ஏலியன் பற்றிய கேள்விக்கு எங்கெல்ஸ் சொன்ன பதில் என்ன? : இயற்கையின் இயக்கவியல் நூல் ஓர் அறிமுகம்
இரா. சிந்தன்
இந்தப் பூமியே மொத்தமாக அழிந்துபோனால், வேறு எங்காவது உயிர் தோன்றவோ, பிழைத்திருக்கவோ சாத்தியம் உண்டா? பூமியை போலவே உயிர்கள் வாழ சாத்தியமுள்ள கோள்கள் உள்ளனவா? நம்மைப் போலவோ, நம்மை விட முன்னேறியோ, உயிரினங்கள் இந்த பிரபஞ்சத்தில் வாழ்கின்றனவா? என்ற கேள்விக்கு விஞ்ஞானம் இப்போதும் நிரூபணம் தேடி வருகிறது. அதையே பலரும் கற்பனையான வேற்றுலக வாசிகள் என்ற பெயரால் கதைகளாகவும், அச்சுறுத்தும் யூகங்களாகவும் முன்வைக்கின்றனர். இதே கேள்வியை மார்க்சிய நோக்கில் அணுகும்போது, மாமேதை ஃபிரடெரிக் எங்கெல்சிடம் அதற்கான பதில் கிடைக்கிறது.
- “கோடிக்கணக்கான ஆண்டுகளில் மனித குலம் அழிய நேர்ந்தாலும், பொருட்கள் தனது எல்லா உருமாற்றங்களிலும் நிரந்தரமாக இருந்து வருகின்றன. பொருட்களின் உருமாற்றத்தில் சிகரமாக அமைந்த (மூளையும் அதன்) சிந்தனை (யும்), மனிதர்களோடு சேர்ந்து அழிந்து போகலாம். ஆனால், வேறு எங்காவது ஒரு காலத்தில் மீண்டும் சிந்திக்கும் மனதை (பொருட்கள் அதன் இயக்கப் போக்கில்) உற்பத்தி செய்தே தீரும் என்பதும் உண்மை”
பூமியில் எப்படி உயிர்கள் உருவாகி, அதன் உச்சமாக சிந்தனை வடிவமெடுத்ததோ, அதே போல வேறு எங்கோவொரு இடத்தில், வேறு ஒரு தருணத்தில் உயிர் உருவாகும், அதன் உச்சமான சிந்தனையும் உருவாகும் சாத்தியம் எப்போதும் உள்ளது என்பதுதான் எங்கெல்ஸ் கொடுத்த பதில்.
இதுபோல அறிவியல் தொடர்பான ஏராளமான சிந்தனைகள் அவர் எழுதிய ‘இயற்கையின் இயக்கவியல்’ நூலில் கிடைக்கின்றன. ஃபிரெடெரிக் எங்கெல்ஸ், தான் வாழ்ந்த காலத்தில் அறிவியலின் வளர்ச்சிப் போக்குகளை உள்வாங்கி, அதில் இருந்து மார்க்சிய தத்துவத்திற்கான ஆதாரங்களை வடித்தெடுக்க முயற்சி செய்தார். அதற்காக, தனது 53 வது வயதில் (1873) தனது புதிய நூலுக்கான ஒரு திட்டத்தை குறித்து வைக்கத் தொடங்கினார். சுமார் 9 ஆண்டுகளாக அவர் மேற்கொண்ட வாசிப்பும், ஆய்வும் 4 தொகுப்புகளில், 197 குறிப்புகளாக இருந்தன. அந்த பணி முழுமையடையவில்லை. முழுமையடையாத அந்தத் தொகுப்புதான் பின்னர் நூலானது.
நூல் வெளியான பின்னணி
எங்கெல்ஸ் மறைவிற்கு பின், இந்தக் குறிப்புகளை வெளியிடலாமா என அறிவியல் அறிஞர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. 1924 ஆம் ஆண்டில் (சுமார் 50 ஆண்டுகள் பழையதாகிவிட்ட) அந்த குறிப்புகளை படித்த விஞ்ஞானி ஐன்ஸ்டைன், ‘தற்கால இயற்பியல் மாறிவிட்டாலும், எங்கெல்ஸ் அறிவு சிந்தனையின் வளர்ச்சி என்ற முறையில் இதனை வெளியிடலாம்’ என்றார்.
இதற்கு முன்பே ‘மனிதக் குரங்கு மனிதனாக மாறுவதில் உழைப்பின் பாத்திரம்’ என்ற கட்டுரை ஒரு சிறு நூலாக 1896 ஆம் ஆண்டில் வெளியானது. ஆவியுலகமும் இயற்கை விஞ்ஞானமும் என்ற கட்டுரை 1898 ஆம் ஆண்டு வெளிவந்தது. இருந்தாலும் இந்த முழு குறிப்புகளும், 1925 ஆம் ஆண்டில் வெளியாயின. ஆங்கிலத்தில் இந்த நூலை மொழியாக்கம் செய்து வெளியிட, மேலும் 15 ஆண்டுகள் ஆனது. அதன் முன்னுரையை பரிணாமவியல் விஞ்ஞானி ஜே.பி.எஸ்.ஹாலண்டே எழுதியிருந்தார். பல பத்தாண்டுகள் தம்மை குழப்பி வந்த கேள்விகளுக்கு எங்கெல்ஸ் குறிப்புகளில் பதில் இருப்பதை அவர் தனது முன்னுரையில் குறிப்பிட்டார்.
[சோவியத் ரஷ்யாவின் முன்னேற்றப் பதிப்பகம் தமிழில் வெளியிட்ட இந்த நூலை ஆர்.கே.பாண்டுரங்கன் மொழியாக்கம் செய்துள்ளார்]
எங்கெல்ஸ் இந்த நூலை எழுதிய காலம் மாறிவிட்டது. அறிவியல் கண்டுபிடிப்புகள் வளர்ந்துவிட்டன. அவரது காலத்திலேயே வெளியான சில நூல்கள் எங்கெல்ஸ் படிக்க கிடைக்கவில்லை. இதன் காரணமாக சில பிழைகளும், தவறுகளும் இந்த குறிப்புகளில் இடம்பெற்றிருந்த போதிலும், அதன் காரணமாக இந்த நூல் தனது முக்கியத்துவத்தை இழந்துவிடவில்லை.
