சோசலிச கியூபாவை கொண்டாடுவோம்
பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா
அறிமுகம்
நாம் வாழ்ந்துவரும் 21ஆம் நூற்றாண்டு மானுட இனத்தின் எதிர்காலம் பற்றிய பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்த நூற்றாண்டின் முதல் கால் பாகம் நிறைவடைய இன்னும் 18 மாதங்கள் கூட இல்லை. எனினும் மானுடத்தின் எதிர்காலம் பற்றிய மிகுந்த கவலையுடன், இந்த காலகட்டத்தில் சுற்றுச் சூழல், புவி வெப்பமயமாதல், பருவ/கால நிலை மாற்றம் போன்ற பிரச்சினைகள் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகின்றன. இவை எல்லாம் முக்கியம் என்றாலும், சமகாலத்தில் இயற்கையையும், மானுடத்தையும், தனது லாப வேட்டைக்காக அழிக்கத் தயாராக உள்ள முதலாளித்துவ உற்பத்தி அமைப்பிற்கும், மானுடத்தின் எதிர்காலத்தை உறுதிப்படுத்த இன்றியமையாத ஒன்றான சோசலிச உற்பத்தி அமைப்பிற்கும் இடையிலான நீண்ட நெடிய போராட்டம்தான் மானுட இனம் தழைக்குமா, முன்னேறுமா என்பதை நிர்ணயிக்கும் போராட்டமாகும். இதில் ஒரு முக்கிய பாத்திரம் வகிக்கும் சின்னஞ்சிறு நாடு கியூபா. அந்தச் சிறு நாட்டில், சோசலிச புரட்சி நிகழ்ந்து, சோசலிச அரசு ஆட்சிக்கு வந்து, 65 ஆண்டுகள் ஆகியும் அதன் மீது அமெரிக்க ஏகாதிபத்தியம் நடத்திவரும் பல்முனைப்போர், சோசலிசத்திற்கும் ஏகாதிபத்தியத்திற்கும் இடையிலான முரண்பாடுதான் இன்றைய சகாப்தத்தின் மையமான முரண்பாடு என்பதை நமக்கெல்லாம் மீண்டும் நினைவூட்டுகிறது. இந்தக் கட்டுரையில், கியூபாவின் சோசலிச புரட்சியின் சில அம்சங்களை சுருக்கமாக காண்போம்.
உலகை மாற்றிய மார்க்சிய-லெனினியம்
பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் உலகுக்கு மார்க்சும் எங்கெல்ஸும் படைத்து அளித்த கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை, அன்றைக்கு வேகமாக வளர்ந்து பரவிக் கொண்டிருந்த முதலாளித்துவ சுரண்டலை எதிர்த்து அன்றாட வாழ்விற்கான போராட்டங்களை நடத்திக்கொண்டிருந்த தொழிலாளி வர்க்கத்திற்கு புதிய வெளிச்சம் பாய்ச்சியது. உலகத் தொழிலாளிகள் ஒன்றிணைந்து போராடினால் முதலாளித்துவ சுரண்டல் அமைப்பை வீழ்த்தி சோசலிச பொன்னுலகை படைக்க முடியும் என்ற அறிவியல் அடிப்படையிலான நம்பிக்கையை அது அளித்தது. எனினும், பத்தொன்பதாம் நூற்றாண்டில், இந்த சோசலிச பார்வை, தத்துவமாகவும் இயக்கமாகவும் மலர்ந்து வளர்ந்து வந்தது என்றாலும், 1871இல் மிகக் குறைந்தகாலம் பாரிஸ் நகரில் அமைந்த புரட்சிகர கம்யூன் அரசு நீங்கலாக, சோசலிச ஆட்சி உலகில் அமையவில்லை.
