தமிழகத்தில் பொருள் முதல்வாதத்தின் சருக்கலும், வைதீக ஆக்கிரமிப்பும்!
இரா.சிந்தன்
தமிழகத்தில் நிலவிய குடிவாழ்க்கையில், முன்னிலைப் பொருள்முதல்வாத நோக்கு நிலவியது. தொன்ம நம்பிக்கைகளும் உருவாகின. இவை உலகம் முழுவதும் நிலவக்கூடிய இயல்பான போக்குதான். தமிழ் இலக்கியங்களின் தொன்மையின் காரணமாக, ஆதிச் சமூகத்தின் தத்துவங்கள் அதன் இலக்கணத்திலும், கட்டமைப்பிலும், கலாச்சார வாழ்க்கையிலும் தொடர்ந்ததை பார்த்தோம். அதன் பின்னர் வர்க்க சமுதாயத்தில் தத்துவப் போக்கில் சில சருக்கல்கள் ஏற்பட்டிருந்தாலும், சுமார் 1500 ஆண்டுகள் தமிழர் இலக்கியங்களின் தத்துவ நோக்கில் பொருள் முதல்வாத பார்வைக்கு முக்கிய இடம் இருந்ததை தேவ பேரின்பன் தனது நூலில் நிறுவுகிறார்.
அந்த காலகட்டத்திலேயே தமிழகத்திற்கு பார்ப்பனர்களும், வேள்வி வளர்க்கும் வைதீக பலிச் சடங்குகளும் வந்துவிட்டன. அவர்களுக்கு உயர்குடியினர் வழங்க்கிய ஆதரவின் காரணமாக, சமுதாயத்தில் ஒரு இடத்தை பெற்றிருந்தாலும் – அவர்களின் சிந்தனைகளுக்கு தத்துவ அங்கீகாரம் இல்லை என்பதையும் தேவ பேரின்பன் எடுத்துக் காட்டுகிறார். அப்படியானால், தமிழ்நாட்டின் தத்துவப் பரப்பில் கருத்து முதல்வாதம் எப்படி கோலோச்சியது? முதல்நிலை நகரங்களின் வீழ்ச்சிக்கு பின்னர் உருவான பேரரசுகள் – நிலவுடைமை உற்பத்தி முறையை முல்லை நிலத்திற்கும் விரிவாக்கின. வேளாண் உற்பத்தி முறையில் நடைபெற்ற இந்த மாற்றம், வடக்கில் இருந்து சாதீய அடிமைச் சுரண்டலை இங்கே இறக்குமதி செய்வதிலும், அதற்கான தத்துவ ஆதரவுத் தளத்தை உருவாக்குவதிலும் வந்து முடிந்தது. ஆனால் இந்த மாற்றம் எளிதாக நடக்கவில்லை. சமுதாயத் தளத்தில் அதன் விளைவுகளை வரலாற்றியலாளர்கள் இன்னும் பேச வேண்டும். தத்துவத் தளத்தில் இந்தப் போராட்டத்தை தேவ. பேரின்பன் அடையாளம் காண்கிறார். வளர்த்தெடுக்க வேண்டிய கருதுகோள்களை முன்வைக்கிறார். அவற்றையும் கூடுமானவரையில் தேவபேரின்பனின் சொற்களில் காண்போம்.
இறைக்கோட்பாடுகள்
ஆதியில் நிலவிய குடிவாழ்க்கையிலேயே தொன்ம நம்பிக்கைகள், தெய்வங்கள் உருவாகின. இருப்பினும் கருத்து முதல்வாத தத்துவ நிலைப்பாட்டில் நின்று சர்வ வல்லமை கொண்டதொரு இறை சக்தியை முன்வைப்பது பிற்காலத்திலேயே ஏற்பட்டது. சங்கப் பாடல்களில் காலத்தால் பிந்தியவைகளான திருமுருகாற்றுப்படை, பரிபாடல், கலித்தொகை ஆகியவை இறையியல் சார்ந்த சமயம் ஒன்றினை விளக்க முற்படுகின்றன. திணை வாழ்வின் அழிவு காரணமாக ஏற்பட்ட வறுமை போன்ற துன்பங்களை போக்கிக் கொள்ளும் வழிமுறையாக உருவான ஆற்றுப்படுத்துதல் மரபை பின்பற்றி எழுதப்பட்டதே திருமுருகாற்றுப்படை ஆகும். திருக்குறளிலிலும் நாம் தத்துவச் சருக்கலை முன்பே கண்டோம்.