இந்த நூலை தனது திட்டத்தின் அடிப்படையில் எங்கெல்ஸ் முழுமைப்படுத்தியிருந்தால், அறிவியல் உலகில் உச்சமானதொரு பங்களிப்பாக உருவாக்கியிருக்கும் என்பது உறுதி. மார்க்சியத்தின் மிக முக்கிய படைப்பான, மூலதனம் நூலை முழுமைப்படுத்தி நமக்களிக்கும் கடமையை அவர் எடுத்துக் கொண்டதால், இதுபோன்ற சொந்த முயற்சிகளை அவரால் நிறைவு செய்ய இயலவில்லை என்றே தெரிகிறது.
விஞ்ஞானத்திற்கு பங்களிப்பு
இந்த நூல் “அறிவியலை பற்றிய பார்வையை பெறுவதற்கும், அந்த பார்வையை பயன்படுத்தி உலகை மாற்றியமைப்பதற்கான தெளிவை அடைவதற்கும்” உதவுகிறது என்கிறார் அறிவியல் அறிஞர் ஜே. டி. பெர்னல்.
அதனால்தான், இயற்கையின் இயக்கவியல் நூலைப் பற்றி உலகப் புகழ்பெற்ற அறிவியல் ஆய்வு இதழான நேச்சர் ஓர் ஆய்வுக் கட்டுரை வெளியிட்டு சிறப்பித்தது.
விஞ்ஞானத்தின் பல பிரிவுகளுக்கும் இந்த நூல் மிக முக்கியமான பங்களிப்புகளை செய்துள்ளது. இதில்தான்
- மனிதர்களாகிய நம்முடைய பரிணாம வளர்ச்சியில் உழைப்பிற்கு உள்ள பங்கு பற்றிய தனிச் சிறப்பான தத்துவப் பார்வையை எங்கெல்ஸ் முன்வைத்தார்.
- ஈர்ப்பு விசை தத்துவத்தை பற்றி எங்கெல்ஸ் கூறும்போது பொருட்களின் சாரமாக ஈர்ப்புதான் அமைந்திருக்கிறது என்ற கருதுகோளை மறுத்தார். “ஈர்ப்பு இருக்கும் இடத்தில் எதிர்ப்பும் இருக்கும். எனவே ஒரு பொருளின் சாரமாக ஈர்ப்பும் எதிர்ப்பும் அமைந்திருக்கிறது.” “ஒவ்வொரு தனிப்பட்ட கவர்ச்சியும் வேறெங்காவது ஒத்த விலக்கல் சக்தியால் ஈடு செய்யப்பட வேண்டும்” என்றார். பிற்காலத்தில் அறிவியல் அதனை உண்மையென நிறுவியது.
- கணிதத்தில் பூச்சியம் பற்றி குறிப்பிடும்போது, எந்தவொரு திட்டமான அளவுக்கும் நிலை மறுப்பாக நிலவக்கூடிய பூச்சியம் என்பதை உள்வளம் அற்றதாக பார்க்க கூடாது என்கிறார். பூச்சியம் என்றால் எல்லா நேர்நிலை, எதிர்நிலை பரிமாணங்களிடையே உள்ள எல்லைக் கோடு, அதுதான் ஒரே நடுநிலை எண். இவ்வகையில் அது திட்டவட்டமான எண்ணாகவும் கூடுதலான உள்வளம் கொண்டதாகவும் உள்ளது.
- உயிர் என்றால் என்ன என்ற கேள்விக்கான விளக்கத்தை எங்கெல்ஸ் வழங்கினார். “புரதப்பொருட்களின் இருத்தலின் பாங்குதான் உயிர்” என்று அவர் குறிப்பிட்டார். உயிரின் பிறப்பும், சாரமும் பற்றிய ஆய்வுக்கான தொடக்கமாக இந்த விளக்கம் அமைந்தது.
இப்படிப்பட்ட சிறப்புமிக்க இந்த நூலின் சில பகுதிகளை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
சமுதாய மாற்றமும் நம் சிந்தனை மாற்றமும்
மனிதர்களாகிய நாம் ஒரு சமுதாயமாக உருவெடுத்த வரலாற்று வளர்ச்சியின் போக்கில் அறிவியலும் வளர்ந்து வந்துள்ளது. அறிவியல் வளர்வதால், தத்துவ சிந்தனையில் தாக்கம் ஏற்படுகிறது. தத்துவம் மேம்படுகிறது. இயற்கையின் இயக்கவியல் நூலுக்கான அறிமுக உரையில் இதனை ஆதாரங்களுடன் எழுதுகிறார் எங்கெல்ஸ்.
ஆராய்ந்து அறியக்கூடிய விஞ்ஞானிகள், தம்முடைய சிந்தனை அளவில் பிற்போக்கான கருத்துக்களை கொண்டிருப்பது எப்படி என்பதில் அவருடைய கவனம் குவிகிறது.
(பொருள்முதல்வாதம் எனப்படும்) மேம்பட்ட தத்துவ பார்வை முதலில் அராபியர்களிடம் உருவானது. கிரேக்கர்களிடம் பொருள்முதல்வாதம் மேலும் வளமடைந்தது. லத்தீன் மொழி பேசும் மக்களிடம் அந்த மேம்பட்ட சிந்தனைகள் பரவலாகின; வேர் பிடித்தன. இயக்கவியல் சிந்தனையும் ஹெகல் வரையில் பல்வேறு சிந்தனையாளர்களால் வளர்ந்தது. இருப்பினும், இந்த தத்துவப் பார்வைகளில் இருந்து விஞ்ஞானிகள் விலகியிருந்தனர்.
