வீடு திரும்ப வேண்டியிருந்தது. 12 மணி முதல் 14 மணி நேரம் வரையில் கூட மாடாய் உழைத்தார்கள். கடுமையான பணிச்சூழல், அடிமட்ட கூலி என தொழிலாளர்கள் முற்றாக சுரண்டப்பட்டனர்.
உலக அரசியல் சூழல்
ரஷ்யாவில் நடந்த அக்டோபர் புரட்சி ஜார் மன்னனை தூக்கியெறிந்து தொழிலாளி வர்க்கத் தலைமையில் சோசலிச சோவியத் யூனியன் மலர்ந்தது. முதல் உலகப் போரும் முடிவுக்கு வந்தது. சோவியத் புரட்சி விடுதலைக்காக போராடுகிற மக்களுக்கும், இளைஞர்களுக்கும் நம்பிக்கையையும், உத்வேகத்தையும் கொடுத்தது. இந்திய விடுதலைப் போராட்ட இயக்கத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்திய விடுதலைப் போரின் எழுச்சி பின்தங்கிய சிறிய பகுதியான பிரெஞ்சு இந்தியாவிலும் மெல்ல மெல்ல எதிரொலிக்க துவங்கியது.
பிரஞ்சிந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கம்
தென்னிந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியை கட்டும் பொறுப்பினை தோழர் அமீர் ஹைதர் கான் அவர்களுக்கு கட்சி பணித்திருந்தது. பிரஞ்சிந்திய பகுதியிலும் கட்சியை உருவாக்க தோழர் அமீர் ஹைதர் கான் முயற்சி எடுத்தார். தோழர் பாஷ்யம் அவர்கள் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவாளரான வில்லியனூர் ஆசிரியர் முத்துகுமாரசுவாமி அவர்களை சந்தித்து புதிய தொடர்பு குறித்து விவாதிக்கிறார். ஆசிரியர் முத்துகுமாரசாமி இளைஞர் சுப்பையாவை பாஷ்யத்துடன் தொடர்பினை ஏற்படுத்தினார். அவர் வழியாக தோழர் அமீர் ஹைதர் கான் அவர்களை சுப்பையா சந்திக்கிறார். சென்னையில் தலைமறைவாக இருந்த தோழர் கான் அவர்களை தோழர் சுப்பையா சந்திக்கும்போது, அங்கு தோழர் பி. சுந்தரய்யா அவர்களும் இருந்தார். சந்திப்பிற்குப் பின் கம்யூனிஸ்ட் கட்சி நூல்கள் வ. சுப்பையாவிற்கு வழங்கப்பட்டன.
தோழர் வ. சுப்பையா சில இளைஞர்களை இணைத்து மார்க்சிய வாசகர் வட்டம் துவங்கி செயல்பட்டார். பின்னர் ஹரிசன சேவா சங்கம் மற்றும் ராமகிருஷ்ணா வாசகர் சாலை நடத்திய இளைஞர்களும், சுரண்டல் மற்றும் ஒடுக்குமுறைக்கு ஆளான தொழிலாளர்கள் மத்தியில் செயல்பட்டனர். தாழ்த்தப்பட்ட மக்கள், பஞ்சாலை தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிகளில் பராமரிப்பின்றி முதியோர் பாதுகாப்பில் இருந்த குழந்தைகளுக்கு மருத்துவம், சுகாதாரம் உள்ளிட்ட சேவைகளை செய்தனர். இத்தகைய பணியின் விளைவாக தொழிலாளர்கள், ஏழை மக்கள் குடும்பங்களுடன் நெருக்கத்தை ஏற்படுத்த முடிந்தது. துடிப்புமிக்க இளைஞரான தோழர் சுப்பையா தமிழக கம்யூனிஸ்ட் இயக்க தலைவர்களின் ஆலோசனையையும் பெற்று, தனது சக தோழர்களுடன் தொழிலாளர்களை அமைப்பாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்