கி.பி. 3 ஆம் நூற்றாண்டு வாக்கில் மெளரிய – ரோமானிய வர்த்தகம் முடிவுக்கு வந்தது. வர்த்தகத்தின் வழியாக வருவாய் பெற்று இயங்கிய சங்க கால அரசுகளும், முதல் நிலை நகரங்களும் வீழ்ந்தன. இக்காலத்தில் எழுதப்பட்ட ‘மணிமேகலை காப்பியம்’ பசிக் கொடுமையையும், அந்தக் காலத்தின் சமூக நெருக்கடிகளை தத்துவ விவாதங்களுக்குள் கொண்டு வருகிறது. மணிமேகலை நூலில், அகநிலை கருத்து முதல்வாத சருக்கலை பார்க்கிறோம். உணர்வுதான் முதன்மையானது என்ற நிலைப்பாட்டிற்கே மணிமேகலையும் வருகிறது. மணிமேகலையில்தான் ஆன்மா பற்றிய கருத்து முதன்முதலாக விவாதிக்கப்படுகிறது. இந்த நூலில் சைவம், வைணவம், வேதவாதம், பிரம்மவாதம் ஆகிய கருத்து முதல்வாதப் போக்குகளும் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன. எனவே அந்த காலத்தில் பிராமணியத்துடன் தத்துவ மோதல் தொடங்கியிருப்பதை பேரின்பன் எடுத்துக் காட்டுகிறார். இதன் பின்னர், புராணக் கதைமாந்தர்கள் கடவுளர்களாக ஆக்கப்பட்டு கோயில்கள் எழுப்பப்பட்டன. தமிழர் வரலாற்றில் இந்த நிலைமை கி.பி. 5 ஆம் நூற்றாண்டுக்கு முன் இல்லை என்கிறார் பேரின்பன்.
தத்துவ மோதல்களும் திருப்புமுனையும்
தமிழகத்தில் நிலவிய பொருள்முதல்வாத தத்துவ நோக்கை எதிர்த்து போராடிய பிராமணீய சிந்தனைகளுக்கு வெற்றி சாத்தியமாகவில்லை. இந்த தத்துவ வரலாற்றில் கி.பி 4 முதல் 9 நூற்றாண்டு வரையிலான ஐநூறு ஆண்டு காலம் தத்துவப் போராட்டம் உக்கிரமாக நடைபெற்ற காலம் என்கிறார் பேரின்பன். அதில், அரசு ஆதரவுடன் நிலவுடைமையும், சுரண்டலும் தீவிரப்பட்ட ஆறாம் நூற்றாண்டினை வரலாற்றுப் போக்கில் திருப்புமுனை ஏற்படுத்திய காலமாக வகைப்படுத்துகிறார்.
இந்த நூற்றாண்டில் பல்லவர் – பாண்டிய அரசுகள் புதிய சகாப்த அரசுகளாக எழுச்சிபெற்றன. இக்காலகட்டத்தில் வேளாண்மை விரிவாக்கம் நடைபெற்றது. ஆற்றுப்படுகைகளைக் கடந்து முல்லை நிலப் பகுதிகளிலும் விவசாயம் விரிவாக்கப்பட்டது. 1.5 லட்சம் ஏரிகளை உருவாக்கி பாசனத்தை விரிவாக்கினர். ஏர் கலப்பை போன்ற உற்பத்திக் கருவிகளை அரசன் வழங்கியதாக செப்பேடுகள் கூறுகின்றன. உணவு உற்பத்தி பெருகியது. இதன் வழியாகவே, சங்கம் மருவிய காலத்தின் மிகப்பெரும் சமூகப் பிரச்சனையாக இருந்த உணவுப் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டது.
இந்த நிலவுடைமை அரசுகளே தமக்கான தத்துவப் பார்வையை நிலைநிறுத்தவும், பரப்பவும் – வைதீக பிராமணர்களை அரசு ஏற்பாட்டில் இறக்குமதி செய்தனர். பிராமணர்களுக்கு நிலம் தானமாக வழங்கப்பட்டது. மேலிருந்து நிலக்குவியலும், நிலவுடைமை அமைப்பும் திணிக்கப்பட்டது. இவ்வாறாகவே வைதீக மதம் வளர்க்கப்பட்டது. அரசு அதிகாரத்தின் அங்கமாக முதலில் மாறியது. எனவே, கோயில்கள் நிலவுடைமை அதிகாரத்தின் மையமாகவும், வேளாண்மை உபரியை சுரண்டும் நிறுவனமாகவும் உருவாக்கப்பட்டன. தமிழ்நாட்டில் முனைப்பாக செயல்பட்ட பக்தி இயக்கமானது, வேளாண் உயர் சாதி பிராமணர்களின் கருத்தியல் தளத்தை பலப்படுத்தியது.