வரலாற்று நோக்கில் இயற்கை விஞ்ஞானிகளிடம் நிலவிய இருவேறு நிலைமைகளை எங்கெல்ஸ் தனது அறிமுகக் கட்டுரையில் விவரிக்கிறார்.
- பழமைவாத கூட்டத்தின் அச்சுறுத்தல் அவர்களை எப்போதும் சூழ்ந்திருந்தது.
“இயற்கை விஞ்ஞானம் … தன்னுடைய வாழும் உரிமையை போராடி வென்றுகொள்ள வேண்டியிருந்தது” உடலின் இரத்த ஓட்டத்தை கண்டுபிடித்துக் கொண்டிருந்த ஸெர்வேடஸ், எரி கம்பத்தில் கட்டி உயிரோடு எரிக்கப்பட்டார். விஞ்ஞானி புருனோ எரித்துக் கொல்லப்பட்டார். இதுபோல ஏராளமான கொடுமைகளை அவர் பட்டியலிடுகிறார்.
- எனினும் அவர்கள் பல திறன் படைத்தவர்களாக இருந்தார்கள்.
“நவீன முதலாளித்துவ ஆட்சியை ஸ்தாபித்தவர்களுக்கு முதலாளித்துவ கட்டுப்பாடுகள் இருக்கவில்லை. நேர்மாறாக, அந்த காலகட்டத்தின் சாகசங்கள் அவர்களுக்கு சிறிதளவோ அல்லது கூடுதலாகவோ ஊக்கம் கொடுத்தன. அளவற்ற பயணங்களை மேற்கொள்ளாதவர்களோ, நான்கு அல்லது ஐந்து மொழிகளில் தேர்ச்சி இல்லாதவர்களோ, பல்வேறு துறைகளில் திறன் பெறாதவர்களோ யாரும் இல்லை”
இதற்கு உதாரணமாக டாவின்சி உள்ளிட்டு பலரையும் குறிப்பிடுகிறார். டாவின்சி ஒரு ஓவியர் என்று நாம் அறிவோம். அவர் கணிதத்தில் சிறந்து விளங்கினார்; பொறியியலாளராக இருந்தார்; இயந்திரவியலில் இயங்கினார்; இந்த எல்லா துறைகளும் நன்றி சொல்லும் விதமான பல முக்கியமான கண்டுபிடிப்புகளை கொடுத்தார். அப்படித்தான் பலரும் உருவானார்கள்.
எனவே, விஞ்ஞானிகள் இயற்கை மாறாத தன்மை கொண்டதாக நம்பினார்கள். அனைத்தும் ஒரு சக்தியால் உருவாக்கப்பட்டதாக நினைக்கவும் செய்தார்கள்.
அந்த காலத்திலேயே காண்ட் என்ற தத்துவ ஞானி பூமியும், சூரியக் குடும்பமும் படிப்படியாக உருவானதுதான் என்று குறிப்பிட்டிருந்தார். எனினும், விஞ்ஞானிகள் அதனை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. அப்படியே சிலர் அதனை அறிந்திருந்தாலும், மாறக்கூடிய பூமியின் மேல் மாறாத விலங்குகள் உயிர்வாழ்வதாக நம்பினர். அந்த அடிப்படையில்தான் தங்களின் ஆய்வுகளை தொடர்ந்தனர்.
இவ்வாறு அவர்களிடம் நிலவிய பிற்போக்கான சிந்தனைகளை இயக்க மறுப்பியல், கருத்து முதல்வாதம், ஐயுறு வாதம், ஒருதலைப்பட்ச அனுபவவாதம், இயந்திரவாதம், ஆவியுலகவாதம், விஞ்ஞான பார்வையற்ற பொருள்முதல்வாதம் மற்றும் மத ரீதியான கருத்துகள் என வரிசைப்படுத்தலாம். தனது நூலில் அவை அனைத்தையும் எதிர்த்து சமர் புரிந்தார் எங்கெல்ஸ்.
அதற்காக அறிவியலின் பல்வேறு கண்டுபிடிப்புகளை தொகுத்து நோக்கி, அதிலிருந்து இயங்கியல் விதிகளை அடையாளம் காட்டினார்.
மூன்று விஞ்ஞான உண்மைகள்
எங்கெல்ஸ் தன்னுடைய அறிமுக உரையில் நிர்ணயமான முக்கியத்துவம் கொண்ட 3 விஞ்ஞான உண்மைகளை வரிசைப்படுத்துகிறார்.
- முதலாவது, (1838 – 39) உயிரணு (செல்) கண்டு பிடிக்கப்பட்டது.
இந்த கண்டுபிடிப்பு, இயற்கையில் உயிருள்ள ஜீவிகளை (தாவரங்கள் மற்றும் விலங்குகளைப்) பற்றிய ஆராய்ச்சிக்கு உறுதியான அடித்தளத்தை தந்தது. உயிரினங்களால் உருவாக்கப்பட்ட கூட்டுப்பொருட்களை செயற்கையாக சில வேதிப்பொருட்களை கொண்டே தயாரிக்க முடியும் என்பதும் தெரிய வந்தது. இதன் மூலம், உயிரிகளுக்கும், உயிரற்ற பொருட்களுக்கும் இடையில் உள்ள தொடர்பு உறுதியாக தெரியத் தொடங்கியது.
- இரண்டாவது, (1842 47) ஆற்றல் அழிவின்மை பற்றிய விதி.
ஆற்றல் அழியாது, ஒரு வடிவத்தில் உள்ள ஆற்றலின் குறிப்பிட்ட அளவு, மற்றொரு வடிவத்தில் உள்ள ஆற்றலின் குறிப்பிட்ட அளவிற்கு ஒத்திசைவான முறையில் மாற முடியும் என்பது இதன் மூலம் நிரூபிக்கப்பட்டது.
- மூன்றாவது, (1859) டார்வினின் பரிணாம கோட்பாடு.
இது பல்வேறு உயிரினங்களுக்கு இடையில் நிலவி வரும் வேறுபாடு எவ்வாறு தோன்றியது என்பதை வெளிப்படுத்தியது.