இருபதாம் நூற்றாண்டில் மார்க்ஸ்-எங்கெல்ஸ் முன்வைத்த வரலாற்றுப் பார்வையை உறுதிசெய்யும் வகையில் மகத்தான சோசலிச புரட்சி ரஷ்யாவில் 1917 அக்டோபர் மாதம் வெற்றி பெற்றது. 20ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலேயே, முதலாளித்துவம் உலகெங்கும் பரவி, தனது ஏகபோக ஏகாதிபத்திய கட்டத்தை எட்டிவிட்டது. மாமேதை லெனின் 1916 இல் பிரசுரிக்கப்பட்ட தனது ஏகாதிபத்தியம் என்ற சிறு நூலில் இது முதலாளித்துவத்தின் உச்ச கட்டம் மட்டுமல்ல; அதன் இறுதிக்கட்டமும் ஆகும் என்றும், சோசலிசம்தான் மானுடத்தின் எதிர்காலம் என்றும் கூறியிருந்தார். ஏகாதிபத்திய கட்டத்தை “பாட்டாளி வர்க்கப் புரட்சியின் நுழைவாயில்” என்றும் கூறியிருந்தார். 20ஆம் நூற்றாண்டின் அனுபவமும் சமகால அனுபவமும் லெனின் முன்வைத்த கருத்துக்கள் சரி என்பதை உறுதிசெய்துள்ளன.
இருபதாம் நூற்றாண்டின் இரண்டாம் உலகப்போர் 1945இல் முடிவுக்கு வந்தபொழுது உலகில் மிகப்பெரிய அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருந்தன. இரு உலக போர்கள்(1914-18, 1939-45), பத்தாண்டுகாலம் நீடித்த பெரும் பொருளாதார வீழ்ச்சி (1929-1939), இவற்றால் எண்ணற்ற மனிதர்கள் உயிரிழந்ததுடன், அறிவியலும் தொழில்நுட்பமும் பாய்ச்சல் வேகத்தில் வளர்ந்ததும், பசி பட்டினி மற்றும் பெரும் பிணிகளுக்கு மேலும் பல லட்சம் உயிர் இழந்ததும், முதலாளித்துவம் வீழ்த்தப்படவேண்டும்; சோசலிசம் அமைய வேண்டும் என்ற வேட்கையை வளர்த்தன. முதலாளித்துவ முகாம் பின் தள்ளப்பட்டதும், சோசலிச முகாம் முன்னேறியதும் 1950களின் நடுப்பகுதியில் உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒருபங்கினர் சோசலிச நாடுகளில் வசிக்கும் நிலையை ஏற்படுத்தியது. மேலும், ஏகாதிபத்தியம் பலவீனம் அடைந்ததும், சோசலிசம் வலுப்பெற்றதும், காலனி ஆதிக்க அமைப்பு தகரவும், தேச விடுதலை இயக்கங்கள் ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் வெற்றிபெறவும் வழிவகுத்தது. எனினும், அமெரிக்க கண்டத்தில் லத்தீன் அமெரிக்கா என்று அழைக்கப்படும் மத்திய மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் தொடர்ந்து அமரிக்கா ஆதிக்கம் செலுத்தி வந்தது. இருப்பினும், சோசலிசம் மற்றும் தேச விடுதலை இயக்கங்களின் வெற்றிகளின் தாக்கம் படிப்படியாக லத்தீன் அமெரிக்க நாடுகளிலும், கரிபியன் தீவுகள் என்றழைக்கப்படும் நாடுகளிலும் பரவியது.
கியூபா
லத்தீன் அமெரிக்காவின் பெரும்பாலான நாடுகளில் ஸ்பெயின் ஏகாதிபத்தியத்தை எதிர்த்த போராட்டங்கள், பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதிகளில் நடந்து, இந்த நாடுகள் விடுதலை அடைந்திருந்தன.[1] ஆனால் கியூபாவின் தேச விடுதலை இயக்கம் ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னர்தான் நடந்தது. கியூபாவின் கிழக்கு பகுதியை சேர்ந்த கார்லோஸ் மானுவேல் செஸ்பிடெஸ் என்ற புரட்சியாளர், 1868 அக்டோபர் 10 அன்று கியூபாவின் விடுதலையையும் அடிமைகளின் விடுதலையையும் அறிவித்தார். கியூபாவின் ஒருபகுதியில் ஓர் அரசையும் அமைத்தார். ஆனால், அமெரிக்க வல்லரசு கியூபாவின் காலனி அரசைத்தான் ஆதரித்தது. பத்தாண்டுகளுக்குப்பின்னர் இந்த முயற்சி முடிவுக்கு வந்தது.