பக்தி இயக்கமானது வளமான ஆற்றுப் படுகைகளில் கூடுதல் கவனம் செலுத்தியதை பேரின்பன் சுட்டிக்காட்டுகிறார். “சைவத்தில் திருநாவுக்கரசர் 126 கோயில்களைப் பாடினார் அவற்றில் 100 கோயில்கள் காவிரிப் படுகையைச் சார்ந்தவை. திருஞான சம்பந்தர் பாடிய 231 கோயில்களில் 167 சோழ மண்டலத்தைச் சேர்ந்தவை. சுந்தர மூர்த்தி நாயனார் பாடிய 85 கோயில்களில் 48 சோழ மண்டலத்தை சார்ந்தவை. அதேபோல வைணவக் கோயில்களில் போற்றப்படும் 108 திவ்ய தேசங்களில் 40 சோழ பகுதியிலும், 22 பல்லவர் பகுதியிலும், 17 பாண்டியர் பகுதியிலும், 13 சேர பகுதியிலும் அமைந்துள்ளன” என்கிறார்.
வேளாண் பரப்பு விரிவாக்கப்பட்டதன் இணை விளைவாக, அதுவரை இனக்குழுக்களாக வாழ்ந்த குடிகள் தம்முடைய உற்பத்திச் சாதனங்களை இழந்தனர். எனவே, சங்க கால சுதந்திரக் குடிகள் புதிய சமூக ஏற்பாட்டில் அடிமைகளாக சுரண்டப்பட்டனர். சமூகப் படிநிலையில் அடிமட்டத்தில் தள்ளப்பட்ட உழைக்கும் மக்களிடமிருந்து இலவச உழைப்பு உறிஞ்சப்பட்டது. கோயில்களுக்கும், அரசுக்கும், அக்ரஹாரங்களுக்கும் கொத்தடிமைகள் உருவாக்கப்பட்டனர். பிராமணீய இறையியலும், நால்வருண முறைக்கு உட்பட்ட சாதிமுறையும் நிலைநிறுத்தப்பட்டது. இந்த காலகட்டத்திலும் தொடர்ந்து நடைபெற்ற தத்துவ போராட்டத்தை பேரின்பனின் நூல் எடுத்துக் காட்டுகிறது.
கலகக்கார சித்தர்கள்
பக்தி இயக்கத்தின் காலத்தை ஒரே வகைப்பட்டதாக தேவ. பேரின்பன் காணவில்லை. சித்தர்கள் பற்றிய ஆராய்ச்சியை பலரும் செய்திருந்தாலும் தேவ பேரின்பனின் ஆய்வு இவ்வகையில் முக்கியம் பெறுகிறது. கைலாசபதியின் வழியில் நின்று சித்தர்களை ஒருவித கலகக்காரர்களாக பார்க்கும் பேரின்பன், தங்கள் செயல்பாட்டை ஒரு இயக்கமாக முன்னெடுக்காததால் நேரடியான ஆக்கப்பணிகளை செய்ய இயலாது போனதை சுட்டிக்காட்டுகிறார். சாங்கியம், தாந்திரீகம், சமணம், யோகம் ஆகிய கருத்துக்களை ஒருங்கிணைத்துக் கொண்ட நூலாக திருமந்திரம் திகழ்கிறது என்கிறார்.