(எங்கெல்ஸ், மேற்சொன்ன கால வரிசை பட்டியலை மேலும் விரிவாக்க திட்டமிட்டிருந்தார் என்பது பின் குறிப்புகளில் தெரிகிறது. அதில் கி.மு. 200 முதல் கி.பி. 1538 வரை மனிதர்கள் மேற்கொண்ட சில முக்கிய கண்டுபிடிப்புகளை தொகுத்துள்ளார். மேலும், மேலே குறிப்பிட்டுள்ள 3 முக்கிய கண்டுபிடிப்புகளின் வரிசையில், பூமியும், சூரிய குடும்பமும் படிப்படியாக உருவானவைதான் என்பதை காண்ட் (1755) என்ற தத்துவ ஞானியும் பின்னர், லாப்லாஸ் வரை நிறுவியதும் தொடங்கி, இயற்கை அறிவியலின் பல்வேறு பிரிவுகள் உருவானது வரையில் ஆறாக வகைப்படுத்துகிறார்).
இதைத் தொடர்ந்து அவர் பூமி எப்படி உருவானது என்பதையும், உயிரற்ற பொருட்களில் இருந்து பொருட்களின் உயிர் எப்படி உருவாகியது என்பதையும் விளக்குகிறார்.
“உருவமற்ற புரதப்பொருள் ஒரு மென் சவ்வுப் போர்வையாக உள்ள உட்கருவைக் கொண்ட முதல் உயிரணுவை உற்பத்தி செய்ய பல ஆயிரம் ஆண்டுகள் பிடித்திருக்கும். உயிர்ப்புள்ள உலகு முழுமையின் அமைப்பியல் வளர்ச்சிக்கே இந்த முதல் அணு அடித்தளமாக அமைந்தது’ என்றார்.
உயிர் எவ்வாறு பிறப்பெடுத்தது என்பது அந்த காலகட்டத்தில் முழுமையாக நிறுவப்படவில்லை. எனினும், “புரதப் பண்டங்களின் ஆக்கம் அறியப்பட்டவுடன் உயிருள்ள புரதத்தை தயாரிக்கும் வேலையில் வேதியியல் இறங்கும்” என்று உறுதியாக நம்பினார் எங்கெல்ஸ். நவீன கால அறிவியல் வளர்ச்சியில் நாம் இப்போது அதை சாதித்துவிட்டோம்.
வளர்ந்துவரும் விஞ்ஞானத்திற்கும், இயக்கவியல் பொருள்முதல்வாத சிந்தனைக்கும் உள்ள தொடர்பையும், இரண்டுக்கும் இடையிலான சார்பையும் அவர் குறிப்பிட்டார். இன்றும் கூட விஞ்ஞானிகளுக்கு அந்த பார்வை கைகூடுவது அவசியமே.
மனிதர்களின் தனித்துவம்
“மனிதர்களுடன் வரலாறு தொடங்குகிறது” என்ற அற்புதமான விவரிப்பை தனது அறிமுக உரையிலேயே தருகிறார் எங்கெல்ஸ். விலங்குகள் பரிணமித்து வளர்வதை அவைகளின் வரலாறாக பார்த்தாலும், மனிதர்களுக்கு மட்டுமே சுய உணர்வுடன் வரலாறு என்பது இருந்து வருகிறது. மனிதர்களின் தனித்துவத்தை ‘மனிதக் குரங்கு மனிதனாக மாறியதில் உழைப்பின் பாத்திரம்’ என்ற அத்தியாயத்தில் ஆய்வு செய்கிறார். இந்த பகுதியையும் அவர் முழுமையாக எழுதி முடிக்கவில்லை. இருந்தாலும் கிடைத்திருக்கும் அளவிலேயே அது நமது பரிணாமம் குறித்த விஞ்ஞானத்தை புரட்டிப் போட்டது.
நாம் பரிணமித்து உருவானதில் உழைப்புக்கு முக்கியமான பங்கு உண்டு. அதற்கு உடலியலில் ஏற்பட்ட மாற்றமே தொடக்கப் புள்ளி ஆகும். “கைகள் சுதந்திரம் பெற்றதுதான் மனிதர்களின் பரிணாமத்தை நோக்கிய நிர்ணயமான முதல் படி” என்கிறார் எங்கெல்ஸ்.
“கைகள் உழைப்பிற்கான உறுப்பாக இருந்தன”. கைகள் உழைப்புக்கு தூண்டுகோலாக அமைந்தன. உழைப்பின் காரணமாக கைகளும், உடலின் மற்ற அங்கங்களும் செம்மைப்பட்டு வளர்ந்தன. இவ்வாறு உழைப்பின் மூலம் நாம் இயற்கையோடு உறவாடுகிறோம். இயற்கையை மாற்றியமைக்கிறோம். இயற்கையின் சவால்களையும் எதிர்கொள்கிறோம்.
சமுதாயமாக இதில் ஈடுபட்ட ஆதி மனிதர்களுக்கு தகவல் தொடர்பு தேவைப்பட்டது. தகவல் தொடர்பும் உழைப்பினால்தான் உருவானது; மேம்பட்டது. சைகையில் தொடங்கி, பேச்சு வழக்காக, பிறகு அது மொழிகளாக வளர்ந்தது. இந்தப் போக்கிலேயே ஆதி மனிதர்களின் உழைப்பானது மூளையின் செயல்பாட்டுக்கும், சிந்தனை வளர்ச்சிக்கும் வழி அமைத்தது.
சிந்திக்கக் கூடிய உறுப்பான மூளை, தனது பணியாட்களான புலன்களை பயன்படுத்தி பகுத்தறியவும், முடிவுகாணவும் திறன் பெற்றது. டார்வின் விதிகளில் ஒன்றான ‘வளர்ச்சியின் பரஸ்பர தொடர்பு பற்றிய விதியின்படி’ இது நடந்தது என்கிறார் எங்கல்ஸ். இவ்வாறுதான், குரங்குக் கூட்டத்திற்கும் மனித சமுதாயத்திற்கும் இடையில் நிலவக்கூடிய மாபெரும் இடைவெளி உருவானது.