ஹோஸே மார்ட்டி என்பவர்தான் கியூபாவின் புரட்சிக்கு முன்னோடியாக கருதப்படுபவர். செஸ்பிடெஸ், கியூபாவின் விடுதலையை 1868 இல் பிரகடனம் செய்தபொழுது, மார்ட்டிக்கு வயது 15தான். அவர் வாழ்ந்தது 42 ஆண்டுகள்தான். ஆனால் மிகச்சிறந்த புரட்சிகர அறிவுஜீவியாக அவர் பங்களித்தார். அமெரிக்காவை ஏகாதிபத்திய நாடு என்று அவர் வர்ணித்தார். அது கியூபாவை கைப்பற்றும் என்று மிகச்சரியாக அவர் கணித்தார். இது உண்மையில் நடக்கவும் செய்தது. 1898 இல் அமெரிக்கா கியூபா மீது படை எடுத்து கைப்பற்றியது. நான்கு ஆண்டுகள் கழித்து அமெரிக்க ராணுவம் வெளியேறியது. இருப்பினும், நடைமுறையில் கியூபாவின் அரசியலில் அமெரிக்கா ஆதிக்கம் செலுத்தியது. இதைத் தொடர்ந்த காலத்திலும் தொழிலாளிகள் மற்றும் விவசாயிகளின் போராட்டங்கள் நடந்தன. இவற்றில் ஜூலியோ மெல்லா என்ற கம்யூனிஸ்ட் புரட்சியாளர் பாராட்டத்தக்க பங்கு ஆற்றினார். தொடர்ந்து சர்வாதிகாரிகள் அமெரிக்க ஆதரவுடன் கியூபா நாட்டை ஆண்டு வந்தனர். இவர்களில் மிக மோசமான ஒருவன்தான் பாதிஸ்தா. அவனது கொடுங்கோல் ஆட்சியை எதிர்த்து, 1953 ஜூலை 26 அன்று காஸ்ட்ரோ தலைமையில் கியூபாவின் சாந்தியாகோ நகரில் இருந்த மோன்காதா ராணுவ தளத்தை தாக்கிய போராட்டத்தில், ஃபிடெல் காஸ்ட்ரோ கைது செய்யப்பட்டு 15 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார். ஆனால் மக்களின் தொடர்ச்சியான எதிர்ப்பின் விளைவாக, இரண்டு ஆண்டுகள் கழித்து விடுவிக்கப்பட்டார். பின்னர் காஸ்ட்ரோவின் சகோதரர் ரவுல் உள்ளிட்ட இதர நாடுகடத்தப்பட்ட சில புரட்சியாளர்களுடன் 1955இல் இயக்கத்தை மீண்டும் கட்டமைக்கும் பணியின் பகுதியாக ஃபிடெல் காஸ்ட்ரோ மெக்ஸிகோ சென்றார். காஸ்ட்ரோ தலைமையில் 82 நபர்கள் கொண்ட ஒரு புரட்சி படையை திரட்டிக்கொண்டு, “கிரான்மா” என்றழைக்கப்பட்ட படகில் 1956 டிசம்பர் 2 அன்று கியூபாவின் கடற்கரையை அடைந்தனர்.[2] ஆனால் பல இழப்புகளுக்குப்பின் 22 பேர்தான் மிஞ்சினர். இருப்பினும் இவர்கள் செய்த சிறந்த அரசியல் பணிகளால் படை 400 பேர் என பிப்ரவரி 1958 இல் வளர்ந்திருந்தது. திறமைமிக்க வகையில் நகர்ப்புற உழைப்பாளி மக்களின் இயக்கங்களுடன் தொடர்பு கொண்டு, அவர்களையும் புரட்சியின் ஆதரவாளர்களாக மாற்றி, இந்த மலை கிராமங்களில் இருந்து வளர்ந்து வந்த புரட்சிப்படை ஜனவரி 1, 1959 அன்று கம்பீரமாக கியூபாவின் தலைநகரான ஹவானவிற்குள் நுழைந்து ஆட்சி அமைத்தது. அதற்கு முன்பாகவே, கொடுங்கோலன் பாதிஸ்டா நாட்டை விட்டு ஓடினான். இன்றும் கியூபாவின் தேசிய விடுதலை நாளாக ஜனவரி முதல் நாள் கொண்டாடப்படுகிறது.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தொடரும் தாக்குதல்கள்