“உடம்பினை முன்னம் இழுக்கென்றிருந்தேன்
உடம்பினுக்குள்ளே உறுப்பொருள் கண்டேன் – 275
உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன்; உயிர் வளர்த்தேனே – 724
உடம்போடுதான் உயிரின் வினை ஏற்படுகிறது என்பதை திருமூலர் கூறுகிறார். மேலும், அவர் உடலை ஏற்படுத்துவது செயலே என்கிறார். திருமூலர் விந்துநாதம் என்று குறிப்பிடும் கொள்கையை விளக்கும் தேவ பேரின்பன், அதன் தத்துவ அடிப்படையை அறிந்திட சீனத்தின் தாவோயிசம் வரை செல்கிறார். சித்த மருத்துவத்தின் மூலவர்களில் ஒருவராக கருதப்படும் போகர் சீனத்தில் இருந்து வந்து சென்றவர் என்ற செய்தியை அறிந்து அதன் அடிபற்றி அங்கே நேர்நிலைப் பொருள் மற்றும் எதிர்நிலைப் பொருள் தாவோயிச தத்துவம் குறிப்பிடக் கூடிய அம்சங்கள் சித்தர்களின் அணுகுமுறையிலும் வெளிப்படுவதை எடுத்துக் காட்டுகிறார். தாய் – தந்தை என இரு அம்சங்களின் கூட்டுக் கலவையை மையப்படுத்தி, அதில் தாய் இயல்பினை முதன்மைப் படுத்தும் சித்தர்களின் பார்வையை, வளமையை பெருக்குவது பற்றிய முன்னிலைப் பொருள்முதல்வாதப் பார்வை என்று விளக்குகிறார்.
“பெண்மையை வழிபடக் கூடிய தாந்திரீகம், வளமையை பெருக்குவதற்கு மனித முயற்சியை அடித்தளமாக பார்க்கிறது. இந்த சிந்தனை மனிதர்கள் வேளாண்மையை கண்டறிந்த செயல்பாட்டோடு தொடர்புடையது ஆகும்” என்கிறார். தாந்திரீகம் மனித உடலை நாம் அறிய முடிவது போல இயற்கையையும் அறிய முடியும் என்கிறது. ஒரு மானுடக் குழந்தையின் பிறப்பைப் போன்றதுதான் பிரபஞ்சத்தின் பிறப்பும் என்கிறது. சீனத்தின் தாவோயிசத்தை உள்வாங்கி தமிழ்நாட்டின் பொருள்முதல்வாத மரபுடன் அதனை இணைத்துக் கொண்டு வளர்த்தெடுத்தது சித்தர்களின் தனிச் சிறப்பு என்கிறார் பேரின்பன். இந்த தாந்திரீக பொருள்முதல்வாத சிந்தனையைக் கீழ்மைப்படுத்தும் வேலை பிற்காலத்தில் நடைபெற்றது.
அதேபோல, மருத்துவச் சித்தர்கள் பற்றியும் பேரின்பன் ஆய்வு செய்கிறார். பாவத்தின் சம்பளம் நோய் என்ற ஆன்மீக அற்பவாதப் பார்வையை சித்தர்கள் வன்மையாக மறுத்தார்கள். ஒவ்வொரு நோய்க்கும் காரணம் ஐந்து பூதச் சேர்க்கையில் ஏற்படும் கோளாறு பற்றியதே என்றனர். பொருட்களின் திட்டவட்டமான வடிவத்திற்குள்தான் அந்தப் பொருட்களின் இயல்பாக நாம் காணப்படும் சூக்குமத் தன்மைகள் துலங்குகின்றன என்ற சித்தர்களின் தத்துவ நிலைப்பாட்டை மிகப்பெரும் முன்னேற்றமாக காண்கிறார் பேரின்பன். மேலும், ஒரு மருத்துவர் நோயாளியை தொட்டுப் பரிசீலிக்க வேண்டும். நோயாளியின் ஐந்து உணர்வுகளை ஆராய வேண்டும். உடலியல் அறிந்து மருத்துவம் செய்ய வேண்டும் என்கின்றன சித்தர் நூல்கள். மருத்துவ அறிவியலுக்கு பொருள்முதல்வாத வாழ்க்கையே அடிப்படையாகவும், அறிவாராய்ச்சியே அதன் வழிமுறையாகவும் இருந்தது என்கிறார். அதேபோல, யோகாசன வழிமுறைகள் தற்போது ஆன்மீக வகைப்பட்டதாக முன்வைக்கப்படுகின்றன. அதுபற்றிய ஆய்வும் இந்த நூலில் உள்ளது. பழங்குடிகளுடைய கண்டுபிடிப்பான யோகம் தாந்திரீக தத்துவப் பார்வையைக் கொண்டது. ஆனால் அதன் வேர்களை அழித்து தன்வயப்படுத்தும் முயற்சியை ஆன்மீகத் தத்துவங்கள் மேற்கொள்வதை சுட்டிக்காட்டுகிறார்.