சூறையாடலும், சிந்தித்து உண்பதும்
“ஒரு வேட்டைக்காரனை போல் அன்றி ஒரு ஓநாய் தனக்கு அடுத்த ஆண்டிற்கு குட்டிகளை உணவாக அளிக்கும் பெண் மானை விட்டு வைப்பதில்லை. மிருகங்களின் இந்த சூறையாடும் பொருளாதாரம், இன வகைகள் தங்கள் வழக்கமான உணவைக் கைவிட்டு இதர வகைக்கு ஏற்றவாறு தங்களை அமைத்துக்கொள்ள நிர்ப்பந்தித்தது.” என்கிறார் எங்கெல்ஸ்.
இவ்வாறு இயற்கையில் எழக்கூடிய உணவுப் பற்றாக்குறையை, மனிதர்கள் வேறு விதமாக எதிர்கொண்டனர். “கருவிகளை மேம்படுத்தி, அதன் மூலம் இறைச்சி உணவை தேடத் தொடங்கியதால் ஜீரணத்திற்கு எடுத்துக்கொண்ட நேரம் குறைக்கப்பட்டது. தேவையான எல்லா முக்கிய சத்துக்களையும் எளிதாக பெறுவதை இறைச்சி உணவு உறுதி செய்தது. இந்த இறைச்சி உணவுப் பழக்கம் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தியது” என்கிறார்.
மேலும் இறைச்சி உணவுக்கு மாறியதால் மிருகங்களை பழக்கப்படுத்துதல், இறைச்சியை தேடிவரும் விலங்குகளிடம் இருந்து தற்காத்துக்கொள்ளவும், இன்னும் பல தேவைகளுக்காகவும் நெருப்பை பயன்படுத்துவது என்ற இரண்டு விதமான அவசியங்களை ஏற்படுத்தியது. இப்படித்தான் வேட்டையாடிக் கொண்டும், உணவு சேகரித்துக் கொண்டும் இருந்த அன்றைய மனிதர்கள் கால்நடைகளை வளர்க்கத் தொடங்கினார்கள்.
இவ்விதமாக “எல்லா தட்ப வெப்ப நிலையிலும் பிழைத்திருக்கவும், உண்ணத்தக்க அனைத்தையும் உண்டு செரிக்கவும் கற்றுக் கொண்ட மனிதர்கள் உலகம் முழுவதும் வியாபித்தனர்” என்கிறார் எங்கெல்ஸ்.
இயக்கவியலுக்கு அறிவியல் நிரூபணம்
அறிவியலின் பல்வேறு பிரிவுகளையும் உள்வாங்கிய எங்கெல்ஸ், விஞ்ஞான உண்மைகளில், இயக்கவியல் தத்துவத்திற்கான ஆதாரங்களை இந்த நூலில் நமக்கு அடையாளம் காட்டுகிறார்.
இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்ற அதன் தத்துவத்தில் இரண்டு அம்சங்கள் உள்ளன. அது அண்டத்தில் நிலவும் எல்லா பொருட்களையும், அவற்றுக்கு இடையில் நிலவும் தொடர்பையும் பற்றிய அறிவியல் பார்வை ஆகும்.
அதன் முதலாவது அம்சம் பொருட்களே முதன்மையானது என்பது.
- பொருட்களின் இருப்பு சிந்தனையை சார்ந்து இல்லை. பொருட்கள் தானாகவே சுயேட்சையாக நிலவிக் கொண்டுள்ளன. பொருட்கள் பகுபடும் தன்மை கொண்டன. சில வரையறைகளுக்கு உட்பட்டு எல்லா பொருட்களுமே பகுக்க முடிந்தவை.
இரண்டாவது அம்சம், இயக்கம் பற்றியது.
- எல்லா பொருட்களுமே இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றன. இயக்கம் தவிர்த்த பொருள் என எதுவுமே இல்லை.
இயக்கம் என்றால் பலரும் நகர்வது, இடம் பெயர்வது என்று நினைப்பார்கள். அதுவும் இயக்கம்தான்; எனினும் அதை மட்டுமே கவனத்தில் கொள்வது மிக எளிய பார்வை மட்டுமே.
ஒரு பொருள் நகர்வதை எடுத்துக் கொண்டால், ஒரே பொருள், ஒரு குறிப்பிட்ட நேரத்தில் இரு வேறு இடங்களில் இருக்க எத்தனிக்கும் போராட்டத்தில்தான் அது நகர்கிறது. உதாரணமாக, உருண்டோடும் ஒரு இரும்பு குண்டு குறிப்பிட்ட ஒரே நேரத்தில் இருவேறு இடங்களில் இருக்கும் முரண்பாட்டை அதன் நகர்வாகக் காண்கிறோம்.
அந்த இரும்புக் குண்டு, ஆக்சிஜன் மூலக்கூறுகளுடன் வேதி வினையாற்றி இரும்பு ஆக்சைடாக தேய்மானம் அடைகிறது. தரையுடனான உராய்வின் காரணமாக சில இரும்புத் துகள்களை இழக்க நேர்கிறது. அதன் மீது பூமியின் ஈர்ப்பு விசை இயங்கிக் கொண்டுள்ளது. உராய்வின் காரணமாக அதன் வேகம் தடைபடுகிறது. ஆழ்ந்து நோக்கும்போது இயக்கத்தின் பல்வேறு வடிவங்களையும் நாம் அறிகிறோம்.
இயக்கம் என்பது நம்மால் காண முடிந்த எளிய வடிவத்திலும் நிலவுகிறது; சிக்கலான பல்வேறு வடிவங்களையும் எடுக்கிறது. எளிய வடிவத்தை மட்டுமே பார்ப்பது யாந்திரீகமான பார்வை. நாம் அதை கடந்து இயக்கத்தை புரிந்துகொள்ள வேண்டும்.