கியூபாவின் ஜனநாயக புரட்சியை அழித்தொழிக்க அமெரிக்க ஏகாதிபத்தியம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது.[3] இன்றும் கியூபாவின் வளர்ச்சியை தடுக்க பல முனைவுகளை அமெரிக்க அரசு மேற்கொண்டுவருகிறது. கியூபாவிற்கு எதிராக அமெரிக்காவின் முழுமையான பொருளாதார தடைகள் 1960இல் இருந்து இன்றுவரை நீடிக்கின்றன. 1961இல் கியூபா அரசை கவிழ்க்கும் நோக்கத்துடன், அமெரிக்கா தயாரித்த ஆயுதங்கள், நிதிவசதி உள்ளிட்டு அனைத்து உதவிகளையும் தந்து கூலிப்படையை (இவர்களில் பலரும் கியூபா அரசின் எதிர்ப்பாளர்கள்) கியூபாவிற்கு அனுப்பியது. பல்வேறு பன்னாட்டு அரங்குகளிலும், அமைப்புகளிலும், கியூபாவிற்கு எதிராக இன்றுவரை அமெரிக்க வல்லரசு இயங்கி வருகிறது. துவக்கத்தில் அமெரிக்க வல்லரசின் ஆசியுடன் ஆட்சியில் இருந்த பாதிஸ்டா அரசை கியூபாவின் புரட்சி முடிவுக்கு கொண்டுவந்தது என்பதே பெரும் குற்றம் என்று அமரிக்க வல்லரசு பார்த்தது. தொடர்ந்து உலக நாடுகள் மத்தியில், குறிப்பாக, சோவியத் ஒன்றியம் உள்ளிட்ட சோசலிச முகாம் மற்றும் ஏராளமான வளரும் நாடுகள் மத்தியில் கியூபாவின் இறையாண்மைக்கு ஆதரவு பெருகி வந்ததும் அமரிக்காவின் தோல்வியை பறைசாற்றியது. தனது மூக்கின்கீழ் உள்ள ஒரு மிகச்சிறு நாடு தான் அறிவிக்கும் ஆணைகளுக்கு இணங்காமல் இறையாண்மையுடன் இயங்குவதை அமெரிக்கா ஏற்க தயாராக இல்லை.
1960 அக்டோபர் 19 அன்று – கியூபாவின் புரட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைவதற்கு முன்பாகவே – உணவு மற்றும் மருந்துகள் நீங்கலாக எந்த பொருளையும் கியூபாவிற்கு ஏற்றுமதி செய்யத் தடை விதித்தது அமெரிக்க அரசு. 1962இல் இது மேலும் விரிவுபடுத்தப்பட்டு எந்த பொருளும் கியூபாவிற்கு செல்லக்கூடாது என்ற வகையில் ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன. 1992இல் இருந்து ஐக்கிய நாடுகள் பேரவை கியூபா மீதான பொருளாதாரத்தடையை அமெரிக்கா முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று கிட்டத்தட்ட ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றி வருகிறது. இதனை எதிர்த்து தொடர்ந்து வாக்களிப்பது அமெரிக்காவும் இஸ்ரேலும் மட்டுமே. 2024இல் கூட இத்தடைகள் தொடர்கின்றன. மேலும் நெருக்கடி தரும் தடைகள் மூலம் கியூபாவில் ஆட்சி மாற்றம் செய்ய அமெரிக்க ஏகாதிபத்தியம் முயன்று வருகிறது. இத்தகைய நடவடிக்கைகள் கடந்த அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக எந்த ஜனாதிபதி/கட்சி அமெரிக்காவில் ஆட்சி செய்தாலும் தொடர்கின்றன.
கியூபாவின் புரட்சி விரைவிலேயே ஜனநாயக கட்டத்தில் இருந்து சோசலிசம் நோக்கி பயணித்தது. சமத்துவம் சார்ந்த விழுமியங்கள் கியூபாவின் விடுதலை இயக்க வரலாற்றில் இடம் பெற்றிருந்தன. 1950களில் உலகெங்கும் தேச இறையாண்மை மற்றும் சோசலிச விழுமியங்களுக்கு செல்வாக்கு வேகமாக அதிகரித்துவந்தது. கியூபாவின் மீதும் இது தனது தாக்கத்தை ஏற்படுத்தியது. காஸ்ட்ரோ தலைமையிலான கியூபா அரசுக்கு மக்கள் ஆதரவும் அதிகரித்து வந்தது. 1960ஆம் ஆண்டு அமெரிக்க அரசின் ஆவணங்களே இதை குறிப்பிட்டுவிட்டு, “கியூபா நாட்டிற்கு பொருளாதார நெருக்கடி கொடுத்து அதன் பொருளாதாரத்தையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் நாசம் செய்தால் காஸ்ட்ரோ அரசுக்கு எதிராக மக்கள் திரும்புவார்கள். எனவே பொருளாதார பகிஷ்கரிப்பு, பொருளாதார சதிகள், அழிவு நடவடிக்கைகள் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்” என்ற தன்மையில் பரிந்துரைக்கிறது.