நீலகேசியின் போராட்டம்
பண்டைய தமிழ் தருக்க நூல்களான பிங்களம், அஞ்சனம், தத்துவ தரிசனம், காலகேசி போன்றவை இன்னும் கிடைக்கவில்லை. நீலகேசி மட்டுமே நமக்கு கிடைக்கும் முழுமையான தருக்க நூலாகும். வட புலத்தில் பிராமணீய எதிர்ப்பு தத்துவங்களாக உருவான பெளத்தம், சமணம், ஆசீவகம் போன்றவை இங்கு நிலவிய பொருள்முதல்வாதச் சூழல் காரணமாக முன்பே நிலைபெற்றுவிட்டன. எனவே வைதீகமும், படிநிலைச் சாதியமைப்பை அடிப்படையாகக் கொண்ட நிலவுடைமையும் நிலைநாட்டுவதை எதிர்த்து தத்துவப் போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்றுள்ளன. வேதவாதிக்கு எதிராக நீலகேசி முன்வைக்கும் வாதங்கள் கவனம் ஈர்க்கின்றன. வேதவாதிகளிடம் ஒரு தத்துவமே இல்லை என்று தன் வாதங்களால் அதனை நொறுக்குகிறார்.
“வேதவாதிகள் கொலை தீது என்பார்கள்; பின்னர் வேள்வியில் கொலை செய்து அதனை அறம் என்பர். காமத்தை விட்டொழிக்க வேண்டும் என்பர்; பின்னர் காமத்தால் வீடுபேறு கிட்டும் என்பர். வேதத்துக்கு புறம்பான சமயங்கள் கூறுகின்ற நெறிகளை தீமையானது என்பர்; பின்னர் உலகில் உள்ள எல்லாச் சித்தாந்தங்களும் எங்களுடைய வேதத்தினுள்ளது என்பர், இவ்வாறு பல முரண்பாடுகளைக் கொண்டதே வேதம்” என்பதுடன் “பிரம்ம தேவனுடைய உறுப்பில் இருந்து நால்வகை மக்கள் பிறந்ததாக கூறுவர்; சூத்திரர்களை வேள்வியில் சேர்க்கமாட்டார்கள்” என்பதைக் குறிப்பிட்டு படிநிலை அநீதியை கேள்வியெழுப்புகிறாள் நீலகேசி.
வேதத்தை சுயம்பு என்று கூறுகிறார் வேதவாதி, அவரை நீலகேசி எதிர்க் கேள்வி கேட்கிறார்: “ஊரின் நடுவில் உள்ள ஒரு வீட்டின் முன்றிலில் நள்ளிரவில் மலம் கழித்துவிட்டு யாரும் அறியாமல் போய்விட்டால்… அந்த மலம் கழித்தவர் யாருமிலர்; அது சுயம்பு என்று சொல்வாரும் உளரோ?…”
“மருத்துவ அறிஞர் அந்த மலத்தை ஆராய்ந்து அந்த மலம் மேற்குலத்தவர் மலம், இழி குலத்தவர் மலம் என்று அறிய முடியாது. ஆனால் அது பிணியுடையதா பிணியில்லாததா என அறிய முடியும். அவ்வாறே வேதத்தை ஆராய்ந்து அதை செய்தவர் உயர்குலத்தவரா இழிகுலத்தவரா என அறிய முடியாது, ஆனால் அறிவுடையவர் அல்லது அறிவில்லாதவர் என அறியமுடியும் என்கிறார். (இந்தச் சதுக்கத்தில் மட்டும் எட்டுச் செய்யுள்கள் காணாது போயிருப்பதையும் பேரின்பன் சுட்டுகிறார்).
அதேபோல மற்ற பல தத்துவங்களின் கருத்துமுதல்வாத நிலைப்பாடுகளையும், பொருள்முதல்வாத வாதங்களின் வழியாக வீழ்த்துகிறார் நீலகேசி.
“தன்னைப் படைப்பின் முன் தான் இன்மையால் இல்லை
பின்னுப் படைக்கின் படைக்கப் படுவதின்
முன்னைப் படைப்பென் முடிவில்லை மூடனே
நுன்னைப் படைத்தவர் யாரினி நோக்காய்” – நீலகேசி 771
“மூடனே நின் ஆத்மன் தன்னைத் தானே படைத்துக் கொள்வான் எனில் அவன் தன்னைப் படைத்துக் கொள்வதற்கு முன் இல்லை. அவன் வேறு ஒருவனால் படைக்கப்பட்டால் அவனைப் படைத்தது எது? இவ்வாறு இது முடிவின்றிப் போகும் கேள்வி. இது பொருந்தாக் கேள்வி. இந்த மாதிரி பொருந்தாமை கூறும் உன்னைப் படைத்தவர் யாரோ?