மனிதர்களின் சிந்தனையும் இயக்கத்தின் ஓர் உயர்நிலை வடிவம் ஆகும். மூலக்கூறுகளின் பகுதியான அணுவுக்குள் நடக்கும் இயக்கமும், உயிர் செல் வளர்வதும் பின் அழிவதுமான வளர் சிதை மாற்றங்களும் இயக்கத்தின் உயர்நிலை வடிவங்களே. எனவே, ஓய்வு என்று நாம் காண்பதும் இயக்கத்தின் ஒரு நிலையே.
இயக்கவியல் விதிகள்
இப்படியாக இயக்கத்தின் மூன்று முக்கிய (அல்லது 4) விதிகளையும் விஞ்ஞான உண்மைகளில் அடையாளப்படுத்துகிறார் எங்கெல்ஸ்.
- முதல் விதி: எதிர்மறைகளின் உறவும் முரணும் எனும் விதி
ஒவ்வொரு பொருளும் எதிர்மறைகளின் கூட்டு மொத்தமாகவே இருக்கிறது. ஒரு பொருள் குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட வடிவத்தில் தொடர்ந்து நிலவ வேண்டும் என்றால், அதில் கவர்ச்சியும், விலக்க விசையும் சம அளவில் இருக்க வேண்டும்.
ஒவ்வொரு அணுவுக்குள்ளும் ஈர்ப்பு விசையும், விலக்கு விசையும் செயல்படுகிறது. கோழியின் முட்டை கரு, புதிய உயிரை பிறப்பிப்பதற்கான போராட்டத்தை தன்னகத்தே நடத்திக் கொண்டுள்ளது. இவ்வாறே மனிதர்களின் வாழ்வு எனப்படுவதை, மரணத்தை நோக்கிய போராட்டமாக எங்கெல்ஸ் முன்வைப்பதையும் பார்க்கலாம்.
- இரண்டாவது விதி, அளவு நிலை மாறுபாடு பண்பு நிலையாக மாறுபாடு அடைகிறது – பண்பு நிலை மாற்றம் அளவு நிலை மாற்றத்தை ஏற்படுத்துகிறது எனும் விதி;
நாம் பொதுவாக இதற்கு ஒரு உதாரணத்தை பயன்படுத்துவோம். அதாவது, நீர் திரவமாக இருக்கிறது. வெப்பத்தில் ஏற்படும் அளவு மாற்றத்தை பொறுத்து அதன் பண்பு நிலை மாறும். நீராவியாகும்; அல்லது பனிக்கட்டியாகும். இந்த உதாரணம் தத்துவ அறிஞர் ஹெகல் பயன்படுத்தியதாகும்.
எங்கெல்ஸ் இதை பல்வேறு உதாரணங்களுடன் காட்டுகிறார். குறிப்பாக, அவர் ஆக்சிஜன் எனப்படும் பிராண வாயுவை குறிப்பிடுகிறார். அதில் 2 ஆக்சிஜன் மூலக்கூறுகள் உள்ளன. ஆனால் அதே ஆக்சிஜன் மூலக்கூறுகள் மூன்றாக இணைந்தால் அந்த வாயுவிற்கு ஓசோன் என்று பெயர். “இது வாசனையிலும், செயல்பாட்டிலும் பிராண வாயுவில் இருந்து குறிப்பிடத்தக்க அளவுக்கு வித்தியாசப்பட்டதாகும்”. இதுபோல பல உதாரணங்களையும் தருகிறார்.
- மூன்றாவது விதி, நிலை மறுத்தல், அந்த நிலை மறுத்து மற்றொரு நிலை அடைதல் எனும் விதி.
பார்லி விதை ஒன்றை உதாரணமாக எடுத்துக் கொண்டு எங்கெல்ஸ் இதை விளக்குகிறார்.
பார்லி விதை பொருத்தமான நிலத்தில் விழுகும்போது, அது தன் நிலையை மறுத்து தாவரமாக வளர்கிறது. பின்னர் அந்த நிலையை மறுத்து தாவரம் மறைந்துவிடுகிறது. பார்லி விதைகளை உருவாக்குகிறது. முதலில் நாம் ஒரு பார்லி விதையை வைத்திருந்தோம். பின்னர் அது தாவரமானது. பின்னர், மீண்டும் அது விதையாகிறது. ஆனால் ஒரே ஒரு விதை அல்ல, கொத்தான விதைகள். இருபது அல்லது முப்பது மடங்கு.
எனவே, பொருட்கள் குறிப்பிட்ட ஒரு நிலையில் இருந்து, பின் அதை மறுத்து வரக்கூடிய புதிய நிலையும், அதை மறுத்து பின்னர் வரக்கூடிய அடுத்த நிலையும் ஒரு வட்டவடிவ சுழற்சி அல்ல; மாறாக சுழல் ஏணியைப்போல் ஒன்றிலிருந்து மற்றொன்று புதிய மேம்பட்ட நிலையை உருவாக்குகிறது என்பதை காட்டுகிறார். (இந்த நூலின் மற்றொரு பகுதியில் இந்த சுழல் வடிவ வளர்ச்சியை அவர் நான்காவது விதியாகவும் வரிசைப்படுத்துகிறார்).
இதே போல, தனது குறிப்புகளில் இயக்கவியலின் துணை விதிகளை ஆராய்வதற்கான திட்டத்தையும் அவர் எழுதியுள்ளார். இருப்பினும் அந்தப் பகுதிகள் முழுமையாக இல்லை.
இயக்கவியலும் சிந்திக்கும் முறையும்
மேலே குறிப்பிட்டது புறநிலை இயக்கவியல் ஆகும். அதிலிருந்து, மனித சிந்தனையில் எவ்வாறு இயக்கவியல் பிரதிபலிக்கிறது என்பதை நோக்கி எங்கெல்ஸ் கவனம் குவிக்கிறார்.