இத்தகைய பின்புலத்தில் கியூபாவின் பாதை சோசலிசமாகத்தான் இருக்கமுடியும் என்ற முடிவுக்கு கியூப புரட்சியின் தலைமை வந்தது.
சோசலிச கியூபா, 1960-1992
1960களில் அமெரிக்க வல்லரசும் ஏகாதிபத்திய முகாமும் கியூபாவிற்கு எதிராக பல நடவடிக்கைகளில் ஈடுபட்ட பொழுதும், கியூபாவை மிரட்டி பணிய வைக்க முயன்ற பொழுதும், கியூபா இந்த சவால்களை மிகுந்த அரசியல் உறுதியுடனும், சோசலிச முகாமின் ஆதரவுடனும், அணிசேரா இயக்கத்தின் நட்புறவை வைத்தும், எதிர்கொண்டது. இதில் சோசலிச சோவியத் ஒன்றியத்தின் பங்கு மிகப் பெரியதாகும். அமெரிக்க வல்லரசை நியூக்ளியர் ஏவுகணைகள் பிரச்சினையில் சோவியத் ஒன்றியம் வலுவாக எதிர்கொண்டு கியூபா ஆதரவு நிலை எடுத்தது. 1960-1992 காலத்தில் அமெரிக்காவின் பொருளாதார மற்றும் இதர தடைகளை எதிர்கொள்ள சோவியத் மற்றும் இதர சோசலிச நாடுகளின் உதவியும் ஒருமைப்பாடும் முக்கிய பங்கு வகித்தன. கியூபாவின் சோசலிச அரசும் அடுத்தடுத்து வந்த சவால்களை மக்களின் பங்கேற்புடனும் கியூப கம்யூனிஸ்ட் கட்சியின் வழிகாட்டுதலுடனும் சந்தித்தது.
சோவியத் ஒன்றியம் சிதறியதும், சோவியத் யூனியன் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் சோசலிசம் வீழ்த்தப்பட்டு, முதலாளித்துவம் ஆதிக்க உற்பத்தி அமைப்பாக ஆனதும், கியூபாவிற்கு மிகப்பெரும் சவால்களாக அமைந்தன. சோசலிச நாடுகளின் பின்னடைவு மட்டுமின்றி, உலகை உலாவரும் நிதி மூலதன வல்லூறுகளின் மேலாதிக்கம், நவீன தாராளமயத்தின் கடும் சவால்கள், அமெரிக்க வல்லரசு மற்றும் அதன் கைப்பாவைகளாக இயங்கிவரும் உலக வங்கி, ஐஎம்எஃப், உலக வர்த்தக அமைப்பு போன்றவற்றின் தாக்குதல்களையும் கியூபா எதிர்கொள்ள வேண்டி வந்தது. மிகுந்த உறுதிப்பாட்டுடனும் அரசியல் தெளிவுடனும் ஃபிடெல் காஸ்ட்ரோ உள்ளிட்ட கியூபா கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டு தலைமை இச்சவால்களை எதிர்கொண்டது. இவை பற்றி இன்னொரு சந்தர்ப்பத்தில் விரிவாக விவாதிக்கலாம். ஆனால் ஒரு அம்சத்தை மட்டும் இங்கு சுருக்கமாக குறிப்பிடலாம். கியூபா பொது உடமை கட்சியின் ஆழமான புரிதலும், கியூப புரட்சியின் உள்ளார்ந்த ஜனநாயக பண்புகளும் விழுமியங்களும், மக்கள் மீது அரசியல் தலைமையும், அரசியல் தலைமை மீது கியூபா மக்களும் வைத்திருக்கும் பரஸ்பர நம்பிக்கையும், கியூபாவின் சோசலிச அமைப்பின் வலிமையின் அடிப்படைகள் என்று கூறுவது மிகையல்ல.