“நின் ஆத்மன் எல்லாச் செயலும் உடையவன் என்றால் தவம் செய்பவனும் அவனே; கொலை செய்பவனும் அவனே என்றாகிறது. அத்தகைய ஆத்மன் அறிவற்றவனும், தீமையானவனுமே ஆவான்” என்றும் நீலகேசி வாதிடுகிறார்.
சமணத்தில் ஏற்பட்ட அருகன் வழிபாடு, மறுபிறப்பு போன்ற கருத்துக்கள் காரணமாக நீலகேசியின் வாதங்கள் தடுமாறினாலும், கடவுள் மறுப்பு, சாதி எதிர்ப்பு, பிராமண எதிர்ப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய சமூகவியல் கொள்கையாக இருப்பதை பேரின்பன் குறிப்பிடுகிறார்.
நீலகேசியில் பொருள்முதல்வாத தத்துவமும் பதிவு செய்யப்படுகிறது. “ஐம்பூதங்களின் சேர்க்கையால் இன்பம், அறிவு போன்றவை ஏற்படுகின்றன. உலகம் என்பது ஐம்பெரும்பூதங்களின் கூட்டமே ஆகும். இதிலிருந்து மாறுபட்ட உயிர் தனியாக இல்லை. உலகின் தன்மை கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என்ற மூன்று நிலைகளின் நிகழ்ச்சியே ஆகும்” என்கிறார் பூதவாதி. ஆனால் நமக்கு பூதவாதிகள் எழுதிய நூல்கள் எதுவும் கிடைக்கபெறவில்லை.
ஜெயராசிப் பட்டரின் உலகாயதம்
ஜெயராசிப் பட்டர், கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பொருள்முதல்வாதியாவார். “தத்துவப் பார்வை சிம்ஹா” என்ற நூலை அவர் சமக்கிருத மொழியில் எழுதினார். தமிழ்நாட்டில் இயங்கிய அவரின் நூலை பொருள்முதல்வாதம் பற்றிய முழு நூலாக முன்வைக்கும் பேரின்பன். ஜெயராசிப் பட்டர் பெளத்தம், நியாயம் ஆகிய தத்துவங்களையும், மீமாம்சம் மற்றும் சாங்கியத்தையும், அவற்றில் ஏற்பட்ட சருக்கல்களின் காரணமாக கடுமையாக விமர்சிப்பதை கூறுகிறார்.
ஜெயராசிப் பட்டரும் வைதீகத்தின் ஆன்மக் கோட்பாட்டை மறுத்தார். “கழுதைக் கொம்புக்கும் ஆன்மாவுக்கும் இடையில் தொடர்பேதும் இருக்க முடியாது. இவை இரண்டுமே இல்லை… ஆன்மாவை அறிவதற்கான அறிதல் கருவி ஏதுமில்லை, அது கருதல் என்ற கருவியை மட்டுமே சார்ந்துள்ளது” என்பதுடன், “ஆன்மா ஓய்வெடுப்பதற்கான மறு உலகம் என்பதும் ஆன்மாவைப் போலவே பொய்யானதுதான்” என்கிறார் ஜெயராசிப் பட்டர். எளிதில் புரிந்துகொள்வதற்கு இயலாத தருக்க நடையில் இருப்பினும் பொருள்முதல்வாதத்தின் அடிப்படைகளை நிலைநாட்டும் இந்த நூல் அறிவியல் ஆய்வு முறைகளின் வளர்ச்சிக்கு தனது பங்களிப்பைச் செய்தது என்கிறார் பேரின்பன்.
வைதீகம் உறிஞ்சிக்கொண்ட தத்துவச் சருக்கல்கள்
பழந்தமிழரின் குடிவாழ்க்கை மரபுகளோடு பூதவாதம் உருப்பெற்றது. இங்கு வந்து சேர்ந்த சமணம், பெளத்தம், ஆசீவகம் போன்ற பொருள் முதல்வாத தத்துவங்களும், வேத மறுப்புச் சிந்தனைகளும் இயல்பாக நிலைபெற்றன. தொடக்கத்தில் தத்துவ அடித்தளமில்லாது வேள்விச் சடங்குகளாக நிலவிய வைதீகம், பக்தி இயக்க காலத்தில் தனக்கான தத்துவத்தை சமண, பெளத்த சமயங்களில் இருந்து பெற்றது. அரசு ஆதரவுடன் இயங்கிய சமயங்களாகவும், வணிகர்களின் ஆதரவோடும் சமணமும், பெளத்தமும் இயங்கிய காலத்தில் இந்த தத்துவங்களில் ஏற்பட்ட சருக்கல்களும், ஆசீவக தத்துவத்தோடு நடைபெற்ற மோதலில் அது அடைந்த பாதிப்பும் பிற்காலத்தில் வைதீகத்திற்கு தத்துவ அடித்தளத்தை உருவாக்கியதாக பேரின்பனின் நூலில் அறிய முடிகிறது.