மனிதர்களின் சிந்தனை என்பது நம்மை சுற்றியுள்ள யதார்த்தத்தின் பிரதிபலிப்புத்தான். பொதுவாக எண்கள் 10 என்பது நம்முடைய கை விரல்களை எண்ணிக்கைக்குப் பயன்படுத்திய யதார்த்தம் பிரதிபலிக்கிறது. இருப்பினும், சிந்தனையின் வளர்ச்சிப் போக்கில், நம்மால் புலன்களால் அறிய முடியாதவைகளையும், கண்களால் பார்க்க முடியாதவற்றையும் அறிந்துகொள்ளும் அளவிற்கு வளர்ந்திருக்கிறோம்.
உதாரணமாக, இயற்கையில் உள்ள பல்வேறு கதிர்களை நம் கண்களால் காண முடியாது. ஆனால் எறும்புகளின் கண்கள் ஒளிக் கதிர்களைப் போலவே, மற்ற பல கதிர்களையும் காணும் திறன் பெற்றவை. எறும்புகளின் இந்த புலன் அறிவால் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஆனால் நாமோ கதிர்களின் வீச்சுக் குறித்து அதிகமாகவே அறிந்து வைத்துள்ளோம்.
மனிதர்கள் எவ்வாறு பகுத்தாராய்கிறோம் என்பதை எங்கெல்ஸ் தன்னுடைய குறிப்புகளில் ஆய்வுக்கு உட்படுத்துகிறார். தனித்தன்மை, சிறப்பியல்பு, பொதுத்தன்மை என நாம் வந்தடையும் முடிவுகளை மூன்றாக பிரித்துக் காட்டுகிறார்.
இதனை எங்கெல்சின் எளிய ஓர் உதாரணம் வழியாக பார்ப்போம்.
உராய்வால் தீயை உண்டாக்க முடியும் என்பதை மனிதர்கள் சுமார் ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே அறிவார்கள். சிக்கி முக்கி கற்களை உரசியும், காய்ந்த மரப்பட்டைகளை பயன்படுத்தியும் அவர்கள் நெருப்பை உண்டாக்கினார்கள். அதற்கும் முன்பே, மனிதர்கள் குளிரால் விறைத்த உடலின் பகுதிகளை தேய்த்து சூடேற்ற முடியும் என்று தெரிந்து வைத்திருந்தார்கள். ஆனால், உராய்வு ஆற்றல் வெப்பத்தை உருவாக்குகிறது என்ற உண்மையை அவர்கள் அறிந்துகொள்ள காலம் எடுத்தது.
எங்கெல்ஸ் கொடுக்கும் இந்த உதாரணத்தில் இருந்து: அ) தனித்தன்மை எனப்படும் முதல் முடிவு. உராய்வு, வெப்பத்தை உண்டாக்குகிறது என்ற நடைமுறை அறிவு ஆகும்.
ஆ) அதிலிருந்து வந்து சேரும் சிறப்பியல்பு பற்றிய இரண்டாவது முடிவு, உராய்வு என்ற யந்திரகதியான இயக்கத்தின் மூலம், இயக்கத்தின் மற்றொரு வடிவமான வெப்பமாக அதை மாற்றச் செய்ய முடியும் என்ற அதன் பண்பை புரிந்துகொள்ளும் அறிவு ஆகும்.
இ) இதன் இறுதியாக எட்டக்கூடிய மூன்றாவது முடிவு, பொதுத்தன்மையை அறிவது. ஆற்றலின் ஒரு வடிவம் இன்னொரு ஆற்றல் வடிவமாக மாற்றப்படுவது பற்றிய அறிவியலின் பொதுவான விதியை அறிவது ஆகும்.
இப்படித்தான், தனித்தன்மை, சிறப்பியல்பு, பொதுத்தன்மை ஆகிய மூன்று விதிகளிலேயே கருத்துப்பாங்கு (Logic) கோட்பாடு இயங்குகிறது என்கிறார் எங்கெல்ஸ்.
பிற்போக்கு சிந்தனைகள் தொடர்வது ஏன்?
ஆனால், இதுபோன்ற முடிவுகளுக்கு வந்து சேர்வதற்கு இயக்கவியல் சிந்தனை அவசியம் ஆகும். அது இல்லாதபோது ஏற்படும் சிரமத்தையும், விஞ்ஞானியின் அனுபவத்தை சுட்டிக்காட்டி விளக்குகிறார்.
“வெப்பத்தை செலுத்தி இயந்திர இயக்கத்தை பெற முடியும் என்பதற்கு நீராவி எஞ்சின் சிறந்த நிரூபணம் ஆகும். சாடி கார்னோ என்பவர் ஒரு நீராவி இயந்திரத்தின் செயல்பாட்டை (அறிவியல் அடிப்படையில்) விளக்க முயற்சித்தார். அதற்காக, அவர் அந்த இயந்திரத்தை கூர்ந்து கற்றார். ஆற்றலின் மாற்றப் போக்கானது தூய்மையான வடிவத்தில் வெளிப்படுவதில்லை; துணை மாற்றப்போக்குகளால் மறைக்கப்பட்டு இருப்பதை அவர் கண்டார்”. ஆனாலும் அவரால் அந்த ஆய்வில் முன்னேற முடியவில்லை. அதன் செயல்பாட்டை விளக்க முடியவில்லை. “பொய்யான தத்துவங்கள் அவருக்குத் தடையாக அமைந்தன” என்கிறார் எங்கெல்ஸ்.
முன்பே கிரேக்க தத்துவ ஞானிகள் ‘இயற்கை முழுவதுமே தோன்றுவது, மறைவது என நிரந்தரமாக மாறிக் கொண்டும், இடையறாமல் இயங்கிக் கொண்டும் இருக்கிறது. அந்த மாற்றத்தில்தான் நிலை நிற்கிறது’ என்று கூறியிருந்தார்கள்.
ஆனால், இந்த உள்ளுணர்வு சரியானது என்பதை, இயற்கை விஞ்ஞானத்தின் வளர்ச்சியில்தான் அனுபவ ரீதியாக, ஆராய்ந்து அறிந்து கொண்டோம்.