தொழிலாளர்களை அரசியல்படுத்தும் வகையில் கட்சியின் நாளிதழ் மற்றும் துண்டுபிரசுரங்கள் இரகசியமாக தொழிலாளர்கள் பகுதியில் வினியோகிக்கப்பட்டன. தொழிலாளர்கள் வாழும் பகுதியில் இரகசிய கூட்டங்கள் நடத்தப்பட்டன. 1934-35 ஆண்டுகளில் தலைமறைவாக சங்கம் அமைத்து செயல்பட்டனர். 8 மணி நேர வேலை உரிமை, சம்பள உயர்வு, பெண்கள் பேறுகால விடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி 1936 ஜூலையில் மூன்று பஞ்சாலைகளிலும் தொழிலாளர்கள் உள்ளிருப்பு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
1936 ஜூலை 30இல் அமைதி வழியில் போராடிய தொழிலாளர்களின் எழுச்சியை கண்டு பிரெஞ்சு ஏகாதிபத்தியம் ஆத்திரமுற்றது. ஜூலை 30 காலை பொழுதில் நிராயுதபாணியாகப் போராடும் தொழிலாளர்கள் மீது சுழல் பீரங்கியால் சுட்டது. இந்தக் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் 12 சுதேசி பஞ்சாலை தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பல நூறு தொழிலாளர்கள் பெரும் காயமுற்றனர். சிலர் தங்கள் உடல் உறுப்புகளை இழந்தனர். சுதேசி பஞ்சாலை அமைந்துள்ள சாலை எங்கும் ரத்தம் உறைந்து கிடந்தது.
8 மணி நேர வேலை சட்டமானது
பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் இக்கொடிய துப்பாக்கிச் சூட்டினை கண்டித்து உலகமெங்கும் கண்டனங்கள் எழுந்தன. பிரெஞ்சு நாடாளுமன்றத்திலும் கண்டனக் குரல்கள் ஒலித்தன. ஜவஹர்லால் நேருவின் அறிமுக கடிதத்துடன் பிரான்ஸ் சென்ற தோழர் வ.சுப்பையா அமைச்சர்களையும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களையும் சந்தித்துப் பேசினார். இந்தப் பின்னணியில் பிரெஞ்சு நாடாளுமன்றத்தில் பிரஞ்சிந்திய தொழிலாளர் சட்டம் இயற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து 1937 ஏப்ரல் 6ஆம் நாள் 8 மணி நேர வேலை உரிமை சட்டம் புதுச்சேரியில் நடைமுறைக்கு வந்தது. தெற்காசிய கண்டத்தில் முதன்முதலில் புதுச்சேரியில் 8 மணி நேர வேலை உரிமை வென்றெடுக்கப்பட்டது சரித்திர நிகழ்வாகும்.
உள்ளிருப்பு போராட்டம்
பஞ்சாலை தொழிலாளி வர்க்கம் உடனடி சுரண்டலுக்கு உள்ளானதால் தங்கள் விடுதலைக்கான சுரண்டலுக்கு எதிராகவும் போராட வேண்டியிருந்தது. பொருளாதார கோரிக்கை மற்றும் வேலை நேர உரிமைக்கான போராட்ட வெற்றியும், போராட்டத்தில் கிடைத்திட்ட சொந்த அனுபவங்களின் ஊடாக, தொழிலாளி வர்க்கம் அரசியல் மற்றும் வர்க்க உணர்வை வளர்த்துக் கொண்டது. அதன் விளைவாக புதுச்சேரி தொழிலாளி வர்க்கம், அடுத்த கட்டமாக புதுச்சேரி விடுதலைப் போராட்டத்தை நோக்கி நகர்ந்தது.