சமணம் தன்னுடைய உயிர் பற்றிய விளக்கத்தில் சருக்கியது, பின்னர் ஆன்மா என்ற உபநிடதக் கருத்துக்கு தத்துவமாகியது. பெளத்தமும் இவ்வாறே தனது வினை பற்றிய கொள்கையில் சருக்கியது மறுபிறப்பு பற்றிய பிராமணீய நம்பிக்கைக்கு தத்துவம் அளித்தது. சமணம் தழுவியிருந்த மன்னர்களை மதம் மாற்றியதன் பின்னர் சமணர்களை கழுவேற்றும் எல்லைக்குச் சென்றது சைவம்.
பெளத்தமும் சமணமும் முன்வைத்த நல்வினை – தீவினை என்ற பகுப்பு முறைக்கு மாறாக, மெல் வினை – வல்வினை என்று பாகுபாடு செய்யப்பட்டு இவை இரண்டும் சிவ தர்மம் (சிவ அறம்) எனப்பட்டது. இதன் அடிப்படையில் தீவினையும் பக்தியால் புனிதமடைகிறது என்றனர். இறைவனுக்காக எதையும் செய்யலாம் என்ற இறை அறம் சமண பெளத்த அறத்துக்கு சாவு மணி அடித்தது. பெரிய புராணம் இதற்கு மிகச் சிறந்த உதாரணமாகும். மேலும், பாத வணக்கம் மற்றும் ஆணாதிக்கக் கருத்துக்களையும் வைதீகம் தனக்கு சாதகமாக்கியது. கோயிலையும் பார்ப்பனர்களையும் வணங்குதல் பெண்ணடிமைத்தனம் போன்றவை அறமாக வலியுறுத்தப்பட்டன.
சமணமும், பெளத்தமுமே தமிழை வளர்த்தன. ஆனால், பக்தி இயக்கமானது சமக்கிருதத்தை போற்றினாலும், தமிழை பயன்படுத்திக் கொண்டது. அது சாதி எதிர்ப்பு நிலை எடுத்த சமண – பெளத்தங்களை வீழ்த்துவதற்காக, வடபுலத்தில் நிலவிய படிநிலை ஏற்பாட்டிலிருந்து நெகிழ்வை ஏற்படுத்திக் கொண்டு வட்டார சாதிகளை முன்னிருத்தியது. இது சாதி எதிர்ப்பை மட்டுப்படுத்த உதவியது. பிராமண எதிர்ப்பையும் கூட சைவத்தோடு இணைப்பதில் அப்பர் கவனம் செலுத்தினார். ஆழ்வார்களும் இந்த நிலையை மேற்கொண்டனர். சங்க காலத்திய திணைக் கடவுள்களான முருகனும், கொற்றவையும் சிவனின் தெய்வக் குடும்பத்தோடு இணைக்கப்பட்டன. கோயில்களோடு, மடங்களும் உருவாக்கப்பட்டு சமயம் வளர்த்தனர். மடங்களும் பெரிய நிலவுடைமையைக் கொண்டிருந்தன. கோயில், வழிபாடு என்று வரும்போது வருணாசிரம கட்டமைப்பும், சாதி வேறுபாடும் பாதுகாக்கப்பட்டது. பக்தி என்ற சரணாகதியும், நம்பிக்கையும் இறைவனுக்கு மட்டுமல்லாது அரசனுக்கும் வலியுறுத்தப்பட்டது.
இவ்வாறாக, தனக்கு எதிரான தத்துவங்களை தாக்கி அழிப்பது மட்டுமல்லாமல், அவற்றின் சருக்கல்களையும் வைதீகம் பயன்படுத்திக் கொண்டது. ஆளும் வர்க்கங்களை எதிர்கொள்ளும்போது, கருத்து முதல்வாதச் சருக்கல்களை சகித்துக் கொண்டால், மொத்த எதிர்ப்பையும் விழுங்கிச் செறிப்பதில் ஆளும் வர்க்கமே சாதகம் பெறும் என்ற படிப்பினையை இந்த வரலாற்று நிகழ்வுப் போக்கு நமக்கு வழங்குகிறது.