இத்தனை கண்டுபிடிப்புகளுக்குப் பிறகும் இயற்கை விஞ்ஞானிகளிடம் நிலவிய தத்துவச் சிந்தனை ஏன் மாறாமல் நீடித்தது? இன்றும் அந்த தன்மை பல சமுதாயங்களில் தொடர்வது ஏன்?
இந்த கேள்விக்கு பதில் சொல்லும் எங்கெல்ஸ், “சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக உலகத்தை பற்றிய கருத்து முதல்வாதக் கண்ணோட்டம் நிலவி வந்திருப்பதால், அதன் சாரத்தை நீக்கி, சுய தெளிவுள்ள பார்வைக்கு திரும்புவது எளிதாக இல்லை என குறிப்பிடுகிறார். அறிவியல் சிந்தனையை நிலைநாட்டவும் போராட்டம் அவசியம் என்பதே எங்கெல்ஸ் முன்வைக்கும் கருத்தாகும். இயக்கவியல் தத்துவத்தை பயன்படுத்தியே சிக்கல்களுக்கு தீர்வு கண்டு உலகை மேம்படுத்த முடியும். தீர்வு போல தெரியும் போலிகளை குறித்து எச்சரிக்கவும், சரியான தீர்வுகளை நோக்கி துணிச்ச்சலாக பயணிக்கவும் அது அவசியம் என்கிறார்.
விலங்கு நிலைக்கு திரும்பும் சமுதாயம்?
முதலில் விலங்குகளிடம் இருப்பதாக எங்கெல்ஸ் சுட்டிக்காட்டிய சில அழித்தொழிக்கும் பண்புகள், மனிதர்களிடமும் வந்து சேர்ந்ததை எங்கெல்ஸ் காட்டும் உதாரணங்களில் நாம் கவனிக்க வேண்டும்.
‘கியூபாவின் காப்பித் தோட்டங்களுக்காக, மலைச் சரிவில் இருந்த காடுகளை தீயிட்டுக் கொளுத்திய முதலாளிகள் ஒரு தலைமுறைக்கு போதுமான உரத்தை பெறலாம் என நினைத்தார்களே தவிர, மேல்படிவ மண் முழுவதையும் கனமழை அடித்துக் கொண்டு போய் பாறைகளை மொட்டையாக விட்டுவிட்டதை பற்றிக் கவலைப்படவில்லை’
இது போலவே கட்டுப்பாடில்லாமல் காடுகளை அழிப்பதும், பைன் மரங்களை வெட்டுவதும், உருளைக்கிழங்கு விவசாயமும் என உதாரணங்களை குறிப்பிடுகிறார். இந்த உதாரணங்களின் மூலம் லாபம் மட்டுமே நோக்கமாக கொண்ட குறுகிய சுயநல செயல்பாடுகளின் ஆபத்தை அவர் எடுத்துக் காட்டினார்.
சமுதாயத்தில் நடக்கும் உற்பத்தியின் நோக்கமாக ஆளும் வர்க்கங்களின் சுயநலம் மட்டுமே இருக்கும்போது, அவர்கள் உடனடியான பலன்களை பற்றி மட்டுமே கவலைப்படுகிறார்கள். லாபம்தான் ஒரே உந்து சக்தியாக இயக்குகிறது. அது மனிதர்களை விலங்கு நிலைக்கு தாழ்த்துகிறது என குறிப்பிடும் அவர், இந்தப் போக்கின் காரணமாக ஏற்படும் இயற்கையின் எதிர்ச் சீற்றங்களை குறிப்பிட்டு எச்சரிக்கிறார்.
‘இயற்கையை வென்றுவிட்டோம் என நாம் நினைக்கும்போது இயற்கை நம்மை பழிவாங்குகிறது. முன் தயாரிப்பை செய்யலாம். எனினும் நாம் எதிர்பார்க்காத முறையில் அது எதிர்வினை ஆற்றுகிறது’ இன்று நாம் எதிர்கொள்ளும் பருவநிலை மாற்ற சவால் அப்படியான ஓர் எதிர்வினைதான்.
மனிதர்களாகிய நாம், இதுபோன்ற குரூரமான அனுபவங்களில் இருந்தும், வரலாற்றை பகுத்து ஆய்வு செய்வதன் வழியாகவும், நம்முடைய உற்பத்திச் செயல்களினால் ஏற்படும் உடனடியான மறைமுகமான விளைவுகளையும், நீண்ட நாள் கண்ணோட்டத்தில் ஏற்பட்டுவரும் விளைவுகளையும் ஒரு சமுதாயமாக படிப்படியாக கற்கிறோம். அந்த படிப்பினையில் இருந்து, புரட்சிக்கான அவசிய தேவையை உணர வேண்டும் என்கிறார் எங்கெல்ஸ்.
மனிதர்கள் தங்கள் வரலாற்றின் போக்கினை தங்கள் கட்டுப்பாட்டில் இல்லாத சக்திகளின் வசம் இருந்து மாற்றி, புரட்சிகர போராட்டத்தின் வழியே, மனிதர்களால் உணர்வுபூர்வமாக கட்டமைக்கப்பட்ட புதிய சமுதாய அமைப்பிற்குள், சமூக உற்பத்தியை சாத்தியமாக்கிட வேண்டும். “இப்போது நடப்பில் இருந்துவரும் சமுதாய உற்பத்தி முறையில் ஒரு முழுப் புரட்சியும், அதனோடு சேர்ந்து நமது இன்றைய சமுதாய அமைப்பிலும் ஒரு புரட்சியும் தேவைப்படுகிறது” என்று கூறுவதன் மூலம், சோசலிசப் புரட்சிக்கான அழைப்பை விடுக்கிறார் எங்கெல்ஸ். இவ்வாறே, இந்த நூல் தன்னளவில் ஒரு ஒளி விளக்காக திகழ்கிறது.
You may also like
கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே பெற விரும்புவோர், கீழ்க்காணும் விபரங்களை நிரப்பவும்.