வளரும் நாடுகளின் குரல்
பன்னாட்டு தளத்தில் வளரும் நாடுகளின் குரலாக கியூபா தொடர்ந்து ஒலித்து வந்துள்ளது. 1960இல் விவசாய நாடாக இருந்த கியூபா பல தடைகளையும் தகர்த்து கல்வியிலும் ஆரோக்கியத்திலும் நவீன அறிவியல் தொழில்நுட்ப துறைகளிலும் இன்று தடம் பதித்துள்ளது. கியூபாவின் மொத்த தேச உற்பத்தி மதிப்பில் சேவைத்துறையின் பங்கு கூடியுள்ளது, தொழில் வளர்ச்சியும் ஏற்பட்டுள்ளது. இதில் மருத்துவம், கல்வி, போன்ற சேவைத்துறைகளிலும் நவீன உயிரி தொழில்நுட்ப துறையிலும் உலகின் பல நாடுகளுக்கு உதவும் நாடாக கியூபா அறியப்பட்டுள்ளது. சர்வதேச அரங்கில் தன்னலமற்று உதவும் மக்கள் கியூப மக்கள் என்ற நற்பெயரையும் கியூபா பெற்றுள்ளது. ஆப்பிரிக்க நாடுகளின் விடுதலை இயக்கங்களுக்கும் விடுதலைபெற்ற ஆப்பிரிக்கா நாடுகளின் வளர்ச்சிக்கும் கியூபா குறிப்பிடத்தக்க பங்களித்துள்ளது. அதேபோல் லத்தீன் அமெரிக்க நாடுகளின் வளர்ச்சியிலும் கியூபா சிறப்பான பங்களிப்பு செய்துள்ளது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து, லத்தீன் அமெரிக்க நாடுகளுடன் இணைந்து, ஜனநாயக சக்திகளை வலுப்படுத்துவதில், கியூபாவின் பங்கு பரவலாக அங்கீகரிக்கப்படுகிறது. பொருளாதார, சமூக, பண்பாட்டு வளர்ச்சியை பொறுத்த வரையில் கியூபாவின் குறியீடுகள் வளரும் நாடுகளின் வரிசையில் முன்னணியில் உள்ளன. ஏற்றத்தாழ்வுகள் ஒரு எல்லைக்குள் வைக்கப்பட்ட, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை சாதித்துவரும் நாடுகளில் ஒன்றாக கியூபா திகழ்கிறது. பணக்கார நாடுகளில் ஒன்றாக கியூபா அறியப்படவில்லை. ஆனால், சமத்துவ சமூக பொருளாதார விழுமியங்களை பொதுவாக உயர்த்திப்பிடிக்கும் நாடாகவும், ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பதில் முன்னணி நாடுகளில் ஒன்றாகவும், கியூபா திகழ்கிறது. இதற்கு அடிப்படையாக அமைந்திருப்பது, கியூபா கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை பாத்திரமும், கியூபா மக்களின் நெடிய ஏகாதிபத்திய எதிர்ப்பு பாரம்பரியமும், உலகளவில் சோசலிச மற்றும் இதர ஜனநாயக சக்திகளின் ஆதரவும் என்று கூற முடியும்.
இறுதியாக…
பெரும் தடைகளை தகர்த்து அனைவரையும் உள்ளடக்கிய தன்மையிலான வளர்ச்சியை கியூபா சாதித்திருப்பதற்கு மையமான காரணம், அதன் சோசலிசப் பாதை என்பதை நாம் பதிவு செய்ய வேண்டும். இக்கட்டுரையின் துவக்கத்தில் குறிப்பிட்டதுபோல் ஒட்டுமொத்த மானுட இனமும், கியூபா மக்களும் சோசலிச வளர்ச்சிப்பாதையில் பயணிப்பதுதான் சரியாக இருக்கும்.
[1] எனினும் இவை பெரும்பாலும் அமெரிக்க வல்லரசின் செல்வாக்குக்கு உட்பட்டிருந்தன.
[2] கியூபா கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரபூர்வ தினசரியின் பெயர் கிரான்மா
[3] காஸ்ட்ரோ ஆட்சிக்கு முன்பு இருந்த நிலை பற்றிய அமரிக்காவின் சி ஐ ஏ கூறுகிறது: 1902 இல் அமெரிக்க ராணுவ ஆட்சிக்குப் பின் கியூபா விடுதலை பெற்ற நாடானது. (ஆனால்) அங்குவந்த அரசுகள் பெரும்பாலும் ராணுவம் மற்றும் லஞ்சஊழல் மலிந்த அரசியல்வாதிகளிடம்தான் இருந்தன .
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