உழைக்கும் மக்களுக்கு கல்வி மறுக்கப்பட்டு, அவர்களின் நலனை முன்னெடுத்த தத்துவங்கள் தாழ்த்தி சிறுமைப்படுத்தப்பட்டன. எனவே, பொருள்முதல்வாதச் சிந்தனைகள், மக்களின் அனுபவவாத எல்லையை தாண்டாமல் தடுக்கப்பட்டன. கி.பி. 18ஆம் நூற்றாண்டிலேயே இந்த நிலைமைகளில் மாற்றம் ஏற்பட்டது
பக்தி இயக்கம் பற்றியும், அக்காலத்தின் நிலவுடைமை குறித்தும் ஏராளமான தகவல்களை திரட்டி பதிவு செய்துள்ளார் தேவ. பேரின்பன். நிலவுடைமையின் உருவாக்கத்தோடு வைதீக வருகைக்கு உள்ள தொடர்பை மேலும் வளர்த்தெடுத்து, அடுத்தடுத்த நூற்றாண்டுகளுக்கும் செய்வது இந்த நூலில் சாத்தியமாகவில்லை. மேலும், தத்துவத் தளத்தில் நடைபெற்ற போராட்டங்களை, சமூகத்தில் நடைபெற்ற கலகங்களோடு இணைத்து விளக்குவதற்கு போதுமான தரவுகள் கிடைக்கவில்லை என்றே தோன்றுகிறது.
பல தாக்குதல்களுக்கு மத்தியிலும், சங்க கால அறநெறியின் பண்புகளை சாதாரண மக்களிடம் கொண்டு செல்வோராக சித்தர்கள் இருந்ததையும். உலகாயத தத்துவம் மட்டுமே சருக்கல்கள் இல்லாமல் வைதீகத்தை எதிர்த்து நின்று, சாமானிய உழைக்கும் மக்களுக்கான தத்துவமாக நிலை நின்றதையும் பேரின்பன் பதிவு செய்கிறார். அந்தப் போராட்டம், ஏராளமான உயிரிழப்புகளையும், உடைமைகள் இழப்பையும் ஏற்படுத்தியதுடன் வாய்ப்புக் கிடைத்த இடத்தில் அந்த தத்துவ நூல்கள் தடமே இல்லாமல் அழிக்கப்பட்டு வரலாறே இல்லாமல் செய்யப்படும் அளவுக்கு உக்கிரமான எதிர்ப்பை தாங்கியே நடந்துள்ளது.
முடிவாக…
தமிழில் இதுவரை வெளியாகியுள்ள தர்க்க நூல்களையும் தாண்டி இலக்கணத்திலும், இலக்கியங்களில் வருகின்ற உவமை, உவமானங்களிலும் தத்துவ வேர்களை கண்டறிந்து எழுதப்பட்டுள்ள இந்த நூல் பரவலான வாசிப்பைப் பெற வேண்டியது ஆகும். சித்தர்கள் மரபைப் பற்றிய பேரின்பனின் ஆராய்ச்சி தமிழ்நாட்டு எல்லையைத் தாண்டி தென்னிந்தியா முழுவதும் விரிவாக்கப்பட வேண்டிய தேவை உள்ளது. மேலும் கருத்து முதல்வாத சருக்கலோடு, பக்தி இயக்கம் பற்றிய ஆய்வுகளை சரியான திசையில் முன்னெடுக்க உதவியாக ஏராளமான சிந்தனைத் தெறிப்புகளையும் பேரின்பன் வழங்கியுள்ளார். இந்த நூல், ஆய்வாளர்கள், மார்க்சிய செயல்பாட்டாளர்கள் மட்டுமல்லாது, தமிழின் வரலாற்றின் மீது ஆர்வம் கொண்ட அனைவரும் வாசித்து விவாதிக்க வேண்டிய ஒன்று. எளிய நடையில், ஏராளமான தரவுகளை திரட்டி எழுதப்பட்டிருக்கும் இந்த நூல் மார்க்சிய கண்ணோட்டத்திற்கு பேரின்பனின் சிறப்பான பங்களிப்பாகும்.
தமிழர் வளர்த்த தத்துவங்கள் – தேவ பேரின்பன், வெளியீடு: பாரதி புத்தகாலயம், சென்னை. விலை: ரூ. 200/-
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