பிரஞ்சிந்திய விடுதலைப் போராட்டம்
இந்தியாவில் சுதந்திரப் போராட்டம் வீறு கொண்டு எழுந்தது. இரண்டாம் உலகப் போரில் பாசிச ஹிட்லர் தலைமையிலான ஏகாதிபத்திய கூட்டணியை சோவியத் செம்படை வீழ்த்தி வரலாறு படைத்தது. இந்த பின்னணியில் 1947 பிப்ரவரியில் இந்தியாவிற்கு விடுதலை வழங்கப் போவதாக அன்றைய பிரிட்டிஷ் பிரதமர் அட்லி அறிவிப்பு வெளியிட்டார். இத்தகைய உலக நிலைமைகளும், இந்திய சூழலும் புதுச்சேரியில் விடுதலைக்கான வேட்கையை அதிகப்படுத்தின. இந்தியாவுடன் இணைய வேண்டும்; பூரண சுதந்திரம் வேண்டும் என தொழிலாளர்களும் பிரெஞ்சு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் தீவிரமாக போராடின. சகல பகுதி மக்களையும், சகல கட்சியினரையும் ஒன்றுபடுத்தி ஐக்கிய முன்னணி ஏற்படுத்தி மாபெரும் கிளர்ச்சியை நடத்தினார்கள்.
தமிழக கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முன்னோடி தோழர் எம் ஆர் வெங்கட்ராமன் அவர்கள் 28/3/1954 இல் ஜனசக்தியில் எழுதிய கட்டுரையில் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார். ”கடந்த மூன்று வாரங்களில் நிகழ்ச்சிகள் வாயுவேகத்தில் நடந்துள்ளன. இதற்கு முக்கிய காரணம் பிரஞ்சிந்திய மக்கள் முன்கை எடுத்து போராட முன் வந்துள்ளது ஆகும். இந்த எழுச்சியில் புதுவை தொழிலாளி வர்க்கம் தன் பரம்பரைக்கு ஏற்ப முன்னணியில் நிற்கிறது. எல்லா கம்யூன்களிலும் இணைப்பை ஆதரித்து தீர்மானங்கள்; புதுவை சட்டசபையிலும் இத்தகைய தீர்மானத்திற்கு பேராதரவு; இணைப்பு கிளர்ச்சியை வெற்றி நோக்கி நடத்தி செல்ல சர்வ கட்சி ஐக்கிய முன்னணி அமைப்பு என கிளர்ச்சி தொடர்ந்து நடந்த வண்ணம் இருக்கிறது. தமிழ்நாட்டிலும் கட்சி பேதம் இன்றி சகல பகுதி மக்களும் இந்த விடுதலைக் கிளர்ச்சிக்கு ஆதரவு தர முன்வந்துள்ளனர்” என குறிப்பிடுகிறார்.
புதுச்சேரி தொழிலாளி வர்க்கத் தலைமையில், ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வழிகாட்டுதலில், வெகுமக்கள் மற்றும் சர்வ கட்சிகளையும் ஒன்றிணைத்து, ஐக்கிய முன்னணி அமைத்து விடுதலைப் போராட்டம் தீவிரப்படுத்தப்பட்டது. இதன் விளைவாக, 1954 நவம்பர் ஒன்றில் புதுச்சேரி விடுதலை பெற்று, இந்திய ஒன்றியத்துடன் இணைந்தது. தொழிலாளி வர்க்கம் அரசியல் மற்றும் வர்க்க உணர்வு பெறும்பொழுது அரசியல் மற்றும் சமூக மாற்றம் சாத்தியமே என்பதை ஜூலை 30 தியாகிகள் தினம் நிரூபித்துள்ளது. அது இன்றுவரையிலும் புதுச்சேரி தொழிலாளி வர்க்கத்திற்கு மிகச் சிறந்த வழிகாட்டியாகத் திகழ்கிறது.
ஜூலை 30 தியாகிகள் :
தோழர்கள் திருமிகு
1. அமலோற்பவநாதன்
2. இராஜமாணிக்கம்
3. கோவிந்தசாமி
4. ஜெயராமன்
5. சுப்புராயன்
6. சின்னையன்
7. பெருமாள்
8. வீராசாமி
9. மதுரை
10. ஏழுமலை
11. குப்புசாமி
12. ராஜகோபாலன்
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
